Preface
“தமிழில் ஒரு சூப்பர் ஹீரோ ஜேனர்” என்று ஒரு வரியில் அடிக்கிவிட முடியாது! ஃபேண்டஸி (Fantasy) நாவல் என்றும் கூறலாம். அட்வெஞ்செர் (Adventure) உம் தான். நாவல் என்ற பெயர் காதில் நுழைந்து யோசனைகள் உருவாவதற்கு முன் சிறு வயதிலிருந்தே “கதை” என்று தான் தெரியும். “இந்த கதை நன்றாக உள்ளது” நான் உருவாக்கிய கதாபாத்திரம், சூப்பர் சக்திகள் அவனுக்கு இருக்கும். சாகசம் செய்வான். என்று கற்பனைக்கு வடிவம் கொடுத்தேன். பென்சில் நுனி மூலம் ஞாபக பார்வையில் தோன்றிய உருவம் வெற்றுத் தாளில் உருவானது. உயிர் பெற்று எழுந்தான். அது ஒரு வழக்கமாக ஆனது. வயதுகள் கடந்தது, கார்ட்டூன் மூலம் இருந்து சினிமா வரை. “சூப்பர் ஹீரோ” என்ற பெயர் காற்றில் ஓசையானல் எனக்கு அது ஒரு ஆனந்தத் துள்ளல். இந்த உலகத்தில் என்னை தவிர யாருக்கும் தெரியாத என் கற்பனையில் எழும் உயிரை உயிர்ப்பிக்க பென்சிலை விட்டு பேனைக்குக் கைச் சென்றது. எழுதினேன். அவனை பற்றி. அவனின் சாகசத்திற்கு முன் அவனுக்கு ஒரு வாழ்க்கைக் கொடுத்தேன். என் அறிவில் கதை வடிவம் உதித்தது. ஒரு படைப்புக்கான அடித்தளம் உருவானது. ஆனந்தத்தில் ஒரு ஆர்வம்; சிறு வயது காலத்தில் எனக்கு கதைகளை உருவாக்கும் சக்தி வந்ததிலிருந்து. காலம் கடக்க வயதுகள் ஏறியது. எதோ எழுதினேன். கற்பனைகள், அழியாத எழுத்து மூலம் உயிர் பெறுவது ஒரு புது அனுபவமானது. மற்ற கதை புத்தகங்கள் பற்றிய ஒரு ஆர்வம் கூடியது. (ஏற்கனவே இருந்த ஆர்வம் தான்). படித்தேன். சிறந்த எழுத்தாளர்களின் எழுத்துக்களைக் கற்றேன். என் உலகத்தை காண்பிக்க எழுத்துக்கள் உருவாகி உதவியது. ஒரு கிரியேட்டிவ் (creative), உருவாக்கம் மட்டும் தான் என்னால் முடிந்த சக்தி என்று உண்மையை உணர்ந்தேன். நாவல் என்பது எவ்வளவு இனிமையான ஒரு துறை. அழகிய தமிழில் மட்டும், இந்த காலத்தில் நாவல் வாசிப்பு சரிவை நோக்கியே போகிறது. ஆனால் ஆங்கில நாவல் துறை என்றும் ஒரே மாதிரிதான். Novel, Graphic novel, Comics என்று முன்னேறி செல்கிறது.
நாம் காணும் அனைத்தும் படைப்புகள் தான். ஒரு உலகம், சம்பவம், கதாபாத்திரங்கள் அனைத்தும். நாம் பார்க்கும், பாவிக்கும் அனைத்தும் ஒரு படைப்புகள் தான். அந்த படைப்புகளுக்கு ஆரம்பத்தில் பிறப்பு சக்திகள் கொடுத்தது எதாவது வழியில் எழுத்துகள் மட்டுமே. படைப்புகள் எனது சக்தி என்று தெரிகிறது (My super power). அதன் பிறப்பு எழுத்துகள் மூலம் மட்டுமே அமையும் என்று நம்புகிறேன். அதனால் என்னுடைய படைப்பு, எனது உலகம் நாவல் வடிவத்தில் உருவாகிறது!
கதையில் ஒரு கதாபாத்திரத்திற்கு மட்டும் அதீத சக்திகள் கொடுத்துவிட்டால் என்ன ஆகிவிடும். மாற்றமும் புதுமையும் நிகழாது. அனுபவமும், கற்பனை திறனும் சேர்ந்து உருவாகிய படைப்பில் கருத்துக்களும் வேண்டும் என்று கதையை செதுக்கினேன். தமிழனுக்கு தமிழ் சுவையில் ஒரு கலை ரசனைக்கு உண்டான அம்சங்களும், சிந்திக்கும் கருத்துக்களும் வேண்டும் என்றே என் கற்பனை சக்தியில் ஒரு ஆர்வ ஓட்டம் ஏறும் ஆரம்பத்தின் போது உருவாகிய கதை இது.
– ஶ்ரீசரவணன்
பாகம் ஒன்று
அத்தியாயம்-1 | அத்தியாயம்-2
அத்தியாயம் ஒன்று – வரவேற்பு
அந்தமில்லாத கற்பனை பெருங்கடலில் மூழ்கி சிறிது உள்ளே செல்வோம். இங்கு பிரபஞ்சம், உலகம், உயிர்கள், மனிதம்… இன்னும் பல. நாம் வாழும் இந்த பூமியில் சிறிய மாற்றங்களைச் செய்து புதிய கற்பனை உலகத்திற்கு செல்வோம். கால அலைகளின் உதவியுடன் சற்று பின்னோக்கிச் செல்வோம். வருடம் – இரண்டாயிரத்து பதினாருக்கு! வந்துவிட்டோம்.
இலங்கை தீவின் தெற்கே எண்பத்து எட்டாயிரத்து எண்நூற்றுப் பத்து கிலோமீட்டர் தொலைவிலும், மடகாஸ்கர் மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு மத்தியிலும் ஏறத்தாழ சுமார் ஒரு லட்சத்து முப்பத்து ஐயாயிரம் இருநூற்று பத்து சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதுமான “பேரு” என்கிற மத்திய தீவை அடிப்படையாகக் கொண்ட பரந்து, விரிந்து, தீவுகள் உண்டு. தற்கால தொழில்நுட்ப வளர்ச்சியினாலும், செயற்கை கோள்களின் உதவியினாலும் கூட உலக வரைபடத்திலிருந்து இந்த தீவுகளை அவதானிக்க முடியாது என்பது இதுவரை அவிழாத மர்மம். அதன் காரணமாகவே உலகின் பல நாடுகளின் மக்களால் கட்டுக்கதையாக இருந்தாலும் சில நாடுகளின் அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாகவும் உள்ளது. ரகசிய நிழல் அரசாங்கத்தைப் போலவே உலகின் பல வகையான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும், எதிர்கொள்ள முடியாத ஆபத்துக்களை எதிர்நோக்கிப் பாதுகாப்பை வழங்குவதற்கும் உலகம் முழுவதும் பல அமைப்புகள் உள்ளன. அவற்றை போன்று ஆசிய பாதுகாப்பில் முதன்மையான, உலகம் அறியாத ரகசிய பாதுகாப்பு அமைப்பான சேஃப் (S.A.F.E) strategic asian fortify enforcement (தந்திரோபாயம் வாய்ந்த ஆசிய, பலப்படுத்தப்படுகிற சட்ட அமுலாக்க நிறுவனம்) இந்த தீவின் மத்தியில் தான் உள்ளது.
அந்த பேருவின் மத்தியில் சூரியன் செங்கதிர்களை வீசிக் கொண்டிருக்கும் மதிய வேளையில் கடல் அலைகளின் சப்தமும், வானத்தில் பறவைகளின் கீச்சல்களும், செயற்கையல்லாத பசுமை இயற்கையும் ரம்யமான சூழலாக காட்சியளித்தது. பேருவின் மத்திய பிரதேசம் சேஃப் இன் கட்டுப்பாட்டில் உள்ள தீவாக உள்ள காரணத்தில் அங்கு மனித நடமாட்டமும் அதிகமாக உள்ளது. அதனாலேயே ஆங்காங்கே கட்டிடங்களும், பாதை அமைப்புகளும், குடிசைகளும், குளங்களும், ஏரிகளும், பயிர் நிலங்களும் என்பன அதிகமாக காணப்பட்டன.
வானத்தில் தட்டான் பூச்சிகளைப் போல் பறந்து கொண்டிருக்கும் சிறிய வானூர்திகள். அவைகள் அனைத்தும் ஓர் பிரம்மாண்ட அசுர வானூர்தி ஒன்றை பின் தொடர்ந்து சென்றுக் கொண்டிருந்தது. அமைதியான சூழலுக்கு இடையில் வானூர்திகளின் இரைச்சல் சூழலின் ஒலியை கொன்றுவிட்டது. சிறிது தூரம் செல்ல செல்ல தூரத்தில் பிரம்மாண்ட கட்டிடங்களிலான அழகிய வீடு ஒன்று உள்ளது. அதனை நோக்கியே அவ்வானூர்திகள் சென்றுக் கொண்டிருந்தன. அந்தக் கட்டிடம் அருகே வானூர்திகள் தரை இறங்கும் இடத்தில் அனைத்து வானூர்திகளும் தரை இறங்கின. இறங்கிய வேகத்திலேயே அதனுள் இருந்து படைவீரர்கள் பலபேர் எந்திர ஆயுதங்களுடன் திபு திபு என்று கீழ் இறங்கினர். அவர்கள் அருகில் இருந்த கட்டிடங்கள் அனைத்தும் பாதுகாப்பு அரண்களினால் முற்றுகை இட்டு மூடியிருந்தது. கட்டிடங்களுக்குள் உள் நுழைவதற்கு எந்த வகையிலும் வழி இல்லை.
வானூர்திகள், ஆயுதங்கள் ஏந்திய வீரர்கள் என்றாலே பேரு தீவில் சேஃப் இனர்கள் என்றே அறிவர். அவர்களினால்தான் பேரு தீவின் மத்திய பகுதி முழுவதும் கட்டுப்பாடாகவும், பாதுகாப்பாகவும் உள்ளது. பேருவின் மற்ற பகுதிகள் தனிமையான கைவிடப்பட்ட தீவுகளாகவும், பழங்குடிகளின் காடாகவும், குக்கிராம வாசிகளின் ஆளுகையிலும் உள்ளது. சில தீவுகள் தீவிரவாதிகளின், பாதாளகும்பல்களின் ஆக்கிரமிப்பிலும் உள்ளது.
சரி! கதைக்களத்திற்குச் செல்வோம். சேஃப் இனர்களின் செயல்களை எல்லாம் ஒருவன் ஒரு மேட்டின் உச்சிமேல் இருந்து தொலைநோக்கியினூடாக கவனித்திக் கொண்டிருந்தான். சேஃப் இன் ஆட்கள் கட்டிடத்தின் முற் பகுதியை நெருங்க தொடங்கியவுடன் அவன் திடுக்கிட்டு தட்டுத்தடுமாறி அந்த கட்டிடங்களை நோக்கி வேகமாக ஓடினான். சேஃப் இனர்கள் அந்தக் கட்டிடத்தின் இல்லத்திற்குள் நுழைவதற்கு முன், நாம் அதற்குள் சென்று பார்ப்போம்.
பிரம்மாண்ட இல்லத்திற்குள் சென்றவுடன் முதலில் வாசல் மண்டபம். காரிருள் சூழ்ந்த இருட் கடலாகவும், அமைதி கூட அமைதியாகவும் இருந்தது. ஆனால் மண்டபத்தின் மேல்மாடக் கட்டிடத்திலும், கீழ் மாடத்திலும் இருபது, இருபத்தைந்து மனிதர்கள் சேஃப் இனர்களின் வருகையை எதி்ர்பார்த்து காத்திருப்பதைப் போல் நின்று கொண்டிருந்தார்கள். மேல் மாடத்தின் மத்தியில் இருந்த ஒருவன் ஏதோ சைகையை கீழ் இருந்த ஒருவனிடம் காட்டினான். சைகைக்கு பதிலளிப்பதுப் போல் அவன் தானியங்கு முறையில் வாசல் முற்றுகையை திறப்பதற்கு சென்றுவிட்டான் போல! சற்று நேரத்தில் முற்றுகை இடப்பட்ட கதவுகள் அனைத்தும் மெதுவாக திறக்க ஆரம்பித்தது. இருட் கடலை தோற்கடிக்க வெளிச்சம் உள்நுழையும் நேரத்தில் ஆச்சர்யம் காத்திருந்தது.
சேஃப் இன் சில படைவீரர்களும், ஆட்களும் கட்டிடங்களின் பாதுகாப்பு அரண்களின் பலப்படுத்தலை கேள்வி குறியாக்கும் வண்ணம் எவ்வழியாக உள் நுழைந்தார்களோ! என்பதை அறிய முடியாத வகையில் அவர்கள் மண்டப வாசலின் உட்புறமாகவே நின்றுக் கொண்டிருந்தார்கள்.
இக்காட்சியை கண்ட உள்ளிருந்த மனிதர்கள் ஒவ்வொருவரும் திடுக்கிட்டுப் போயினர். பதற்றத்துடன் தத்தமது உரைகளில் வைத்திருந்த ஆயுதங்களை கையில் எடுத்தனர். அவர்களில் சில பேர் கைத்துப்பாக்கிகளையும், மற்றவர்கள் கத்திகள், ஈட்டிகள் என்பவற்றை வைத்திருந்தனர். முன்னாள் நின்றுகொண்டிருந்த சேஃப் ஆட்களின் சில பேர்களின் முகங்களை கண்டவுடன் பதற்றத்துடன் வந்த ஆயுதங்கள் அனைத்தும் பணியத் தொடங்கின. அப்பொழுது முன் நின்ற சேஃப் இனர்களில் இருந்து ஒரு குரல்.
“ம்… இந்த இடத்துல இப்படியெரு மரியாதையான வரவேற்ப நா எதிர்ப்பாக்கல; தேவையில்லாம கையில துப்பாக்கிக வேற… நா சேஃப் தலைமை அதிகாரி ராபர்ட் ஜார்ஜ் பெல்டன்… இங்க இருக்கிற சில பேருக்கு என்னோட அறிமுகம் தேவ இல்லனு நினைக்கிறே! …ம்… நா, தேடி.. வந்த.. ஆள் இங்க இல்ல போலயே…” என்றது.
அவன்தான் சேஃப் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ராபர்ட் ஜார்ஜ் பெல்டன் என்கிற ஆர்.ஜி.பி (R.G.B).
சேஃப் இன் வருகையால் இருட் கடல் தோற்றது; உள்ளிருந்தவர்கள் திடுக்கிட்டார்கள்; ஜார்ஜின் குரலால் அமைதி அதிர்ந்தது. இப்போது மண்டபத்தின் மேலே இருந்து தடால் புடால் என்று சத்தம் கேட்கத்தொடங்கியது. மேல் மாடக் கட்டிடம் உடைந்து கீழே விழுவதைப் போல் சத்தம் நெருங்கிக் கொண்டு வந்தது. திடீரென்று மேல் உச்சியிலிருந்து சூரிய வெளிச்சம் உண்டானது. சட்டென்று எதோ ஓர் உருவம், மண்டபத்தின் மேல் உச்சியிலிருந்து கீழ் குதித்தது போல் இருந்தது. சுற்று முற்றும் புகை மூட்டமாக காணப்பட்டது. இவை அனைத்தும் கண் இமைக்கும் நொடியில் நடந்து முடிந்தது. சுற்றிலும் வெண்ணிற புகைகள் மேல் உச்சியிலிருந்து கீழே வரை வந்து மண்டபம் முழுவதும் மேகங்கள் சூழ்ந்திருப்பதைப்போல் சூழ்ந்திருந்தது. சிறிது நேரத்தின் பின் புகை சற்று விலகத் தொடங்கியது. கீழ் குதித்த உருவம் தெரிய ஆரம்பித்தது. அது மனித உருவம். அவன் ஒரு கொள்ளைக்காரன் போல் உடை, அணிகலன்கள் அணிந்திருந்தான். அவனது சரீரத்தின் அணு அளவு கூட தெரியாத அளவு அவனது உடை அவனை சூழ்ந்திருந்தது. கைகளில் கடினமான கை உறைகள். முகத்தில் முகம் முற்றும் தெரியாதவாரு முகமூடி தரித்திருந்தான். ஆனால் அவனிடம் எவ்வித ஆயுதங்களும் இல்லை. பார்ப்பதற்கு விசித்திரமாக தோற்றமளிக்கும் அந்த விசித்திரன் தான் சர்வேந்திர தேவன் என்கிற சாரவ் தேவன். இந்த கதைக்கு பெயர் வாங்கிக் கொடுக்கப் போகும், இந்த கற்பனை விசித்திர உலகின் சரித்திரத்தில் முதலில் இடம்பிடிக்கப் போகும் வீராதி வீர நாயகன் கதாபாத்திரம் அவரே.
கீழ் குதித்த சாரவ்வைப்பார்த்து சேஃப் இன் தலைமை அதிகாரிகள் கூட்டம் ஆச்சர்யத்தில் உறைந்து நின்றது. நம் சாரவ் எதிரில் நின்ற சேஃப் தலைமை கூட்டத்தைப் பார்த்து “ஒ,. ஒ..ஓ..!! நான் சாரவ், சேஃப் இன், முன்னா…ல்.. சிறைவ்வ்.. விருந்தாளி. ஆ..ஆ.. அப்டி செல்றது தானே சரி. நம்ம அறிமுகோ எப்படி! ஏ வழி என்னைக்கு தனி….வழி தானே, நீங்க தேடி வந்த ஆள்… நா தான்.” என்றான்.
பேரு தீவை தன் அதிகாரத்தினுள் வைத்திருக்கும் பேரமைப்பான சேஃப் இன் தலைமை அதிகாரி ஜார்ஜின் முன் சாரவ்வின் பேச்சு மரியாதையற்ற, அகந்தைத்தனமாக இருந்தது – ஆச்சர்யமான விடயம்தான்.
பதிலிக்கு ஜான் “சாராவ் இதெல்லா என்ன?”
“அது சாதரண ஓரு வகையான… பாதிப்பில்லாத வெள்ள புகதான்…ம்… கண்ணு கூட எரியாது”
“நா அத கேக்கல. “இப்படிப்பட்ட ஆளுங்க, ஆயத்தங்கள் எல்லா எதுக்கு, நாங்க வாரது முன்னமே தெரிஞ்சிக்கிட்டு தேவயில்லாத வேலயெல்லா எதுக்கு”
“தேவயில்லாத வேலயா! அப்டியெல்லா ஒன்று இல்ல. நாங்க எப்பவுமே இந்த மாதிரி பாதுகாப்பாத்தா இருப்போ”
ஜார்ஜின் முகம் சிறிது புன்னகைத்தது “…ம் எதுக்க இந்த பாதுகாப்பு; எதுக்காக; யாருக்கு! நாங்க எதுக்கு வந்துருக்கோனு; நிலம எந்தளவு மோசம்னு உங்களுக்கு தெரியாது போல, இல்லாட்டி இப்டியெல்லா பேச மாட்டிங்க”
“நல்லாவே தெரியு” சாரவ் மண்டபத்தில் வெளியேயும், உள்ளேயும் நின்றுக் கொண்டிருந்த சேஃப் படை வீரர்களை பார்த்தவாறு “நிலமை எந்தளவு மோசம்னு நல்லாவே தெரியும். மோசமானது எல்லா ரூபத்திலயும் வரும் இப்ப உங்க ரூபத்துல வந்திருக்கு, நா! நீங்க சொன்ன.. நிலமையத்தா சொன்னே அது சரி… எதுக்காக வந்திரிக்கிங்க” என்று கூறியவுடன் சாரவ் மண்டபத்தின் உள்ளே கீழும் மேலுமாக உள்ள மனிதர்களுக்கு கையால் சைகை ஒன்றை காட்டினான். அனைவரும் எந்த சத்தமும், ஆரவாரமும் இல்லாமல் அமைதியாக மண்டபத்தை விட்டு வெளியேறினர்.
“சாரவ்வுக்கு எதுக்காக வந்திருக்ககோனு தெரியும்னு, எங்களுக்கு நல்லாவே தெரியும், ரகசிய தகவல பத்தி ஞாபகப் படுத்த தேவயில்லனு நினக்கிறே” என்றான் ஜார்ஜ்.
சாரவ் எதுவும் கூறாமல் அமைதியாக நின்றான். சாரவ்வின் வாய்த்தாக்குதல் மூலம் சேஃப்பை தாக்குவான் என அறிந்த ஜார்ஜ் அவன் அமைதியான நேரத்தில் அவனுடன் பேச்சை தொடர்ந்தான். ஜார்ஜ் பெருமூச்சு விட்டவாறு “மேற்க்குல இருக்குற ரொம்பவே தூரத்துல உள்ள கோட் தீவு. அப்பறம் அதுல மறஞ்சியிருக்குற ரொம்பவே டேன்ஜரான பா..தள இடங்கள் விக்டர் சாமுவேல் அவங்கிட்ட இருந்து கிடைச்ச தகவல் படி வெறும் பணத்துக்காக உலகத்துல இருக்கிற பதினேழு செல்வாக்கு இருக்குற ஆட்கள் கடத்தி வைச்சு இருக்காங்க. நம்மளோட கணிப்பு படி இது பணத்துக்காக இல்ல”
சாரவ் “கோட் தீவுனா வோர் தானே” என்றான்.
“நேரம் தாமதிக்க பதினேழு அப்பாவி ஜனங்களோட உயிருக்க உத்தரவாதோ இல்ல. இது இதுவரைக்கு இல்லாத ரொம்ப கொடூரமான விஷயோ சாரவ்வுக்கு முழுமையான தகவல்லா தெரிஞ்சுருக்குனு நம்புறேன்”
“விக்டர் சாமுவேல் அவே எதுக்கு அந்த மாதியெல்லாம்… தகவல் வெளியிடனும். கோட் சேஃப்; வோர் சரி… அதுக்கு அப்புறம் நா எதுக்கு இதெல்லா எனக்கு எதுக்க; அந்த கோட் தீவனாலே எனக்கு ஒத்து வராது அப்பறோ அந்த.. அந்த வோர் பைத்தியக்காரனுங்க சுத்தமா புடிக்காது அந்த மாதிரி பயங்கரவாதிக கிட்ட என்ன மாட்டி விட்டு என்னோட.. கதய… முடிக்கப் பாக்கிரிங்க. அதுமட்டுமில்லாம எனக்கு யாருக்கு கிழேயு வேல செய்ய முடியாதே. சுதந்திரமா, சாதாரண.. மனுஷ மாதிரி எனக்கு ஏத்த வேலை தான் இப்ப செஞ்சக்கிட்டு இருக்கே நா ஒன்று அசா… தாரண மனுஷே கிடையாது” என்றான் சாரவ்.
சாரவ்வின் பேச்சு ஜார்ஜுக்கும் கூட்டத்திற்கும் பிடிக்கவில்லை ஆரம்பத்தில் சேஃப்பின் ரகசிய தகவல் பற்றிய பேச்சுக்கள் வந்தவன் இறுதியில் பச்சோந்தி போல் கட்சிமாறி பேசியது அனைவருக்கும் மரியாதையற்ற செயல் போல் இருந்தது.
ஜார்ஜும் – சாரவ்வும் உரையாடும் பொழுது இப்போது ஜான் குறுக்கிட்டான். அவன் தான் ஜான் சாகர். சிறப்பு ராணுவ படையின் தலைவன் சிறந்த வீரன் சாரவ்வின் கதாபாத்திரம் போல் ஜானின் கதாபாத்திரமும்
முக்கியமானதாகும். சேஃப் இன் முதன்மை பலமே அவன்தான் எனலாம். பல பாதுகாப்பு பணிகள், போர்கள் என்பவற்றில் வெற்றிக் கண்டு சேஃப் இன் படை பலத்திற்கு பெருமை சேர்க்கும் அசகாய வீரன்.
“இந்த மாதிரி ஆட்கள் கிட்ட பேசுறது நேரத்த வீணடிக்கிற வேலயா இருக்கு” என்றான் ஜான்.
“யாரு அது! ஓ… ஜான். கர்னல்…ஜான் மரியாதைக்குரியவர். ம்… நீ இன்னு எங்களோடத்தா இருக்கியா இவ்ளோ நாள் சேஃப்ல தாக்கு பிடிக்காம காணாம ஆயிருப்பனு நெனச்சே ஹம்…ம்…ம் இந்த மாதிரி ஆட்கள வச்சிக்கிட்டு எதுக்க என்ன தேடி வந்திங்க!- நா எதுக்கு” இது சாரவ்.
சாரவ்வின் திமிர் கலந்த நக்கல் பேச்சு ஜான் சாகரை ஆத்திரம் கொள்ள வைத்தது. தன் மனதில் எழுந்த கோபத்தை அடக்கிக் கொண்டு எதுவும் கூறாமல் ஜார்ஜைப் பார்த்துக் கொண்டு அமைதியாக நின்றான்.
“மோசமான ஒரு பிரச்சன வரப்போகுதுனு முன்னாடியே தெரிஞ்சு; எல்லா தயாரொடயும், இருபது பேர சுத்தி வரவேற்க வைச்சு கழுகு மாதிரி காத்திருந்து சமயம் பார்த்து முப்பது அடி தூரத்துல இருந்து குதிச்சு; புகையிலிருந்து வார தைரியம் இருக்கிற சாரவ்வுங்கிற விசித்திரன் எங்ககிட்ட இல்லையே” என்று ஜார்ஜ் கூறியவுடன் சாரவ்வின் முகம் மறைத்த முகமூடி கூட அகந்தை மிகுந்தது போல் ஆனது. ஜார்ஜின் வார்த்தைக்கு மயங்காமல் சாரவ் பதிலளித்தான்.
“என்னால தனியா எதுவு செய்ய முடியாது. ஒரு கட்டுப்பாட்டுக்கு கீழ இருந்து; எனிய தப்பா கணக்கெடுத்து ஒரு தீவையே எனக்கு சிறயா வைச்சு; ஒரு கடிவாளத்துல உள்ளம்…… இருக்கிற என்னால அடிம மாதிரி வேல செய்ய முடியாது. …முடியாது… அவ்ளோதான். நான்… நானும் மத்தவங்க மாதிரி சாதாரண மனுஷே தான் அது ஏ உங்க கண்ணுக்கு மட்டு தெரிய மாட்டிங்கிது” சாரவின் பேச்சு கவலையும், கோபமும் கலவையானது.
சாரவ்வின் இந்த வார்த்தைகள் பெல்டனை அம்பைப் போல் தாக்கின. சாரவ்வை கோபத்தோடு நோக்கியவாறு “சொர்க்கம் மாதிரி இருக்குற பேருல, அரண்மன மாதிரி இருக்கிற ஒரு வீட்ல, சுதந்திரமான ஒரு வாழ்க. நீங்க… சொன்ன அந்த… யாரோட கடிவாளமு இல்ல ஆடம்பர வாழ்கக்கு தேவயான எல்லா.. வசதியு இருக்க. வெறும் சேஃப்போட, பொதுவான… கண்காணிப்பு தான் அது அவங்களோட பாதுகாப்புக்குதா தவிர வேற எதுக்கு இல்ல இதுக்கு மேல வேற எங்கயு இப்டியான ஆட்கள அச்சுறுத்துற…ம்… மனிஷனாதா பார்ப்பாங்க” கோபத்தோடு எழுந்த ஜார்ஜின் வார்த்தை இப்போது அமைதியானது. சாரவ்வை நோக்கி பணிவாக பேசத் தொடங்கினான் “நாம்மோட திறமயெல்லாம் மத்தவங்களுக்கு சவால அமயரப்போ எதிர்ப்பாத்தா இருக்கு. தனித்துவமா தெரியும்… சிறந்தவங்களாவும் தெரியும் விசித்திரமான விஷயொல்லா நம்பிக்கயா அமையிர வரைக்கு”
சாரவ் மெளனமாக நின்றான். அவனது முக பாவனையை காண முடியாத தலைமை கூட்டம் அவனது பதிலையாவது எதிபார்த்துக் கொண்டிருந்தனர்.
இருவருக்கிடையில், கர்னல் ஜான் ஏதோ கூற முற்பட்டான். அப்போது சாரவ் குறுக்கிட்டு “பொறு சின்ன பசங்க பேசுறப்போ பெரியவங்க குறுக்க வரக் கூடா…ச்…ச்சே. சீ முட்டாளா முட்டாளாக்கிட்டிங்க! என்ன கொழுப்பிட்டிங்க!” என்று கூறியவாறு குழப்பத்தில் அங்குமிங்குமாக திரிந்தான். பல்லை கடித்தவாறு “…ஹர்…இது… இது..இதுக்குதான் சொன்னே.. சொன்னா!… சொன்னா புரியாது இல்ல” என்றான்.
அவனது மனதில் பல வித எண்ணங்கள் தோன்றி மறைந்தன. முகமூடியிலுள் மறைந்த முகத்திலும் பல மாறுதல்கள் கோபத்தினால் ஏற்பட்டிருக்கும் என தலைமை கூட்டம் அறிந்திருக்கும். வார்த்தைகளால் தடுமாற்றமான அவன் சிறிது மௌனமாக இருந்து, ஜார்ஜின் அருகில் வந்து நின்றான். ஜார்ஜின் முகத்தை நேராக பார்த்தவாறு “சில வருஷம் முன்னாடி இதே மாதிரி உங்க முன்னாடி வந்து நா நின்னுருக்கே காலம் மாறி போச்சு. அப்ப இருந்த நிலம இப்ப இல்ல ம்… நா.. நானும் ஒழுங்காதா உங்க முன்னாடி நடக்கணுனு நெனக்கிறே… ஆனா… மாறிடும் போலயே! நீங்க தந்த… முதல்ல… மரியாதையா திருப்பி தர வைச்சிராதிங்க!” என்று கூறினான்.
நம் நாயகனின் மனம் ஏதோதோ மனதின் வார்த்தைகளால் தள்ளாடியது. எதிரில் நின்ற ஜார்ஜின் மனம் சாரவ்வின் வார்த்தைகளால் சிந்தனையில் ஆழ்ந்தது. அவனது முகம் யோசனையும், ஏக்கமும் கலந்த கலவையாக மாறியது. வார்த்தைகளால் உரையாடியதை விட இருவரின் மனங்கள் சொல்லாத வார்த்தைகள் பல.. சாரவ்வின் முக மாறுதலை யார் அறிவர்! அவர்கள் கூட்டத்தின் முன் நிலையாக நிற்க முடியாதது போல் அவனது செயல்பாடு மாறியது.
சாரவ், சேஃப் இன் தலைமை கூட்டத்திற்கு அடுத்து எந்த ஒரு வார்த்தையும் கூறாமல் சென்றுவிட்டான். குழப்பத்தில் உள்ள ஜார்ஜ் பெல்டனின் குழு வேறு என்ன செய்ய முடியும்! அவர்கள் வந்த வேலை அவ்வளவுதான்! முடிந்துவிட்டது போல் அவர்களும் சாரவ்வின் இருப்பிடத்தை விட்டு வெளியேறினர்.
சேஃப் இனர்களின் வருகையின் பின்னர் சாரவ்வின் மனம் சஞ்சலமாகவே இருந்தது. சேஃப் இடையிலான சந்திப்பு, உரையாடல் போன்றவை அவனது மனதில் பல எண்ணங்களையும், குழப்பங்களையும் உண்டாக்கியது. தனது பிரம்மாண்ட கணினித் திரையில் “போரானியம்” எனப்படும் அதிசய உலோகத்தைப் பற்றி தேடி அறிந்துக் கொண்டிருந்தான்.
போரானியம் எனப்படுவது மற்ற நாடுகளில் இல்லாத. பேரு தீவுகளில் மட்டும் உள்ள அதிசயம் வாய்ந்த உலோகமாகும். இதனது பயன்பாடு எத்தகையது என்பது யாரும் அறியாத மர்மமாக உள்ளது. ஆனால் சில ஆய்வுகள் மூலம் இது பெறுமதி வாய்ந்த விலைமதிப்பில்லாத பொருளாக இருக்கக்கூடும் என ஐயப்படுகின்றனர். பேருவின் சில சமூகத்தினர் இதனை மனித ஆற்றலுக்கு எட்டாத பல வித சக்திகள் வாய்ந்த புனிதப் பொருளாக நம்புகின்றனர். காலம் செல்ல செல்ல பேருவில் போரான் பற்றிய விடயங்கள் சாதாரணமாகிவிட்டது. எதற்கும் உதவாத குப்பை உலோகமாக மாறிவிட்டது. ஆனால் போரானிய அணுவில் யாரும் அறியாத மர்ம உண்மைகள் இருக்கும் என ஆய்வாளர்களின் கருத்து. எவ்வாறாயினும் சேஃப் இன் கண்கானிப்பில் பேரு உள்ளது. பேருவில் மட்டும் காணப்படும் அதிசய பொருளான போரானியம் அதே சேஃப் இன் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. அவர்களின் கட்டுப்பாடுகளை மீறி போரானிய உலோகங்களை வேறு தேவைக்கு உபயோகப்படுத்தவோ அல்லது தேவையற்ற விதத்தில் வைத்திருக்கவோ முடியாது.
இத்தகைய விசித்திர உலோகத்தை பற்றி நம் விசித்திரன் தேடிப்படித்துக் கொண்டிருப்பதில் அன்று முழுவதும் நேரத்தை செலவிட்டான். அத்தோடு நிறுத்தாமல் சேஃப் ரகசியமாக அனுப்பிய சிறப்பு தகவல்கள் பக்கமும் அவனது கவனம் சென்றது.
சேஃப் (ஆங்கிலம்:- S.A.F.E). அவற்றின் கோட்டை கோபுரங்கள், கட்டிடங்கள் அனைத்தும் எந்த ஒரு சர்வதேச அமைப்புகளின் கட்டுமானங்களுக்கு சளைத்தவை அல்ல. சேஃப் இன் மேகங்களை தொடும் கோபுரங்கள், பிரம்மாண்ட கட்டிடங்கள் அனைத்தும் பேருவின் மத்திய பகுதிக்கு பேரரசின் அரண்மனைப் போல் அழகாக காட்சியளித்தது. அவர்களின் பாதுகாப்பு முறைகள், தொழில்நுட்ப பயன்பாடுகள், மற்ற செயற்பாடுகள் எல்லாம் மற்ற நாடுகளையும், ஏனைய அமைப்புக்களையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் தனிச்சிறப்பு வாய்ந்தது.
சேஃப் இன் தலைமை நிர்வாக அதிகாரியான ராபர்ட் ஜார்ஜ் பெல்டன் அழைப்பின் பேரில் சிறப்பு ராணுவ உயர் அதிகாரியான ஜான் சாகர் சேஃப்பின் தலைமை காரியாலயத்திற்கு வருகை தந்திருந்தான். அவன் பின்னே எப்போதும் நான்கு வீரர்கள் காவல் படை வீரர்கள் போல் வருவார்கள். ஜான் வருகையால் சேஃப் தலைமையகமே அலங்காரமானது. அவன் வரும் போது உள்ளிருந்து மற்ற பணியாளர்களும் படை வீரர்களும் மரியாதையுடனேயே வரவேற்றனர். கர்னல் ஜான் சாகரிற்கு சேஃப் இல் தனி மரியாதை உண்டு.
சேஃப் இன் தலைமை காரியாலயமா! அது, இல்லை. சேஃப் மாளிகை என்றே கூறலாம். மாளிகையின் உட்புறம்! சுற்று முற்றிலும் எத்தகைய பரப்பளவு கொண்ட மண்டபங்கள். சுமார் ஐம்பது அடி உயரத்திலாவது இருக்குமே! தொழில்நுட்ப வளர்ச்சியின் முன்னேற்றத்தால் அவைகள் சூழ இருந்தாலும் கட்டிட கலைகள் அனைத்தும் பழங்காலத்தைப் போல் தனிச்சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. சரித்திரக் கதைகளில் வரும் மாட மாளிகைகளும், கட்டிடங்களும் இப்படித்தான் இருக்குமோ! என வியப்பில் ஆழ்த்தும் வகையில் உள்ள சேஃப் இன் அமைப்புக்கள், ஆசியாவின் யாரும் அறியாத உலக அதிசயம்.
ஜான், தலைமை அதிகாரியான ராபர்ட் பெல்டனை சந்தித்தான்.
“நேத்து தேவயில்லாம நேரத்த வீனடிச்சிட்டோ!, இத்தன பேர் பொய் நல்ல… மரியாதைய வாங்கிட்டு வந்திருக்கோ…இல்ல! அந்…அந்த மாதிரி ஆள் ளெள்ள வச்சிகிட்டு நம்ம ஒன்னு பெருசா செய்யமுடியாது… என்னாலப்…”
ஜானின் வார்த்தைகள் இது. ஜார்ஜ் பெல்டனை சந்திப்பதற்கு அழைப்பு வந்தாலும், தனி ஆர்வத்தோடு பெல்டனை பார்ப்பதற்கு தலைமை காரியாலயத்திற்கு வேகமாக ஓடி வந்தான் ஜான் சாகர். ஜார்ஜ் பேசுவதற்கு முன்பே ஜானின் வார்த்தைகளில் கோபம் கொந்தளித்து எழுந்தது.
“யாரப்..பத்தி இவ்வளோ கோபமா பேசுறிங்க!” என்று ராபர்ட் ஜார்ஜ் உரத்த குரலில் கேட்டான்.
“… ம்… உங்களுக்கு யார்னு தெரியாது! எல்லா உங்களாளதான். இந்த, மாதிரி, ஆட்கள்ளா எப்படி, பட்டவனுங்கனு தெரியாது உங்களுக்கு. நம்ம மேல இருக்குற கோவதுல… அவே மூலமா பிரச்சினை எது வந்துர கூடதுனுதான் பொறுமையா இவ்ளோ காலோ இருக்கோனு தெரியாதா!” ஜானின்வார்த்தைகளில் கோபமும் வெறுப்பும் அனல் பறந்தது. பெல்டனிடம் முகம் கொடுத்து பேச முடியாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
“நல்லா தெரியும் ஜான். சாரவ்னாலா எந்த பாதிப்பும், எந்த பிரச்சனையும் வராது.”
ஜானும், ஜார்ஜ் பெல்டனும் உரையாடும் பொழுது சேஃப் கட்டிடங்களின் வெளிப்புறம், ஜனக் கூட்டங்கள் அங்கும் இங்குமாக உலாவிக் கொண்டிருந்தார்கள். ஜனக் கூட்டங்கள் அதிகரிப்பதை ஜார்ஜ் கவனித்தான். அதை ஒரு பெரிய விடயமாக கருதாமல் ஜானின் வார்த்தைகளை செவிமடுத்தான்.
“மிஸ்டர் பெல்டன்… நாங்க போறது உயிர்கள காப்பாதுறதுக்கு எந்த ஒரு உயிரையும் கொல்றதுக்கு இல்ல! இந்த மாதிரி மிருகங்கள நம்ம டீம்ல வச்சிருந்தா எல்லாரும் கதையும் ம்.. அதோ… கதிதான்! எந்த ஒரு கட்டுப்பாடும் வேணாமா!, யாருக்கு கீழேயும் வேணாமா, வெற என்ன… ஓ… விருப்போ இல்ல”
“இந்த மாதிரியெல்ல… சாரவ் இருக்கும் போது பேசிறாதிங்க!”
ஜான் சாகர் சேஃப் இன் சிறப்பு ராணுவ பாதுகாப்பு தலைமை அதிகாரி. அவ்வாறிருந்தும் சேஃப் கட்டிடங்களின் சுற்றுச்சூழல் பக்கம் கூட அவனது பார்வை செல்லாமல் கோபம் அவன் கண்களை மறைத்தது. இப்போது முன்பைவிட ஜனக் கூட்டங்கள் சேஃப் காரியாலய கட்டிடத்தின் முன் அதிகரித்துக்கொண்டே வந்தது.
“அதிகாரத்தப் பார்த்து பயப்படாதவன்; எந்த கட்டுப்பாடும் இல்லாத…தைரியமானவன். அது சரி, எல்லா நல்லதுக்குத்தா. இந்த உலகமே அறியாத, உலகத்திலேயே மிகச்சிறந்த வீர… இல்ல, விசித்திரர்கள போல இருக்கிற மனுஷங்களா இந்த காலத்துக்கு தேவ இல்லனு நினைக்கிறீங்களா!, ம் உலகோ மாறிடிச்சு ஆபத்துக்கள்ளா அதிகமாகிடும். ஆபத்துக்கள்! அந்த மாதிரி ஆபத்துகளை எதிர் கொள்ள முடியாத மாதிரி சேஃப் ஓட செயல்திறன் இருந்தா…! காலம் நம்பள பின்னுக்கு தள்ளிடு. சாரவ்! அ…அவன் நல்லவே. நம்ப பக்கம் இருப்பான். அவன பத்தி எல்லா உங்களுக்கு தெரியு தானே!” என்று கூறினான் பெல்டன்.
“நல்லா தெரியும் எந்த விஷயத்தையு அவ்ளோ சீக்கிரமா மறக்கிற ஆள் இல்லனு தெரியு. பழைய விஷயங்கள்ளெல்லா ஞாபக வச்சி இப்ப நம்பல கொல்றான்.”
ஜார்ஜிடம் ஆரம்பத்தில் கோபத்தோடு உரையாடிய ஜான், இப்போது கொஞ்சம் அமைதியானான்.
“ஆமா அது இப்ப…தேவ இல்லாத விஷயோ”
கோபம் எனும் இருளில் அறிவுக் கண்கள் மறைந்துள்ள அவன் இப்போது வெளிச்சம் என்ற சுய நினைவிற்கு வந்தது போல் சேஃப் கட்டிடங்களுக்கு முன்பாக கூடும் கூட்டங்களை நோக்கினான்.
“கோபோ கண்ண மட்டுமில்ல அறிவுக்கண்ணையு மறைச்சிடும் போலயே !, அந்த மாதிரி…! இப்ப வந்த வேல என்னா, நா எதுக்கு உங்கள வர சொன்னேனு… அத பத்தி எதும் பேசலயே! முடிஞ்சு போன கதய பத்தி இவளோ நேரமா நீங்க.. பேசிக்கிட்டு.. இருக்கிங்க”
ஜான் ஜன்னல் ஓரமாக நின்று தலைமை காரியாலயம் முன் கூடும் கூட்டங்களை பார்த்தவாறு “அது சரி. ஆ… ஆனா. முன்னுக்கு ஏ… இவளோ கூட்டோ!” என்று பதற்றத்துடன் கேட்டான்.
“ஆமா கூட்டம்! ஜானுக்கு எந்த விஷயத்துக்காக அழைப்பு விடுத்தோனு இன்னோ தெரியாது போலயே!.. சரி, வந்த விஷயமே… அங்கத்தா இருக்கு” என்று கூறியவாறே ஜார்ஜ் ஜன கூட்டங்களை குழுமி இருந்த இடத்தை சுட்டிக் காட்டினான். ஜான் ஒன்றும் அறியாதது போல் முழித்தான்.
“போய்ப் பாருங்க” என்றான் ஜார்ஜ்.
பதற்றமான ஜான், ஜார்ஜிடம் வேறு எதுவும் கூறாமல் அவன் சுட்டிக்காட்டிய இடத்தை நோக்கி வேகமாக சென்றான். அவன் மனம் எதிர்பார்ப்பு தாங்க முடியாத ஆச்சரிய கடலாக மாறி பலவித குழப்பங்களுடலான எண்ணங்கள் அலையாக எழுந்தது. ஜன கூட்டங்களை பிளந்துகொண்டு மத்தியில் வந்து நின்றான். கூட்டத்தில் இருந்த சில படைவீரர்கள் ஜானிற்கு வழிவிட்டு மரியாதையுடன் தள்ளி நின்றார்கள். ஜான் கண் முன் உள்ள காட்சியைப் பார்த்தவுடன் ஆச்சரிய கடலும் எண்ணங்களின் அலைகளும் மறைந்து போயின.
– தொடரும்…