கதையாசிரியர்:
தின/வார இதழ்: பாக்யா
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 20, 2023
பார்வையிட்டோர்: 6,118 
 
 

திருமண வாழ்வு பற்றிய தன்னுடைய கற்பனைக்கோட்டை இடிந்து தரைமட்டமாகிவிட்டதில் தன் வாழ்க்கையே இத்தோடு அஸ்தமனமாகிவிட்டதாக உணர்ந்தாள் கவிதா.

“உன் புருசன் சரியில்லையா…?”

“இல்லை”

“குடிகாரனா…?”

“இல்லை”

“மற்ற பொண்ணுங்க கூட அவருக்கு தொடர்பு இருக்கா…?”

“இல்லை”

“உன் மாமியார் கொடுமைக்காரியா…?”

“இல்லை”

“அப்ப நாத்தனார்…?”

“என் புருசன் அவரோட பெற்றோருக்கு ஒரே பையன்.”

“மொத்தத்துல ஒரு குறையுமே இல்லாம பின்னே எதுக்கடி இப்படி இடிஞ்சு போய் இருக்கே…? ஆமா முக்கியமா ஒன்னை விட்டு விட்டேனே…அந்த விசயத்துல ஏதாவது…?”

“ச்சீ போடி…” என்று கவிதா வெட்கப்பட்டதிலேயே அதில் குறை ஏதுவுமில்லை என்று பட்டது அவளுடைய கல்லூரி உயிர் தோழி கனிகாவிற்கு.

“முடியை பிச்சுக்கனம் போலிருக்கு. உன் கூட பழகின தோசத்துக்காக தொன்னூறு கிலோமீட்டருக்கு அப்பாலிருந்து உன்னைப்பார்த்துட்டு போக வந்திருக்கேன். எக்கேடோ கெட்டுப்போ. எனக்கென்ன வந்தது?” என்றாள் சலிப்புடன் கனிகா.

“ஏண்டீ இப்படி சலிச்சுக்கிறே?”

“பின்னே என்னடி? வாழ்க்கைப்பட்ட இடத்துல உனக்கு ஒரு குறையும் இல்லே. இப்படிப்பட்ட நல்லவங்க கிடைக்கிறது இந்தக்காலத்துல எவ்வளவு அபூர்வம்னு தெரியுமாடி உனக்கு?”

“அதில்லடி. நான் படிச்ச படிப்புக்கு என் பெற்றோர் செவ்வாய் தோசத்தை காரணம் காட்டி என்னை விட குறைவா படிச்சிருக்கிற, விவசாயம் பார்க்கிற ஒருத்தருக்கு கட்டிக்கொடுத்துட்டாங்க. அதாண்டி என்னோட வருத்தமெல்லாம். காலேஜ்ல படிக்கும் போது என்னோட திருமண வாழ்க்கை யாரோட எப்படி அமையனம்னு நான் திட்டம்போட்டு வச்சிருந்தேன்னு உனக்கு கூடத்தெரியும்.”

“அது கற்பனை. நினைச்சுப்பார்க்க மட்டும்தான் சந்தோசமா இருக்கும். இது நிஜம். வாழ்ந்து பார்த்தாத்தான் சந்தோசம் பிடிபடும்”.

“…………..”

“நகரத்துல பேண்ட் சட்டை போட்டுகிட்டு டிப்டாப்பா வேலைக்கு போறவனா உன் கணவன் இருக்கனம்னு நீ கனவு கண்டே. அவனுகளுக்கு இந்த உழைச்சுப்பிழைக்கிற விவசாயிக எவ்வளவோ மேல். பேண்ட் சட்டை போட்டுகிட்டவனெல்லாம் புத்திசாலியும் இல்லை. சட்டை போட்டு வேட்டி கட்டினவனுக எல்லாரும் முட்டாள்களும் அல்ல. “

“……………”

“நாம நகரத்துல இருக்கறோமா ? கிராமத்துல இருக்கறோமாங்கிறது முக்கியம் இல்லை. சந்தோசமா இருக்கறோமாங்கிறது தான் முக்கியம். அந்த விசயத்துல கோயம்புத்தூர் நகரத்துல இருக்கிற என்னை விட, கோபி கிராமத்துல இருக்கிற நீ கொடுத்து வச்சவதான்.” என்று கூறிய கனிகாவின் கண்களில் கண்ணீர் துளி எட்டிப்பார்த்தது.

“கனிகா…ஏண்டீ அழறே…? உனக்கு ஏதாவது பிரச்சினையா…?”

“ஏதாவது பிரச்சினை இல்லடி. எல்லாமே பிரச்சினை தான்”

“அப்படீன்னா நீ சந்தோசமா இல்லையா…?”

” நீ, நான் கேட்ட எந்தக்கேள்விக்கெல்லாம் இல்லைன்னு பதில் சொன்னியோ அதெல்லாம் எனக்கு இருக்குடி. இத்தனை பிரச்சினைகளையும் வச்சுகிட்டு நான் வாழனம்னு ஆசைப்படறேன். எந்தப்பிரச்சினையுமே இல்லாத நீ சந்தோசத்தை இழந்து தவிக்கிறே”.

“சாரிடி கனிகா. நான் இது வரைக்கும் உலகம் புரியாம இருந்துட்டேன். நான் படிச்சவள்ங்கிற திமிர்ல அவங்களை எடுத்தெறிந்து பேசி கூட அவங்க என்கிட்ட அன்பா நடந்துட்டாங்க. அவங்க தெய்வம் போன்றவங்கன்னு இப்ப உணர்ந்துட்டேன். நீ இதுல ஏதாவது புக்ஸ் படிச்சிட்டிரு. என் புருசன் காட்டுக்குள்ளே உழைச்சு களைப்பா இருப்பார். கொஞ்சம் தண்ணி கொண்டு போய் கொடுத்துட்டு அவரோட அன்பா ஒரு வார்த்தை பேசிட்டு வர்றேன்.” என்று தன்னிடம் கூறிச்சென்ற கவிதாவை ஆச்சர்யமாகப்பார்த்தாள் கனிகா.

(1997ல் பாக்யா வார இதழில் வெளியான சிறுகதை)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *