கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: July 24, 2023
பார்வையிட்டோர்: 1,951 
 
 

(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 6 – 10 | அத்தியாயம் 11 – 15 | அத்தியாயம் 16 – 20

11. அடி வேசி!

பலபத்ரன் வரவைப் பணிப்பெண் அறிவித்தவுடனேயே அந்த அறைக்குள்ளிருந்த தேவகியும், துறவியும் குழப்பத் துக்குள்ளானார்கள் என்றாலும் மகாராஜாவும், மாதவியும் எந்தவித உணர்ச்சியும் காட்டவில்லை தங்கள் முகங்களில். பணிப்பெண்ணுக்கு மகாராஜா பதில் சொல்லு முன்பு மாதவியே பதில் கூறினாள், “உபதளபதியைப் பளிங்கு மண்டபத்துக்குப் பக்கத்திலுள்ள அறையில் உட்காரச் சொல், மகாராஜா வருவார்’ என்று.

பணிப்பெண் சிறிது நிதானித்தாள், “அம்மா! மிக அவசரமாக மகாராஜாவைப் பார்க்கவேண்டும் என்று சொன்னார் பத்ரவர்மர்” என்று கூறவும் செய்தாள் தயக்கத்துடன்.

மாதவி சிறிதும் தயங்கவில்லை. 

‘உடனடியாக வருவதாகச் சொல்” என்று சிறிது கடுமையாகவே பணிப் பெண்ணுக்கு உத்தரவிட்டாள். 

மாதவியின் குரலில் ஒலித்த கடுமைக்குப் பின்பு பணிப் பெண் நிற்கவில்லை. வெகு வேகமாக வெளியே சென்று விட்டாள். அவள் சென்றதும் மகாராஜா விஷ்ணுகோபன் தனது வீர விழிகளை மாதவியின்மீது திருப்பினான், ஏதோ கேள்வி கேட்கும் பாவனையில். மாதவி ஒரு விநாடிதான் சிந்தித்தாள். “மகாராஜா! ஒரு உபதளபதியின் அழைப்புக் காக மகாராஜா உடனடியாக ஓடுவது மரியாதையல்ல!” என்று கூறி மகாராஜாவை உற்றுப் பார்த்தாள். ராஜாவின் விழிகள் மாதவியின் விழிகளுடன் கலந்தன. அவள் விழிகள் ஏதோ செய்தி சொல்லியிருக்க வேண்டும். “சரி மாதவி வேறு யாரையாவது அனுப்பி பலபத்திரனை நிதானப்படுத்து” என்று மகாராஜா கூறினார் முடிவில். 

இந்த இடத்தில் துறவியார் தமது சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள ஆசைப்பட்டு, “மகாராஜா! இந்த உப தளபதியின் பெயர் அடிக்கடி மாறுகின்றதே?” என்று விசாரித்தான். 

“எப்படி மாறுகின்றது?” என்று மகாராஜா கேட்டார். “முதலில் இவனைப் பலபத்திரன் என்று அழைத்தீர்கள். பணிப்பெண் பத்ரவர்மன் என்று சொன்னாள். இந்த இரண்டில் எது சரி?” 

“இரண்டும் சரி”

“எப்படி?’” 

“இவன் பெயர் பலபத்திரன்தான். ஆனால் பல்லவ அரச வம்சத்தில் பிறந்தான் ஆகவே, தன்னை பலபத்திரவர்மன் என்று அழைத்துக்கொண்டான். காலம் முதல் இரண்டு எழுத்துக்களை அழித்துவிட்டது. மக்கள் இவனை பத்ரவர்மன் என்று அழைக்கிறார்கள்.” 

“அதற்கும் காரணம் உண்டா?”

“என்ன காரணம்?” 

இதற்கு மகாராஜா பதில் சொல்லாததால் மாதவியே சொன்னாள். “இவன் பல்லவ சாம்ராஜ்யத்தின் அடுத்த அரசனாக தன்னை நினைத்துக்கொண்டிருக்கிறான். ஆகவே ‘வர்ம’ சப்தத்தை விடாது பேரில் இணைத்துக்கொள்கிறான். அவனை மாற்றி அழைத்தால் அவனுக்கு வரும் கோபம் – உம் நீங்களே மாற்றி அழைத்துப் பார்ப்பது நல்லது” என்றாள் மாதவி. 

துறவியின் இதழ்களில் புன்முறுவல் விரிந்தது. “எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை” என்று துறவி சட்டென்று வரவேற்பறையை நோக்கி கிளம்பினான். 

“முகுந்தா!” என்ற விஷ்ணுகோபன் சொல் துறவியைத் தடுக்கவே துறவி திரும்பிப் பார்த்தான். 

“என்ன மன்னவா?’ என்று வினவவும் செய்தான். ”எங்கு போகிறாய்?” என்று வினவிய மன்னன் குரலில் லேசாகக் கடுமை ஒலித்தது. 

“மாதவியாரின் விருப்பத்தை நிறைவேற்ற” என்றான் துறவி ஏளனம் தொனித்த குரலில். 

மாதவியின் கண்கள் துறவியைக் கோபத்துடன் நோக்கின. “இந்த மரியாதை எப்பொழுது வந்தது?” என்றும் கேட்டாள் எரிச்சலுடன். 

“மரியாதையா?” 

“ஆம்; மாதவியார் என்று அழைக்கவில்லை நீங்கள்?”

“ஓ, அதுவா?” 

“ஆமாம்!.” 

“பழக்கம்.” 

“என்ன பழக்கம்?” 

“சோழநாட்டுப் பழக்கம்”. 

“அது என்னவாம்?” 

“யாரையும் மரியாதையாக அழைப்பது”. 

இதைக் கேட்டதும் மாதவி கலகலவென்று நகைத்தாள். “முன்பின் தெரியாத பெண்ணைத் தூக்கிக் கட்டிலில் போடுவதும், பாலை அருந்த அவளைக் கட்டாயப்படுத்துவதும் சோழ நாட்டு மரியாதைகளில் ஒன்றா?” என்றும் வினவினான் நகைப்பின் ஊடே. 

விஷ்ணுகோப பல்லவனின் முகத்தில் சினம் மெள்ள உதயமாயிற்றென்றாலும் அவர் அதை வெளிக்காட்டவில்லை. ஆனால் அவர் துறவியை அழைத்தபோது அவர் குரலில் ஒரு விபரீத ஒலி இருந்தது. 

“சென்னியின் மகனே!” என்று அழைத்தார் மகாராஜா.  

“மகாராஜா!” துறவி தலை வணங்கினான். 

“மாதவி சொல்வது உண்மையா?” என்று வினவினார் மகரராஜா. 

“எனக்கு தெரிந்தவரை மாதவி பொய் சொல்வாரென்று தோன்றவில்லை” என்றான் துறவி. 

“மாதவியின் மனத்தை, குணத்தை எடை போடும் அளவுக்கு எத்தனை நாள் பழகியிருக்கிறாய்?” என்று மகாராஜா கேட்டார். 

“ஒருவர் குணத்தை எடைபோட நாட்கள் தேவையா?”

“நாழிகைகள் போதும்.” 

“விநாடிகளே போதும், மகாராஜா!” 

“அத்தனை வல்லவன் நீ?” 

“ஆம்.” 

“என்ன ஆம்?’’ 

“மனோதத்துவ சாஸ்திரம் படித்திருக்கிறேன்.”

இந்தச் சமயத்தில் உரையாடலில் மாதவி புகுந்தாள்.

“ஆம் மகாராஜா! மனோதத்துவ சாஸ்திரம் மட்டுமல்ல மன்மத சாஸ்திரமும் படித்திருக்கிறார்” என்று கூறி நகைத்தாள் மீண்டும். 

இம்முறை மகாராஜாவின் இதழ்களில்கூட இளநகை சிறிது அரும்பியது. “மாதவி! விளையாட இது சமயமல்ல” என்று கூறினார் மகாராஜா புன்முறுவலின் ஊடே. மேலும் சொன்னார். “மாதவி! இவன் ஒன்று பெரிய மேதையாய், வீரனாய் இருக்கவேண்டும், அல்லது அசட்டுத் துணிச்சலுள்ள பைத்தியமாயிருக்க வேண்டும். இவனைக் காஞ்சியைக் காக்க நியமிப்பது அத்தனை உத்தமமாகப்படவில்லை எனக்கு”. 

மாதவி சில விநாடிகள் பதில் சொல்லவில்லை. “இவர் தந்தை அதற்குத்தானே இவரை அனுப்பியிருக்கிறார்?” என்றாள் சிறிது சிந்தனைக்குப் பிறகு. 

அதுவரை பொறுத்திருந்த துறவி சிறிது இரைந்தே நகைத்தான். ”மகாராஜா! அந்தப் பெரும் பதவியை நான் கேட்கவில்லை. ஒப்புக்கொள்வேனா மாட்டேனா என்பதும் உங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீங்களே பதவி கொடுத்து, நீங்களே அதைத் திருப்பி வாங்கிக் கொள்கிறீர் கள்” என்று நகைப்பின் ஊடே தெரிவித்த துறவி ராஜா! ஸ்திர புத்தியில்லாத நீங்கள் எப்படிப் பல்லவ காஞ் சியை, ஏன் பல்லவ சாம்ராஜ்யத்தைக் காப்பாற்றப் போகிறீர்கள்?” என்றும் கேட்டான் மிக அலட்சியமாக. 

துறவியின் துணிவைக் கண்ட மாதவி அசந்து போனாள். அதுவரை சற்றுக் கட்டிலில் உட்கார்ந்திருந்த தேவகி சட்டென்று எழுந்தாள். விழிகள் நெருப்பைக்கக்க “என்ன சொன்னாய் முகுந்தா! சமுத்தர குப்தன்கூட படை யெடுத்து அணுகத் தயங்கும் காஞ்சி மன்னரைப் பற்றியா இப்படிப் பேசுகிறாய்? உன் தலை இனி செல்லாக்காசு பெறாது” என்றாள் சீற்றத்தால் உதடுகள் துடிக்க. 

அசந்துபோன மாதவியும் கவிழ்ந்த கண்களைத் துறவியின்மீது நாட்டினாள். “மன்னனை அவமதிக்கும் யாரும் இந்த வீட்டில் தங்க முடியாது” என்றாள் வறண்ட குரலில். 

“இதோ இப்பொழுதே வெளியேறத் தயாராகிறேன்” என்றான் துறவி, மாதவியை நோக்கி. தேவகியை நோக்கிச் சொன்னான், “அம்மா மகாராஜாவிடமுள்ள காதலால் உங்கள் புத்தியில் தெளிவில்லை. உங்களை மன்னித்து விடுகிறேன் என்னை அவமதித்ததற்கு.” 

இந்தப் பதிலைக் கேட்ட தேவகியின் விழிகளில் அச்சம் உதயமாயிற்று. ”மகாராஜா! இவன் பைத்தியம்தான்; சந்தேகமில்லை.இவனை கீழ் வீட்டுக்கு அனுப்பி விடுங்கள்” என்றாள் அச்சம் குரலிலும் ஒலிக்க. 

மகாராஜாவும் மாதவியும் ஒருவரையொருவர் பார்த் துக் கொண்டனர் ஒரு விநாடி. இந்தச் சமயத்தில் துறவி இடை புகுந்தான். “மகாராஜா என்னைப் பார்த்து நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தால் பொழுது விடிந்துவிடும். பத்ரவர்மர் காத்திருக்கிறார் கீழே. நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அவர் அத்தனை பொறுமைசாலி அல்ல என்று தோன்றுகிறது” என்று கூறினான் துறவி. 

“உண்மைதான் முகுந்தா” என்ற மன்னர், “மாதவி! நீ போய் அவனிடம் பேசிக் கொண்டிரு. சில நிமிடங்களில் நான் வருவதாகச் சொல்” என்றார். 

வெளியே செல்ல முயன்ற மாதவியை முகுந்தன் தடுத்தான். “மகாராஜா! எனக்குப் போக அனுமதி கொடுத்தால் மாதவி செய்வதை நானும் செய்ய முடியும்” என்றான். 

“முடியாது” மகாராஜாவின் குரலில் தீர்மானமிருந்தது. 
 
“எது முடியாது?” 

“மாதவி செய்வதை நீ செய்ய முடியாது.”

“அப்படி என்ன மாதவி செய்துவிடுவாள்?”

“மயக்கி விடுவாள், உபதளபதியை.” 

மகாராஜாவின் சொல் கேட்ட முகுந்தன் விழிகளில் விவரிக்க இயலாத சாயை ஒன்று படர்ந்தது. “மகாராஜா! பெண்களை முன்னிட்டு அவள் அழகை உபயோகப்படுத்தித் தான் நாம் காரியத்தைச் சாதிக்க வேண்டுமா?” என்று வினவினான் வாலிபத் துறவி. 

மகாராஜா பதில் சொல்லவில்லை. மாதவியை நோக்கி, “சரி நீ போ மாதவி” என்று மட்டும் சொன்னார். 

குறுக்கே தன்னைத் தடுத்த துறவியின் கையை அகற்றி விட்டு மாதலி வெளியே சென்றாள். துறவி மகாராஜாவை யும் நோக்கினான்; தேவகியையும் நோக்கினான். மகா ராஜாவின் முகம் உணர்ச்சியற்றுக் கிடந்தது. தேவகியின் முகத்தில் அச்சம், சினம் இரண்டுமே கலந்து தெரிந்தன. அவர்களை ஒருமுறை நோக்கிவிட்டு துறவி வெளியேறினான். அவனைத் தடுக்க முயன்ற தேவகியை “தடுக்காதே தேவகி” என்றார் மகாராஜா. 

“கீழே சென்றால் அவருக்குப் புரிந்துவிடுமே மகாராஜா” என்ற தேவகியின் குரல் நடுங்கியது. 

“புரிவதை இனிமேல் தவிர்க்க முடியாது தேவகி ” என்றார் மகாராஜா. 

கீழே மாதவி சென்ற இடத்தை நோக்கிச் சென்ற துறவிக்கு உண்மை புரியத்தான் செய்தது. ஆனால் எத்தனை பயங்கர உண்மை அது! 

கீழே சென்றதும் அங்கிருந்த பணிப்பெண்ணை நோக்கி பலபத்திரன் தங்கியிருக்கும் அறை எதுவென்று கேட்டான் துறவி. மூடியிருந்த ஒரு அறைக் கதவைக் காட்டினாள் பணிப்பெண். 

“மாதவி வந்தாளே! அவள்….” துறவி சொல்லி முடிக்கவில்லை. 

“அங்குதானிருக்கிறார்கள்” என்றாள் பணிப்பெண். அந்த அறையை இரண்டெட்டில் அடைந்த துறவி உள்ளே கேட்ட குரலை, குரல் அள்ளித் தெளித்த சொற்களைக் கேட்டு அதிர்ச்சியுற்று நின்றான். 

உள்ளே மிகுந்த சினத்துடன் கூவினான் பலபத்ரவர்மன், “அடி வேசி! எதிர்பார்த்தேன் இதை. மகாராஜா உன்னைத்தான் அனுப்புவார் என்று எனக்குத் தெரியும். உங்கள் மறைவில் எத்தனை நாள் இந்த மகாராஜா வாழ முடியும்?” 

இதைக் கேட்ட பின் துறவியின் கால்கள் நகர மறுத்தன. “வேசி! மாதவி வேசி!” என்று அவன் உதடுகள் முணுமுணுத்தன. 

12. வாள் இல்லாத போழ்து 

மாதவியை வேசியென்று பத்ரவர்மன் அழைத்ததால் ஸ்தம்பித்து நின்று விட்டதன்றி “மாதவி வேசி” என்று முணுமுணுக்கவும் செய்த முகுந்தன் மனத்தில் பலப்பல எண்ணங்கள் உதிக்கத் தொடங்கின. பலப்பல விஷயங்களுக்கு விடையும் கிடைக்கலாயின. கோவலன் கதைக்கும் தன் கதைக்கும் பெருத்த சம்பந்தமிருப்பதைப் புரிந்து கொண்டான் அவன்.”கோவலன் துறவியல்ல, நான் துறவி என்பதைத் தவிர வேறு வித்தியாசமில்லை. இருவருக்கும் ஒரு மாதவி கிடைத்தது எத்தனை பொருத்தம்?” என்று மனதுக்குள் வெறுப்புடன் சொல்லிக்கொண்டான். அந்த வெறுப்புடன் அவன் திரும்பவும் சென்றிருப்பான் பத்ரவர்மனின் அடுத்த சொற்கள் அவனை தேக்கியிராவிட்டால். 

“அடிவேசி! மதில்மீது ஏறின அந்தக் கபட சந்நியாசி இங்கிருப்பது எனக்குத் தெரியாதென்று நினைக்காதே! நீ மகாராஜாவை வளைத்தது போல் அவனையும் வளைத்திருப்பாய் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. ஆனால் அவன் வாலாட்டம் என்னிடத்தில் பலிக்காது. நான் வீரபத்திர னல்ல. வெளியில் அவன் என்று வருகிறானோ அவனை நானே வலியச் சண்டைக்கு இழுத்து வெட்டவும் போகிறேன்” என்று சீற்றத்துடன் சொன்னான் பலபத்திரன் என்ற பத்ரவர்மன். 

அந்தச் சொற்களைக் கேட்டதால் தரையில் உறைந்து விட்ட கால்களுடன் நின்றுவிட்ட துறவி உள்ளூர நகைத்துக் கொண்டான். ‘மாதவி வேசியானதால்தான் நான் அவளைத் தொட்டுத் தூக்கியதையும் கட்டிலில் போட்டதையும் சகித்துக் கொண்டாளா? எனக்கு சாஸ்திரப் பாடம் சொல்ல மஹாயனர் நியமித்த குரு கேவலம் வேசியா? இந்தக் காஞ்சி கலைப் பொக்கிஷமா அல்லது கல்விக் கூடமா அல்லது போலித் துறவிகளின் இருப்பிடமா?’ என்றும் தன்னைக் கேட்டுக் கொண்டான். தவிர தன் துறவிக் கோலத்துக்கும், தான் தங்கப் புகுந்த இடத்துக்கும் எத்தனை பொருத்தம் என்பதையும் எண்ணிப் பார்த்தான். 

“லீலாசாகர் வேசி வீட்டுக்குச் சென்றுவிட்டுப் பக்த ரானார். நான் பக்தனாகி துறவியாகி, பிறகு வேசி வீட்டுக்கு வந்திருக்கிறேன். சின்னஞ்சிறு மாறுதல், அவ்வளவுதான்” என்று இகழ்ச்சியுடனும் சொல்லிக்கொண்டான். “அட இந்த மாதவியைப் பற்றிக் காவியம் புனைய இளங்கோ இல்லாதது என்ன குறை?” என்று கூறிச் சிரித்தும் கொண்டான். 

“இளங்கோ இருந்தால் காவியம் எழுத அவருக்கும் ஒரு கஷ்டமிருக்கிறது. கோவலனைப் போல் நான் இல்லை. நான் மன்னன் நீதியால் மரிக்கப் போவதில்லை. எதிராளியைக் கொன்று, பிறகுதான் சாவேன்” என்று கூறிக் கொண்டு எதிரிலிருந்த கதவை மெல்லத் தட்டினான். 

உள்ளே அதுவரை நிகழ்ந்த உரையாடல் சட்டென்று நின்றது.”மகாராஜா! வாருங்கள்” என்று பத்ரவர்மன் குரல் ஒலித்தது உள்ளிருந்து; கதவின் தாள் திறக்கப்பட்ட ஒலியும் கேட்டது. அது ஒலித்த உடன் கதவு தன் மீது படும்படியாக அத்துடன் இணைந்து நின்று விட்ட துறவி, கதவு திறந்ததும் சட்டென்று உட்புகுந்து கதவை தாழிட்டு விட்டான். 

வந்தது முகுந்தன் என்பதை உணர்ந்ததும் மாதவி, பத்ரவர்மன் இருவருமே நிலைகுலைந்துபோனார்கள். இருவரில் சுயநினைவுக்கு வந்த மாதவியே அவனை நோக்கிச் சொன்னாள் “நாங்கள் இங்கு எதிர்பார்த்தது உங்களையல்ல். மகாராஜாவை” என்று. 

துறவி புன்முறுவல் செய்தான் விஷமமாக. “எதிர் பாராத விஷயங்கள் நடப்பது இந்த ஊரின் தனித்தன்மை” என்றும் கூறினான் விஷமம் சொட்டிய குரலில். 

மாதவி பதிலேதும் சொல்லவில்லை. பத்ரவர்மன் கேட்டான், “நீ மகாராஜாவா? இங்கு மகாராஜாவைத் தானே பார்க்க வந்தேன்?” என்று. 

துறவியின் புன்முறுவல் மேலும் விரிந்தது அவன் அழகிய உதடுகளில் “உன் இஷ்டப்படி ஓடிவருவாரானால் அவர் மகாராஜாவாயிருக்க முடியாது. நீ ஈற்று முன்பு சொன்னபடி அவர் இந்த வேசியை முன்னிட்டு எதையும் செய்வதானால் அவர் மகாராஜாவாயிருக்க தகுதி உள்ள வரும் அல்ல. எனக்குத் தகுதி நிறைய இருக்கிறது. ஆகையால் நானே மகாராஜாவாகத் தீர்மானித்து விட்டேன்” என்றான் முகுந்தன் லேசாகச் சிரித்து. 

“டேய்!” பத்ரவர்மன் குரல் அதிகாரத்துடன் ஒலித்தது. 

“அவர் மட்டும் பதவிக்கு அருகதை அல்லவென்று எண்ணினேன். நீயும் அப்படித்தான் போலிருக்கிறது. முதலில் மரியாதையாகப் பேசக்கூட உனக்குத் தெரிய வில்லை” என்றான் துறவி. 

“துறவியாரே!” இகழ்ச்சியுடன் துவங்கினான் பத்ரவர்மன். 

“உப தளபதியாரே!” பதிலிறுத்தான் துறவி. ‘“உமக்கு ஆசை அதிகமாயிருக்கிறது.” 

“அது மனித இயற்கை.”

“மகாராஜாவாக நினைப்பதுமா?” 

“ஆம்; அந்த ஆசை உங்களுக்கு இருக்கும்போது எனக்கிருப்பதில் என்ன தவறு?” என்று துறவி கேட்டவுடன் பத்ரவர்மன் முகத்தில் கிலி படர்ந்தது. அந்தக் கிலி யுடன் மாதவியைப் பார்த்தான் உபதளபதி. 

மாதவி கோபத்துடன் துறவியை நோக்கினாள்…. “இந்தக் கட்டுக் கதையை யார் சொன்னது உங்களுக்கு?” என்றும் சீற்றத்துடன் வினவினாள். 

சிறிதுகூடத் தாமதிக்காமல் துறவி ”சொல்லக் கூடியவர்கள் சொன்னார்கள்” என்றான். 

“மகாராஜாவா!’ பயத்துடன் ஒலித்தது பலபத்ரன் குரல். 

“மகாராஜாவைப் பற்றி குற்றம் சாட்டினால் மரண தண்டனை உண்டு. அது ராஜத்துரோகம்” என்றான் துறவி. பத்ரவர்மன் நிதானத்தை அடியோடு இழந்தான். 

“இந்தக் குற்றச்சாட்டுக்குப் பிறகு உன்னை நான் உயிருடன் விடமுடியாது” என்று கூறினான். 

துறவி மிகுந்த நிதானத்தைக் காட்டினான். “என் உயிரைப் போக்க என்ன செய்வதாக உத்தேசம்?” என்று கேட்டான் சர்வசாதாரணமாக. 

“முதலில் சிறையில் தள்ளுவேன்.”

“உம்”

“பிறகு தூக்கில் போடுவேன்.”

“நீயாகப் போரிட வழியில்லையா?”

“ஏன் வழியில்லை?” 

“வழியிருந்தால் அதை இப்பொழுதே நிறைவேற்றிக் கொள்ளலாம்.” என்ற துறவியின் குரலில் நிதானம் ஆழ மாகத் தெரிந்தது. அந்த நிதானக் குரலில் அபாயம் தொனித்ததை பத்ரவர்மன், மாதவி இருவருமே கவனித் தார்கள். பத்ரவர்மன், சில விநாடிகள் சிந்தித்தான். பிறகு பெருமூச்சுவிட்டு “உன் கையில் வலுவில்லையா?” என்றான் அனுதாபத்துடன். 

“உன் கையிலும் இல்லை” என்று சுட்டிக் காட்டினான் துறவி. 

“உறையில் இருக்கிறது.” 

‘“இருந்தால்?’’ 

“எந்த வினாடியிலும் எடுக்கமுடியும்.”

“எடுத்து?’’ 

“உன்னைக் கொல்லமுடியும்.” 

இதைக் கேட்ட துறவி அந்த அறையே அதிரும்படி யாக நகைத்தான். “நினைத்தேன் அப்பொழுதே” என்றும் கூறினான் நகைத்த வண்ணம். 

“என்ன நினைத்தாய்?’ பத்ரவர்மன் குரல் லேசாக ஆடியது சினம் மீறியதால். 

“நீ வீரனல்ல, கொலைகாரன் என்று.”

அதற்குமேல் பொறுமை மீறிய பத்ரவர்மன் சரே லென்று வாளை உருவத் தனது கையைக் கொண்டு போனான். அடுத்த நிமிடம் மின்னல் வேகத்தில் நிகழ்ச்சிகள் நடந்தேறின. 

இடது கையைச் சட்டென நீட்டி பத்ரவர்மன் கையை இரும்புப் பிடியாக துறவி பிடித்தான். அவனது வலதுகை உபதளபதியின் வாளை உறையிலிருந்து வெளியே எடுத்தது. பலபத்ரன் முகத்தில் விவரிக்க இயலாத கிலி படர்ந்தது. 

அந்த கிலிக்கு அவசியமில்லை என்பது அடுத்த விநாடி மாதவிக்கும் புரிந்தது. எடுத்த வாளை நீட்டவில்லை. துறவி பலபத்ரனை நோக்கி அதை இரு கைகளாலும் பிடித்துத் தனது முழங்காலில் வைத்து வளைத்தான். அதை அறைக் கோடியில் எறிந்தான். “பலபத்ரா இப்பொழுது இருவரிட மும் வாள் இல்லை. துணிவிருந்தால் போரிடலாம்” என்றான் துறவி, 

“வாளில்லாமல் எப்படிப் போரிடுவது?” 

“கைகள் எங்கே போயின?” என்று கேட்டான் துறவி. 

“மல்யுத்தம் செய்ய விரும்புகிறாயா?” என்று வினவினான் பத்ரவர்மன். 

“இல்லை கொல் யுத்தம் செய்ய விரும்புகிறேன். என் இரு கைகளாலும் உன் கழுத்தை முறிக்க முடிவு செய்து விட்டேன்” என்று கூறிக் கொண்டே பத்ரவர்மனை நெருங்கினான் துறவி. துறவியின் கண்களில் பெரும் வெறி பரவிக் கிடந்ததை மாதவி கண்டாள். பத்ரவர்மன் ஆயுள் அன்றுடன் முடிந்துவிட்டதென்ற முடிவுக்கும் வந்தாள். அதனால் அச்சம் நிறைந்த விழிகளை துறவிமீது திருப்பி “போகட்டும். அவரை விட்டுவிடுங்கள்” என்று கெஞ்சினாள். 

துறவி அவளை இகழ்ச்சியுடன் பார்த்தான். “இவனும் உன் ஆசைநாயகர்களில் ஒருவனா?” என்று வினவினான் முரட்டுத்தனமாக. 

மாதவி பதில் சொல்லவில்லை. வெறுப்புடன் விழித்தாள் துறவியை நோக்கி. துறவி அவளைக் கவனிக்க வில்லை. பத்ரவர்மன் கழுத்தை நோக்கி நீட்டிய கைகளுடன் போய்க் கொண்டிருந்தான் பத்ரவர்மன் தப்ப அப்படியும் இப்படியும் நோக்கினான். வழி ஏதும் காணவில்லை. துறவியின் இரும்புக் கைகள் திடமாக அவன் கழுத்தில் பதிந்தன. நெருக்கவும் செய்தன. 

“வாள் இல்லாத போழ்து சிறிது கைகளுக்கும் வேலை ஈயப்படும்” என்று அந்தச் சமயத்தில் கூறிய துறவி, வெறி பிடித்த சிரிப்பு ஒன்றையும் வெளியிட்டான் பயங்கரமாக. 

13. மன்னனும் மகாகவியும் 

வாலிபத் துறவியின் வலிய கரங்கள் கழுத்தை மெல்ல மெல்ல நெறிக்கத் தொடங்கியதாலும், அவன் வெளியிட்ட பயங்கரச் சிரிப்பு அந்த அறையை மட்டுமின்றி மாளிகை யையே கிடுகிடுக்கச் செய்ததாலும் பெரும் பீதிக்கும் திணற லுக்கும் உள்ளான பத்ரவர்மன் ஏதோ சொல்ல முற்பட்டு முடியாததால் ‘உம் உம்’ என்று முனகினான். “வருங்காலப் பல்லவ மன்னரே! ஏன் முனகுகிறீர்? உமது கை களைத்தான் சுதந்திரமாக விட்டுவைத்திருக்கிறேனே, அந்தக் கைகளை உபயோகப் படுத்துவதுதானே?” என்று கேட்டுக்கொண்டே துறவி தனது எஃகு போன்ற விரல்களில் இரண்டை பத்ரவரமன் நெஞ்சுக் குழியில் வைத்துச் சிறிது அழுத்தினான். “ஹூம்” என்ற பெரும் சத்தம் ஒன்று பத்ரவர்மனிடமிருந்து வந்தது. அதைத் தொடர்ந்து அவன் கைகள் செயலிழந்து கிடந்தன. விழிகள் பிதுங்கிய போது முகத்தில் அச்சத்தின் சாயை தீவிரமாகப் படர்ந்தது. 

அந்தச் சாயையைக் கவனித்த துறவி மீண்டுமொரு முறை நகைத்துவிட்டுத் தன் இரண்டு கைகளையும் சரேலென எதிரியின் கழுத்தைவிட்டு அகற்றி அந்தக் கைகளாலேயே பத்ரவர்மனை பின்னுக்குத் தள்ளிவிட்டு தானும் சற்று பின்னடைந்து நின்றான். துறவி தள்ளிய வேகத்தில் பின்புறமாக விழுந்துவிட்ட பத்ரவர்மன் நிதானித்துக் கொண்டு மஞ்சத்தைப் பிடித்துக்கொண்டு மெல்ல எழுந்தான் முதலில் கழுத்தைத் தடவிப் பார்த்துக்கொண்டான். பிறகு கலைந்த தனது ஆடைகளைச் சரிப்படுத்திக் கொண்டு துறவியை ஏறிட்டு நோக்கி, “உன் கைகளில் நல்ல வலு இருக்கிறது” என்று பாராட்டினான். 

துறவி வெறுப்புக் கலந்த புன்முறுவலை இதழ்களில் படரவிட்டுக் கொண்டான். “என் கை வலுவா? என்ன வலு இது?’ என்று அலுத்துக்கொண்டான். 

“ஏன் இப்பொழுது சாதித்தது போதாதா?” என்றான் பத்ரவர்மன். 

“என் கைகளில் உண்மையான வலு இருந்தால் இப்பொழுது நீ என்னுடன் பேசிக்கொண்டிருக்க மாட்டாய்.” 

“பின் என்ன செய்வேன்?”

“மேல் உலகத்தில் உன் மூதாதைகளுடன் பேசிக் கொண்டிருப்பாய்”. 

இதைக் கேட்ட பலபத்ரவர்மனுக்கு கோபம் வந்தாலும் அதை அவன் வெளிக்குக் காட்டாமல் புன்முறுவல் செயதான். “துறவி உனக்குக் கை வலுவுடன் நகைச்சுவையும் இருக்கிறது” என்று கூறினான். 

“காஞ்சியின் உப தளபதி! இல்லை, இல்லை, வருங்கால மகாராஜா! உங்கள் பாராட்டுதலுக்கு நன்றி. ஆனால் ஒரு புத்தி சொல்கிறேன் உங்களுக்கு. கொலையில் மட்டும் ஈடுபடாதீர்கள். அதில் வரும் தொல்லைகள் அனந்தம். திருவள்ளுவரே சொல்லியிருக்கிறார்’” என்றான் துறவி. 

பத்ரவர்மன் விழித்தான். “திருவள்ளுவரா! அவர் யார்?” என்று வினவினான். 

துறவி புன்முறுவல் கொண்டான். “உமது வீரத்துக்குச் சரியாகவே உமது தமிழறிவும் இருக்கிறது. நீர் இத்தனை நிரட்சரகுட்சி என்பது எனக்குத் தெரியாது. தரு வள்ளுவர் யார் என்று கேட்டதற்கே உம்மைக் கொல்லலாம். ஆனால் வள்ளுவர் தடுக்கிறார்” என்ற துறவி பத்ரவர்மனைச் சுடும் விழிகளால் நோக்கினான். தனது கைகளையும் ஒருமுறை பார்த்துக் கொண்டான். 

அதுவரை சிலைபோல் அந்த நாடகத்தை அறை மூலை யிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த மாதவி திரும்பவும் துறவி கைகளைப் பார்த்துக் கொண்டதும் அச்சத்தின் வசப் பட்டு, “பத்ரவர்மரே! திருவள்ளுவர் உலகத்தின் முற்காலக் கவிஞர். கடந்த கால, நிகழ்கால, வருங்காலக் கவி. தெய்வத் திருவள்ளுவர் என்று தமிழர்கள் அவரை அழைக்கிறார்கள்’” என்று இடைப் புகுந்து பேசினாள். 

பத்ரவர்மன் விழித்தான். “முற்காலக் கவிஞரா!” என்றான் ஏதோ கேட்க வேண்டுமென்பதற்காக. 

“ஆம்” என்றாள் மாதவி. 

துறவியும் சும்மா இருக்கவில்லை. ‘‘முப்பால் எழுதியிருக்கிறார்” என்று கூறினான். 

“முப்பாலா!” பத்ரவர்மன் திகைத்தான். 

“ஆம். மூன்றாவது பால் காஞ்சியில் விளையாடுகிறது” என்றான் துறவி. 

“நீ சொல்வது, விளங்கவில்லை” என்ற பத்ரவர்மன் மாதவியை நோக்கினான். 

துறவி நகைத்தான். “பத்ரவர்மரே! எடுத்த எடுப்பிலேயே மூன்றாவது பாலுக்குப் பறந்துவிட்டீர். முதலாவது அறத்துப்பால். தர்ம சம்பந்தமானது. ஆகவே உமக்கும் அதற்கும் சம்பந்தமிருக்கமுடியாது. இரண்டாவது பொருட்பால். அது உமக்குக் கிட்டாது. மூன்றாவது காமத்துப் பால். அதன் அடையாளங்கள் இந்த மாளிகையில் நிரம்ப இருக்கின்றன. மாதவியே போதும் சித்தத்தைக் குலைக்க. பாரும் அவளை, நன்றாகப் பாரும் இந்த வேசியை” என்று கூறினான் நகைப்பின் ஊடே. 

இப்படி நகைத்த துறவி பத்ரவர்மனையும் பார்த்தான். மாதவியையும் நோக்கினான். பத்ரவர்மன் முகத்தில் ஏக்கம், கோபம், கிலி மூன்று உணர்ச்சிகளும் கலந்து கிடந்தன, மாதவி முகம் சுரணையற்ற கல்லாயிருந்தது. அவள் பேச வில்லை, புருவத்தைக்கூடச் சுளிக்கவில்லை. நின்ற நிலையில் அப்படியே கற்சிலையாகி விட்டாள். 

அவளைப் பார்த்த பத்ரவர்மனுக்கு என்ன தோன்றியதோ என்னவோ துறவியைச் சமாதானப்படுத்த முயன்று, ”துறவியாரே!” என்று அழைத்தான். 

“பாதகமில்லை. உங்களுக்கு மரியாதைகூடத் தெரியும் போலிருக்கிறது” என்று துறவி நகைத்தான் மெல்ல. 

”உங்கள் திருவள்ளுவரைப் பாராட்டுகிறேன்” என்றான் பத்ரவர்மன் அடுத்தபடி. 

”உம்! திருவள்ளுவரின் கதி இந்த நிலைக்கு வந்து விட்டதா?”துறவியின் குரலில் அநுதாபம் ஒலித்தது. 

“ஏன் அவர் கதிக்கு என்ன?” 

“உங்களால் பாராட்ட வேண்டிய நிலைமைக்கு வந்து விட்டாரே. அதைவிட அவருக்கு நேரக்கூடிய அவமானம் என்ன இருக்க முடியும்?” 

“ஒரு கவிஞரை அறியாதிருப்பது தவறா?” 

“பத்ரவர்மா! தயைசெய்து சும்மா இரேன்” என்று கெஞ்சினான் துறவி. 

“நான் என்ன தவறாகச் சொல்லிவிட்டேன்?” என்று கேட்டான் பத்ரவர்மன். 

“உலக மகாகவியை ஒரு கவி என்கிறாய். அறியாதது குற்றமா என்கிறாய். மன்னனை அவமதிப்பதைவிட மகா கவியை அவமதிப்பது பெருங்குற்றம்” என்ற துறவி, “உப தளபதி! அடுத்தபடி நீ என்ன செய்ய உத்தேசம்? மகாராஜா உன்னைக் கண்டு பயப்படுகிறார், நீ என்னைக் கண்டு உளறுகிறாய். உன் சகோதரன், அந்த வெத்துத் தடியன் வீரபத்திரன் வெளியே நிற்கிறான் என்னைக் கொல்ல. அவனை அனுப்பிவிட்டு என்னுடன் சாதாரணமாகப் பேச இஷ்டமா? அல்லது முதலில் நான் வெளியே போய் அவனைக் கொன்று விட்டு வரட்டுமா?” என்று கேட்டான். 

துறவியின் குரலில் இருந்த கடுமையையும் உறுதியையும் பத்ரவர்மன் மட்டுமின்றி மாதவியும் கவனித்தாள். அதனால் இருவருக்குமே அச்சமேற்பட்டதாலும் மாதவி பதில் சொன்னாள் துறவிக்கு. “துறவியாரே! வெளியே போகாதீர்கள்” என்ற அவள் கோரிக்கை மிகுந்த பணிவுடன் வந்தது. 

துறவி அவளை நோக்கி நன்றாகத் திரும்பி பத்ரவர்மனுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு நின்றான். “ஏன் வெளியே போகக் கூடாது?” என்று கேட்டான் வெறுப்பு மண்டிய குரலில். 

மாதவியின் கண்கள் அவன் கண்களுடன் கலந்தன. ‘வெளியே போனால் திரும்பி வரமாட்டீர்கள்’ என்று சொன்ன அவள் உதடுகள் லேசாகத் துடித்தன. 

துறவி அவள் கண்களை நோக்கியதால், சிறிது சாந்தமடைந்தான். “ஏன் வீரபத்திரப் பெருமாள் என்னைக் கொன்று விடுவாரோ?” என்று வினவினான் சற்றே இளகிய குரலில். 

மாதவி துறவியை நோக்கினாள் நன்றாக. “வீரபத்திரன் தனியாக வரமாட்டான். அவனுடன் வந்தவர்கள் ஒளிந்து கொண்டிருப்பார்கள். அங்கு சண்டைக்கு இ மிருக்காது. கொலைக்குத்தான் இடமிருக்கும். நிச்சயமாகக் கொலை செய்யப்படுவீர்கள்” என்றாள் மாதவி துயரம் நிரம்பிய குரலில். 

துறவியின் முகத்தில் குழப்பம் தெரிந்தது. மாதவி தன் மரணத்தைக் குறித்து அத்தனை கவலைப்படும் காரணம் புரியவில்லை அவனுக்கு. ”வேசிக்கு யார் இருந்தாலென்ன?? இறந்தாலென்ன?” என்று உள்ளூரத் தன்னைக் கேட்டுக் கொண்டான். அந்த நினைப்பினால் மாதவியைக் கேட்டான். “அப்படியே என்னைக் கொலை செய்தால்தான் உனக்கென்ன?” என்று. 

மாதவி அவன் கேட்டதன் காரணத்தைப் புரிந்து கொண்டாலும் அதை வெளிக்குக் காட்டிக் கொள்ளவில்லை அவள். ”பொறுப்புகள் சில என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன” என்று கூறினாள் மெதுவாக. 

“பொறுப்புகளா! பன்மையிலிருக்கிறதா விஷயம்?” துறவி சிரித்தான். ஆனால் மாதவியை நோக்கியதால் அவன் சிரிப்பு உதடுகளிலேயே உறைந்தது. 

மாதவியின் முகம் வெட்கத்தாலும் அவமானத்தாலும் சிவந்து கிடந்தது. கண்களில் நீர் திரண்டு கொண்டிருந்தது. “ஆம் வீரரே! பன்மையில் தானிருக்கிறது விஷயம். முதலில் உமது உயிரைக் காப்பது ஒரு பொறுப்பு. உமக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது இரண்டாவது பொறுப்பு. மூன்றாவது பொறுப்பிருக்கிறது….” என்ற மாதவி வாசகத்தை முடிக்கவில்லை, அவள் உதடுகள் துடித்த காரணத்தால். 

இதைக் கேட்ட துறவி பெரிதாக நகைத்தான் “சென்னியின் மகன் ஒரு பெண்ணால் காப்பாற்றப்படும் நிலைக்கு வந்து விட்டானா? அதுவும் பாடம் படிக்க அவனுக்கு ஒரு….” சட்டென்று உதிர இருந்த வார்த்தையை அடக்கிக் கொண்டான் துறவி. தமிழகத்தின் பண்பாடு அவன் நாவைக் கட்டுப்படுத்தியதால், “வேசிதான் கிடைத்தாளா!” என்று சொற்களை உதிர்க்கவில்லை அவன். 

பிறகு எதுவும் பேசவில்லை துறவி. மாதவியை ஒரு முறை உற்று நோக்கிவிட்டு வெளியே நடந்தான். “நில்லுங்கள்!” என்ற மாதவியின் குரலை அவன் லட்சியமே செய்யவில்லை. அந்த அறைக்கதவைப் படீரென மாளிகை அதிரும்படியாகச் சாத்தி ஒலி எழுப்பிவிட்டு வேகமாக நடந்தான் வாயிலை நோக்கி. அப்படி நடந்தவன் வாயிற் கதவைத் திறந்து கொண்டு மகிழ மரத்தடியை நோக்கிச் சென்றான். அங்கு வீரபத்திரனைக் காணோம்; வேறு வீரர்களையும் காணோம். மகிழ மரத்தடியிலிருந்த ஒரு பாறையில் உட்கார்ந்து கொண்டான். தீவிர சிந்தனையில் ஆழ்ந்தான். நீண்ட நேரம் அங்கேயே உட்கார்ந்திருந்தான். பிறகு அந்தப் பாறை மீதே கால் நீட்டிப் படுத்துக்கொண்டான். படுத்தவன் உறங்கிவிட்டான், எத்தனை நேரம் உறங்கியிருப்பானோ தெரியாது. அதிலிருந்து அவனை விழிக்க வைத்தவை இரு பூக்கரங்கள். உலுக்கி எழுப்பவில்லை அவை. அவன் உடலைச் சுற்றித் தழுவின. ஏதோ ஒரு மலர்க்கன்னம் அவன் கன்னத்தில் இழைந்தது. ஏதோ விவரம் புரியாத சொர்க்கத்துக்கு வந்துவிட்ட நினைப்பு ஏற்பட்டது துறவிக்கு. புஷ்ப உதடுகள் அவன் முரட்டு உதடுகளைத் தேடி வந்தன. 

14. மஹாயனரின் புதுத் தோற்றம் 

பாறை மீது படுத்திருந்த தன்னைத் தழுவியது யாரென் பதை உணர கண்ணிமைக்கும் நேரங்கூட சோழ மன்னன் செல்வனுக்கு ஆகவில்லை யென்றாலும், அவள் சாகசம் நாடகம் எந்த அளவுக்குத்தான் போகிறதென்பதை கவனிக்க அவன் ஆடாமல் அசங்காமல் படுத்தவண்ணமே இருந்தான். வலிய தன் உதடுகளைத் தேடிவந்த அதரங்கள் உதடுகளின் மீது படியாமல் இடது கன்னத்தின் வழியே நகர்ந்து காதுக்கருகில் வந்துவிட்டதைக் கவனித்த அந்த வாலிபன், அடுத்து என்ன செய்தி வரப்போகிறதென்பதைப் பற்றி மட்டுமே யோசித்தான். அப்படி உணர்ச்சியற்றவனல்ல அவன். இந்திரியங்களை வெற்றி கொண்ட பிரும்மமும் அல்ல அந்தப் பிரும்மச்சாரி? ஆனால் அந்த மர்ம மாளிகையின் ரகசியங்களுக்கு ஒரு முடிவுகட்ட அவன் தீர்மானித்து விட்டதால் உள்ளே எழுந்து பிரவாகித்த உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு, எந்த விநாடியிலும் செயல்படத்தயாராக இருந்தான். ஆகவே அவள் உதடுகள் அவன் காதுக்கருகில் வந்து “துறவியாரே” என்று அழைத்த போதும் ”உம்” என்று ஒலியை மட்டும் கிளப்பினான் பதிலுக்கு. 

அந்தப் பாவையின் வாயிலிருந்து வந்த சொற்கள் பரம விசித்திரமாயிருந்ததால் துறவி நிலைமை மிக நெருக்கடியாகி விட்டதைப் புரிந்துகொண்டான். அந்தப் பாவை சொன்னாள்: “என்னை நன்றாகக் கட்டித் தழுவுங்கள். உங்களுக்குக் காமவெறி பிடித்ததாகக் காட்டிக் கொள்ளுங்கள். நான் சொல்லும்போது சட்டென்று என்னை உதறி எழுந்து நின்று வாயில் வந்தபடி வசைபாடுங்கள்” என்றாள். 

இதற்கெல்லாம் காரணம் என்னவென்று நிச்சயமாகத் தெரியாவிட்டாலும் அவள் சொன்னபடி செய்யத் தீர்மானித்த துறவியின் கைகள் மேலெழுந்து அவளை இறுக இரும்புப் பிடியாகப் பிடித்து அணைத்தன. அந்தப் பிடியில் அணைப்பில் கசக்கப்படும் மலரைப் போலத் துவண்ட மாதவி அவனைப் பிடித்துத் தள்ள முற்பட்டு, “விடு என்னை. நீ ஒரு துறவியா!” என்று கத்தினாள்.ஆனால் துறவி அவளை விடாமல் அவளை இறுக்கிய வண்ணம் மறுபுறம் திருப்பி அவள் வலது கன்னத்தில் இதழ்களை அழுத்தி முரட்டுத்தனமாக இருமுறை புரட்டினான். அந்தச் சமயத்தில் முரட்டுத் தனமான இரு கைகள் அவனை வலிய இழுத்து அவளிடமிருந்து பிரித்தன. அப்படி அந்தக் கரங்கள் இழுத்த தருணத்தில் அவளைவிட்டு நீங்கிய துறவி சரேலென எழுந்து நின்று தன்மீது கை வைத்தது யார் என்று நோக்கினான். நோக்கினவன் பிரமை பிடித்து பல விநாடிகள் நின்று விட்டான். 

எதிரே மஹாயனர் நின்று கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில்கூட அவர் முகத்தில் சினம், சிறிதளவும் இல்லை. சாந்தமான பார்வையுடன் இருவரையும் பார்த்த மஹாயனர் “மாதவி! நீ உள்ளே செல்” என்று கட்டளையிட்டு; அவள் சென்றதும் துறவியை நோக்கி “முகுந்தா! இதற்கென்ன அர்த்தம்?” என்று வினவினார். 

துறவியின் இதயத்தில் சந்தேகங்கள் பல எழுந்து தாண்டவமாடின. “மடத்துக்குப் போவதாகச் சொன்ன மஹாயனர் இங்கு எங்கு வந்தார்” என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டான். “ஒருவேளை தனக்குத் தெரியாமல் இந்த மாளிகையிலேயே தங்கி விட்டாரோ” என்ற சந்தேகங்கூட அவன் இதயத்தில் எழுந்தது. “ஆனால் இருக்க முடியாது. மஹாயனர் ஒருக்காலும் தாசி வீட்டில் தங்க மாட்டார்” என்று அந்தச் சந்தேகத்தை அரை விநாடியில் துடைத்துக் கொண்டான். 

அவன் அப்படிச் சிந்தனை வசப்பட்டுப் பதிலிறுக்காமல் நின்றிருந்ததைக் கண்ட மஹாயனர் “நான் கேள்வி கேட்டது உன் காதில் விழவில்லையா?” 

”விழுந்தது.”

“அப்படியானால் ஏன் பதில் சொல்லவில்லை?”

“பதில் சொல்ல ஏதுமில்லை.” 

“ஏதுமில்லையா?” 

”இல்லை.’” 

“உன் நடத்தை உனக்கே பிடித்திருக்கிறதா?” 

“பிடித்திருக்கிறதோ இல்லையோ, அதற்கு நான் பொறுப்பாளியல்ல”. 

“யார் பொறுப்பாளி? மாதவியா?”

“இல்லை.” 

“மகாராஜாவா?”

“இல்லை.”

“பலபத்ரவர்மனோ?”

“இல்லை.” 

”வேறு யார்?” இம்முறை கேள்வி சற்றுத் திட்டமான கடுமையான குரலில் எழுந்தது மஹாயனரிடமிருந்து. 

“தாங்கள்தான்” என்றான் துறவியும் சிறிதும் பதட்டத்தைக் காட்டாமல். 

மஹாயனர் முகத்தில் சிறிது சந்தேகத்தின் சாயை விரிந்ததைத் துறவி பார்த்தான். நடந்த மற்றவையெல்லாம் நிதர்சனமாயிருக்க எதைப் பற்றி அவர் சந்தேகப்படுகிறார் என்பதைத் துறவியால் உணரமுடியவில்லையாதலால் அவரே பேசட்டுமென்று காத்திருந்தான். 

“நானா?” என்று கேட்டார். மஹாயனர் முகத்தைப் பழையபடி சாந்தமாக்கிக் கொண்டு. 

“ஆமாம், தாங்கள்தான். பஞ்சின் பக்கத்தில் நெருப்பை வைத்தீர்கள்.” 

மஹாயனர் சாந்தமாகவே கேட்டார், “எது பஞ்சு? எது நெருப்பு?” என்று. 

“மாதவி பஞ்சு, நான் நெருப்பு” என்றான் துறவி. 

மஹாயனர் சிறிதும் சிந்திக்காமலே கேட்டார். “மாதவியை இங்கு எப்பொழுது அழைத்து வந்தாய்?” என்று. 

துறவி கூடச் சிறிதும் சிந்திக்கவில்லை. பொய்யை மிகச் சுலபமாகச் சொன்னான் “சற்று முன்புதான்” என்று. 

“இருக்க முடியாது” என்றார் மஹாயனர். 

“ஏன் இருக்க முடியாது குருநாதரே?” என்று வினவிய துறவி குருநாதர் என்ற சொல்லைச் சிறிது அழுத்தியே சொன்னான். 

அவன் அப்படித் தன்னை அழுத்திப் பேசியதன் பொருளைக் கண நேரத்தில் உணர்ந்த மஹாயனர் அதை உணராதது போலவே பேசினார். “சற்று முன்புதான் நானே வந்தேன் இந்த வழியாக. அப்பொழுது அவள் இல்லை நீ மட்டும் படுத்திருந்தாய். மாளிகையிலிருந்து திரும்பினேன். அதற்குள் அவள் எப்படியோ உன்னிடம் வந்து விட்டாள். உன்னிடம் வசீகர சக்தி நிரம்ப இருக்க வேண்டும். சோழனே! யாருக்கும் பிடி கொடுக்காத மாதவி தானே உன்னைத் தேடி வந்திருக்கிறாளென்றால் என்னால்கூட அதை நம்ப முடியவில்லை. நீ அதிர்ஷ்டசாலி. அத்துடன் பொய்யன். உண்மையை என்னிடமிருந்தே மறைக்கப் பார்த்தாய்” என்றார் மஹாயனர். 

துறவி சிந்தனையிலிறங்கினான் நீண்ட நேரம். இரு முறை பாறையை அடுத்து காலைவைத்து சற்று அசக்கினான் உடலை. கடைசியில் “மஹாயனரே!” என்று அவன் அழைத்தபோது அதில் கடுமை நிரம்பிக் கிடந்தது. 

ஆனால் அவன் கடுமையை லட்சியம் செய்யவில்லை மஹாயனர். “என்ன முகுந்தா?” என்று வினவினார் சர்வ சாதாரணமாக. 

முகுந்தன் நிலத்தை நோக்கிக்கொண்டே பேசினான். “மஹாயனரோ! உமது புகழ் பரவாத இடம் எங்குமில்லை. என் தந்தை உம்மைப் பெரிதும் மதிக்கிறார். இல்லையேல் உம்மிடம் என்னை அனுப்பியிருக்கமாட்டார். ஆனால் உங்கள் நடவடிக்கைகள் ஏதும் எனக்குப் புரியவில்லை. உங்களுக்குச் சீடனாக வந்த என்னை ஒரு வேசி வீட்டில்விட்டுச் செல்கிறீர். சாஸ்திரங்களைப் போதிக்க அந்த வேசியை நியமிக்கிறீர், மடத்துக்குப் போவதாகப் போக்குக் காட்டி இங்கேயே இருந்து வேவுபார்க்கிறீர். இதற்கெல்லாம் காரணம் எனக்கு விளங்கவில்லை. இங்கு என்னைக் கொல்ல வீரபத்திரன் வந்து நிற்கிறான். நான் வந்ததும் திடீரென மறைந்து விடுகிறான். நான் படுத்துறங்குகிறேன். மாதவி வருகிறாள் சரசத்துக்கு. போதாக்குறைக்கு ஒரு மகாராஜா வேறு. தாசியைத் தழுவுகிறார் இந்த மரத்தடியில். பிறகு உள்ளே வந்து மாளிகையில் தங்குகிறார். இதெல்லாம் என்ன மஹாயனரே? என்ன? விளங்கச் சொல்லுங்கள்!” இப்படி உணர்ச்சி பொங்கப் பேசிய பிறகு முகுந்தன் மௌனம் சாதித்தான். மஹாயனரை அவன் கண்கள் கேள்விகளுக் கெல்லாம் விடையை எதிர்பார்ப்பனபோல் பார்த்தன. 

இத்தனைக்கும் மஹாயனர் கண்கள் அவன் கண்களைச் சிறிதும் சலனப்படாமல் சந்தித்தன. ”இதற்கெல்லாம் விளக்கம் எதற்காக உனக்குத் தேவை?” என்று வினவினார் முடிவில். 

“என்னைப் பாதிப்பதால்” என்றான் முகுந்தன். அவன் குரலில் கண்டிப்பு ஒலித்தது. 

“என்ன பாதித்துவிட்டது உன்னை? எது பாதித்து விட்டது? காஞ்சி மண்டலத்திலேயே பெரிய அழகி உன்னைக் காதலிக்கிறாள். யாரும் பார்க்கமுடியாத மகாராஜா உனக்குத் தாமாகவே பேட்டியளிக்கிறார். தேவகி நாளைக்கு மகாராணியானால் அவள் சகோதரியை மணக்கும் உன் ஸ்தானம் காஞ்சி மண்டலத்தில் பெரிதும் உயரும். அப்படி உயர்ந்தால் நீ பல்லவ ராஜ்யத்தின் நிரந்தர சேனாதிபதி யாகலாம். இதெல்லாம் கசக்கிறதா உனக்கு?” என்று கேட்ட மஹாயனர் “முகுந்தா! என் சொற்படி கேட்க உனக்கு இஷ்டமா, இல்லையா?” என்று விசாரித்தார் முடிவில். 

முகுந்தன் விழிகள் அவர் முகத்தை ஆராய்ந்தன. “நான் கேட்பதும் கேட்காததும் உங்கள் இஷ்டம் என்ன என்பதைப் பொறுத்தது” என்ற சொற்களை உதிர்த்தன அவன் உதடுகள். 

“என் இஷ்டத்தை நான் வெளியிட மறுத்தால்?” மஹாயனர் கேள்வி திட்டமாயிருந்தது. 

“உங்கள் சொற்படி கேட்க நானும் மறுப்பேன்” என்றான் துறவி சிறிதும் சளைக்காமல். 

“என் சொல்லை மறுப்பது எத்தனை சங்கடத்தில் உன்னைச் சிக்கவைக்கும் தெரியுமா?” என்று வினவினார். 

“அதைப் பற்றிக் கவலையில்லை.” 

“என் சொல்லை மீறினால் நீ காஞ்சியைவிட்டு வெளியேற முடியாது”. 

“நான் வெளியேற இஷ்டப்படவில்லை.” 

“வேறு என்ன செய்யப் போகிறாய்?” 

“உங்கள் இஷ்டத்தையும் மீறி இங்கு தங்குவேன்.”

“தங்கினால் உன் உயிர் செல்லாக் காசு பெறாது.”

“உயிரைப்பற்றிச் சோழர்குலத்தவர் என்றுமே கவலைப்பட்டதில்லை.” 

“நீ மாதவியின் நட்பை இழப்பாய்.” 

“வேசியின் நட்பை நான் விரும்பவில்லை.” 

“மகாராஜாவினால் உன் பிற்காலம் பெரிதும் வளம் பெறும்”. 

“யார் தயவாலும் என் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ள நான் விரும்பவில்லை.”

“இதுதான் உன் முடிவா?” என்று கேட்டார் மஹாயனர்.  

‘ஆம்’ திட்டமாக வந்தது முகுந்தனின் பதில். 

மஹாயனர் துன்பப்பெருமூச்செறிந்தார். “சென்னியின் மகனே! என் கனவுகளையெல்லாம் நீ உடைத்து விட்டாய். உன்னை இந்தக் காஞ்சியில் பாதுகாக்கும் என் கரம் இந்த விநாடியிலிருந்து அகலுகிறது” என்று கூறிக் கைகளைத் தட்டவே வீரபத்திரன் பத்து வீரர்களுடன் தோன்றினான். “இவனைச் சிறையிலடையுங்கள்” என்று உத்தரவிட்டார் மஹாயனர். 

உருவிய வாட்களை ஏந்திய பத்து வீரர்களுடன் விநாடி நேரத்தில் வாலிபத் துறவியை வளைத்துக் கொண்டான் வீரபத்திரன். 

15. காஞ்சியின் சிறையில் 

மஹாயனரின் கட்டளைப்படி பத்து வீரர்களுடன் வீர பத்திரப் பெருமாள் தன்னைச் சுற்றிக் கொண்டபோதும் முகத்தில் எந்தவித மாற்றத்தையும் காட்டாத முகுந்தன் வீரபத்திரனையும் மஹாயனரையும் மட்டும் மாறி மாறி சில விநாடிகள் நோக்கினான். பிறகு மிக லேசான மந்தகாசத்தை இதழ்களில் படரவிட்டுக் கொண்டான். “இந்தத் தடியனை எதற்காக மீண்டும் வரவழைத்தீர்கள்?” என்று மஹாயனரை நோக்கிக் கேட்கவும் செய்தான் இகழ்ச்சி குரலில் ததும்ப. 

பத்து வீரர்கள் ஆயுதமும் கையுமாக வளைத்தபோது அவன் அவர்களைப் பற்றிக் கோட்டிய அசட்டை மஹாயன ருக்கு எந்தவித வியப்பையும் அளிக்கவில்லை. இத்தகைய ஒரு சூழ்நிலையில் அவன் சத்திரத்தில் சிக்கிக்கொண்டு கதையை நேர்மாறாகத் திருப்பி வீரபத்திரனைத் திண்டாட வைத்ததை அவர் பார்த்திருந்ததால், அதை ஒரு பெரிய விஷயமாக நினைக்கவில்லை அவர். ஆனால் இந்தச் சமயத்தில் அவன் காட்டிய அலட்சியம் வீரபத்திரனை நோக்கி மட்டுமல்ல என்பதையும், தன்னைக் குறித்தும் அவனை நகைக்கிறானென்பதையும் புரிந்துகொள்ள கண்சிமிட்டும் நேரங்கூடப் பிடிக்கவில்லை மஹாயனருக்கு. ஆகவே சொன்னார் அவர். 

“வீரபத்திரன் தடியனல்ல, காஞ்சியின் உதவித் தளபதிகளில் ஒருவன். குடித்திருக்கும் சமயத்தில் அவனை யாரும் வெற்றி கொள்ளலாம்” என்று. 

முகுந்தன் மஹாயனரை நோக்கி “இப்பொழுது இவர் குடிக்கவில்லை என்கிறீர்களா?” என்று வினவினான். 

“ஆம்.” மஹாயனர் சாதாரணமாகப் பதில் சொன்னார். 

“நிதானத்திலிருப்பதால் நிதானம் தவறமாட்டார்”. வீரபத்திரனைப்பற்றி மிக மரியாதையாகப் பேசினான் முகுந்தன். 

“அப்படித்தான் நினைக்கிறேன்.”

“நிதானம் தவறாததால் இப்பொழுது என்னை சிறை செய்துவிடுவார்”. 

“ஆம்”. 

இந்தப் பதிலைக் கேட்ட முகுந்தன் நகைத்தான் மெல்ல. “மஹாயனரே இவனுக்குத்தான் எச்சரிக்கை போதாது. உமக்குமா கண்ணில்லை பார்ப்பதற்கு?” என்று வினவினான். முகுந்தன் நகைப்பின் ஊடே. 

“எதைப் பார்க்கச் சொல்கிறாய்?” என்று கேட்டார் மஹாயனர். 

“இதை!” என்ற முகுந்தன் தொங்கப் போட்டுக் கொண்டிருந்த தனது வலதுகையைக் கண்ணால் காட்டினான். அதைப் பார்த்த மஹாயனர் அசந்துவிட்டார். அசட்டுத் துணிச்சலாலும் பத்துப் பேர் உதவிக்கு இருக்கும் திமிராலும் வீரபத்திரன் முகுந்தனுக்கு வெகு அருகில் தனது வாளை மட்டும் உருவாமல் ஆர்ப்பாட்டமாகக் கால்களை விரித்துத் தரையில் நின்றிருந்ததால், பக்கத்தில் துருத்திக் கொண்டிருந்த அவன் வாளின் பிடியின் மேல் முகுந்தன் வலது கையை லேசாக வைத்துக் கொண் டிருந்ததைக் கவனித்த மஹாயனர், எந்த விநாடியிலும் சோழன் மகன் வாளை உருவ முடியுமென்பதையும் அடுத்து பிரளயம் நிகழக்கூடும் என்பதையும் சந்தேகமறப் புரிந்து கொண்டதால் திகைத்தாலும், தன் திகைப்பை வெளிக்குக் காட்டாமல் “புரிகிறது எனக்கு” என்றார். 

“உனக்கும் புரிகிறதா வீரபத்திரா?” என்று வினவினான் முகுந்தன் வீரபத்திரனை நோக்கி. 

“எது புரிய வேண்டும்?” என்று முரட்டுத்தனமாகக் கேட்டான் வீரபத்திரன். 

‘இது’ என்று சொல்லி வாளில் பிடியிலிருந்த தனது கையைச் சிறிது அதிகமாகவே அழுத்தினான் முகுந்தன். 

அவனால் அசைந்த வாளினால் நிலமையை உணர்ந்து கொண்ட வீரபத்திரன் தனது அசிரத்தைக்காகச் சிறிது வருந்தினாலும் “மஹாயனர் கட்டளையை மீறி யாரும் நடக்க முடியாது காஞ்சியில்” திடமாகவே பேசினான். 

”ஒப்புக் கொள்கிறேன்” என்று முகுந்தனும் ஆமோதித்தான் வீரபத்திரன் சொல்லை. 

இதனால் சற்றுத் துணிவடைந்த வீரபத்திரன் “அப்படியானால் உன் வாளை உருவமாட்டாய்?” என்று வினவினான். 

“மாட்டேன்.” 

“சிறைக்கு வரச் சித்தமாயிருக்கிறாய்?” 

“ஆம்.”

‘‘நீ புத்திசாலி.” 

“நீ புகழும் அளவுக்கு என் புத்தி வத்துவிட்டதே, அது எத்தனை மந்தமென்பதை நிரூபிக்கிறது”. 

“நல்லது, உன் புத்தி மந்தமென்பதை நீயே உணர்ந்து கொண்டுவிட்டாய்”. 

“அதற்குச் சந்தர்ப்பம் காஞ்சியில்தான் கிடைத்தது.” வீரபத்திரன் உற்சாகத்தில் மேலும் ஏதோ பேசப் போனான். அதற்கு மேல் அவன் உளறலை சகிக்கமுடியாத மஹாயனர் “வீரபத்திரா!” என்று அதட்டினார் பலமாக. அதனால் பேச்சை நிறுத்திக் கொண்ட வீரபத்திரன். 

“குரு நாதா!” என்று பணிவுடன் தலை தாழ்த்தினான். 

முகுந்தன் மஹாயனரை நோக்கி புன்முறுவல் செய்தான். “இவனுக்கும் நீங்கள்தான் குருநாதரா?” என்றும் வினவினான். 

மஹாயனர் அதற்குப் பதில் சொல்லவில்லை. “இப்பொழுது நீ என்ன செய்வதாக உத்தேசம்?” என்று வினவினார். 

“சிறைக்குச் செல்வதாக உத்தேசம். குருநாதர் கட்டளையை மறுக்க இஷ்டமில்லை. அது மட்டுமல்ல மாளிகையில் மகாராஜாவும் இருக்கிறார்….” என்று இழுத்தான் துறவி. 

“அதனால்?” 

“இங்கு சண்டை போட்டால் அவர் அமைதி குலையும். இந்த ஊரில் அதுவும் ராஜத் துரோகக் குற்றமாகிவிடும். குருத் துரோகம், ராஜத் துரோகம் இன்னும் என்னென்ன துரோகங்களுக்கு நான் ஆளாக நேரிடுமோ தெரியாது, கூடியவரை குற்றப்பட்டியலைக் குறைத்துக் கொள்ளப் பார்க்கிறேன்.” 

துறவி தன்னை மட்டுமன்றி மகாராஜாவையும் எண்ணி நகைக்கிறானென்பதைப் புரிந்துகொண்ட மஹாயனர் “நல்லது முகுந்தா! உன் முட்டாள்த்தனம், முரட்டுத் தனம், எதுவரை போகிறதென்று பார்க்கிறேன்” என்று கூறிவிட்டு அவனை அழைத்துச் செல்லும்படி கையை அசைத்துவிட்டு மாதவியின் மாளிகையை நோக்கி மிக மெதுவாக சிந்தனையில் ஆழ்ந்தவராய் நடந்து சென்றார். 

அவர் மாளிகைக்குள் நுழையுமட்டும் அவரைப் பார்த்துக் கொண்டே நின்ற வாலிபத் துறவி அவர் கண்ணுக்கு மறைந்ததும் வீரபத்திரனை நோக்கி, “உபதளபதி நாம் செல்லலாமே” என்று அழைத்தான். 

அதுவரை மஹாயனர் செல்வதைப் பார்த்து வாயைப் பிளந்து கொண்டு நின்ற வீரபத்திரன் தனது வாளின் மேல் கையைவைத்து நிமிர்ந்து கம்பீரமாக நின்று ”துறவியாரே! வருக” என்று நகைச்சுவை ததும்ப அழைத்து “டேய் இவரை ஜாக்கிரதையாக அழைத்து வாருங்கள்” என்று தனது வீரர்களுக்கு ஆணையிட்டு மாளிகைக்கு எதிரிலிருந்த பாதையில் இறங்கி நடக்கலானான். துறவியும் அவன் பின்னால் நடந்து சென்றான். வீரர்கள் முன்னும் பின்னுமாகக் காவல் புரிந்து சென்றார்கள். 

மாளிகை முன்னிருந்த வீதியிலிருந்து ராஜ வீதிக்கு வந்து, அங்கிருந்த பல வீதிகளைத் தாண்டிச் சுற்றி வளைத்து நடந்து கடைசியாக வேகவதி ஆற்றின் வேறொரு கோடியி லிருந்த சிறைச்சாலைக்கு வீரபத்திரன் துறவியை அழைத்து வந்தான். அவன் வந்ததும் சிறைச்சாலை முன்புறக் கதவுகள் தாமாகவே திறந்தன. சிறைச்சாலைக் காவலர் வீரபத்திரனுக்குத் தலைதாழ்த்தி வணங்கியதிலிருந்து அவனுக்கும் சிறைச்சாலைக்கும். நெருங்கிய தொடர்பு உண்டென்பது மிகத் தெளிவாகப் புரிந்தது முகுந்தனுக்கு. சிறைச்சாலை மதிளை அடுத்திருந்த பெரிய திறந்த வெளியில் வீரர்கள் பலர் கடுமையாகக் காவல் புரிந்ததைக் கண்ட முகுந்தன், ஒரு முறை உள்ளே புகுந்து விடுபவர் யாராயிருந்தாலும் அங்கிருந்து தப்புவது எளிதல்லவென்பதைப் புரிந்துகொண்டான். திறந்தவெளியை அடுத்து இருபுறத்திலும் நீள ஓடிய தாழ்வரையிலிருந்த சிறை அறைகளின் கம்பிகளும் வெளிப் பூட்டுகளும் மிகவும் பலமாயிருந்ததையும் துறவி கவனித்தான். 

ஆனால் அந்த அறைகள் இருந்த பக்கமே வீரபத்திரன் செல்லாமல் சிறைப் பெருங்கதவுக்கு நேர் எதிரிலிருந்த பெரிய கட்டிடத்துக்கு முகுந்தனை அழைத்துச் சென்றான் அங்கிருந்த பெரிய அறை ஒன்றை திறந்துவிடச் சொல்லி “இங்கு நீ தங்கலாம்” என்று முகுந்தனை அறைக்குள் செல்லப் பணித்தான். அந்தப் பெரிய அறையில் மஞ்சங்கள் பல இருந்தன. ஒரு கட்டிலும் படுக்கையும் தலையணைகளும் கூட இருந்தன. வீரபத்திரன் தன்னை அங்கு அழைத்து வந்தது சிறை வாசத்துக்கா சுகவாசத்துக்கா என்பது புரிய வில்லை முகுந்தனுக்கு. இருப்பினும் அந்த அறை மஞ்சமொன்றில் போய் அமர்ந்துகொண்டு “இனி நீ கதவைச் சாத்திப் பூட்டிச் செல்லலாம்” என்று வீரபத்திரனுக்கு அனுமதி கொடுத்தான். 

“பூட்ட உத்தரவில்லை” என்று பதில் சொன்னான் வீரபத்திரன். 

வீரபத்திரனுக்கு சகல உத்தரவுகளையும் முன்னதாகப் பிறப்பித்தே தன்னைச் சிறை செய்திருக்கிறார் மஹாயனர் என்பதைப் புரிந்து கொண்டதாலும், வீரபத்திரன் ஒவ்வொரு பேச்சிலும் மஹாயனரைக் காட்டிக் கொடுத்ததாலும் உள்ளூரச் சிரித்துக் கொண்ட முகுந்தன் “பூட்ட உத்தரவில்லையா!” என்று வியப்படைந்தவனைப் போல கேள்வி கேட்டான் வீரபத்திரன் வாயைக் கிளற. 

“இல்லை.” 

‘சிறையில் அடைத்தால் பூட்ட வேண்டாமா?” 

“இது பெரிய மனிதர்கள் சிறை.” 

“சிறையில்கூட தாரதம்மியம் வைத்திருக்கிறீர்கள்?” 

“ஆமாம்.”

“இதுவும் மஹாயனர் ஏற்பாடோ?” 

“சகலமும் அவர் ஏற்பாடுதான்.'” 

“இங்கு அவர் வருவதுண்டா?” 

“அடிக்கடி வருவார். சிறைவாசிகளின் நலன்களை பற்றி விசாரிப்பார். அவர்களுக்குப் புத்தி சொல்லுவார், ஆதரவு சொல்லுவார். மஹாயனர் உள்ளம் அன்புமயம்”. இதை மிகப் பெருமையோடு சொன்னான் வீரபத்திரன். 

இகழ்ச்சி நகையொன்று துறவியின் கடை இதழ்களில் தவழ்ந்தது. “சரி உபதளபதி. நீங்கள் போய்வாருங்கள். பொழுது விடிய இன்னும் சிறிது நேரந்தானிருக்கிறது. இன்று முழுவதும் சிவராத்திரியாக வேண்டாம். சிறிது நேரம் படுத்து உறங்குகிறேன்” என்ற துறவி ஆசனத்தை விட்டு எழுந்தான். வீரபத்திரன் தனது வீரர்களுடன் வெளியே சென்றதும் அறைக் கதவைச் சாத்திவிட்டு கட்டிலில் படுத்தான். மிதமிஞ்சிய களைப்பால் அயர்ந்து தூங்கிவிட்டான். 

மீண்டும் அவன் கண் விழித்தபோது பொழுது விடிந்து, கதிரவனும் எழுந்து ஐந்து நாழிகைகளுக்கு மேல் ஆகியிருந்ததால் கதிரவன் கிரணங்கள் நேராக அவன் மார்பில் விழுந்து கிடந்தன. கண்ணை அகல விழித்தான் முகுந்தன். எதிரேயிருந்த ஆசனத்தில் அவன் மூட்டை இருந்தது. “இதை யார் கொண்டுவந்தார்கள்? எப்பொழுது கொண்டுவந்தார்கள்?” என்று வினவிக் கொண்டு கட்டிலிலிருந்து எழுந்து நடந்து சென்று அந்த மூட்டையை அவிழ்த்துப் பார்த்தான். அதில் அவன் உடை இருந்தது, கொண்டு வந்த ஓலைச்சுவடிகள் இருந்தன, மஹாயனர் கொடுத்த அடையாள மோதிரமும் இருந்தது. ஆனால் நாகசர்ப்பம் ஒன்று மட்டும் இல்லை.

– தொடரும்…

– மாதவியின் மனம் (நாவல்), பாரதி பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *