கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 14, 2022
பார்வையிட்டோர்: 7,781 
 

(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அருமையான மாலை நேரம்!

தெருக் கோடியிலே ஒரு பங்களா. அழகான பங்களா. பங்களாவைச் சுற்றி ஒரு தோட்டம். தோட்டத்தின் மூலையிலே ஒரு கிணறு; மொட்டைக் கிணறு. கிணற்றுக்குச் சற்று தூரத்திலே ஒரு மேடை; ‘சிமிண்ட்’ மேடை. அந்த மேடையிலே உட்கார்ந்திருந்தாள் ஒரு பெண். அவள் தான் சூடாமணி.

மேடைக்குச் சற்று தூரத்திலே அடர்ந்து படர்ந்து கிடந்தன, பசுமையான புற்கள். அங்கே மேய்ந்து கொண்டிருந்தது, ஒரு மான்குட்டி; சின்னஞ் சிறு புள்ளிமான்குட்டி.

சூடாமணி அணிந்திருந்தது ஒரு பழைய சட்டை; கட்டியிருந்தது, ஒரு கந்தல் பாவாடை. அவள் ஒரு ஏழைப் பெண். ஆமாம்; வேலைக்காரப் பெண். அந்த பங்களாவின் சொந்தக்காரர் இருக் கிறாரே ; அவருடைய ஆறு வயதுப் பெண் ராணியைப் பார்த்துக்கொள்ள வேண்டியது அவள் வேலை.

ராணி, சூடாமணிக்குப் பக்கத்திலே உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவள் கையிலே ஒரு ரொட்டித் துண்டு இருந்தது. ரொட்டித் துண்டைக் கடித்துக் கொண்டிருந்த ராணி, மான்குட்டியைப் பார்த்தாள். உடனே ரொட்டித் துண்டை வீசி எறிந்தாள். மேடையிலிருந்து கீழே குதித்தாள். புள்ளிமானைப் போல, மான்குட்டியை நோக்கித் துள்ளி ஓடினாள்.

சூடாமணி அதை கவனிக்கவில்லை. அவளது மனம் எங்கெங்கோ அலைந்துகொண்டிருந்தது. ‘பெற்ற அப்பா, அம்மா இருந்தால்…நான் இப்படி வேலைக்காரப் பெண்ணாகப் பிழைக்க நேர்ந்திருக்குமா?’ என்று எண்ணினாள்.

அப்படியானால் அவளுடைய அப்பா எங்கே? அம்மா எங்கே? இருவரும் இவ்வுலகத்திலேயே இல்லை. அவளைத் தனியாகத் தவிக்க விட்டுவிட்டு இறந்துபோய்விட்டார்கள். அப்பா, அம்மாவை நினைத்ததும் சூடாமணி சிலைபோல் உட்கார்ந்து விட்டாள்.

ராணி மான்குட்டியின் அருகிலே சென்றாள். அதன் கழுத்தை வளைத்து நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்தாள். ‘கலகல வென்று சிரித்தாள். அவளது சிரிப்பு ஒலியைக் கேட்ட மான்குட்டி மிரண்டது. மிரண்டு ஓடத் தொடங்கியது. ராணியா விடுபவள்? அதன் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றின் நுனியைப் பற்றிக்கொண்டாள். மான்குட்டி ஓடத் தொடங்கியது. ராணியும் பின்னால் ஓடினாள். கயிற்றின் முனைதான் அவள் கைகளிலே இருக்கின்றதே!

பாவம் சூடாமணி , இவை ஒன்றையும் அவள் கவனிக்கவே இல்லை.

ராணியும், மான்குட்டியும் வெகு மும்முரமாக ‘ஓட்டப் பந்தயம்’ நடத்திக் கொண்டிருந்தார்கள். மான் குட்டி பாய்ந்து ஓடியது. பின்னால் தொடர்ந்து ஓடினாள் ராணி.

ஓட்டம் வலுத்தது.

மான்குட்டி துள்ளித் துள்ளி கிணற்றடியை அடைந்தது. கிணற்றைச் சுற்றிச் சுற்றி வட்டமிட்டு ஓடியது. ராணியும் விடவில்லை. பின்னாலேயே சுற்றினாள்.

அப்போது தான் அந்தக் காட்சியைக் கண்டாள், சூடாமணி. உடனே , பதை பதைத்து எழுந்தாள். “ராணி! ராணி! மான்குட்டியை விட்டுவிடு!” என்று கத்தினாள்.

அவளது கதறல் பலன் தரவில்லை. அதற்குள் – ஓடிக் களைத்துப் போன மான் குட்டி அந்த மொட்டைக் கிணற்றைத் திடீரென்று குறுக்கே தாவியது. ஒரே தாவல் – தாவி ஓடிவிட்டது. அது தாவும் போதாவது ராணி, தன் கையிலிருந்த கயிற்றை விட்டுவிடக் கூடாதா? விடவில்லை. அதனால் கிணற்றை அவளும் தாண்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது ! ஆனால், மான்குட்டியைப் போல அவளால் தாவமுடியுமா? யாரால் தான் அது இயலும்!

மான் குட்டி அதுவும் ஆறு வயதுப் பெண்ணாயிற்றே அவள் ! ராணியும் தாவினாள். மறுகணம் ‘ஐயோ’ என்ற அவளது அலறல் கேட்டது. தொடர்ந்து ‘தொப்’ என்ற ஒலியும் எழும்பியது. ஆமாம் ; ராணி கிணற்றுக் குள் வீழ்ந்துவிட்டாள்.

அதைக் கண்ட சூடாமணி திடுக்கிட்டாள். பயங்கர மாக அலறினாள்.

அவளுடைய அலறல் பங்களாவிலிருந்த எல்லோருடைய காதுகளிலும் வீழ்ந்திருக்கத்தான் வேண்டும். எல்லோரும் தோட்டத்திற்கு ஓடி வந்தார்கள். ஒரே பரபரப்பு!

சூடாமணி மறுபடியும் கத்தினாள். “ஐயையோ! ராணி கிணற்றுக்குள்ளே !….” அதற்குமேல் அவளால் பேச முடியவில்லை.

மறுகணம், வேலை ஆட்களில் ஒருவன் வேகமாக கிணற்றுக்குள் இறங்கினான்.

“அடிப் பாவி! என் குழந்தையைக் கொன்று விட்டாயாடி!” என்று அலறினாள் ராணியின் அம்மா – சூடாமணியின் எசமானி அம்மா!

சூடாமணி தலையைக் குனிந்து கொண்டாள். அவள் கண்கள் கலங்கின. அப்போதுதான் கிணற் றிலிருந்து மேலே வந்தான் வேலைக்காரன். அவன் கையில் ராணியின் துவண்ட உடல் இருந்தது. அதைப் பார்த்தாள் சூடாமணி. உடனே “ராணி!” என்று உரக்கக் கத்தினாள்.

மறுகணம் அவள் முதுகிலே ‘பளீர்!’ என்று ஓர் அடி விழுந்தது. சூடாமணி அலறினாள். பின்னால் திரும்பினாள். ராணியின் அப்பா கோபம் கொந்தளிக்க அங்கே நின்று கொண்டிருந்தார்.

அவர் கண்கள் கிணற்றடியை நோக்கின. எதையோ கண்டார் ; திடுக்கிட்டார் ; பாய்ந்து எடுத்தார். அது கொலுசு! ராணியின் கால் கொலுசு களில் ஒன்று!

அப்பா அந்த வெள்ளிக் கொலுசைப் பார்த்தார்; ராணியின் பயந்த முகத்தைப் பார்த்தார்…”ஏண்டி, திருட்டுக் கழுதை! குழந்தையின் கொலுசைக் கழட்டிக் கொள்ளலாம் ; கிணற்றிலே தள்ளி விடலாம் ; கொன்று விடலாம் என்று எத்தனை நாட்களாகக் காத்துக் கொண்டிருந்தாய்?” என்று உறுமினார்.

“ஐயையோ! என்ன இது? எனக்கு ஒன்றுமே தெரியாதே!” என்று பயந்து கொண்டே கூறினாள் சூடாமணி.

“தெரியாதா?” என்று கர்ஜித்தார் அப்பா சிறிது தூரத்திலே கிடந்த கம்பு ஒன்று அப்போதுதான்

அவரது கண்களிலே தென்பட்டது. ஓடிப்போய் அதை எடுத்தார் ; திரும்பி சூடாமணியின் அருகே வந்தார் ; கம்பை ஓங்கினார் ; அவளை வேகமாக அடித்தார்; கோபமாக அடித்தார் ; அடித்துக்கொண்டே இருந்தார். சூடாமணியின் உடல் வாட , இரத்தம் கசிய, இரக்கமே இல்லாது அடித்துவிட்டார்.

அடி தாங்காமல் துடித்தாள் சூடாமணி. என்ன பலன்? துவண்டுபோன அவளது பச்சை உடல் கீழே விழுந்தது. அவள் மூர்ச்சை ஆனாள்!

நீங்களே தான் சொல்லுங்களேன் ; சூடாமணியா ராணியைக் கிணற்றில் தள்ளினாள்? இல்லையே!

பின்…அந்தக் கொலுசு?…

ராணி மான்குட்டியைத் தொடர்ந்து ஓடும் போது, அது தானாகவே கழன்று கீழே விழுந்து விட்டது. அதை எப்படி அறிவார் ராணியின் அப்பா! கோபத்தில் அவருக்கு யோசிப்பதற்குக்கூட நேரமில்லையே ! சற்று நேரத்தில் அந்தத் தோட்டத்திலிருந்து எல்லோரும் வெளியேறி விட்டார்கள், ராணியுடன். ஆனால் சூடாமணியை யாரும் கவனிக்கவேயில்லை ! அவள் தோட்டத்திலேயே கிடந்தாள்!

நன்றாக இருட்டி விட்டது. சூடாமணி மெதுவாகக் கண்களைத் திறந்தாள். சுற்று முற்றும் பார்த்தாள். பங்களாவின் விளக்குகள் ‘பளிச்’ சென்று எரிந்து கொண்டிருந்தன. சூடாமணி மெதுவாகத் தலையை அசைத்தாள். எழுந்திருக்க முயன்றாள். கடினமாகத் தான் இருந்தது. மெதுவாக முழங்கால்களைப் பிடித்துக் கொண்டு ஒரு வழியாக எழுந்து விட்டாள். பங்களாவின் அருகே வந்தாள். உள்ளே ஏதோ பேச்சுக் குரல் கேட்டது. உற்றுக் கேட்டாள்.

“அதெல்லாம் கொஞ்சம்கூட பயப்பட வேண்டாம். குழந்தை நாளைக்கே ஓடியாடி விளையாட ஆரம்பித்து விடும்!”

அது டாக்டரின் குரல் ”அப்பாடா! நல்லகாலம்!” என்று சூடாமணி முணுமுணுத்தாள். அங்கேயே சிறிது நேரம் நின்றாள்.

அப்போது பங்களாவின் வாசலிலிருந்து டாக்டரின் கார் புறப்பட்டது. அவரை வழி அனுப்பி வைத்துவிட்டு உள்ளே நுழைந்தார் ராணியின் அப்பா!

சூடாமணிக்கு அதற்கு மேலும் அங்கு நிற்கப் பிடிக்கவில்லை. ‘நல்ல வேளை ராணி பிழைத்துக் கொண்டு விட்டாள். அதுவே போதும்’ என்று எண்ணினாள். மெதுவாக நகர்ந்தாள் நடந்தாள்; தள்ளாடியபடியே நடந்தாள், அவள் எங்கே போகிறாள்? இதென்ன கேள்வி – இனி அவளுக்கு அங்கென்ன வேலை? சூதுவாதற்று சொந்த வீடுபோல் அங்கே வேலை செய்தாள். இப்போது ‘சந்தேகம்’ இடையிலே வந்து புகுந்து விட்டதே ! இனி பாசம் ஏது? பந்தம் ஏது? அங்கு இடம் தான் ஏது?

சூடாமணி போய்விட்டாள்!

ஆறு மாதங்கள் சென்று விட்டன!

ஒரு நாள் மாலை நேரம் – அன்று கடற்கரையில் ஒரே கூட்டம். ஏனென்றால் அன்று ஞாயிற்றுக் கிழமை!

அந்தக் கூட்டத்தின் நடுவே “கதம்பம் ! கதம்பம்!” என்று கூவியபடியே அலைந்து கொண்டிருந்தாள் ஒரு பெண். அவளது கையிலே பூக்கூடை ஒன்று இருந்தது. கூட்டத்திற்குள் புகுந்து புகுந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தாள், அவள்.

எங்கெங்கோ அலைந்து விட்டு கூட்டம் இல்லாத ஒரு மூலைக்கு வந்தாள். கையிலிருந்த சில்லரைகளை எண்ணிக் கொண்டேயிருந்தாள்.

அப்போது “ஏ, கதம்பம்!” என்று அவளை யாரோ அழைத்தார்கள்.

உடனே பூக்காரப் பெண் திரும்பினாள். அழைப்பு வந்த இடம் நோக்கி நடந்தாள்.

“அசல் தஞ்சாவூர் கதம்பமுங்க …முழம் முக்காலணா…அல்லது அஞ்சு புதுக்காசு….” என்று சொல்லிக்கொண்டே எதிரே பார்த்தாள். ஏனோ திடுக் கிட்டாள்.

அவளது முகத்தைப் பார்த்ததும் “சூடாமணி! சூடாமணி!” என்று ஆசையுடன் கத்திக்கொண்டே ஓடிவந்தாள், அங்கே இருந்த ஒரு பெண். கண நேரம்தான் – அப்படியே இருவரும் கட்டிப்பிடித்துக் கொண்டார்கள்.

கடற்கரையில் இருந்த பெண் வேறு யாருமல்ல; சூடாமணியின் பழைய சின்ன எசமானி ராணியேதான்! அந்தக் காட்சியைக் கண்டதும் பக்கத்திலிருந்த ராணியின் அப்பா உடனே எழுந்தார். சூடாமணியின் அருகே ஓடி வந்தார்.

“சூடாமணி! நான் ரொம்பவும் பொல்லாதவன். அன்று உன்னை அநியாயமாக அடித்து விட்டேன். மிருகம் போல் நடந்து விட்டேன். ஆனால், மறுநாள் உடம்பு சற்று குணமானதும் தான் ராணி எல்லா விபரங்களையும் சொன்னாள். உண்மை தெரிந்தது. நான் உன்னைத் தேடினேன். ஆனால் நீ அகப்பட வில்லை. ராணியோ உன்னைக் காணாமல் கலங்கினாள்; உன் நினைவாகவே எப்போதும் வாடினாள்; எப்படி யாவது உன்னைக் கண்டு பிடித்துவிட வேண்டும்; அழைத்து வந்துவிட வேண்டும் என்று எங்கெங்கோ தேடினோம். பலனே இல்லை. ராணி உன் பிரிவைத் தாங்காமல் தூக்கத்தில் கூட புலம்பினாள் ; பிதற்றினாள்; இன்று தான் உன்னைக்கண்டு பிடித்தோம். நடந்ததை மறந்துவிடு, சூடாமணி! மறுபடியும் எங்கள் வீட்டிற்கு வா!” என்று கண்கலங்கக் கூறினார், ராணியின் அப்பா.

“ஆமாம் சூடாமணி! வந்துவிடு ! இனிமேல் நீ என்னை விட்டு ஒருக்கணமும் பிரியக்கூடாது! போகலாம், வா!” என்றாள் ராணி. சூடாமணியின் கையைப் பிடித்து இழுத்தாள்.

உடனே சூடாமணி பூக்கூடையிலிருந்து இரண்டு முழம் பூவை எடுத்தாள். அழகாக மடித்தாள். ராணியின் தலையிலே சூட்டினாள். பிறகு, ராணியின் அப்பாவைப் பார்த்தாள். “நான் இப்போது ஒரு பூக்கடைக்காரத் தாத்தாவிடம் இருக்கிறேன். அவர் என்னைத் தன் ‘பேத்தி ‘யைப்போல் ஆசையோடு வளர்த்து வருகிறார். நான் அவரை விட்டுப் பிரிய மாட்டேன் என்று உறுதி தந்திருக்கிறேன். அவரை விட்டு விட்டு நான் எப்படி உங்களோடு வருவது? அவரது அன்பு என்ன ஆவது? அவருக்கு நான் துரோகம் செய்யவிரும்பவில்லை. என்னை மன்னித்து விடுங்கள்!” என்று கூறினாள். வேகமாகத் திரும்பினாள்; ‘விறு விறு’ என்று நடந்து போய்விட்டாள்.

“சூடாமணி!” என்று ஆசையோடு அழைத்தாள், ராணி!

“சூடாமணி! சூடாமணி!” என்று ராணியின் அப்பாவும் அன்பாக அழைத்தார்.

சூடாமணி திரும்பிப் பார்க்கவும் இல்லை; நிற்கவும் இல்லை; நடந்து கொண்டேயிருந்தாள்.

அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்த ராணி, அப்பா இருவர் கண்களிலும் கண்ணீர் ததும்பிக் கொண்டிருந்தது.

– புத்தர் பொம்மை, முதற் பதிப்பு: நவம்பர் 1957, தமிழ் நிலையம், புதுக்கோட்டை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *