(2015ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
எரிமேடையில் கிடத்தப்பட்டிருந்த அப்பாவின் உடலைக் கடைசியாக உற்றுப் பார்த்தான் சிவராமன். இந்த சோக தரிசனத்திற்குத்தான் அவன் அமெரிக்காவிலிருந்து பறந்து வந்தான். மனசை ஏதோ ஒன்று அடைத்தது. சுற்றமும் நட்பும் சூழ்ந்திருந்தாலும் தன் தனிமையை மட்டுமே அவன் அங்கு உணர்ந்தான். ஆனாலும் கண்களில் கண்ணீர் ஒன்றும் ஊறவில்லை. அதற்கான முயற்சியும் அவன் செய்யவில்லை. முயற்சி செய்து முட்டுவதா கண்ணீர்? அப்பாவின் மரணத்திற்கு அழமுடியாத அல்லது அழத்தெரியாத ஒரு தலைமுறை தயாராகி விட்டது. மரணத்திற்கு அழுதலும் அநாகரிகப் பட்டியலில் சேர்ந்து விட்டது.
அப்பா உயிரோடு உள்ள போதெல்லாம் மகன்களின் நினைவில் தங்குவது ஒழுக்கம் போதித்து இறுகிப்போன அந்தக் கெட்டி முகம்தான். தகப்பனின் பிணத்தில்தான் பிள்ளைகள் பாசமுகத்தைப் பார்க்கிறார்கள். மரணம் இறந்தவர்களுக்கே சாதகம் செய்கிறது. அதுதான் அவர்களின் இனிமையான நினைவுகளை மட்டுமே அழைத்து வருகிறது.
‘என்ன வேணும்னாலும் பண்ணுங்க. எம்பையன அடிக்கமட்டும் கூடாது’ என்று பள்ளிக்கூடத்து வாத்தியாரிடம் பணிவான எச்சரிக்கை விடுத்தது இன்ஷூரன்ஸ் லோன்போட்டு இரண்டு சக்கர வாகனம் வாங்கிக்கொடுத்தது – பர்ஸில் வெங்கடாஜலபதி படத்துக்குக் கீழே மீசை முளைக்காத மகனின் பழைய ஃபோட்டோவை வைத்திருந்தது முதல்முறை மகன் அமெரிக்கா போனபோது விக்கி விக்கி அழுதது ஒவ்வொன்றாய் நினைவு வந்து ‘அப்பா நல்லவர்தான் போலிருக்கிறதே’ என்று சிபாரிசு செய்தன.
”இன்னும் சற்று நேரத்தில் மின்சாரத் தீயில் அழியப்போகிறது எனக்கு உயிர் தந்த உடல். நேற்றுவரை அப்பா ஓர் உயிர்; இன்று உடல் நாளை வெறும் சொல். கடைசியில் எல்லா மனிதர்களும் வெறும் சொல்லாகித்தான் போகிறார்கள். அந்தச் சொல்லை உச்சரித்துக்கொண்டேயிருக்கும் கடைசி மனிதனோடு இரண்டாம் மரணம் அடைகிறார்கள்; அவ்வளவுதான்”.
மயானத்தின் பிசுபிசுப்பும் வெக்கையும் புழுக்கமும் சிரமமாய் உணரப்பட்டது சிவராமனால். மனைவியின் குரல்வேறு ஒலித்தது காதுக்குள்.
“சடங்குகளில் தள்ளி நில்லுங்கள். ஏதாவது ‘இன்ஃபெக்ஷன்’ என்று வந்து தொலைக்கப் போகிறீர்கள்” என்று எச்சரித்து அனுப்பியிருந்தாள் சிவராமன் மனைவி ‘கௌ’; அதாவது ‘கௌசல்யா’ என்பதன் அமெரிக்கச் சுருக்கம். ‘சரி’ என்று சொல்லிவந்தான் இந்த ‘சிவராமன்’ என்ற ‘ஷிவ்’.
மனைவியின் கட்டளைக்குச் செவிசாய்க்கும் விதமாக ‘எதற்கும் நாளைக்குச் சாம்பலைப் பாலித்தீன் பையிலிட்டு ரப்பர்பேண்ட் சுத்திக்கொடுங்கள்’ என்று சொல்லிவிட்டு வந்தான்.
வெந்து தணிந்தது கூடு.
மொட்டையடிப்பதை மறுத்து, நீ…ண்ட யோசனைக்குப்பிறகு மீசையை மட்டும் தியாகம் செய்து, வங்காள விரிகுடாவில் கால் நனையாமல் அஸ்தி கரைத்து வீடு திரும்பியபோது ‘சிவராமா’ என்று உடைந்த குரலில் கதறி அழுதாள் அம்மா.
வெளுத்த தேகம் ரத்தச்சோகை சொல்லியது. நீரிழிவில் கரைந்தவள் புடவை சுற்றிய நார்போல் இளைத்திருந்தாள். சில்லிட்ட தாயின் கைகளைத் தொட்டுக்கொண்டே மகன் கேட்டான்:
“அம்மா ஒடம்பு எப்படியிருக்கு ?”
“ஏதோ இருக்கு. நான்தான் முந்துவேன்னு நெனச்சேன். அவரு முந்திட்டாரு”
“கடைசியா என்ன சொன்னாரு?”
“நான் போயிட்டா நீ எப்படித்தான் இருக்கப் போறியோ?” அவள் கண்ணீரிலும் நோய் கசிந்தது.
“ஏன்… நான் இல்லையா?” அவன் அவசரமாய் மகனானான்.
“இல்லையே சிவராமா இல்லையே! அவரைப் பொழைக்கவைக்க வேணாம்; சாகும்போது பக்கத்துல கூட இல்லையே”
“என்னம்மா பண்றது… ? தூரம்!”
“ஆமப்பா… எல்லாமே தூரமாப்போச்சு”
எல்லாரும் வெளியேறிய பிறகு நான்மட்டும் கொஞ்சநாள் இருந்துதான் போவேன் என்று வீடெங்கும் வியாபித்திருந்தது துக்கம்.
இலை கழிந்த செம்பருத்திச் செடிகளும், அடிமட்டை காய்ந்த இரண்டே இரண்டு தென்னை மரங்களும் எஜமான் மறைவுக்காகத் தம்பங்குக்குத் துக்கம் அனுஷ்டித்தன.
பழைய வீடு. சுவர்களின் தோல்கள் உரிந்திருந்தன. அதில் ஊதுவத்தியில் சிரித்துக்கொண்டிருந்தது அப்பாவின் பழைய படம். அம்மாவின் எலும்புகளைப்போல் வெடித்த விதானத்தில் துருத்திக்கொண்டிருந்தன ‘ஹவுசிங் போர்டு’ கம்பிகள்.
‘கௌ’ சொல்லிவிட்டது ‘ஷிவ்’ இதயத்தில் புகைய ஆரம்பித்தது.
‘தனியா இருந்தா அம்மாவுக்கு வீடு தேவை இல்ல; அம்மா அங்க இல்லேன்னா வீடே தேவை இல்ல’.
ஓர் இழவு வீட்டில் ஈரமும் துக்கமும் ஒரு வாரத்திற்குமேல் காயாமல் இருப்பதில்லை. அம்மா மெல்ல மெல்லத் தன்னிலை அடைந்தாள். அப்பாவைப் பற்றிய கவலை மறந்து தன்னைப்பற்றியே கவலைப்படுமளவுக்குத் தேறிவிட்டாள். ஓட்ஸ் குடிக்கிறாள். சர்க்கரையில்லாத காப்பியில் ரொட்டி நனைக்கிறாள். இலையுதிர் காலம் முடிந்த வெறும் கிளையில் முட்டும் முதல் தளிராய்ச் சிறு புன்னகை பூக்கிறாள்.
மகன் தன் வேலையை ஆரம்பித்தான்.
“அம்மா எப்படித்தான் தனியா இருக்கப்போறியோ?”
“என்னப்பா பண்றது? விதி. வாழணுங்கிற ஆசை இல்ல; சாகவும் தைரியமில்ல”
“எங்கூட அமெரிக்கா கூட்டிட்டுப் போறேன். வர்றியா…? நீ வரமாட்ட”
கேள்விக்கும் பதிலுக்குமான இடைவெளியைத் தன் விருப்பத்தையிட்டு நிரப்பிக்கொண்ட மகனைப் புரிந்தும் புரியாதவள்போல் பார்த்தாள் அம்மா.
“பரவாயில்லை… எவ்வளவு காலம் இருக்கப்போறேன்? சில வருஷங்களோ… மாதங்களோ… ஒங்க அப்பா உயிர்விட்ட இடத்திலேயே நானும் இருந்துட்டுப் போயிடறேன்”
“தனியாவா? எப்படிம்மா? ஒருத்தரோ ஒரு குடும்பமோ ஏழெட்டுப்பேர் தயவு இல்லாம இப்ப இருக்க முடியாது சென்னையில. அதுலயும் நீ ஒத்தையில இருக்கிற நோயாளி”
“துணைக்கு யாருப்பா வருவா?”
“நீ இருக்கிற இடத்துக்குத் துணை வராது. துணை இருக்கிற இடத்துக்கு நீ போகலாமில்லையா?”
“என்னப்பா சொல்ற?”
”ஒரு எடம் பாத்திருக்கிறேன். பெத்த தாய் மாதிரி ஒன்னக் கவனிச்சுக்குவாங்க”
“ஒன்ன மாதிரியா?”
“இல்ல; என்னவிட நல்லாப் பாத்துக்குவாங்க”
“எங்க?”
“இசிஆர் ரோட்டுல பழத்தோட்டம்”
”ஓ… முதியோர் இல்லத்துக்கு வியாபாரப் பெயரா?”
“கவலப்படாதே அம்மா. வீட்டவிடப் பாதுகாப்பா இருக்கும்”
“அப்ப வீடு…?”
“நீ நெனைக்கிற மாதிரிதான் நானும் நெனைக்கிறேன். நீயே இல்லாதபோது இந்த வீடு எதுக்கு? வித்திடலாம்ன்னு நெனைக்கிறேன்”
“சிவராமா! இது அப்பா வாழ்ந்த வீடப்பா’
அமெரிக்க பாணியில் தோள்களை ஏற்றி இறக்கி வாய்வழியே பெருமூச்சை ஊதிவிட்டு அம்மாவின் எலும்பு முட்டும் தோள்தொட்டுப் பேசினான் சிவராமன்:
“அசோகரும் அக்பரும் ராஜராஜ சோழனும் வாழ்ந்த வீட்டையே காணோம். இதுல அப்பா வாழ்ந்த வீடுதான் நிக்கப்போகுதாக்கும் ? இதோ பாரும்மா… நாம வாங்குன வீடு, அதுக்குமுன்ன யாரோ வாழ்ந்த வீடு. நாம வாழ்ந்துக்கிட்டிருக்கிற வீடு இனிமேல் யாரோ வாழப்போற வீடு. இதுதான் எதார்த்தம்”.
வாயடைத்துப் போனாள் அம்மா.
இந்தியாவின் புகழ்மிக்க தத்துவங்களையெல்லாம் ‘கிரிமினல்’களே அதிகம் புழங்கியிருக்கிறார்கள்.
‘நான் யோசிக்கிறேன்’ என்றாள் அம்மா – ‘பழத்தோட்டத்தில் மகன் இவளையும் ஒரு பழமாகப் பதிவு செய்துவிட்டு வந்திருப்பது தெரியாமல்.
வீடு பழைய வீடு. இடம் நல்ல இடம். கோட்டூர் கார்டனில் ஓரமனை அது. தரகர்கள் அதற்குத் தமிழில் வைத்த பெயர் ‘கார்னர் பிளாட்’, 50×70 அழகான செவ்வகம். ஒன்றரை கிரவுண்டுக்கு 100 சதுரஅடி கம்மி. ஒரு காலத்தில் ‘சூடான கேக்’ என்று சொல்லப்பட்டது இன்று விலைபோகாமல் இழுக்கிறது. வழிகாட்டு மதிப்பு கூட்டப்பட்ட பிறகு நில விற்பனை படுத்துவிட்டது. பில்டர்களின் பணம் அரசியல்வாதிகளுக்குப் போய்க்கொண்டிருக்கிறதே தவிர அரசியல்வாதிகளின் பணம் பில்டர்களுக்குப் பாய்ச்சப்பட்டதாய்த் தெரியவில்லை.
ஒரு கிரவுண்டுக்கு ஆறு கோடி வீதம் ஒன்பது கோடி கேட்டான் சிவராமன். இந்தா இந்தா என்று ஏழுக்கு ஏறிவந்தார் ஒரு கட்டடக்காரர்.
காசோலை கேட்டான்
முழுவதும் வெள்ளைப்பணமாய்க் காசோலை சிவராமன்.
“தம்பீ… இது இந்தியா” என்றார் பில்டர். “நான்கு கோடிக்குக் காசோலை. மூன்றுகோடி ரொக்கம்” என்றார்.
“இந்தப் பணத்தை எப்படி எடுத்துப்போவது?” என்றான் சிவராமன்.
“எந்த நாட்டுக்குன்னு சொல்லுங்க. ‘டோர் டெலிவரி’ பண்றேன். டாலரா…? யூரோவா…? பவுண்ட்ஸா… ? தினாரா…?”
“டாலர்தான். 17, லெக்ஸிங்டன் அவென்யூ, மென்ஹாட்டன், நியூயார்க்” என்றான் சிவராமன்.
மறுநாள் “எஸ், ஐ காட் இட்” என்று குறுஞ்செய்தி அனுப்பினாள் ‘கௌ’.
முடிந்தது; மூன்று மாதம் தங்கியிருந்தது வீண்போகவில்லை.
வீட்டைவிட்டு வெளியேறுமுன் “மகனே சிவராமா! எனக்கு ஒரே ஒரு ஆசை” என்றாள் அம்மா.
அப்பா கடைசியாய்க் கிடத்தப்பட்டிருந்த கூடத்தில் வெறுந்தரையில் விழுந்தாள். இப்படியும் அப்படியும் உருண்டாள். கண்ணீரால் நனைந்தாள்; நனைத்தாள். ‘போயிட்டுவாரேன்’ என்ற பொருளற்ற மரபுத்தொடரைச் சொல்லிக்கொண்டாள்; போகிறாள். இனி எங்கே வருவது? செம்பருத்திச் செடிகளையும் தென்னை மரங்களையும் கடைசியாய் ஒருமுறை பார்த்துக்கொண்டாள்.
“கவலையேபடாதீங்க. இனி உங்களுக்கு மட்டுமில்ல எங்களுக்கும் இவங்க அம்மாதான்” என்றார் பழத்தோட்டத்தின் காப்பாளர். அந்த விடுதிக்குள் பேந்தப் பேந்த விழித்துக்கொண்டிருக்கும் பெருசுகளைப் பார்த்தால் சென்னையில் கையாலாகாத மகன்களின் கணக்கு வழக்குத் தெரிந்தது.
மாதம் பன்னிரண்டாயிரம் என்ற கணக்கில் ஐந்து மாதம் அச்சாரமாக அறுபதாயிரம் கொடுத்தான். ‘மருத்துவச் செலவு தனி’ என்று ஒரு துணை பட்ஜெட் போட்டார் காப்பாளர்.
மகன் கைகளைப் பிடித்துக்கொண்டு ‘அடிக்கடி பேசப்பா சிவராமா’ என்று தாடைபிடித்துக் கெஞ்சினாள் அம்மா. ‘ஆகட்டும்’ என்று சொல்லிவைத்தான் மகன். வாசலில் நின்று தூணைப்பிடித்தபடி மகன்போன வாடகைக் காரையே பார்த்து நின்றாள். திருப்பத்தில் அவன் கண்ணாடி இறக்கிக் கைகாட்டுவான் என்பது அவளது ‘பெத்த’ நம்பிக்கை. அதனாலேயே தன் ஒரு கையை உயர்த்தியபடியே நின்றாள். கார்தான் மறைந்தது; கண்ணாடி இறங்கவில்லை. உயர்த்திய கரம் கீழே விழுந்தது.
நியூயார்க்கின் ‘ஜே.எஃப்.கே’ ஏர்போர்ட்டுக்கு வரவேற்க வந்திருந்தாள்
‘கௌ’.
“எப்படியிருக்கே? குழந்தை எப்படியிருக்கு?”
“ஓகே. ஃபைன்”
‘பணம் பத்திரமா?”
“ஷ்யூர்”
“ஏன் ஒருமாதிரியிருக்க?”
“மூணுமாச லீவுல உங்க சர்வீஸ் கட்டாயிருக்கும். ப்ரமோஷன் பாதிக்குமே?”
“கவலப்படாத. ஓவர்டைம் பண்ணி ஈடுகட்டிடுவேன்”
”சரி. நான் கேட்டது வாங்கிட்டு வந்திருக்கீங்களா?”
“ஐயோ… ஜார்ஜ் டவுன் சந்துக்குள்ள இருக்கு நீ சொன்ன ஸ்வீட் கடை. நானே நடந்து போயி வாங்கிட்டு வந்திருக்கேன்”
குளித்துவிட்டு டைனிங் டேபிளில் உட்கார்ந்தபோது சாண்ட்விச், ரொட்டி, பழங்கள் பரிமாறினாள் கெள. கூடவே திரவ இருட்டான அந்தக் கருப்புக் காஃபி.
“எங்க நான் வாங்கிட்டு வந்த ஸ்வீட்? அதையும் எடுத்து வை”
“ஸாரி. துக்க வீட்டுக்காரங்க ஸ்வீட் சாப்பிடக்கூடாது’
“ஏய்! அப்பா செத்துத்தான் மூணுமாசமாச்சே. இப்ப சாப்பிட்டா என்ன தப்பு?”
“வேணாம். ஒங்க அம்மா செத்து இன்னும் மூணு மணி நேரம் கூட ஆகல”
“ஏய்! என்ன சொல்ற…?”
அவன் உதறி எழுந்தான்.
“நீங்க அட்லாண்டிக் கடல்ல பறந்துக்கிட்டிருக்கும்போதே எனக்குச் செய்தி வந்தது. வந்தவுடனே ஒங்கள ‘மூட் அவுட்’ பண்ணக்கூடாதுன்னுதான் சொல்லாம இருந்தேன்”
அவன் அப்படியே தலையில் கைவைத்துத் தரையில் சரிந்து சுவரில் சாய்ந்தான்.
“இதான்… இதுக்குத்தான் நான் சொல்லல. ‘ஓ’ன்னு கத்துவீங்க. உணர்ச்சிவசப்படுவீங்க. ‘ஜெட்லாக்’ தீரல. அதுக்குள்ள ஓடிப்போயி இந்தியாவுக்கு டிக்கெட் போடுவீங்க. இன்னொரு செலவு – இன்னொரு பயணம் – இன்னொரு களைப்பு தேவையா? நீங்க போறதுனால் ஒங்கம்மா பொழைச்சுக்குவாங்களா? நீங்க போகலைன்னா ஒங்கம்மாவ எரிக்காமலோ புதைக்காமலோ வச்சுக்குவாங்களா? ஒங்கம்மா என்ன லெனின் உடலா? தைலத்துல போட்டு வைக்கிறதுக்கு? மாமியார்ங்கிற முறையில எனக்கும் வருத்தம்தான். அமெரிக்க வருத்தம் – இந்திய வருத்தம்ன்னு தனித்தனியா இருக்கா என்ன? எங்க பட்டாலும் வருத்தம் வருத்தம்தான். எழுந்திருங்க ஷிவ். இறுதிச்சடங்க இங்கிருந்தே எப்படிப் பண்ணலாம்ன்னு யோசிக்கலாம். ‘பிராக்டிகலா’ இருங்க. ‘எமோஷன’ப் பாக்காதீங்க; ‘ப்ரமோஷன’ப் பாருங்க”.
கணவனை நிமிர்த்தி காஃபி சாப்பிடவைத்தாள் கௌ. துரிதமாக இயங்கினாள். பழத்தோட்டக் காப்பாளரைத் தொலைபேசியில் அழைத்தாள்.
‘அறுபதாயிரம் முன்பணத்தில் அம்மா தங்கியிருந்ததற்காகப் பத்தாயிரத்தைக் கழித்துக்கொள்ளுங்கள். மீதி ஐம்பதாயிரத்தில் இறுதிச் சடங்கைச் செய்து முடியுங்கள். அதற்கு மேலும் செலவாகியிருந்தால் உங்கள் பணம் டாலரில் வந்து சேரும்”.
மறுநாள் அதேநேரம் தோளோடு தோளுரசக் கணவனும் மனைவியும் கண்ணிமைக்காமல் கணினித் திரையையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
பெசன்ட் நகர் மயானத்துக்கும் மென்ஹாட்டனுக்குமான 13,462 கிலோ மீட்டர் தூரத்தில் ‘ஸ்கைப்’பில் எரிந்துகொண்டிருந்தாள் அம்மா. “ஆறிப் போயிடும்; டீ சாப்பிடுங்க” என்றாள் கௌ தன் கோப்பையை உறிஞ்சிக்கொண்டே.
– அக்டோபர் 2015