(1999ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15
அத்தியாயம்-10
“உள்ளங்கையில் தேவாலயம் போலும். தெப்பம் போலும் வஜ்ஜிராயுதம் போலும் ரேகைகள் தோற்றப் படுமாகில் அவன் துஷ்டன், துர்நடத்தையுள்ளவன்- கோபியாகவும் இருப்பான். மீன் வாலைப்போல நடு ரேகையிருந்தால் மிகுந்த வித்தைக்காரனாக துணிச்சலுள்ளவன் ஆவான்…”
அன்வரிடம் தீவிர சிந்தனை. எதிரில் பாஸ்கரதாஸ்.
“நீங்க சொன்ன மாதிரியே நடந்துடுச்சு. முனிரத்னம் தப்பிட்டான். பெருமாள் சுட்டுக் கொல்லப் பட்டுட்டாருன்ன உடனேயே என் மனைவியும் உங்க கைரேகை ஜோசியம் பத்திதான் சொன்னா… ரியலி இட் ஈஸ் ஏ மிராகிள்…”
“மிராகிள்லாம் இல்ல சார்… ஒரு ஊருக்கு வரை படம் இருக்கற மாதிரி நம்ம வாழ்க்கைக்கான வரைபடமா ஆண்டவன் நம்ம கையையே கொடுத்துருக்கான். தன் கையே தனக்கு உதவிங்கற பழமொழிக்கு இரண்டு அர்த்தம். ஒண்ணு உழைச்சுப் பிழை. அடுத்தது கையிலேயே உன் வாழ்க்கை எப்படிப்பட்டதுன்னு தெளிவா சொல்லப்பட்டிருக்கு. அத பார்த்து தெரிஞ்சு கிட்டு அதன்படி நடந்துக்கோன்னு அர்த்தம்…”
“அப்ப அதுலே என்ன இருக்கோ… அதுதானா?”
“அதுவேதான். மாத்தவே முடியாது.”
“அப்படின்னா, முனிரத்னத்தை பிடிச்சு தூக்குல போட முடியாதுங்கறீங்களா? நீங்க சொன்ன மாதிரி அவனுக்கு ஆயுள் தொண்ணூறுக்கு மேலதானா?”
“ஆ…ஆமாம்…”
“தயங்கின மாதிரி தெரிஞ்சுச்சே.”
“ஒண்ணுமில்லே. எங்க இந்த கேஸ்ல என்னை இழுத்து விட்டுடுவீங்களோன்னு கொஞ்சம் பயந்துட்டேன்.”
“பயப்பட வேண்டாம். இந்த கேஸ் என் கேரியருக்கு விடப்பட்ட சவால். எனக்கு உண்மை தெரியணும். குறிப்பா கடத்திவரப்பட்ட அந்த தங்கங்கள் வசப்படணும்.”
“கடத்தி வரப்பட்ட தங்கங்களா?”
“ஆமாம்… முனிரத்னம் தங்கக் கடத்தல் செய்யறதுல பேர்போன கில்லாடி. கடைசி கடைசியா ஒரு பம்பாய் பார்ட்டிகிட்ட பத்துகிலோ தங்கம், ஐ மீன், பத்தாயிரம் கிராம் கடத்தியிருக்கிறான். அதேபோல கேரளாவுல இருந்தும் ஒரு பதினஞ்சு கிலோ தங்கம் கடத்தியிருக்கான்.
இந்த இருபத்தி ஐந்து கிலோ தங்கத்தை கொடுத்தவங்களை, போலீஸ் சேஸ் பண்ணி புடிச்சுட்டாங்க. ஆனா, முனிரத்னத்தை மட்டும்தான் பிடிக்க முடியல.
பிறகு ஒரு கொலை வழக்குல மாட்டினான். அவன் கொலை குற்றத்தை மட்டும்தான் நிரூபிக்க முடிஞ்தது. இந்த கடத்தல் குற்றசாட்டுகளை நிரூபிக்க கோர்ட்ல இவன்தான் எங்ககிட்ட தங்கம் வாங்கின் நபர்னு சொல்லவேண்டிய குரூப் அப்படியே பல்டி அடிச்சு இவன் இல்லைன்னுட்டாங்க. அந்த குரூப் முனிரத்னம் ஆட்களுக்கு பயந்து அப்படி சொல்லிட்டாங்க. வழக்கும் முடிஞ்சு முனிரத்னத்துக்கு தூக்குன்னு தீர்ப்பாயிடிச்சு. எங்களால மூணு வருஷம் வாய்தாமேல வாய்தா வாங்க முடிஞ்சது. அதுக்கு மேல ஒண்ணும் பண்ண முடியல. சின்ன இம்ப்ரூவ்மெண்ட்கூட அந்த கேஸ்ல இல்ல.”
அன்வர் பெரிதாக வருந்தி பெருமூச்சு விட்டு, “இன்னிக்கும் எங்க மேலதிகாரிங்க காறி துப்பிட்டாங்க. போய் முனிரத்னத்துக்கான தூக்குல எங்களை தொங்கச் சொல்லிட்டாங்க. எனக்கு உயிரே போயிடுச்சு. அப்ப கூட உங்களத்தான் நினைச்சிகிட்டேன்.”
“அப்படின்னா…”
“என் கைரேகையை பார்த்து, நான் சக்ஸஸ் பண்ணுவேனான்னு சொல்லணும். நீங்க என்ன சொன்னாலும் கேட்டு நடக்கறேன்.” அன்வர் சொன்னபடி தன் கரத்தை பாஸ்கரதாஸ் எதிரில் நீட்டுகிறார். சற்று குறுஞ் சிரிப்போடு தன் சட்டை பாக்கெட்டில் இருந்து லென்ஸ் ஒன்றை எடுத்தவன், அவரது கையை உற்றுப் பார்க்க ஆரம்பிக்கிறான்.
பலன்களையும் சொல்லத் தொடங்குகிறான்.
“சுக்ரமேட்லே கருப்பு புள்ளி இதனாலே ஒரு பெண்ணாலே உங்களுக்கு சிரமம் இருக்கணுமே?”
அதிர்கிறார் அன்வர். “மேல சொல்லுங்க..”
“அது உண்மையா?”
“உண்மை..”
”புள்ளி கரையற நிலைல இருக்கு. அந்தப் பெண் உங்களை விட்டுப் போற நாள் வந்தாச்சு. போனாதான் உங்களுக்கும் நல்லது.”
“அப்புறம்?”
“புதன் கிரகம் வறண்டு இருக்கு. உங்க எந்த முயற்சியும் இப்ப ஜெயிக்காது.”
“உம்…அப்புறம்.”
“சந்திர மேட்டுல வலை ரேகை இருக்கு. சூலக்குறியும் தெரியுது. களங்கம் வரும். துடைக்கிறது கஷ்டம்.”
“ரொம்ப பயமுறுத்தறீங்களே..”
“நானில்லை… உங்க கைரேகை…”
“சரி, சொல்லுங்க…”
“இன்னியில இருந்து தயவுசெய்து லீவு போட்டுடுங்க. இன்னும் அறுபத்தி மூணுநாள் கழிச்சு இந்த கேஸ்ல இறங்க பாருங்க…”
“நடுவுல இறங்கினா?”
“நிச்சயம் மரணம். ஆயுள் ரேகை அறுபட்ட நிலைல இருக்கு. அறுபத்தி மூணு நாள் சும்மா இருந்தா அறுபடாம அது தொடர வாய்ப்பு இருக்கு. இல்லைன்னா நிச்சயம் அறுந்து, இந்த கேஸ்ல நீங்க மரணிக்கறது நிச்சயம்.”
பாஸ்கரதாஸின் மிரட்டலைப் போன்ற பேச்சைக் கேட்டு அன்வர் முகம் சோபையிழக்கிறது.
பல வினாடிகள் மெளனத்தின் ஆதிக்கம். முகத்தில் அங்கங்கே வியர்வை கொப்பளங்கள்.
”சார்…” மௌனத்தை உடைக்கிறது பாஸ்கரதாஸ்
“ஒரு முக்கியமான உண்மை…”
“என்ன?”
“இந்த கேஸ்ல ஒரு பெண்தான் பெரிய சிக்கலே. அவங்க உங்க கிட்ட வந்ததுல இருந்துதான் எல்லா பிச்சினையும் ஆரம்பமாச்சு. அவங்களை அனுப்பிட்டாலே நீங்க பாதி தேறிடலாம்.”
“…”
“இப்படி பேசாம இருந்தா எப்படி? அந்தப் பெண் பேர்கூட ‘ம’ல ஆரம்பிக்கும்.”
பாஸ்கரதாஸ் ‘ம’ என்ற எழுத்தைச் சொன்னதில் அன்வரிடம் தீயைத் தொட்ட அதிர்ச்சி.
“அது எப்படி… ரேகைல எழுத்தெல்லாம் கூட சொல்ல முடியும்?”
“முடியும். மனசை ஒருமுகப்படுத்தி தீர்க்கமா யோசிச்சா, மனசுல பட்பட்டுன்னு தோணும், இதுக்காக தான் நாங்க செவ்வா, வெள்ளியில் உபவாசம்லாம் இருப்போம். என்னதான் வரி பலனை சொன்னாலும் சொல் பலிதமும் ஒண்ணு சேரணும். அப்பதான் முழுப் பலன்.”
“அப்ப என்னதான் செய்யட்டும்?”
“என்னதான் மேலதிகாரிங்க பிரஷர் கொடுத்தாலும். முனிரத்னத்தை இப்ப முழு மூச்சா தேடாதீங்க. பயங்கா ஆபத்து அது. தேடுகிற மாதிரி பாவ்லா செய்யுங்க. உங்களுக்கு வெற்றின்னு ஒண்ணு வரணும்னா, அது கிழக்கு திசை மூலம்தான். ஆகையால் நாளை அப்படி இப்படி கடத்திட்டு போங்க. அறுபத்தி மூணு நாள் கழிச்சு முழு மூச்சா இறக்குங்க. அவனை பிடிச்சுடலாம்”
“சரி..” பெருமூச்சோடு அவர் தலை அசைகிறது
“அந்த ‘மா’ என்கிற எழுத்துல ஆரம்பிக்கற பெண் யார் சார்…”
“ம….மங்கம்மா..முனிரத்னம் காதலி”
“ஐய்யோ! முதல்ல அந்த கழுதையை அவுத்து உடுங்க. அவன் தேடிகிட்டு இங்கேயே வந்துரப் போறான்” – அவன் கருத்துக்கு அன்வர் பலத்த மௌனத்தை பதிலாக்குகிறார்.
“சரி, உங்க இஷ்டம். நான் கிளம்பறேன். ஆமாம், இப்ப அவங்க எங்க இருக்காங்க? போலீஸ் லாக்கப் புலயா?”
“இல்ல… அவளை நான் என் பர்சனல் கேர்ல பிடிச்சு வெச்சுருக்கேன். போலீஸ் பிடியில இருந்தா சில விஷயங்கள் சாத்தியமில்ல. என் பிடியில்தான் இருக்கா. உண்மையை சொல்லு அவனை விட்டுடுறேன். உன்னையும் தப்பிக்க விட்றேன்னு நான் சொல்ல இப்ப வாய்ப்பிருக்கு. அதை இழக்கணுமா நான்…?”
“அதுக்கு யோசிச்சா உயிரையே இழக்கணும் சார் நீங்க…”
திரும்ப மிரட்டும் அவனை ஒரு தினுசாக பார்ப்பவர் திரும்ப சிந்தனை வசப்படுகிறார். நெற்றியை தேய்த்துக் கொள்கிறார்.
“சார்… உங்க நன்மைக்காகத்தான் நான் சொல்லி யிருக்கேன். அவங்கள விட்ருங்க. இல்லேன்னா இரண்டு விதத்துல உங்களுக்கு ஆபத்து. ஒண்ணு முனிரத்னத்தால, அடுத்து உங்க டிபார்ட்மென்ட்டால… ஏன் மங்கம்மாவை லாக்கப்புல வெச்சு விசாரிக்காம உங்க பர்சனல் கஸ்டடியில் வெச்சிருந்தீங்க?
மங்கம்மாவை வெச்சு முனிரத்னத்தை பிளாக் மெயில் பண்ணவான்னு உங்களையே திருப்புவாங்க…. அவ்வளவு ஏன், முனிரத்னம் தப்பிக்க கூட நீங்க உதவி செய்துருக்கலாம்கற எண்ணமும் வரலாம்…”
பாஸ்கரதாஸ் ரொம்பவும்தான் மிரட்டுகிறான்.
“ஓகே…ஓகே… அவளை நான் விட்டுடறேன். ஆனா அதை எப்படி முனிரத்னம் தெரிஞ்சுக்க முடியும்? அங்கதான் எனக்கு குழப்பமே..”
“கவலைப்படாதீங்க…முனிரத்னம் என்னை பாக்க வரப்போறதா ஒரு தகவல் வந்துருக்கு. அவனுக்கு ஆயுள் அதிகம்னு நான் பலன் சொன்னது அவன் காதுக்கு போனதாகவும், அதனால் அவன் மேலும் பலன் தெரிஞ்சுக்க என்ன பாக்க வருவான்னும் தகவல்..”
“இஸ் இட்.இதை ஏன் நீங்க முன்னையே சொல்லலை.”
“தகவல்தானே சார்…அது நிஜமாவும் இருக்கலாம், பொய்யாவும் இருக்கலாம். நான் அவசரப்பட விரும்பலை.”
“அப்படி வந்தா அவனை நீங்க விடக்கூடாது பாஸ்கரதாஸ். உடனே எனக்கு தகவல் தரணும்” – பதைபதைக்கிறார் அன்வர்.
“பாத்தீங்களா… உங்க போலீஸ் புத்தி போக மாட்டேங்குதே. நானே அவனை எப்படி சமாளிக்கப் போறோமேன்னு நடுங்கிகிட்டு இருக்கேன்.”
“நோ.. நோ…அவனை பார்த்து நான் சமாதானமா போகத்தான் சந்திக்கணும்னேன். எப்ப ஒரு தூக்கு தண்டனையை தாண்டிட்டானோ அப்ப, அவன் விதிதான் வலுவானது. உங்க ஜோசியத்தை நம்பறேன் அவனால் எனக்கு ஆபத்து வரக்கூடாது. அவன் என்னை! பழிவாங்க வருவான்னு எனக்கும் தெரியும். நாம் இனி போலீஸ் ஆபீசராயிருந்து சாகறதவிட, சமாதானமா போய் வாழத்தான் விரும்பறேன்.”
நிஜமாலுமே நெஞ்சு பதைக்க பேசுகிறார் அன்வர்.
“சார், நான் உங்கள நம்பறேன். உங்களுக்கு எங்க அக்கா வீடு முகவரி தரேன். மரவனேரி எக்ஸ்டென்ஷன்ல டவுன் ரயில்வே ஸ்டேஷன்கிட்ட இருக்கு. இன்னிக்கு காலைலகூட நீங்க அவங்க வீட்டை சோதனை போட்டதா கேள்விப்பட்டேன்…”
“யார், அந்த சினிமா தியேட்டர் ஆபரேட்டர் வீடா?”
“அதேதான்… நான் இப்ப அங்கதான் இருக்கேன். முனிரத்னம் என்னைத் தேடி அங்கதான் வருவான். நான் ஏரியா பிரபலம். ஆகையால், அவன் என்னைக் கண்டு பிடிக்கறது கஷ்டமில்ல. அப்படி அவன் என்னை பாக்க வந்தா, தகவல் தரேன். நீங்க மங்கம்மாவோட அங்க வந்துடுங்க. அவன் கிட்டேயும் மன்னிப்பு கேட்டுக்கிட்ட மாதிரி இருக்கும். என்ன?”
வேறு வழியே இல்லாத மாதிரி தலையை அசைக்கிறார் அன்வர்.
அத்தியாயம்-11
“நெற்றியில் வரியானது ஐந்து இருந்தால் அப் புருஷனுக்கு வயது நூறாகும். சகல சாஸ்திரங்களும் பார்ப்பான். புத்தியில் எதையும் அறிவான்.”
முகம் முழுக்க மொட்டைத் தலையோடு புதிய அவதாரம் எடுத்தவனாக டி.வி. பார்த்துக்கொண்டிருக்கிறான் முனிரத்னம். துளிகூட பதட்டம், பயம் எதுவுமில்லை. அவனுக்கும் சேர்த்து கனகமும் ராமலிங்கமும் தான் நடுங்கிக் கொண்டிருக்கிறார்களே..?
எதிரில் வந்து நிற்கிறான் பாஸ்கரதாஸ்.
பார்வையை நிமிர்ந்து பார்த்து, “போன காரியம் வெற்றிதானே?” – என்று கேட்கிறது. கன்னம், தாடை எல்லாம் அளவாக வீங்கி புதிய முகத்தை காட்டிக் கொண்டிருக்கிறது.
எல்லாம் குரூர கறம்பியின் விளையாட்டு.
“கச்சிதமா நீ சொன்ன மாதிரியே சொன்னேன். அந்த ஆள் உன்கிட்டேயும் மன்னிப்பு கேக்கணுமாம்.”
பாஸ்கரதாஸ் சொல்வதைக் கேட்டு இளக்காரமாக சிரிக்கிறான்.
”எனக்கென்னமோ அந்த ஆள் மனசார சொன்ன மாதிரிதான் தோணுது. இப்படிப் பார்த்தா எப்படி?”
திரும்பவும் அதைக் கேட்டு சிரிக்கிறான் முனிரத்னம்.
“எப்படி சிரிக்க முடியுது உன்னால?” சற்று எரிச்சலுடன் கேட்கிறான் ராமலிங்கம். பக்கத்து வீட்டுக்காரர் குடைந்த குடைச்சல், பால் வாங்கிவர வெளியே போன போது பால் பூத்தில் பலர் கேட்ட கேள்விகள் எல்லா உருவாக்கிய கோபமும், குழப்பமும் அதில் தெரிகிறது வீட்டுக்குள் இருப்பவர், “வாழப்பாடி மாமா” என்று சொன்ன பொய் வேறு நிரடுகிறது.
நிமிர்ந்து அவனை ஒரு பார்வை பார்க்கிறான் முனிரத்னம்
அவ்வளவுதான்.
“என் வீட்டுக்காரர் கேட்டதுல தப்பு என்ன இருக்கு? ஊரே பரபரப்பா இருக்கு. போலீஸ் நாலா புறமும் அலையுது. மாட்டுனா போலீஸ்காரங்க அடிச்சே கொன்னுட்டு, என்கௌண்டர் டெத்துன்னு சொல்லிட்டு போயிடுவாங்க. இடம் கொடுத்த பாவத்துக்கு எங்களையும் பிரிஞ்சு மேஞ்சுடுவாங்க.
நாங்க உயிர்க்கொலய கைல புடிச்சுகிட்டு இருக்கோம். நீ டி.வி. பார்க்கறே, தைரியமா என் தம்பிய தூது அனுப்பறே.
சந்தன வீரப்பன்கூட காட்டுல வசதியா ஒளிஞ்சுகிட்டு தூது அனுப்பறான். நீ நகரத்துல ஒளிஞ்சுகிட்டு.”
கனகம் பேசி முடிக்குமுன் சரேலென்று நிமிர்ந்தெழுகிறான் முனிரத்னம். கண்களில் ரத்தச் சிகப்பு கைகளில் முறுக்கேறிய புடைப்பு…பார்வை பாஸ்கரதாஸ் பக்கம் திரும்ப, “தா பார் நீதானே சொன்னே எனக்கு ஆயுசு கூடன்னு… சொன்ன மாதிரி தூக்கு கயித்துக்கு முன்னே இருந்தே தப்பி வந்திருக்கேன். இப்ப நான் போய் நான் தான் முனிரத்னம்னு சொன்னாலும் யாரும் நம்ப மாட்டாங்க எனக்கென்ன பயம்…?
பயந்தா பதினேழு கொலை செய்திருப்பேனா? இன்னிக்கு காலைலதான் இரண்டு பேரை கொன்றிருப்பேனா?
பயந்தா கணுக்கால் தண்ணிகூட கடலா தெரியும். துணிஞ்சா அந்த கடலே கையளவு தண்ணியாயிடும். ஞாபகம் வெச்சுக்கோ. இனி வாயத் திறந்தா தெரியும் சேதி. ஆமா.
சரி எப்ப வரேன்னான் அந்த அதிகாரி…”
“நான் தகவல் தந்த உடனே வரேன்னான்.”
“கிழிச்சான். உனக்குப் போலீசை பத்தி தெரிஞ்சது அள்ளைவுதான். அதுலயும் அந்த அதிகாரி இருக்கானே அவன் எமன்.
வெளியே பார்… இப்பவே நாலு பேரு தெருவுல மஃப்டில திரிய ஆரம்பிச்சுட்டாங்க. கோழி ரத்தத்தை இந்நேரம் ஆராய்ச்சி பண்ணிகிட்டிருப்பான் ஒருத்தன்.
அதிகபட்சம் இன்னும் நாலஞ்சு மணிநேரம் நான் இங்க இருக்கலாம். அவ்வளவுதான் தாங்கும். கூடப் போனா மாட்டிக்குவேன். அதுக்குள்ளே நான் அவன் உயிரை எடுக்கணும். மங்கம்மாவையும் மீட்டாகணும். இல்லாட்டி அவன் முந்திக்கிடுவான்…”
“அதுக்கு நாங்க என்ன செய்யணும்?”
“சொல்றேன். உன் பெண்டாட்டி இங்கியே இருக்கட்டும். நீங்க இரண்டு பேரும் நான் சொல்றபடி கேளுங்க. எனக்கு இப்ப என் தங்கம் கைக்கு வரணும்.”
“எங்க இருக்கு அது?” கேட்கும் ராமலிங்கத்தை பார்க்கும் முனிரத்னம், “நீ போய் ஒரு விக்ஸ் மாத்திரை வாங்கிட்டு வா பார்க்கலாம்..” என்று வெளியே விரட்டி விட்டு பாஸ்கரதாசிடம் வருகிறான். “வழுக்கு பாறை முனியப்பன் கோவில் தெரியுமா?”
“நல்லா தெரியும் எங்க குலதெய்வம் அது.”
“அந்த கோவிலுக்கு நேர்மேல ஏற்காட்டு மலை இருக்குது.”
“ஆமா.” பேசிக்கொண்டே இருவரும் கொல்லைப் புறம் செல்கின்றனர்.
“மலைக்கு தார் ரோடு நடு பக்கம் போனா ஒத்தையடிப் பாதையா குறுக்குப் பாதை மறுபக்கம் போகுது “
“தெரியும். மலைவாசிங்க அது வழியாதான் போவாங்க.”
“அந்த பாதைல ஒரு தூங்கு மூஞ்சி மரம் வரும்.”
“அந்த மரத்துக்கு என்ன?”
“அந்த மரத்துக்கு பக்கத்துல ஒரு புதர் இருக்கும். அதுக்குள்ள நுழைஞ்சா, சிங்கத்தோட தலை மாதிரி ஒரு சின்ன பாறை தெரியும். அதுக்கு கீழ்தான் நான் தங்கத்தை ஒரு பிரீஃப் கேஸ்ல வெச்சு புதைச்சிருக்கேன்.”
“அதை நாங்க எடுத்துகிட்டு வரணுமா?”
“நாங்க இல்ல…நீ மட்டும்தான் அதைக் கொண்ட கிட்டு வந்து என்கிட்ட தரணும். நீ தகிடுதம்பா எதாச்சும் பண்ணினா, வாயும் வயிறுமா இருக்கற இவ தலை வேற, உடம்பு வேற ஆயிடுவா.”
“ஐய்யய்யோ… அப்படி எல்லாம் பண்ணிடாதே. நான் போய் எடுத்துகிட்டு வந்துடறேன்..”
“எப்படி எடுத்துக்கிட்டு வரணும்னுன்னு சொல்றேன்.”
“நீ இங்க இருந்த போகையில இங்க இருக்கற பழைய சினிமாப் படப்பெட்டி ஒண்ணை சைக்கிள்ல கட்டிக்கிட்டு போ. பாக்கறவங்களுக்கு வித்தியாசமா எதுவும் தெரியாது. கோவில்கிட்ட போய் பெட்டிய ஒரு இடத்துல பத்திரமா வை. ஜன நடமாட்டமே இல்லாத இடம் அது. அப்பால அப்படியே மேலபோய் தோண்டி ரீஃப்கேஸை எடுத்துக்கிட்டு வா.
பொட்டில இருக்கற அந்த பழைய, பாகவதர் படத்தை தலையை சுத்தி எறிஞ்சுட்டு, தங்ககட்டிகளை படப்பொட்டில வெச்சு, அதை சைக்கிள்ல வெச்சு கட்டி எடுத்துகிட்டு வந்துடு.
இந்த வீட்டுக்கு படப்பெட்டி வர்றதும், போறதும் சகஜம்தானே! துளிகூட யாருக்கும் எதுவும் தெரியாது. போலீஸ் நாய்ங்க நடுவுல பார்த்தாலும் மேலாக இரண்டு முனு ஃபிலிம் சுருளுங்களை வெச்சு காட்டி டபாய்க்கலாம்.”
பாஸ்கரதாஸ் அவனை மிரட்சியுடன் பார்க்கிறான்.
“என்ன பாக்கறே?”
“இல்ல… இந்த ஊட்டுக்குள்ள ஒளிஞ்சதுலதான் உனக்கு எவ்வளவு ஆதாயம். இவ்வளவு பெரிய ஊர்ல ஏன் நீ இந்த வீட்டை தேர்ந்தெடுத்தேன்னும் இப்பதான் தெரியும்.”
“நானில்ல…எல்லாம் இரும்பாடி வேலை. நான் மூளைன்னா, அவன் காரியம். கம்ப்யூட்டர் பண்ணுமே புள்ளி பிசகாம, அப்படி ஒரு காரியம்.”
“இப்ப எங்க இரும்பாடி?”
“பாக்கத்தானே போறே! உன் நேரமும் நல்லாருக்கு, என் நேரமும் நல்லாருக்கு. ஆகையால் எந்த தப்பும் நடுவுல வந்துடாது. நீ பூந்து விளையாடு. உனக்கும் உங்க அக்காவுக்கும் நிச்சயம் ஒரு கிலோ தங்கம் உண்டு…”
பாஸ்கரதாஸ் அதைக் கேட்டு செயற்கையாகச் சிரிக்கிறான்.
“அப்ப கிளம்பட்டா…?”
“கிளம்பு..”
“வந்த பிறகு அந்த போலீஸ் ஆபீசருக்கு தகவல் தாலாமா?”
“முதல்ல தங்கத்தோடு ஒழுங்கா வந்துசேர், அப்புறம் சொல்றேன்…”
அத்தியாயம்-12
“புருஷாளது கரத்தில் உடுக்கையைப் போல ரேகை ஒன்றும், இடது பக்கமாக தொடையில் அதுபோல் தழும்பும் இருந்தால் அவன் குறிகள் சொல்வான். மருளாடுவான். துர்நடத்தை புரிவான், கலைகளை வைத்துப் பிழைப்பான்.”
அடுத்த சில நிமிடங்களில் பாஸ்கரதாஸ் பக்த குசேலா படப்பெட்டியுடன் சைக்கிளோடு வீதியில் இறங்க, உள்ளே நுழைகிறான் ராமலிங்கம்.
கனகம் பயத்தில் ஒரு ஓரமாக சுருண்டு கிடக்கிறாள்.
நடப்பது எதையும் காதில் வாங்கிக்கொள்ளக்கூட அவளது பெண்மையும் தாய்மையும் இடம் தரவில்லை.
உள்ளே நுழைபவன் கையில் விக்ஸ் மாத்திரை.
நீட்டும்போதே புலம்பல்.
“என்ன ராமலிங்கம், போலீஸ் நாய் உன் ஊட்டுக்கு வந்துச்சாமேன்னு கடைல பாக்கறவங்கள்லாம் கேக்கறாங்க.”
“நீ என்ன சொன்னே?”
“என்னத்த சொல்வேன். கோழியறுத்து பூசை போட்டேன். அந்த ரத்தத்துக்கு வந்துருச்சின்னு சமாளிச்சேன். ஆமா எங்க பாஸ்கரு…?”
“ஒரு வேலை கொடுத்துருக்கேன், வந்துடுவான்.” சொல்லிக்கொண்டே டி.வி.பக்கம் திரும்பவும் முனிரத்னம் கண்களில் அந்த புத்தகம் படுகிறது. டி.வி.க்குப் பக்கத்தில் இருக்கிறது.
“என்ன புத்தகம் இது-”
“இது… கைரேகை சம்பந்தமானது. பாஸ்கருதான் இதை எல்லாம் படிப்பான்..”
ராமலிங்கம் சொல்லச் சொல்ல முனிரத்னம் கைகள் அதை எடுத்து விரிக்கின்றன. மிகப் பழமையான புத்தகம்; தொட்டாலே பொடியுமளவு பழமை.
“அனுபோக வயித்தியமெனும் பிரம்ம ரகசிய ரேகை சாஸ்திரம்” என்று ஹெட்லைன்ஸ் செஞ்சி மாநகரம் ஏகாம்பர முதலியாரவர்களால் எழுதப்பட்டது என்கிற குறிப்பு…
ஸ்ரீசுந்தர விலாச அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப் பட்டது. இதன் விலையானது அணா 8 என்கிற தொடர்ச்சியான விரிவுகள்.
“இதைப் படிச்சுட்டுதான் உன் மச்சினன் அந்தப் போடு போகிறானா… பலே. இந்தக் காலத்து சரக்கா இருந்தா உதார் இருக்கும், உடான்ஸ் இருக்கும். இது அப்படியில்லை” – என்றபடியே புரட்டுகிறான்.
உள்ளே கைரேகை படங்கள். எந்த ரேகை எப்படி இருக்க வேண்டும் – எப்படி இருக்கக்கூடாது என்றும் படம் வரைந்து விளக்கங்கள்.
“சபாஷ்… சின்ன புள்ளைக்குக்கூட புரியற மாதிரி இருக்குதே…” -என்று வாசிக்கத் தொடங்குபவனை ராமலிங்கம் முறைக்கிறான்.
“ரோம் எரியும்போது நீரோ ஃபிடில் வாசித்த மாதிரி இது என்ன செயல்… பேசாமல் கனகத்தோடு ஓடிவிடலாமா?” அவனுக்குள் கேள்விச் சிலந்தி வலை பின்னத் தொடங்குகிறது.
மெல்ல அவன் கனகத்தை நோக்கிச் செல்ல, முனிரத்னம் பார்வை புத்தகத்தில்…
“ஏய்… ஏ புள்ள கனகம்” – அவளை நிமிண்டுகிறான். அவள் நிமிருகிறாள்.
“வெளியே வா…” என்பதுபோல ஜாடை காட்டுகிறான்.
அவள் நிமிர்ந்து எழுந்து ‘எங்கே?’ என்று கையசைத்து கேட்க, புத்தகத்தை மடித்தபடி முனிரத்னம் பார்வையும் அதைக் கவனிக்கிறது.
“என்ன, வெளிய இவளோட ஓடிப்போய் போலீஸ்கிட்ட சொல்லிடலாம்னு பாக்கறியா?”
“இல்ல… இல்ல… சத்யமா இல்ல.”
“தெரியும்டா நாயே… உன்னை…” – கறுவியபடி துப்பாக்கியுடன் எழுந்து நிற்கும் முனிரத்னத்தின் கால்களை எகிறிப் பற்றுகிறாள் கனகம்.
“ஐய்யோ! அவரை ஒண்ணும் பண்ணிடாதே. புள்ளதாச்சி என்னையும் ஒண்ணும் செஞ்சிடாதே”
அவளது கதறல் அவனைக் கட்டிப்போடுகிறது.
திரும்பவும் புத்தகம் திறக்கிறான்.
ஸ்திரீகளுக்கான ரேகை சாஸ்திரம் என்பதில் பார்வை பதிகிறது.
உள்ளங்காலில் அடிக்கடி வேர்வையுடையவள் தரித்திரியாவும், பல ஆணைச் சேருபவளுமாய் இருப்பாள்.
கால் விரல்கள் கோணலாய் இருந்தால் இவள் மலடியும், விதவையுமாவாள்..
உள்ளங்காலில் தாமரைப்பூ போல ரேகை இருந்தால் சகல சம்பத்தும் அடைவாள் – இவளை தங்கம் தேடி வரும். இதை ரேகை சாஸ்திரம் சொர்ண ரேகை என்கிறது.
முனிரத்னத்திடம் வாசிப்பு தொடரும் அதே துல்லியமான வினாடிகளில்.
– தொடரும்…
– சொர்ணரேகை (நாவல்), முதற் பதிப்பு: 1999, திருமகள் நிலையம், சென்னை.