“அண்ணாச்சி, பசங்க வந்துட்டாங்க…” ஒரு தம்பி தெரியப்படுத்தியதும், “உள்ள கூட்டிவாடா. நம்ம பசங்க…” என்றார் அண்ணாச்சி. “டேய்… உள்ள அனுப்புடா அவனுகளை…” இன்னொரு தம்பி வாசலில் நிற்பவனைப் பார்த்து குரல் கொடுத்தான். ஒவ்வொருவராக நால்வர் உள் நுழைந்தனர். முதலாவதாக நுழைந்த சாமிதான் இந்த நண்பர்களின் உயிர்நாடி. சிறுவயதில் மற்ற மூவரும் அனாதைகளாக, சாமிதான் நட்பின் காரணமாக அவர்களை தன் வீட்டில் சேர்த்துக்கொண்டான். அவன் அம்மாவும் இருந்த காலம் வரை எல்லோரையும் தன் பிள்ளைகளாக பார்த்து கொண்டாள்.
அம்மாவுக்குப் பிறகு எல்லாம் மாறிப்போனது. பழக்கத்துக்காக சில நேரம், உணவுக்காக பல நேரம் என சில்லறைத் திருட்டு, அடிதடி கட்ட பஞ்சாயத்து என மாறினாலும், சாமியின் சரியான திட்டமிடுதலால் இதுவரை அவர்களின் அடையாளம் எந்த போலீஸ் ஸ்டேசனிலும் பதிவாகவில்லை. வந்தவர்களை எதிர் இருக்கையில் அமரவைத்தார் அண்ணாச்சி.
“சாமிதான உன்பேரு… உங்களப் பத்தி கேள்விப்பட்டோம். நம்ம பசங்க என்கிட்ட உங்களப் பத்தி சொல்லுவாங்க. தெளிவா திட்டம் போட்டு எதையும் செய்றீங்கடே.
அச்சுபிசகாம அடுத்தவன் கவனிக்கிறதுக்குள்ள அடிச்ச பொருள மாத்தி… பொருள் இருக்கிறவன அந்த இடத்தை விட்டே கடத்திருதீக… யாருன்னே யாருக்குமே தெரியாம எவன அடிக்கணுமோ அவன மட்டும் சரியா தொவைச்சு அசத்துறீங்க…”
சாமி இடைமறித்தான்.
“அண்ணே… எங்கள கூப்பிட்ட விசயத்த சொன்னா நல்லா இருக்கும்…” “சரிதாம்ல. நேரா விசயத்துக்கு வரேன். எத்தனை நாளு நீங்க இந்த திருட்ட பண்ணாலும் உங்க தேவை இருந்துகிட்டேதான் இருக்கும். நீங்களும் இதை விடமுடியாம செஞ்சுகிட்டேதான் இருக்கணும். என்னைக்காவது அறிவாளி போலீசு கைல மாட்னீங்கனா பொழப்பு அம்புட்டுதான்.
எல்லாத்தையும் அவனுக எடுத்துகிட்டு உங்களை அடிச்சு தொலைச்சுடுவானுக…”
“…”
‘‘அதனால ஒரு பெரிய அமெளண்ட பேங்க்ல போட்டுட்டு உங்க நாலு பேரையும் நீங்க விருப்பப்பட்ட நாட்ல செட்டில் பண்றேன்…”
“…”
“அதுக்கு அண்ணாச்சிக்கு நீங்க சின்ன வேல செய்யணும். மத்திய அமைச்சர் அறிவாளன கொல்லணும்!” நண்பர்கள் அதிர்ச்சியுடன் ஒருவரையொருவர் பாரத்துக் கொண்டனர். அமைதியை சாமி கலைத்தான். “அண்ணே, நாங்க அம்புட்டு பெரியவங்கெல்லாம் கிடையாது. எங்கள விடுங்க…”“தம்பி, இதுல சின்னவன் பெரியவன்னு ஒண்ணுமில்ல. திட்டம்போட்டு செய்யத் தெரியணும்…’’
“…”
“நானும் ஒண்ணும் பெரியவனா பொறந்துடல. சின்னவனா இருந்து வளர்ந்தவன்தான்…”
“…”
“உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. இதை முடிச்சா உங்க வாழ்க்கையும் செட்டிலாயிடும். யோசிச்சு சொல்லுங்க. திட்டம் போட்டு செய்ய வேண்டியது நீங்க. பணம், ஆள், உதவி எல்லாம் என் பொறுப்பு…”
“…”
“எந்த காரியம்னாலும் அண்ணாச்சிட்ட போனா முடிஞ்சிரும்னு எல்லாருக்கும் தெரியும். நானே உங்கள கூட்டிப் பேசுறேன்னா புரிஞ்சுக்கோங்கடே…”சாமி யோசனையுடன் நண்பர்களைப் பார்த்தான். அவர்கள் ‘உன் இஷ்டம்’ என எப்போதும் போல் அமைதியாக அவனைப் பார்த்தனர். ஒருமுறை மூச்சை நன்றாக இழுத்து விட்டான்.
“சரி அண்ணாச்சி, செய்யறோம். ஆனா, திட்டம் என்னனு நாங்கதான் முடிவெடுப்போம். செய்யற அன்னைக்கு வரை யார்கிட்டயும் சொல்ல மாட்டோம். நாங்க கேட்கிற நேரத்துல எந்த உதவியும் சரியா வந்து சேரணும்…”
“ம்…”
“கடைசியா ஒண்ணு. வேலையை ஆரம்பிக்கிற முதல்நாளே நாங்க சொல்ற அக்கவுண்ட்ல பணத்தை போட்டுடணும். வேலை முடியற அன்னைக்குதான் அத நாங்க எடுப்போம். அதுவரைக்குமான செலவுக்கு நீங்கதான் பணம் கொடுக்கணும். சரின்னா சொல்லுங்க. உடனே வேலையை ஆரம்பிக்கறோம்…”
“சரி ஒத்துக்கிடுதேன். ஆனா, ஒரு கண்டிசன். வேலையை முடிக்கிற வரை உங்களுக்குனு ஒதுக்குற என் பங்களாலதான் தங்கணும்.
அதை சுத்தி இருக்கிற என் ஏரியாவை விட்டு வெளியே போனீங்கனா தனியாத்தான் போகணும். அப்படியே வெளிய இருக்கையில உங்கள்ல யாராவது ஒருத்தர ஒருத்தர் சந்திச்சா உங்களுக்குள்ள பேசிக்கக் கூடாது. உங்களுக்கு எல்லாம் செஞ்சு கொடுக்க பாண்டி பய உங்க கூட தங்கி இருப்பான். லே பாண்டி… தம்பிகளை நம்ம எடத்துக்கு கூட்டிப்போ… கூட இருந்து வேலை முடியறவரை நல்லா கவனிச்சுக்கோடா…”அண்ணாச்சி குரல் கொடுக்க, அவர்களை அழைத்துச் செல்லப் பாண்டி ஓடி வந்து நின்றான். அண்ணாச்சிக்கு ஒரு பெரிய காலனி உண்டு.
அவர் அனுமதி யில்லாமல் அதனுள் ஈ காகம் கூட நுழையவோ வெளியேறவோ முடியாது என்பது சிட்டியில் இருக்கும் அனைவருக்கும் தெரியும்.
அவர்களைச் சுமந்து சென்ற அந்த கார், நகரைக் கடந்ததும் மெயின் ரோட்டிலிருந்து கிளை ரோட்டில் திரும்பியது. சிறிது தூரத்தில் வரவேற்றது கந்தா காலனியின் ஆர்ச். ஆங்காங்கே ஒன்றிரண்டு பேர் அமர்ந்து விளையாடிக் கொண்டும், பேசிக் கொண்டும் இருந்தனர். அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தபடியே பாண்டி வந்தான். எந்தப் பக்கமும் இருள் சூழாமல் இருக்க சரியான இடங்களில் தெரு விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன.
தெருவுக்கு ஒரு கடை. ஆங்காங்கே நிழல் தரும் மரம். சீரான இடைவெளியில் தெருக்கள். மொத்தத்தில் நேர்த்தியான காலனி. வளைந்து சென்று நடுவாக அமைந்திருந்த பெரிய பங்களா முன் கார் நின்றது.
“இறங்கிக்கோங்கடே. இதுதான் நீங்க தங்கப் போற இடம். இந்தக் காலனிக்குள்ள எங்கனாலும் நீங்க போகலாம். என்ன வேணாலும் பண்ணலாம். யாரும் உங்கள ஒண்ணும் கேட்க மாட்டானுக. உங்களப் பத்தி எல்லாருக்கும் சொல்லியாச்சு. நீங்க எந்த கடைலனாலும் சாப்பிடலாம்டே. சரக்கும் கிடைக்கும். வேணா ‘அதுவும்’ கிடைக்கும். வேண்டியத கேட்டு வெட்கப்படாம வாங்கிக்கோங்கடே…” சிரிப்போடு பாண்டி சொன்னான்.
இறங்கி உள்நுழைந்தால் அவர்களை வரவேற்றது பிரமாண்டமான அந்த பங்களா. ஒவ்வொரு அறையும் அழகில் மிளிர்ந்திட, பகலிலும் இருள் பதியவிடாமல் கூடுதல் அழகு சேர்த்தது வண்ண விளக்குகள்.
“அண்ணே ரொம்ப அழகா இருக்கு. அணையா விளக்கா இது? எதுக்குணே பகல்ல எல்லா லைட்டும் எரியுது?” சாமி கேட்டான்.
“அண்ணாச்சியோட சென்டிமென்ட். காலனில இருக்கிற எல்லா லைட்டும் எப்பவுமே எரியும். யாரும் அணைக்கக் கூடாது…” என்ற பாண்டி விஷயத்துக்கு வந்தான்.
“இதுதான் அமைச்சர் பேசற மேடை. நாம உள்ள எடுத்துப் போற குண்டுகள் எல்லாமே நூறு அடிக்குள்ள இருக்கிற எல்லாத்தையும் தரைமட்டமாக்கும்.
ஆக, நாலு பக்கமா நூறு அடிக்கு போடப்பட்டிருக்கிற இந்த மேடைல பக்கத்துக்கு ஒண்ணா நமக்கு நாலு குண்டுகள் வேணும். அதேநேரம் வெடிகுண்டா நாம மேடைக்கு கொண்டு போக முடியாது…’’எல்லோரையும் ஒரு நிமிடம் பார்த்துவிட்டு பாண்டி தொடர்ந்தான்.
“அதனால ஓர் ஆள் அங்கயே இருக்க ஏற்பாடு செய்திருக்கேன். அலங்கார விளக்குகளை சரி பார்ப்பவனா அங்கிருப்பான். அவன் எடுத்துட்டுப் போற பொருட்கள்ல வெடிகுண்டும் இருக்கும். நாலு பக்கமும் மேடைக்கு தள்ளி அதை புதைச்சு மார்க் செய்திருப்பான்…”
“…”
“முன் பக்கம் பார்வையாளர் வரிசைல மட்டும் ஒரு குண்டை விளக்கை சரிசெய்யறப்ப வைச்சுடுவான். மத்த மூணையும் நீங்கதான் வைக்கணும். அமைச்சருக்கு மட்டும் ஒரு குண்டு அவன் முன் பக்க விளக்கை சரிசெய்யும் பொழுது எடுத்துப்போய் வைச்சுடுவான். அது வெடிக்கறதுக்கு பத்து நிமிஷங்கள் முன்னாடி வெளிப்பக்கம் வந்துடணும். அதுக்கு அப்புறம் யார் யார் எங்கெங்க சந்திக்கணும்னு அப்புறம் சொல்றேன். திட்டத்தை எப்படி செயல்படுத்தணும்னு இதுல எழுதியிருக்கேன். தனித்தனியா பிரிஞ்சு ஒவ்வொருவரும் என்னென்ன சேகரிக்கணுமோ அதை சேகரிக்கணும்…’’
அந்த அறையின் நடுவில் போடப்பட்டிருந்த மேஜையில் அமைச்சரின் நிகழ்ச்சிநிரலுக்கான வரைபடம் விரிக்கப்பட்டிருந்தது. பாண்டி சென்றதும் நண்பர்களைப் பார்த்து சாமி மெல்லிய குரலில் தன் திட்டத்தை விவரித்தான். புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக நண்பர்கள் தலையசைத்தனர். அங்கிருந்த நாட்களில் அவர்கள் எல்லா இடங்களிலும் அனுமதிக்கப்பட்டார்கள். யாரும் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. அவர்கள் கேட்ட எல்லாம் கிடைத்தது. சாமிக்கு மட்டும் ஏதோ தப்பு நடப்பதாக உள்ளுணர்வு எச்சரித்தது.
மறுநாள் நள்ளிரவில் ஒரு நண்பன் சட்டென்று விழித்தான். பார்த்தால் அருகில் சாமி தூங்காமல் விழித்திருந்தான்.
“என்ன செய்ற?”
“தூக்கம் வரல. வா ஒரு பீர் சாப்பிட்டு வரலாம்…”
“இப்பவா?”
“ஆமா. அவங்கள எழுப்பாம நீ மட்டும் வா…”
அவர்கள் இருவரும் ஆளில்லாத ஒரு கடையில் பீர் டின்னை எடுத்தார்கள். நண்பனது தலையின் நிழல் சரியாக படும் இடத்தில் தன் கையை சாமி விரித்தான். குறிப்பறிந்து நண்பன் அதைப் பார்த்தான். ‘குனியும்போது மட்டும் பேசு…’ என்று எழுதியிருந்தது. சாமி சொன்னான்.
“நம்மள யாரோ நோட்டம் விடறாங்க…”
“என்னடா சொல்ற?”
“எப்படின்னு சொல்லத் தெரியல. நேத்து ராத்திரி சும்மா வெளில போறப்ப ஒரு ரூம்ல லைட் மட்டும் ஆஃப் ஆயிருந்தது. இந்த பங்களால எந்த லைட்டுமே அணையாதுனு சொன்னாங்களேனு ஆச்சரியத்தோட அந்தப் பக்கம் போகலாம்னு பார்த்தா… அந்த ரூம்ல இருந்து என் குரல்! என் மாடுலேசன்ல நான் உங்ககிட்ட விவரிச்ச திட்டத்தை விவரிக்குது…”
“…”
“உடம்பெல்லாம் வெலவெலத்துப் போச்சு. ஒரு நிமிஷம் ஒண்ணுமே புரியல. என்னனு பாரக்கலாம்னு அந்த ரூம் பக்கம் போக நினைச்சா… யாரோ வர்றா மாதிரி இருந்தது. சட்டுனு நம்ம ரூமுக்கு வந்துட்டேன்…”
“…”
“எங்க போனாலும் நல்ல வெளிச்சம், பாட்டு சத்தம் நம்மள சுத்தி இருக்கு. ஓர் எல்லை வரைதான் போக அனுமதிக்கப்படறோம். இங்க சுத்தி உள்ளஎல்லா எடத்துலயும் காமிராவை மறைச்சு வைச்சு படமாக்கறாங்க.
அப்படி எடுத்த படத்துல நம்ம லிப் சிங்க்கை வைச்சு என்ன பேசறோம்னு தெரிஞ்சுக்கறாங்க. ஒரு நல்ல மிமிக்ரிகாரன் மூலமா நம்மை மாதிரியே பேசி டப் பண்றாங்க. இவனுக வேற ஏதோ திட்டம் போடறாங்கடா…”
“என்ன செய்யப் போற?”
“இப்ப நம்ம அக்கவுண்ட்ல எல்லா பணமும் வந்திருச்சு. நாளைக்கு பகல் 11 மணிக்கு அமைச்சர் மீட்டிங். சடையன்கிட்ட எல்லாம் சொல்லிட்டேன். நம்ம அக்கவுண்ட்லயிருந்து ஃபாரின்ல உள்ள வேற அக்கவுண்டுக்கு பணத்தை மாத்தியிருப்பான். நீ ஒருத்தனுக்கு சொல்லு. நான் ஒருத்தனுக்கு சொல்றேன். அண்ணாச்சி ஆளுங்க கண்ல மண்ணைத் தூவிட்டு நாம நாலு பேரும் தனித்தனியா சென்னை போயிடணும். சடையனோட நண்பன் மாரி இருக்கான் இல்லையா… அவன் வீட்ல எல்லாரும் அசம்பிள் ஆகலாம். போலி பாஸ்போர்ட்டுல இந்தியாவை விட்டு வெளியேறிடலாம்…”
“இப்பதான் நம்ம திட்டம் எல்லாம் இவனுங்களுக்கு தெரிஞ்சிருச்சே… நாம இல்லைனாலும் வேற யாரையாவது வைச்சு முடிக்க மாட்டாங்களா? பழிய நம்ம மேல போட மாட்டாங்களா?”
“அதை நான் பார்த்துக்கிறேன்…”
“அண்ணாச்சி, அவனுக திரும்பி வரல… நம்ம ஆளுக கண்ணுலயும் படல…”
இரவு அவர்கள் திரும்ப வராததை உணர்ந்த பாண்டி, அண்ணாச்சிக்கு தகவல் சொன்னான்.
“சரிடே. அவனுக போட்டோவ நம்ம எஸ்.பி.கிட்ட அனுப்பிட்டு விஷயத்த சொல்லிடு. அப்புறம் நம்ம ஆளுகள வைச்சு திட்டத்த அதே மாதிரி முடுச்சுரு…”
அடுத்த நாள் எல்லா சேனல்களிலும் ஒரே ஃப்ளாஷ் நியூஸ். ‘இன்று அதிகாலை 9.30 மணிக்கு விமான நிலையத்திற்கு முன்பாகவும் ஓடுதளத்திலும் எறிகுண்டு வீசப்பட்டதால் தூத்துக்குடியில் இறங்க வேண்டிய அத்தனை விமானங்களும் திருப்பி அனுப்பப் பட்டன. இதில் அமைச்சரின் விமானமும் அடங்கும். ஆகையால் தூத்துக்குடியில் நடக்கவிருந்த அவருடைய இன்றைய நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது…’
– Jan 2018