வேட்டைக்குதவிய புறாக்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 4, 2024
பார்வையிட்டோர்: 60 
 
 

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு நாள் ஒரு வேடன், பறவைகள் பிடிப்பதற் காகக் காட்டில் சுற்றிக் கொண்டிருந்தான். வழியில் ஒரு பெட்டைப் புறா அகப்பட்டது. அதைத் தன் கையில் இருந்த கூட்டிற்குள் அடைத்து எடுத்துக் கொண்டு சென்றான். செல்லும் வழியில்,திடீரென்று வானம் இருண்டு மழை பொழியத் தொடங்கிற்று. சூறைக்காற்றும் சேர்ந்து வீசவே, மேற்கொண்டு போகப் பயந்து, ஒரு மரத்தின் கீழ்த் தங்கினான். 

அந்த மரத்தின்மேல் இருந்த ஆண் புறா ஒன்று, தன் துணைவியான பெட்டைப் புறாவைக் காணாமல் கலங்கியது. ‘இந்தப் புயல் மழையில் எகுங் போய்ச் சிக்கியதோ? காட்டில் செல்கையில் யாரும் பிடித்துக் கொண்டார்களோ? இறந்து விட்டதோ? தெரிய வில்லையே!’ என்று அது வாய் விட்டுப் புலம்பியது. 

அதைக் கேட்ட பெண்புறா, வேடனுடைய கூட்டில் இருந்து கொண்டே, ‘அத்தான்! இதோ இருக்கிறேன்,என் முன் வினைப் பயனால் நான் வேடனிடம் அகப்பட்டுக் கொண்டேன். இருந்தாலும், இவன் இப்போது நம் இருப்பிடத்திற்கு வந்திருப்பதால், நீங்கள் இவனுக்கு உதவி புரிய வேண்டும்!’ என்று கூறியது. 

ஆண் புறா கீழே நோக்கியது. தன் துணைப் புறா கூட்டிலிருப்பதைக் கண்டது. அதைப் பிடித்து வைத்திருந்த வேடனுடைய உடல் குளிரால் நடுங்கிக் கொண்டிருப்பதையும் கண்டது. உடனே அது பறந்து சென்று மழையில் நனையாத சிறு சுப்பி களைக் கொண்டு வந்து மரத்தடியில் போட்டு, ஓர் எரிகிற கொள்ளிக் கட்டையும் எங்கிருந்தோ கொண்டு வந்து போட்டு நெருப்பு மூட்டியது, இவ்வாறு வேடன் குளிர் காய உதவிய ஆண்புறா. ஐயா நீங்கள் பசியாயிருக்கிறீர்கள் போலிருக்கிறது! என்னை உண்ணுங்கள்?’ என்று சொல்லிக் கொண்டே எரிகிற நெருப்பில் விழுந்து விட்டது. 

இரண்டு புறாக்கள் பேசியதையும் கவனித்துக் கொண்டிருந்த வேடனுக்குத் திடீரென்று ஆண்புறா தீயில் விழுந்ததைக் கண்டதும். மனம் கசிந்து விட்டது. தனக்காக உதவிபுரிய முற்பட்ட அதன் உடலை அவன் தின்ன விரும்பவில்லை. மேலும், அதன் துணையான பெண் புறாவைப் பிடித்துக் கொண்டு போகவும் விரும்பவில்லை. அதாவது உயிர் வாழட்டும் என்று கூட்டைத் திறந்து விட்டான். பெண்புறா வெளியில் வந்தது. ஆனால் மேலே பறக்கவில்லை. தன் கணவனில்லாமல் தான் மட்டும் உயிர் வாழ்வதா என்று ஆண்புறா விழுந்த அந்தத் தீயிலேயே விழுந்து தன் உயிரை விட்டு விட்டது. 

அன்பே உருவான அந்தப் புறாக்கள் சாவதற்குத் தான் காரணமாக இருந்ததை எண்ணி அந்த வேடன் மிகவும் வருந்தினான்.

– பஞ்சதந்திரக் கதைகள், பகுதி 3 – அடுத்துக் கெடுத்தல், முதற் பதிப்பு: மார்ச் 1996, அன்னை நாகம்மை பதிப்பகம், சென்னை.

நாரா. நாச்சியப்பன் (நாராயணன் நாச்சியப்பன்; பாவலர் நாரா. நாச்சியப்பன்) (ஜூலை 13, 1927 - 2000-த்திற்குப் பின்) கவிஞர், எழுத்தாளர், பதிப்பாளர், அச்சக உரிமையாளர். பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களுள் ஒருவர். திராவிட இயக்கம் சார்ந்த பல படைப்புகளை, சிறார்களுக்கான பல நூல்களை எழுதினார். தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது. நாரா. நாச்சியப்பன், அன்றைய ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆத்தங்குடியை அடுத்த முத்துப்பட்டணத்தில், சித. நாரா. நாராயணன் செட்டியார்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *