‘டூர்’ போனானா குமார்?

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 10,858 
 

குமார் ஐந்தாம் வகுப்புக்கு செல்கிறான். முதல் நாளில் இருந்தே அவன் கனவு அந்த வருட சுற்றுலாவிற்கு போவதுதான். அப்பா ஆட்டோ ஓட்டுனர். அம்மா, வீட்டின் அருகே இருக்கும் துணிக்கடையில் வேலை செய்கிறாள். குமார், முத்தையா மேல்நிலைப் பள்ளியில் படிக்கிறான். முத்தையா என்கின்ற பெரியவர் ஒருவர் இந்தப் பள்ளியை நிர்வகிக்கிறார். நல்ல மனம் படைத்தவர். குமார் போன்ற ஏழை மாணவர்களுக்கு புத்தகத்திற்கான கட்டணம் மட்டும் வாங்கிக்கொள்வார். குமார் ஓரளவு சுமாராகத்தான் படிப்பான்.

அவர்கள் பள்ளியிலிருந்து வருடா வருடம் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வார்கள்.

நான்காம் வகுப்பு படிக்கும்போது சுற்றுலா செல்லும் சமயம் அப்பா கையில் சுத்தமாகக் காசே இல்லாமல் போய்விட்டது. குமாரால் சுற்றுலா போக முடியவில்லை.

நண்பர்கள் சென்று வந்து தாங்கள் பார்த்ததை எல்லாம் கதை கதையாகச் சொன்னபோது ஏக்கமாக இருந்தது. யாருக்கும் தெரியாமல் அழுதான். அடுத்த வருடம் எப்படியும் தானும் சுற்றுலா செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தான். சின்ன உண்டியல் தயார் செய்தான்.காசு கிடைக்கும்போது எல்லாம் அதில் சேமித்து வந்தான். ஊரில் இருந்து அத்தை, பாட்டி வரும் போது காசு கொடுப்பார்கள். அதையும் போட்டு வைத்தான். கடைக்குப் போய் வரும்போது மீதம் இருக்கும் ஒரு ரூபாய், 50 காசுகளை அம்மாவின் அனுமதியோடு உண்டியலில் போட்டு சேமித்து வந்தான்.

நாட்கள் வேகமாக நகர்ந்தன. ஒரு நாள் ஆசிரியர் “அடுத்த வாரம் நாம் சென்னைக்கு சுற்றுலா செல்கிறோம். விருப்பம் உள்ளவர்கள் தங்கள் பெயரை மூன்று நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்’’ என்றார்.

கட்டணம் இருநூறு ரூபாய். குமாருக்கு உண்டியலில் அவ்வளவு பணம் சேர்ந்து இருக்குமா என்ற சந்தேகம். வீட்டுக்குப் போனதும் உண்டியலை உடைத்து எண்ணிப் பார்த்தான். நூற்றி இருபத்தெட்டு ரூபாய் இருந்தது. அப்பாவிடம் தனக்கு இன்னும் எழுபத்திரெண்டு ரூபாய் வேண்டும் என்று கேட்டான். ஆசிரியரிடம் பெயரும் கொடுத்துவிட்டான். சுற்றுலா கட்டணத்தை குமார் மட்டும் கட்டவில்லை மற்றவர்கள் கட்டிவிட்டார்கள். அவன் அப்பா கடைசி நாள்தான் தர முடியும் என்றார். ஆசிரியரிடம் பேசி, பேருந்தில் ஏறுவதற்கு முன்னர் தரவேண்டும் என்ற ஒப்புதல் பெற்றான். அன்றிலிருந்து தினமும் சுற்றுலா பற்றிய கனவுதான்.

மறுநாள் சுற்றுலா. அன்றிரவு தூக்கமே வரவில்லை. அம்மாவிடம் தனக்கு என்ன சாப்பாடு வேண்டும் என்று சொல்லிவிட்டான். பேருந்தில் யார் பக்கத்தில் உட்கார வேண்டும் என முடிவு செய்துவிட்டான். புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் வரவேயில்லை. சென்னை எப்படி இருக்கும்? படத்தில் காண்பிப்பது போல அழகாக இருக்குமா? நிறைய மக்கள் இருப்பார்களா? மெரினா கடற்கரையில் குளிக்கலாம். ஏதாவது கதாநாயகனை பார்க்கலாம். முதலமைச்சரை வழியில் காணலாம்…என்று ஏதேதோ யோசனைகள் குமாருக்கு.

காலை சரியாக ஐந்தரை மணிக்கு பேருந்து கிளம்பும். ஐந்து மணிக்கே பள்ளிக்கு வந்துவிட வேண்டும் என்று சொல்லி இருந்தார்கள். குமார் நான்கு மணிக்கெல்லாம் தயாராகிவிட்டான்.அம்மாவை எழுப்பி காலை, மதிய உணவை செய்து தரச்சொன்னான். அப்பா இரவு வரவில்லை. இந்த வாரம் இரவில் வண்டி ஓட்டுகின்றார். முடிந்தால் வந்து பள்ளியில் விடுவதாகவும், இல்லையெனில் குமாரே பள்ளிக்கு செல்லுமாறும் சொல்லிவிட்டு சென்றார் அப்பா. அவர் நாலரை மணியாகியும் வரவில்லை. அதனால் தானே கிளம்பி பள்ளிக்குச் சென்றான் குமார்.

விடியற்காலை என்பதால் இன்னும் இருட்டாகத் தான் இருந்தது. பள்ளி நெருங்கும் தெரு முனையில் ஏதோ முனகல் சத்தம் கேட்டது. முதலில் பயந்துவிட்டான். பிறகு சத்தம் வந்த திசையை நோக்கி பார்வையைத் திருப்பினான். பாட்டி ஒருத்தியின் முனகல்தான் அது. கூனிக்குறுகி தெரு ஓரத்தில் ஒரு வீட்டின் தாழ்வாரத்தில் படுத்திருந்தாள். வாடிய முகம். இரவெல்லாம் கத்திக் கத்தி தொண்டை வறண்ட சத்தம்.

“என்ன பாட்டி? என்னாச்சு?”

“இரண்டு நாளா சாப்பிடல” பாட்டியிடம் இருந்து ஒரு பெருமூச்சு வந்தது. “உடம்புக்கு முடியலை. டாக்டர்கிட்டே போக காசில்லே, அம்மா…” மீண்டும் முனகல்.

தன் சுற்றுலா முக்கியமா, இந்தப் பாட்டி முக்கியமா என்று யோசித்தான் குமார். தன் கையில் இருந்த 200 ரூபாயும் உணவுப் பொட்டலங்களையும் கொடுத்துவிட்டு, வீட்டை நோக்கி நடந்தான்.

அழுதுகொண்டே அம்மாவிடம் நடந்ததை சொன்னான் குமார். அம்மா அவனை வாரி அணைத்துக்கொண்டாள். வாசலில் யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்டது. அம்மா சென்று திறந்தாள். அங்கே குமாரின் ஆசிரியர். பயந்துவிட்டான் குமார். அவன் வீட்டு வாசலில் பள்ளிப் பேருந்து.மாணவர்கள் ‘ஹோ’ என்ற கூச்சலோடு ஜாலியாக இருந்தார்கள்.

“நான் வரலை சார். பணம் இல்லை” அழுதுகொண்டே சொன்னான் குமார்.

“குமார் நீ செஞ்ச காரியத்தை நம் பள்ளி முதல்வர் முத்தையா தூரத்தில் இருந்து பார்த்திருக்கிறார். அந்தப் பாட்டியை அவர் மருத்துவமனையில் சேர்த்துவிட்டார். உனக்கு தன் பாராட்டைத் தெரிவித்து, வீட்டிற்குச் சென்று சுற்றுலாவிற்கு அழைத்து வரச்சொன்னார். நீ என் மாணவன் என்று சொல்லிக்கொள்வது எனக்குப் பெருமையாக இருக்கிறது குமார்” என்றார்.

தன் மகன், கன்றுக்குட்டி போல் துள்ளிக்கொண்டு பஸ்ஸில் ஏறுவதைப் பார்த்து சந்தோஷமாகக் கையசைத்தாள் குமாரின் அம்மா.

வெளியான தேதி: 16 நவம்பர் 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *