வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: September 29, 2021
பார்வையிட்டோர்: 15,153 
 
 

அத்தியாயம்-8 | அத்தியாயம்-9 | அத்தியாயம்-10

கலைஞர் வரப்போகிற தேதி நிச்சயமாயிட்டதாம்” என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினார் விழா வேந்தள். ஒரே குஷி அவருக்கு!

“எப்போ, எப்போ?” என்று ஆர்வத்தோடு கேட்டார்கள் மற்றவர்கள்.

“டிசம்பர் 19ம் தேதி வருகிறார். 20ம் தேதி காலை ‘வடம் பிடித்து’ விழாவைத் தொடங்கி வைக்கிறார். சக்ரவர்த்தியே கலைஞரோடு டெலிபோனில் பேசிக் கேட்டபோது 19ம் தேதி வருவதாகச் சொல்லிவிட்டாராம். காரியதரிசி யோஷினரரி நாளைக்கு ‘பிரஸ் மீட்’ வைத்திருக்கிறார்” என்றார் முத்து.

“தேர் வேலை பூர்த்தியாயிட்டுதா?”.

“ஓ! தேருக்குப் பக்கத்திலேயேதான் பிரஸ் மீட் நடக்கப் போகுது. வெளிநாட்டுப் பத்திரிகைக்கா ரங்களெல்லாம் வராங்க” என்றார் ஷோஜோ.

“இன்னும் பத்து நாள் தானே இருக்கு? அதுக்குள்ளே வள்ளுவர் சிலை செய்து முடிச்சுடுவாங்களா?” என்று கவலையோடு விசாரித்தார் நன்னன்.

“கணபதி ஸ்தபதியிடம் ஒரு பொறுப்பை ஒப்படைச் சாச்சுன்னா அப்புறம் அதைப்பத்தின கவலையே நமக்கு வேணாம். பதினெட்டாம் தேதிக்குள் கண்டிப்பா முடிச்சுடுவார்.”

“இன்னும் சிலைக்குத் தலையே தெரியலையா மே! எப்ப முடிக்கப் போகிறாரோ?”

“ராத்திரிப் பகலா வேலை நடக்குது. முடிஞ்சுடும். சிற்பிகள் சிலை செய்யற இடத்தைச் சுத்தி திரை போட்டு மறைத்துக் கொண்டு வேலை செய்யறாங்க.. நான் மெதுவா எட்டிப்பார்த்தேன். 18ம் தேதி வரை இங்கே யாரும் தலை காட்டக் கூடாதுன்னுட்டார் கணபதி ஸ்தபதி.”

“அப்படியா! அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க?”

“நாங்க யாரும் தலை காட்டலே; வள்ளுவர் தலை காட்டினாப் போதும்னு ஜோக் அடிச்சுட்டு வந்தேன்” என்றார் புள்ளி.

“அரண்மனை கிழக்கு வாசலில் பலத்த பந்தோபஸ்துக்கு ஏற்பாடு செஞ்சிருக்காங்க. அங்கதான் கலைஞர் பேசப் போறார். போலீஸ்காரங்க சுத்தி சுவர் வெச்ச மாதிரி நின்னுகிட்டிருக்காங்க. ஒரு ஈ காக்கை உள்ளே நுழைய முடியாது. அத்தனை கெடுபிடி!” என்றார் புள்ளி சுப்புடு.

“இந்த ஊர்ல ஈயும் கிடையாது; காக்கையும் கிடையாதே!” என்று சிரித்தார் மனோரமா.

“காரியதரிசி யோஷினாரி தேருக்கு முன்னால் சந்நிதிபோல் இடம் விட்டு இரு பக்கங்களிலும் குஷன் நாற்காலிகள் போட்டு, அந்த நாற்காலிகளுக்கு நம்பர் போட்டுக்கிட்டிருக்கார். யார் யார் எந்தெந்த நம்பரில் உட்காரவேண்டும் என்பதற்குப் பட்டியல் தயாராகுதாம். அது ரொம்ப ரகசியமாம்! எந்த நம்பர்ல யார் உட்காரப் போறாங்கன்னு அவருக்கே தெரியாதாம்” என்றார் விழா வேந்தன்.

“கலைஞர் ஸீட் நம்பர் தெரியுமா?”

“ஜப்பான் சக்ரவர்த்திக்குப் பக்கத்தில் கலைஞருக்கும், கலைஞர் குடும்பத்தாருக்கும் இடம் ரிஸர்வ் செய்திருக்காங்களாம். அரண் மனை உத்தரவாம்!”

TVA_BOK_0003968_வடம்_பிடிக்க_வாங்க_ஜப்பானுக்கு_0078-pic

“இடது புறத்தில், ஜப்பான் பிரதமர் கய்ஃபு, அமெரிக்க ஜனாதிபதி, பிரிட்டிஷ் பிரதமர், பிரெஞ்ச் பிரஸிடெண்ட், சோவியத் தலைவர் க்வீன் எலிஸபெத், டயனா தம்பதியர், தாச்சர், இந்தியக் குடியரசுத் தலைவர் ஆர்.வி., இவ்வளவு பேருக்கும் நம்பர் போட்டு வச்சிருக்காங்க.”

“பூமாலைகளை யார் எடுத்துக் கொடுக்கணும், யார் யாருக்கு மாலை போடணும் போன்ற நுணுக்கமான விவரங்களை யெல்லாம் யோஷினாரியுடன், ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார் இந்தியன் வங்கி கோபாலகிருஷ்ணன்.”

“டோக்கியோ நகரையே தமிழர்கள் குத்தகைக்கு எடுத்த மாதிரி இருக்கு. எல்லா ஓட்டல்லயும் இப்பவே கூட்டம் தாங்கலை” என்றார் விழாவேந்தன்.

“எல்லாரும் இருபதாம் தேதியை எதிர்பார்த்துக்கிட் டிருக்காங்கன்னு சொல்லுங்க.”

“ஆமாம், விழாவன்று. முதலில் கலைஞரின் தமிழ் முழக்கம்; அப்புறம் நாதசுர முழக்கம், அப்புறம் வெடி முழக்கம். டோக்கியோவே அல்லோலகல்லோலப் படப்போகுது” என்றார் விழாவேந்தன்.

“டிசம்பர் பதினெட்டு என்றால் நெருக்கத்தில் வந்துட்டுதே! இன்விடேஷன் போட வேண்டாமா!” புள்ளி கேட்டார்.

“பத்தாயிரம் இன்விடேஷன் பறக்கப் போகுது. உமக்கேன் அந்தக் கவலை?” என்றார் விழா வேந்தன்.

“தமிழ் நாட்டிலிருந்து வேற யாரெல்லாம் வராங்களாம்?”

“தமிழ்க்குடி மகன், பேராசிரியர் அன்பழகன், நாஞ்சில் மனோகரன், சாதிக், கே.பி. கந்தசாமி, பொன். முத்துராமலிங்கம், துரைமுருகன், கண்ணப்பன், நேரு, வீரபாண்டி ஆறுமுகம், பொன் முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், பாலு எம்.பி., ஸ்டாலின், கவியரசு வைரமுத்து, திருக்குறள் முனுசாமி, பட்டிமன்றம் – நமசிவாயம், தமிழ்ப் புலவர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், சிவாஜி. கமலஹாசன், ரஜினிகாந்த், எம். எஸ். சுப்புலட்சுமி, பத்மா சுப்பிரமணியம், சுதாராணி ரகுபதி, டி. டி. வாசு, எம். ஏ. எம். ராமசாமி, பொள்ளாச்சி மகாலிங்கம், ஏ.வி.எஸ்.ராஜா, செம்மங்குடி, லால்குடி, குன்னக்குடி, மாண்டலின் ஸ்ரீநிவாஸ், டாக்டர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், பொம்ம லாட்டம், புரவி நாட்டியம், கரகம், காவடி எல்லாருமே வராங்க.”

“எம்.எஸ். கச்சேரி உண்டா ?”

“இம்பீரியல் பாலஸ்லே சக்ரவர்த்தி குடும்பத்தினருக்காக ஸ்பெஷலா ஒரு கச்சேரி ஏற்பாடு பண்ணியிருக்காங்க…”

“டான்ஸ்?”

“கபூகிஸா தியேட்டர்ல பத்மா சுப்பிரமணியம், சுதாராணி ரகுபதி ரெண்டு பேர் டான்ஸும் நடக்கப்போகுது. ஒரே சமயத்தில் இரண்டாயிரத்து இருநூறு பேர் உட்கார்ந்து பார்க்கக் கூடிய தியேட்டர். அவ்வளவு பெரிசு”

“அப்புறம்?…”

“தொடக்க விழாவுக்கு இறைவணக்கம் மணி கிருஷ்ணசாமி. குத்துவிளக்கு ஏத்தி வைக்கப்போறவர் தயாளு அம்மா. வரவேற்புரை கோபாலகிருஷ்ணன். ஸ்டாம்ப் ரிலீஸ் ஆர்.வி.”

“பிரமாதம், பிரமாதம்!” என்றார் புள்ளி.

“இந்த விழா ஞாபகார்த்தமா தபால் தலை வெளியிடப் போறாங்க. அத்தோட ‘கீ செயின்’ ஒண்ணும் செய்து விழாவுக்கு வரவங்க அத்தனை பேருக்கும் கொடுக்கணும்னு சக்ரவர்த்தி ஆசைப்படறாராம்!”

“ஃபஸ்ட் கிளாஸ் ஐடியா சந்தனக் கட்டையில் சின்ன அளவில் தேர் செய்து அந்த கீ செயினில் இணைச்சுடலாம்” என்றார் கோபாலகிருஷ்ணன்.

“தேர் எவ்வளவு பெரிசு! அதை இத்தனூண்டு செய்து கொடுத்தால் நல்லாயிருக்குமா?”

“பெரிய யானையைச் சின்னதா செஞ்சு பார்க்கணும். சின்ன எறும்பைப் பெரிய சைஸில் செஞ்சு பார்க்கணும். அதில் தான் தமாஷே இருக்கு” என்றார் புள்ளி.

“ஸீக்கோ வாச் கம்பெனியிடம் சொன்னா அந்தத் தேர் சின்னத்துக்குப் பின்னால அதே சைஸ்ல ஒரு கடிகாரம் செய்து பிக்ஸ் பண்ணிடுவாங்க. இந்தியா-ஜப்பான் கலாசார உறவுக்கு அது ஒரு பொருத்தமான அடையாளமா இருக்கும்!” என்று யோசனை கூறினார் நன்னன்.

“ரொம்ப நல்ல யோசனை! ஒன்றே சொன்னார் நன்னன். அதுவும் நன்றே சொன்னார் மன்னன்” என்றார் தமிழ்ப்புலவர் ஷோஜோ!


இரவு பூரா பென்னட் கண் விழித்து வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தான். எலெக்ட்ரானிக் விவகாரங்களில் அவன் ஒரு புலி!

ஜார்ஜ் நிலையில்லாமல் உறங்கினான்.

மறுநாள் காலையில் எழுந்தபோது பென்னட்டைக் காண வில்லை. அவன் காரையும் காணவில்லை.

மேஜையைப் பார்த்தபோது பாதிக் கருவிகளையும் காணவில்லை.

மிக முக்கிய வேலையாக வெளியே போயிருக்கிறான் என்பது ஜார்ஜுக்குத் தெரியும். பத்து மணி வரை குழம்பிய நிலையில் இருந்தவன், தன்னை மறந்து சின்ன தூக்கம் வர, மீண்டும் தூங்கி விட்டான், ‘ஜார்ஜ்! ஜார்ஜ்!’ என்று கூவிய குரல் அவனை எழுப்பியது.

தட்டுத் தடுமாறி, “எஸ்! பென்னட்” என்றான், பார்வை பென்னட் கையில் இருந்த காமிரா மீது விழுந்தது.

“நல்லாத் தூங்கறியே! தூங்கக்கூடிய நேரமா இது? வா உள்ளே!”

அடுத்த அறையில் போய் உட்கார்ந்தார்கள்.

“நேத்து என்னவோ சொன்னியே, யாரு அது? அவன் பேரென்ன? புல்லியா?”

“புல்லி இல்லே! புள்ளி! இண்டியன் நேம். கொஞ்சம் நாக்கை அழுத்தணும்’

‘ஓகே, ஓகே! அவனைப் பத்தி என்ன சொன்னே? தேர் மேல ஏறி போட்டோ எடுக்கப் போறான் இல்லே?”

“ஆமாம்!”

“இப்ப ஒரு தந்திரம் செய்யணும்!”

“சொல்லுங்க பாஸ்?”

“இந்த காமிராவை அவன் கையில் கொடுத்துட்டாப் போதும்.”

ஜார்ஜின் வாய் மூடியது.

“கவலைப்படாதே! ஈஸி! ‘இந்தக் காமிராவிலே பிரமுகர் களை போட்டோ எடுத்துக் கொடுங்க; நான் ஊருக்குக் கொண்டு போகணும்’னு சொல்லு”

“எதுக்குன்னு கேட்பானே?”

“பாரிஸ்ல லூர் மியூஸியத்தில வைக்கப் போறோம். நோபல் பரிசு கொடுப்பாங்கன்னு தைரியமா அடிச்சு விடு!” என்றான் பென்னட்.

“நம்புவானா?”

“அதுலதான் உன் திறமையே இருக்கு! போட்டோவில பிரெஞ்சு பிரஸிடெண்ட் கட்டாயமா இருக்கணும். அவர் இருந்தாத்தான் பரிசு கிடைக்கும்னு சொல்லு.”

“எஸ் பாஸ்! அந்தப் புள்ளி அவன் காமிராவிலயே எடுக்கறேன்னு சொல்லிட்டா?”

“இந்தக் காமிரா ரொம்ப உயர்ந்த காமிரா. லேட்டஸ்ட்னு சொல்லு!”.

“ஓகே பாஸ்!”

காமிராவை ஆர்வத்தோடு சோதித்துப் பார்த்தான் ஜார்ஜ்.

அதில் நிறைய சூட்சுமங்கள் தெரிந்தன.

“பாஸ்! அவனாலே இதைப் புரிஞ்சுக்க முடியுமா?”

“ஒண்ணுமே வேண்டாம்! இதோ பார்”

பென்னட் எதையோ மெல்லிசாகத்தொட ‘லபக்’ என்று வியூ-பைன்டர் மேலே எகிறியது.

அதில் அழகாக அந்த அறைக் காட்சிகள் தெரிந்தன.

“இதை வச்சு சாதாரணமா ஃபோகஸ் செய்தாப் போதும். அப்படியே ட்ரிகரை அமுத்தச் சொல்லு எல்லாம் சரியாப் போயிடும்”

ஜார்ஜ் காமிரா முகப்பைப் பார்த்தான். சாதுவாக ஒரு லென்ஸ் நீலத்தில் சிரித்தது.

சுற்றி வர வளையத்தில் எண்கள் பொறிக்கப்பட்டிருந்தன.

“பாஸ்!” என்றான்.

“ரொம்பக் கேட்காதே! ட்ரிகரை அழுத்தினா லென்ஸ் விலகும். ஒரு புல்லட் உஸ்னு கிளம்பி பிரெஞ்சு பிரஸிடெண்டைப் போய்த் தாக்கும்!”

“ஐயோ பென்னட்! அந்த இண்டியன் ஒரு மக்கு! அவ்வளவு துல்லியமா பிரஸிடெண்டை ஃபோகஸ் பண்ணத் தெரியாது அவனுக்கு”

விமான இறக்கையில் பளிச்சிடுவது போல், பென்னட்டின் கண்களில் ஒரு வெளிச்சம் அடித்தது:

“ஜார்ஜ். இவ்வளவு தான் நீ என்னைப் புரிஞ்சுக்கிட்டதா இது என்ன சாதாரண காமிராவா?”

ஜாஜ் அசடாக விழித்தான்,

“பிரெஞ்சு பிரஸிடெண்ட் உருவத்தை காமிரா மெமரியிலே பதிச்சு வச்சிருக்கேன்! பிரஸிடெண்ட் நிற்கிற இடத்தை நோக்கி காமிராவைச் சும்மாத் திருப்பி விசையை அமுக்கினாப் போதும். பிரஸிடெண்டை , இந்தக் காமிரா. முதல்லே அடையாளம் கண்டு பிடிச்சுக்கும். உள்ளே உடனே எலெக்ட்ரானிக் மாயங்கள் கடந்து, ‘ ஒரு ரகசிய துப்பாக்கிக் குழல் தானாக இலக்கை நோக்கித் ‘ திரும்பி நிற்கும். அடுத்த கணம் புல்லெட் ஒண்ணு சத்தம் போடாமல் கிளம்பி பிரஸிடெண்ட்டைத் தாக்கும்”

ஜார்ஜ் வாயைப் பிளந்தான்.

“விஷயம் என்ன நடந்ததுன்னு தெரியறதுக்குள்ளே பத்து நிமிடம் ஆயிடும். அதுக்குள்ளே நாம்ப ஹாங்காங் பறந்துடலாம்”

“ஓகே!”

“இப்பவே போய் புள்ளிகிட்டே இதைக் கொடுத்துட்டு வா! அங்கே எதாவது பொண்ணுகிட்டே பல் இளிக்காதே”

ஜார்ஜ் கின்ஸா டயச்சி ஓட்டலை அடைந்தபோது மணி ஆறு.

இந்தியக் குழுவினர் அங்கே நான்கு அறைகளில் தங்கி இருந்தார்கள்.

அவர்களில் ஒருவர் புள்ளி என்று புரிந்துவிட்டது!

கையில் புது ‘கேனன்’ காமிராவுடன் வராந்தாவில் உலாவியபடி, தண்ணீர்த் தொட்டியை மாட்டுக்குக் காண்பிப்பது போல் டோக்கியோ வைத் தன் காமிராவுக்குக் காட்டிக்கொண்டிருந்தார் புள்ளி.

“மிஸ்டர் புள்ளி!”

பத்து நிமிடத்தில் பேசி முடித்தார்கள்.

புள்ளி சந்தோஷமாய்ச் சிரித்தார்.

ஜார்ஜ் காமிராவை உறையோடு புன்னியிடம் கொடுத்து விட்டுத் திரும்பியபோது ஒரு அறையின் கதவு திறந்து கொள்ள, அதிலிருந்து கணபதி ஸ்தபதி வெளியே வந்தார்!

அடுத்து, உள்ளேயிருந்து வந்த குரல் ஜார்ஜை உலுக்கியது.

ஜார்ஜின் காதலி டயட் ஆபீஸ் கிஜிமாவின் குரல் அது!

அந்தக் கணமே பரபரப்பாக கண்களைத் திருப்பி ‘எங்கே மறைய?’ என்று யோசித்தான்.

நாலு எட்டில் வேக நடை போட்டு எதிரே இருந்த அறைக்குள் புகுந்தான்.

கதவு பின்னால் மூடிக்கொள்ள, அவன் பார்வை மெள்ள மெள்ள உள்ளே மந்த வெளிச்சத்தில் காட்சியைப் புரிந்து கொண்டது.

அந்தக் கணமே முதுகுத் தண்டில் சுர்ர்ரென்று குளிர் ஏறியது.

அங்கே தென்பட்டவள் ஷூமாசிச்சி; அந்த கெய்ஷாப் பெண்!

– தொடரும்…

– வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு, முதற் பதிப்பு: ஜனவரி 1991, அசோக் உமா பப்ளிகேஷன்ஸ் , சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *