வாஷிங்டனில் திருமணம்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: February 24, 2022
பார்வையிட்டோர்: 13,535 
 
 

(1999ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 8 | அத்தியாயம் 9 | அத்தியாயம் 10

“மணி என்ன? நவார்த்தம் இருக்குமா?” என்று கேட்டார் சாம்பசிவ சாஸ்திரி.

“இங்கிலீஷ் பேசுமய்யா. இது வாஷிங்டன். நவார்த்தமாம், நவார்த்தம்! நைன் தர்ட்டி என்று சொல்லுமேன்” என்றார் அம்மாஞ்சி.

“ராக்ஃபெல்லர் மாமி ஆளுக்கு ஒரு ரிஸ்ட் வாட்ச் வாங்கிக் கொடுத்தால் சௌகரியமாயிருக்கும்” என்றார் இன்னொரு சாஸ்திரி.

“நமக்கெல்லாம் வயிற்றிலே கடிகாரம் இருக்கிற போது தனியாக ரிஸ்ட் வாட்ச் எதற்கு?” என்று கேட்டார் அம்மாஞ்சி,

ஜார்ஜ் டவுனில் எங்கே பார்த்தாலும் வைதிகர்களும், கல்யாணத்துக்கு வந்துள்ளவர்களும் தான் கண்ணில் பட்டனர். அதைப் பார்த்தபோது, பம்பாயில் உள்ள மாதுங்காவைப் போல் வாஷிங்டனிலும் ஒரு தென்னிந்தியக் காலனி ஏற்பட்டு விட்டதோ என்று நினைக்கத் தோன்றியது.

புதுப் பந்தலின் மணமும், நாகஸ்வர இசையும், குழந்தைகளின் கும்மாளமும் சேர்ந்து, முகூர்த்த நாள் நெருங்கி விட்டதை உணர்த்திக் கொண்டிருந்தன.

பஞ்சு நின்ற இடத்தில் நிற்காமல் பறந்து கொண்டிருந்தான். யாருக்கு எது வேண்டுமானாலும் ‘பஞ்சு, பஞ்சு’ என்று அவனையே தேடி அலைந்தனர்.

“பஞ்சு ஸாரை இப்போது தானே சம்மர் ஹவுஸில் பார்த்தேன்?” என்பார் ஒருவர்.

“டம்பர்ட்டன் ஓக்ஸில் மேளக்காரர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறாரே” என்பார் இன்னொருவர். அங்கே போய்ப் பார்ப்பதற்குள் அவன் வேறொரு இடத்துக்குப் பறந்து விட்டிருப்பான்!

“பஞ்சு என்று ரொம்பப் பொருத்தமாகத்தான் பேர் வைத்திருக்கிறார்கள். பஞ்சாய்ப் பறந்து கொண்டிருக்கிறாரே!” என்றார் அம்மாஞ்சி,

ராக்ஃபெல்லர் மாமிக்கு நடந்து நடந்து கால் வீங்கிவிட்டது. அத்தையும், பாட்டியும் அந்தச் சீமாட்டியின் காலில் விளக்கெண்ணெய்த் தடவி வெந்நீர் ஒத்தடம் கொடுத்தபடியே, “நீங்க இப்படி அலையக் கூடாது. பஞ்சு இருக்கான். பார்த்துக் கொள்கிறான். உங்க கால் எப்படி வீங்கிப் போச்சு பாருங்க” என்று வருத்தப்பட்டனர்.

“இப்ப நீங்க என்ன செய்யறீங்க?” என்று கேட்டாள் மிஸஸ் ராக்.

“எங்களுக்குத் தெரிந்த கை வைத்தியத்தைச் செய்கிறோம்” என்றாள் அத்தை

“கால் வீங்கிப் போயிருக்கப்போ கை வைத்தியம் செய்தால் எப்படி? கால் வைத்தியமாகச் செய்யுங்க!” என்றாள் திருமதி ராக்ஃபெல்லர்.

அப்போதுதான் அந்தப் பக்கமாக வந்தான் பஞ்சு.

“பஞ்ச்! நாரிக்ரூவாஸ் எத்தனை மணிக்கு வராங்க?” என்று கேட்டாள் மிஸஸ் ராக்,

“த்ரீ ஓ கிளாக்குக்கு வராங்க, மேடம்! நீங்க ஏர்போர்ட்டுக்கு வரவேண்டாம். உங்களாலே முடியாது. ஏற்கெனவே கால் வீங்கிப் போயிருக்கு” என்றான் பஞ்சு.

“நோ! நோ! அதெல்லாம் முடியாது. நான் வரத்தான் போகிறேன். மகாராஜாஸ் வரப்போ ஏர்போர்ட்டுக்குப் போய் ரிஸீவ் பண்றதுதான் மரியாதை இதுக்காகத்தானே என் ஹஸ்பெண்ட் கூட இரண்டு நாள் முன்னாடியே வந்திருக்கிறார்” என்றாள் மிஸஸ் ராக்.

“சரி மேடம்!” என்று கூறிவிட்டுச் சென்றான் பஞ்சு.

விமானக் கூடத்திலிருந்து ஜார்ஜ் டவுன் போய்ச் சேருகிற வரை வழியெங்கும் அமெரிக்க மக்கள் பெரும் கூட்டமாகக் கூடி நின்று நாரிக்ரூவாஸின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்,

‘நாரிக்ரூவாஸ்’, ‘ஜான்வாஸ்’, ‘ஷம்பந்தி ஷண்டய்’, ‘முகூரட்’ – இந்த நான்கு அயிட்டங்களையும் காண்பதற்காகப் பல்லாயிரக்கணக்கான பேர் வெளியூர்களிலிருந்தெல்லாம் வந்திருந்தார்கள்.

நாரிக்ரூவாஸைக் கண்டால் நாய்கள் குரைக்கும் என்ற செய்திதான் அவ்வளவு பேருடைய ஆவலுக்கும் பரபரப்புக்கும் காரணம்!

ராக் பெல்லர் தம்பதியர் தங்களுடைய உயர்ந்த ஜாதி நாய்களுடன் விமான கூடத்தில் இரண்டு மணியிலிருந்தே காத்திருந்தனர்.

சரியாக மூன்று மணிக்கு விமானங்கள் ஒவ்வொன்றாகக் கீழிறங்கி வந்தன. அவற்றிலிருந்து இறங்கி வந்த பேவ்மெண்ட் மகாராஜாக்களுக்கு மாலை போட்டு வரவேற்றான் பஞ்சு. நரிக்குறவர்களைக் கண்ட மிஸஸ் ராக்ஃபெல்லர் “பேவ்மெண்ட் மகாராஜாஸ் ஏன் இப்படி இருக்காங்க? நல்லாவே டிரஸ் செய்து கொள்ளவில்லையே?” என்று கேட்டாள்.

“அவங்க அப்படித்தான் மேடம்! ரொம்ப ஸிம்பிளாத்தான் டிரஸ் செய்துக்குவாங்க. ரொம்பச் சிக்கனமாயிருப்பதால்தான் மகாராஜாவாயிருக்காங்க!” என்று பதில் கூறினான் பஞ்சு.

இதற்குள் நாய்களுடன் வந்திருந்த பிரமுகர்கள் முன்னால் நெருங்கி வந்து, தங்கள் நாய்களுக்கு நரிக்குறவர்களை தரிசனம் செய்து வைத்தார்கள். அந்த உயர்ந்த ஜாதி நாய்கள் நரிக்குறவர்களைக் கண்டு குரைக்கவே இல்லை. அவை வாயை மூடிக் கொண்டு மௌனமாக இருந்துவிடவே, அத்தனை பேரும் மிகுந்த ஏமாற்றத்துக்குள்ளாயினர்.

மிஸஸ் ராக்ஃபெல்லரின் முகத்தில் ஈயாடவில்லை . அந்தச் சீமாட்டியின் முகத்தில் விழிப்பதற்கே பஞ்சு வெட்கப்பட்டான்.

“டோண்ட் ஒர்ரி பஞ்ச்! ஒருவேளை நாளைக்குக் குரைத்தாலும் குரைக்கலாம்” என்றாள் மிஸஸ் ராக்.

“இந்த ஊர் டாக்ஸுங்க என் மூஞ்சியிலே கரி பூசிட்டுதுங்க மேடம்!” என்று

தலை குனிந்தான் பஞ்சு.

நாய்கள் குறைக்காதது நரிக்குறவர்களுக்கே புதிய அனுபவமாயிருந்தது! தங்களைக் கண்டு ஒரு நாய் கூடக் குரைக்கவில்லை என்பதை எண்ணிய போது அவர்களால் அதை நம்பவே முடியவில்லை !

“வாஷிங்டன்லே நாமெல்லாம் நிம்மஷியா ஊஷி விக்கலாம். ஒரு நாய் கூடக் குரைக்கவில்லை !” என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டனர்.

பஞ்சு, நரிக்குறத்தி ஒருத்தியை அணுகி, “பாட்டு ஒன்று பாடம்மா! அப்போதாவது இந்த நாய்கள் குரைக்கின்றனவா பார்க்கலாம்” என்றான்.

நரிக்குறத்தி, “தல்லாலே தல்லாலே தல்லாலே” என்று வனஸ்பதி டப்பாவைத் தட்டித் தாளம் போட்டபடி ஆடிப் பாடினாள். பிறகு, ‘ட்டா, டடடா’ பாட்டுப் பாடித் தட்டாமலை சுற்றினாள். அப்புறம் ஹிந்தி ட்யூனில் ‘லாரல்லப்பா’ என்ற பாட்டைப் பாடினாள்.

ஊஹூம். அந்த நாய்கள் எதற்கும் மசியவில்லை . மிஸஸ் ராக்ஃபெல்லருக்கு நாய்கள் குறைக்கவில்லையே என்ற வருத்தம் ஒரு பக்கம் இருந்த போதிலும், பஞ்ச் இந்த மகாராணிகளை எப்படி ஆட்டி வைக்கிறான்!’ என்று மனதுக்குள் வியந்து கொண்டாள்.

“நாரிக்ரூவாஸ் இன் வாஷிங்டன்!”

“டாக்ஸ் கீப் மம்!”

“கிரேட் டிஸப்பாயின்ட்மென்ட் டு மிஸஸ் ராக்ஃபெல்லர்!”

“மிஸ்டர் பஞ்ச் இச் அப்ஸெட்!”

என்று பத்திரிகைகளில் செய்தி வெளியாயிற்று. நரிக்குறவர்களை ஒரு வழியாக ஜார்ஜ் டவுனில் கொண்டு போய்ச் சேர்த்தான் பஞ்சு. உள்ளம் சோர்ந்து போயிருந்த அவன் களைப்புத் தீரச் சற்று நேரம் ஓய்வு பெற எண்ணித் தன் அறையில் போய் உட்கார்ந்ததுதான் தாமதம், டெலிபோன் மணி அடித்தது. மெட்ராஸிலிருந்து பாப்ஜி பேசினான்.

“என்ன பஞ்சு நரிக்குறவர்கள் வந்து சேர்ந்துவிட்டார்களா?” என்று கேட்டான் பாப்ஜி.

“வந்து விட்டார்களடா! ஆனால் நாய்கள் தான் குரைக்கவில்லை. மிஸஸ் ராக்ஃபெல்லர் முகத்தில் விழிக்கவே எனக்கு வெட்கமாகிவிட்டது. நாய்கள் குரைக்கப் போகிற தமாஷைப் பற்றி அவர் தம்முடைய சிநேகிதர்கள், உறவினர்களிடமெல்லாம் சொல்லிச் சொல்லி பெருமை அடித்துக் கொண்டிருந்தார். பாவம்! அவர்களுக்கெல்லாம் இப்போது பெரிய ஏமாற்றம்! என்னைப் பற்றி பேப்பர்லே வேறு போட்டுவிட்டார்கள்!” என்று அழமாட்டாக் குறையாகச் சொன்னான் பஞ்சு.

“ஒரு நாய் கூடவா குரைக்கல்லே?” என்று வியப்புடன் கேட்டான் பாப்ஜி.

“சாதாரணமாக குரைக்கிற நாய் கூட நரிக்குறவர்களைக் கண்டதும் வாயடைத்துப் போய்விட்டன” என்று வருத்தத்துடன் கூறினான் பஞ்சு,

“கவலைப்படாதே! இங்கிருந்து நாளைக்கே நூறு நாய்களைப் பிடிச்சு ப்ளேனில் அனுப்பி வைக்கிறேன்” என்று உறுதி கூறினான் பாப்ஜி.

“சேர்ந்தாற் போல் நூறு நாய்களுக்கு நீ என்னடா செய்வாய்?” என்று கேட்டான் பஞ்சு.

“நாய்களுக்குத் தானா இங்கே பஞ்சம்? கார்ப்பரேஷனுக்குப் போன் செய்து லைசென்ஸ் இல்லாத நாய்களைப் பிடித்துக் கொடுக்கச் சொன்னால் கொடுக்கிறார்கள். பணத்தை வீசினால் எல்லாம் நடக்கும். நாய் விற்ற காசு குரைக்குமா என்ன?” என்றான் பாப்ஜி.

“நாய்கள் குரைக்காத போது…” என்றான் பஞ்சு.

“கவலைப்படாதே! கண்டிப்பாய் நாளைக்குள் அனுப்பி வைக்கிறேன். இண்டியாவிலிருந்து நாளைக்கு நூறு நாய்கள் வரப்போவதாகப் பிரஸ்காரர்களிடம் சொல்லிவிடு” என்றான் பாப்ஜி.

அவ்வளவுதான், பஞ்சு குதூகலம் தாங்காமல் திருமதி ராக்ஃபெல்லரிடம் ஓடிச் சென்று, “மேடம்! நாளைக்கு நூறு நாய்கள் மெட்ராஸிலிருந்து வருகின்றன!” என்றான்.

“அப்படியா? வெரி ஹாபி! ரொம்ப சந்தோஷம்! ஜான்வாசம் போகிறபோது அந்தந்த ரூட்டிலே அவங்களை யாராவது பிடிச்சுக்கிட்டு நிக்கறதுக்கு ஏற்பாடு செய்துடு நாய்களுக்கெல்லாம் என்ன ஆகாரம் போடப் போறே?” என்று கேட்டாள் மிஸஸ் ராக்.

“டாக் பிஸ்கட்டுங்கதான்… வேற என்ன?”

“உங்க ஊர் டாக்ஸுங்களுக்கு வாய்ஸ் எப்படி இருக்கும்?” என்று கேட்டாள் மிஸஸ் ராக்.

“ரொம்பப் பிரமாதமாயிருக்கும். ஆனால் கொஞ்சம் நாய்ஸா இருக்கும். அவ்வளவுதான்” என்றான் பஞ்சு.

ஜார்ஜ் டவுனுக்கும் வாஷிங்டன் கேபிடலுக்கும் இடையே அழகுமிக்க பென்ஸில்வேனியா அவென்யூ செல்கிறது. ஜார்ஜ் டவுனிலிருந்து அந்த அவென்யூ வழியாகச் சென்றால் கான்ஸ்டிட்டியூஷன் அவென்யூ என்னும் கம்பீரமான ராஜபாட்டையைச் சந்திக்கலாம். கிழக்கு மேற்காகச் செல்லும் அந்த அவென்யூவில் திரும்பி மேற்கு பக்கம் நடந்தால் லிங்கன் மெமோரியலை அடையலாம்.

அந்த ரூட்டில்தான் ஜானவாச ஊர்வலத்தை நடத்துவதற்கு திருமதி ராக்ஃபெல்லர் ஏற்பாடு செய்திருந்தார்.

ஜானவாசத்தைக் காண்பதற்காகப் பல பேர் முன் கூட்டியே அந்த ரூட்டிலே உள்ள கட்டடங்களில் இடம் பிடித்து வைத்துக் கொண்டார்கள்.

ஜானவாச ஊர்வலம் இரவு ஒன்பது மணிக்குப் புறப்படுவதெனத் தீர்மானிக்கப்பட்டது.

‘சம்பிரதாயப்படி ஒரு கோவிலுக்கும் போகாமல் ஜானவாசம் புறப்படக்கூடாது’ என்றொரு பிரச்னையைக் கிளப்பினார் பிள்ளைக்கு மாமா. ராக்ஃபெல்லர் பிரபுவைத் தனக்கு அறிமுகப்படுத்தி வைக்கவில்லை என்று அவருக்கு காலையிலிருந்தே கோபம். அந்தக் கோபத்தை மனத்தில் வைத்துக் கொண்டு அவர் சண்டைக்குக் கால்கொட்டிக் கொண்டிருந்தார்.

“இவ்வளவு லேட்டாக இந்தப் பிரச்னையைக் கிளப்பினால் எப்படி?” என்று காரமாகவே கேட்டான் பஞ்சு,

“எனக்கு அதெல்லாம் தெரியாது. கோயிலுக்குப் போகாமல் ஜானவாசம் நடக்கக் கூடாது. அவ்வளவுதான்!” என்று கூறிவிட்டுப் போய்விட்டார் மாமா. உடனே பஞ்சு, அம்மாஞ்சியை அழைத்து ஆலோசித்தான்.

“இதென்ன பிரமாதம்! பாப்ஜிக்கு போன் செய்து இன்றைக்கே ஒரு பிள்ளையாரையும், கொத்தனாரையும் அனுப்பி வைக்கச் சொல்லுங்கள். டம்பர்ட்டன் ஓக்ஸுக்கு வடக்குப் பக்கத்தில் ‘லவர்ஸ் லேன்’னு ஒரு சந்து இருக்கிறது. அந்த லேன்லே சின்னதா ஒரு கோயிலைக் கட்டி முடித்துவிட்டால் போகிறது” என்றார் அம்மாஞ்சி,

மறுநாளே பிள்ளையாரும் கொத்தனாரும் வந்து சேர்ந்தார்கள். அம்மாஞ்சி குறிப்பிட்ட லவர்ஸ் லேனில் பிள்ளையார் கோயில் ஒன்றையும் கட்டி முடித்தார்கள்.

சனிக்கிழமை மாலையே நாய்களும் வந்து சேர்ந்து விட்டன. அவற்றைக் கண்ட பிறகுதான் பஞ்சுவின் முகத்தில் மகிழ்ச்சி மலர்ந்தது. மிஸஸ் ராக்ஃபெல்லரிடம் ஓடிச் சென்று, “நாய்கள் வந்துவிட்டன மேடம்! பார்க்கிறீர்களா?” என்று கேட்டான்.

“ஓ எஸ் ஓ எஸ்!” என்று கூறிக்கொண்டே விரைந்தாள் மிஸஸ் ராக்.

நரிக்குறவர்களைக் கண்ட நாய்கள் சக்கைப் போடாகக் குரைத்துக் கொண்டிருப்பதைக் கண்ட மிஸஸ் ராக், “பஞ்ச்! நௌ ஒன்லி ஐ ஆம் ஹாப்பி!” என்றாள்,

ஞாயிற்றுக்கிழமை இரவு ஏழரை மணிக்கே முதல் பந்தி போடத் தொடங்கிவிட்டார்கள். ராக்ஃபெல்லரின் குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் – இவர்களுக்கு மட்டும் ஒரு தனி மாளிகையில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கேதரின் ஹஸ்பண்ட் ஹாரி ஹாப்ஸ், தென்னிந்தியர்களைப் போலவே நாமும் வேஷ்டி கட்டிக் கொண்டு மணையில் உட்கார்ந்து சாப்பிட வேண்டும்’ என்று யோசனை கூறினார், ராக்ஃபெல்லர் பிரபு அதை அமோதிக்கவே எல்லோரும் வேஷ்டி கட்டிக் கொண்டு சாப்பிட உட்கார்ந்தனர்! போளி, அப்பளம், ஆமவடை என்று ஒவ்வொன்றாகப் பரிமாறப்பட்டன. அமெரிக்க நண்பர்கள் அவற்றைத் தொட்டுத் தொட்டுப் பார்த்து அதிசயப்பட்டனர். ஆமவடை கெட்டியாக இருந்தது.

“வடை வெரி ஹார்ட்!” என்றார் ஒருவர்.

“போலி வெரி ஸாப்ட்!” என்றார் இன்னொருவர்.

மிஸஸ் ராக்ஃபெல்லரும் கேதரினும் தங்கள் கையாலேயே அப்பளம் பரிமாறினார்கள்.

அனுபவம் இல்லாததால் பரிமாறும் போது அப்பளங்கள் அவர்கள் கையிலிருந்து கீழே விழுந்து நொறுங்கிக் கொண்டிருந்தன.

ஒவ்வொரு அப்பளமும் உடையும் போதும், “ஸாரி ஸாரி” என்று சொல்லிக் கொண்டிருந்தாள் மிஸஸ் ராக்.

“அபலம் வெரி டெலிகேட் அண்ட் வெரி லைட்!” என்று லேசாகச் சொன்னார் ஒருவர்.

“அது பறந்து போகாமல் இருக்கத்தானே பேப்பர் வெய்ட் மாதிரி ஆமவடை போட்டிருக்கிறார்கள்?” என்றார் வேறொருவர்.

தொட்டால் உடைந்து விடுமோ என்று அஞ்சி, பலர் அப்பளத்தை தொடாமலே வைத்திருந்தனர்.

‘அப்பளத்தை உடைக்காமல் அப்படியே முழுசாக விழுங்குவது எப்படி?’ என்று மண்டையைக் குழப்பிக் கொண்டிருந்தார்கள் வேறு சிலர்,

ஹாரி ஹாப்ஸ் முதலில் சாப்பிட்டுக் காண்பித்தார். அவர் எப்படிச் சாப்பிடுகிறார் என்பதைக் கவனித்துக் காப்பி அடித்தனர் மற்றவர்கள்,

ஜவ்வரிசிப் பாயசம் பரிமாறப்பட்டது. பாயசத்தில் கூட்டம் கூட்டமாக மிதந்த வழவழப்பான ஜவ்வரிசிகளைக் கையில் எடுக்க முடியாமல் திணறினார்கள் பலர். இரண்டு விரல்களால் அவற்றைப் பிடித்துவிட வெகு பாடுபட்டார் ஒருவர். அவை கையில் அகப்படாமல் நழுவிக் கொண்டேயிருந்தன. மற்றொருவர், தம்முடைய ஆள்காட்டி விரலால் ஒரு ஜவ்வரிசியை எப்படியோ அமுக்கிப் பிடித்துவிட்டார்! ஆனால் அவரால் அதைக் கையில் எடுக்க முடியவில்லை . விரலை எடுத்தால் ஜவ்வரிசி வழுக்கிக் கொண்டு போய்விடும் என்று தோன்றவே. ஜவ்வரிசியை அமுக்கிப் பிடித்தபடியே பக்கத்தில் இருந்தவரிடம் ‘ஹெல்ப் ஹெல்ப்’ என்று கெஞ்சினார்.

இன்னொரு பிரமுகர் ஜவ்வரிசிகளைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது கை வழுக்கி விடவே, தலைகுப்புறக் கவிழ்ந்து இலை மீது விழுந்துவிட்டார், மற்றொரு பிரமுகர் குண்டூசியால் ஜவ்வரிசிகளைக் குத்திக் குத்தி ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டிருந்தார்.

கடைசியில் ஒருவிதமாக எல்லோரும் சாப்பிட்டு முடிந்ததும் குறித்த நேரத்தில் ஜானவாசம் புறப்பட்டது.

முதலில் சம்மர் ஹவுஸிலிருந்து பெண்டுகள் வெளியே வந்து காரில் ஏறிக் கொண்டனர், ஊதுவத்திகளின் மணமும், புஷ்பங்களின் வாசனையும் சேர்ந்து எல்லோர் இதயத்திலும் வசந்தத்தின் இனிமையை நிரப்பின.

லல்லி மிகவும் கவர்ச்சிகரமான உடை அணிந்து கையில் கற்கண்டுத் தட்டுடன் புறப்பட்ட போது, பஞ்சு அவளை அர்த்த புஷ்டியோடு பார்த்துச் சிரித்தான்.

வசந்தாவும், லோரிட்டாவும் பகட்டான உடை அணிந்து பட்டாம் பூச்சிகளைப் போல் மிதந்து கொண்டிருந்தார்கள். மணப்பெண் ருக்மிணி, மாடி ஜன்னல் வழியாக எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தாள்.

“நீயும் வாயேன், ஜானவாசம் பார்க்கலாம்” என்று மணப்பெண்ணை அழைத்தாள் லோரிட்டா.

“அவள் வந்தால் மாப்பிள்ளை வெட்கப்படுவார். அதனால் அவள் வேண்டாம்” என்றாள் விஷயம் தெரிந்த வசந்தா. எல்லோரும் காரில் ஏறிக் கொண்டு லிங்கன் மண்டபத்தை அடைந்தனர்.

அந்தப் பளிங்கு மண்டபத்தின் படிக்கட்டுகள் மீது ஏறிச் சென்று விசாலமான தாழ்வாரத்தில் அமர்ந்தனர். மண்டபத்துக்கு எதிரே தடாகங்களும், அவற்றில் பிரதிபலித்த ஒளி விளக்குகளும், பழுப்பும் மஞ்சளுமாகச் செர்ரி மரங்கள் பூத்துக் குலுங்கும் காட்சியும், அரம்பையர் நடமாட்டமும் அந்த இடத்தைச் சொப்பனபுரியாக மாற்றியிருந்தன.

“நாழி ஆகிறதே! ஆசீர்வாதம் ஆரம்பிக்கலாமா?” என்று கேட்டார் அப்பு சாஸ்திரிகள்.

அம்மாஞ்சி வாத்தியார், மாப்பிள்ளைக்கு ஸ்பெஷலாகத் தைத்து வைத்திருந்த அமெரிக்கன் பாட்டர்ன் டெர்ரிலின் ஸுட்டை எடுத்து வைத்தார். ‘கனம்’ ஒன்றைக் கம்பீரமாக ஓதி, மாப்பிள்ளை டிரஸ்ஸை ஆசீர்வாதம் செய்து கொடுத்தார் சாஸ்திரிகள்.

பிறகு எல்லோருக்கும் சந்தனமும், கற்கண்டும், புஷ்பமும், தாம்பூலமும் வழங்கப்பட்டன. வேஷ்டி அங்கவஸ்திரத்துடன் காட்சி அளித்த அமெரிக்கப் பிரமுகர்கள் லிக்விட் ஸாண்டலைப் பூசிக் கொண்டு ஒருவரை ஒருவர் தமாஷ் செய்து கொண்டிருந்தனர்.

மாப்பிள்ளை ராஜகோபாலன் புதிய டிரஸ்ஸை அணிந்து கொண்டதும் எல்லோருக்கும் நமஸ்காரம் செய்து முடித்தான்.

“சரி, நேரமாச்சு புறப்படுங்கோ ” என்று துரிதப்படுத்தினான் பஞ்சு.

ஜானவாசம் புறப்பட்டது.

நாகஸ்வரக்காரர்களும், பாண்டு வாத்தியக்காரர்களும் எல்லோருக்கும் முன்னால் சென்றனர். அவர்களுக்குப் பக்கத்தில் நரிக்குறவர்கள் தலையில் காஸ் லைட்டுகளைத் தூக்கி வைத்துக் கொண்டு நகர்ந்தனர். காருக்கு முன்னால் புருஷர்கள் கூட்டம் சென்றது. அவர்களில் சிலர் கையில் பன்னீர்ச் செம்புடன் கம்பீரமாக நடந்தனர்.

எல்லோருக்கும் நடுநாயகமாக, அலங்காரம் செய்யப்பட்ட காரில் அமர்ந்திருந்தார் மாப்பிள்ளை. குழந்தைகள் கூட்டம் மாப்பிள்ளையைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்தது.

வெங்கிட்டு தன் நண்பனிடம், “அதோ கார் பக்கத்திலே நிற்கிறாரே, அவர் தாண்டா ராக்ஃபெல்லர் மாமா! போட்டோ எடுக்கிறாரே, அவர் தான் மாப்பிள்ளைத் தோழன்” என்று சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தான்.

நாகஸ்வரக்காரர்கள் நாட்டையில் ஆலாபனை செய்ய, கூட்டத்தினர் ஆங்காங்கே நின்று நகர்ந்து கொண்டிருந்தார்கள், பாண்டு வாத்தியக் கோஷ்டியினர் ஷண்முகப் பிரியாவில் இழைத்தபடியே அவர்களை முந்திச் சென்று கொண்டிருந்தனர். பஞ்சு அவ்வப்போது முன்னால் சென்று, வாத்தியக்காரர்களை நகர்த்திக் கொண்டிருந்தான்.

அழகும், ஆடம்பரமும் மிக்க கான்ஸ்டிட்யூஷன் அவென்யூவிலும், பென்சில்வேனியா அவென்யூவிலும் கூடியிருந்த கூட்டத்தைச் சொல்லி முடியாது.

நாரிக்ரூவாஸைக் கண்டதும் நாய்கள் பிரமாதமாகக் குரைக்கத் தொடங்கின. அதைக் கண்ட போது அமெரிக்க மக்கள் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை .

ஊர்வலக் காட்சிகளையும், நாய்கள் குரைப்பதையும் டெலிவிஷனில் எடுத்துக் கொண்டார்கள்,

வாண வேடிக்கை அமர்க்களங்களுடன் ஜாம் ஜாம் என்று புறப்பட்ட ஜானவாச ஊர்வலம், ஜார்ஜ் டவுனில் போய் முடிவதற்குள் மணி பன்னிரண்டு ஆகிவிட்டது.

கடைசியில் ‘லவர்ஸ் லேன்’ பிள்ளையார் கோவிலுக்குச் சென்று, தேங்காய் உடைத்து, தரிசனம் செய்து கொண்டு சம்மர் ஹவுஸை அடைந்தனர்.

பொழுது விடிந்தால் முகூர்த்தம்!

பஞ்சுவும், ராக்ஃபெல்லர் மாமியும் பந்தலில் உட்கார்ந்து மறுநாள் முகூர்த்தத்துக்கான ஏற்பாடுகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது அங்கே வந்த அய்யாசாமி அய்யர் பஞ்சுவை மெதுவாக அழைத்து அவன் காதோடு ஏதோ சொன்னார்.

பஞ்சுவின் முகம் மாறுவதைக் கண்ட மிஸஸ் ராக்ஃபெல்லர் “வாட் பஞ்ச்?” என்று விசாரித்தாள்.

“பிள்ளையின் மாமா ஏதோ தகராறு செய்கிறாராம்” என்றான் பஞ்சு.

“என்ன சொல்கிறாராம்?”

“இந்த முகூர்த்தம் நடப்பதை பார்த்து விடுகிறேன் என்கிறாராம்!”

“நல்லாப் பார்க்கட்டுமே! எல்லோரும் அதைப் பார்க்கத்தானே காத்துக் கொண்டிருக்கிறோம். அவரும் பார்க்கட்டும்!” என்றாள் மிஸஸ் ராக்.

“விஷயம் அப்படியில்லை மேடம்! சம்பந்திச் சண்டை ஆரம்பமாகிவிட்டது” என்றான் அவன்.

“ஓ! ஷம்பந்தி ஷண்டய் ஆரம்பாயிட்டுதா? வெரி க்ளாட்! வெரி க்ளாட்!” என்று உற்சாகமாக எழுந்து வேகமாக விரைந்தாள் மிஸஸ் ராக்.

அவசரம் அவசரமாக டெலிபோனை எடுத்து வைத்துக் கொண்டு தன்னுடைய சிநேகிதர்கள், உறவினர்கள் அத்தனை பேரையும் ஒவ்வொருவராக அழைத்து, “ஷம்பந்து ஷண்டய் ஸ்டார்ட்டட் ஜஸ்ட் நௌ!” என்று செய்தியை அஞ்சல் செய்து கொண்டிருந்தாள்.

– தொடரும்…

– வாஷிங்டனில் திருமணம், முதற் பதிப்பு: அக்டோபர் 1999, நர்மதா பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *