கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: February 11, 2023
பார்வையிட்டோர்: 7,695 
 

Become a good noticer. Pay attention to the feelings, hunches, and intuitions that flood your life each day. If you do, you will see that premonitions are not rare, but a natural part of our lives.”
― Larry Dossey, The Power of Premonitions
****

“பயமா இருக்கு டாக்டர்” என்று சொன்ன என்னைப் பார்த்தார் (சைக்கியாட்ரிஸ்ட்) டாக்டர் ஆதிமூலம். “என்னய்யா பயம்? இதெல்லாம் ஒரு passing phase. ரொம்ப சின்ன விஷயத்தப் பெருசு பண்ணாதே! கொஞ்ச நாள்ல சரியாயிடும். இந்த மருந்து தரேன். anti stress மருந்து. கொஞ்சம் தூக்கம் வரும். அதுனாலே நைட்ல சாப்பிட்டா, வெளில போகறத தவிர்க்கறது நல்லது” என்று சொன்னார்.

என்னடா திடுதிப்புன்னு டாக்டர் கிட்ட கூட்டிக்கிட்டு போயிட்டேன் என்று நினைக்காதீர்கள். ஒரு இரண்டு மாதகாலம் முன்னர் ஆரம்பித்த ப்ராப்ளம் இது.

ஜூன் மாதம் கடைசி வாரம் என்று நினைக்கிறேன். விஜயநகர் சிக்னலில் காத்துக்கொண்டிருந்தபோது தான் சீனுவாசனைப் பார்த்தேன். சீனு என் மனைவியின் தூரத்துச் சொந்தம். சொந்தம் என்ன அவளோட ஒண்ணு விட்ட மாமா பையன். ஜாதகம் சரியாக இருந்திருந்தால் அவனுக்குத்தான் கட்டி வைத்திருப்பார்கள் என்று என் மனைவி அடிக்கடிச் சொல்லிக் காட்டுவாள். அதனாலேயே எனக்கு சீனுவாசனை அவ்வளவாகப் பிடிக்காது. போனதடவை மனைவியின் உறவில் யாருக்காக் கல்யாணம் என்று நாங்கள் அவள் ஊருக்குப் போயிருந்தபோது சீனுவாசனை சந்தித்தேன். அவனை அவாய்ட் செய்ய நினைத்தும் அவன் என்னை விடவில்லை. ஏன் என்று ஊருக்குக் கிளம்பும் நேரத்தில் தான் எனக்குப் புரிந்தது. அவனுக்கு அவசரமாக ஒரு பத்தாயிரம் ரூபாய் தேவைப்படுவதாகவும் சற்று பண நெருக்கடியாக இருந்ததால் என்னிடம் அதைக் கடனாகக் கேட்டான். கொடுக்க விருப்படவில்லை என்றாலும் மனைவியின் வாய்க்குப் பயந்து நான் அவன் கேட்ட பணத்தை கொடுத்தேன். இதோ ஒரு மாசத்தில் தந்துடறேன் என்று சொன்னவன் ஆறு மாதமாகியும் திருப்பித்தரும் வழியாகத் தெரியவில்லை. போன் செய்தாலும் எடுக்காமல் இருந்தான். எனக்கு இந்தப் பணத்துக்காக மனைவி ஊருக்குப் போகவும் தயக்கமாக இருந்தது. அந்த நிலையில் தான் இன்று என் கண்ணில் வசமாக மாட்டினான் என்று நினைத்து சிக்னல் வந்ததும் யூ டர்ன் எடுத்து அவன் நின்றிருந்த பக்கம் வந்து பார்த்தபோது அவன் காணாமல் போயிருந்தான். எனக்குக் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்று ஒரே வருத்தம். என் சோகக்கதையை வீடு திரும்பி மனைவியிடம் சொன்னபோது அவள் முகம் மாறி லேசாக வியர்த்தாள்.

“என்னடி என்ன விஷயம்?” என்று கேட்டதும் “ சீனுவாசன் செத்துப்போய் ரெண்டு மாசம் ஆறதுன்னா. உங்ககிட்ட சொல்லிட்டேன்னு நெனச்சேன்…” என்று இழுத்தாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. இரவு வெகு நேரம் கண் விழித்து அந்த சம்பவத்தை அசைபோட்டேன். எப்படி யோசித்தாலும் நான் சீனுவை பார்த்தது உண்மை போலத்தான் தோன்றியது. ஒரு பக்கம் பணத்தைப் பற்றியே நினைத்திருந்ததால் hallucinate செய்தேனோ என்று ஒரு விஞ்ஞான ஆறுதல் இருந்தாலும் மறுபக்கம் நெஞ்சில் அவ்வப்போது சரேலென்று ஒரு குளிர் கத்தி பாய்ந்தது ஒரு வலியும் இருந்தது. இந்த அமர்க்களத்தில் எப்போது தூங்கினேன் என்றே தெரியாது.

இது நடந்து ஒரு மாதம் இருக்கும். ஒரு நாள் நண்பன் கணபதி புது கார் வாங்கியிருப்பதாகவும் அதை டெலிவரி எடுக்க என்னையும் அழைத்துப் போக விரும்புவதாகவும் சொன்னான். சரியென்று ஆபீசில் பர்மிஷன் கேட்டு அவனோடு மவுண்ட் ரோடில் இருந்த அந்தக் கார் ஷோ ரூமுக்குச் சென்றேன். காரை டெலிவரி எடுத்து அவனுடன் சைதாபெட்டைப் பக்கம் சென்று கொண்டிருந்த போதுதான் கோபியைப் பார்த்தேன்.

கோபி என் பால்ய நண்பன். ஸ்கூலிலிருந்து காலேஜ் வரை ஒன்றாகப் படித்தோம்(?). ஒரே சிகரெட்டை இருவரும் புகைப்பது, சேர்ந்து தண்ணியடிப்பது, சேர்ந்து சினிமா பார்ப்பது, சேர்ந்து சைட் அடிப்பது என்று ரொம்ப நெருக்கம். ஆனால் கோபிக்கு வடக்குப் பக்கம் வேலையானதும் ஒரு நான்கு வருஷங்களாக தொடர்பு குறைந்திருந்தது. கார் ஒட்டி வந்த கணபதியிடம் ஒரு ஓரம் நிறுத்தச் சொல்லி கீழே இறங்கினேன். இறங்கி எதிர்பக்கம் பார்த்தால் கோபியைக் காணோம். ஏமாற்றமாக போய்விட்டது. அவன் போன் நம்பரும் இல்லாததால் எங்கள் common friend மகேஷுக்குப் போன் போட்டேன். அவனிடம் கோபி நம்பர் இருந்தால் வாங்கிப் பேசலாமே என்று. வழக்கமான ஹாய் ஹலோ முடிந்ததும் விஷயத்துக்கு வந்தேன். எதிர் முனையில் கனத்த மௌனம்.

“டேய்! உண்மையிலேயே கோபியத்தான் பார்த்தியாடா?”
“ஆமாடா.. நான் கீழ எறங்கறதுக்குள்ள எங்கியோ போயிட்டான்”

“டேய், அவன் ஆக்சிடெண்ட்ல சிக்கி ஒரு மாசம் முன்னாடி செத்துட்டானேடா” என்று அலறினான் மகேஷ்.

நான் உறைந்தேன்.

அன்று இரவும் என் தூக்கம் போச்சு என்று நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. மனைவி வேறு என்னை ஒரு வினோத ஜந்துவை பார்ப்பது போல் பார்த்தாள். பூஜை அறைக்குப்போய் நெற்றிக்கு விபூதி இட்டுக்கொண்டு தலைகாணியை எடுத்துகொண்டு ஹாலுக்குப் போய் படுத்துக்கொண்டாள்.

இந்த இரண்டும் கூட பரவாயில்லை. பத்து நாள் முன்னர் நான் சித்தப்பாவைப் பார்த்ததுதான் top. அவரும் இதே மாதிரி ஒரு சிக்னலில் தான் மாட்டினார். அதே மாதிரி மாயமாகிப் போனார். என் மனதில் ஏதோ ஒரு மின்னல். உடனே சித்திக்கு போன் போட்டேன்.

“மறு முனையில் பரிச்சியமில்லாத ஒரு குரல். “ராமலிங்கம் வீடுதானே?” என்று confirm செய்து கொண்டேன். “ஆமாம் சர், நீங்கள் யாரு? அவருக்கு உறவா?” என்று அந்தக் குரல் கேட்டது.

“நான் அவர் அண்ணா மகன். என்ன விஷயம்?” என்று கேட்டதற்கு, “உங்கள் சித்தப்பா ஜஸ்ட் ஒரு பத்து நிமிஷம் முன்னால்தான் ஹார்ட் அட்டேக்கில் காலமானார்” என்று வருத்தத்துடன் தெரிவித்தது அந்தக் குரல்.

அப்புறம் நான் சித்தப்பா வீட்டுக்குப் போனது, எனக்கு அதிர்ச்சியடைய கூட நேரமில்லாமல் எல்லாம் நடந்து முடிந்தது என்று பதினைந்து நாட்கள் ஓடிவிட்டது.

இதெல்லாம் முடிந்த பிறகு தான் டாக்டர் ஆதிமூலம் விசிட். அதுவும் மனைவியின் நச்சரிப்பின் பேரில். எனக்குக் காத்துக் கருப்பு பிடித்துவிட்டதாக நினைத்தாள். மாந்திரீகம் அது இது என்று போவதற்கு டாக்டர் மேல் என்றுதான் இந்த விசிட்.

“பயமா இருக்கு டாக்டர்” என்று சொன்ன என்னைப் பார்த்தார். சைக்கியாட்ரிஸ்ட்) டாக்டர் ஆதிமூலம். “என்னய்யா பயம்? இதெல்லாம் ஒரு passing phase. ரொம்ப சின்ன விஷயத்தப் பெருசு பண்ணாதே! கொஞ்ச நாள்ல சரியாயிடும். இந்த மருந்து தரேன். anti stress மருந்து. கொஞ்சம் தூக்கம் வரும். அதுனாலே நைட்ல சாப்பிட்டா, வெளில போகறத தவிர்க்கறது நல்லது. கொஞ்ச நாளைக்கு லீவு போடு ” என்று சொன்னார். சரியென்று சொன்னேன்.

ஒரு மாசம் போல லீவு போட்டு மனைவியோடு பல கோவில்களுக்கு (அவள் ஐடியா) சென்றேன். நன்றாகச் சாப்பிட்டேன். நிறைய டிவி பார்த்தேன். முகநூல் வாட்சப் என்று அந்த மாசம் போனதே தெரியவில்லை. அப்புறம் இன்றைக்குத் தான் ஆபீஸ் போனேன். வேலை செய்யவே மனம் இல்லை. இதற்குள் எங்கள் வங்கியில் நாங்கள் உபயோகிக்கும் sofware வேறு மாற்றியிருந்தார்கள். ஒன்றுமே புரியவில்லை. மானேஜர் கூப்பிட்டு ஒரு தலைகாணி சைஸ் manual ஒன்றைக் கொடுத்து வீட்டுக்குச் சென்றுப் படிக்கச் சொன்னார். உடம்பு சரியில்லை என்றால் சீக்கிரம் போக பர்மிஷனும் கொடுத்தார். சரியென்று மாலையில் ஒரு மணி நேரம் முன்னதாக வீட்டுக்குக் கிளம்பினேன். வழியில் வேளச்சேரி சிக்னல். பலவிதமான சிந்தனையில் மூழ்கியிருந்த நான் ஏதோ நினைவில் ரோட்டின் அந்தப் பக்கம் பார்த்தேன்.

பார்த்தேன். திகைத்தேன். சிலிர்த்தேன். உறைந்தேன்.

ரோட்டின் அந்தப் பக்கம் நான்.

Print Friendly, PDF & Email

1 thought on “ஈ.எஸ்.பீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *