கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: September 10, 2024
பார்வையிட்டோர்: 3,214 
 
 

(1999ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6

அத்தியாயம்-1

“கையில் பெருவிரலுக்குப் பக்க விரலை அடைந் திருக்கின்ற ரேகைகள் நூறாயுசையுடையோர்களுக்கு என்றாகின்றன. அந்த ஆள்காட்டி விரலையடை யாதவைகளாகி நடுவில் அறுந்திருக்கிற ரேகை களோடு கூடியவன் மரத்திலிருந்து விழுந்து மரிப்பான்.” – கமல முனிவரின் ரேகை யோகம்.

சேலம் மத்திய சிறைச்சாலை. 

ஏற்காட்டுச் சாலையில், ஏராளமான பரப்பளவில் அசோக வாதநாராயண, வில்வ, புங்க என்ற மரக் கூட்டங்களுக்கு நடுவில் ஒன்பது மீட்டர் உயர தடுப்புச் சுவரோடு ஒரு பந்த் நடக்கும் ஊர் போல அமைதியாகக் கிடக்கிறது. 

முகப்பு வாசலில் எல்லா சினிமாக்களிலும் காட்டப் படுகின்ற மாதிரி கட்டைத் துப்பாக்கி சகிதம் இரண்டு சென்ட்ரிகள். 

சுவர்களுக்கு முன்னாலே சிக்கென்று வந்து தேய்ந்து நிற்கிறது டாடா சுமோ ஒன்று. 

உள்ளிருந்து இறங்குகிறார் ஃபாதர் காபிரியேல். 

உஜாலா வெளுப்பில் தாடி மீசை. ஆனாலும் நாவற் பழமாய் கண்கள். அழுந்த வாரிய தலையில் அமெரிக்க நாகரீகச் சாயல். திருச்சபை அனுமதியளித் திருக்கும் நீண்ட வெள்ளை அங்கி. கைகளில் சிகப்பு அட்டை மின்ன பைபிள். 

காபிரியேலுடன் சேர்ந்து இறங்குகிறார் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர். இருவருக்கும் இப்பொழுது மரியாதையுடன் சிறையின் கதவுகள் திறந்து வழிவிடுகின்றன. 

காபிரியேலால் உடன் நடக்கும் போலீஸ் அதிகாரி போல அத்தனை வேகமாய் நடக்க முடிக்கவில்லை. எண்பது வயது தள்ளாமை. காலை நன்றாகவே கவ்விப் பிடிக்கிறது. இதனால் இன்ஸ்பெக்டர் அவருக்காகச் சற்று நிதான நடைபோட வேண்டியிருக்கிறது. 

எதிர்ப்படுகிறது வார்டரின் அறை. 

உடளளே வார்டர் தனிலிங்கப் பெருமாள். ‘குட்மார்னிங் ஃபாதர்”-என்று எழுந்து நின்று வரவேற்புக் கொடுக்கிறார். சரியான திமிர்பிடித்த மனிதர்.முரட்டுக் கைதிகளின் கால், கை, மூட்டுக்களுக்கு ஆயில் போடுவதில் வித்தகர். 

ஃபாதர் காபிரியேலும் பெருமாளைப் பார்த்து நடுங்கியபடி கைகூப்புகிறார். உடன் வந்த போலீஸ்காரர் ஒதுங்கிக்கொள்கிறார். 

“உட்காருங்க ஃபாதர்’-எனும் பெருமாளை நடுங்கும் தலையோடு உட்கார்ந்தபடி பார்க்கிறார். 

“என்ன சாப்பிடறீங்க?” 

ஒண்ணும் வேண்டாம் பெருமாள். ரொம்ப அவசரம்னு சொல்லி வரவழைச்சிருக்கீங்களே, என்ன விஷயம்?” 

“சொல்றேன் ஃபாதர். கொஞ்சம் உங்க உதவி தேவைப்படுது எங்க டிபார்ட்மென்ட்டுக்கு” 

“என்னன்னு சொல்லாம உதவின்னா என்ன அர்த்தம் பெருமாள்?” 

தனிலிங்கப் பெருமாள் சற்று நெளிந்துவிட்டு நிதானமாகப் பேச ஆரம்பிக்கிறார். “ஃபாதர்… முனிரத்னம்னு ஒரு தூக்குத் தண்டனைக் கைதி. அவனுக்கு நாளை காலைல தூக்கு தண்டனையை நிறைவேத்த சொல்லி கோர்ட் ஆர்டர். அவன்கிட்ட உன் கடைசி ஆசை என்னன்னு கேட்டோம். 

தன்னோட பாவங்களுக்கெல்லாம் மன்னிப்புக் கேட்க ஆசைப்படறான் அவன். ஒரு இந்துவா இருந்தாலும், ஏசுகிறிஸ்துதான் தன்னை மன்னிப்பார்ங்கறது அவனோட உறுதியான நம்பிக்கை.” 

பெருமாள் சற்று இடைவெளி விடுகிறார். காபிரியேல் முகத்தில் அதைக் கேட்க துளி சந்தோஷம்.

“ஆண்டவரே! எல்லாம் உன் சித்தம்”- என்று முணு முணுத்துவிட்டு, “உம்… சொல்லுங்க” என்று சற்று நிமிர்ந்து அமர்கிறார். 

“அவனுக்கு கன்ஃபெஷன் தரணும் நீங்க இதுக்காக அவனை சர்ச்சுக்கு கூட்டிகிட்டு வரமுடியாது. ரொம்பவும் பயங்கர குற்றவாளி அவன். பல பேங்க் கொள்ளைல சம்பந்தப்பட்டவன். சுமாரா பதினேழு கொலை செய்திருக்கான். 

ஆனா கோர்ட்ல ஒரு சில கொலைகளைத்தான் நிருபிக்க முடிஞ்சது.” – திரும்பவும் இடைவெளி விடுகிறார் தனிலிங்கப் பெருமாள். 

காபிரியேல் எழும் முயற்சியோடு நிமிர, பெருமாளும் எழுந்துகொள்கிறார். 

சிலைச்சாலைக்கே உரித்தான அழுக்கு வாடை, நீள நீள காரிடார்கள். நடை தொடர்கிறது. 

“ஃபாதர், ஒரு முக்கிய விஷயம்.”-பெருமாள் ஓரிடத்தில் நின்று சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு ரகசியம் போல எதையோ சொல்ல ஆசைப்படுவதை காபிரியேல் புரிந்து கொள்கிறார். 

“என்ன பெருமாள்?” 

“அந்த முனிரத்னம் இப்பவும் பலகோடி ரூபாய்க்கு பாளம் பாளமா தங்கமும் வெச்சுருக்கான். யார்கிட்ட கொடுத்து வெச்சுருக்கான்கறதெல்லாம் யாருக்கும் தெரியாது. எங்காவது பதுக்கியும் வெச்சுருக்கலாம். 

தான் சாகப்போறது உறுதியாயிட்ட நிலையில் அதுபத்தி அவன் உங்ககிட்ட நிச்சயம் சொல்வான்னு எதிர்பார்க்கின்றோம்.” 

தனிலிங்கப் பெருமாள் சற்று இடைவெளிவிட, ஃபாதர் காபிரியேல் முகம் பெரிய அளவில் மாறுகிறது.

“அப்படி அவன் சொன்னா அந்த விஷயத்தை நீங்க கட்டாயம் எங்களுக்குத் தெரிவிக்கணும். ஏன்னா, அது அவ்வளவும் கடத்தல் தங்கம் திருட்டு சொத்து.” திரும்பாவும் டைவெளி. ஃபாதரிடம் கூர்மையான முறைப்பு. 

“பாவமன்னிப்பின்போது ஒரு நபர் சொல்ற எந்த ஒரு விஷயத்தையும் வெளியில் யார் கிட்டேயும் சொல்லக் கூடாதுங்கறது எங்களுக்கும் தெரியும். ஆனா எங்களுக்கு வேற வழியில்லை. நாங்க எவ்வளவு கேட்டாலும் ‘எதுவும் எங்கிட்ட இல்லை’ன்னு பொய் சொல்றான். அதே சமயம் யார் கிட்டயாவது சொல்லாமலும் அவன் சாகமாட்டான். அப்படி அவன் சொல்லத் தேர்ந்தெடுத்த நபர் நீங்கதான்கறது என் அபிப்ராயம்” காபிரியேல் தன் நடுங்கும் கரங்களால் தனிலிங்கப் பெருமாளின் கரங்களைத் தேடிப் பிடிக்கிறார். 

வாஞ்சையாக வருடிக் கொடுக்கிறார். 

‘முயற்சிக்கிறேன்’ என்கிற மாதிரி இருக்கிறது அந்த வருடல். 

அதே சமயம் தொலைபேசி அழைப்பதாக ஒருவன் வந்து சொல்ல, “ஒன் மினிட் ஃபாதர்” என்று அவரிடமிருந்து பிரிகிறார் தனிலிங்கப் பெருமாள். 

தனது அலுவலக அறையில் பிரிந்து கிடக்கும் ரிசீவரை எடுத்து காதுக்குக் கொடுக்கிறார். 

“யெஸ்… வார்டர் பெருமாள் ஸ்பீக்கிங்.”

“பெருமாள், நான் மாஜிஸ்திரேட் மரகதமாணிக்கம் பேசறேன்.” 

“வணக்கம் சார். சொல்லுங்க, என்ன விஷயம்?” 

“பாஸ்கரதாஸ்னு ஒரு கைரேகை ஜோதிடர் என்னை வந்து பார்த்தாரு. நான் எவ்வளவோ மறுத்தும் முகத்தை மட்டும் பார்த்தே மிகச் சரியா பலன்களைச் சொன்னார். அசந்து போயிட்டேன். அப்புறமா கைரேகையும் பார்த்தார். பிரமாதமா விஷயங்களைச் சொன்னார்.” 

“சரி சார். அதுக்கென்ன… நானும் அவர்கிட்ட ரேகை ஜோசியம் பார்க்கணுமா?” 

“நோ நோ… இவர் ஜோசியம் பார்க்கறாரே யொழிய இவர் ஜோசியத் தொழில்லாம் பண்றதில்லை. தொழில் பண்றவங்கள நானும் கிட்ட சேர்க்கறதில்ல. இவர் ஜோசியத்துல நிறைய ஆராய்ச்சி செய்துகிட்டு இருக்காராம். ஆகையால் சாகக் கிடக்கற சிலரோட கைரேகையை பார்த்து அதுக்கு பாசிபிலிட்டிஸ் இருக்கா அவங்க கைலன்னு பார்க்கணுமாம். ஆகையால் வித் யுவர் ஸ்பெஷல் பர்மிஷன், ஒரு தூக்கு தண்டனை கைதியோட கையைப் பார்க்க விரும்பறார்.” 

மரகதமாணிக்கத்தின் வினோத சிபாரிசு தனிலிங்கப் பெருமாளுக்கு கொஞ்சம் ஆச்சரியம் கொஞ்சம் அதிர்ச்சியைத் தருகிறது. மெளனம் பரவுகிறது. 

“என்ன பெருமாள்… ஜெயில் ரூல்ஸ்ல இடமில்லேன்னு தெரியும். ஆனா அவன் ரேகை உங்க கஸ்டடியிலோ, போலீஸ் கிட்டயோ கிட்டயோ இருக்குமே…? பிரியமில்லைன்னா வேண்டாம்.”- மரகதமாணிக்கம் சற்று விவேகம் காட்டுகிறார். 

“நோ சார்… அதெல்லாம் ஒண்ணுமில்லை. இட்ஸ் ஓ.கே. அவரை வரச்சொல்லுங்க. இங்க ஒருத்தனுக்கு நாளைக்கு கணக்கு தீர்க்கணும். அதுக்கு முந்தி அவன் கிட்ட சில உண்மைகளையும் தெரிஞ்சுக்கணும். உங்க ஜோசியரால் எதாவது கைகூடுதான்னு பார்ப்போம்.” பெருமாள் ரிசீவரை முடக்க, கடிகாரத்திடம் ஆமோதிப்பு முழக்கம். 

அத்தியாயம்-2

“நீண்டிருப்பவையான கைவிரல்கள் தீர்க்காயுசை யுடையவர்களுக்கும், குரங்கின் கையோடு சரியான கையுடையவர்கள் மிகுந்த செல்வாக்கைப் பெற்றவர்களாகவும் திகழ்வார்கள்.” 

திரும்பவும் பெருமாள், எதிரில் க்ரைம் பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் அன்வர் முனிரத்னத்தை பிடித்து கோர்ட்டில் நிறுத்தி தூக்கு தண்டனை வாங்கித் தந்ததில் முதல் காரணமானவர். 

“என்ன சார்.. ஃபாதர் வேலைய ஆரம்பிச்சுட்டாரா?” கேட்டபடி வருகிறார் அன்வர். 

“ஆமாம் அன்வர். ஃபாதர் கிட்டயும் ரஃப்பா சொல்லியிருக்கேன். பார்ப்போம் முனிரத்னம் அவர் கிட்டயாவது உண்மையை சொல்றானான்னு…” 

“சொல்லணும் சார். இல்லாட்டி எப்படியாவது சொல்ல வைக்கணும், ஒரு காசா, இரண்டு காசா…. அவ்வளவும் கோடிகளாச்சே…?”

“எத்தனை தடவை இதை சொல்வீங்க… ஆஸ் ஏ வார்டர் நான் என்ன செய்யணுமோ செய்துகிட்டு தானே இருக்கேன். என் லிமிட்டையே உங்களுக்காக மீறக்கூடப் போறேன்.” 

“தப்பா எடுத்துக்காதீங்க சார்.. அவன் சாகறது ஒரு சரியான தீர்ப்புன்னா அவன் கடத்தல் சரக்கு சென்ட்ரல் லாக்கருக்கு போறதுதானே அடுத்த சரியான விஷயம்.” 

“இதோ பாருங்க அன்வர், நாம வஞ்சனையே இல்லாம முயற்சி செய்வோம். மத்ததெல்லாம் நடக்க நடக்கத்தான்.”

“ஆமாம். ஏதோ லிமிட்டையே மீறிட்டதா சொன்னீங்களே…அது?” 

“ஒண்ணுமில்லை அன்வர். கைரேகை ஆராய்ச்சியாளர் முனிரத்னம் கைரேகையை பார்க்க போறார். பிரமாதமான அக்யூரசி பால்மிஸ்டாம் அவர். அவர் மூலமாகவும் ஏதாவது தெரிய வருதான்னு பார்ப்போம்.” 

“கைரேகைல அந்த குற்றவாளி தங்கத்தை எங்க பதுக்கி வெச்சிருக்கான்னுல்லாமா இருக்கும்? ஆச்சரியமாயிருக்கே…” 

“எல்லாமே அந்த பால்மிஸ்ட் வந்தா தெரிஞ்சுடுது. இப்ப நாம கிளம்புவோம். ஃபாதர் வெயிட் பண்ணிக்கிட்டிருப்பார்.” 

இருவருமாக இணைந்து நடக்கின்றனர். ஒரு மரப் பெஞ்சில் ஃபாதர் காபிரியேல் பைபிளும் கையுமாக அமர்ந்திருக்க, நெருங்குகின்றனர். 

“சாரி ஃபாதர். கொஞ்சம் டிலே பண்ணிட்டேன்.”

“பரவாயில்ல – போலாமா?” 

“அதுக்கு முந்தி ஒரு நிமிஷம். இவர் பேர் அன்வர் அலி. முனிரத்னத்துக்கு தூக்கு தண்டனை கிடைக்க காரணமாயிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர். அவன் தூக்குல தொங்கறதவிடவும், அவனோட கடத்தல் சரக்கு பிடிபடறதுலதான் முழு வெற்றியிருக்கிறதா நினைக்கிறார்” 

“ஐ.சீ” ஃபாதர் காபிரியேல் முதுமையின் தள்ளாட்டத்தோடு அதற்கு ஒப்புமானம் தருகிறார். அவர்களுக்கு முன் நடக்கவும் தொடங்குகிறார். இருவரும் பின் தொடர, ஏ பிளாக்கை கடந்து கடுங்காவல் குற்றவாளிகளுக்கான ‘டார்க் செல்’ வழியாக அந்த ஜெயிலின் இடது ஓரத்தில் செக்போஸ்ட் டவரை ஒட்டியுள்ள ஸ்பெஷல் செல்லுக்கு நடக்கின்றனர். 

டார்க் செல் கைதிகள் சிலர் கம்பி இடுக்கு வழியாக பார்த்து முறைப்பதும், சிரிப்பதும் ஒரு பக்கமிருக்க, மறு பக்கம் முனிரத்னத்தின் ஜெயில் பிளாக் தெரிகிறது. அழுது வடியும் நாற்பது வாட்ஸ் பல்ப் ஒளி பரவி நிற்கும் வராண்டா பாதை. வராண்டா மேட்டை ஒட்டி கறுப்புச் சந்தாக ஓடும் திறந்தவெளிச் சாக்கடை. 

“டேய்! சாக்கடைக்கு மருந்து போடுங்கடா. கொசுத் தொல்லை தாங்க முடியல” என்று ஒரு கைதி கத்துவது ஃபாதரின் காதில் தேய்ந்து வந்து விழுகிறது. 

“பெருமாள்..மருந்து போடறதில்லையா?” – என்று ஃபாதரும் கேட்கிறார். 

“போடுறோம்… ஃபாதர். அந்தக் கைதி ஒரு கம்யூனிஸ்ட். அவன் அப்படித்தான். சின்ன தப்பைகூட பெரிசா ஃபோகஸ் பண்ணுவான்.” என்று சமாதானம் சொன்னபடி சப்தம் போட்ட செல் பக்கமாய் ஒரு முறை முறைக்கிறார் பெருமாள். 

இதற்குள் முனிரத்னத்தின் செல் வந்துவிட்டது. முனிரத்னம் ஃபாதருக்காக செல் கதவின் கம்பி யருகிலேயே அமர்ந்திருக்கிறான்; கோலி பல்பின் மட்டமான வெளிச்சத்தில் மஞ்சளும் கருப்புமாய் தெரிகிறான். 

“வாங்க ஃபாதர்… வாங்க, வாங்க…! உங்களுக்காகத்தான் காத்துக்கிட்டிருக்கேன். எங்க வராம போயிடுவீங்களோன்னு பயந்துகிட்டே இருந்தேன். வாங்க வாங்க..” 

அடர்ந்த புதர்போன்ற தாடி மீசையுடன் முனிரத்னம் கழிவிரக்கமாக பேசுவதைக் கேட்டு ஃபாதர் கதவருகே செல்கிறார். ஒட்டிச் சென்று நின்றுகொள்கின்றனர், அன்வரும் தனிலிங்கப் பெருமாளும். 

“ஃபாதர், அவங்கள போகச் சொல்லுங்க… அவங்கள பாக்கவே பிடிக்கல எனக்கு. அதுலயும் அந்த போலீஸ்காரன் அன்வர் ஒரு பெரிய துரோகி. ‘எங்கே தங்கம், எங்கே தங்கம்’னு கேட்டு என்னைச் சுத்திச் சுத்தி வரான். அவனைப் போகச்சொல்லுங்க ஃபாதர்.” 

முனிரத்னம் சிறைச்சாலையே அதிரும்படி கத்துகிறான்.ஃபாதர் காபிரியேல் அவர்களைப் பார்க்கிறார். கண்ணாலேயே தூரப் போகச் சொல்கிறார். அவர்களும் சற்று தொலைவில் சென்று நிற்கின்றனர் 

“டேய் போங்கடா… தூர நின்னால்லாம் நான் ஃபாதர்கூட பேச மாட்டேன். என் நாக்கையே அறுத்துப்பேன், போங்கடா! போங்கடான்னா…” முனிரத்னம் பயங்கர தீவிரம் காட்டுகிறான். 

“மிஸ்டர் பெருமாள், உங்களுக்கு என் மேல நம்பிக்கை இருந்தா போய் உங்க வேலையை பாருங்க. நான் பாத்துக்கறேன். சில மணி நேரங்களே உயிரோட இருக்கப்போற இந்த ஜீவனோட விருப்பத்தை தயவு செய்து நிறைவேத்துங்க. ப்ளீஸ்…” காபிரியேலும் கரைகிறார். அரை மனதாய் பெருமாளும் அன்வரும் அங்கிருந்து நகர, சென்ட்ரிகள் இருவர் மட்டும் வேறு திசை பார்த்து திரும்பி நின்றுகொள்ள… 

அத்தியாயம்-3

“புருஷனுக்கு வயிற்றில் சதை மடிப்பு ஒன்றிருக்கும் ஆகில், அவன் ஆயுதத்தினால் மரிப்பான். இரண்டிருக்குமாகில் அவன் ஸ்த்ரீ போகி. மூன்றென்றால் குருவாகிறான்.” 

அந்த கைனடிக் ஹோண்டாவை ஆஃப் செய்தபடி இறங்குகிறான் ஒரு பைஜாமா குர்தா மனிதன். இருபத்தைந்து வயது மதிக்கலாம். கொஞ்சம் ராதாரவி ஜாடை. நெற்றியில் விபூதிப் பந்தல் – கழுத்தில் ஸ்படிக மாலை. தோளில் ஜோல்னா பை. 

சென்ட்ரி கேட்கிறான். 

“யாரைப் பார்க்கணும்?” 

“வார்டர் சாரை, அப்பாயிண்ட்மெண்ட் இருக்கு.”

“ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க -உங்க பேர்?”

“பாஸ்கரதாஸ். கைரேகை ஆராய்ச்சியாளர்னு சொல்லுங்க.” 

சென்ட்ரி உடனடியாக சற்று ஆச்சரியம் கலந்து, பார்த்துவிட்டு இன்டர்காமில் பெருமாளுக்கு தகவல் தர, அனுப்பிவைக்கும்படி உத்தரவு வருகிறது. 

“உள்ள போகலாம். ரைட் சைட்ல வார்டர் ஆபீஸ் ரூம் இருக்கு. அங்கே போய் வெயிட் பண்ணுங்க.” 

“தேங்க்யூ..”- பாஸ்கரதாஸ் கூறியபடி சில அடிகள் முன் சென்றுவிட்டு திரும்பி வருகிறார். 

“எக்ஸ்கியூஸ் மீ… நிறைய லாட்டரி சீட்டு வாங்குவீங்களா நீங்க..?” 

“எதுக்கு சார் கேட்கறீங்க?” 

“கூரான நுனி மூக்குல மச்சமிருந்தா அவங்களுக்கு லாட்டரி, சூதுல நம்பிக்கை நிறைய இருக்கும், அதான்.” 

“வாஸ்தவம்தான் சார்… மாசம் ஐநூறு ரூபாய்க்கு சீட்டு வாங்கறேன்.”

“இனி வாங்கவேண்டிய அவசியம் இருக்காது.”

“அப்படின்னா?” 

“ஒரு பெரிய பரிசுத் தொகை உங்களுக்குக் கிடைக்கும். அதான் சொன்னேன். பரிசு விழுந்ததுக்கப்புறம் லாட்டரி வாங்கறதை நிறுத்திடுங்க. இல்லேன்னா, பரிசு பணம் முழுவதையும் லாட்டரியிலேயே விட்டுட வேண்டிவரும். ஜாக்கிரதை” பாஸ்கரதாஸ் ஒரு மினி எச்சரிக்கையோடு உள் நுழைகிறான். சென்ட்ரி போலீஸ் முகம் ஈயாட்டம் செத்திருக்கிறது. 

வார்டர் அறையில் ஒரே ஒரு ட்யூப் லைட். மற்ற இடங்களில் எல்லாம் கோலி பல்புதான். ‘பம்’ என்று காதை அழுத்தும் ஒருவகை இருட்டு கலந்த அமைதி. காதோரமாய் ஹார்மோனியம் வாசிக்கும் கொசுக்கள். சிறைச்சாலை என்பது நரகத்தின் மறுபிரதியாக இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் ஒவ்வொரு விஷயத்திலும் தெரிகிறது. 

வார்டரின் அறைக்குமுன் தயங்கியபடி நிற்கும் பாஸ்கரதாஸ் எட்டிப் பார்க்கிறான். 

“உள்ள போங்க…” ஒரு பாரா போலீஸ் சொல்லி விட்டுச் செல்ல, உள்ளே நுழைகிறான். 

“வாங்க…நீங்கதான் பாஸ்காதாஸா?” 

“ஆமாம் சார், வணக்கம்” 

“வணக்கம் மாஜிஸ்திரேட் மரகதமாணிக்கம் சொன்னார் உட்காருங்க…” 

“இருக்கட்டும் சார்… எப்படி சார், யாராவது தூக்கு தண்டனை கைதி இருக்காங்களா. நான் அவங்களை டெஸ்ட் பண்ண முடியுமா?” 

“பண்ணலாம். அதுக்கு முந்தி சில கேள்விகள்.” 

“என்ன சார், தாராளமா கேளுங்க” தனிலிங்கப் பெருமாள் கேள்விக் கேட்கத் தொடங்க, சற்றுத் திரும்பி இருவரின் பேச்சையும் கேட்கும் ஆவலோடு அன்வரும் திரும்பிக் கொள்ள… 

“இந்த கைரேகையெல்லாம் எந்த அளவு உண்மை?” ‘

“என்ன சார் கேள்வி இது.. ரேகை சாஸ்திரம்கறது ஒரு பெரிய கலை சார். இதுல சொல்லப்படாத விஷயமே இல்லை தெரியுமா?” 

“இப்படிதான் ஜாதகத்தைப்பத்தி சொல்றாங்க, நியுமராலஜி பத்தி சொல்றாங்க. பத்தாததுக்கு இப்ப கல்லுங்க வேற வந்துடுச்சி… எனக்கென்னமோ பித்தலாட்டமாதான் படுது…” 

“இல்ல சார்..இல்ல சார்… சில லாட்ஜ் ஜோசியர்களை மனசுல வெச்சுகிட்டு நீங்க இப்படி முடிவு கட்டினா, அது ரொம்ப தப்பு. கைரேகைங்கறது ஒரு அற்புதமான விஷயம். சரியா சொல்லத் தெரியணும். அதான் முக்கியம்.” 

“அது சரி… இந்த ரேகை பலன்களெல்லாம் இங்க தான். ஃபாரின்லல்லாம் இல்லையே?” 

“யார் சொன்னது இல்லைன்னு? வால்ட்ரன்னு ஒரு கைரேகை நிபுணர் இங்கிலாந்துல ரொம்ப பிரபலம். ரூஸோ, சிட்னின்னு இன்னும் பலபேர் இருக்காங்க. இவங்கள்ள சிலரை இங்கிலாந்து கவர்மென்ட்டே செக் பண்ணி அசந்து போயிருக்காங்க.” 

“எப்படி செக் பண்ணினாங்க?” 

“நீங்க வேணா இப்ப செக் பண்ணுங்க. எப்படி வேணா செக் பண்ணுங்க..” பாஸ்கரதாஸ் விரிவாக தளம் அமைத்து தர, பெருமாளின் பார்வை அவரை ஊடுருவுகிறது. அன்வர் அருகே சென்று காதைக் குடைய, அடுத்த சில வினாடிகளில் அறையில் உள்ள ஒரு ஃபைல் விரிபட, அதில் உள்ளே அடைபட்டிருக்கும் கைதிகளின் ஜாதகமே பதிந்து கிடக்கிறது. குறிப்பாக, கைரேகைகள் அதில் விடிந்தால் தூக்கில் தொங்கப்போகும் முனிரத்னத்தின் கைரேகையும் இருக்க, அந்த வெண்ணிற ரேகை பரவிய ட்ரேஸ் தாளை எடுத்து பாஸ்கரதாஸ் முன்விரிக்கிறார் பெருமாள். 

“எங்க… இந்த கைரேகைகளை பார்த்து இந்த ஆள பத்தி சொல்லுங்களேன் பார்ப்போம்.” 

விரிபட்ட அந்த கைரேகையை உற்றுப் பார்க்கும் பாஸ்கரதாஸின் முகத்தில் விதம் விதமாய் உணர்வுகள் விழுகின்றன, கரைகின்றன. துல்லியமாக ஐந்து நிமிடம் சென்றிருக்கும், பாஸ்கரதாஸ் ரேகையில் ஊன்றியிருக்க, ஒரு சிறிய இருமல் சப்தம் ஃபாதர் காபிரியேல் கன்ஃபெஷன் முடிந்து வருவதை உணர்த்துகிறது. 

“ஃபாதர் வரார்போல இருக்கு… நீங்க இவரை கவனியுங்க. நான் முனி ஏதாவது சொன்னானான்னு கேக்கறேன்.” 

அன்வர் துள்ளியபடி எழுந்து வெளியே செல்கிறார். தடுமாறியபடி நடந்துவரும் காபிரியேல் கையில் இப்பொழுது பைபிள் இல்லை 

“ஃபாதர் பேசிட்டீங்களா – ஏதாவது சொன்னானா?”துப்பாக்கி ரவையாக தெறிக்கிறது கேள்வி. 

“நோ சன். எதுவுமே சொல்லலை. நான்கூட கேட்டுப் பார்த்தேன். தன்கிட்ட கால்காசு இல்லை, எல்லாம் கோர்ட்டுக்கே செலவாயிடிச்சுன்னு அழறான். ஆனா பதினேழு கொலை செய்துகிட்டதை ஒத்துகிட்டான். மத்த விஷயங்களைக் கேட்காதே சன். கர்த்தர் அப்புறம் என்னை மன்னிக்கமாட்டார்.” 

காபிரியேலின் விளக்கம் அன்வரை காற்றுபோன பந்தாக துவளச் செய்தாலும் “ஆமாம், பைபிள் எங்கே?” என்று கேட்க மறக்கவில்லை. 

“சாகறதுக்கு முந்தி அதையாவது படிக்கறேன்னு சொன்னான். சரின்னு கொடுத்தேன். உன் விதிகள்ல அதுக்கு இடமில்லைன்னா சொல்லு சன். அதை திருப்பி வாங்கிக்கறேன்.” காபிரியேல் விளக்கமளித்துக் கொண்டிருக்க – பாஸ்கரதாஸை பாதியில் ஆராய விட்டுவிட்டு, தனிலிங்கப் பெருமாளும் எழுந்து வருகிறார். 

“என்ன அன்வர்… அந்த கொலைகாரன் வாயே திறக்கலையாமா? தெரியும்… எனக்கு நல்லா தெரியும். இவனுக்கெல்லாம் எதுக்குதான் பாவமன்னிப்போ? எனிவே தேங்க்யூ ஃபாதர் தேங்க்யூ ஸோ மச்…” விரைப்பாக காபிரியேலுக்கு நன்றி கூறுகிறார் பெருமாள். 

“அப்ப நான் கிளம்பறேன். கர்த்தருக்கு ஸ்தோத்ரம். வரட்டுமா?” 

“நல்லது ஃபாதர். வெளியில நீங்க வந்த டாடா சுமோ தயாரா இருக்கு. உங்களை சர்ச்சுல கொண்டு போய் விட்டுடுவாங்க.” பெருமாள் வாசல் வரைகூட செல்லப் பிரியப்படவில்லை. உள்ளே பாஸ்காதாஸாவது ஏதாவது க்ளூ கொடுக்கிறானா பார்க்கலாம் என்கிற நப்பாசை. 

திரும்பி ஆசனத்தில் அமரச் செல்கின்றவரை பார்க்கும் பாஸ்கரதாஸ், “சார் நான் ரெடி இந்த ரேகைக்குரியவர் பத்தி பேசலாமா?” 

”உம்…”பெருமாள் உம் கொட்டி நிமிர, அன்வரும் வந்து ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்கிறார். 

“இந்த ரேகைக்கு சொந்தக்காரர் இப்ப ஒரு கைதி. சாதாரண கைதியல்ல, தண்டனையிலேயே மிகப் பெரியதான தூக்கு தண்டனைக் கைதி. ஆனா…” பாஸ்கரதாஸ் இடைவெளி விடுகிறான். 

“என்ன ஆனா?”

“இந்த நபரை நீங்க தூக்கில் போட முடியாது… இவருக்கு ஆயுசு தொண்ணூறுக்கும் – மேல. துல்லியமா சொல்லணும்னா தொண்ணூத்தி மூணு வருஷம், நாற்பது நாள். அதே சமயம் இவர் ஒரு மிகப் பெரிய பணக்காரர். இந்த தமிழ்நாட்டுல இவர்கிட்ட இருக்கற அளவு தங்கம் ஒரு நகைக்கடைலகூட இல்லைன்னு சொல்வேன். தங்கம், பணம் எல்லாம் ஒரு எல்லைக்கு மேலேயே இருக்கு. சனி மேட்டுல சூலக்குறி இருக்கறதால் அது குரு மேட்டை பார்க்காம, புதனை பார்க்கற தால வம்பு தும்பு கொலைகள்ல இவர் பிரசித்தம். குருமேட்டை பார்த்திருந்தா இதே கொலைகளை இவர் ஆபரேஷனா செய்து உலகப் புகழ் பெற்றிருப்பார். அதனாலயும் பணம் சம்பாதிச்சிருப்பார்” பாஸ்கரதாஸ் சொல்லி நிறுத்தியதைக் கேட்டு இருவர் முகத்திலும் எல்லை மீறிய கலக்கம், ஆச்சரியம். 

“இப்படி ஆச்சரியப்பட்ட எப்படி கேள்வி கேளுங்க..” 

“என்னத்தக் கேட்க! உங்க அபிப்பிராயத்துல பாதி உண்மை. ஆனா பாதி உண்மையில்ல..” 

“பொய்னு சும்மா நேராவே சொல்லுங்களேன்.” 

“ஆமாம். பொய் எப்படின்னா, விடிஞ்சா இந்த கைதிக்கு தூக்கு தண்டனை. சுப்ரீம் கோர்ட் அப்பீல்ல இருந்து ஜனாதிபதி கருணை மனுவில இருந்து எல்லாம் ரிஜக்ட் ஆயாச்சு. கடவுளே வந்தாலும் காப்பாத்த முடியாது. டம்மி பாடியை வெச்சு ரிகர்சல்கூட பார்த்துட்டோம்.” 

பெருமாள் சொல்லச் சொல்ல பாஸ்கரதாஸ் துளிகூட கலக்கமின்றி சிரிக்கிறான். 

“என்ன மிஸ்டர் இப்படி சிரிச்சா எப்படி?” 

“இல்ல… சிரிக்கல… ரேகை பொய்யாகாதே, எப்படின்னுதான் யோசிக்கிறேன்.” 

“ஆராய்ச்சிதானே பண்றதா சொல்றீங்க. அதுக்குள்ள எப்படி முடிவுக்கே வர்றீங்க?” 

“ஆராய்ச்சிதான். ஆனா என் முடிவுகளை கன்ஃபர்ம் பண்ணிக்கற ஆராய்ச்சி இது. நீங்க சொன்னமாதிரி நாளை காலைல இந்த கைதி தூக்குல தொங்கிட்டா, நான் என் ஆராய்ச்சி கன்ஃபர்மேஷன் தீர்மானம் எல்லாம் தவறுங்கற முடிவுக்கு வருவேன்.” 

“வரத்தான் போறீங்க..” என்று பெருமாள் கூறி விட்டு அடுத்து-என்பது போல பார்க்க, பாஸ்கரதாஸும் புரிந்துகொள்கிறார். 

“அப்ப நான் கிளம்பறேன் சார்.. தேங்க்யூ ஸோமச்” என்று எழுந்துகொள்கிறார். பெருமாள் விடை தருவதற்காக கைகளை குலுக்கவேண்டி நீட்டுகிறார். 

அட்பொழுது அவர் கண்ணில் அவரது கரத்தின் சுக்கிர மேட்டுப் பகுதியும், அதன் மேலுள்ள கருப்புப் புள்ளியும் கண்ணைக் கொத்துகிறது. பற்றிய கரத்தை அப்படியே திருப்பி கண்ணால் அளக்க ஆரம்பிக்கிறார். 

“என்ன..என் கையையும் ஆராயணுமா?”

“இல்ல… இந்த கருப்பு புள்ளி எத்தனை நாளா இருக்கு?” 

“இது.. இது… இருக்கும் ஒரு ஆறு மாசமா…” 

“அப்படின்னா உங்களுக்கும், உங்க மனைவிக்கும் கூட ஆறு மாசமா சண்டையும், செக்ஃ லைஃப்ல கஷ்டங்களும் இருக்கணுமே..” 

பெருமாள் திடுக்கிடுகிறார். மேலும் ஊன்றி கவனிப்பவர் நெற்றி பாகத்தில் பூரான் நெளிசல், கண்களில் கலக்கம். 

அன்வர் அதை துல்லியமாக படம் பிடிக்கிறார். 

பாஸ்கரதாஸ் கைகளை இப்பொழுது விடுவிக்கிறார். 

”சார், இனி கைகளை யார் கிட்டேயும் காட்டாதீங்க ப்ளீஸ்…” என்று சொல்ல, பெருமாள் முகம் குத்துப் பட்ட மாதிரி கலங்கிவிட்டிருக்கிறது. எதனாலோ திரும்பி நடக்கும் பாஸ்கரதாஸ் பார்வை பெருமாளை திரும்ப ஒரு தடவை மேலும் கீழும் பார்க்கிறது. 

“ஒன் மினிட்…” அழைப்பது அன்வர் நிற்கிறார் பாஸ்கரதாஸ். “நானும் வரேன், டவுன் பக்கம்தானே போறீங்க?” 

“ஆமாம்.” 

“அப்ப பெருமாள் சார், நான் கிளம்பறேன். நாளைக்கு காலைல முனிரத்னம் பாடி பாக்க வரேன்…” அன்வர் சொல்லிக்கொண்டு கிளம்புகிறார். 

இருவருமாக வெளியே வருகின்றனர். அன்வர் வந்திருந்த பைக் காத்துக்கொண்டிருக்கிறது. அதன் அருகே நெருங்கி நிற்பவர் பாஸ்கரதாஸை பார்த்து சொடுக்கு போட்டது போல கேட்கிறார்- 

“மிஸ்டர் பாஸ்கரதாஸ். தனிலிங்கப் பெருமாளை எதுக்கு அப்படி பார்த்தீங்க?” பாஸ்கரதாஸிடம் மௌனம். 

“சொல்ல பிரியப்படலைன்னா பரவாயில்ல. ஆனா அந்த பார்வைக்கு நிறைய அர்த்தம் இருக்குன்னு மட்டும் நான் நம்பறேன்.” 

”புத்திசாலி சார் நீங்க.” 

‘பாராட்டைவிட பார்த்த காரணம்தான் சார் எனக்கு முக்கியம்.” 

“பாவம் சார் அவர்.” 

”பாவமா?”

“ஆமாம்… நான் பார்த்த ரேகைப்படி தனிலிங்கப் பெருமாளுக்குதான் ஆயுள் இல்லை.” 

“அப்படின்னா…”

“ஆயுள் ரேகை பெருமாள் சாருக்குத்தான் அறுந்திருக்கு. அதுலயும் மிகச் சரியா அவரோட நாற்பத்தைந்தாவது வயசுல.” 

“இப்பத்தான் அவருக்கு நாற்பத்தஞ்சு வயசு நடக்குது.” 

“என் கணக்குப்படி அவர் நிச்சயம் நாற்பத்தாறுக்கு போகமாட்டார்” 

பாஸ்கரதாஸ் பதில் அன்வரை சிரிக்கச் செய்கிறது.

“தெரியும் எதுக்கு சிரிக்கறீங்கன்னு..” 

“சொல்லுங்களேன் பார்ப்போம்.” 

“சாகப்போறதா நீங்க தீர்மானிச்சிருக்கற நபர் வாழப் போறான்னும், வாழப்போறார்னு நீங்க நம்பற நபர் சாகப் போறார்னும் சொன்னா சிரிக்காம என்ன பண்ணுவீங்க.” 

“சரிதான். பாஸ்கரதாஸ் ஒரு ரிக்வெஸ்ட்.” 

“என்ன…?” 

“இந்த கப்ஸா சாஸ்திர ஆராய்ச்சியை மூட்டை கட்டி வெச்சிட்டு உருப்படியான வேலையப் பாருங்க ப்ளீஸ்…” அன்வர் வேடிக்கையோடு பைக்கை உதைக்க, அது புகையை உமிழ்ந்தபடி பாஸ்கரதாஸை ஏற்றிக் கொள்கிறது. 

பத்துமணிஇரவுப்பொழுதைஹெட்லைட்வெளிச்சம் வீசியடித்து பிரித்து வழிகாட்ட, அஸ்தம்பட்டி சாலையில் அந்த எந்திரக் குதிரை ஓட்டமெடுக்கத் தொடங்குகிறது.

– தொடரும்…

– சொர்ணரேகை (நாவல்), முதற் பதிப்பு: 1999, திருமகள் நிலையம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *