கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: September 12, 2024
பார்வையிட்டோர்: 2,989 
 
 

(1999ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9

அத்தியாயம்-4

“தாமரை புஷ்பத்தைப் போல உள்ளங்கையின் மத்தியில் இருக்குமாயின், அவன் அஷ்ட ஐஸ்வர்யமுடன்லட்சுமி கடாட்சமுள்ளவனாகி யாவரும் தன்னை புகழ்ந்தேத்தும்படியான புகழுடைய சீமானாகவிருப்பான். தங்கம் அவனைத் தேடி வரும்.” 

மரவனேரி.

சேலத்தின் செல்லப் பகுதி. ஒரு பக்கம் டவுன் ரயில்வே ஸ்டேஷன். மறுபக்கத்தில் ஆர்ட்ஸ் காலேஜ். ஒரு ஓரமாக திருமணிமுத்தாற்றின் குறுக்கீட்டுப் பாய்ச்சல். பாரதி வித்யாலயா பள்ளிக்கு செல்லும் மாணவப் பிள்ளைகளின் கூட்டம் என்று கலகலப்பாக இருக்கும் சற்று காசுக்கார பகுதி. இதன் மூன்றாவது எக்ஸ்டென்ஷ னில் இருக்கிறது, டூரிங் தியேட்டர் ஆபரேட்டர் ராமலிங்கத்தின் வீடு. 

சின்ன நாட்டு ஓடு வேய்ந்த வீடு. ஆயிரம் ரூபாய் சம்பளக்காரன் பின் என்ன ஃபிளாட்டிலா வசிக்க முடியும்? இரவு இரண்டாவது ஆட்டம் முடிந்த கையோடு கேபின் ரூமை பூட்டி சாவியை மேனேஜரிடம் கொடுத்து விட்டு ராமலிங்கம் வீட்டுக்கு வர எப்படியும் இரண்டாகி விடும். 

அன்றும்… 

ஹைதர் காலத்து சைக்கிளை மிதித்துக்கொண்டு ‘கீச்சு, வீச்சு…’ என்று அது சப்தம் போட, தெரு முனைக்குள் அவன் நுழையும்போதே அவன் மனைவி கனகத்துக்கு முழிப்பு வந்துவிடும். கதவைத் திறந்து கொண்டு நிற்பாள். சைக்கிளை ஓரம் கட்டி நிறுத்திவிட்டு, லுங்கியை உயர்த்திக் கட்டியபடி உள்ளே நுழைவான் ராமலிங்கம். அறுபது வாட்ஸ் பல்பு ஒன்று மட்டும் எரியும் சின்ன கூடம். வலது ஓரமாக தடுப்புச் சுவர் எழுப்பி உருவாக்கிய சமையல்கட்டு மூலை. 

வீட்டுப் பின்புறமாய் கிணற்றடி குளியல் இத் யாதிகள் எல்லாம் அங்கேயே… அந்த சின்ன வீட்டில் இடது ஓரத்தில் பிதுங்கியும், நசுங்கியும் கிடக்கும் பூட்டப் பட்ட சினிமா பட பெட்டிகள் சில. 

பக்த குசேலா, வீர சூரா, ராம ராஜ்யம் என்று சினிமா பிறந்த நாளில் எடுக்கப்பட்ட சினிமாப் படங்கள் தான் அவை. அக்ரிமென்ட் காலாவதியாக அல்ப சொல்பமாக ஆயிரம், ஐநூறுக்கு வாங்கிப் போட்டிருக்கும் பழைய சினிமாக்கள். 

இத்தனைக்கும் இருபத்திரெண்டு ரீல், இருபத்தி நாலு ரீல் என்று விடிய விடிய ஓடும் நீளத்தில்..! 

வெறுமனே ஆபரேட்டராக மட்டுமே இருந்து எந்த காலத்தில் கடைத்தேறுவது என்று ராமலிங்கம் அப்படி சைடிலும் நுழைந்து வாங்கியவை அவை. 

இதில் பக்தகுசேலா மட்டும் வைகுண்ட ஏகாதசிக்கு ஏகாதசி தியேட்டரில் ஓடும். இரவு முழிக்க வேண்டிய பக்த சிகாமணிகளுக்காக ஸ்பெஷல் ஷோ. மற்ற பெட்டிகளை சீந்துவாரில்லை. அதன் மேலெல்லாம் தட்டுமுட்டு சாமான்கள் முதல் அவிழ்த்துப் போட்ட லுங்கிவரை எல்லா கண்றாவிகளும் கிடக்கின்றன. 

சமயத்தில் ராமலிங்கம் அதன் மேல் அமர்ந்து கொண்டு டிபன் சாப்பிடுவான் பார்க்க வருகின்றவர்களுக்கு அந்த பெட்டிதான் நாற்காலி. 

இன்று அதன் மேலேயே உட்கார்ந்து தூங்கி வழிந்து கொண்டிருக்கிறாள் கனகம். ராமலிங்கம் வந்து கதவைத் தட்டுவதுகூட தெரியாதபடி ஒரு தூக்கம். 

“தட்…தட்…தட்…” சப்தம் காதைக் குடைய, வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்திருக்கிறாள். கதவைத்திறக்கிறாள். 

“என்னா புள்ள தூங்கிட்டியா…” 

“ஆமாம்யா.. உடம்பே முடியலே. ஒரே வாந்தி வேற” அவள் தன் மசக்கையை அவன்முன் ஞாபகப் படுத்துகிறாள். உடனே ஆதரவாக வந்து அணைத்து, “உள்ள பையன் என்ன ரொம்ப உதைக்கிறானா?” என்று வாஞ்சையாகக் கேட்கிறான். 

“உதையா… கராத்தே சண்டையே போட்றான்.” அவள் எடுத்துத் தருகிறாள். அவன் கைகள் இப்பொழுது அவளது ஆறு மாத கர்ப்ப வயிற்றை வருடுகின்றன. அவளுக்கு உயிரை வருடி விடுகிறாற்போல இருக்கிறது. 

“சரி வா… சாப்பிடு. தூக்கம் சுழட்டுது” அவள் அவனை சற்று தள்ளிவிட்டபடி சமையல் கட்டு மூலையின் அலுமினியப் பாத்திரங்களைப் பார்க்கிறாள். 

“இரு… கையைக் கழுவிட்டு வந்துடறேன்” அவன் கொல்லைக் கதவைத் திறந்தான். பின் விளக்கையும் போடுகிறான். கிணற்றடிக்கும் போகிறான். கயிற்று வாளியைத் தொட குனிந்தபோது, தூக்கி அடிக்கிறது. 

வாளி இருக்கும் இடமெல்லாம் ரத்தம். 

பக்கென்று நெஞ்சையடைக்க நிமிர்ந்தால், கிணற்றுத் திட்டிலும் ரத்தம். திட்டைத் தொட்டுச் சற்றுப் பார்க்க, அந்த இராப்போதின் அமைதியில் உள்ளே கனகம் பாத்திரங்களை எடுக்கும் அரவம் மட்டும் கேட்கிறது. வேறு சப்தமில்லை. தோட்டத்து மாதுளை மரத்தில் நிறைய சுவர்க்கோழிகள் இருக்கும். ‘கர்ரக் கர்ரக்’ என்று காதைத் திருகும். அவைகூட அன்று அமைதியாகி விட்டிருக்கிறது. அந்த அமைதியில் யாரோ சற்று சிரமப்பட்டு மூச்சுவிடும் சப்தம் மட்டும் காதை உரசுகிறது. 

”யாராக இருக்கும்?” 

பயம் வேகமாக விஷமாட்டம் உடம்பெங்கும் பரவத் தொடங்குகிறது.”யாரு…யாரு” – உதடு தந்தியடிக்கிறது. பார்வை நாலாபுறமும் சுழல்கிறது. அப்படியே கிணற்றுக்குள்ளும் பார்க்க, உள்ளேயிருந்து ஒரு உருவம் இப்பொழுது நிமிர்கிறது. 

கிணற்றுத் திட்டின் உள்கூட்டில் உள்ள துவாரத்தில் கால் வைத்தபடி திட்டைப் பிடித்தபடி நிமிரும் அந்த உருவம், முனிரத்னம்! 

ராமலிங்கம் மிரண்டு போய் கத்தப்போக, அப்படியே வெளியே கரணமடித்து விழுந்து எழுந்து அவன் வாயைப் பொத்தி மூடுகிறான் முனிரத்னம். மீறி ராமலிங்கம் கத்தினாலும் கேட்காதபடி டவுன் ரயில்வே ஸ்டேஷனில் கூட்ஸ் டிரெயின் ஒன்றின் அசுரக் கூக்குரல். 

அத்தியாயம்-5

“வேலாயுதத்தை போல ஒரு ரேகை உள்ளங்கையில் நடுவிரலுக்கு நேராக இருக்குமாயின் – அவன் சகல காரியங்களிலும் சாமர்த்திய முடையவனாகியும். சூரனாகவும், சிறையகப்பட்டாலும் தாண்டும் வல்லோனாகவும் விளங்குவான்.” 

அர்த்த ஜாமம் கடந்து முகூர்த்தக் காலைக்குள் நுழையும் மூன்று மணிப் பொழுது. 

அன்வர் வீட்டு தொலைபேசி அலறிச் சப்த மிடுகிறது. தூக்கம் கலைந்து அரைக் கொட்டாவியோடு எழுந்து வந்து ரிசீவரை எடுக்கிறாள் அன்வரின் மனைவி நூர்ஜஹான். 

“ஹலோ… அன்வர் சாரா?” 

“இல்ல… நான் அவர் சம்சாரம்.” 

“சார் இல்லீங்களா?” 

“இருக்காரு. தூக்கத்திலே எழுப்பிகிட்டு- என்னங்க விஷயம்… ராத்திரி நேரத்திலே எவனாவது பெரிய கேடி மாட்டிட்டானா?” 

“மாட்டலைங்க… தப்பிச்சுட்டான். பிரபல தூக்கு தண்டனைக் கைதி முனிரத்னம் ஜெயில்ல இருந்து தப்பிச்சுட்டான். வார்டர் தனிலிங்கப் பெருமாளையும் சுட்டுக் கொன்னுட்டான்.” 

நூர்ஜஹானுக்கு சுள்ளென்றது. அரைத் தூக்கம் ஆவியாகிறது. “என்னங்க?” ரிசீவரை கையில் எடுத்தபடி கத்துகிறாள். அன்வர் கொட்டாவியோடு எழுந்து வருகிறார். 

”என்ன நூர்?” 

“அந்த தூக்கு தண்டனைக்கைதி தப்பிச் சுட்டானாம். வார்டர் பெருமாளையும் சுட்டுக் கொன்னுட்டானாம்.” அன்வர் அடுத்த நொடி சிலையாகிறார். உடம்பின் மொத்த இயக்கமும் நின்று போகிறது. 

“என்னங்க…உங்களதான். ஜெயில்ல இருந்துதான் போன். மேற்கொண்டு என்னான்னு கேளுங்க…” 

உசுப்புகிறாள் நூர். சுதாரித்து ரிசீவரை வாங்கி, சொச்ச விஷயங்களையும் காதில் வாங்கிக்கொண்டு அடுத்தநொடி பேண்ட் சட்டை என்று மாட்டிக்கொண்டு கிளம்ப ஆயுத்தமாகிறவருக்கு, நூர்ஜஹானே எல்லாவற்றையும் எடுத்துத் தருகிறாள். தரும்போதே… 

“நீங்க அந்த கைரேகை ஜோசியக்காரன் பத்தி சொன்னது பொய்யாயிடிச்சேங்க?” 

“ஆமாம் நூர்.. என்னால நம்ப முடியல.” 

“எப்படிங்க இதெல்லாம்… ஒருவேளை ரேகை சாஸ்திரம் நிஜமோ?” 

“என்ன எழவோ…? முதல்ல போய்ப் பார்ப்போம். அவ்வளவு பெரிய ஜெயில்ல இருந்து எப்படி தப்பினான்? புரியல. எனக்கு பதட்டமா இருக்கு நூர். கொஞ்சம் தண்ணி கொண்டுவா.” 

“வர்ரேன். இந்த நிலைல போகணுமா? விடிஞ்சு போகலாமே.” 

“நான் போலீஸ்காரன். அதுவும் இப்ப தோத்து நிக்கற போலீஸ்காரன். என்னை பயந்தாங்கொள்ளியாக்கி இன்னும் மோசமாக்கிடாதே…” அன்வர் ஷூவை போட்டுக்கொண்டு லேசை முடிந்துகொண்டபடி விருட்டென்று நிமிர்ந்து வீட்டின் இரும்பு கிரில் கதவை திறக்கிறார். வெளியே வருகிறார். அல்சேஷன் கட்டப் பட்டிருக்கும் வாசல் திண்ணையை ஒட்டி அவரது புல்லட். ஒரே உதை, அதன் எஞ்சின் அந்த இரவின் நிசப்தத்தை கலைக்கிறது. 

போலீஸ் குவாட்டர்ஸில் இன்னமும் இவருக்கு வீடு அலாட் ஆகாத நிலையில், தற்காலிகமாக தங்கியிருக்கும் மாமனாரின் வீட்டு வெளிப்புறத்தில் சுமாரான தார்ச் சாலை. ஹெட்லைட் வெளிச்சம் அதில் விழுந்து அவரை வரவேற்கிறது. 

புல்லட்டின் சப்தம் முனிரத்னம் காதுகளிலும் விழும் போது அவன் இப்போது ராமலிங்கம் வீட்டின் நடுக் கூடத்தில்… எதிரே நடுங்கியபடி ராமலிங்கமும், கனகமும். 

“இந்த பைக் சப்தம் அந்த போலீஸ்காரன் அன்வரோடதுதானே?” ராமலிங்கத்தைப் பார்த்துக் கேட்கிறான் முனிரத்னம். 

“தெ… தெரியாது” 

“பொய் சொல்லாதே.” 

“ச… சத்யமா சொல்றேன்.” 

“அவன் வண்டியாதான் இருக்கணும். அந்த நாய் தான் நான் மாட்டிக்க காரணம். அவனை தீர்த்துக் கட்டறதுதான் என் அடுத்த குறி. அதுக்குத்தான் இங்கே வந்துருக்கேன். 

உன் சரித்திரமே எனக்குத் தெரியும். தினமும் இரண்டாவது ஆட்டம் முடிஞ்சு இரண்டு மணிக்கு வர்ற பார்ட்டி நீ. உன் வீட்ல இந்த சமயத்துல விளக்கெரிஞ்சா யாரும் சந்தேகப்படமாட்டாங்க. எல்லாம் தெரிஞ்சு தான் வந்திருக்கேன். 

எனக்கு நீங்க முழு ஒத்துழைப்பு தரணும். ஏறுக்கு மாறா ஏதாவது செய்தா இதுவரை பதினெட்டு கொலை செய்த என் கொலை எண்ணிக்கை இருபதாயிரும். ஜாக்கிரதை.” 

முனிரத்னம் சொல்லி முடிக்கும்போதே அன்வரின் பைக் சப்தம் அந்த வீட்டு வாசலிலேயே கேட்கிறது. அந்த வழியாகத்தான் ஜான்சன் பேட்டைக்குள் நுழைந்து மணக்காடு தாண்டி, கோர்ட் வழியாக ஜெயிலுக்கு செல்லும் ஏற்காடு சாலையை எட்டிப் பிடிக்க வேண்டும். வீட்டுக்குள் ராமலிங்கம் குளிர் ஜூரம் வந்தவனாகிறான். 

கனகம் மயங்கி அவன் தோள் மேல் விழுகிறாள். அவளைத் தாங்கிப் பிடித்து படுக்க வைக்கிறான் மயக்கம் தெளிவிக்க முனைபவனை முனிரத்னம் குரல் அடக்குகிறது. 

“அவளை விடு, நான் சொல்றபடி செய். என் காயத்துக்கு மருந்து போடணும்” என்று அதுவரை அடக்கியிருந்த வலியை மெல்ல வெளிக்காட்டியபடி தன் வலது காலை ராமலிங்கம் முன் நீட்டுகிறான். 

கெண்டைக் காலுக்கு மேல் துப்பாக்கி குண்டு உரசிச் சென்றதில் சதை பாகம் குழைந்து செர்ரி பழ மாட்டம் சிதைந்து கிடக்கிறது. 

“அப்படியே கிணத்து திட்டுகிட்ட சிந்திக் கிடக்கிற ரத்தக் கறையை போய் நல்லா கழுவிடணும் நீ.” 

முனி ரத்னத்தின் கட்டளைக்கு வேகமாக தலை ஆட்டுகிறான். முனிரத்னம் கையில் ஒரு ரிவால்வர். ஜெயில் உடுப்பெல்லாமும் ரத்தம். 

“இந்த உடுப்பைக் கழட்டி தரேன். கொல்லையில வெச்சு மண்ணெண்ணை ஊத்தி எரிச்சுடு. அப்படியே நான் சொல்றபடி செய்…” முனிரத்னம் சொல்லும் போதே ‘கொக்… கொக்’ என்று கோழிகள் முனகும் லேசான சப்தம் குறுக்கிடுகிறது. 

“கோழி வளர்க்கறியா?” 

“ஆமாம். இரண்டே இரண்டு.” 

“சபாஷ். அதுல ஒண்ணை பிடிச்சு கொல்லைல என் ரத்தம் சிந்தியிருக்கிற இடத்துல அறுத்து கோழி ரத்தத்தை அதுல கலந்துவிடு. அப்படியே ரத்தம் சொட்டச் சொட்ட வீட்டை சுத்தி வா.” 

“எதுக்கு?” 

“சொல்றத செய். கொஞ்ச நேரத்துல கன்னுக் குட்டி சைசுக்கு மோப்பம் பிடிச்சுகிட்டு நாயுங்க வரும். என்ன பண்ணுவே? அதுக்குத்தான். அப்படியே இந்த உடுப்புங்களை கொல்லைல போட்டு எரிச்சு அந்த நெருப்புல கோழிய வாட்டு. ரக்கைகளை அங்கேயே பிச்சுப்போடு. அள்ளி எறிஞ்சுடாதே.” 

”சரி” 

“இப்ப தலையாட்டிட்டு பின்னால சொதப்பினே, சீவிடுவேன் உன்னை..” 

“ஐய்யோ! அப்படியெல்லாம் பண்ணமாட்டேன் உன்னைக் கெஞ்சிக் கேட்டுக்கறேன். இங்க ஒளிய இடமில்லையே, எப்படி தங்க முடியும் நீ? உனக்கும் இந்த இடம் பாதுகாப்பில்லை, எனக்கும் பாதுகாப்பில்லை என் சம்சாரம் முழுகாம இருக்கா. வேற எங்காவது போயிடேன்..” 

கொஞ்சம் ராமலிங்கத்தை ஒரு தினுசாக பார்க்கிறான் முனி ரத்னம். அழுத்தமாக ஒரு சிரிப்பு சிரிக்கிறான். 

“கவலைப்படாதே… என் பேச்சைக் கேளு. உனக்கு எதுவும் வராது. வர விடமாட்டேன். அந்த அன்வரை தீர்த்து கட்டிட்டு ஏதாவது ஒரு கூட்ஸ் ரயிலேறி ஓட இந்த இடம்தான் சரியான இடம். போகும்போது நான் சும்மா போகமாட்டேன். உன்னை குபேரனாக்கிட்டு தான் போவேன்.” 

”ஐய்யோ! நான் குபேரனாகவெல்லாம் வேண்டாம். இங்க நீ எப்படி தங்க முடியும்? ஒரு தனி ரூம்கூட இல்லையே?” 

“தங்கி காட்றேன் யார். திட்டம் போட்டுத்தான் தப்பி வந்துருக்கேன், நீ கவலைப்படாதே. ஆமாம். எதாவது நீளமான டியூப் இருக்குதா?” 

”எதுக்கு?”

“இருக்கா…” 

“டியூபுக்கு நான் எங்கப் போவேன்? பகல்லயாவது கடைல வாங்கலாம்.” 

முனிரத்னம் பார்வை அந்த வீட்டை உடனே நோட்டமிடுகிறது. பழைய படப் பெட்டிகள், அழுக்குத் துணிகள், உடைந்த பிளாஸ்டிக் குடம் ஒன்று, பழைய சைக்கிள் டியூப் டயர் என்று தட்டுமுட்டுகள். 

அதில் சைக்கிள் ட்யூபை எடுக்கின்றன முனிரத்னம் கைகள். 

“இன்னும் அரை மணிப் பொழுதுல போலீஸ் தேடிவரும். நீ நான் சொன்ன மாதிரி கோழியை அப்ப சுட்டுகிட்டிருக்கே. நான் அப்ப கிணத்துக்குள்ள தண்ணிக்கடில இருப்பேன். இந்த ட்யூப் நான் உள்ள இருந்துகிட்டே சுவாசிக்க உதவி செய்யும். 

உள்ளதானே இருக்கேன்னு காட்டிக்கொடுக்க நினைச்சே… உன் வீட்டை எனக்கு காட்டிக்கொடுத்த என் ஆட்கள். உன்னை உன் தியேட்டருக்கே தேடி வந்து கவாத்து பண்ணிடுவாங்க, ஜாக்கிரதை. 

பெரிய மனசு பண்ணி எனக்கு ஒத்துழைப்பு தா. திரும்பவும் சொல்றேன், உன்னை குபேரனாக்கறேன்.” 

முனிரத்னம் சொன்ன வேகத்தில் பக்கமாக கூடைக் குள் ‘கொக்… கொக்…’ என்று கொக்கரிக்கும் கோழி ஒன்றை பஞ்சாரத்தில் இருந்து பிரித்து எடுத்து அவன் கைகளில் தருகிறான். 

“போ… முதல்ல அறுத்து ரத்தத்தை ஒழுக விட்டுட்டு வா. பிறகு நெருப்பு மூட்டி வாட்டு. இப்போதைக்கு உன் கிட்ட படிகாரக்கல் இருக்கா?” 

“இருக்கு…”ராமலிங்கம் நிமிர்ந்தெழுந்து தனது பெட்டியை பக்கத்து ஷெல்பில் இருந்து எடுக் அதில் சவரம் செய்யும்போது பிளேடு கீறினால் ஆகாமல் தடுக்க உதவும் படிகாரக்கல். 

அதை எடுத்து நீட்டுகிறான் ராமலிங்கம். 

அடுத்த நொடி அதை தரையில் தட்டி உடைத்து யாக்கும் முனிரத்னம் காலில் ரத்தம் ஒழுகி உறைந்து நிற்கும் காயம் பட்ட இடத்தில் அந்த தூளை வைத்து ஒரு அண்டுத் துணியால் இறுக்கிக் கட்ட, முகத்தில் வலியின் விகாரம். 

ராமலிங்கத்தையே அது உலுக்குகிறது. 

கனகம் மயக்கம் நீங்கியிருக்கவில்லை. 

“சரி, நீ கிளம்பு… தாமதிக்காதே. கோழியை அறு போ” விரட்டத் தொடங்குகிறான். 

பின் வழியாக கிணற்றடிக்கு வரும் ராமலிங்கத் திடம் உதறல். அவன் தியேட்டரில் ஓட்டும் சினிமாவில் கூட இப்படி எல்லாம் காட்சிகளைப் பார்த்ததில்லை. 

“யாரு, ராமலிங்கமா?” திடும்மென்று குரல் ஒன்று பக்கத்து வீட்டு மாடி போர்ஷன் ஜன்னல் வழியாக வருகிறது. பக்கத்து வீட்டுக்காரர் பரந்தாம நாயுடு. 

“ஆ…ஆ…ஆமாங்க.” 

“இன்னும் படுக்கலையா மணி மூணாகப் போகுதே? யார் வந்திருக்கா? ஒரே பேச்சு சப்தமா இருக்கு?’ 

“அது… அது… என் மச்சினன்.”

“யாரு? பாஸ்கரா?” 

“நல்லா கைரேகையெல்லாம் பார்ப்பானாமே! நானும் பாக்கணும், விடியட்டும் வெச்சுக்கறேன்.” பதிலோடு அவர் டாய்லெட் கதவைத் திறக்கிறார் ‘க்ரூச்சு’ என்று அதுதான் சப்தமிடும். சரியான சர்க்கரை வியாதிக்காரர். இரவில்லை, பகலில்லை டாய்லெட்டே கதி என்று கிடப்பவர். 

பெருமூச்சு விட்டு சமாளிக்கும் ராமலிங்கம், மள மளவென்று கோழியின் கழுத்தைத் திருகத் தொடங்கினான். 

“வழுக்குப் பாறை முனியப்பா- நீ தாண்டா என்னை காப்பாத்தணும் என் சாமி… என்னை இப்படி ஒரு கொலைக்காரன்கிட்ட மாட்டவுட்டுட்டியே… நான் என்ன பண்ணுவேன்…” உதட்டில் புலம்பலான புலம்பல். 

அத்தியாயம்-6

“கையில் பையைப் போல் இரண்டு ரேகை தோன்றி, ஒன்றுக்கொன்று ஏறாமல் படிக்குயிருந்தால் அப் புருஷன்ஒரு லட்சம் கோடி பொன் தேடவல்லவனாகி சதமாக வாழ்ந்து இருப்பாள்.” 

ஜெயிலே பதறிப் போய் கிடக்கிறது. முகப்பில் எல்லா விளக்குகளும் பளிச்சிட, சைரன் ஜீப்பில் இருந்து டி.எஸ்.பி.யின் கார் முதல் ஏகமாக வாகனங்கள். 

அந்த வேளையிலும் செய்தியறிந்த சில பத்திரிகை நிருபர்களும்,போட்டோகிராபர்களும் வந்து ஃப்ளாஷ் மின்ன, புகைப்படத்தை சுருளில் எடுத்தபடி உள்ளனர். 

ஐந்து மணிக்கு தூக்கு என்பதால் இரவு பதினொரு மணிக்கே வந்துவிட்ட சிறை டாக்டர் நமச்சிவாயம், பிரதிநிதியாக வந்திருக்கும் ஜேக்கப் தேவசகாயமும், கை கட்டியபடி நின்று கொண்டிருக்க, குறுக்கும் நெடுக்குமாக சில போலீசாரின் வேகமான நாயும், வாக்கிடாக்கிகளும், இரைச்சலான சப்தமும் பரபரப்புக்கு கட்டியம் கூறிக்கொண்டிருந்தது 

முனிரத்னம் அடைக்கப்பட்டிருந்த சிறைக்கதவு பாதி திறந்து மீதி திறக்காதபடி கிடக்க,உதவிக்கு வெளியில் சென்ட்ரி நெற்றியில் சுடப்பட்டு இறந்து கிடக்கிறார். அங்கிருந்து ரத்தச் சொட்டு ஒரு ஒழுங்கில்லாதபடி பல இடங்களில் சிதறிக் கிடக்க, அதன் வழியாகத்தான் முனிரத்னம் ஓடியிருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. 

ஜெயிலுக்குள் வீசி எறிந்த நிலையில் பைபிள் புத்தகம். உள்ளே ஒரு ரிவால்வர் வைத்து எடுத்து வர தோதாக அதனுள் உட்குடைவு. 

“எல்லாம் அந்த ஃபாதர் காபிரியேலால் வந்த வினை. கேட்ச் த பர்சன்.” பெருமாளுக்கு அடுத்த ரேங்கில் உள்ள முத்துசாமியின் அலறலைக் கேட்டு ஒரு போலீஸ் குழு ஃபாதர் காபிரியேலின் செயின்ட் பீட்டர்ஸ் சர்ச்சுக்கு பறந்திருக்கிறது. 

வார்டர் தனிலிங்கப்பெருமாள் சிறைக்கு வெளியே சாலையில் சுருண்டு கிடந்தார். 

அதுவரை முனிரத்தினத்தை அவர் விடாமல் துரத்தியிருக்கிறார். அவன் பயங்கர லாகவங்களை காட்டியிருக்கிறான். புலி போல பாய்வதில் இருந்து உருண்டு கரணமடிப்பது என்று சர்க்கஸ் வித்தைக்காரன் போல என்னென்னவோ செய்திருக்கிறான். “திடீர்னு நெஞ்சு வலின்னான்..டாக்டர் கிட்ட காட்ட லாக்கப்பை திறந்தோம். நிமிர்ந்து நின்னு சுட ஆரம்பிச்சுட்டான் டாக்டர் நமச்சிவாயத்தை வேற பிடிச்சுட்டான்” விவரிப்பு ஒரு பக்கம். 

“ஷெட் அப். ஹைலி இட் ஈஸ் ஷேம்” கத்துகிறார் டி.எஸ்.பி.கூடவே அன்வர் பதட்டத்துடன். 

சேலம் நகரத்தையே அந்த அதிகாலைப் பொழுதில் போலீஸ் கூட்டம் உசுப்பி எழுப்பத் தொடங்கி விட்டது 

நாலாபுற பாதைகளிலும் செக்போஸ்ட்டுகள் முக்கிய இடங்களான ஜங்ஷன், பஸ் ஸ்டாண்ட், லாட்ஜ்கள் என்று எல்லா இடங்களிலும் போலீஸ் ஜீப்களின் திபுதிபு. 

ராஜவேணி கிட்டத்தட்ட நான்கடி உயரம். மேனி எங்கும் வெள்ளை நிறத்தில் பாத்து, பாத்து இடைவெளி விட்ட மாதிரி புள்ளிகள். தேன் நிறத்தில் கொஞ்சம் கருப்பை கலந்து செய்த கண்கள். இரண்டரை அங்குலத்துக்கு வெளித் தொங்கும் நாக்கு. 

இத்தனை லட்சணங்களோடு ராஜவேணி என்னும் அந்த நாயின் மூக்குப் பகுதியில் மோப்ப செல்கள் செயல் அசாத்யம் என்பது அன்றும் நிதர்சனமாகிறது. 

அந்த விடிகாலை போதிலேயே டாக் ஸ்க்வாட் கோச் ஜேக்கப்பின் கைப்பிடியில் அடங்காதபடி அது முனிரத்னம் ஓடிய திசையை கச்சிதமாக பின்பற்றி மரவனேரி எக்ஸ்டென்ஷன் வரை வந்துவிட்டது. 

காலை வேளையில் வாசலுக்கு கோலம் போட வந்த மரவனேரி மாமிகள், தங்கள் வீட்டு வாசலை முகர்ந்தபடி கடக்கும் ராஜவேணியை பார்த்து விதிர்த்துப் போனார்கள். 

சென்ட்ரி ஜேக்கப்போடு அன்வரும், இன்னும் சில போலீஸ்காரர்களும் களைப்பெடுக்க ஓடி வருவதைப் பார்த்து அவர்கள் முகத்தில் அதிர்ச்சி ரேகைகள் போடுகின்றன. 

உச்சிதமாக ராஜவேணி ராமலிங்கத்தின் ஓட்டு கம்பிவேலி வாசல் முன் போய் படுத்துக்கிறது. 

“சார், நிச்சயம் அந்த கொலைகாரன் இதுவரை வந்திருக்கான்.”- ஜேக்கப் சிலாகித்தான். 

“டொக்… டொக்…” அன்வர் போய் ராமலிங்கம் வீட்டு கதவை தட்டுகிறான். கொட்டாவியுடன் கதவை இறக்கிறான். அவனும் அன்வரை பார்த்த ஜோரில் ஒரு உதறல் பதறல்… 

”சார்..போலீசா… எதுக்கு சார்? நான் ஒரு குற்றமும் பண்ணலியே?” மாறிமாறி உளறுகிறான். அன்வரோடு கூடிய போலீஸ் அவன் புலம்பலை லட்சியமே பண்ணவில்லை. 

அவன் வீட்டை கண்களையே காம்பஸ் பாக்ஸ் ஆக்கி சலிக்கிறது கை. நாட்டு ஓடு வேய்ந்த சிறிய வீடு. வீட்டைச் சுற்றிலும் ஐந்தடி அகலத்தில் இரண்டு புறத்திலும் இடம். பின்பாகத்தில் இருபது அடிக்கு மேல் ஒரு வீடு கட்டுமளவு இடம் இருக்க, அங்கே கிணறும், அதன் ஈரத்தில் வளர்ந்த வாழையும் தழைத்திருக்க, அங்கங்கே ரத்தத் திப்பிகள், ஓரிடத்தில் நெருப்பைக் கொண்டு சுடப் பட்ட கோழியின் உதிர் சிறகுகள். 

அனைத்தையும் சுற்றி வந்து கவனிக்கும் அன்வர் கிணற்றுத் திட்டின் மேல் கைவைத்தபடி நின்றுகொண்டு ராமலிங்கத்தை ஒரு மாதிரி பார்க்க, அவன் திரும்பப் புலம்புகிறான். 

“என்ன சார் இது… நீங்கபாட்டுக்கு வந்தீங்க நிக்கறீங்க…. என்னென்னமோ பண்றீங்க. எனக்கு ஒண்ணும் புரியலே சார்..” எனும்போது கர்ப்ப வயிற்றுடன் கனகம் உள்ளிருந்து பயந்தபடி வெளியில் வருகிறாள். 

“என்னய்யா இது, வீட்டைச் சுத்தி ரத்தம்?” 

”சார், அது வந்து… காலைல பலி பூசை போட்டேங்க… அதான்.” 

“பலி பூசையா?” 

“ஆமாங்க… சம்சாரத்துக்கு அஞ்சு முடிஞ்சு ஆறாம் மாசம் ஆரம்பம். அதுக்காக பலி பூசை போட்டு கோழி அறுத்தேங்க… அந்த ரத்தம்தான் இது.”

அவன் விவரிக்கும் போதே அந்த ரத்தம் தோய்ந்த மண் கட்டிகளின் துளியை ஒரு போலீஸ்காரர் கிளவுஸ் தரித்த விரல்களால் எடுத்து ஒரு பாலிதீன் தாளில் பொட்டலமாக கட்டத் தொடங்கினார். 

இன்னொருவர் வீட்டிற்குள் எட்டிப் பார்க்கிறார். சினிமா ஃபிலிம் அடங்கி கிடக்கும் தகர பெட்டிகளின் வரிசையும், தட்டுமுட்டுகளும் தெரிகின்றன. 

“என்னது அது பெட்டிங்க…?” 

“சார்… அதெல்லாம் ஃபிலிம் பெட்டிங்க சார். பூலோக ரம்பை, பக்த குசேலா, மிஸ்டர் வேதாந்தம்னு அந்த காலத்து சினிமா படங்க சார்.” 

“நீ என்ன டிஸ்ட்ரிபியூட்டரா?” 

“இல்லேங்க ஜெய் கங்கா தியேட்டர் ஆபரேட்டருங்க. இது சைட் பிசினஸ்” அன்வர் அதைக் கேட்டு திரும்ப ஒரு நோட்டம் போட்டுவிட்டு ராஜவேணியிடம் வருகிறார். 

”என்ன ஜேக்கப், ராஜவேணி கோழி ரத்தத்தூக்கிட்ட ஏமாந்துட்டாப் போல இருக்கே” 

“இல்லே சார்… ராஜவேணி ஏமாறவே ஏமாறாது. அந்த முனி நிச்சயம் இங்க வந்திருக்கணும்.” 

“இருக்கலாம். ஆனா இங்க இல்லையே. இந்த வீட்டுக்காரனும் நம்ம கதவை தட்டிதான் எழுந்திருச்சிருக்கான். ராஜவேணியை வேற பக்கமாக மோட்டி வேட் பண்ணி பாருங்க.” 

ஜேக்கப் அடுத்த நொடி அதன் கழுத்துப்பட்டியைப் பிடித்து இழுக்கிறான். அதை அங்கிருந்து இழுக்கப் பார்க்கிறான். அது வராமல் அங்கேயே நிற்கிறது. 

”சார், ராஜவேணி தன் கேரியர்ல ஏமாத்துனதே இல்ல சார். அவன் இங்கதான் எங்கியோ இருக்கான்” ஜேக்கப் உறுதிப்படுத்த, அந்த அபிப்பிராயம் இராமலிங்கத்தை மிரட்டுகிறது. 

”யார் சார்… என்ன சார் விஷயம்?” ஒன்றும் தெரியாத மாதிரி கேட்டான். 

“யாரா… கொலைக்காரன் எட்டு மணி சன் நியூஸ் பாரு சொல்லுவாங்க. ஒண்ணும் தெரியாத மாதிரி கேட்டு மாட்டிக்காதே. தப்பித் தவறி அவன் இங்க இருந்து மாட்டினா அவனோட உன்னையும் தூக்குல ஏத்த வேண்டி வரும், ஞாபகம் இருக்கட்டும்.” 

அன்வர் மிரட்டுகிறார். ராமலிங்கம் வெளிறிப் போகிறான். பேசாமல் முனிரத்னம் கிணத்துக்குள் மூழ்கிய நிலையில் இருக்கிறான் என்று போட்டுவிட்டு விடுவோமா? 

நாக்கில் நுனிவரை வருகிறது அந்த நிஜம். ஆனால் வெடிக்க திராணி இல்லாது போகிறது. 

“என்னைக் காட்டிக்கொடுத்தே, இந்த ஊர்லேயே நீ நடமாட முடியாது. தலை ஒரு இடமும், உடம்பு ஒரு இடமுமா உன்னை கணக்கு தீர்த்துடுவாங்க என் ஆட்கள்” என்று அவன் சொன்னதில் போய் புத்தி நிற்கிறது. 

அன்வர் வேறு மாதிரி புரிந்து கொள்கிறார். ”ஜேக்கப் – நான் சொல்றேன், நிச்சயம் அவன் இங்க இல்லை. ராஜவேணிக்கு ஏதோ ஆயிடிச்சு. அவன் இதுவரை வந்து பக்கத்து டவுன் ரயில்வே ஸ்டேஷன்ல நுழைஞ்சு ஏதாவது ரயில் ஏறி தப்பி இருக்கலாம், ரயில்வே ட்ராக்குல அத விட்டு பாருங்க.. “

அன்வரின் கட்டளை அடுத்த நொடி செயலாகிறது. ராஜவேணியை வலுக்கட்டாயமாக பிடித்து, ரயில் பாதை வரை இழுத்துச் சென்று இறக்கிவிட்டதில் கிழக்கு சேலம் பக்கமாக ரயில்வே ட்ராக்கில் அது ஓடத் தொடங்குகிறது. 

”நான் சொல்லலை..”அன்வர் சிலாகிக்கும்போதே மனதிற்குள் மறக்காமல் பாஸ்கரதாஸை பார்த்துவிடும் ஒரு தீவிரத்திற்கும் வருகிறார். 

“பாஸ்கரதாஸ்.. நீ நிஜமாலுமே பெரிய கைரேகை ஜோதிடன்தான்” – மனதில் சர்டிபிகேட் வேறு தருகிறார்.

– தொடரும்…

– சொர்ணரேகை (நாவல்), முதற் பதிப்பு: 1999, திருமகள் நிலையம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *