”சார்! உங்களைத்தானே!” என்று யாரோ கையைத் தட்டி என்னைக் கூப்பிடவே, திரும்பிப் பார்த்தேன். நண்பர் ராமானுஜம் விரைவாக என்னை நோக்கி வந்துகொண்டிருந்தார். பக்கத்தில் வந்ததும், ”ஒரு நல்ல சமாசாரம் சொல்லத்தான் கூப்பிட்டேன்” என்று கூறிவிட்டு, அச்சடித்த நோட்டீஸ் ஒன்றை என்னிடம் நீட்டினார்.

”இதில் நல்ல சமாசாரம் என்ன ஐயா இருக்கிறது?” என்று நான் கேட்டேன், அந்த நோட்டீஸைப் பார்த்துவிட்டு. அதில் ‘பிரேம பாசம்’ என்ற நாடகம் நடக்க இருக்கும் தேதியும் இடமும், டிக்கெட்டுகளின் விவரங்களும், அவற்றுடன், நாடகத்திற்கு ஒவ் வொருவரும் அவசியம் டிக்கெட் வாங்கவேண்டும் என்ற கோரிக்கையும் காணப்பட்டன.
”அப்படியானால், நீங்கள் ஒன்றுமே கேள்விப்படவில் லையா?” என்று அவர் என்னை ஆச்சரியத்துடன் கேட்டார்.
”இல்லையே!” என்றதும், ”இந்த நாடகம் நடப்பதில் ரொம்பத் தகராறுகள் எல்லாம் ஏற்பட்டு, நாடகம் நடக்குமோ, நடக்காமலே போய்விடுமோ என்று கவலைப் படும்படியாக இருந்தது, சார்! அப்புறம், நான்தான் வெகு சாமர்த்தியமாகத் தகராறுகளைத் தீர்த்து வைத்தேன்!” என்று அவர் பெருமையோடு தெரிவித்தார்.
”என்ன தகராறு? எப்படித் தீர்த்து வைத்தீர்கள்?”
”பிரேம பாசம் என்கிற நாட கத்தை எழுதினவன் நான். அது தெரியுமல்லவா?”
”அப்படியா!”
”ஆமாம், சார்! இல்லாவிட் டால் எனக்கென்ன அக்கறை? நாடகத்தை நடத்துகிறவர்கள் நம்ம ஊர் மாதர் சங்கத்து அங்கத் தினர்கள்! மாதர் சங்கத் தலைவி மனோன்மணியின் வேண்டு கோளின்படிதான் நாடகத்தை எழுதிக் கொடுத்தேன்.”
”சரிதான்!”
”நாடகம் ரொம்ப உயர்தரமானது. கதாநாயகி, கணவனுக்காக உயிரைக் கூடத் தியாகம் செய்யத் துணிந்து விடுகிறாள்! நாடகத்தைப் பார்த்தால் அப்படியே நீங்கள் கண்ணீர் விட்டுவிடுவீர்கள்!”
”சரிதான்! ஏதோ தகராறு ஏற்பட்டது என்றீர்களே..?”
”ஆமாம்! யார் கதாநாயகி வேஷம் போடுவது என்பதில் அங்கத்தினர்களிடையே பெரிய தகராறு ஏற்பட்டது! முக்கியமாக, சுப்ரியாதேவி, நாகலட்சுமி, மீனாம்பாள் ஆகிய மூன்று பேர் இந்தப் பாத்திரத்திற்காகப் போட் டியிட்டார்கள். சங்கத் தலைவிக்கு என்ன செய்வதென்று ஒன்றும் புரியவில்லை. உண்மையில் இந்த மூன்று பேருக்குமே கதாநாயகி வேஷம் போட்டுக்கொள்ள எவ்வித யோக்யதையுமில்லை. சுப்ரியாதேவிக்கு நடித்துப் பழக்க மில்லை; நாகலட்சுமிக்குப் பாட்டு வராது; மீனாம்பாள் கண்ணுக்கு நன்றாக இருக்கமாட்டாள்.மங்களம் என்கிற ஒரு ஸ்திரீக்குதான் கதாநாயகிக்கு வேண்டிய சகல யோக்யதைகளும் இருந்தன. பல நாடகங்களில் அவள் நன்றாக நடித்துப் பெயர் வாங்கியிருந்தாள். ஆனால், மேற்கூறிய மூன்று முக்யஸ்தர்களையும் தள்ளிவிட்டு இந்த ஸ்திரீக்கு முக்கிய பாகத்தைக் கொடுப்பது எப்படி..?”
”அப்புறம் என்ன செய்தீர்?”
”அந்த மூன்று முக்கியஸ்தர்களும் தாங்களாகவே விலகிவிடும் படி ஒரு காரியம் செய்துவிட்டேன். மங்களமே கதாநாயகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டாள்!”
”ஆச்சரியமாக இருக்கிறதே! அப்படி என்ன காரியம் சார் செய்தீர்கள்?”
”கதாநாயகியின் வயது 18 என்பதற்குப் பதிலாக 30 என்று மாற்றிவிட்டேன். போட்டியிட்ட மூன்று பேருமே 30 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தும், அவர்களில் யாரும் நிஜ வயதை ஒப்புக்கொள்ள விரும்பவில்லை! ’30 வயதுக் கிழவி வேஷம் யாருக்கு வேணும் இங்கே!’ என்று தாங்களாகவே ஒதுங்கிவிட்டார்கள்!”
[நன்றி: விகடன்]
– ஆனந்த விகடனில் 40, 50 -களில் பல ஒரு பக்கக் கதைகளை எழுதியவர் ‘சசி’. ( இயற்பெயர்: எஸ்.ஆர்.வெங்கடராமன்). ‘ரமணி’ என்ற பெயரிலும் ‘திண்ணைப் பேச்சு’ கட்டுரைகளை எழுதினார். 14 வருடங்கள் விகடனில் உதவி ஆசிரியராய்ப் பணி புரிந்த ‘சசி’ 25 ஏப்ரல் 1956 இல் காலமானார்.