வெள்ளாட்டு சுப்பன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 9,254 
 

முன் நெற்றியைத் திருநீறு அலங்கரிக்க ஆசிரியர் சிவமயம் பள்ளிக்கூடத்தில் நுழைந்தார். முதல் மணி ஒலித்தது. கற்பிக்கும் பணியைச் செய்யும் அவரை கிராமத்து மக்கள் அளவு கடந்து நேசித்தார்கள். வெள்ளாட்டுச் சுப்பன், சிவமயத்திடம் பணிவோடு ‘‘வணக்கம் வாத்தியாரய்யா’’ என்றான். பதிலுக்கு வணக்கம் சொன்ன சிவமயம், ஒரு துண்டுச் சீட்டை சுப்பனிடம் கொடுத்தார். சுப்பனின் தோளில் இருந்த குழந்தையின் கன்னத்தில் செல்லமாய்த் தட்டிப் ‘‘போய்ட்டுவா’’ என்றார்.

வேலியோரத்தில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. தொட்டில் ஆட்டுவதை நிறுத்திய சுப்பன், அருகே அமர்ந்து ஆசிரியர் சிவமயம் கொடுத்த துண்டுச் சீட்டை எடுத்தான். அதிலிருந்த எழுத்துக்களைச் சுட்டு விரலால் தரையில் எழுதிப் பார்க்கத் தொடங்கினான். குழந்தை அசையும்போது ஆட்டிக்கொண்டே, தரையில் எழுதியதை அழித்து மீண்டும் எழுதிப் பார்த்தான்.

‘‘ஐயா’’ என்றபடி சுப்பன் வகுப்பறையில் நுழைந்தார். ‘‘வா சுப்பா, எழுதிப் பார்த்தியா?’’ என்று ஆசிரியர் கேட்டார். ‘‘ஆமாங்கய்யா’’ என்றான். ‘‘ஆறு வயசுல பள்ளிக்கூடத்திற்கு அனுப்பறதுக்கு பதிலா என்னைப் பெத்த புண்ணியவான் ஆட்டுக் குட்டியைக் கொடுத்து வேலிப்பக்கம் அனுப்பிட்டாரு. கையெழுத்துகூட போடத்தெரியாத கை நாட்டாப் போயிட்டோமேனு வருத்தமாயிருக்கு அய்யா’’ என்றான்.

சிவமயம், ‘‘இதுக்கா கவலப்படறே இப்ப நெனச்சாக்கூட நீ படிக்கலாம்பா’’ என்றார்.

‘‘பிள்ளையப் பாக்குறதா, ஆடு மேய்க்கிறதா,கஞ்சி காய்ச்சிறதான்னு தெரியலை. ஏழு கழுத வயசுல எனக்கு என்னாத்துக்கு அந்த ஆசை யெல்லாம். எம்புள்ளைய நல்லாப் படிக்க வச்சாப் போதுங்க’’ என்றான்.

‘‘படிக்கறதுக்கு வயசு எதுக்குப்பா ஆர்வமும் முயற்சியும் இருந்தா போதும்’’.

சிவமயத்தின் சொல்லை வேதவாக்காக எடுத்துக் கொண்டு அவருடைய கைவண்ணத்தில் கைநாட்டுச் சுப்பன் கையெழுத்துப் போடத் தொடங்கினான். சுப்பனின் மகள் பள்ளி வயதைத் தொட்டாள். தேங்காய், பழம், வெற்றிலை, பாக்குடன் குழந்தையை அழைத்துக்கொண்டு ஆசிரியரின் பாதங்களில் வைத்து வணங்கினான். சேர்க்கை விண்ணப்பத்தைத் தன் கைப்பட எழுதி ஆசிரியரிடம் கொடுத்தான். சுப்பனின் கையெழுத்து, ஆசிரியர் சிவமயத்திற்கு பொன் எழுத்துக்களாகத் தோன்றின. மகிழ்ச்சி பொங்க வாங்கிக் கொண்டார்.

‘‘நம்ம அரசாங்கமும் ‘அனைவருக்கும் கல்வி இயக்கம்’ என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கியிருக்காங்க’’ என்று கூறிய ஆசிரியர், திட்டத்தின் முக்கியத்துவம், செயல்பாடுகள் பற்றி முழுமையாக விளக்கிக் கூறியதோடு கிராமக் கல்விக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவராகவும் சுப்பனை நியமித்தார்.

இப்போதெல்லாம் ஊர் மக்கள் சுப்பனை ‘வெள்ளாட்டுச் சுப்பன்’ என்று அழைப்பதில்லை. ‘கல்விக்குழு சுப்பன்’ என்றே அழைக்கிறார்கள்.

வெளியான தேதி: 01 செப்டம்பர் 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *