கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 18, 2012
பார்வையிட்டோர்: 9,127 
 

அடர்ந்த காட்டையொட்டிய ஒரு வீட்டில் ஒரு விதவை வாழ்ந்து வந்தாள். அவளுக்கு இரண்டு பெண்கள். மூத்தவள் பெயர் ஸ்நோ ஒயிட்; இளையவள் பெயர் ரெட்ரோஸ். இருவரும் நல்ல அழகிகள்.

சகோதரிகள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த அன்பு கொண்டிருந்தனர். காட்டில் வசிக்கும் விலங்குகள் தான் அவர்களுக்கு உற்ற நண்பர்கள். அப்போது கடுமையான பனிக்காலம்.

ஒரு நாள் இரவு—

வீட்டின் கதவு தட்டப்பட்டது. ஸ்நோ ஒயிட் சென்று கதவைத் திறந்தாள். அங்கே கரடி ஒன்று குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தது. கரடியைக் கண்டதும் ஸ்நோ ஒயிட் பயந்தாள்.

ஆனால், அந்தக் கரடி மனித குரலில் பேசியது. குளிரில் நடுங்கும் தனக்கு அடைக்கலம் தரும்படி கெஞ்சியது. கரடி கூறுவதைக் கேட்டு ஸ்நோ ஒயிட் மனமிரங்கினாள். உடனே அதனைக் கணப்பருகே அழைத்துப் போனாள். கரடி கணப்பருகே அமர்ந்து கொண்டது. சிறிது நேரத்தில் சகோதரிகள் இருவரும் கரடியுடன் நெருங்கிப் பழகிவிட்டனர்.

அதன்பின் கரடி தினமும் அங்கு மாலை வேளையில் வந்துவிடும். கணப்பருகே குளிர் காயும். சிரித்துப் பேசி அவர்களுடன் விளையாடும். அதிகாலையில் காட்டிற்குள் சென்றுவிடும்.

பனிக்காலம் முடிந்ததும் சகோதரிகள் இருவரிடமும் கரடி பிரியா விடைபெற்றது. “”இனி உங்களைச் சந்திக்க முடியுமோ என்னவோ? என்னுடைய செல்வத்தைத் தேடி நான் செல்கிறேன். இடையில் உங்களைச் சந்திக்க நேர்ந்தது. எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது,” என்று மனம் நெகிழக் கூறி விடைபெற்றுச் சென்றது.

ஸ்நோ ஒயிட்டும் ரெட் ரோஸும் கலங்கிய கண்களுடன் கரடிக்கு விடை கொடுத்து அனுப்பினர். கரடியும் அவர்களை விட்டுப் பிரிய மனமில்லாமல் விடை பெற்றுச் சென்றது.

நாட்கள் சென்றன—

ஒரு நாள் சகோதரிகள் இருவரும் விறகு பொறுக்குவதற்காகக் காட்டிற்குள் சென்றனர். அங்கு ஒரு இடத்தில் குகை ஒன்று இருப்பதைக் கண்டனர். உள்ளே சென்று பார்க்க விருப்பம் கொண்டனர். குகைக்குள் நுழைந்தனர். குகை நீளமாகப் போய்க் கொண்டே இருந்தது. ஓரிடத்தில் இருளையும் மீறி ஒளி வீசிக் கொண்டிருந்தது. ஒளிவரும் இடமருகே சென்றனர்.

அங்கே வைரம், வைடூரியம், மரகதம், மாணிக்கக் கற்களாலான ஆபரணங்களும் தங்க நகைகளும் குவிந்து கிடந்தன. அவற்றைக் கண்டு இருவரும் பிரமித்துப் போயினர். அப்போது குகையின் இருண்ட பகுதியிலிருந்து திடீரென்று பூதம் ஒன்று பாய்ந்து வந்தது. அதன் பயங்கரமான அலறலைக் கேட்டு சகோதரிகள் இருவரும் அஞ்சி நடுங்கினர்.

அவர்களைக் கண்ட பூதம், “”உங்களை என்ன செய்கிறேன் பாருங்கள். இங்கு என்னை உளவு பார்க்கவா வந்துள்ளீர்கள்?” என்று கத்தியபடி தனது நீண்ட கைகளை நீட்டியது. இருவரும் பதறிப்போன நேரத்தில் அங்கே கரடி ஒன்று வந்தது.

பூதத்தின் கவனம் கரடி மேல் திரும்பியது. அப்போதுதான் இருவருக்கும் மூச்சே வந்தது. “அப்பாடா பிழைத்தோம்!’ என்று எண்ணினர்.
கரடிக்கும் பூதத்திற்கும் கடும் சண்டை நடந்தது. இறுதியில் பூதம் கரடியால் அடித்துக் கொல்லப்பட்டது. கரடி சகோதரிகளின் அருகில் வந்தது.

” என்னைத் தெரியவில்லையா? நான் உங்கள் நண்பன். பனிக்காலம் முழுவதும் கணப்புக்காக உங்கள் வீட்டிற்கு வந்தவன்தான்!” என்றது.

அதன் குரல் கேட்டு ஸ்நோ ஒயிட்டும், ரெட் ரோஸும். அடையாளம் கண்டு கொண்டனர். அப்போது அங்கே எதிர்பாராத அதிசயம் நடந்தது.
கரடி உருமாறத் தொடங்கியது. மனித உரு பெற்றது. அரசகுமாரன் தோற்றத்தில் அலங்கார அணிமணிகளுடன் ஒரு இளைஞன் அங்கே காட்சியளித்தான். அவன் பேச ஆரம்பித்தான்.

” நான் ஒரு அரசகுமாரன். இந்தப் பூதத்தால் தான் நான் கரடி உருவம் பெற்றேன். பனிக்காலத்தில் நான் விரைத்துபோய் இறந்து போகாதபடி நீங்கள்தான் என்னை காப்பாற்றினீர்கள். உங்களுக்கு மிக்க நன்றி. எனது செல்வங்களை எல்லாம் இந்தக் கரடி அபகரித்துக் கொண்டு விட்டது. அதனை மீட்கவே இங்கு வந்தேன். அப்படி வரும் போதுதான் உங்களைச் சந்திக்கிறேன்,” என்றான்.

அரசகுமாரன் செல்வங்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டான். ஸ்நோ ஒயிட், ரெட் ரோஸ் இருவரையும் அழைத்துக் கொண்டு, தனது நாட்டிற்குச் சென்றான். ஸ்நோ ஒயிட்டை அவன் திருமணம் செய்து கொண்டான்.

இளையவள் ரெட்ரோஸைத் தனது தம்பிக்கு மணமுடித்து வைத்தான்.
அவர்கள் நால்வரும் நீண்டகாலம் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர்.

பட்டூஸ்… ஏழை பெண்கள் செய்த உதவி அவர்களுக்கு எவ்ளோ பெரிய நன்மையை கொடுத்தது பார்த்தீர்களா?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *