வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: May 31, 2021
பார்வையிட்டோர்: 3,842 
 
 

அத்தியாயம்-6 | அத்தியாயம்-7 | அத்தியாயம்-8

கொடியேற்று விழா நிகழ்ச்சிக்கு காலை . ஒன்பது மணிக்கு நேரம் குறிப்பிட்டிருந்ததால் விழாவேந்தன் இரவெல்லாம் கண்விழித்து அரண்மனை கிழக்கு வாசலில் பெரிய மாநாடுபோல் ஷாமியானா போட்டு, ‘இகபானா’ அலங்காரங்களுடன் மேடை அமைத்திருந்தார்.

சக்ரவர்த்தி குடும்பத்தார், ஜப்பான் நாட்டுப் பிரதமர், டோக்கியோ நகர மேயர், பார்லிமெண்ட் அங்கத்தினர்கள், அதிகாரிகள், தொழிலதிபர்கள், வி.ஐ.பிக்கள், வெளிநாட்டு விருந்தாளிகள் அத்தனை பேரும் அவரவர்கள் இடத்தில் அமர, சக்ரவர்த்தியின் காரியதரிசி – யோஷினாரியும் விழாவேந்தன் முத்துவும் “ஆச்சா, ஆச்சா” என்று குறுக்கும் நெடுக்கும் பறந்து கொண்டிருந்தார்கள்.

சக்ரவர்த்தி தம்பதியர் வரவை அத்தனை பேரும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள், நாமகிரிப் பேட்டை கிருஷ்ணன் மேடையில் அமர்ந்து நாதஸ்வரம் வாசிக்க, அந்த இசையின் கம்பீர முழக்கம் டோக்கியோ வையே நாத வெள்ளத்தில் ஆழ்த்தியது.

மேடையில் ஒரு பக்கம் விநாயகர் சிலையும் இன்னொரு பக்கம் நடராஜர் விக்ரகமும் வைத்திருந்தார் முத்து.

சக்ரவர்த்தியும் மகாராணியும், வந்ததும், திருவாரூர் ஓதுவார்கள் கணீரென்ற குரலில் இறைவணக்கம் பாடி முடித்ததும் “பூஜை ஆரம்பிக்கலாமா?” என்று விழா வேந்தன் கேட்க, கோபாலகிருஷ்ணன் தலையசைத்தார்.

ஒரு தட்டில் தேங்காய், வாழைப்பழம், வெற்றிலைப் பாக்கு, கற்பூரம் இவற்றை எடுத்து வைத்தார் மனோரமா. அவர் உடுத்தியிருந்த காஞ்சீபுரம் பட்டுச் சேலையையே ஆச்சரியத்தோடு உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார் மகாராணி.

மஞ்சள் பொடியில் பிடித்து வைத்திருந்த பிள்ளையாரைப் பார்த்துவிட்டு “அது என்ன?” என்று கேட்டார் மகாராணி.

“பிள்ளையார்” என்றார் முத்து.

“அப்படியானால் விநாயகர் பிள்ளையாருக்கு என்ன உறவு?” என்று கேட்டார் சக்ரவர்த்தி.

“விநாயகர், பிள்ளையார், விக்னேசுவரர், கணபதி எல்லாப் பெயர்களும் ஒரே கடவுளைக் குறிக்கும். இங்கிலீஷில் ‘எலிஃபண்ட் காட்’ என்று சொல்வார்கள்” என்றார் முத்து.

அடுத்தாற்போல் கோபாலகிருஷ்ணன் கணபதி ஸ்தபதியை சக்ரவர்த்திக்கு அறிமுகப்படுத்தி, “இவர் தான் எல்லா தெய்வங் களையும் சிலையாகச் செய்பவர். தமிழ்நாட்டின் பெருமைக்குரிய மகாசிற்பி. இப்போது அரண்மனைக்குள் வள்ளுவர் சிலை செய்து கொண்டிருக்கிறார்” என்றார்.

“நேரமாச்சு; கொடியேத்தணும், கொடிக் கம்பம் பக்கம் வாங்க” என்று எல்லோரையும் அவசரப்படுத்தி அழைத்துச் சென்றார் விழாவேந்தன்.

ஜப்பானியர் பாண்டு வாத்தியம் வாசித்து முடிந்ததும், திரு கோபாலகிருஷ்ணன் மைக் முன் போய் நின்று தமது வரவேற்புரையைத் தொடங்கினார்.


VadamPidikka-pic5

“சக்ரவர்த்தி அவர்களே! மகாராணி அவர்களே! இங்கு கூடியுள்ள பெரியோர்களே! உங்கள் எல்லோரையும் தமிழகத்தின் சார்பிலும், தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் சார்பிலும் இங்கே வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

சூரியனைத் தெய்வமாகப் போற்றுகிற நாடு இது. சக்ரவர்த்தி பரம்பரையே சூரியனிலிருந்து வந்ததுதான் என்றொரு நம்பிக்கை இங்கே உண்டு. உங்களைப் போலவே நாங்களும் தமிழ் நாட்டில் சூரியனைத் தெய்வமாக வழிபடுகிறோம். எங்கள் தமிழக விவசாயிகள் பொங்கலன்று சூரியனுக்குப் பொங்கல் படைக்கிறார்கள், சூரிய நமஸ்காரம் என்பது எங்கள் நாட்டில் தொன்று தொட்டு வந்துள்ள வழிபாடாகும். ஆகவே, சிவப்பு வட்டச் சூரியனையும் அத்துடன் எங்கள் வள்ளுவர் கோட்டத்தை யும் இணைத்து இந்த விழாவின் சின்னமாகக் கொடியில் பதித்து, ‘அந்தக் கொடியை இன்று இங்கே சக்ரவர்த்தி அவர்கள் ஏற்றி வைக்க இசைந்துள்ளார்கள். இந்த விழாவின் மூலம் நமது கலாசார உறவுக்கு ஒரு நிலையான பாலம் அமைக்கப் போகிறோம் என்பதில் நம் இரு நாடுகளுமே பெருமைப்படலாம்.

வள்ளுவர் எல்லா நாட்டுக்கும் பொதுவானவர். அவ ருடைய குறள்கள் வேதங்கள் போன்றவை. உலக மக்களின் வாழ்க்கை நெறிமுறைகளை ஈரடிகளில் வகுத்துக் கொடுத்த பெரும்புலவரான வள்ளுவருக்கு இங்கே, இந்த நாட்டில் ‘ ரத உற்சவம் நடத்துவதோடு எங்கள் பணி தீர்ந்துவிடப் போவ தில்லை. அடுத்து வரப் போகும் ஆண்டுகளில் ரஷ்யா, ஜெர்மனி, பிரிட்டன்,. அமெரிக்கா போன்ற நாடுகளிலும் தேரோட்டம் நடத்தத் ‘திட்டமிட்டிருக்கிறோம்…”


தேங்காய் உடைத்து கற்பூரம் கொளுத்தி பூஜை செய்து முடித்ததும், பலத்த ஆரவாரத்துக்கும் கை தட்டலுக்கும் இடையே சக்ரவர்த்தி கொடியை மேலே ஏறிய போது விண்ணிலிருந்து பூக்காம் பொழியும் அந்தக் காட்சியை நூற்றுக் கணக்கான காமிராக்கள் படமாக்கித் கொண்டிருந்தன.

அடுத்து, சக்ரவர்த்தி தம் பொழிவைத் தொடங்கினார்.


“எங்களுடைய தேசியக் கொடியே சிவப்பு வட்டச் சூரியன் உருவத்தைக் கொண்டதுதான். ‘ஹி-னோ-மாரு’ என்று ஜப்பானிய மொழியிலி சொல்வார்கள்.

VadamPidikka-pic6

எங்கள் விருப்பத்துக்கிணங்க இந்தத் தேரோட்ட விழாவை டோக்கியோவில் நடத்த இசைந்த தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கும், இந்த விழாவைச் சிறப்புற நடத்தி வைப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டு எல்லா ஏற்பாடுகளையும் நேரில் கவனிக்க வந்துள்ள இந்தியன் வங்கி சேர்மன் கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கும் இந்த அரசின் சார்பில் நன்றி கூறி, இந்த விழாவின் வெற்றிக்குப் பாடுபட்டு வரும் விழா வேந்தன் முத்து, திரு நன்னன், திருமதி மனோமா, கணபதி ஸ்தபதி ஆகியோரைப் பாராட்டுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழ் நாட்டின் கலைப் பொக்கிஷமாகத் திகமும் திருவாரூர்த் தேர் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன், அதே போன்ற தேர் ஒன்றை இங்கேயே நிர்மாணித்து தமிழ்மறை என்று போற்றப்படும் திருக்குறளை இயற்றிய வள்ளுவரின் சிலையை அதில் ஏற்றி வைத்து வீதிவலம் வரப் போகிற உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

சிவப்பு வட்டச் சூரியன் சின்னம் இந்த நாட்டின் மிகப் பராதனமான சின்னம் என்பதை நீங்கள் அறிவீர்கள். கீழ்த்திசை நாடுகளின் கீழ்க்கோடியிலுள்ள ஜப்பான் நாட்டில் உதிக்கும் பூரியன் தான் உங்கள் தேசத்துக்கு வருகிறான். ஆகவே உங்களோடு உறவுக்கு வருவது, அதாவது சூரியன் மூலமாக உறவுக்குக் கை கொடுப்பது நாங்கள் தான்.

பதின்மூன்றாம் நூற்றாண்டிலிருந்து இந்த நாட்டின் சின்னமாகத் திகழ்ந்து வரும் சிவப்பு வட்டச் சூரியன் உருவத்தை தேசியக் கொடியில் பதித்து அதிகாரபூர்வமாகப் பறக்கவிட்டது 1870ல் தான்.

பின்னர் 1872ல் ஜப்பானில் முதல் முதல் ரயில் ஓடத் தொடங்கியபோது, அதே கொடியைப் பறக்கவிட்ட பெருமை மெய்ஜி சக்ரவர்த்தியைச் சேர்ந்தது. அதற்குப்பின் ஏறத்தாழ நூறாண்டுகளுக்குப் பிறகு, இப்போது இங்கே வட்டச் சூரியனோடு வள்ளுவர் கோட்டத்தையும் இணைத்துப் பறக்கவிடுகிறோம். இந்தப் பெருமை, முடிசூட்டு விழா நடைபெற்றுள்ள இந்த நேரத்தில் எனக்குக் கிடைத்திருப்பதை எண்ணிப் பெருமையும் மகிழ்ச்சியும் அடைறேன்.”


ஷூமாசிச்சியை இப்போது உற்றுப் பார்க்கும்போது ஜார்ஜுக்கு நெருடியது.

“உங்களை எங்கேயோ பார்த்திருக்கிறேனே!” என்றான்.

“எங்கே?”

“ஆ! பியூஜியாமா பாங்க்லே”

சிரித்தாள்.

“அறிமுகம் இல்லாமல் வெளிநாட்டுக்காரர் யாரும் அந்த பாங்க்கில் பணம் போட முடியாது என்றார்கள். தவிச்சேன். அப்ப நீங்க எனக்குக் கையெழுத்துப் போட்டு உதவி செய்தீங்க.”

“இப்பவாவது ஞாபகம் வருதே”

“ஸாரி மேடம்!”

ஜப்பானிய முகங்கள் அவனுக்கு இன்னும் பிடிபடவில்லை.

“ஜார்ஜ்! அன்று முதல் உங்களைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருக்கேன். ஆனால், அது உங்களுக்குத் தெரியாது.”

திடுக்கிட்டான். பென்னட்டின் எச்சரிக்கைக் குரல் கேட்டது.

“எதிரி உளவாளிகளும் எங்கேயும் இருப்பாங்க.”

“என்னைப் பின்பற்றி வரதாச் சொல்றீங்களே, நீங்க என்ன உளவாளியா?” என்றான் பதட்டத்துடன்.

“ஆமாம்! சொல்லப் போனால் ஒரு விதத்துல உளவாளிதான்…”

“எப்படி?”

“உங்களைப் பார்த்ததிலிருந்து எனக்கு என் மனம் என் வசம் இல்லாமல் போயிட்டுது. உங்க நீல விழிகள், உயரம், தோற்றம் எல்லாமே என்னைக் கவர்ந்து இழுத்தது. விளையாட்டா நினைக்காதீங்க; எனக்குப் பிடிச்ச மாதிரி வாழ்க்கையிலே நீங்கதான் சரியா அமைஞ்சீங்க! அன்று முதல் உங்களைப் பின்தொடர்ந்துகிட்டே இருக்கேன்!”

ஜார்ஜுக்குக் குழப்பம் சற்றுத் தணிந்தது.

“உன் பேச்சை நம்பலாமா?” என்றான்.

“ஐ லவ் யு ஜார்ஜ்! என்னை நம்புங்க. சத்தியமாச் சொல்றேன், என்னாலே உங்களை மறக்க முடியலே! உங்கள் கவனத்தை எப்படியாவது என் பக்கம் ஈர்க்கணும்னு விரும்பி அதுக்காக ரொம்ப முயற்சி செய்தேன். நீங்க அன்னைக்கு ஐஸ்க்ரீம் பார்லர் போவதைப் பார்த்தபோது தான் எனக்கு நல்ல சந்தர்ப்பம் கிடைச்சுதுன்னு நினைச்சேன்!”

“நல்ல வேளையா நீங்க டயரியை வச்சுட்டுப் போயிட்டீங்க! யாரும் பார்க்காத நேரத்தில அந்த டயரிக்குள் என் விசிட்டிங் கார்டை வெச்சுட்டேன்” என்றாள் ஷூமாசிச்சி.

“அந்த டயரியைத் திறந்து பார்த்தீங்களா?” என்று கேட்டான் ஜார்ஜ் அவசரத்துடன் .

“ஏன் அப்படிக் கேட்கறீங்க?”

“அதில் என் சொந்த சமாசாரம் நிறைய எழுதியிருக்கேன்”

“அதை எல்லாம் நான் படிக்கலை. படிக்கவும் தெரியாது. ஏதோ கொஞ்சமாத்தான் இங்கிலீஷ் பேசுவேன். அவ்வளவுதான்”

மனசில் ஒரு சின்ன நிம்மதி.

“ஆமாம்; அன்றைக்கு உங்க கூட வந்தாளே, அந்தப் பெண் யாருன்னு சொல்லமுடியுமா?” என்று பேச்சைத் திருப்பினாள் அவள்.

“அவளா? கிஜிமா! டயட் பில்டிங்கில் வெளிநாட்டு விவகாரத்துறையிலே வேலை பார்க்கிறாள்”

“அவளை உங்களுக்கு எப்படித் தெரியும்?”.

“ஒரு வேலையா டயட்டுக்குப் போயிருந்தேன். அவளை அங்கே சந்திச்சேன். அப்ப ஏற்பட்ட சிநேகம்தான்.”

“அப்படியா! அவகிட்டே எச்சரிக்கையா இருங்க!”

“ஏன்?”

“உங்க மாதிரி அவள் பல பேரிடம் பழகறா!”

ஷூமாசிச்சி ‘டீ’ கலந்து வர உள்ளே போனாள்.

சட்டென்று அவன் எழுந்து பக்கத்து அறையில் எட்டிப் பார்த்தான். ஷூமாசிச்சி ஒரு படத்தில் “கெய்ஷா” உடையில் இருந்தாள். ‘இவள் ஒரு கெய்ஷாவா?’

உள்ளே காலை வைத்தான். மேஜைமீது ஒரு கார்ட் இருந்தது. அதை எடுத்தபோது ஆச்சரியமும் திகைப்பும் ஏற்பட்டன.

கார்டு ஒஸாகாவிலிருந்து வந்திருந்தது. ‘டியர் மிஸ் ஷமாசிச்சி’ என்று முழுதும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. ‘இங்கிலீஷ் தெரியுமா இவளுக்கு’.

ஏதோ சத்தம் கேட்க, டக்கென்று அறையை விட்டு வெளியே வந்தான். யாருமில்லை. சிறிது நேரத்தில் ஷூமாசிச்சி கொண்டுவந்த ‘டீ’பை’ சுவாரஸ்யமாகக் குடித்துவிட்டு வெளியே கிளம்பினான் ஜார்ஜ்.


“பார்த்துட்டேன்! அவளுக்கு இங்கிலீஷ் தெரியாது.” என்று சொன்னான் ஜார்ஜ். மனம் தங்தங் என்று அடித்தது. அந்தப் பொய்யைச் சொல்வதற்கு!

“எப்படிக் கண்டுபிடிச்சே?” என்று கேட்டான் பென்னட்!

“அவளையே கேட்டேன்; அட்ரஸ் வாசிக்கச் சொன்னேன்!”

“ஓகோ!” என்ற பென்னட் “தெரிஞ்சுக்க அந்தத் தெருவிலே இருக்கிற அத்தனை கெய்ஷாப் பெண்களும் இங்கிலீஷ் படிச்சவங்க இப்போ அவளைக் க்ளோஸ் பண்ண வேண்டியது தான்!” என்று முத்தாய்ப்பாக முடித்தான்.

ஜார்ஜின் உடம்பு பதறியது. “என்ன சொல்றீங்க? அவளை க்ளோஸ் பண்ணிரணுமா?”

“ஆமாம், நம்பாதே! அற்ப விஷயமாத் தோணும். பின்னால் அதுதான் பெரிசா முளைச்சுடும்”.

ஜார்ஜ் அன்று இரவு ஒன்பது மணிக்கு மீண்டும் ஷூமாசிச்சி வீட்டுக்குப் போனான். கதவு பூட்டியிருந்தது.

அடுத்த நாளும் போனான். பூட்டியிருந்தது.

தொடர்ந்து, நான்கு நாட்கள் பூட்டியே கிடந்தது. பக்கத்தில் ரொட்டிக் கடை. அங்கே விசாரித்ததில் ‘தெரியாது’ என்றார்கள்.

ஷமாசிச்சி எங்கே?

ஜார்ஜின் நாடிகள் அடங்கிவிட்டன. பென்னட் என்ன சொல்லப் போகிறான்?

– தொடரும்…

– வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு, முதற் பதிப்பு: ஜனவரி 1991, அசோக் உமா பப்ளிகேஷன்ஸ் , சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *