தீக்கந்நவர்கள்





(1982ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மூவரும் இப்போது சந்திக்கு வந்துவிட்டனர்.
“மச்சான்! ‘ஹோல் டவுண்’……!”
சைக்கிள் ‘கரியரில்’ இருந்த கோபி சத்தமாகச் சொன்னான்.
பல நெளிவு சுழிவுகளின் பின் பீடாக் கடை வாசலில் சைக்கிள் வந்து நின்றது. சைக்கிளை ஓட்டி வந்த குமரன், முன்னாலிருந்த அன்ரனிடம் சைக்கிளைக் கொடுத்துவிட்டு, வீதிக்கு இறங்கி வந்தான். சைக்கிளை அருகே நிற்பாட்டி விட்டு கடை வாசலிற்கு வந்த அன்ரன், தன் அருகே நின்ற கோபிக்குக் கூறுகிறான்.
“மச்சான், இண்டைக்கும் ‘தியேட்டரிலை’ சனம் பரவாயில்லை!’
பீடாக் கடைக்கு எதிராக உள்ள அந்தத் ‘தியேட்டர்’ வாசலில் மின் விளக்குகள் அழுது வடிந்து கொண்டிருந்தன. மேல் மாடி ஜன்னலில் பூட்டப்பட்டிருந்த ஒலிபெருக்கி தற்காலத்தில் மிகவும் பிரபலமான பாடல் ஒன்றினை ஒலிபரப்பிக் கொண்டிருந்தது.
‘கலரிக்’ கூண்டுக்குள் சனம் நிரம்பி வழிவது தேமா மரங்களினூடும் தெளிவாகவே தெரிகிறது. ‘செக்கண்ட் கிளாஸ் கியூ’வும் ஓரளவிற்கு வளர்ந்திருந்தது. ‘போட்டோக் காட்சி’னை கைகளால் அளைந்து கொண்டு சிறார்கள் கூட்டம் ஒன்று ‘தியேட்டா’ வாசலில் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு நின்றது. யாவற்றையும் மேற்பார்வை செய்து கொண்டு வாசலில் தியாகராஜபாகவதர் காலத்துக் கதிரை ஒன்றில் அமர்ந்திருந்தார் ‘தியேட்டரின்’ முதுபெரும் உரிமையாளர்.
ஓர் கணம் ‘தியேட்டரைக்’ கண்ணோட்டம் விட்ட கோபி, தேமா மர மறைவிற்குள் ஒளிந்து கொண்டான். “மச்சான், மாமா நிக்கிறார்.” கதிரையில் இருந்தவரைப் பார்த்து விட்டு அதை ஆமோதிப்பவனைப் போல அன்ரனும் மறைவிற்குள் வருகின்றான்.
“மச்சான்,இண்டைக்கு ‘ரியூசனிலை’ என்னென்ன பாடம்?”
காற் சட்டைக்குள் வைத்திருந்த கறுவாப்பட்டையில் ஓர் பட்டையைச் சுவைத்தவாறே எட்ட நின்ற குமரனும் கிட்ட வந்து சேருகிறான்.
“பொட்னியும், சோலஜியும்.’
‘பொக்கற்’றுக்குள் இருந்த சீப்பை எடுத்துக் கொப்பிக்குள் வைத்திருந்த சிறிய கண்ணாடியைப் பார்த்து சிகையைச் சரி செய்தவாறே கோபி கூறுகிறான்.
“பொட்னியிலை என்ன ‘செக்ஷன்’ மச்சான்…..?”
“தாவரக் குடும்பங்கள் செய்யிறார்…..”
“ஓ! அதுக்கு நீ போனாலும் ஒண்டுதான், போகாவிட்டாலும் ஒண்டுதான்.”
வெண்கலக் குரலில் அன்ரன் கூறுகிறான்.
“என்ன இழவெண்டு உந்த அலுப்புகளைச் சப்பித்தள்ளுறது…….?”
கை விரல்களால் தன்தலை மயிரைச் சரி செய்த குமரன் உசாவினான்.
“ஏன் வேந்தன் சப்பித்தள்ளுகிறான் தானே?”
இப்போ ‘தியேட்டரில்’ பாடல் ‘றெக்கோட்’ மாறுகிறது!
“இண்டைக்கு இதாலை வேந்தன் வரட்டும். ஆளை நல்லா நக்கலடிச்சு அனுப்புவம்.”கோபி அங்கலாய்த்தான். “அடிக்கிற நக்கலிலை ஆள் ‘கிளாஸுக்கு ‘ போகாமல் விட்டுட்டு வீட்டுக்குப் போகவேணும்.” வெண்கலக் குரல் ஒலித்து ஓய்ந்தது.
“கொஞ்சமெண்ட முன்னம் ஆளுக்கு முகம் கறுத்துப் போகும். அடிக்கிற நக்கலிலை ஆள் இண்டைக்கு வீட்டிலை போய் முகக் கிடை கிடைக்க வேணும்.” வெடிச் சிரிப்பு உதிர குமரன் கூறுகிறான்.
“வேந்தன் வரட்டும் இண்டைக்கு.” கோபி கறுவிக் கொள்கிறான்.
குமரனின் மனம் எதையோ அசை போடுகிறது. அவர்களது வகுப்பில் பயிலும் இருபத்திரண்டு மாணவர்களுள் படிப்பில் முன் நிற்பவனே அந்த வேந்தன், சாந்தன், அழகன் ஆகியோருடன் ஏட்டிக்குப் போட்டியாக நிற்கும் வேந்தனை விழுத்த குமரன் மூன்று தவணைகள் முயன்றும் முடியாது போகவே இந்த குறுக்கு வழியில் இறங்கினான்.
குமரன் எப்போதும் வகுப்பில் நான்காவதாக வருவதே வழமை. ஓ லெவலில்’ சாந்தன், அழகன் ஆகியோரைப் போல் ‘ஃபோ டீ, ஃபோ ச’ என்றெடாது தன்னைப் போல் ஏழு ‘சீ லெவலில் றிசல்ற்’ எடுத்த வேந்தன் எப்படி அவர்களுடன் போட்டியிடுகிறான் என்பது குமரனிற்குப் புதிராகவே இருந்தது! அவனது சகாக்களான கோபியும், அன்ரனும் சதா இதையே பேச்செடுத்து, “எப்படியும் அவனை நீ விழுத்த வேண்டும்” எனப் புத்தி கூறி, அதற்கு வழிகோலாக வேந்தனின் ‘வீக்னஸ்’ ஒன்றையும் கூறிவிட்டார்கள்.
பிறரது நக்கலிற்கு தாக்குப் பிடிக்கும் சக்தி வேந்தனுக்கு இல்லாததும் தன்னைப் பிறர் பழித்து விட்டால் அதைப் பற்றியே அன்று முழுதும் சிந்திக்கும் அவனது மனப்பான்மையினையும் கோபியும், அன்ரனும் இனங்கண்டே குமரனிற்கு இதை ஓதி விட்டனர். அன்று முதல் அதையே ஆயுதமாக குமரனும் பாவிக்க ஆரம்பித்து விட்டான். வேந்தனது படிப்பு பற்றி அவனது ‘பேசனாலிற்றி’ பற்றி…. விளையாட்டுத் துறையில் அவனது ஈடுபாடு பற்றியே அவர்களது பேச்சு அமையும்!
‘தியேட்டரில்’ ஒலிபரப்பாகும் புதிய பாடல் ஒன்று கேட்டு குமரன் நினைவு திரும்புகிறான்
“மச்சான் காய் வருகுது.” அன்ரன் தான் தூரத்தே வரும் வேந்தனை இனங்கண்டு அவசரங் காட்டுகிறான்.
“ம்!கோபி ‘ஒண் யுவர் மாக்! செற் ரெடி!” குமரன் அப்போதே தயாராகி விட்டான்.
ஆறடியை அண்மித்த உயரம். ஒடுங்கிய முகத்தில் புற்களைப் போல மிதந்திருக்கும் தாடி. வேட்டித் தலைப்பை சைக்கிள்’ சீட்டின் கீழ் ஒதுக்கி விட்டு, வேர்க்க விறுவிறுக்க வேகமாக வந்து கொண்டிருந்த வேந்தன் பீடாக் கடை வாசலுக்கு வந்ததும் ‘பிறேக்’ போட்டு காலை நிலத்தில் ஊன்றியவாறு இவர்களைப் பார்க்கிறான்.
“ஏன் ‘கிளாசுக்கு’ நேரமாச்செல்லோ?’
“கிளாசுக்குப் போனாலென்ன, போகாட்டிலென்ன ‘பொட்னி’ சப்பித்தள்ளுற பாடந்தானே?” வேகமாக வந்த கார் ஒன்று வேந்தனை முந்திச் சென்றது.
“எண்டாலும் போனால் கொஞ்சம் உதவியாயிருக்கும் தானே?”
“உங்கை ‘கிளாசுக்கு’ ஒழுங்காப் போனாக்கள் எல்லாரும் ‘வாசிற்றிக்கு என்ர’ பண்ணிறவையோ?’
“என்ர’ பண்ணிறமோ இல்லையோ கடமையை நாங்கள் ஒழுங்காச் செய்ய வேணும். உங்களோடை கதைச்சு கொண்டிருந்தால் அலுப்புத்தான் வரும்….. நான் மாறுறன்.” “வேந்தன்,அதுக்கு முந்தி ஒரு விசயம்.” வெண்கலக் குரல் வழி மறித்தது.
“என்ன விசயம்? கெதியாச் சொல்லித் தொலை!’
“நீ இண்டைக்கு இன்ரவலுக்கு’ வீட்டைபோனாப் போலை. ‘கொலிஜிலை’ உன்னைப் பற்றி எல்லோரும் ஒரு மாதிரிக் கதைச்சாங்கள்.”
“ஒரே மாதிரித்தானே விட்டுத் தொலை!”
“நீ பெரிய ‘லெவல்’ காறனாம். ‘பிறிஃபெக்ற்’ எண்டாப் போலை ‘லெவல்’ பண்ணிறதோ? கெட்டிக்காறங்களான சாந்தன், அழகன் கூட சும்மா இருக்கக்கை உனக்கென்ன கண்டறியாத ‘லெவல’ எண்டு எல்லோரும் கதைச்சாங்கள்.”
“பிறிஃபெக்ற் டியூட்டி’யிலே இருக்கைக்குள்ளே ‘லெவலாத்தான் இருக்க வேணும். அது தான் நியதி.”
“தெரியாமல் தான் மச்சான் கேக்கிறம். உனக்கு என்ன தகுதியாலை ‘பிறிஃபெக்ற் போஸ்ற்’ தந்தவை?”
“அது தந்த ‘பிறின்சிப்பலை’ போய்க் கேள்!”
“போடா கோபி! உனக்குத் தெரியாது! இப்ப….. இப்ப… உயரமான ஆக்களைத்தானாம் ‘பிறிஃபெக்ட்’ ஆக்கிறது.” வெடிச் சிரிப்புடன் குரல் ஒன்று ஒலித்தது.
வேந்தனின் முகம் கறுத்துவிட்டது. நிலமையை நன்குணர்ந்த குமரன் மேலும் உசாராகிறான்! ஒலித்த பாடல் ஓய்ந்து சோகப் பாடல் ஒன்று ஒலிபரப்பாகிறது!
“என்ன கிரந்தம் கதைக்கிறியள்? எனக்குப் பத்திக் கொண்டு வாற ஆத்திரத்துக்கு….
“உள்ளதை தானே மச்சான் சொன்னனாங்கள்? அதுக்கு உப்பிடி முகங் கறுத்தால்……” வெடிச் சிரிப்புடன் குரல் ஒலித்து ஓய்ந்தது!
“கிளாசுக்கு’ நேரமாச்சு. பிறகு முன்னுக்கு இடம்பிடிக்கேலாது. நான் வாறன்.”
“முன்னுக்கு இருந்தாப் போல ‘பொட்ன’க்கு ‘ஏ’ எடுத்துப் போடலாமோ?”
“‘ஏ’ வருகுதோ ‘எஸ்’ வருகுதோ இயண்ட வரை படிக்கத்தானே வேணும்?”
“தெரியாமல் தான் கேக்கிறம் மச்சான்….உப்படிப் படிச்சாப் போல நீ ‘என்ர’ பண்ணிப் போடுவியோ?”
“அதுதான் அப்பவே சொன்னனே…உதொண்டும் எங்கடை கையிலை இல்லை!”
“மச்சான் ‘சலஞ்’! நீ ‘ஏ லெவலிலை’ நாலு பாடமும் ‘பாஸ்’ பண்ணிப் போட்டால் நான் என்ரை கையை வெட்டி எறியிறன்!” கணீரென்று ஒலித்தது வெண்கலக் குரல். தொடர்ந்து வெடிச் சிரிப்பு உதிர்ந்தது.
வானத்தில் ஓர் மின்னல் கீற்று! தொடர்ந்து ஓர் பேரிடி! ஓர் கணம் உலகமே அதிர்ந்ததைப் போல் ஓர் பிரமை! ஊன்றிய காலை ‘பெடலில’ வைத்து ‘சைக்கிளை’ உழக்க முயன்றான் வேந்தன்.
“இப்ப உன்னை ‘சைட்’டாலை பார்த்தால் ‘எம்.ஜி.ஆர்’ மாதிரிக் கிடக்கு மச்சான்.” வேந்தனின் ‘சைக்கிள் கரியர்’ இப்போ கோபியின் பிடியில்!
“அவ்வளவு வடிவு எண்டு நினைச்சுப் போடாதை மச்சான்…… அந்த மாதிரி வயது காட்டுது.”
வேந்தனின் கண்கள் சிவப்பேறிவிட்டன. மன்றாடும் தோரணையில் கோபியை நோக்குகிறான். ” ‘பிளீஸ்’ கையை எடு மச்சான்.”
பிடியை கோபி விடுவதாக இல்லை! ‘சைக்கிளை’ விட்டு இறங்கிய வேந்தன் கூறுகிறான். “நீங்கள் ‘சைக்கிளை’ வைச்சிருங்கோ… எனக்கு நடக்கத் தெரியும். ஏன் ‘ரியூசன் சென்ரருக்கு ‘ ஓடிப் போகவுந் தெரியும்.”
“ஓடுறதுக்கு இதென்ன ‘கிறவுண்சே?” கோபி வினவ, குமரன் தொடர்கிறான். “சிலருக்கு தாங்கள் பெரிய ஒலிம்பிக் வீரரெண்ட நினைப்பு.”
“சும்மா சொல்லாதை மச்சான். ‘அண்ட நயின்ரீன் குறுப்’பிலை போன முறை ‘ஹன்ரட் மீற்றரிலை சலஞ் கப்’ வேந்தனுக்குத் தானே?” வெண்கலக் குரல் வக்காலத்து வாங்கியது!
அது ‘ஸ்போட்சில்’ அண்டு அவன் தேவநாதன் ‘கிறவுண்சுக்கு’ வர நேரம் செண்டபடியாலை எல்லோ?’ வெடிச் சிரிப்புடன் குரல் ஒன்று ஒலித்தது.
வேகமாக வந்த ஓர் ‘பஸ்’ சடுதியாய் நின்று பின் ஓர் குலுக்கலுடன் முன்னே சென்றது!
யோசி அப்போ ஓடி ஓடி வந்தான் சிறீக்குமார். “ஏன்ரா இதிலை நிக்கிறியள்! ‘ரியூசனுக்கு’ நேரமாச்சு எண்டு ‘பஸ்’சாலை இறங்கி நான் ஓடி வாறன்….. நீங்கள் இதிலை நிண்டு…”
சகலரும் மௌனியாக நிற்கும் அந்தக் காட்சியையும் வேந்தனின் முகச் சாயலையும்…. கோபியின் பிடியையும் இனம் புரிந்த சிறீக்குமார், “உந்தக் கீலாலையா செற்றைக்காய் வெட்டிப் போட்டுப் போறத்துக்கு உதுகளோடை உனக்கென்ன கதை வேந்தன்……நீ வா நீவா நாங்கள் போவம்..” என்றவாறே அவசரப்படுத்துகிறான்.
நேராக வந்த காரொன்று பீடாக் கடை பக்கமாக திசை திரும்புகிறது.
“‘ஓ லெவல்’ மூண்டாம் முறை ‘பாஸ்’ பண்ணின ஆக்கள் கூட இப்ப கதைக்க வெளிக்கிட்டிட்டினம்……..” வெடிச் சிரிப்பு ஒன்று உதிர்கிறது.
“ஓமப்பா ! ஆரோ இல்லையெண்ட நாங்களே? பத்து விரலும் ஒரே மாதிரி இருக்க முடியுமோ?” அடிக்குரலில் சிறீக்குமார் கூறுகிறான்.
“அது சரி சிறீக்குமார்….. உங்கடை ஊரிலை இதுவரை எத்தனை பேர் ‘ஓ லெவல் பாஸ ‘ பண்ணினவை?” இது வெண்கலக் குரலின் சந்தேகம்.
“உங்கடை ஊரை விட திறமாப் ‘பாஸ்’ பண்ணியிருக்கிறாங்கள்……. பார் ஆக்களின்ரை கதையளை. வேந்தன், இப்ப நீ வரப்போறியோ? ‘றேடியோ’விலை செய்தி ‘ரியூண்’ கேக்குது! ‘கிளாஸ்’ தொடங்கப் போகுது.”
இப்போ கோபியின் பிடி விலகிவிட்டது. “இப்படி முக்கி முக்கி படிச்சுத்தானென்ன? குமரனை விட போன தரம் பத்து ‘மாக்ஸ்’ தானே கூட”
“அதாவது கூடத்தானே!” சிறீக்குமார் உஷாரானான். “நாங்கள் இப்படி முசுப்பாத்தி பண்ணியும் படிக்கிறம். நீங்கள் இப்படி முக்கி முக்கிக்கூட….. உண்மையிலே உங்களை விட நாங்கள் தான் புத்திசாலிகள்.”
“போட்டி போடப்பலமில்லாமல் பொறாமைப்பட்டுத் திரியிறியளே இப்படித்தானிருக்கு வேண்டுமென்ற நியதியில்லாமல் திக்கற்றுத் திரியிறியளே…… மற்ற வங்களையும் முன்னேறவிடாமல் நீங்களும் முன்னேறாமல் இருந்து அப்பர், அம்மாவைப் பேக்காட்டுறதா நினைச்சு, நீங்களே பேக்காட்டுப்படுறியளே. உண்மையிலே நீங்கள் தான் புத்திசாலிகள்” சிறீக்குமார் ‘பாறில்’ பாய்ந்து ஏறுகிறான். வேந்தன் தான் அப்போதே தயாராகிவிட்டானே!
“பெரிய கதை கதைக்கினம் உப்பிடித் தத்துவங் கதைச்சாப் போலையென்ன உவையென்ன ‘வாசிற்ற’க்கு ‘என்ர’ பண்ணுற ஆக்களே?” வெண்கலக் குரல் ஒலிக்க வெடிச் சிரிப்பு உதிர்ந்தது.
இப்போ வேந்தன் வேகமாக முன்னேறுகிறான். வரும் போது அவன் முகத்தில் இருந்த களை இப்போ இல்லை. அவனது முகம் இப்போ……. வரண்டு ஒடுங்கிவிட்டது!
‘தியேட்டரில்’ இப்போதுதான் ‘அந்தப்’ பாடல் ஒலித்து ஓய்ந்தது. ‘தியேட்டர்’ வளவினுள் இப்போ எவருமே இல்லை…… ‘போட்டோக் காட்ஸ்’ பார்க்கும் ஓர் சிலரைத் தவிர. ‘கலரிக்’ கூண்டினுள் ‘லைட்’ அணைந்துவிட்டது ‘ரிக்கெட்’ முடிந்ததற்கு அடையாளமாக!
“இண்டைக்கு வேந்தனுக்கு உவ்வளவும் போதும்.” கறுவாத் துண்டொன்றை வாய்க்குள் முறித்து வைத்தான் குமரன்.
“இண்டையான் விசயம் ‘சக்சஸ்’…….. இனி அடுத்த ‘புறோகிறாம்’ என்ன மாதிரி?” வெண்கலக் குரல் வினவியது!
“சொல்லவே மறந்து போனன். இண்டைக்கு என்ரை ஆள் படம் பார்க்க வாறனெண்டது……. அதனாலை….. ‘டியூட்டி’இண்டைக்கும் ‘தியேட்டருக்கை’ தான்.”கண்களால் ஜாடை காட்டியவாறே கோபி கூறுகிறான்.
‘அது தான் ‘ரீ ஷேட்’ அடிச்சு…. எம்.ஜி.ஆர் மாதிரி வந்திருக்கிறாய் அதுதான் என்ன விசயமெண்டு யோசிச்சன்.”
அவனை விடு! அல்லாட்டி அவள் இவனுக்கு சுழருறாளே? சரி…. சரி அப்ப கோபி இந்தா ‘சைக்கிள்’ கொண்டுபோய் உன்ரை வீட்டிலை விட்டுட்டு வா! ‘இன்ரேவலோடை’ வெளிக்கிடுறபடியாலை…… இடையிலை ‘சைக்கிள்’ எடுக்கேலாது.” அன்ரன் அவசரம் காட்டுகிறான்.
“நான் ‘சைக்கிளை விட்டுட்டு வாறன்…… அன்ரன் நீ போய் ‘செக்கெண்ட் கிளாசிலை’ மூண்டு எடு.’ ‘சைக்கிள்’ இப்போ கோபி கையில்.
இப்போ……’ தியேட்டரில்’ பாடல் ‘ஒடிற்றோறியத்துள்’ ஒலிக்க ஆரம்பித்து விட்டது. பாடல் ஒன்று ஒலித்து ஓய்கிறது! மீண்டும்……… ஓர் பழைய பாடல்.
“கொப்பிகளை என்னேயிறது?”
“இஞ்சை கொண்டு வாருங்கோ! பீடாக் கடைக்குள்ளை போடுவம்.”
“இண்டைக்குத் தான் கடைசி! நாளையிலிருந்து படிக்கத் தொடங்க வேணும்.” ‘எதையோ’ சிந்தித்தவாறே குமரன் கூறுகிறான்.
“ஒவ்வொரு நாளும் தானே உதைச் சொல்லுறாய்?’ ரிக்கெட் பலன்ஸ்’ பார்த்தவாறே அன்ரன் கூறுகிறான்.
“இல்லை! இண்டைக்குத் தான் கடைசி. இனிமேல் ஒழுங்காய் படிக்க வேணும்…… ‘கிளாசுக்குப்’ போகவேணும். இல்லாட்டி வேந்தனை வெல்லேலாது.”
”கிளாசுக்கு’ போகவேணும் எண்டுறாய்….. ‘ஃபீஸ்’ கட்டிப் போட்டியோ?’
“இல்லை மச்சான். அப்பர் மிளகாய் வித்துத்தான் காசு தாறன் எண்டவர். அதுதான் யோசிக்கிறன்……’ வெடிச் சிரிப்பு இப்போ வேதனைக் கலப்புடன் ஒலித்தது!
“அதுசரி அன்ரன் உனக்கு எங்காலை மச்சான் காசு?”
“எல்லாம் ‘ரியூசன்’ காசுதான்….. அதையெல்லாம் ஏன் இப்ப கேட்டு பரிசு கெடுத்திறாய்? ம்.. உன்ரை சரக்கு உள்ளடுகுது மச்சான்.” வெண்கலக் குரல் ஒலிக்க, கோபி ஒரு முறை தன் அழகை ‘பொக்கெற்’றிலிருந்த கண்ணாடியில் சரி பார்த்துக் கொண்டான்.
“மாறுவம். ‘ஃபெஸ்ற் பெல ‘லும் அடிச்சிட்டுது போலை. வாசலுக்கை அம்மான் இருக்கிறார்…நான் மெதுவா மாறுறன்…நீங்கள் பிறகு வாருங்கோ!”
‘தியேட்டர்’ வாசலில் இன்னமும் மின் விளக்குகள் அழுது வடிந்து கொண்டிருந்தன.
‘செக்கண்ட் கிளாஸ்’ நுழைவினை மூவரும் அடைகின்றனர்.
மூன்று ‘ரிக்கெட்’டும் கிழிக்கப்படுகின்றன!
இருளினுள் மூவரும் வேகமாக நுழைகின்றனர்.
– 16.05.1982, வீரகேசரி வாரவெளியீடு.
– நிலாக்காலம் (சிறுகதைத்தொகுப்பு), முதற் பதிப்பு: 25 ஜூலை 2002, ஆ.இரத்தினவேலோன் வெளியீடு, கொழும்பு.