(1999ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15
அத்தியாயம்-13
“ஒரு ஸ்திரீபானவள் பூமியதிரும்படி நடந்தால் அவள் தரித்திரி. சுண்டுவிரல் அல்லது பக்கத்து விரல் பூமியில் படாது போனால் அவள் ஒரு நாளில் பலரை அணையும் விபசாரியாவாள்.”
“ஆ…”
ஒரு பெரிய அலறல். குரல் கொடுப்பவள் மீனாட்சி.
“என்னம்மா, என்ன சப்தம்?” கேட்டபடி வருகிறார். தியேட்டர்காரர் என்று ஊரே அழைக்கும் தியாகாரச செட்டியார்.
“கால்ல ஊறுகாய் ஜாடி விழுந்துடிச்சு” – என்று சமையல்கட்டில் இருந்து நொண்டியபடி வரும் மகளைப் பார்த்து-
“என்ன தாயி, பாத்து ஜோலி பாக்க வாணனாமா?” என்று கரிசனம் காட்டுகிறார்.
“பாத்துத்தான் அப்பு செய்யறேன்; எனக்கென்ன கால்ல போட்டுக்கணுமின்னு ஆசையா?” என்று கேட்பவள் காலில் இப்பொழுது ரத்தக் கசிவு.
“ஐய்யோ தாயி, ரத்தம்…” பதறிப்போய் குனிந்து மகளின் காலுக்கு உடனேயே கட்டுப் போட ஆரம்பிக்கிறார்.
அவளைக் காலை நீட்டி உட்காரச் செய்து பழந்துணி ஒன்றைக் கிழித்து எடுத்து வந்து, கட்டுப்போட வாகாக அந்த காலை தான் பட்டு வேட்டி பரவி நிற்கும் படி மேலேயே எடுத்து வைக்கிறார். மளமளவென்று கட்டு போட்டு முடிச்சுப் போடும்போதுதான் உள்ளங் காலை கவனிக்கிறது அவர் கண்கள்.
“என்ன அப்பு, அப்படி பாக்கறீங்க?”
“ஒண்ணுமில்ல தாயி.. உன் உள்ளங்கால்ல தாமரை பூத்த மாதிரி இருக்குடா..”
“தாமரையா…எதுனா அழுக்கு ஒட்டியிருக்கும்.”
“இல்லடா, ரேகை தாமரைப்பூ மாதிரி ரேகை.”
“இருந்துட்டு போவட்டும் எனக்கென்ன? நான் தான் ஒரு உசுரு விழுங்கியாச்சே?” சலித்தபடி எழுந்து நிற்கத் தொடங்குகிறாள் மீனாட்சி.
அவர் முகத்தில் இப்பொழுது சலனம்.
அவள் அப்படி சொன்னதால் வந்த சலனம்.
அவனையும் அது என்னவோ செய்கிறது.
“மன்னிச்சுக்குங்கப்பா. ஆத்தாவை பொறந்தப்பவே விழுங்குனவள்னு பலர் சொன்னதை கேட்டுக் கேட்டு, எனக்கே என்னைப் பிடிக்கறதில்ல. அதான் அப்படி பேசிப்பிட்டேன்.”
“அட போ ஆத்தா. ஊரு பேசலாம், உறவு பேசலாம். நீ பேசலாமா? நா இதுநாள் வரைல ஒரு வார்த்தை சொல்லியிருப்பேனா?”
“இல்லதான், தப்புதான்”- அவள் கண்ணீரை சிந்தியபடியே அவர் மார்பின்மேல் விழுகிறாள். அவரது கரங்கள் தன்மையுடன் வருடித் தருகின்றன.
பெரிய அந்த செட்டிநாட்டு வீட்டின் மையத்தில் நடக்கும் ரசமான இந்த பாச பரிவர்த்தனையை உள்ளே நுழையும் திருநாவுக்கரசும் பார்க்கிறான்.
செருமி தான் வந்ததைத் தெரிவிக்கிறான்.
“வாங்கய்யா…” தியாகராசர் சப்தம் கேட்டுத் திரும்பி வரவேற்கிறார். ஆனால் மீனாட்சி திடீர் என்று வெட்கப்பட்டு உள்ளோடுகிறாள். என்ன இருந்தாலும் கட்டிக் கொள்ளப் போகிறவன் வந்தால் நாணம் இருக்கும்தானே?
“வாங்க திருநாவு… எங்க இவ்வளவு தூரம்?”
“மோதிரத்துக்கு அளவு வேணும்னு கேட்டுருந்தீங்களாமுல்ல… அதான்.”
“அட, அதுக்கா இவ்வளவு சிரமப்பட்டு வரணும். நூல் பிடிச்சு கொடுத்துவிட்டா நான் பாத்துக்கிட்டு போறேன்.”
மாமனும்,மருமகனும் பேசிக் கொள்வதை மீனாட்சி அறைக் கதவை லேசாகத் திறந்து வைத்துக்கொண்டு திறப்பின் வழியாக பார்த்து ரசிக்கிறாள்.
அவனும் அவ்வப்போது பார்க்கிறான். தியாகராசருக்கும் புரிகிறது.
இவன் அளவு கொடுக்க மட்டும் வரவில்லை.
“சரி சரி…இருந்து சாப்பிட்டு போகலாம். நான் நம்ம மண்டிவரை போயிட்டு வந்துடுறேன்…” என்று சிறுசுகளை தனியே விட்டுவிட்டுக் கோளாறாய் கிளம்புகிறார். இங்கிதமோ?
அவன்.. அதான் திருநாவு.- கமறியபடி, சுற்றிச் சுற்றி பார்க்கிறான். பின் மெல்ல பூனைபோல நடந்து மீனாட்சி நுழைந்த அறைக்குள்ளே எட்டி கால் வைக்கிறான்.
கதவோரமாக அவள்.
“கழுத… இங்க ஒளிஞ்சா விட்ருவேனாக்கும்?”
“தெரியும் தேடி வருவீங்கன்னு… மோதிரத்துக்கு அளவு கொடுக்க வந்த முகரையைப் பாரு!”
“ஏன், இந்த முகரைக்கு என்ன.. மணி பர்ஸாட்டம் வாய வெச்சுகிட்டு கிண்டலோ?” பேச்சோடு கதவை சட்டென்று மூடி அவள் உதட்டை தன் உதட்டாலே நெருக்குகிறான்.
“வேணாம்..வேணாம், கத்திப்புடுவேன்.” ஊஹும், அவளால் முடியாமல் போகிறது. அவன் மூழ்கி முத்தெடுத்து விடுகிறான் அவள் கூசிப் போகிறாள்.
அவன் இப்பொழுது அவள் கரங்களை இறுக்கிப் பற்றி அதில் எதையோ திணிக்கிறான். அவள் பார்க்கிறாள். ஒரு தங்கச் சங்கிலி,
“என்ன இது?”
“சங்கிலி மீனா… ஒம்பது பவுனு, வெச்சுக்க. நான் கொடுத்ததா தெரியவேண்டாம். அப்புறமா மாமா வந்த பிறகு அவர் கிட்ட பக்குவமா சொல்லிக் கொடுத்துடு..”
அவள் கண் கலங்குகிறாள்.
“கலங்காதே…இப்ப என்ன, நாளைக்கு நீதானே போட்டுகிட்டு வரப்போறே. என் ஊட்டுக்குத்தானே வரப்போகுது?”
“இருந்தாலும் அப்பு ரொம்ப சங்கடப்படுது பேசுனபடி அம்பது பவுன் போடக்கூட இப்ப தெம்பில்லாம போச்சேன்னு ஒரே புலம்பல்தான்.”
“அதான், நானே இப்படிக் கொடுத்து சரிப் படுத்திட்டேன்ல. அப்பால மாமா கொடுத்தா வேண்டாம்னா சொல்லப்போறேன்.”
“நிச்சயம் கொடுக்கும்… தியேட்டரை ரிப்பேர் பார்த்தாச்சு. புதுப்படமா போடப்போறாங்க. நல்லா வசூல். அப்பா சொல்லிகிட்டுதான் இருக்காரு.”
“பொறவென்ன?” அவன் திரும்ப இதழோடு இணைய முயல்கிறான்.
“மொத ராத்திரிக்கு கொஞ்சம் மிச்சமிருக்கட்டும்.” அவள் வெட்கப்பட்டுக்கொண்டு விலகி ஓடுகிறாள். அப்பொழுது காலில் கட்டைப் பார்க்கிறான்.
“ஏய், என்னா கட்டு?”
“ஒண்ணுமில்ல. ஊறுகா சாடி உழுந்துடிச்சு.”
உடனே குனிந்து காலைப் பிடிக்கிறான்.
“விடுங்க!” அவள் வெட்கித் திமிறுகிறாள். உயர்த்தி அடிபட்ட பாகம் பார்க்க விழைபவன் கண்களிலும் படுகிறது அந்த தாமரைப்பூ ரேகை.
“ஹை… தாமரைப்பூ.. உன் பாதத்துல.”
“ரொம்ப விசேஷம் மீனா.”
ஆமாம். அதான் கட்டிக்க போறவரே திருட்டுத் தனமா தங்கம் தந்து அட்ஜஸ் பண்றாரே, விசேஷம் தான். பொறவென்ன?”
“இல்ல மீனா… எங்க கொள்ளுப்பாட்டி ஒருத்திக்கு இப்படி ரேகை இருந்திச்சாம். அது தங்கத்தட்டுலேதான் சாப்புடுமாம். தங்கக்கட்டில்லதான் தூங்குமாம்…”
“கதை எல்லாம் பழங்கதை”
“ஏன்…உன் வரைல அப்படி நடக்காதுங்கிறியா?”
“போதும் சாமி, நீங்க கிளம்புங்க முதல்ல. கனவெல்லாம் பொறவு காணலாம்…”
அவள் அவனை உரிமையோடு இடுப்பில் கை வைத்து தள்ளிவிடுகிறாள். அவனும் சிரித்தபடி கிளம்பு கிறான்.
அத்தியாயம்-14
”மச்சமானது ஒரு பெண்ணுக்கு தோள் மேலும், மூக்கின் மேலும், முகத்தின் மேலும் இருந்தாலும், கண்களிடமாக கூடியிருந்தாலும். இக்குறிகள் இடது பக்கம்இருப்பின் செல்வமும். அதுவே வலது பக்க மும் இருப்பின் அவள் போகுமிடம் நாசமும் ஆகும்.”
சைக்கிள் வந்து வாசலில் நிற்பது அதன் கீச்சு மூச்சு சப்தத்தில் தெரிகிறது. எட்டிப் பார்க்கிறாள் முனி ரத்னம். படப்பெட்டியுடன் கச்சிதமாக பாஸ்கரதாஸ்.
கடிகாரம் சரியாக ஒண்ணேமுக்காலைக் காட்டுகிறது.
“சபாஷ்டா தம்பி… இப்படித்தான் இருக்கணும்…” என்று முனிரத்னம் சொல்ல, பெட்டியை வண்டியை விட்டு இறக்கியபடி உள்நுழையும் பாஸ்கரதாஸ் ஆறாய் வடியும் வியர்வையை வழிக்கிறான் முதற்காரியமாக…
முனிரத்னம் பார்வை உடனடியாக பெட்டியைத் திறந்து பார்க்கிறது. மேலாக இரண்டு மூன்று பிலிம் சுருள் டப்பாக்கள். உள்ளே பாளம் பாளமாக தங்கக் கட்டிகள்.
முனிரத்னம் கண்ணிரண்டும் அதைப் பார்த்து விளக்காட்டம் ஜொலிக்கிறது.
“வந்தாச்சு.என் செல்வம் என்கிட்ட வந்தாச்சு..” அவனிடம் எக்காளமான உற்சாகப் பீறல்.
“ஆமாம்… அக்கா மாமால்லாம் எங்க?”
“இதை பாதுகாக்க நான் என்ன பாடுபட்டுருப்பேன். வந்திடிச்சி… வந்துடிச்சி… இதை கொண்டு இனி சிங்கப்பூர் மலேசியான்னு பறந்துட வேண்டியதுதான்.’
“கேக்கறேன்ல..அக்கா மாமா எங்கே?’
“என்ன கேட்டே… அக்கா மாமாவா? அவங்க ஆஸ்பத்திரிக்கு போயிருக்காங்க.”
“ஆஸ்பத்திரிக்கா?”
“ஆமா… உங்கக்கா பயத்துல மிரண்டு கிடந்தாள்ல. பெருசா வாந்தி எடுத்து ரகளை பண்ணுனா. உன் மாமனும் கால்ல விழுந்தான். அப்ப பாத்து என் சகா உருளி வந்தான். அவனோடதுணையோட ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வெச்சிருக்கேன்.”
“உருளியா வந்தான்… மாது வரலை?” பாஸ்கரதாஸின் வாயிலிருந்து பட்டென்று வெளிவந்த அந்தப் பெயர் முனிரத்னம் பொட்டில் பட்டுத் தெறித்து அவனைக் கூர்மையாக்குகிறது.
“மாதுவா… உனக்கெப்படி மாதுவைத் தெரியும்?”
“அது… அது… எப்ப மாதுன்னு சொன்னேன்! மாதுன்னா சொன்னேன்..?”
“ஏய், பேச்ச மாத்தாதே – உனக்கெப்படி என் கூட்டாளி மாதுவைத் தெரியும்?” முனிரத்னம் படப் பெட்டியை ஓரமாக தள்ளி விட்டபடி எழுந்திருப்பதில் ஒரு புலியைப் பிடிக்கப் போகும் முகாந்திரம்.
“அது… அது…”
”உண்மையை பேசு. இல்ல…” முனிரத்னம் ஒரு தோட்டா மட்டும் மிச்சமிருக்கும் துப்பாக்கியை இப்பொழுது பாஸ்கரதாஸ் எதிரில் நீட்டுகிறான்.
“சொல்லு… கைரேகை பலன் சொல்றேன்னு ஒரு புத்தகத்தை படிச்சுட்டு வார்டர்கிட்ட இருந்து என் வரை அவுத்து விட்டுருக்கியே பொய்யுங்க. அதையும் சேர்த்துச் சொல்லு.”
“பொய்யா அது… அது…”
“எல்லாம் தெரிஞ்சு போச்சுடா. நீ எந்த புத்தகத்தை படிச்சுட்டு ஒட்னியோ அதையேதான் நானும் படிச்சேன். அதுல எழுதியிருக்கிறது நேர்மாறா என் கைல சில ரேகைங்க இருக்கறதையும் பாத்தேன். அப்பவே சந்தேகப்பட்டேன். ஆனா நீ ஆயுள் எனக்கு தொண்ணூறு, நூறுன்னு சொன்னே… அது உண்மை. மத்ததுதான் பொய். ஆமா நீ உண்மைல யாரு?”
“நா..நான் இரும்பாடியோட ஆள்.”
“அவன் எனக்கு சிநேகிதனாச்சே?”
“அது வெளில். உள்ளுக்குள்ள நீ வெச்சிருக்கற தங்கத்த தெரிஞ்சுக்க என்னை ஒரு கைரேகை ஜோசியக்காரனா ஜெயிலுக்கு அனுப்புனான். அப்படியே உன்னைத் தப்புவிக்க செய்த ஏற்பாட்டையும் சொன்னான்.
தப்பிக்கற நீ, எங்க அக்கா வீட்ல தங்கினாதான் எனக்கு வசதியா இருக்கும்னு நான்தான் அவன்கிட்ட சொன்னேன். அதே போல துப்பாக்கிய தர வந்த பாதிரியார் வேஷம் போட்ட இடும்பன் மூலமா நீ இந்த இடத்துக்கு வந்து பதுங்கினே. திட்டமிட்டபடி எல்லாம் சரியா நடந்துச்சு. போலீசும் நான் கைரேகை பார்த்து சொன்ன மாதிரி நடந்துட்டதால என்கிட்ட வந்தா அவங்கள திசை திருப்பிவிட தயாராயிருந்தேன். அப்படியே மூணாம் மனுஷன் மாதிரி உன்கிட்ட வந்து ரேகை பலன் சொல்லியும் ஒட்டிக்கிட்டேன்.”
“எதுக்கு?”
“தங்கம் இருக்கிற இடத்தை தெரிஞ்சுக்கதான்.”
“ஆகக்கூடி, காப்பாத்தி கூட்டிக்கிட்டு போக வேற ஆளுங்க. ரகசியத்தை தெரிஞ்சுக்க நீ, புத்திசாலிதான். ஆமா உனக்கு உன் ரேகை பத்தி ஏதாவது தெரியுமா?”
“தெரியும் எனக்கு. எனக்கு…”
“என்னா உனக்கு? உனக்கு எவ்வளவு ஆயுசு?”
“அது.. அது… எனக்கு எண்பதுக்கு மேல.”
“எங்க, நீட்டு நான் பாக்கறேன்.”
முனிரத்னம் நடுங்கியபடி நிற்கும் பாஸ்கரதாஸ் கரத்தை இழுத்துப் பார்க்கிறான்.
“அட, ஆயுள் ரேகை திடமா நல்லாவே இருக்கு. அப்ப நான் உன்னை சுட்டாகூட நீ பொழச்சிக்குவேன்னு சொல்லு.”
அடாவடி லொள்ளாக பேசுபவனை பாஸ்கரதாஸ் மாட்டிக்கொண்ட அவஸ்தையோடு பார்த்து மிடறு விழுங்குகிறான்.
“அதான் உன் தங்கத்தை ஒழுங்கா உன்கிட்டயே ஒப்படைச்சுட்டேனே, உண்மையையும் சொல்லிட்டேனே என்னை ஒண்ணும் பண்ணிடாதே.”
“அது சரி… அந்த போலீஸ்காரங்ககிட்ட போய் என்ன சொல்லிட்டு வந்தே? அங்கேயும் ஏதாவது தகிடு வேலை..”
“சத்தியமா இல்ல… உன்னை இரும்பாடிகிட்ட. சேக்கணும். அதே சமயம் உன் தங்கம் பத்தி தெரிஞ்சுக்கணும். தெரிஞ்சுகிட்ட பிறகு அவங்களோட சேர்ந்து உன்னை…”
“என்னை..”
”உன்னை… உன்னை..”
“கொன்னுடணும்னு சொல்லு.”
“…”
“வாயத் திறந்து சொல்லுடா நாயே. அதானே…?”
“அதேதான்….”
“துரோகிங்களா.. இவனுக்கு பேரெல்லாம் நண்பன். தூத்தெறி… போலீசைவிட மோசமா இருக்குதேடா இவனுங்க எண்ணம்?”
கேட்ட ஜோரில் ஆவேசம் குறையாதபடி அவனது கைத்துப்பாக்கி பாஸ்கரதாஸின் நெற்றிக்கு நேரே நீண்டு குண்டை வெளியே உமிழ… அந்த ஈயப்பறவையும் ஒளி வேகத்தில் அவனது பொட்டில்லாத நெற்றியை சப்தத் தோடும், புகையோடும் சேர்ந்து தாக்க, மரம்போல சரிந்து விழத்தொடங்குகிறான் பாஸ்கரதாஸ்.
“டோண்ட் மூவ் முனிரத்னம்’ – பாஸ்கரதாஸின் சப்தத்தைத் தொடர்ந்து வீட்டுக்கு வெளியிலிருந்து ஒரு குரல். ஒரு மஃப்டி சி.ஐ.டி போலீஸ்காரர் எட்டிப்பார்த்த நிலையில் துப்பாக்கியோடு..
முனிரத்னம் மறுநொடி கதவை படாரென சாத்தி விட்டு பின் வழியாக ஓடப் பார்க்கிறான். ஏற்கனவே அடிபட்ட காலின் வலி பின்னி எடுக்க, கிணற்றுத்திட்டை கூட தாண்ட முடியவில்லை. தோள்பட்டையைத் தாக்குகிறது ஒரு தோட்டா.
சரியத் தொடங்குகிறது அவனது பருத்த தேகம். அதன் மேலெல்லாம் அடுத்தடுத்து தோட்டாக்களின் பாய்ச்சல்.
அக்கம் பக்கம் மாடிகளில் எல்லாம் சப்தத்தால் திரண்டு முடங்கும் கூட்டம்.
கிணற்றை ஒட்டிய தரைப்பரப்பில் முனிரத்னத்தின் ரத்தம் பாயும் வலித்துடிப்பு.
கடிகாரம் மணி இரண்டாகிறது.
சரியாக இரவு இரண்டு மணிக்கு உள்ளே பதுங்க நுழைந்தவன், அடுத்த பனிரெண்டாவது மணிப் பொழுதில் அதே இடத்தில் பிணமாக…
செய்தி பறக்கிறது.
அன்வர் ஓடி வருகிறார்.
சுட்ட சி.ஐ.டி. போலீஸை கட்டிப்பிடித்து மகிழ்கிறார்.
“டிபார்ட்மென்ட் மானத்த காப்பாத்திட்டோம். ஆனா தங்கம்தான் எங்க வெச்சான்னே கடைசிவரை தெரியல.”- வீட்டுக்குள் நுழைந்து தங்கமுள்ள படப் பெட்டி மேல் ஒரு காலை வைத்து நின்றபடியே ஆதங்கப் படுகிறார்.
“மங்கம்மாவை தூண்டில வெச்சு நிறைய சாதிக்கப் பார்த்தேன். எல்லாம் வீணாப் போச்சு. இந்த ஜோசியகாரன் சொன்னதும் பொய்யாப் போச்சு… இவனே இப்ப உயிரோட இல்லையே..” – பாஸ்கரதாஸ் பிணத்தை குனிந்து பார்த்தபடி ஆதங்கத்தை தொடருகிறார்.
வாசல் பக்கமிருந்து ‘தம்பி’ என்று ஒரு அலறல். நுழைந்துகொண்டிருக்கிறாள் கனகம். கூடவே ராமலிங்கம். துணைக்கு வந்த உருளி விகார முகத்தோடு சைலன்டாக நழுவப் பார்க்கிறான்.
நழுவும் அந்த விதமே ஒரு போலீஸ்காரரை அவனை எகிறிப் பிடிக்க வைக்கிறது.
”யார்டா நீ, எதுக்கு ஓசைப்படாம ஓடுறே?”
பளாரென்று ஒரு அறை… பின் கேள்வி.
“ஐயா, நான்… நான் ராமலிங்கத்தின் மாமன்.”
உறவைச் சொல்லி தப்பிக்கப் பார்த்தவனைப் பார்த்து ராமலிங்கம் கத்துகிறான்.
“பொய்யி… அவ்வளவும் பொய்யி. அவன் பேர் உருளி. முனிரத்னம் கூட்டத்தை சேர்ந்தவன்…”
அடுத்த வினாடியே உருக்குப் போன்ற பல போலீஸ் கரங்கள் அவனை இறுக்கிப் பிடிக்க,
“மூஞ்சியில் வண்ட விட்டு கடிக்கச் செய்து, வீங்க வெச்சுகிட்டு போலீசை ஏமாத்தறாங்க. முனிரத்னமும் அப்படி செய்துகிட்டான். ஆனா என்ன நடந்துச்சுன்னு தெரியலியே… என் மச்சினனும் செத்து, அவனும் செத்து கிடக்கறாங்களே..”
கதறுகிறான் ராமலிங்கம். அன்வர் திகைப்போடு அவன் முகத்தை உற்றுப் பார்க்கிறார்.
இந்த கள்வர்களுக்குத்தான் எத்தனை எத்தனை உபாயங்கள்? உருளி உருட்டி எடுக்கப்பட, இரும்பாடி மாது எல்லாம் ஒளிந்திருக்கும் இடம் தெரியவருகிறது. முனிரத்னத்தைத் தப்பவிட்டதில் நேரிட்ட தோல்வியை மொத்தக் கூட்டத்தையும் பிடிக்கப்போவதில் போலீஸ் சமன் செய்கிறது.
அன்வர் அடுத்த நொடியே கஞ்சமலைக்குக் குறி வைத்து கிளம்புகிறார்.
அத்தியாயம்-15
“நாவின் நடுவில் கரையாத மஞ்சள் நிறமும். அதனூடே வேலைப் போன்ற பிளவுமுடையவர்கள் சொல்வதெல்லாம் நடக்கும். அல்லாதவர்கள் பிரம்ம ரகசியத்தையே காதால் கேட்டு. கண்ணால் பார்த்து. மெய்யால் உணர்ந்து சொன்னாலும் அந்தப் பலன் மாறிப் போகும்.”
வீட்டைக் காலி செய்துகொண்டிருக்கிறான் ராமலிங்கம். புயல் காற்றில் வீசி எறியப்பட்ட மாதிரி களைத்தும் – கலைந்தும் தெரிகிறான். அவனுக்கு மேல் கனகம்.
வாசலில் வண்டி மாடு நிற்கிறது. வண்டியில் தட்டு முட்டுக்கள் ஏறிக் கொண்டிருக்கின்றன படப்பெட்டிகள் மட்டும் தனியாக ஜெய்பாரத் எனும் தியேட்டருக்கு சொந்தமான விளம்பர வண்டியில் ஏறுகிறது.
பக்கத்து வீட்டுக்காரர் நைச்சியமாகக் கேட்கிறார். “நடந்தது நடந்து போச்சுன்னு இருக்காம காலி பண்றியேப்பா?’
“முடியாது சார்… ஒரு பொணத்துக்கு இரண்டு பொணம் விழுந்த வீடு. என்னால இனி இங்க இருக்க முடியாது. கனகத்துக்கு அந்த கிணத்த பார்த்தாலே பயமா இருக்குது. குழந்தை நல்லா பொறக்க வேண்டாங்களா?”
“சரி, எங்கே போறே?”
“அயோத்யா பட்டணத்துக்கு என் மாமியார் வூட்டுக்கு”
“இந்த படப்பொட்டிங்க உங்க தியேட்டருக்கே போவுதாட்டம் இருக்குதே..?”
“ஆமாங்க… பழைய படங்க ஒரு நாயும் வாங்கி ஓட்டமாட்டேங்கறாங்க. கடைசில என் முதலாளி கால்ல விழுந்து கெஞ்சுனேன். அஞ்சாயிரம் தந்துட்டு மொத்தமா எடுத்துக்கிட்டார்.”
“அப்ப ஜெய் பாரத்ல பக்த குசேலா ஓடும்னு சொல்லு..”
“யார் கண்டா..ஓட்றாரோ இல்ல மூலைல என்னை மாறி தூக்கிப் போடப் போறாரோ?”
அலுத்துக்கொண்டே அனைவரிடமும் சொல்லிக் கொள்கிறான்.
அவனது சாமான்களடங்கிய அந்த வண்டி ஓடத் தொடங்குகிறது. படப்பெட்டி வண்டியும்.
தியாகராயர் வீட்டு முன் நிற்கும் வண்டியில் இருந்து பெட்டிகள் இறங்குகின்றன.
தலையில் உருமா கட்டிய வண்டிக்காரன் ஒவ்வொரு பெட்டியாக சுமந்து உள்ளே எடுத்து வருகிறான். “தாயி, எங்க வைக்க?” மீனாட்சியிடம் கேட்கிறான்.
“ஐய்யா… என்ன இது, படப்பொட்டிங்களா? இங்க கொண்டு வந்துகிட்டு…? தியேட்டருக்கு கொண்டு போங்க.”
“இல்லதாயி…அப்புதான் வீட்ல இறக்க சொன் னாரு. அம்புட்டும் பழைய படமுல்ல…”
“என்னா படம்?”
“ஆரு கண்டா. என் தாத்தன் காலத்து படம். அந்த ஆபரேட்டர் பய கால்ல விழுந்தான்னு இந்த தண்டத்த வாங்கிட்டார்போல… படம் ஓடி காசு தருதோ இல்லியோ, பொட்டிங்க நல்லா திடமா இருக்கு. உப்பு புளி போட்டு வெச்சுக்கலாம்.”
சலித்துக்கொண்டே பெட்டியை இறக்க இடம் பார்க்க, மீனாட்சி தட்டுமுட்டு அறைக்கு வழி காட்டுகிறாள்.
இருண்ட அறை… சுவிட்சைத்தட்ட, அதில் நாற்பது வாட்ஸ் பல்பு அழுதபடி எரிவதில் நான்கைந்து எலிகள் குறுக்கும் நெடுக்கும் ஓடி காபரா செய்கின்றன.
சட்டு வாசம்.
உள்ளே ஓரமாக பெட்டிகளை இறக்கி அடுக்குகிறான்.
“வரட்டா தாயி…”
கும்பிடோடு கிளம்புகிறான்
“வரட்டா தாயி…” திரும்ப, அதே குரல். நிமிர்ந்தால் “உள்ளே வரட்டா தாயி…” என்று கேட்டபடி திருநாவுக்கரசு.
“நீங்கதானா?” வெட்கத்தோடு தழைபவளை பார்த்துக்கொண்டே உள்ளே நுழைபவன்.
“என்ன, ஒரே பொட்டி பொட்டியா வந்து எறங்குன மாதிரி தெரியுதே” என்று கேட்க,
“ஆமாம்… நான் மகாராணி இல்லையா… அதான் பொட்டி பொட்டியா தங்கம், வைரம் வந்து இறங்கியிருக்கு…” என்று உண்மை தெரியாமல் கிண்டல் செய்கிறாள் மீனாட்சி.
”எங்க இருந்து?”
“வேற எங்கேருந்து. எல்லாம் தேவலோகத்துல இருந்துதான்.”
“அப்படியாக்கும்… எங்க பார்ப்போம்?”
உள்ளே எட்டிப் பார்க்கிறான் அவன்.
“எல்லாம் திராப பிடிச்ச பழைய படங்க. இங்க கல்யாண செலவுக்கே பணமில்லாதப்ப எங்கப்பா ஆபரேட்டர் அழுது கால்ல வுழுந்தான்னு இந்த படப் பொட்டிங்கள வாங்கியிருக்காரு. இந்த தகரத்துக்கு அஞ்சாயிரம் வேற…” பெட்டியை திறக்கிறாள்.
முதலிரண்டு ரீல் டப்பாக்களுக்கு இடையே ஏதோ மஞ்சளாக மின்னுவதுபோல் இருக்க, டப்பாவை வெளியே எடுக்கிறாள். கட்டிக்கட்டியாக பாளம் பாளமாக தங்கம். கூடவே அந்த கைரேகை சாஸ்திர பழைய புத்தகம். ராமலிங்கம் போகிற போக்கில் தூக்கி உள்ளே போட்டது விரிந்து வெளியே விழுகிறது.
“தாமரைப் பாதம் நாடிவரும் தங்கமதும், பூர்வ ஜென்மத்து செய்த புண்ணியத்தால் கிட்டுவதாம்.” என்று அதில் வரிகள். இங்கே நிஜமாகிப்போன சாஸ்திரம் பாஸ்கரதாஸ் முனிரத்னம் வரையில் பொய்யாகிவிட்டது. ஒரு வேளை எல்லாமே தற்செயலோ?
எது நிஜம்?
(முற்றும்)
– சொர்ணரேகை (நாவல்), முதற் பதிப்பு: 1999, திருமகள் நிலையம், சென்னை.