வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: February 24, 2021
பார்வையிட்டோர்: 8,699 
 
 

அத்தியாயம்-3 | அத்தியாயம்-4 | அத்தியாயம்-5

நரீடா விமான கூடம் ‘ஜே ஜே’ என்று பரபரத்தது.

இன்னும் சிறிது நேரத்தில் ஏர் இண்டியாவில் வந்து இறங்கப் போகும் இந்தியன் வங்கி சேர்மன் கோபாலகிருஷ்ணனை வரவேற்று, அரண்மனைக்கு அழைத்துச் செல்ல ஜப்பான் சக்ரவர்த்தி தமது அந்தரங்கக் காரியதரிசி மிஸ்டர் யோஷினாரி யையும், அவருக்குத் துணையாக விழா வேந்தன் முத்து, புள்ளி சுப்புடு இருவரையும் விமான கூடத்துக்கு அனுப்பி வைத்திருந்தார். காரியதரிசி முன் ஸீட்டிலும் இவர்கள் பின் ஸீட்டிலும் உட்கார ரோல்ஸ்ராய்ஸ் நரீடாவை நோக்கிப் பறந்தது.

ரோல்ஸ் ராய்ஸ் கார்ல போறதுக்கு அதுவும் ஜப்பான் ரோடில் போறதுக்குக் கொடுத்து வச்சிருக்கணும். எல்லாருக்கும் கிடைச்சுருமா இந்த அதிர்ஷ்டம்” என்று மகிழ்ந்தார் முத்து.

“இங்கே ரோல்ஸ்ராய்ஸ், நம் ஊரில் ரோல்ஸ் நாய்ஸ்!” – என்று சிரித்தார் புள்ளி.

“விமானம் வர இன்னும் அரை மணி ஆகுமாம். அதுக்குள்ளே கொஞ்ச நரம நாப்பிங் பண்ணுவமா?” என்று கேட்டர் முத்து.

“ஏர்போர்ட்ல எக்கச்சக்க விலை…!”

“நான் சொல்றது விண்டோ ஷாப்பிங் கண்ணால பாக்கறதோடு சரி ஒரு காப்பி மட்டும் சாப்பிடலாம்!”

“வேணாம். கையைச் சுட்டுரும்”

“ஏன்? அவ்வளவு சூடா கொடுப்பாங்களா?”.

“காப்பி சுடாது. விலை!” என்றார் புள்ளி.


நூற்றுக்கணக்கான பயணிகள் கும்பல் கும்பலாக எஸ்கலேட்டர் ஏறி, படிகள் இறங்கி, ஸேர்னி விளம்பர அழகியின் கவர்ச்சியில் லயித்து, வராந்தா நடந்து, இம்மிகிரேஷன் கடந்து, கஸ்டம்ஸ் விடுதலை பெற்று முன் வாசலுக்கு வந்து கொண்டிருந்தவர்களில் கோபாலகிருஷ்ணனும் ஒருவர்.

“அதோ, அதோ கோபாலகிருஷ்ணன்!” என்றார் புள்ளி.

“இந்த கும்பலில் அவரை எப்படிக் கண்டுபிடிச்சீங்க?” என்று கேட்டார் முத்து.

“குள்ளமான ஜப்பான் காரர்களுக்கிடையே ஆஜானு பாகுவாய், உயரமாய் வருகிறாரே!” என்றார் புள்ளி.

“ஜப்பான் காரர்கள் குறள் மாதிரி குள்ளமா இருக்காங்க!” என்றார் முத்து.

“அப்ப இனிமே அவங்களைக் குள்ளர்கள்னு சொல்றதுக்குப் பதிலா ‘குறளர்கள்’னு சொல்லிடுவமா?” என்றார் புள்ளி.

கோபாலகிருஷ்ணன் மெதுவாக நடந்துவர, புள்ளி சுப்புடு ஓடிப்போய் அவர் கைப்பெட்டியை வாங்கிக்கொண்டார்.

முதலில் தம்மை அறிமுகப்படுத்திக்கொண்ட காரியதரிசி யோஷினாரி கோபாலகிருஷ்ணன் கையைக் குலுக்கி பூச்செண்டு கொடுத்து “வெல்கம், வெல்கம் டு டோக்யோ” என்று ஆங்கிலத்தில் வரவேற்றார்.

“வீட்ல லேடீஸ் யாரையும் அழைச்சிட்டு வரலையா?” என்று முத்து கேட்க “விழாவுக்கு வந்துருவாங்க” என்றார் சேர்மன்.

“தமிழ்நாட்டில் விசேஷம் ஏதாவது உண்டா?”

“பலத்த மழை பெஞ்சு ஏரி, குளம் குட்டையெல்லாம் ரொம்பி வழியுது. அந்த ஏரி குளம் குட்டையெல்லாம் இப்ப வேற எங்கயும் இல்லை. நம்ம மெட்ராஸ் ரோட்லதான் இருக்குது” என்று சிரித்தார் கோபாலகிருஷ்ணன்.

“நாம் இப்ப பாலஸ் கஸ்ட்ஹவுஸுக்குப் போறோம். நீங்க அங்கதான் தங்கறீங்க. சக்ரவர்த்தி தங்களைச் சந்திக்க ரொம்ப ரொம்ப ஆவலாயிருக்கார். ராத்திரி எல்லாருக்கும் டின்னர் பாலஸ்லதான். அப்ப மகாராஜா தேரோட்டம்பற்றி உங்ககிட்ட த்ரெட்பேரா டிஸ்கஸ் பண்ணப் போறாராம்” என்றார் யோஷினாரி.

“த்ரெட்பேர்! ரொம்பப் பொருத்தமான வார்த்தை. தேர் வடமே த்ரெட்ல ஆனது தானே!” என்றார் புள்ளி.

“நீங்களெல்லாம் எங்கே தங்கியிருக்கீங்க?” என்று முத்துவைப் பார்த்துக் கேட்டார் கோபாலகிருஷ்ணன்.

“டயச்சி ஓட்டல்ல.”

“ஏன்? அரண்மனைல தங்கலையா?”

“டெம்பரரியாத்தான் ஓட்டல்ல தங்கவச்சிருக்காங்க. கஸ்ட் ஹவுஸில் சின்னச்சின்ன ரிப்பேர் நடந்துகிட்டிருந்தது. இப்ப எல்லாம் முடிஞ்சுட்டுது. இப்பவே எங்களையும் கஸ்ட் ஹவுஸுக்கு வந்துடச் சொல்லிட்டாங்க” என்றார் புள்ளி.

TVA_BOK_0003968_வடம்_பிடிக்க_வாங்க_ஜப்பானுக்கு_0032-pic

“நம்ம கூட்டம் பெரிய கூட்டமாச்சே! அவ்வளவு பேரும் கஸ்ட் ஹவுஸில் தங்க முடியுமா”

“ஆயிரம் பேர் வேண்டுமானாலும் தங்கலாம். அறுநூறு க்வார்ட்டர்ஸ் இருக்கு?” என்றார் யோஷினாரி.

“ரோல்ஸ் ராய்ஸ் சவாரி அரண்மனை வாசம் ராஜோபசாரம்!” என்று சொல்லி மகிழ்ந்தார் புள்ளி.

“சக்ரவர்த்திக்கு என்ன வயசு இருக்கும்?” என்று கேட்டார் கோபாலகிருஷ்ணன்.

“125-வது சக்கரவர்த்தி. வயசு அம்பத்தாறு. பேர் அகிஹிட்டோ . மகாராணி பேர் மிச்சிகோ” என்றார் புள்ளி.

“தேர் வேலை எங்க நடக்குது?”

“பழைய இடத்திலயே வெச்சு ரிப்பேர் பார்த்துக்கிட்டிருக்காங்க. தேர் ஜோடனை, பூ அலங்காரம், தொம்பை கட்றது எல்லாத்தையும் நுணுக்கமாப் பார்த்து ரசிக்கணுமாம் சக்ரவர்த்தி குடும்பத்தாருக்கு. அதனால தேரை அரண்மனைக்கே கொண்டு வந்துரச் சொல்லிட்டாங்க.”

“தேரோட்டம் எந்த இடத்திலேன்னு தீர்மான மாயிட்டுதா?”

“கிழக்கு வாசல்லேருந்து ஆரம்பிச்சு கோட்டைக்கு வெளியே நாலு விதிகளையும் சுற்றி வரப்போகுது. மதில் சுவர்ப் பக்கமா அரண்மனைக்குள்ளயே. ஒரு கண்ணாடி ஹவுஸ் கட்டியிருக்காங்க. அந்த இடம் நல்ல வியூ பாயிண்ட்டாம் தேரோட்டம் பார்க்கறதுக்கு ஏற்ற வசதியான இடம்” என்றார் யோஷினாரி.

“பந்தக்கால் முகூர்த்தம் எப்ப வச்சிருக்காப்ல?” என்று கேட்டார் கோபாலகிருஷ்ணன்.

“ராத்திரி டின்னர் மீட்ல சக்ரவர்த்தி சொல்லுவார். பந்தக்கால் முகூர்த்தம் தேரோட்டம் எல்லாத்துக்குமே தேதி நிச்சயம் செய்தாகணும், இன்விடேஷன் போடணும். முக்கியமா இந்த விழாவுக்கு ஒரு ஸ்பெஷல் கொடி தயார் செய்யணும்” என்றார் யோஷினாரி.

“வெள்ளை நிறப் பட்டுத் துணியில் சிவப்பு நிற வட்டச் சூரியனும், வள்ளுவர் கோட்டத் தேரும் பொறித்த கொடி தான் பொருத்தமாயிருக்கும் என்று கலைஞர் தம் கையாலயே ஒரு வரைபடமே வரைஞ்சு கொடுத்தனுப்பியிருக்கார்” என்றார் கோபாலகிருஷ்ணன்.

“பலே, பலே! தேர் அசைந்தாடி நாலு வீதியிலும் நகர்றபோது அந்தக் கொடி பட்டொளி வீசிப் பறக்கும் தொம்பைகள் யானைத் துதிக்கை மாதிரி இப்படியும் அப்படியும் வீசி ஆடும்.. இதையெல்லாம் பார்க்க ஏராளமான கூட்டம் வீதிக்கு இரண்டு பக்கமும் அலைமோதிக்கிட்டு நிப்பாங்க. கூட்டத்தை எப்படித்தான் சமாளிக்கப் போறாங்களோ, தெரியலை! நினைச்சாலே ‘த்ரில்’லா இருக்கு” என்றார் புள்ளி.

“கவலைப்படாதீங்க. ஜப்பான் போலீஸ் ரொம்பத் திறமைசாலிங்க. கூட்டத்தை ‘புஷ்’ பண்ணி ‘புஷ்’பண்ணி ப்ளாட்பாரத்துக்கு வெளியே வராம கண்ட்ரோல் பண்றதுல அவங்களுக்கு நிறைய அனுபவம் உண்டு” என்றார் யோஷினார்.


டின்னருக்கு கோபாலகிருஷ்ணனையும் தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கிறவர்களையும் அழைத்திருந்தார் சக்கரவர்த்தி,

விருந்துக்கு முன்பாக கையோடு கொண்டு வந்திருந்த ஒரு பெரிய சந்தன மாலையை எடுத்து சக்கரவர்த்தியின் கழுத்தில் அணிவித்தார் கோபாலகிருஷ்ணன், மனோரமாவிடம் இன்னொரு மாலையைக் கொடுத்து மகாராணியின் கழுத்தில் அணிவிக்கச் சொன்னார்.

“ஓ, ஸாண்டல்வுட்!” என்று சொல்லி அதன் வாசனையைத் திருப்பித் திருப்பி முகர்ந்து மகிழ்ந்தனர் சக்கரவர்த்தி தம்பதியர்.

முதலில், மனோரமாவை அருகில் அழைத்து “இவர் எங்க தமிழ் நாட்டின் மிகச் சிறந்த படிப்புக் கலைஞர். ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்” என்று சக்கரவர்த்திக்கு அறிமுகப்படுத்திய கோபாலகிருஷ்ணன், அடுத்தாற்போல் விழா வேந்தன், நன்னன், கணபதி ஸ்தபதி, ரங்கோலி மாமி, மாமல்லபுரம் சிற்பிகள், காரைக்குடி ஆசாரிகள் அத்தனை பேரையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.

“ஜப்பானிலேயே இந்த மாதிரி ஒரு விழா நடந்ததில்லை என்கிற அளவுக்கு நடத்திடணும். பிரைம்மினிஸ்டர் கூட ரொம்ப ஆர்வமாயிருக்கார். சர்க்கார் டயட் பில்டிங்கில் இந்த விழாவுக்காக தனி டிபார்ட்மெண்ட்டே ஒர்க் பண்ணுது. நாளைக்கே பந்தக்கால் முகூர்த்தம் நடத்திடலாம்” என்றார் சக்கரவர்த்தி.


விருந்து முடிந்து எல்லோரும் கஸ்ட்ஹவுஸ் போய்ச் சேரும்போது அரண்மனை கடிகாரத்தில் மணி பதினொன்று அடித்தது.

“டின்னர் ரொம்ப ஹெவி. வெற்றிலை பாக்கு இருந்தாப் போடலாம். ஜீர்ணம் ஆயிடும். நம்ம ஊர்ல சாப்பிட்ட மாதிரி ஒரு திருப்தியும் ஏற்படும்” என்றார் முத்து.

“ஜப்பான்ல வெற்றிலை பாக்கா நல்ல ஆசை” என்று சிரித்தார் புள்ளி.

“கும்பகோணம் வெத்தலை, அசோகா பாக்கு, டி.எஸ்.ஆர். சுண்ணாம்பு முணும் கொண்டு வந்திருக்கேன்!” என்றார் கோபாலகிருஷ்ணன்.

“அப்படியா, முதல்லே அதை எடுங்க!” என்று ஆவலோடு கேட்டு வாங்கி அத்தனை பேரும் கும்பலாக உட்கார்ந்து வெற்றிலை போட ஆரம்பித்துவிட்டார்கள்!

இவர்கள் வெற்றிலை போடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த குள்ளமான அரண்மனைச் சேவகன் ஒருவன் “அது என்ன? வெத்திலை போட்டால் வாய் எப்படிச் சிவப்பாகிறது?” என்று ஆச்சரியத்தோடு கேட்டான்.

“சுண்ணாம்புல இருக்குது சூட்சுமம்!” என்றார் புள்ளி.

மனோரமா அந்த ஜப்பானியனுக்கு வெற்றிலை போடுவது எப்படி என்பதை விளக்கிச் சொன்னார்.

அந்தக் குள்ளச் சேவகன் தானே ஒருமுறை செய்து பார்க்க விரும்பினான். வெற்றிலையில் உள்ள நரம்புகளைக் களைந்துவிட்டு, வெற்றிலையின் கீழ்ப் பாதியில் சுண்ணாம்பு தடவினான்.

“மேல் பாதியிலும் தடவணும்” என்றார் மனோரமா.

“அவன் குள்ள மாச்சே! அவனுக்கு மேல் பாதி எட்டாதே! அவன் எப்படி தடவுவான்?” என்று ஜோக் அடித்தார் புள்ளி.


“கஜிமா! அது ரொம்ப முக்கியமான டயரி! ஜாக்கிரதை! சாயந்திரம் உன்னிடமிருந்து வாங்கிக்கொள்கிறேன்” என்றான் ஜார்ஜ்.

“ரொம்ப முக்கியமோ? அப்படி என்ன ரகசியம் அதற்குள்ளே?” கலகலவென்று சிரித்தாள்.

சுருக்கென்றது அவனுக்கு. ‘கிஜிமா ஒருவேளை அந்த டயரியைப் பிரித்துப் பார்த்திருப்பாளோ? அவள் கைப்பையிலிருந்த சர்க்கார் ரகசியங்களைத் தன் டயரியில் எழுதி வைத்துக் கொண்டதைத் தெரிந்து கொண்டிருப்பாளோ? . இல்லையென்றால் இந்தச் சிரிப்புக்கு என்ன அர்த்தம்?’

“ஜார்ஜ்! கவலைப்படாதீங்க. உங்க டயரி ஐஸ்க்ரீம் பார்லரிலேயே நாம் சாப்பிட்ட டேபிள் மீதே கிடந்ததாம். அந்த பார்லர் மானேஜர் எனக்கு போன் பண்ணி ‘இங்கே ஒரு டயரி மேஜை மீது கிடக்கிறது! அது உன்னுடையதா’ என்று கேட்டார்”.

“ஆமாம். என் நண்பர் ஜார்ஜ் என்பவர் மறந்து வைத்து விட்டிருக்கவேண்டும். அவர் வந்து கேட்டால் கொடுத்து விடுங்கள் என்று சொல்லியிருக்கிறேன். அவரும் ‘சரி’ என்று சொல்லியிருக்கிறார். கவலைப்படாதீர்கள். இது ஜப்பான். ஜப்பானியர் நேர்மையானவர்கள், யார் சொத்தையும் யாரும் தொடமாட்டார்கள், இன்னொருவர் டயரியைப் படித்துப் பார்க்கமாட்டார்கள்.

இப்போது அந்த டயரி பார்லர், மானேஜர் நிச்சிகாவா என்பவரிடம் உள்ளது. அவர் எனக்குத் தெரிந்தவர். நீங்கள் அங்கே போய் உங்கள் பெயரைச் சொன்னால் போதும், டயரியைக் கொடுத்து விடுவார்” என்றாள் கிஜிமா.

ஜார்ஜுக்குப் போன மூச்சு திரும்பி வந்தது. ‘நல்ல வேளை! கிஜிமாவிடம் டயரி சிக்கவில்லை. அவளிடம் கிடைத்திருந்தால் என் திட்டங்களே நாசமாய்ப் போயிருக்கும்’ என்று தனக்குள் ஆறுதலாய்ச் சொல்லிக் கொண்டான்.

டெலிபோன் மணி மீண்டும் ஒலிக்க பாரிஸிலிருந்து நண்பன் பென்னட் பேசினான்.

“ஜார்ஜ்! இன்றைய ஃப்ளைட்டில் இடம் கிடைக்கவில்லை. நாளை மாலை வருகிறேன். ஃப்ளைட் நம்பர் எழுதிக்கொள்” என்றான்.

அவசரமாய் ஷூ மாட்டிக்கொண்டு லிஃப்ட் வாசலில் போய் நின்றவன் எதையோ மறந்து விட்டவன் போல் திரும்பி அறைக்கு விரைத்தான். மேஜை மீது விளக்கடியில் வைத்திருந்த பாஸ்போர்ட்டை எடுத்துக்கொண்டான். திரும்ப லிஃப்டுக்குச் சென்று கீழே இறங்கி டாக்ஸி பிடித்து, கின்ஸாவிலுள்ள அந்த பார்லரை அடைந்து நிச்சிகாவாவைப் பார்த்து “ஐ ஆம் ஜார்ஜ்!” என்றான்.

“ஹய்” என்று வணங்கிய நிச்சிகாவா மேஜை டிராயரில் வைத்திருந்த அந்த டயரியை எடுத்துக் கொடுக்க, “தாங்க்ஸ்!” என்று சொல்லிவிட்டு வேகமாய்த் திரும்பி நடந்தான் ஜார்ஜ்.

டயரியை ஓர் உறையில் போட்டு அதை ரப்பர் பாண்டினால் கட்டி வைத்திருந்தார் நிச்சிகாவா.

ஜார்ஜ் அந்த உறையைப் பிரித்தபோது அதிலிருந்து ஒரு விஸிட்டிங் கார்ட் கீழே விழுந்தது. ‘இது ஏது? இந்தக் கார்டு என் டயரிக்குள் எப்படி வந்தது? யார் வைத்திருப்பார்கள்?’ என்று யோசித்தான். தன்னை யாராவது கவனிக்கிறார்களா என்று சுற்றுமுற்றும் பார்த்தான்.

‘என்னை யாரோ கவனித்துக் கொண்டிருக்கிறார்கள், நிழல்போல் என்னைப் பின்தொடர்ந்து வருகிறார்கள். இந்த கார்டை என் டயரிக்குள் யார் எப்போது வைத்திருப்பார்கள்?’ என்று குழம்பினான். அந்தக் கார்டில் ஒரு பெண்ணின் பெயர் இருந்தது. அவள் டெலிபோன் நம்பருடன் விலாசம் தந்திருந்தாள். பெயர் ஷூமா-சிச்சி.

– தொடரும்…

– வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு, முதற் பதிப்பு: ஜனவரி 1991, அசோக் உமா பப்ளிகேஷன்ஸ் , சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *