உறைந்த கணங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: March 2, 2014
பார்வையிட்டோர்: 34,923 
 
 

விமானத்தில் நுழைந்த அர்ச்சனாவின் கண்களில் முதலில் பட்டது அங்கு இல்லாதது- பயணிகள். அவளையும் சேர்த்து மொத்தம் நாலு பேர். ஏர்ஹோஸ்டஸின் உறைந்த புன்னகையைப் பெற்றுக்கொண்டு இவ்வளவுதானா மொத்தம் என்று கேட்டாள்.

‘ஆமாம். ஆனால் நீங்கள் ஒவ்வொருவரும் எங்கள் மிக மிக முக்கிய விருந்தாளிகள். ‘

இடத்தை அடைந்து கைப்பெட்டியை மேலே வைத்துவிட்டு கைப்பையுடன் சீட்டில் அமர்ந்தாள். லேசாக நெற்றியில் வியர்வையை உணர்ந்தவள் பையைத் திறந்து டிஷ்யூ பேப்பரால் நெற்றியை ஒற்றிக்கொண்டாள். பைக்குள்ளிருந்த செல் போஃன் ஒரு மெஸ்ஸேஜ் உள்ளது என்றது. தன்னறியாமல் அதை எடுக்கப் போன கையை திசை மாற்றி பையை மூடினாள்.

‘ குட் ஈவினிங் நண்பர்களே. இது காப்டன் பில் ரேமண்ட்( Bill Raymond). இன்னும் சுமார் எட்டு மணி நேரத்தில் உலகெங்கும் புது மில்லெனியத்தில் ஆகாயத்திலுருந்து இறங்கப்போகும் வெகு சில மனிதர்களில் நீங்களும் ஒருவர். உங்களுக்காக அங்கே காத்திருப்பவர்களின் லிஸ்ட் இதோ. CNN, ABC, BBC, மற்றும் பல, ஸ்பீல்பெர்கின் குழு, அவரது ‘And then there were …. ‘ எனும் புது படத்தின் முதல் காட்சியில் நீங்கள் இருப்பீர்கள் ……

அர்ச்சனாவின் உதட்டில் ஒரு புன்னகை பிறந்தது. . காலத்தைப் பாகம் பிாித்து செயற்கையான ஓர் எல்லையிட்டு, Digital சிறையிலிட்டு அந்த சிறையில் இப்பொழுது தானே சிக்கி, தொன்னூற்றொம்பதாவது கதவைத் திறந்தால் தொடர்ச்சியா அல்லது சூன்யமா என்று தெறியாமல் கலங்கும் மனித வர்க்கம். ஜன்னல் வழியே தொலை வானத்தில் கூட்டமாகப் பறக்கும் பறவைகளை ஏக்கத்துடன் பார்த்தாள்.

…… போப் ஜானின் தூதுவர் புண்ணிய நீருடன் வரவழைப்பார். ‘ ஸ்பீல்பெர்க்கிர்க்கும் போப்பிற்க்கும் இடையிலுள்ள லிஸ்டை அவளது எண்ணங்கள் விழுங்கியிருந்தன.

ஏர்போர்ட் கட்டிடங்கள் மெள்ள பின்னோக்கி நகர ஆரம்பித்து இந்த மில்லெனியத்தின் கடைசி நிலக்காட்சிகளாய் மறைந்தன.

*****

பெல்டை எடுக்கலாம் என்றவுடனேயே நீக்கிவிட்டு எழுந்தாள்.இன்னும் இருவர் அதே சமயத்தில் எழுந்திருந்தார்கள். ஹாய், ஹாய், ஹாய்……..

கைகளை நீட்டிக்கொண்டே ஒன்று கூடினர்.

‘இருப்பது நாலு பேர். ஒருவருக்கொருவர் தொிந்துகொள்ளலாமா ? நான் பீட்டர்(Peter). கம்ப்யூட்டர் இஞ்ஜினியர். ஹெர்ண்டன், வர்ஜினியா ‘ – இளைஞன். தொழிலுக்கேற்ற அலட்சிய உடை.

‘என்ன இன்றைக்கு இங்கே இருக்கிறீர்கள் ? சும்மா வேடிக்கை. நான் பாப் நாக்மன்(Bob Naachman). மோிலாந்து யூனிவெர்ஸிடியில் ப்ரொபஸர். ‘ – நீள மூக்கின் நுனியில் ஓர் இளக்கார அகம்பாவம்.

‘அர்ச்சனா ராய். சைக்காலஜிஸ்ட் . லாஸ் ஏன்ஜலஸ். ‘

‘ ஒரு இந்திய பெண்ணாய் இருப்பதற்கு நீங்கள் தைாியசாலி. இன்றைக்கு பயணம் செய்கிறீர்களே ? ‘ – மூக்கு.

‘ என் யூனிவர்சிடியிலும் உங்களைப் போல் ப்ரொபஸர்கள் உண்டு. தங்கள் துறையைத் தவிர வேறெதுவும் தொியாது. ‘

கம்ப்யூட்டர் இளைஞன் பக்கென்று சிாித்து விட்டான். மூக்கு சுருங்கியது.

‘ வேடிக்கையா ? ‘

‘உங்கள் கேள்வி வேடிக்கையானால் இதுவும் வேடிக்கைதான் ‘

‘அப்படியானால் வேடிக்கையாக இன்னொரு கேள்வி. உங்கள் புராணத்து சீதா கணவன் ஆணைப்படி தீக்குளித்தாளாமே, நீங்கள் சீதாவாக இருந்தால் என்ன செய்வீர்கள் ? ‘

(முதலில் என் மைத்துனன் லக்ஷ்மணனிடம் உன் மூக்கை உடைக்கச் சொல்லுவேன்) பதிலளிக்காமல் புன்முறுவலுடன் அவனைத் தாண்டிச் சென்றாள். கம்ப்யூட்டர் ‘ த கய் இஸ் ட்ரங்க் ‘ என்று முணுமுணுத்தது காதில் விழுந்தது. வழியில் நான்காவது பயணியைப் பார்த்தாள். வயதானவன் – வர். நல்ல வயது. தலை முடி எங்கே முடிகிறது தாடி எங்கே ஆரம்பிக்கிறது என்று தொியவில்லை. கண்கள் மட்டும் தான் முழுதும் தொிகிறது. தலை ஒரு பக்கம் சாய்ந்து …. நல்ல தூக்கம். அடுத்த மில்லெனியத்தில் தான் விழிப்பார் போலும்.

திரும்பி இடத்தை நோக்கிப் போகும்போது எதிரே புன்னகையுடன் ட்ரே நிறைய ட்ாின்க்ஸுடன் ஏர்ஹோஸ்டஸ்.

‘என்ன குடிக்கிறீர்கள் ? ‘

‘ க்ளப் சோடா ‘

இடத்தில் அமர்ந்து புத்தகம் படிக்கலாம் என்று பையைத் திறந்தாள். ஆக்டாவியோ பாஸின் கவிதைத் தொகுப்பு.

ஏர்போர்டிர்க்கு வந்த டாக்ஸியின் டிரைவர் கார்லோஸை நினைத்துக் கொண்டாள். விசித்திரமானவன். கணத்திற்குக் கணம் வாழ்கிறேன் என்கிறான். ஜே. கிருஷ்ணமூர்த்தியின் ஆத்மா சாந்தி அடையும். இப்பொழுது அந்த கார்லோஸ் எங்கே என்ன செய்கிறானோ ? அடுத்த மில்லெனியத்தைப் பற்றி நினைப்பானா ?

பக்க அடையாளமாக வைத்திருந்த லெட்டரை எடுத்துப் பிாித்தாள். அம்மாவிடமிருந்து. கடிதத்தில் அம்மாவின் பிறந்த மண்ணின் தமிழும் புகுந்த மண்ணின் பெங்காலியும் ஒன்றாய்க் குழைந்து அன்பைச் சொாிந்தன. தேன்குழலையும் ரசகுல்லாவையும் மாற்றி மாற்றித் தின்ன நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ‘இந்தக் கணமே உன்னைப் பார்க்கவேண்டும் போலிருக்கிறது. உன்னைப் பார்ப்பதற்குள் ஒரு யுகம் ஆகிவிடும் போலிருக்கிறது. ‘- டிஜிட்டல் கணக்கில் அடுத்த யுகத்தில் தான் பார்ப்போம் அம்மா. அப்பா இப்பொழுது என்ன செய்துகொண்டிருப்பார் ? அவர் கொஞ்சம் சுகப் பேர்வழி. வாழ்க்கையில் நிலத்தை விட ஆகாயத்தைத் தான் அதிகம் பார்த்திருக்கிறார்-படுத்தவாறு. அவர் எப்பொழுதும் அர்ச்சனாவை தேவி என்றுதான் அழைப்பார். சட்டென்று தேவி என்று காதில் ஒலித்து உடல் சிலிர்த்தாள். அது மறைந்த பழைய கணங்களின் பின்னொலியா அல்லது எதிர்பார்க்கும் இன்னும் வராத கணத்தின் முன்னொலியா ? இப்பொழுது டாக்ஸி டிரைவர் கார்லோஸின் வார்த்தைகள் காதில் ஒலித்தன. சென்ற கணங்களை சுமப்பது பிணத்தை சுமப்பது போல். வெறும் அர்த்தமில்லாத கனம். வராத கணங்களை எதிர்பார்ப்பது பிறக்காத குழந்தைகளை வளர்ப்பது போல். பிறக்காவிட்டால் துன்பம். பிறந்தால் தொடர்ந்து எதிர்பார்ப்புகள். ‘ – அறிவுக்குப் புாிகிறது. இதயம் முரண்டு பிடிக்கிறது. இரண்டில் இதயம்தான் என் செல்லம்.அதுதான் பாரதியையும் டாகூரையும் தியாகராஜரையும் மோஸிர்டையும் உருவாக்கியது. அதைத் தடுக்க மாட்டேன்.

கவிதைகளின் தாலாட்டில் உடலும் உள்ளமும் கனமிழக்க உறங்கிப்போனாள் அர்ச்சனா.

அம்மாவின் நெய் தோசையை விள்ளி மிள்காய்ப்பொடியில் தேய்த்து நாக்கில் வைப்பதற்கு முன்பே நாக்கில் எச்சில் ஊற, கண்விழித்துக் கனவென்ற உணர்வு வந்த பின்னும் நாவில் அந்த ருசியின் நினைவால் தொடர்ந்து எச்சில் ஊறல். புத்தகம் தரையில் விழுந்து கிடந்தது. அதை எடுத்து எதிாில் இருந்த பையில் சொருகிவிட்டு உடம்பை முறித்தவாறு பாத் ரூம் போக எழுந்தாள். மூக்கும் கம்ப்யூட்டரும் இடம் மாற்றி ஒரு மூன்று சீட் ரோவில் நடுவில் ஒரு சீட் காலியாக விட்டு ஒருவரை ஒருவர் ஒருக்களித்துப் பார்த்தவாறு அமர்ந்திருந்தார்கள். அவள் அவர்களை நெருங்கும்போது கம்ப்யூட்டர் ( என்ன பெயர் ?, ஹா பீட்டர்) ‘ஹல்லோ, நன்றாகத் தூங்கினீர்களா ? ‘ என்று கேட்டான். ‘ ஹாய் பீட்டர். ஓ எஸ். நல்ல தூக்கம் ‘ என்றாள். அவர்கள் இருவருக்கும் இடையில் இருந்த காலி சீட்டில் ஒரு செஸ் போர்ட். மூக்கு ( பாப் ) ‘ஹாய் சீதா! ‘ என்று வாய் குழறினான். ( இதென்ன ஒரு சீதா ஸின்ட்ரோம் ?) எதோ ஓர் அனுபவத்தின் எதிரொலி என்றது அவளது சைக்காலஜி அறிவு ப்ளஸ் அனுபவம். பீட்டர் ‘ காப்டனின் அறிவிப்பைக் கேட்டார்களா ? ( தன் கடிகாரத்தைப் பார்த்தவாறு) உங்கள் நேரத்தை சாியாக ப்தினொன்று முப்பத்தெட்டுக்கு மாற்றுங்கள். இன்னும் இருபத்த்திரண்டு நிமிடங்களில் புது மில்லெனியம் ‘என்றான். புன்முறுவலுடன் அர்ச்சனா அவன் சொன்னதைச் செய்தாள்.

‘உங்களுக்கு பயமாக இல்லை ? ‘- பாப். கையிலிருந்த க்ளாஸில் ஐஸ் கட்டிகளின் மோதல் சத்தம்- கை நடுக்கத்தால். அர்ச்சனாவிற்கு திடாரென்று அவன் மேல் ஒரு பச்சாதாபம். ஆதரவுடன் அவன் தோளில் கை வைத்தவாறு ‘ என்னை விடுங்கள். உங்கள் மனைவி எப்படி ? தனியே விட்டு வந்திருக்கிறீர்களே ? ‘ என்றாள். அவன் கையிலிருந்த க்ளாஸ் நழுவி விழுந்து உருண்டோடியது. அவன் தோளைத்தட்டிவிட்டு பாத்ரூமை நோக்கி நகர்ந்தாள்.

தாடியின் ஸீட் காலியாக இருந்தது. எதிரே பாத்ரூம் கதவு திறந்து தாடி வெளியே வந்தது. எந்த நாடு எந்த ஊர் என்று கணிக்க முடியாதபடியான முகம். ( முகம் தொிந்தால்தானே ?)

கையை நீட்டியவாறு ‘ நான் அர்ச்சனா. உங்களை இன்னும் தொிந்து கொள்ளவில்லை. தூங்கிக் கொண்டிருந்தீர்கள். ‘ என்றாள்.

தாடி பேசாமல் வழியை மறைத்துக்கொண்டு நின்றது.

‘உங்கள் பெயர் ? ‘

‘காலம்.(Time ) ‘

( ஏதடா இது ? மூன்றில் இரண்டு கேஸா ?)

‘ இன்னும் இருபது நிமிடங்கள். நான் முடியப் போகிறேன். நான் முடிந்தால் எல்லாமே முடியும். ‘

அர்ச்சனாவின் உள்ளத்தில் மறுபடியும் பச்சாதாபம். தொழில் தந்த யுக்தி ஒன்றை கருணையுடன் கலந்து கையாண்டாள். ரொம்ப சீாியஸாக ‘ உங்களுக்கு ஆதியும் அந்தமும் கிடையாதே ‘ என்றாள்.

‘ நான் தூங்கிவிட்டால் ? நீங்களெல்லாம் தூங்கினாலும் நீங்கள் கணித்து வைத்திருக்கும் நேரப்படி கடிகாரம் உங்களை எழுப்பும். நானே தூங்கிவிட்டால் ? ‘

அறிவுாீதியாக செயல் பட்ட அர்ச்சனாவுக்கே அவள் அறியாமல் உடம்பு புல்லாித்தது. இவருக்கு மனக்கோளாறு போல்தான் தோன்றுகிறது…. ஆனாலும்…… அறிவு, லாஜிக், நம்பிக்கைகள், ஐயங்கள், அவநம்பிக்கைகள், சயன்ஸ், பிலாசபி, எல்லாவற்றையும் கடந்த எதோ ஒன்றின் ஆக்கிரமிப்பை அந்தக் கணத்தில் உணர்ந்தாள். அவளுக்குள் தொிந்ததற்கும் தொியாததிற்கும் இடையே ஒரு போர்.

பாத்ரூமிலிருந்து திரும்பி தன் ஸீட்டுக்குச் செல்லும் வழியில் தாடியைத் திரும்பிப் பார்த்தாள். தாடி ‘ இன்னும் பதினைந்து நிமிடங்கள் ‘ என்று ஒரு உரத்த அமானுஷ்யமான குரலில் அறிவித்தது. பாபும் பீட்டரும் திரும்பிப் பார்த்தார்கள். பாப் முகத்தில் பரபரப்பின் அடையாளம். அர்ச்சனாவைப் பார்த்ததும் இடத்தை விட்டு எழுந்து அவள் பின்னாலேயே அவள் ஸீட் வரை தள்ளாடிக்கொண்டே வந்தான்.

‘ ஸீதா. உங்களுடன் கொஞ்சம் பேச வேண்டும். ‘ அவள் உட்கார்ந்து பக்க ஸீட்டை காட்டினாள். தடாலென்று அமர்ந்த பாப் அவள் கையைப் பிடித்துக்கொண்டு ‘ ஸீதா… உங்கள் கணவருக்காக வேண்டி வந்தால் உங்கள் புனிதத்தை நிரூபிக்கத் தயாராக இருக்க் மாட்டார்களா ? ‘

‘முதலில் நான் சீதா இல்லை. இரண்டாவது, உங்கள் கஷ்டத்தில் நான் சம்பந்தம் அற்றவள்.( irrelevant). ‘

‘ உண்மை. என் மனைவி……லாரா… ‘. கட கட வென்று கொட்டிவிட்டான். ஆணாதிக்க நோக்குள்ளவன். மனைவியைத் தன் உடைமை போல் நேசித்தவன். அந்த உடைமையில் பங்கு இருக்கிறதோ என்ற சந்தேகம். இவன் துறை புராண காவியங்களில் ஆராய்ச்சி. மனைவியிடம் ‘ உன் புனிதத்தை நிரூபி அல்லது வெளியே நட ‘ என்று கூற , அவள் வெளியேற, காவியத் தலைவன் ஸீதா சின்ட்ரோமில் சிக்கி, வெறுமையைத் தாங்க முடியாமல் ……

‘ அந்த வெறுமையிலிருந்து தப்ப வந்து …. இப்போது நிரந்தர வெறுமைக்குள் போகிறேனோ ?……. அந்த தாடி மனிதன் …. என்ன நினைக்கிறாய் ? ‘

பயங்கர வாய்க்குழறல். நடுக்கம். குடியை விட பயத்தின் ஆக்கிரமிப்பு.

‘ என் துறையில் இந்த மாதிாி மனநிலை கண்டிருக்கிறேன். தான் ஜீஸஸ், பெர்னாட்ஷா என்று நம்புவார்கள். அதற்கு உகந்த சூழ்நிலை வந்தால் உக்கிரம் அதீகாிக்கும். என்னிடம் ஒரு மிக வயதானவர் வருகிறார். இது எந்த வருடம் என்று கேட்டால் ஒரு மிலியன் பி.சி. என்பார். உணமையிலேயே அப்படி நம்புகிறார். ‘

அம்மாவிடம் தன் குறையைக் கூறிவிட்டு பொம்மையிடம் திரும்பும் குழந்தைபோல் பாப் தன் க்ளாஸுடன் உறவாட ஆரம்பித்தான்.

‘ யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்! உங்கள் காப்டன் பில்(Bill). இன்னும் பன்னிரண்டு நிமிடங்களில் அடுத்த மில்லெனியத்தை அடைகிறோம். ஹோஸ்டஸ் ஷர்லீ ஷாம்பெயின் கொண்டு வருவாள். ‘

திடாரென்று தாடியின் குரல். ‘ விஞ்ஞானத்தின் அகங்காரம்! அடங்கப் போகிறது பாருங்கள்! ‘

அர்ச்சனாவின் மனதில் அவள் பார்த்த சத்யஜித் ரேயின் ஒரு படம் வேகமாக ஒடியது. ஒரு பெண்ணை சிறு வயதிலிருந்தே ஊர் மக்கள் எல்லொரும் காளியின் அவதாரமென்று நம்பி அந்த சூழ்நிலையில் வளரும் அவள் தான் காளி என்று நம்ப ஆரம்பிக்கிறாள். காளி பூஜையன்று எல்லோரும் காளி பொம்மையைக் கடைசியில் கிணத்தில் எறியும் போது தானும் கிணத்தில் குதித்து இறக்கிறாள்.

ஹோஸ்டஸ் ஷர்லீ ட்ரேயில் ஷாம்பெயினுடன் வந்தாள். அர்ச்சனாவிடமும் பாபிடமிடும் ஒவ்வொரு க்ளாஸைக் கொடுக்கும் போது பீட்டரும் அங்கே வந்து ‘ நானும் இங்கே உட்காரலாமா ? ‘ என்று கேட்டான்.

‘ ப்ளீஸ் ‘ என்றாள் அர்ச்சனா. பீட்டர் பாபிற்கு அடுத்த ஸ ‘ட்டில் உட்கார்ந்து ஒரு க்ளாஸை வாங்கி தனக்கு எதிரே வைத்துக் கொண்டான்.

பின்னாலிருந்து ஷர்லியின் குரல் கேட்டது.

‘ ஸர்! ஷாம்பெய்ன் ‘

‘ஷாம்பெய்னா ? எனக்கா ? ‘ – கட கட என்று சிாித்தது தாடி. ‘ இன்னும் பத்து நிமிடங்கள் ‘ – மறுபடி சிாிப்பு.

பாப் கைகளால் முகத்தை மூடியவாறு ‘ ஓ லாரா! ‘ என்று முனகினான். அர்ச்சனா அவன் தோளை ஆதரவாகத் தட்டிக் கொடுத்தாள். பாப் திடாரென்று பீட்டரை நோக்கி ‘ நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் இந்த Y2K பற்றி ? ‘ என்று கேட்டான்.

‘ அதீதமான பதட்டங்கள். பயங்கள். ‘ என்றான் பீட்டர் தன் தோள்களை அலட்சிய பாவத்துடன் உலுக்கியவாறு.

‘ உங்களூக்கு துளியேனும் கவலை இல்லையா ?- பாப்.

‘ என் நினைவெல்லாம் என் கல்யாணத்தைப் பற்றிதான். ஒரு வாரத்தில் ஊர் திரும்பிகிறேன். அதற்கு அடுத்த வாரம் கல்யாணம். அவள் பெயர் ஸபிதா ஸன்யால். ஆமாம். அவள் ஒரு இண்டியன் ‘

‘ கங்கிராட்ஸ்! ‘ அர்ச்சனாவும் பாபும் கை நீட்டினர்.

அர்ச்சனாவின் மனம் அக்கணத்திலிருந்து கழன்று பின்னோக்கிச் சென்றது. ராபர்ட்.!அவளுடன் இந்நேரம் இந்தியாவிற்குப் பயணம் செய்திருக்க வேண்டும். கடைசி நிமிடத்தில் மற்றொருத்தி பெயரைச் சொல்லி கழன்று கொண்டு பிறகு மறுபடியும் அர்ச்சனாவை செல் போனில் கூப்பிட்டு அவளிடம் சரணடய அர்ச்சனா அவனிடம் எல்லாவற்றையும் மறந்து விட்டு வாழ்க்கையைத் தொடரு என்று கூறியிருந்தாள். இவ்வளவும் நடந்தது அவள் ஏர்போர்ட் வரும் வழியில். டாக்சியில். செல் போன் மூலம். இயந்திர உலகில் எல்லாமே வேகமாக நடந்து வேகமாக மறைகின்றன. ஆனால் நினைவுகள் மறைய மட்டும் இயந்திரம் இல்லை.

‘ ஐந்து நிமிடங்கள் ‘ – மறுபடியும் தாடி. அந்தக் குரலைக் கேட்டதும் அர்ச்சனாவின் உடலில் மறுபடியும் அதே இனம் புாியாத சிலிர்ப்பு. தொிந்தவைக்கு அப்பால் ……

விமானத்திற்குள் திடாரென்று கனமான நிசப்தம். நேரம் ஊர்ந்தது.

நான்கு நிமிடங்கள்.

மூன்று.

இரண்டு.

‘ யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ். காப்டன் பில். இன்னும் ஒரு நிமிடம். இருபத்தி ஐந்து நொடிகள் இருக்கும் போது எண்ண ஆரம்பிக்கிறேன். கையில் ஷாம்பெய்ன் வைத்திருங்கள். ‘

பாப் நெற்றியில் வியர்வை. பீட்டர் கூட மெளனமாக இருந்தான். அவனும் அறிவைத்தாண்டிய சூன்யத்தை உணர்ந்து விட்டனோ ?

காப்டனின் குரல் ஒலித்தது.

‘ இருபத்து ஐந்து …..

மூவரும் கையில் ஷாம்பெய்ன் க்ளாஸை எடுத்துக் கொண்டனர்.

‘ இருபது…….

நினைவுகள் சுமந்த இறந்த கணங்களும் எதிர்பார்ப்புகள் உருவாக்கிய பிறக்காத கணங்களும் உறைய ஆரம்பித்தன. மூவரது உணர்விலிருந்தும் ராபர்ட்டும், கார்லோஸும், லாராவும், சபிதாவும் மறைந்தனர்.

‘ பதினான்கு……..

சீதா சின்ட்ரோம் மறைந்தது. இன்னும் ருசிக்காத நெய் தோசை மணக்க வில்லை. அப்பாவின் ‘தேவி ‘ என்ற அழைப்பு காதில் விழவில்லை. அவையெல்லாம் அர்த்தமிழந்து விட்டனவா ?

‘ ஒன்பது…….

‘ நான்கு…

‘ மூன்று….

‘ இரண்டு……

திடாரென்று நிசப்தம். ஒன்று வரவில்லை என்பதை உணர மூவருக்கும் சில வினாடிகள் ஆயின.

‘என்ன ஆயிற்று ? ‘ என்று பதட்டத்துடன் பாப் தள்ளாடிய படி விமானத்தின் முன் பக்கம் ஒடி கதவைத் திறக்கப் போனான். முடியவில்லை. ஓங்கித் தட்டினான். பதிலில்லை. திரும்பி இவர்களைப் பார்த்து ‘ என்ன இது ? ‘ என்று கத்தினான்.

‘ எல்லாம் அந்தக் கிழவனால் தான். அவனைக் கொல்கிறேன் ‘ என்று ஓடினான்.

அர்ச்சனாவும் பீட்டரும் அவனைக் குறுக்கே நின்று தடுக்கப் பார்த்தனர். இருவரையும் மூர்க்கமாகத் தள்ளிவிட்டு ஓடினான் பாப். இருவரும் சமாளித்துக் கொண்டு பின்னால் ஒடினர். பீட்டர் பாபைப் பிடித்து நிறுத்த, அர்ச்சனா அவர்களைக் கடந்து அந்த கிழவாிடம் சென்று ‘ஸர்! ‘ என்று அழைத்தாள். பதிலில்லை. கண் மூடி மோன நிலையில் இருந்தார். தோளை லேசாகக் குலுக்கினாள். உடல் ஒரு பக்கமாக சாிந்தது. பாிசோதனை செய்துவிட்டு ‘ஓ காட்! இறந்து விட்டார் ‘ என்றாள்.

மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு சிலை போல் நின்றனர்.

இங்கே இப்பொது நிகழும் கணங்கள் மட்டும் தான் உண்மையா ? இது கணங்களின் தொடரா அல்லது ஆரம்பமும் முடிவும் இல்லாத ஒரே ஒரு கணமா ? இதற்குள் அந்த உறைந்த கணங்களெல்லாம் ஒடுங்கிவிட்டனவா ? இது எதை நோக்கிச் செல்கிறது ?

மூவரும் உணர்வு, நினைவு, எதிர்பார்ப்பு எல்லாவற்றையும் கடந்த ஒரு நிலையில் இருந்தனர்.

‘ யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்! காப்டன் பில்…..

– அக்டோபர் 1999

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *