அத்தியாயம்: ௪ | அத்தியாயம் :௫ | அத்தியாயம்:௬
கரை தேடல்
அன்றிரவு கறியை உண்டோம். மிகவும் அருமையாக இருந்தது. மறு நாள் காலை வடி சாறு சாப்பிட்டோம். புதைபடிமவியலின் எல்லா நியதிகள் படியும் இறந்து பல லட்சம் ஆண்டுகள் ஆகி விட்ட இந்த உயிரினங்களின் கறியைச் சாப்பிடுகிறோம் என்று நினைக்கும் போதே வித்தியாசமாக இருந்தது. புதுமையான அனுபவமாக இருந்தாலும் கொஞ்சம் சங்கடமாகவும் இருந்தது. ஆனால் எங்கள் வயிற்றுக்கு அது சங்கடமாக இருக்கவில்லை. ஓல்சன் சாப்பிட்டதைப் பார்த்தால் அவன் வயிறு வெடித்து விடும் என்று நினைத்தேன்.
அந்தப் பெண் அன்று இரவு எங்களுடன் வெடிக்கண்ணி அறைக்குப் பின் புறம் உள்ள சிறிய அதிகாரிகள் அறையில் சாப்பிட்டாள். அந்தக் குறுகலான சாப்பாட்டு மேசை விரிக்கப்பட்டது. நான்கு முக்காலிகள் இடப்பட்டன. வெகு நாட்களுக்குப் பின் அனைவரும் அமர்ந்து சாப்பிட்டோம். சில வாரங்களாக இருப்பதைப் பிரித்துக் குறைத்துச் சாப்பிட்டதில் இருந்து ஒரு பெரிய விடுதலை. நாப்ஸ் அந்தப் பெண்ணிற்கும் எனக்கும் இடையில் அமர்ந்தது. அதுவும் ப்லீஸியோசாரசின் கறியைச் சுவைத்தது. அதுவும் பாவம் கறி சாப்பிடாமல் ஏங்கி இருக்கும். அதுவும் அவ்வப்போது என்னை வெறுமையாக பார்த்து கொண்டே இருந்தது. ஏனெனில் நல்ல முறையில் வளர்க்கப்பட்ட ஒரு நாய் மேசையில் அமர்ந்தெல்லாம் சாப்பிடாது. ஆனால் இதுநாள் வரை அதுவும் சரியாகச் சாப்பிடாததை நினைத்து எனக்கும் சாப்பாடே உள்ளே செல்லவில்லை. பரவாயில்லை. அந்தப் பெண் அதற்கு ஊட்டி கொண்டிருக்கிறாள். அது போதும்.
லிஸ் என்னிடம் இறுக்கமான பணிவைக் காண்பித்தாள். ப்ராட்லி ஓல்சன் இருவரிடமும் இனிமையாகவும் அன்பாகவும் பேசினாள். அவள் மிகுந்த ஆர்வக்கோளாறு உள்ளவள் அல்ல. அதனால் அவளிடம் பெரிதாக நான் எதிர்பார்க்கவுமில்லை. அவள் என்னிடம் காட்டிய மிகச் சிறு கவனங்களுக்காக நான் மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன். ஓல்சன் சொன்ன ஒரே ஒரு விஷயம் தவிர அந்தச் சாப்பாடு மிகவும் அருமையாக இருந்தது. நாம் சாப்பிட்ட அந்த மிருகம்தான் அந்த ஜெர்மனியனையும் சாப்பிட்டிருக்கக் கூடும் என்றான். அவன் அப்படிச் சொன்ன பிறகு அந்தப் பெண்ணைச் சாப்பிட வைக்கச் சில நேரம் ஆகியது. இறுதியில் ப்ராட்லிதான் சமரசம் செய்தான். அந்த விபத்து நேர்ந்த இடத்தில் இருந்து நாம் நாற்பது மைல் தொலைவு வந்து விட்டோம். அதன் பின் அதே போல் ஆயிரக்கணக்கான மிருகங்களைப் பார்த்து விட்டோம். அதனால் நாம் சாப்பிட்டது அதுவாக இருக்க வாய்ப்பு மிகவும் கம்மி என்றான். “எனக்கென்னவோ ஓல்சன் அனைத்தையும் தானே ஆட்டையைப் போடுவதற்குச் செய்த தந்திரம் என்றே நினைக்கிறேன்” என்று சொல்லி முடித்தான்.
பிறகு நாங்கள் எதிர்காலத்தைப் பற்றி விவாதித்தோம். நாம் இனி என்ன செய்யப் போகிறோம் என்பதைப் பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்தோம். வெறும் தத்துவங்கள் தவிர்த்து யாருக்கும் எதுவும் தோன்றவில்லை. இந்த நிலம் பூராவும் இதே போல் கொடூரமான விலங்குகள் நிறைந்து இருந்தால் அங்கே யாரும் வாழ முடியாது. அதனால் நமக்குத் தேவையான தண்ணீர் பழங்கள் மற்றும் சில கறிகளும் பாதுகாப்பாக எடுத்துக் கொண்டு செங்குத்துப் பாறைகள் தாண்டித் திறந்து பரந்த கடலுக்குள் சென்று விட வேண்டியதுதான்.
அப்படியே எண்ணிக் கொண்டு சிறிய பொந்து போன்ற எங்கள் படுக்கைகளில் படுத்துக் கொண்டோம் நாளைய விடியல் இதே போல் நம்பிக்கையாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொண்டு. இரவு எங்களுக்கு நிம்மதியாகக் கழிந்தது. பின்னால்தான் புரிந்தது அந்த மிருகங்கள் காலை மிகவும் நேரம் கழித்துதான் சாப்பிட ஆரம்பிக்கும் என்று. பகல் பனிரெண்டு மணியில் இருந்து இரவு பனிரெண்டு வரை அவைகள் மிகவும் துடிப்பாக இருக்கும் நேரம். விடிந்ததில் இருந்து ஒன்பது மணி வரை சும்மா இருக்கின்றன. சொல்லப் போனால் நாங்கள் கீழிருக்கும் நேரம் ஒன்று கூட வந்து எங்களைத் தாக்கவில்லை. இருந்தாலும் பீரங்கியில் குண்டு பொருத்தி ஒருவனைத் தயார் நிலையில் வைத்திருக்கிறேன். பீரங்கிக் குண்டுக்காவது அவை பயப்படும் என்று நம்புகிறேன். அந்த மரங்களில் குரங்குகள் பல்வேறு விதமாய் இருந்தன. காட்டுக்குள் இருந்து மனித வடிவுடைய யாரோ எங்களை உற்று நோக்குவது தெரிந்தது.
நாங்கள் மேல் நோக்கி ஆற்றில் செல்ல ஆரம்பித்த சிறிது நேரத்தில் தெற்கில் மற்றோரு சிறிய ஆற்றைப் பார்த்தோம். அதுவும் இதே கால்வாயில்தான் கலந்தது. அது எங்களுக்கு வலது புறம் இருந்தது. அங்கிருந்து உடனே ஒரு பெரிய தீவு தென்பட்டது. ஐந்தாறு மைல் நீளம் இருக்கும். அங்கிருந்து ஒரு 50 மைல் தொலைவில் அதை விடப் பெரிய ஆறு வடமேற்கில் இருந்து வந்தது. கால்வாயின் திசை இப்போது தென் மேற்கில் இருந்து வடகிழக்காக மாறி விட்டது. இங்கே அந்த பல்லி போன்ற ஜந்துக்கள் எதுவும் இல்லை. இங்கே இருந்த தாவரங்கள் கிட்டத்தட்ட திறந்த வெளியாய் பூங்கா போல் இருந்தது. யூகலிப்டஸ் மற்றும் வேல மரங்களுடன் பெரணி போன்ற மரங்களும் சிதறிக் கிடந்தன. இரு வேறு நிலவியல் கால கட்டங்கள் ஒரு புள்ளியில் ஒன்று சேர்ந்தது போல் இருந்தது. புற்களில் பூக்கள் இல்லை. இருந்தாலும் அவைகள் மேல் வண்ணத்துப் பூச்சிகள் போல் புள்ளிகள் தெளிக்கப்பட்டு மிக ரம்மியமாக இருந்தன. விலங்கினங்களும் பெருவாரியாக இல்லை.
ஆறேழு மைல் தாண்டிய பிறகு ஆறு மிகப் பிரமாண்டமாக விரிந்தது. எங்களுக்கு முன்னால் பெரிய கடல் போன்ற பரப்பு விரிந்தது அடிவானம் வரை. அதன் பின் நிலங்கள் சூழ்ந்த ஒரு கடலுக்குள் கப்பலைச் செலுத்தினோம். அதுவும் மிகப் பெரிதாக இருந்தது. எங்கள் பக்கம் இருந்த அதனுடைய ஒரு கரை மட்டுமே தெரியும் அளவுக்கு அது விரிந்து பரந்திருந்தது. அங்கே இருந்த நீர் உயிரினங்களால் நிறைந்து ததும்பியது. அந்தப் பல்லிகள் சில இருந்தாலும் மீன்கள் ஆயிரக் கணக்கில் லட்சக் கணக்கில் இருந்தன.
அந்தக் கடலின் தண்ணீர் மிகவும் சூடாக இருந்தது. அதன் சுற்றுப்புறமும் சூடாகவும் பாரமாகவும் இருந்தது. கேப்ரோனாவின் அந்தப் பிரமாண்ட சுவர்களுக்குப் பின்னால் பனிமலை இருந்தது மிக வித்தியாசமாக இருந்தது. தெற்கில் இருந்து வந்த காற்றும் தந்தியடிக்க வைத்தது. ஆனால் இந்தக் கடல் காற்று ஒரு தென்றல் போல தாலாட்டியது. அது ஈரமாகவும் கதகதப்பாகவும் இருந்தது. நாங்கள் அனைவரும் மேலாடைகளைக் கழற்றி விட்டோம். கதிரவன் அவ்வளவு காயவில்லை என்றாலும் அது ஒரு நீராவி அறை போல்தான் இருந்தது. அடுப்பின் வெப்பம் போல் தாக்கவில்லை.
வடமேற்கு திசையில் அந்த ஏரியில் பயணித்துக் கொண்டிருந்தோம் ஒலி எழுப்பிக் கொண்டே. அது மிக ஆழமாக இருந்தது. அதன் அடியில் பாறைகளாய் இருந்தன. மையப் பகுதியை நோக்கிக் குழிகள் நிறைந்திருந்தன. கரையில் சிறிது தூரம் சென்ற பின் வேறெங்கும் அடிப்பகுதியே தெரியவில்லை. கரையின் சில விளிம்புகளில் இருந்து பார்த்தால் தூரத்தில் செங்குத்துப் பாறைகள் தெரிந்தன. கேப்ரோனாவின் கடற்கரை ஓரத்தில் இருந்த செங்குத்தான பாறைகளைப் போல் இல்லமால் இவைகள் கொஞ்சம் வேறுபட்டன. நான் என்ன நினைக்கிறேன் என்றால், கேப்ரோனா வெகு காலத்திற்கு முன்னால் ஒரு பெரும் மலையாய் இருந்திருக்க வேண்டும். உலகின் மிகப் பெரிய மலையாக இருந்திருக்க வேண்டும். அதன் பின் ஒரு மிகப் பெரிய எரிமலை வெடிப்பினால் அந்த மலை சிதறி ஆயிரக்கணக்கான அடிகள் அதைச் சுற்றி உள்ள கண்டத்தில் தூக்கி எறியப்பட்டிருக்க வேண்டும். அதனால் பெரும் பள்ளங்கள் உருவாகி இருக்கும். அதன் பின் அந்தக் கண்டம் மூழ்கி இருக்கக் கூடும். அந்தக் காலங்களில் கண்டங்கள் நகரும் என்று நாம் படித்திருக்கிறோம் அல்லவா. கேப்ரோனாவின் மேல் பகுதி மட்டும் வெளியில் தெரியுமாறு கடல் மூடி இருக்கும். அதைச் சுற்றியுள்ள தடுப்புச் சுவர்கள் நடுவில் உள்ள ஏரி அதற்குச் சூடான நீர் தரும் சுனைகள் எல்லாம் அதையே நிரூபிக்கின்றன. இங்கிருக்கும் விலங்குகளும் தாவரங்களும் இது ஒரு பெரு நிலப் பரப்பாக இருந்ததைத்தான் காட்டுகிறது.
கரையோரமாக நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கும் போது ஒரு திறந்த காடு போல் தான் அந்த நிலப்பரப்பு இருந்தது. இங்கும் அங்கும் சிற்சில இடங்களில் திறந்த வெளி இருந்தன. அங்கே சில மிருகங்கள் புற்களை மேய்ந்து கொண்டிருந்தன. இருவிழி நோக்காடியை வைத்து நான் பார்க்கும் போது ஒரு பெரிய சிவப்பு நிற மான், இன்னொரு வகையான மானினம் மற்றும் குதிரை போன்ற ஒரு உயிரினம் ஆகியவற்றைப் பார்த்தேன். பின் ஒரு கரடுமுரடான பெரிய எருமை போன்ற ஒரு மிருகம் தென்பட்டது. கேப்ரோனாவில் பட்டினியால் சாவதற்கு வாய்ப்பு மிகவும் கம்மி என்றே தோன்றியது. ஆனால் அந்த மிருகங்கள் மிகவும் எச்சரிக்கையாய் இருந்தன. அவைகள் எங்களைப் பார்த்தவுடன் தலையையும் வாலையும் ஆட்டிக்கொண்டு வேகமாய் ஓடிக் காட்டிற்குள் ஒளிந்து கொண்டன. அவைகளைப் பார்த்த உள்ளிருந்த மற்ற விலங்குகளும் ஓடிச் சென்று மறைந்தன. அந்த எருமை மாடு மட்டும் அப்படியே நின்றது. தலையைச் சற்று குனிந்து நாங்கள் அந்த இடத்தைக் கடக்கும் வரை எங்களையே பார்த்தது. பின் அதன் பாட்டுக்கு மேய ஆரம்பித்து விட்டது.
ஆற்றின் முகத்துவாரத்தில் இருந்து 20 மைல் தூரத்தில் சிறிய மணற்பாறைகள் இருந்தன. கேப்ரோனாவை ஒரு காலத்தில் கொந்தளிக்க வைத்ததன் நினைவுச் சின்னங்களாய் அவை இருந்தன. இந்தப் பாறை படிவங்கள் பல் வேறு காலங்களில் உருவானவை. ஆனால் ஒரே தளத்தில் இன்று இருக்கின்றன. சில இடங்களில் சேர்ந்தும் சில இடங்களில் தனித்தனியாகவும்.
அதன் அருகிலேயே நாங்கள் கிட்டத்தட்ட பத்து மைல் தொலைவு பயணம் செய்திருப்போம். அதன் பின் ஒரு அகலமான பிளவு ஒன்று இன்னொரு ஏரியில் எங்களை விட்டது. நாங்கள் குடி நீர் தேடி பயணம் செய்து கொண்டிருந்ததால் எந்த ஒரு இடத்தையும் விட்டு வைக்க விரும்பவில்லை. அந்த இடம் ஆழமாக இருந்ததால் நான் யூ-33 கப்பலை இரு நிலப் பரப்பிற்குள் செலுத்தினேன். இந்த மாதிரியான ஒரு இடம்தான் எல்லா கப்பலோட்டிகளும் விரும்பும் ஒரு அருமையான துறைமுகம் கைக்கெட்டும் தூரத்தில் நல்ல தண்ணீருடன். நாங்கள் மெதுவாகச் சென்று கொண்டிருக்கும் போது ஜெர்மானியர்களில் இருவர் அந்த மனிதன் போன்ற உருவத்தைக் கரையில் இருந்த ஒரு மரத்தின் பின் நூறடி தூரத்தில் பார்த்தார்கள். அதன் பின் சற்று நேரத்தில் ஒரு சின்ன நீரோடை அந்த விரிகுடாவில் கலந்ததையும் பார்த்தோம். அந்த நதியைக் கடந்த பின் நாங்கள் பார்த்த முதல் நீரோடை இதுதான். உடனே அந்த தண்ணீரையும் சோதித்துப் பார்க்க நான் ஆயத்தமானேன். கப்பலைத் தரை இறக்க வேண்டுமென்றால் கரைக்கு மிக அருகில் சென்றாக வேண்டும். ஏனெனில் இந்த நீரிலும் அந்த மிருகங்களின் தொந்தரவு இருக்கக் கூடும் அதிகமில்லை என்றாலும். ஒரு அடி மூழ்க வேண்டிய அளவுக்கு நீரைத் தொட்டியில் நிரப்பினேன். கப்பலை மெதுவாகக் கரையை நோக்கி ஓட்டினேன். கப்பல் தரை தட்டினாலும் நம்மை விடுவிப்பதற்குத் தேவையான உந்து சக்தி கொடுப்பதற்குத் தொட்டியில் இருக்கும் நீர் உதவும். ஆனால் கப்பலின் முன் பகுதி சரியாகச் சென்று கரையின் மேலிருக்கும் நாணல்களுக்கு இடையில் சென்று கரையைத் தொட்டது. கப்பலின் அடிக்கட்டை இன்னும் நீருக்குள் அமிழ்ந்தே இருந்தது.
எனது ஆட்கள் அனைவரும் கைத் துப்பாக்கியையும் சுழல் துப்பாக்கியையும் ஏந்தி இருந்தார்கள். ஒவ்வொருவரிடமும் தேவையான அளவு குண்டுகளும் இருந்தன. நான் ஒரு ஜெர்மன்காரனைக் கீழிறங்கச் சொன்னேன். பின் அவனைத் தொடர்ந்து எனது ஆட்கள் இருவரை அனுப்பினேன். கேப்ரோனாவின் நிலப் பகுதியில் நமக்கு ஏற்பட்டிருக்கும் கொஞ்ச நஞ்ச அனுபவங்களைப் பார்க்கும்போது எப்போது வேண்டுமானாலும் புதிதாக ஆபத்துகள் நேரலாம். சிறிய மரத்தின் பக்கத்தில் அவர்கள் வரிசையாய் நிற்கும் போது நான் நங்கூரத்தை இறக்கினேன்.
உடன்படிக்கை
அவர்கள் திரும்பவும் கப்பலில் ஏறிய பிறகு, நான் அனைவரையும் மேல் தளத்திற்கு வரச் சொன்னேன் வான் ஸ்சோன்வர்ட்ஸையும் சேர்த்து. இரு குழுக்களாய் எதிரிகளாய் இருந்து கஷ்டப்படுவதை விட நமக்குள் ஒரு உடன்பாடு ஏற்பட வேண்டும் என்று நான் விளக்க ஆரம்பித்தேன். நாம் ஒற்றுமையாய் இருந்தால்தான் இங்கு உயிர் வாழவே முடியும். நமது உலகத்தின் போரில் இருந்து வெகு தூரம் பயணித்து வந்திருக்கிறோம். லட்சக்கணக்கான மைல் தூரமும் பல யுகங்களையும் கடந்து வந்தது போல் வந்திருக்கிறோம். அதனால் இந்தப் புதிய உலகில் நாம் நுழைவதற்கு ஒரு காரணம் நோக்கம் நிச்சயம் இருக்கும்.
“நாம் ஏன் நமது இன மற்றும் அரசியல் வெறுப்புகளைக் கேப்ரோனாவிற்குள் எடுத்து வர வேண்டும்.” என்று வற்புறுத்தினேன். “இங்கிருக்கும் ஜெர்மானியர்கள் ஆங்கிலேயர்கள் அனைவரையும் கொன்று விடலாம். இல்லையேல் ஆங்கிலேயர்கள் ஜெர்மானியர்களைக் கொன்று விடலாம். இதனால் மேற்கில் நடக்கும் ஒரு சின்னக் கலவரமும் பாதிக்கப்படாது. அதே போல் ஒரு எதிரி நாட்டிலோ அல்லது நட்பு நாட்டிலோ இருக்கும் எந்தவொரு தனி மனிதக் கருத்தினையும் இது மாற்றிவிடப் போவதுமில்லை. அதனால் உங்களிடமே நேரடியாக விட்டுவிடுகிறேன். கேப்ரோனாவில் இருக்கும் காலங்களில் நாம் நம்முடைய பகை மறந்து ஒன்றாய் வேலை செய்வோம். இல்லையேல் இப்படியே பிரிந்து பாதி பேர் ஆயுதங்களுடன் கடைசி ஒருவன் சாகும் வரை தொடரலாம். உங்களுக்கு ஏற்கெனவே புரியவில்லை என்றால் நான் இப்பொழுது விளக்கிச் சொல்கிறேன். இங்கிருந்து உயிருடன் வெளியே செல்வதற்கான சாத்தியம் ஆயிரத்தில் ஒன்றுதான். உணவும் தண்ணீரையும் பொறுத்த அளவு நாம் பாதுகாப்பாக இருக்கிறோம். நமக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொண்டு மீண்டும் கப்பலில் பயணம் செய்யலாம் என்று நினைத்தாலும் நமக்கு எரிபொருள் தேவை. அது இல்லாமல் கடலுக்குள் இறங்க முடியாது. ஏனெனில் இந்தச் செங்குத்துப் பாறைகளைத் தாண்டுவதற்கு நீர்மூழ்கியால் மட்டுமே முடியும். என்ன சொல்கிறாய்” என்று வான் ஸ்சோன்வர்ட்ஸிடம் திரும்பினேன்.
அவன் சந்தேகக் கண்களுடன் என்னைப் பார்த்து கேட்டான். ஒரு வேளை யூ-33 கப்பல் செயல்பாட்டிற்கு வந்து விட்டால் அதன் பின் நமது நிலை என்ன என்று கேட்டான். நாம் நமக்குள் விசுவாசமாக இருந்தால் நாம் கேப்ரோனாவில் இருந்து சேர்ந்தே வெளியில் செல்லலாம். கப்பலை எடுப்பது சாத்தியமானால் அருகில் இருக்கும் ஒரு நடுநிலைமையில் உள்ள ஒரு நாட்டின் கடற்கரையில் ஒதுங்கி அந்த நாட்டின் அதிகாரிகளிடம் சரணடைவோம். போர் முடியும் வரை நாம் அங்கிருக்க நேரலாம். அவன் சரியென்று சொன்னது எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. இந்த நிபந்தனைகளை எல்லாம் ஒத்துக் கொண்டு அனைவரின் நன்மைக்காக விசுவாசமாகச் செயல்படலாம் என்று உறுதி அளித்தான்.
அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு நான் ஒவ்வொருவரையும் தனித்தனியாகக் கூப்பிட்டுப் பேசினேன். அனைவரும் நான் சொன்னதை ஒத்துக் கொண்டார்கள். மேலும் நாங்கள் ஒரு ராணுவமாகக் கட்டுப்பாடுகளுடன் செயல்பட வேண்டும் என்றும் ஒத்துக் கொண்டோம். நான் இதற்குத் தலைமைப் பொறுப்பு வகிப்பேன். எனக்கு முதல் துணை அதிகாரியாக ப்ராட்லியும் ஓல்சன் இரண்டாவதாகவும் இருப்பார்கள் ஆங்கிலேயர்களை வழி நடத்த. வான் ஸ்சோன்வர்ட்ஸ் கூடுதலாக இரண்டாவது துணை அதிகாரியாக அவனது ஆட்களை வழி நடத்தலாம். இந்த 4 பேரும் ஒரு ராணுவ நீதிமன்றமாகச் செயல்படுவோம். விதிகளுக்கும் ஒழுக்கத்திற்கும் கட்டுப்படாதவர்களுக்குத் தண்டனை வழங்குவோம் மரண தண்டனை உட்பட.
அதன் பின் ஜெர்மானியர்களுக்கும் ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் வழங்கினேன். ப்ராட்லியுடன் ஐந்து பேரை யூ-33 – ஐப் பாதுகாக்க வைத்தேன். மீதி இருந்த அனைவரும் நிலத்திற்குள் சென்றோம். முதலில் அந்த ஓடையின் நீரைத்தான் சுவைத்தோம். அது மிகவும் சுவையாகவும் குளிர்ச்சியாகவும் இருந்தது. இதில் அந்த மிருகங்கள் ஒன்று கூட இல்லை. எழுபது டிகிரிக்குக் கொஞ்சம் குறைந்தாலும் அவைகள் சோர்ந்து விடும் என்பது பின்புதான் புரிந்தது. அவைகளுக்குக் குளிர்ந்த நீர் பிடிக்காது. அதனால் அதில் இருந்து எவ்வளவு தூரம் தள்ள முடியுமோ அவ்வளவு தூரம் தள்ளியே இருந்தன. அங்கே குளத்து மீன்கள் ஏகப்பட்டவை இருந்தன. மிக ஆழமான பள்ளங்களும் இருந்தன. அவைகளைப் பார்த்தவுடன் அதில் இறங்கிக் குளிக்க வேண்டும் என்ற ஆர்வம் எங்களுக்குத் தலை தூக்கியது. கரையோரம் நிறைய மரங்கள் இருந்தன. அவைகள் சாம்பல் நிறத்தில் புங்க மரத்தையும் கருவாலி மரத்தினையும் நினைவு படுத்தின. அவைகள் இந்தக் குளிர்ந்த நீரின் மேல் இருக்கும் குளிர்ந்த காற்றினால்தான் அப்படி இருக்கின்றன. அவைகளின் வேர்களுக்கு இந்தக் குளிர்ந்த நீரோடையில் இருந்துதான் நீர் பாய்கிறது. அந்தச் சுடு நீர் சுனை இதன் மேல் படுவதில்லை. அதே போன்ற சுனைகள் கேப்ரோனா முழுவதும் நிறைந்து இருந்தன என்பதைப் பின்னர் கண்டுபிடித்தோம்.
எங்கள் முதல் கவலை கப்பலில் குடி நீரை நிரப்புவதுதான். அது முடிந்தவுடன் வேட்டைக்குச் செல்ல ஆயத்தமானோம். நிலப்பரப்பிற்குள் சிறிது தூரம் சென்றோம். ஓல்சன் வான் ஸ்சோன்வர்ட்ஸ் இவர்களுடன் இரண்டு ஜெர்மானியர்களும் இரண்டு ஆங்கிலேயர்களும் என்னுடன் வந்தனர். அதனால் இப்போது 10 பேர் கப்பலையும் அந்தப் பெண்ணையும் பாதுகாப்பதற்காக இருந்தனர். நாப்ஸை விட்டுச் செல்லலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் அது மிக்க மகிழ்ச்சியுடன் எங்களுடன் வந்து ஒட்டிக் கொண்டது. அதனால் அதைத் திருப்பி அனுப்ப மனம் வரவில்லை. கிட்டத்தட்ட ஒரு 5 மைல் தூரம் கரையை ஒட்டியே நாங்கள் அழகிய அந்த நிலத்தில் பயணித்துக் கொண்டிருந்தோம். அதன் பின் அந்த ஓடை உற்பத்தி ஆகும் பாறாங்கற்கள் பரவி இருக்கும் இடத்தை அடைந்தோம். அந்தக் கற்களுக்கு நடுவில் ஒரு இருபது பனி போல் குளிர்ந்த சுனைகள் உற்பத்தி ஆகிக் கொண்டிருந்தன. அந்தப் பாறைகளின் வடக்கில் சுமார் 50 முதல் 75 அடி வரை மணல் கற்பாறைகள் இருந்தன. அதன் அருகே நெடிது உயர்ந்த மரங்கள் அவைகளை மறைத்து வளர்ந்திருந்தன. மேற்கில் இந்த நாடு சமவெளியாக மரங்கள் கம்மியாக இருந்தன. இங்குதான் எங்கள் முதல் விளையாட்டு ஆரம்பமானது. ஒரு பெரிய செந்நிற மானைப் பார்த்தோம். அது புல் மேய்ந்து கொண்டிருந்தது. எங்களில் ஒருவன் சுட்டிக் காட்டியபோது அது எங்களைப் பார்க்கவில்லை. அமைதியாக இருக்கும்படி சைகை செய்தபின் அனைவரையும் அமரச் சொன்னேன். விட்லியை மட்டும் கூப்பிட்டுச் சற்று முன்னேறினேன். நாங்கள் அதற்கு ஒரு 100 அடி தூரத்தில் வந்தோம். அப்போது திடீரென்று தன் கொம்புள்ள தலையைத் தூக்கிப் பார்த்துத் தன் பெரிய காதுகளைக் குத்தியது. நாங்கள் இருவரும் ஒரே நேரத்தில் அதனைச் சுட்டோம். அது கீழே விழுந்ததில் எங்கள் இருவருக்குமே மகிழ்ச்சி. பின்னர் கத்தியை எடுத்துக் கொண்டு அதனை முடித்து விடப் பாய்ந்தோம். அந்த மான் ஒரு சின்ன இடத்தில் கள்ளிச் செடிகளுக்குப் பக்கத்தில் கிடந்தது. ஒரு சில அடிகளுக்குப் பக்கத்தில் அதை நெருங்கிய போது சட்டென இருவரும் ஒரே நேரத்தில் நின்றோம். நான் அவனைப் பார்த்தேன் அவன் என்னைப் பார்த்தான். நாங்கள் இருவரும் மான் இருக்கும் திசையைப் பார்த்தோம்.
“என்ன சார் அது” என்று கேட்டான் விட்லி.
“அது எனக்கு ஒரு பிழை போல் தெரிகிறது.” என்றேன். “கடவுளின் உதவியாளர் யானை செய்யும் நேரத்தில் பல்லி செய்யும் வேலைக்கு மாற்றப்பட்டுவிட்டார் போல் தெரிகிறது”
“அப்படிச் சொல்லாதீர்கள் சார்.” என்றான் விட்லி. “அது தெய்வ குற்றம் ஆகி விடும்”
“நமது உணவை அந்த உருவம் சாப்பிடுகிறதே அதை விடவா பெரிய தெய்வ குற்றம் ஆகி விடப் போகிறது.” என்று பதில் அளித்தேன். பெயர் என்னவென்றே தெரியாத அந்த உயிரினம் நாங்கள் சுட்டு வீழ்த்திய மானின் மேல் பாய்ந்து அவசரம் அவசரமாகக் கடித்து மெல்லாமல் அப்படியே விழுங்கிக் கொண்டிருந்தது. அந்த உருவம் ஒரு பெரிய பல்லி போல் 10 அடி உயரத்தில் இருந்தது. அதன் உடம்பைப் போல் பெரிதாக பலம் வாய்ந்த வால் இருந்தது. பின்னங்கால்கள் பெரிதாகவும் முன்னங்கால்கள் சின்னதாகவும் இருந்தன. காட்டில் இருந்து வெளியே வரும்போது ஒரு கங்காரு போல பாய்ந்து வந்தது அதன் பின்னங்கால்களையும் வாலையும் வைத்து. பின் நேராக நின்ற போது அதன் வாலைப் பயன்படுத்தி நின்றது. அதன் தலை தடியாகவும் நீளமாகவும் இருந்தது. அது வாயைத் திறக்கும்போது கிட்டத்தட்ட அதன் கண்களுக்குப் பின்னால் வரை சென்றது. அதன் பற்கள் மிகவும் கூர்மையாக நீளமாக இருந்தன. செதில்கள் நிறைந்த அதன் உடல் கருப்பும் மஞ்சளுமாய் புள்ளிகள் ஒரு அடி விட்டமுடையவை ஒழுங்கில்லாமல் சிதறியவண்ணம் இருந்தன. அந்தப் புள்ளிகளை செந்நிற எல்லைக் கோடு ஒரு இன்ச் அளவு சுற்றி இருந்தது. அதன் நெஞ்சுப் பகுதியும் வாலின் கீழ்ப் பகுதியும் வெளிர் பச்சை நிறத்தில் இருந்தன.
“இப்பொழுது என்ன செய்வது சார்” என்று கேட்டான் விட்லி.
நான் சொல்லும் வரை பொறுமையாய் இரு என்றேன். பிறகு ஒரே நேரத்தில் சுடலாம். நீ அதன் இதயத்தை நோக்கிச் சுடு. நான் அதன் முதுகெலும்பில் சுடுகிறேன் என்றேன்.
“என்ன இதயமா. சரிங்க சார்.” என்று பதில் அளித்தவன் அவனது துப்பாக்கியைத் தூக்கித் தோளில் போட்டான்.
எங்கள் தோட்டாக்கள் ஒரு சேரப் பாய்ந்தன. கண்கள் எங்களுக்குச் சம தளத்தில் வரும்வரை அது தன் தலையைத் தூக்கியது. பின் ஒரு பயங்கரமான சீற்றத்தை வெளிப்படுத்தியது. பின் கொடூரமான ஒரு சத்தத்துடன் எங்களை நோக்கிப் பாய்ந்தது.
“அதனை அடி விட்லி.” என்று கத்தினேன் ஓடுவதற்குத் திரும்பிக் கொண்டே.
எங்கள் ஆட்களிடம் இருந்து ஒரு கால் மைல் தூரத்தில்தான் இருப்போம். அவர்கள் உயரமாய் வளர்ந்த புற்களின் பின்னால் மறைந்து எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதனால் உடனே அவர்கள் எழுந்து எங்களை நோக்கி ஓடி வந்தார்கள். அவர்களுடன் நாப்ஸும் ஓடி வந்தது. எங்கள் பின்னால் ஓடி வந்த விலங்கு எங்களை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது நாப்ஸ் ஒரு விண்கல் போல அந்த விலங்கை நோக்கிப் பறந்து வந்தது. அதனைத் திரும்ப அழைத்தேன். ஆனால் அது என் பேச்சைக் கேட்பதாய் இல்லை. நாப்ஸைப் பறிகொடுக்க விரும்பாததால் நானும் நின்று திரும்பி அந்த விலங்கை எதிர் கொள்ளத் தயாரானேன். அது நாப்ஸைப் பார்த்ததும் எங்களை மறந்து விட்டது. நாப்ஸ் அதனை முறைத்துக் கொண்டு பற்களைக் கடித்துக் கொண்டு அதன் முன் நின்றபோது அந்த விலங்கு ஒரு கணம் நின்றது. பின் தன் கூரிய பற்களால் ஆக்ரோஷமாய்க் கடிக்க முயற்சித்தது.
மின்னல் வேகத்தில் பறக்கும் நாப்ஸை அந்த மெதுவாக யோசித்துச் செய்யும் விலங்கினால் எதுவும் செய்ய முடியவில்லை. தன் எதிரியின் தாக்குதலில் இருந்து சட்டென்று விலகியது. பின் நாப்ஸ் அதன் பின் புறம் சென்று அதன் வாலைக் கவ்விக் கொண்டது. அங்குதான் நாப்ஸ் தன் வாழ்வின் மிகப் பெரும் தவறைச் செய்தது. புள்ளிக் கோலம் போல் இருந்த அந்த உறுப்பில் ஓர் அசுர பலம் இருந்தது. ஒரு டஜன் பிரமாண்டமான கவண் போன்ற ஆயுதங்களின் பலம் அதில் இருந்தது. ஒரு சின்ன திருப்புதலால் நாப்ஸை அது ஒரு நூறடி உயரத்தில் காற்றில் வீசியது. அந்த மிருகம் காட்டினுள் இருந்து வந்த அதே இடத்தில் சென்று நாப்ஸ் விழுந்தது. அதன் பின் பார்த்தால் அந்தக் கோரமான மிருகமும் தடாலென்று கீழே விழுந்தது.
அது நடந்த ஒரு நிமிடத்தில் ஓல்சன் வான் ஸ்சோன்வர்ட்ஸ் இருவரும் தங்கள் ஆட்களுடன் அங்கு வந்து சேர்ந்தனர். பிறகு மெதுவாக அந்த மிருகத்தை நோக்கி அடி எடுத்து வைத்தோம். அது இறந்துதான் போய் இருந்தது. ஆராய்ந்து பார்த்தபோதுதான் தெரிந்தது. விட்லியின் குண்டு அதன் இதயத்தைத் துளைத்திருந்தது. எனது குண்டு அதன் முதுகெலும்பை உடைத்திருந்தது.
“பின் ஏன் அது உடனே சாகவில்லை” என்று ஆச்சர்யமாகக் கேட்டேன் நான்.
“ஏனெனில்” என்று வழக்கமான வெறுக்கத்தக்க பாணியில் ஆரம்பித்தான் வான் ஸ்சோன்வர்ட்ஸ். “இந்த மிருகம் மிகப் பெரிது. அதனுடைய நரம்பு மண்டலம் மிகவும் மட்டமானது. அதனால் அதன் சாவுச் செய்தி அதன் சின்ன மூளைக்கு எட்டுவதற்கு இவ்வளவு நேரம் ஆகி இருக்கிறது. இது உங்கள் குண்டுகள் பாய்ந்தவுடன் இறந்து விட்டது. ஆனால் சில நேரம் கிட்டத்தட்ட ஒரு நிமிடம் கழித்து தான் அதற்கு விளங்கி இருக்கிறது. இது மேல் ஜுராசிக் காலத்தைச் சேர்ந்த ஆலோசராஸ் என்ற மிருகம் என்று நினைக்கிறேன். நியூ யார்க் நகரத்தில் உள்ள மத்திய வயோமிங் என்னும் இடத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் அது காட்சிப் பொருளாக இருக்கிறது.”
இடைப்பட்ட நேரத்தில் நான் நாப்ஸைத் தேட ஆரம்பித்தேன். எனக்கு ஒரே பயமாய் இருந்தது. பாவம் அந்தச் சின்ன உருவம் கள்ளிச் செடிகளுக்கிடையில் கூழாகிக் கிடக்குமோ என்று அஞ்சியபடியே தேடினேன். ஆனால் அது திடீரென்று ஒரு மரத்தின் அடியில் இருந்து எழுந்து வந்தது. அதன் காதுகள் விறைப்பாய் இருந்தன. அதன் வால் கால்களுக்கு நடுவில் தொங்கியது. அதன் உடம்பு லேசாக வளைந்திருந்தது. சிறு காயங்கள் தவிர வேறெதுவும் இல்லை. எனக்குத் தெரிந்து மிகவும் தண்டிக்கப்பட்ட நாய் இதுவாகத்தானிருக்கும்.
அந்தச் சிவப்பு மானின் மிச்சம் மீதியைச் சேகரிக்க அதனை நோக்கிச் சென்றோம். அதன் தோலை உரித்துச் சுத்தப்படுத்தியபின் அதை எடுத்துக் கொண்டு எங்கள் கப்பலை நோக்கிச் சென்றோம். செல்லும் வழியில் நான் ஓல்சன் ஸ்சோன்வர்ட்ஸ் மூவரும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று விவாதித்துக் கொண்டே சென்றோம். நமக்கென்று நிரந்தரமான ஒரு கூடாரம் இந்தக் கரையில் அமைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்று முடிவெடுத்தோம். இப்படி ஒரு வெது வெதுப்பான பருவத்தில் சூடான நீர் இருக்கும் போது கப்பலின் உள்ளே இருப்பது இயலவே இயலாது. அதனால் ஒரு வேலி சூழ்ந்த கூடாரம் அமைக்கலாம் என்று முடிவெடுத்தோம்.
– தொடரும்…
தமிழாக்கம்: சு.சோமு, Translation of the book ‘The Land That Time Forgot’ by Edgar Rice Burroughs
வெளியான மாதம்/ஆண்டு: May 2017 in kdp.amazon.com