‘கிள்ளு கிள்ளு’ப்பான கதை!

1
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 13,354 
 
 

அவள் கிள்ளிவிட்டாள்… ரொம்பவே அழுத்தமாக ‘நறுக்’ என்று தோள்பட்டையில் & புஜம் புஜம் என்பார்களே & அங்கே! கொஞ்சும்போது செல்லமாகக் கன்னத்தில் கின்னத்தில்… தொலைகிறது என மூக்கில்கூடக் கிள்ளிக்கொள்வது உண்டுதான்.

அவன் மேல்தான் தப்பு. அவள் எதிர்பாராத சமயம், அவளுடைய இடுப்பில் கிள்ளியிருக்கக் கூடாது. அவள் கையில் தயிர் வைத்திருக்கிறாளா, கொதிக்கிற பாயசமா… எதையாவது அவன் முந்தாநாள் வரை கவனித்துக் கிள்ளியிருக்கிறானா?

‘தங்கப் பட்டை’, ‘பசு வெண்ணெய்ப் பாலம்’ என எப்போதெல்லாம் அவன் மனசு வர்ணிக்கிறதோ, அப்போது விரல் எட்டும் தூரத்தில் அவள் இடுப்பு இருந்துவிட்டால் போச்சு!

கையிலிருந்த தயிரைப் பொதே லென்று கீழே போட்டுவிட்டாள். அசிங்கமாக அவள் பட்டுப் புடவை மீதும் மேடை பூராவும் கொட்டி… அவளுக்கு மகா ஆத்திரம். ‘‘உங்களுக்கு…’’ என்று மகாமகாக் கோபமாக அவன் புஜத்தில் கிள்ளிவிட்டாள். அந்தக் கிள்ளில் ஆழம் இருந்தது. ஆவேசம் இருந்தது. அழுத்தம் இருந்தது. முக்கியமாக, வலி இருந்தது.

ஆபீஸில் சாயந்திரம் வரை சிஸ்டத் திடம் கையைக் கொண்டுபோகவே முடியவில்லை. வலது கை சுவாதீனமற்றுப் போய்விட்டதா என்ன? சனியன்… இப்படியா ஒருத்தி கிள்ளுவாள்?

ஆபீஸ் டாய்லெட்டில், சட்டை பனியனைக் கழற்றி புஜத்தைப் பார்த்தான். கிள்ளிய இடம் பழுத்த சீமை இலந்தைப் பழம் போலக் கன்னித் தடித்திருந்தது. கடன்காரியின் நகம் கிகம் பட்டிருக்குமா? ‘அவளுக்கு இத்தனை ஆத்திரம் கூடாது. பலமும் அதிகம்தான்’ என்று மனசு ஜால்ரா போட்டது. சிலர் காதை, மூக்கை, உதட்டை, கன்னச் சதையைக்கூடக் கடித்துவிடுவார்கள் என்று நாராயண ரெட்டி எழுதிய கட்டுரை ஞாபகத்துக்கு வந்தது. அவள் முகத்தில் தெளித்த ரௌத்திரம், கண் முன்னே நின்றது. சரியாகப் பாடினானய்யா… ‘அழகான ராட்சஸியே!’

சட்டையை மாட்டிக்கொண்டவன் சிரித்தான். மனசில் ஒரு சின்ன பிளான். ஆபீஸ் முடிந்து வேண்டு மென்றே லேட்டாக ஏழே கால் மணிக்கு வீட்டுக்குள் நுழைந்தான். அவள் டி.வி&யில் ‘ஒரு பவுடருடன் மூணு லிட்டர் தண்ணி கலந்தால்’ விளம்பரத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

அவனைப் பார்த்ததும் டப்பென்று ரிமோட்டை அழுத்திவிட்டு, ‘‘ஏன் இவ்வளவு லேட்? போன்கூட இல்லே…’’ என்றவாறு வேகமாக அவன் கையில் இருந்த பையை வாங்கிக்கொண்டாள். சிரித்தவாறு மெத்தென்று ஒரு செல்ல இடிகூட தோளில் இடித்தாள். ‘‘ஸ்ஸ்…’’ என்று உதட்டை உறிஞ்சியபடி அவளை ஒதுக்கி னான்.

‘‘என்னாச்சு?’’

‘‘ஊசி போட்டு வந்தேன்!’’

‘‘ஊசியா? என்ன ஊசி? எதுக்கு?’’ & பரபரத்தாள்.

‘‘கையிலதான். பெரிசா வீங்கிருச்சு. நகம் கிகம் பட்டிருக்குமோன்னு ஒரு ஏ.டி.எஸ்… நம்ம டாக்டர் வெங்கடேஷ் கிட்டே போட்டு வந்தேன். அவரோட அசிஸ்டென்ட்டுதான் போட்டாள். நறுக்குனு குத்திட்டாள்!’’

‘‘என்ன சொல்றீங்க?’’ & பதறினாள்.

‘‘பதறாதே! சாதாரண ஊசிதான். இப்ப என்னடான்னா, கிள்ளின வலியை விட ஊசி வலிதான் பெரிசா இருக்கு. டைப்கூடப் பண்ண முடியலை.’’

அவள் கலங்கிவிட்டாள். ‘‘சே! நான் ஒரு முட்டாள். எங்கே, எங்கே… காட்டுங்க’’ என்றாள் பதற்றமாக.

மெதுவாக சட்டையைக் கழற்றினான். பனியனைக் களைவதற்குள்ளேயே, புஜத்தில் சிவப்பாக, சீமை இலந்தை தெரிந்தது.

‘‘ஸாரி… ஸாரி! ரொம்ப ரொம்ப ஸாரி! சே! நான் ஒரு ராட்சஸி! என்னை எதால அடிச்சுக்கறது! ப்ளீஸ்… ப்ளீஸ்! இப்படி வெளிச்சத்துக்கு வாங்களேன்’’ என்று துடித்துப் போய்விட்டாள்.

‘‘சரி, விடு! அடுத்த தடவை லேசா கிள்ளு. ப்ளட் கிளட் ஒண்ணும் தெரி யலே. ஆனா, சுருக் சுருக்னு வலி. சாயந்திரம் மூணு மணிக்கு பெரிசா வீங்கியிருந்தது. ஊசி போட்டதுக்கப்புறம் வீக்கம் வடிஞ்சிருக்கு!’’

‘‘நான் ஒரு முண்டம்… செருப் பைக் கழற்றி என்னை நாலு அடி அடிங்க!’’ &துக்கமும் அழுகையும் குமுறிக்கொண்டு வந்தது.

‘‘சரி, நீ என்ன வேணும்னா செய்தே?’’

‘‘என்னை அந்த விளக்குமாத்தை எடுத்து நாலு போடு போடுங்க. எவ்வளவு பெரிய காயம்!’’ என்று அவன் கையை எடுத்துத் தன் கன்னத்தில் அறைந்துகொள்ள முயன்றாள். அழுகை யும் கேவலுமாக அவனைக் கட்டிப் பிடித்துக்கொண்டு கேவினாள். அவன் அவளை ஆறுதலாக அணைத்துக் கொண்டு, ‘‘ஐயே! என்ன இது, சின்ன குழந்தை மாதிரி அழுதுட்டு…’’ என்றான்.

வீட்டிலிருந்த பலவித ஆயின்மென்ட் டுகள், ஸ்னோ, தேங்காய் எண்ணெய், வெண்ணெய்… எது எதையோ தோளில் தடவிவிட்டாள். பத்தாயிரமாவது தடவை, ‘வலிக்கிறதா, வலிக்கிறதா?’ என்று கேட்டாள். ஃபிரிஜ்ஜில் ஐஸ் க்யூப் இல்லாததால் மாடி வீட்டில் வாங்கி வந்து, கைக்குட்டையில் சுற்றி ஒத்தடம் கொடுத்தாள். அவன் கையைத் தன் மார்பு மீது பத்திரமாக வைத்துக் கொண்டே, அவன் தூங்கும் வரை தோளைப் பிடித்து, காலைப் பிடித்து, வெந்நீரில் அவ்வப்போது ஒத்தி… அவன் தூங்கிவிட்டான். அவள் தூங்கவே இல்லை.

தன் கையை, விரல்களை நெயில் பாலிஷில் பளபளத்த நகங்களைப் பார்க்கவே அவளுக்கு அருவருப்பாக இருந்தது. பிரியமாகக் கொஞ்சினவரை இப்படியா குரூரமாகக் கிள்ளிவைப்பது?

தனக்கு என்ன தண்டனை கொடுத் துக்கொள்வது என்று பட்டியலிட்டாள். இது புதன்கிழமை. இனி ஓரொரு புதன் கிழமையும், பச்சைத் தண்ணி குடிக் காமல் பட்டினி கிடப்பது, தினமும் ஆயிரத்தெட்டு தடவை ராமஜெயம் எழுதுவது, கோயிலுக்குப் போய் நவக்கிரகம் சுற்றுவது, தினமும் சுந்தர காண்டம் பாராயணம் பண்ணுவது…

பவுடர் என்ன வேண்டிக்கிடக்கு? லிப்ஸ்டிக் ஒரு கேடா? நெயில் பாலிஷா? பாலிஷ் பாட்டிலைத் தூக்கிக் குப்பைக் கூடையில் எறிந்தாள். நகம் பட்டிருந்தால் விஷமாச்சே என்பது மனசை உறுத்திக் கொண்டு இருந்தது. இடுப்பில் ஒரு சூடு இழுத்துக்கொள்ள வேண்டும் என்றுகூட ஆத்திரமாக வந்தது.

‘அழகாக இருக்கிறோம் என்பதால் மனசில் என்னை அறியாத அகங்காரம் ஒளிந்திருக்கிறது. அந்த அகங்காரத்தில் விளைந்த கொழுப்புதான் என்னை அப்படி நடந்துகொள்ள வைத்திருக்கிறது’ என்று திரிசூலம் சிவாஜி மாதிரி சவுக்கால் அடித்துக்கொள்ளாத குறையாக தன்னைச் சாடிக்கொண்டாள்.

மறுநாள் ஆபீஸ் போய்விட்டு அவன் வீடு திரும்பியபோது, அவளைப் பார்த்துத் திடுக்கிட்டான். வலது கையில் கட்டை விரலிலும் ஆள்காட்டி விரலிலும் பயங்கரமான கட்டு. வெள்ளை பாண்டேஜின் விளிம்பிலும் அங்கங்கே நடுவிலும் லேசான சிவப்புக் கசிவு. ‘‘என்ன சரள், என்ன ஆச்சு..?’ என்று பதறினான்.

நிதானமாகச் சொன்னாள்… ‘‘அக்கிரமம் பண்ணின விரல்களுக்குத் தண்டனை வழங்கிட்டேன்!’’

‘‘என்ன சொல்றே சரள்?’’

‘‘வலி மரப்பு ஊசி போட்டு, பிடுங்கித் தள்ளிட்டார் டாக்டர்.’’

அவன் பதறி அலறினான். ‘‘பிடுங்கித் தள்ளிட்டாரா? ஐயோ… என்ன சொல்றே சரள்?’’

‘‘உங்களைக் கிள்ளின ரெண்டு கை விரல் நகங்களையும் வேரோடு சுத்தமாகப் பிடுங்கியாச்சு. எனக்கு வேண்டியதுதான் இந்தத் தண்டனை!’’

‘‘ஐயோ! என்னம்மா இது குரூரம்? என் விளையாட்டு வினையாயிடுச்சே!’’

‘‘என்ன விளையாட்டு?’’

‘‘நான் ஊசியெல்லாம் எதுவும் போடலை. சும்மா உன்னைக் கலக்கி யடிக்க அப்படி ஒரு நாடகம் ஆடி னேன். என் செல்லமே, அதுக்காக உன் அழகான விரல் நகங்களைப் பிடுங்கிக்கிறதா?’’ & அவன் தலையில் அடித்துக்கொண்டான். ‘‘நான் ஒரு முட்டாள்… மிருகம்..! சரள்… சரள்!’’ என்று அவளைக் கட்டிக்கொண்டு கதறினான். சரள் சிரித்தவாறு அவனை ஒதுக்கினாள்.

‘‘இதான் சாக்குன்னு இறுக்கிக் கட்டிக்கிறீங்க!’’ என்றாள்.

‘‘உன்னால இந்த நிலையிலேயும் எப்படி சரள் சிரிக்க முடியுது? இந்த இடியட் போட்ட நாடகம் இப்படி ஆயிடுச்சே!’’

‘‘எப்படி ஆயிடுச்சு? நகம் பிடுங்கின விரலும் அழகாத்தான் இருக்கு… ஆனா, நீங்க பார்த்தா கதறிடுவீங்க!’’ என்றபடி, நசநசவென்றிருந்த கட்டை அவள் பிரிக்கத் தொடங்கினாள்.

‘‘வேண்டாம்… வேண்டாம். ஐயோ! அந்த குரூரத்தை என்னால தாங்க முடியாது சரள்! பிரிக்காதே!’’

அவள் கட்டைப் பிரித்து, பஞ்சைச் சுருட்டி எறிந்தாள். அவளது அழகிய விரல்களில் நகங்கள் பரம சௌக்கிய மாக, பத்திரமாக இருந்தன.

சிரித்தாள். ‘‘ஸாரி! நீங்க ஆடின நாடகத்துக்கு நானும் ஒரு எதிர் நாடகம் ஆடிட்டேன். கணக்கு சரியாப் போச்சு. நீங்க ஆபீஸ் போனதுமே, டாக்டர் வெங்கடேஷ§க்கு போன் பண்ணி, மாத்திரை ஒண்ணும் எழுதித் தரலையே, ஊசி மட்டும் போதுமான்னு கேட்டேன்! ‘மாத்திரையா? ஊசியா? உன் ஹஸ்பெண்ட் இங்கே வரலை யேம்மா! அவனை நான் பார்த்தே ரொம்ப நாளாச்சே!’ன்னார். என்னை ஏமாத்தின உங்களைப் பதிலுக்கு ஏதா வது பண்ணாட்டா, எப்படி? அதான்…’’

‘‘அடிப் பிசாசு!’’ என்று செல்லமாகப் பற்களைக் கடித்துக்கொண்டான். ‘‘சரி, அட்வான்ஸா சொல்லிட்டே செய்யறேன். இப்போ உன் இடுப்பில் நான் கிள்ளப்போறேன். ரெடியா..? ஒன் டூ த்ரீ…’’ என்றபடி, அவள் இடுப்பில் லேசாக விரல்களை வைத்தான்.

‘‘ஒரு கிள்ளுதானா?’’ என்றவள், ‘‘சன்டேன்னா ரெண்டு!’’ என்றாள் கொஞ்சலாக!

– மே 2006

ஜலகண்டபுரம் ராமசுவாமி சுந்தரேசன் என்னும் ஜ.ரா.சுந்தரேசன் (பி:சூன் 1, 1932) பிரபல தமிழ் எழுத்தாளர் ஆவார். தமது தாயார் மற்றும் தந்தையார் பெயர்களை இணைத்து பாக்கியம் ராமசாமி என்னும் புனைபெயரில் நகைச்சுவைக் கதைகள் மற்றும் தொடர் புதினங்களுக்காக மிகவும் புகழ் பெற்றார். இவர் பத்மஸ்ரீ விருது பெற்ற ஜ.ரா.கிருஷ்ணமூர்த்தியின் சகோதரன். சேலத்தைச் சேர்ந்த ஜலகண்டாபுரம் என்னும் ஊரைச் சேர்ந்தவர். நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகாசிரியர், கட்டுரையாளர் என்ற அறிமுகத்தைவிட, அப்புசாமி,…மேலும் படிக்க...

1 thought on “‘கிள்ளு கிள்ளு’ப்பான கதை!

  1. தம்பதிகளின் சிருங்கார லீலைகள் …திகட்டாத வர்ணனை..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *