கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: May 13, 2023
பார்வையிட்டோர்: 4,732 
 
 

(1966ல் வெளியான துப்பறியும் நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

1 – 5 | 6 – 10

1

கெட்ட பிறகு எல்லாரும் பட்டணத்திற்கு வருவார்கள். கெடாமலேயே பட்டணம் வந்து சேர்ந்துவிட்டான் பெரிய தம்பி ! வஞ்சகம் இல்லாமல் வளர்ந்து விட்டிருந்த அவனைப் பரர்த்தால் பெரிய இடத்துப் பிள்ளை என்று மற்றவர்கள் எண்ணுவார்கள். உண்மையில் அவன் பெரிய இடத்தில் வளர்ந்தவன்தான். ஆனால் பெரிய இடத்துப் பிள்ளை அல்லன். தாய் தந்தையரை இழந்து, கொஞ்சம் உறவினரான ஒரு பெரும் பணக்காரரின் வீட்டில் தஞ்சாவூரில் வாழ்ந்து வந்த அவன், படிப்பில் கல்லூரியை எட்டிப் பார்த்தவுடன் விட்டுவிட்டான். அவனுக்குப் படிப்பைவிட, குத்துச்சண்டை பயிலுவதிலும், சினிமா பார்ப்பதிலும், சீட்டு ஆடுவதிலும், வெட்டிப்பேச்சு பேசுவதிலு மாகப் பொழுதைப் போக்குவதில் மிகுந்த இன்பம் உள்ளவன். அவனைப் பார்த்து எல்லாரும் அவன் அவன் ஒரு சினிமா நட்சத்திரத்தைப்போல் இருப்பதாகக் கூறினார்கள். இது அவனுடைய கனவுகளை மிகுதியாக்கிவிட்டது. தமிழ்நாட் டின் சிறிய சிறிய ஊர்களிலிருந்து கையில் ஒரு காசுகூட இல்லாமல் சென்னைக்குப் போய்விட்டவர்கள் பலர் இன்று பெரும் பணம் சேர்த்துவிட்டதையும் பெரிய பெரிய சினிமா நட்சத்திரமாக இருப்பதையும் கதைகதையாகக் கேள்விப் பட்டான். ஆகையால் அவனும் என்றாவது ஒருநாள். தானே பிழைத்துப் பெரும்பணம் சேர்த்து, சென்னையில் ஒரு பெரிய புள்ளியாக வாழ முடிவு கட்டினான். அதன் விளைவாக ஒரு கைப் பெட்டியில் நான்கு நைலான் சட்டை களையும் நான்கு நைலான் கால் சட்டைகளையும் மடித்து எடுத்து வைத்துக்கொண்டு, சென்னையில் ஒருவாரம் தள்ளப் போதுமான அளவுக்குப் பணத்தையும் தனது உறவினரிடம் கேட்டு வாங்கிக்கொண்டு வேலை தேடப் போவதாகச் சொல்லிவிட்டுச் சென்னைக்கு வந்துவிட்டான்!

வந்து ஆறு நாட்கள் ஆகிவிட்டன. கையிலிருந்த காசு கரைந்து கொண்டே வந்தது. இருக்கும் காசை இன்னும் இரண்டு நாட்களுக்குச் செலவழித்துவிட்டால் திரும்பிப் போகக்கூடக் கையில் டிக்கெட்டுக்குப் பணம் இல்லை! இந்தியாவில் எத்தனையோ இலட்சம்பேர்கள் டிக்கெட் வாங்காமல் புகைவண்டியில் போகிறார்களாமே, அதைப் போல இவனும் என் தஞ்சாவூரைப் போய்ப் சேர்ந்துவிட முடியாது? இதைப்பற்றி அவன் எண்ணிப் பார்க்காமல் இல்லை. டிக்கெட் வாங்காமல் சென்றால் இவனைப் போன்றவர்கள் மிக உறுதியுடன் பிடிபட்டு விடுவார்கள்! டிக்கெட் சோதகர் இவனைப் போன்றவர்கள் முகத்தைக் கண்டவுடன் உண்மையைப் புரிந்து கொள்வார்கள்! சீர்கெட்டு கையிலிருக்கும் காசை விட்டு பட்டணத்துக்குப் பிழைக்கலாம் என்று வந்த பெரியதம்பி திரும்பவும் தஞ்சா வூருக்குப் போக விரும்பவில்லை எப்படியாவது இங்கேயே தங்கி எக்கேடு கெட்டாவது பணத்தைப் பார்த்துவிட வேண்டும் என்றே பெரியதம்பி முடிவு கொண்டான்!

இப்படி ஒருமுடிவு செய்ததும் அவன் உடலில் உற்சாகம் பிறந்தது. பெட்டியிலிருந்த பணத்தை எடுத்துப் பார்த் தான். ஐம்பது ரூபா இருந்தது. சென்னையில் இருந்த ஒரு பெரிய ஓட்டலில் விலைஉயர்ந்த உணவுவகைகள் விற்கப் படுவதாகவும் அந்த ஓட்டலில் அழகி ஒருத்தி பாட்டுக்களைப் பாடி உணவு உண்ண வருபவர்களுக்கு இன்னிசை விருந்து கொடுப்பதாகவும் பத்திரிகையில் படித்தான். அந்தப் பெரிய ஓட்டலுக்குச் சென்று நல்ல உணவு வகை களை உண்டுவிட்டு, என்னசெய்வது இனி என்று திட்டமிட முடிவு செய்தான்.

விளக்கு வைக்கும் நேரம் வந்தது. நல்ல உடைகளை அணிந்து எல்லாப் பணத்தையும் கால் சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டு புறப்பட்டான். புறப்படுமுன் பத்திரிகையைப் பார்த்து அந்தப் பெரிய புகழ்பெற்ற ஓட்டலின் பெயரை நினைவுபடுத்திக் கொண்டான்.

மூன்லைட் ஓட்டல் என்பது அதன் பெயர்.

பெரியதம்பி தான் தங்கியிருந்த எவரெஸ்ட் ஓட்டலி லிருந்து இந்த மூன்லைட் ஓட்டலுக்கு வாடகைக் கார் ஒன்றைப் பிடித்து அதில் சென்றான். சென்னை மவுண்ட் ரோட்டில் ஆயிரம்விளக்குப் பகுதியில் அமைதியான ஓர் இடத்தில் அமைந்திருந்தது மூன்லைட் ஓட்டல். வாடகைக் காரிலிருந்து இறங்கிய பெரியதம்பி, ஓட்டலின்முன் சந்திரனைப் போல் முழுவட்டமாக மாடியின்மீது அமைந் திருந்த விளக்கையே சிறிதுநேரம் பார்த்துக்கொண்டிருந் தான். பிறகு அந்த ஓட்டலுக்குள் மெல்ல நடந்தான். ஓட்டலின் கண்ணாடிக் கதவைத் தள்ளிக்கொண்டு அவன் உள்ளே நுழைந்தபோது குளுகுளுவென்று ஏர்கண்டிஷன் செய்யப்பட்டிருந்த அந்த ஓட்டலின் உட்புற அமைப்பையும் அங்கே உட்கார்ந்திருந்தவர்களையும் பார்த்தான். அவனுக்கு இப்போது டோக்கியோவுக்கோ, இலண்ட னுக்கோ, நியூயார்க்குக்கோ வந்துவிட்டதைப் போன்ற ஓர் உணர்ச்சி ஏற்பட்டது.

உள்ளே சுவர் ஓரங்களில் கண்கூசாத வண்ண விளக்கு கள் பார்ப்பவர்கள் மனத்தில் மகிழ்ச்சியைப் பிறப்பித்தன. மேசைகளின்மீது விரிக்கப்பட்டிருந்த தூய வெண்மையான துணிகள் பளிச்சென்று இருந்தன. மேசைகளின்முன் உம் கார்ந்து அழகிய ஆண்களும், கண்களைக் கவரும் பெண் களும் சிரித்துப் பேசிக்கொண்டு உணவு உண்டு கொண்டி ருந்தார்கள். சற்றுத் தொலைவில் வட்டமான ஒரு மேடை யின்மீது நின்றுகொண்டு அழகே உருவான வடநாட்டுப் பெண் ஒருத்தி, ஆங்கிலப் பாட்டு ஒன்றை அப்போதுதான் பாடத்தொடங்கினாள். அவள் பாடத் தொடங்கியதும். பேசிக்கொண்டிருந்தவர்கள் அமைதியுடன் சாப்பிட்டபடி அவளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

பெரியதம்பி கூட்டத்தின் நடுவில் இருந்த காலி மேசையை நோக்கி நடந்தான். அவன் தன்னந்தனியனாக அந்த மேசையின்முன் உட்கார்ந்து பாட்டுப் பாடும் அந்த அழகியையே பார்த்துக் கொண்டிருந்தான். முன் நாள் அவன் ஓர் ஆங்கிலப் படத்துக்குப் போயிருந்தான். அந்தப் படத்தில் வந்த பாட்டு அது. ஆகையால் அந்தப் பாட்டை அவன் மிகவும் விரும்பிக் கேட்டுக் கொண்டிருந்தான். எதிர்காலத்தைப் பற்றியோ, என்ன செய்ய வேண்டும் எப் படி வாழவேண்டும், என்ன சாப்பிடவேண்டும் என்பதைப் பற்றியோவெல்லாம் நினைவில் கொள்ளாமல் மெய்மறந்து அவன் உட்கார்ந்திருந்த வேளையில் எதிர்காலம் அவனுக்கு எப்படி இருக்கும் என்பதை ஏதோ ஒன்று முடிவு செய்துவிட்டது! அதை அவன் அறிந்திருந்தால் அப்போதே எழுந்து ஓடியிருப்பான். எதிர்காலத்தை அறியும் சக்தி அவனுக்கு இல்லையே!


2

பரிமாறுபவன் வந்து தாழ்மையுடன் அவன் பக்கத்தில் நின்று ‘என்ன சாப்பிடப் போகிறீர்கள்?’ என்று மெல்லக் கேட்டான்.

உணவுப் பட்டியலையும் அவைகளுக்கு எதிரே போடப் பட்டிருந்த விலைகளையும்பார்த்துவிட்டு, கையில்கொண்டு வந்திருக்கும் பணம் போதாதோ என்று எண்ணியபடி சிறிது நேரம் சிந்தனைசெய்தான். பிறகு படபடவென்று நான்கைந்து உணவு வகைகளின் பெயர்களைச் சொல்லி விட்டு பாட்டுப் பாடிக் கொண்டிருந்த பெண்ணை அவன் பார்த்தான்,

அவள் அடுத்த பாட்டைத் தொடங்க இன்னும் சில விநாடிகள் இருந்தன. ஏற்கெனவே பாடிக் கொண்டிருந்த பாட்டு முடிந்துவிட்டது. கைதட்டல் எழுந்தது. புறப்பட முன்னேற்பாடுடன் இருந்த சிலர், அந்த நேரத்தில் எழுந்து வெளியே சென்றார்கள். அப்படி எழுந்து சென்ற மனிதர் களில் ஒருவன் பெரியதம்பியின் பக்கத்தில்வந்து நின்றான். அவன் கையில் ஓர் அட்டைப்பெட்டி இருந்தது. சிறிய அந்த அட்டைப் பெட்டியை அவன் பெரியதம்பியிடம் கொடுத்துவிட்டு, பெரியதம்பி, ‘என்ன இது?’ என்று கேட்பதற்குள் அவன் விரைந்து வெளியே போய்க் கொண்டிருந்தாள்.

பெட்டியைக் கையில் வாங்கிய பெரியதம்பி, என்ன இது?” என்று கேட்டான். அந்த மனிதன் விரைந்து வெளியே சென்றுவிட்டதால், யாரப்பா நீ! எதற்காக இந்தப் பெட்டியை என்னிடம் கொடுத்துவிட்டுப் போகி றாய்?” என்று சற்றுக் கத்தியபடி எழுந்து ஓடினான். அப் போது பெரியதம்பி கால்தவறிக் கீழே விழுந்தான்! அவன் கையிலிருந்த அட்டைப்பெட்டி நழுவிக் கீழே விழுந்தது. அதன் மூடி திறந்து கொண்டபோது அதிலிருந்து-

குத்துச்சண்டை வீரர்கள் தங்களது கைகளில் அணிந்து கொண்டு குத்துச்சண்டை போடும் தோல் கையுறைகள் இரண்டு வெளியே வந்து விழுந்தன!

கீழே விழுந்த பெரியதம்பியின் முகத்தின் பக்கத்தில் இரண்டு பக்கங்களிலும் இரண்டு ஜதை முரட்டு ஷுக்கள் வந்து நின்றன! இரண்டு முரட்டு மனிதர்கள் அவனைக் குனிந்து தூக்கி அவனை நிற்க வைத்தார்கள்.

“நன்றி” என்றான் பெரியதம்பி.

அந்த இரண்டு முரட்டு மனிதர்களும் விலை உயர்ந்த உடைகள் அணிந்து, இரும்புச் சிலைகளைப்போல் காணப் பட்டார்கள். அவர்களில் ஒருவன் கீழே குனிந்து அட்டைப் பெட்டியை எடுத்து அதில் கீழே கிடந்த கையுறைகளை எடுத்துப் போட்டு மூடிப் பெரியதம்பியிடம் கொடுத்தான்.

“அந்த மனிதன் யார் என்று தெரியவில்லை! இந்தப் பெட்டியை என்னிடம் கொடுத்துவிட்டுப் போகிறான்! ஆள் மாறாட்டமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்” என்று சொல்லியபடி பெட்டியைக் கொடுத்து விட்டுச் சென்றவனைப் பிடிக்க வெளியே ஓடினான் பெரிய தம்பி!

அந்த இரண்டு மனிதர்களும் அவன் பின்னாலேயே ஓடிவந்து அவனைப் பிடித்துக் கொண்டார்கள்.

பெட்டியைக் கொடுத்தவன் மறைந்துவிட்டான்.

பெரியதம்பி அந்த இருவரையும் பார்த்து, “யார் நீங்கள்? உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டான்.

இருவரும் பேசாமல் அவனைத் தள்ளிக்கொண்டு சென்று வெளியில் நின்றிருந்த ஒரு பெரிய புதிய காயில் ஏற்றினார்கள். அவனுக்கு இரண்டு பக்கங்களிலும் இருவரும் உட்கார்ந்து கொண்டார்கள்.

காரோட்டி அந்தக்காரை விரைவாகச்செலுத்தினான்.

“என்னை நீங்கள் எங்கே அழைத்துச் செல்லுகிறீர்கள்? எனக்கு எதுவும் தெரியவில்லையே!” என்று கத்தினான் பெரியதம்பி!

இரண்டு முரட்டு மனிதர்களும் பேசவில்லை.

நடப்பது நடக்கட்டும். இவர்கள் என்ன செய்துவிடப் போகிறார்கள் பார்த்துக் கொள்ளலாம் என்று ஒரு வழியாகத் துணிவுடன் பேசாமல் உட்கார்ந்துவிட்டான் பெரியதம்பி.

சென்னையில் இப்படி ஓர் அனுபவம் ஏற்படும் என்றோ முன்பின் தெரியாதவர்களுடன் திடீரென்று அவன் எங்கேயோ பயணம் செய்வான் என்றோ சிறிதும் எதிர்பார்க்க வில்லை!

கார் நீண்ட நேரம் எங்கேயோ சுற்றிக்கொண்டு, பெரிய தம்பிக்குத் தெரியாத ஓர் இடத்துக்குச் சென்றது. சென்னையே அவனுக்குப் புதிது. அதிலும், அவன் பார்க் காத ஓர் இடத்துக்கு இப்போது அவன் சென்றான்.

நீலநிற பங்களா ஒன்றின் முன் கார் நின்றது. பெரிய தம்பியை இருவரும் இறங்கும்படி சாடை காட்டி அவனை இறக்கி அழைத்துச் சென்றார்கள்.

பங்களாவின் மாடிக் கதவு திறந்தது. உள்ளே அந்த மூவரும் சென்றதும் கதவு மூடிக் கொண்டது.

கூடத்தின் நடுவில் உயரமான ஒரு பெரிய சோபாவில் ஒரு மனிதர் உட்கார்ந்திருந்தார். அந்த மனிதரைப் பார்க்க முடியவில்லை. அந்தச் சோபா வேறு பக்கம் திரும்பி இருந்தது. அந்த மனிதரின் வலக்கை மட்டும் தெரிந்தது. அவர் கையில் பளபளவென்று வைர மோதிரங்கள் மின் னின. இரண்டு விரல்களுக்கு இடையில் சிகரெட் ஒன்று புகைந்து கொண்டிருந்தது. சோபாவுக்குக் கீழே அவ ருடைய கால்கள் மட்டும் தெரிந்தன. பளபளக்கும் ஷுக்கள் விலை உயர்ந்த கால்சட்டையின் முனை – இவைகள் மட்டுமே தெரிந்தன. சோபா உயரமாக இருந்ததால் அவர் தலைகூடப் பின்னால் தெரியவில்லை.

பெரியதம்பியை அழைத்துச் சென்ற இரண்டு மனிதர் களும் பெரியதம்பியை அப்படியே நிற்கும்படி சொல்லி விட்டு, அவன் கையிலிருந்த பெட்டியை மட்டும் வாங்கிக் கொண்டார்கள். அவர்கள் இருவரில் ஒருவன் அந்த அப் டைப் பெட்டியைச் சோபாவில் உட்கார்ந்திருந்த மர்ம மனிதரிடம் பக்கவாட்டில் நின்றபடியே கொடுத்தான்.

அந்த மனிதர் அந்தப் பெட்டியை வரங்கித் திறந்து பார்த்தார்.

பெரியதம்பியின் மனம் படக்படக் என்று அடித்துக் கொண்டது.


3

யார் இந்த மர்ம மனிதர், முகத்தைக் காட்டாமல் ஏன் இப்படி இவர் வேறு பக்கமாகப் பார்த்துக் கொண்டு பெட்டியைச் சோதித்துப் பார்க்கிறார் என்று எண்ணி வியப்படைந்தான் பெரியதம்பி.

சோபாவில் உட்கார்ந்திருந்த மர்ம மனிதர் தன் பக்கத்தில் நின்றவனிடம் ஏதோ சாடை காட்டினார். உடனே அவன் திரும்பிப் பெரியதம்பியைப் பார்த்து முன்னால் வரும்படி சாடை காட்டினான்.

பெரியதம்பி எதையும் ஏற்றுக் கொள்ளத் துணிந்தவனைப்போல் முன்னால் நடந்தான், அந்த மர்மமனிதரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலினால் அவன் சற்று விரைந்து நடந்து முன்னால் வந்து நின்றான்.

சோபாவில் உட்கார்ந்திருந்த அந்த மனிதர் பெரிய தம்பியை உற்றுப் பார்த்தார். அவர் பார்த்த பார்வையிலிருந்தே அவர் அவன் எப்படிப்பட்டவன் என்று எடை போடுவதைப்போல் இருந்தது. அவர் பார்வையில் கருணையோ அன்போ இல்லை. கழுகுப் பார்வை, அது அந்த மனிதருக்கு அறுபது வயது இருக்கும். அவருக்கு வயதானது அவ்வளவாகத் தெரியவில்லை. உரமேறிய வலுவான உடல். அவருடைய சட்டையும் கால்சட்டையும் மடிப்புக் கலையாமல் எடுப்பாக இருந்தன. அவர் சட்டைப் பித்தான்களில் பதிக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த வைரங்கள் பெரிய தம்பியின் கண்களைப் பறித்தன. குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால்தான் குட்டுப்படப் போகிறோம் என்ற எண்ணம் பெரியதம்பியின் மனத்தில் தோன்றியது.

அந்த மனிதர் இப்போது மெல்லச் சிரித்தபடி அவனைப் பார்த்துக் கேட்டார்: “இந்தப் பெட்டியை உன்னிடம் கொடுத்த மனிதன் யார்? இதை எதற்காக உன்னிடம் அவன் கொடுத்தான்?”

“அந்த மனிதன் யார் என்பது எனக்குத் தெரியாது. அவன் எதற்காக இதை என்னிடம் கொடுத்தான் என்பதும் எனக்குத் தெரியாது. எல்லாம் ஏதோ திரைப்படத்தில் நடப்பதைப்போல் நடந்திருக்கிறது! இப்போது, நீங்கள் யார் என்பதும் எனக்குத் தெரியாது!” என்றான் பெரியதம்பி.

மர்மமனிதர் மீண்டும் மெல்லச் சிரித்தார். அவர் சிரித்ததிலிருந்து, அவன் சொல்லியதை அவர் நம்பினாரா இல்லையா என்பது தெரியவில்லை?

அவர் தோற்றம் அவனுக்கு ஒரு சிலந்தியை நினை வூட்டியது. சிலந்தியின் அச்சம் தரும் வலையில் வந்து சிக்கிய பூச்சி எப்படி அந்தச் சிலந்திக்கு இரையாகிவிடுமோ அப்படித்தான் அவனும் இந்த மர்ம மனிதரின் செயல்களுக்கு இரையாக வேண்டுமா?

“உன் பெயர் என்ன?’” என்று கேட்டார் அந்த மனிதர் அடுத்தபடியாக.

“பெரியதம்பி.”

“புலிக்குட்டி இல்லையா உன் பெயர்? ஏன் மறைத்துப் பேசுகிறாய்?” என்று கத்தினார் அவர்.

“புலிக்குட்டியா? இல்லை. என் பெயர் பெரியதம்பி தான். இப்போதுதான் புரிகிறது புலிக்குட்டி என்பவனைப் பிடித்து வருவதற்குப் பதில் உங்களுடைய ஆட்கள் என்னைப் பிடித்துக்கொண்டு வந்துவிட்டார்கள் என்பது.”

“சென்னையில் நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?”

“வேலையில்லாமல் சுற்றிக் கொண்டிருக்கிறேன். போகிற போக்கைப் பார்த்தால் எனக்கு உடனே வேலை கிடைத்துவிடும்போல் இருக்கிறது” என்றான் பெரியதம்பி.

“உண்மைதான், உனக்கு வேலை கிடைத்துவிட்டது என்னுடன் வா” என்றார் அந்த மனிதர்.

அந்த மனிதர் சோபாவிலிருந்து எழுந்து நடந்தபோது. அவர் நடையில் ஓர் உறுதி இருந்தது. பின்னால் பெரிய தம்பி நடந்தான். அவனுக்குப் பின்னால் அவனைக் கடத்தி வந்த இருவரும் நடந்தார்கள்.

மாடியை விட்டுக் கீழே இறங்கிச் சென்றார்கள் எல்லாரும். வீட்டின் பின்பகுதியில் இருந்த ஓர் அறையின் சன்னல்களும் கதவும் மூடப்பட்டிருந்தன. அந்த அறைக்குள் அவர்கள் சென்றார்கள்.

மர்மமனிதர் விளக்கைப் போட்டார். அந்த அறையின் நடுவில் ஒரு பெரிய மேசையின்மீது வெள்ளைத் துணியால் மூடப்பட்ட பிணம் ஒன்று கிடந்தது. அதைப் பார்த்ததும் பெரியதம்பிக்குச் சற்றுத் தாக்குதல் ஏற்பட்டது. இதை விடப் பெரிய தாக்குதலை இன்னும் சில வினாடிகளில் அவன் அடைய இருந்தான்.

மர்மமனிதர் தமது ஆட்களிடம் சாடை காட்டினார். அவர்களில் ஒருவன் முன்னால் வந்து பிணத்தின் முகத்தை மட்டும் விலக்கினான். அடுத்த வினாடி-

பெரியதம்பிக்கு வாய்விட்டுக் கத்தவேண்டும் போலிருந்தது. அவன் தனது உணர்ச்சிகளை மிக அடக்கிக் கொண்டு அந்தப் பிணத்தைப் பார்த்தான். இறந்து கிடந்த அந்த மனிதன் பெரியதம்பியைப் போலவே இருந்தான்.

அவனால் நம்பவே முடியவில்லை. அவனால் பேசவே முடியவில்லை.


4

பெரியதம்பி மின்சார சிகிச்சை பெற்றவனைப்போல் திணறியபடி சிறிது நேரம் நின்றிருந்தான். பிறகு அவன் சொன்னான்: “மிகவும் அச்சத்திற்கு உரியதாக இருக்கிறது. என்னைப் போலவே இருக்கும் இந்தமனிதன் யார்? எனக்கு எதுவுமே விளங்கவில்லையே”

மர்ம மனிதர் சொன்னார்: “எங்களுக்குத் தெளிவாக விளங்குகிறது. இந்த மனிதன் பெயர் புலிக்குட்டி! இன்று இவன் ஒரு விபத்திலே இறந்துவிட்டான். இவன் ஓட்டி வந்த கார் விபத்துக்குள்ளாகிவிட்டது இவன் இறந்தது எங்களைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது”.

பெரியதம்பி ஆவலுடன்: “அப்படியானால் மூன்லைட் ஓட்டலில் இந்த மனிதரிடம் கொடுக்கவேண்டிய பெட்டியைத்தான், அந்த முன்பின் தெரியாத மனிதன் என்னிடம் கொடுத்துவிட்டுச் சென்றானா?”

“ஆமாம் நீ அந்த அட்டைப் பெட்டியைப் பெற்றுக் கொண்டதும் அமைதியுடன் நீ எழுந்து செல்லாமல் பெட்டியைக் கொடுத்தவனிடமே அதைத் திருப்பிக்கொடுக்க முயன்றதால், என்னுடைய ஆட்கள் உன்னை என்னிடம் அழைத்து வந்தார்கள்! புலிக்குட்டியைப் போலவே நீ இருக்கிறாய் அல்லவா?”

“இப்போது அதற்கு என்ன? நான் என்ன செய்ய வேண்டும் என்கிறீர்கள்?” என்று கேட்டான் பெரியதம்பி.

“மேலே வா சொல்லுகிறேன்” என்று சொல்லிவிட்டு மாடிக்கு நடந்தார் அந்த மர்ம மனிதர்.

அந்த இரண்டு மனிதர்களும் பிணத்தின் முகத்தை மூடி விட்டு அறையைச் சாத்திவிட்டு அவனுடன் நடந்தார்கள்.

மாடிக்கு வந்ததும் அந்த மர்ம மனிதர் மீண்டும் சோபாவில் உட்கார்ந்தார். அவர் எதிரே சென்று நின்றான் பெரியதம்பி. அவர் சொன்னார்: “புலிக்குட்டி ஒரு பெரிய குத்துச்சண்டை வீரன். அவன் நாளைய தினம் வல்லவன் என்னும் மற்றொரு குத்துச்சண்டை வீரனுடன் குத்துச் சண்டை செய்வதாக இருந்தது. இந்தக் குத்துச்சண்டை யில் யார் வெற்றி பெறுவார்கள்; யார் தோற்றுப்போவார் கள் என்பதை அரிய எல்லோருக்கும் ஆவல் மிகுதியாக இருக்கிறது. குத்துச்சண்டையில் மிகவும் ஊக்கமுள்ள பெரும் பணக்காரர்கள், நிறைந்த பணத்தைப் பந்தயமா கக் கட்டியிருக்கிறார்கள். புலிக்குட்டி வென்றால் பலர் ஏழையாகி விடுவார்கள் அதைப் போலவே வல்லவன் வென்றால், புலிக்குட்டியின் மீது பணத்தைக்கட்டியவர்கள் பெரும்பணத்தை இழந்து விடுவார்கள்! எது எப்படியானா லும் சரி, இந்தக் குத்துச்சண்டை நடந்தே ஆக வேண்டும். பணம் கட்டியவர்களுக்கு ஏமாற்றத்தை உண்டாக்கக் கூடாது!”

பெரியதம்பிக்கு அந்த மனிதர் என்ன சொல்லப் போகிறார் என்பது புரிந்துவிட்டது “புலிக்குட்டிக்குப் பதிலாக என்னை வல்லவனை எதிர்த்துக் குத்துச்சண்டை போடச் சொல்லுகிறீர்களா?” என்றான் அவன்.

“ஆமாம்” என்றார் அவர் உற்சாகத்துடன்!

“எனக்குக் குத்துச் சண்டையைப் பற்றித் தெரியுமே தவிர, அவ்வளவாகப் பழக்கமில்லை. வல்லவன் குத்துச் சண்டையில் கைதேர்ந்தவன் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்!” என்றான் பெரியதம்பி.

“இன்னும் நல்லதாகிவிட்டது! நீ துன்பம் கொள்ள வேண்டாம். இரண்டாவது ரவுண்டிலேயே நீ தோற்றுப் போய் விழுந்துவிட வேண்டும்! பிறகு நீ எழுந்திருக்கவே கூடாது! புரிகிறதா?”

“இதனால் எனக்கு என்ன இலாபம்?” என்று கேட்டான் பெரியதம்பி.

“உனக்குப் பத்தாயிரம் ரூபா கிடைக்கும்! பத்தாயிரம் ரூபாயுடன் நீ மறைந்து விடவேண்டும்!”

“உண்மையில் புலிக்குட்டி இறந்துவிட்டபோது, புலிக் குட்டியைப்போல் உள்ள நான் ஆள் மாறாட்டமாக நடிப்பது சட்டப்படி குற்றம் அல்லவா?”

“குற்றம்தான்! ஆனால் இந்த உண்மை நம்மைத்தவிர வேறு எவருக்கும் தெரியாது! குத்துச்சண்டை முடிந்ததும். ‘புலிக்குட்டி காரில் சென்றுவிட்டான். அவன் எங்கே சென்றான் என்று ஒருவருக்கும் தெரியாது’ என்று எல்லாரும் பேசிக்கொள்ளும்படி நான் செய்துவிடுகிறேன். உனக்காக ஒரு கார் ஏற்பாடு செய்திருக்கிறேன். அந்தக் காரில் நீ சென்றுவிடவேண்டும்” என்றார் அந்த மனிதர்!

பெரியதம்பி சிறிது நேரம் சிந்தித்தான். “உங்களுடைய இந்தத் திட்டத்தை நான் ஏற்காவிட்டால்?” என்று கேட்டான்.

மர்மமனிதர் திரும்பி, அவர் பின்னால் நின்ற இருவரில் ஒருவனைப் பார்த்தார். அந்த மனிதன் உடனே தனதுகால் சட்டைப் பையிலிருந்த துப்பாக்கியையும், அந்தக் கைத்துப் பாக்கியின் நுனியில் மாட்டப்படும் குழாய் போன்ற நீண்ட சைலன்ஸரையும் எடுத்தான். துப்பாக்கியின் குழாயில் அந்தச் சைலன்ஸரைப் பொருத்தினான்.

மர்மமனிதர் சென்னார்: “இந்தத் துப்பாக்கி வெடித்தால் சோடாப்புட்டியைத் திறப்பது போன்ற ஓசை மட்டுமே கேட்கும். இந்த ஓசை வெளியே கேட்காது. நீ உயிருடன் திரும்பிப் போக முடியாது!”

“உங்கள் திட்டத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் நான் கேட்கும் சில கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லவேண்டும்” என்றான் பெரியதம்பி.

“கேள்.”

“புலிக்குட்டி இறந்துவிட்டான் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரிந்தும்கூட என்னைப் பார்த்துப் புலிக்குட்டியா என்று நீங்கள் கேட்டீர்களே. அது ஏன்?”

அந்த மனிதர் சிரித்தார், “புலிக்குட்டியைப் போலவே நீ இருந்ததால் இறந்தவன் வேறு மனிதனாக ஏன் இருக்க முடியாது! இதனால் என் ஐயத்தைப் போக்கிக் கொள்ளவே நான் கேட்டேன்” என்றார்.

“உங்கள் பெயரை நான் தெரிந்து கொள்ளலாமா?”

“அதில் ஒன்றும் குற்றமில்லை. நன்றாகத் தெரிந்து கொள்ளலாம். என் பெயர் நிலவளநம்பி. எனக்கு வலப் பக்கம் இருப்பவன் செல்லையா. இடப்பக்கம் இருப்பவன் பெயர் முத்தையா. இன்னும் நீ ஏதாவது கேட்க வேண்டுமா?”

“இன்னும் ஒரே ஒரு கேள்வி. நீங்கள் இந்த வல்லவன் மீது எத்தனை இலட்சங்களைக் கட்டியிருக்கிறீர்கள்!” என்று கேட்டான் பெரியதம்பி

நிலவள நம்பி இதற்குச் சிறிது நேரம் பதில் சொல்லவில்லை. பிறகு அதைச் சொல்லுவதால் குற்றமில்லை என்று உணர்ந்தவரைப்போல் “என் சொத்து முழுவதையும் பந்தயம் கட்டியிருக்கிறேன்! ஆகையால் இப்போதே தெளிவுடன் சொல்லுகிறேன். இந்தக் குத்துச் சண்டையில் நீ இரண்டாவது ரவுண்டிலேயே விழுந்து விடவேண்டும்! இதைத் தவிர வேறு எது நடந்தாலும் உன் உயிர் பறந்து விடும்!”

பெரியதம்பி அவர் சொன்னதைப் புரிந்துகொண்டவனைப்போல் தலையை ஆட்டினான். பிறகு அவன் அந்த அட்டைப் பெட்டியைத் தன்னிடம் கொடுக்கும்படியும், அதில் உள்ள குத்துச் சண்டை உறைகளைத் தான் பயன்படுத்தப் போவதாகவும் சொன்னான்.

நிலவள நம்பி குத்துச்சண்டை உறைகளை அவனிடம் கொடுத்துவிட்டு, முத்தையாவையும் செல்லையாவையும் அழைத்து அவனை அந்தப் பங்களாவிலேயே ஓர் அறையில் பாதுகாப்புடன் பூட்டி வைக்கும்படி சொன்னார்.

பெரியதம்பி இருந்த அறையில் குத்துச்சண்டை பழக மணற்பை ஒன்று கட்டிவிடப்பட்டிருந்தது. மணற்பையைக் குத்தியபடி மீண்டும். குத்துச்சண்டையைப் பழகிக் கொண்டிருந்த பெரியதம்பியின் மனம் எண்ணியது; ‘பத்தாயிரம் ரூபா எனக்குப் பெரிய தொகைதான் ஆனால். நிலவள நம்பி நினைப்பதைப்போல் நடக்கப் போவதில்லை! இந்த வல்லவனை எப்படியாவது நான் நாக் அவுட் செய்ய வேண்டும்.

அச்சம் தரும் இந்த முடிவால் ஏற்படப்போகும் விளைவு களைப்பற்றிப் பெரியதம்பி அப்போது சிந்தித்துப் பார்க்க வில்லை.


5

எங்கேயோ கோழிகூவும் ஓசை கேட்டது. விடியும் நேரமாகிவிட்டது என்பதை அரைத்தூக்கத்தில் இருந்த பெரிய தம்பி உணர்ந்து கொண்டு எழுந்து உட்கார்ந்தான். பக்கத்து அறையில் அலாரம் கடிகாரம் அலறும் ஓசை கேட்டது. சிறிது நேரத்தில் அதன் மணியோசை அடங்கி விட்டது.

பெரியதம்பிக்குத் தூக்கம் இப்போது அடியோடு கலைந்துவிட்டது. சன்னலைத் திறந்துவிட்டு வெளியே பார்த்தான். பொழுது பளபளவென்று விடிந்துகொண்டி ருந்தது. இன்று அவன் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பம் ஏற்படப் போகிறது என்பதை அவன் உணர்ந்துகொண்டு, எப்படிப்பட்ட சிக்கல் வந்தாலும் எப்படிப்பட்ட துன்பம் வந்தாலும் எதிர்க்க மிக முன்னேற்பாடுடன் இருந்தான். அவன் முகத்திலே அவனையும் அறியாமல் ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டது.

நிலவள நம்பியின் திட்டத்தைத் தவிடுபொடியாக்க அவன் முடிவு செய்ததால் ஏற்பட்ட மகிழ்ச்சியா, அல்லது முதன் முதலாக அவன் தனது குத்துச் சண்டையின் திறமை யைக் காண்பிக்கக் கிடைத்த வாய்ப்பினால் ஏற்பட்ட மகிழ்ச்சியா?

தெரியவில்லை!

அவன் சிந்தனையுடன் நின்று கொண்டிருந்தபோது, அறையின் கதவு திறந்தது. உள்ளே எட்டிப் பார்த்த செல்லையா, “அதற்குள் விழித்துக் கொண்டாயா? வெளியே வா” என்றான்.

“இரவெல்லாம் சரியாகத் தூங்கவில்லை” என்றான் பெரியதம்பி.

“இன்னும் நல்லதாகிவிட்டது. குத்துச்சண்டையில் நீ வெற்றி பெறுவதாக இருந்தால் நீ தூங்கியாக வேண்டும். தூங்காததால் நீ தோற்பது மிகவும் எளிது. இதைக் கேட்டால் நிலவள நம்பி மகிழ்ச்சி கொள்வார்!” என்றான்
செல்லையா.

இந்த நேரத்தில் மாடிப்படியைக் கடந்து விரைந்து இறங்கி வந்த முத்தையா, “நிலவள நம்பி மேலே காத்திருக்கிறார். உள்ளே பெரியதம்பியை அழைத்து வரும்படி சொன்னார்” என்றான்.

“குத்துச்சண்டை முடியும்வரையில் என்பெயர் பெரிய தம்பி அல்ல, புலிக்குட்டி! இதை மறந்துவிடாதே!” என்றான் பெரியதம்பி.

மூவரும் மாடிக்குச் சென்றார்கள்.

நிலவள நம்பி, சிரித்த முகத்துடன் பெரியதம்பியை வரவேற்றார். அவனைத் தனக்குமுன் இருந்தநாற்காலியில் உட்காரும்படி சொன்னார்.

பெரியதம்பி உட்கார்ந்தான். அவனுக்கு இருபக்கங் களிலும் செல்லையாவும் முத்தையாவும் மெய்க்காப்பாளர் களைப்போல் நின்றார்கள்.

நிலவள நம்பி பேசினார்: “உன்னை நான் மீண்டும் கண்டுபேச முடியுமா என்பது ஐயம்தான். அதனால்தான் உன்னை அழைத்தேன். குத்துச்சண்டை தொடங்கும் நேரத்துக்கு மிகச் சரியாக நீ இவர்கள் இருவருடன் புறப்பட்டுக் காரில் வருவாய். குத்துச்சண்டை முடிந்ததும். அங்கிருந்து நீ புறப்பட்டுப் போக ஒரு கார் காத்திருக்கும். அந்தக் காரில் இவர்கள் உன்னை ஏற்றி அனுப்பி வைப்பார்கள். அந்தக் காரில் புறப்பட்டு, பெங்களூருக்குப்போய் சில நாட்கள் வரையில் நீ மறைந்திருந்து வாழவேண்டும்!”

“எத்தனை நாட்களுக்கு?”

“இரண்டு மூன்று மாதங்களுக்கு. இந்தக் குத்துச் சண்டையை மக்கள் மறந்துவிட்டபிறகு. நீ எங்கே வேண்டுமானாலும் போகலாம். என்னைத் தேடி மட்டும் வரக்கூடாது!” என்றார் நிலவள நம்பி.

‘உங்களைத் தேடிவர எனக்கு என்ன வெறியா பிடித்திருக்கிறது?’ என்று மனத்திற்குள் கருவிக்கொண்டான் பெரியதம்பி. அவன் மேலுக்குச் சொன்னான்: “புரிகிறது.”

“வேறு ஒன்றும் ஐயம் இல்லையே! நான் சொன்னவை அனைத்தும் உன் நினைவில் இருக்கிறது! அல்லவா?”

“மிகவும் தெளிவாக நினைவில் இருக்கிறது!”

“நீ போகலாம். உன் அறையிலே தங்கியிரு!”

“சற்றுப் பொறுங்கள்” என்றான் பெரியதம்பி!

“என்ன?” என்றார் நிலவள நம்பி.

“பத்தாயிரம் ரூபாயை என்னிடம் முதலிலேயே கொடுத்துவிட வேண்டும்!” என்று கண்டிப்பாகச் சொன்னான் அவன்.

“காரில் புறப்படுமுன் செல்லையா பணப்பையை உன்னிடம் தருவான்!” என்றார் நிலவள நம்பி.

“பணத்தை இப்போதே கொடுத்து விடுங்கள்! பணத்தை இப்போது கொடுக்காவிட்டால் நான் குத்துச் சண்டை மேடையில் ஏறமாட்டேன்!” என்றான் பெரிய தம்பி.

நிலவள நம்பி சிறிது நேரம் அவனை உற்றுப்பார்த்து விட்டுச் சிரித்தார். பிறகு “செல்லையா, பணத்தை இப்போதே கொடுத்துவிடு” என்று கட்டளையிட்டார்.

ஒரு சில விநாடிகளில் பத்தாயிரம் ரூபா பெரியதம்பியின் கைக்கு வந்தது!

– தொடரும்

– பெயர் இல்லாத தெரு, முதற் பதிப்பு: 1966, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *