வெற்றி பெறுவது எப்படி?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 1,813 
 
 

கதை கேட்க: https://www.youtube.com/watch?v=yxhxUBBN2DA

ஞானமும், துணிவும், உறுதியும் கொண்ட அரசன் ஒரு நாட்டை ஆட்சி செய்து வந்தான்.

ஒரு நாள் அரசன் வேட்டையாடுவதற்காகச் சென்றான். அடர்ந்த காட்டில், அந்தணன் ஒருவன் வில்வப்பழங்களை வைத்துக் கொண்டு, யாகம் வளர்த்துக் கொண்டிருந்தான்.

அதைப் பார்த்த அரசன் அந்தணனை அணுகி, ஏதோ கேட்க எண்ணினான். பிறகு, எதுவும் கேட்காமலேயே திரும்பிச் சென்றான்.

வெகு நேரம் வேட்டையாடிவிட்டு, திரும்பினான் அரசன்.

அப்போதும் அந்தணன் மிகத் தீவிரமாக யாகத்தில் ஈடுபட்டிருப்பதைக் கண்டான் அரசன்.

அந்தணனை அணுகி, “இந்த வில்வப் பழங்களைக் கொண்டு நீ யாகம் செய்வதன் நோக்கம் என்ன?” என்று கேட்டான் அரசன்.

“அக்கினி தேவன் எனக்குக் காட்சி அளித்து வரம் அளிப்பதுடன், யாககுண்டத்திலிருந்து ஒரு தங்க வில்வப் பழமும் கிடைக்கும். அதற்காகவே, காலையிலிருந்து யாகம் செய்து கொண்டிருக்கிறேன். காட்சியும் கிடைக்க வில்லை, காரணமும் தெரியவில்லை” என ஏக்கத்தோடு கூறினான் அந்தணன்.

“அப்படியானால் ஒரு வில்வப் பழத்தை என்னிடம் கொடு, உனக்காக நான் யாகத்தில் ஈடுபடுகிறேன்” என்றான் அரசன்.

அதற்கு அந்தணன், மிக அலட்சியமாக, மனத்தூய்மையும், பக்தியும் இருந்தால்தான், அக்கினி தேவனைக் காண இயலும். புனிதத்துடன் பக்தியுடன் காலையிலிருந்து தவம் இருக்கிறேன். எனக்கே காட்சி கிடைக்கவில்லை, உனக்கு மட்டும் எவ்வாறு கிடைத்து விடும்?” என்று கர்வத்துடன் கூறினான்.

“அந்தக் கவலை உனக்கு வேண்டாம், என்னிடம் ஒரு பழத்தைக் கொடு” என்று கேட்டுப் பெற்றுக் கொண்டான் அரசன்.

மனதை ஒரு நிலைப்படுத்தி, (வேறு எண்ணங்களில் சிதற விடாமல்) ” அக்கினி தேவனே ! இதோ இந்த வில்வப் பழத்தை உனக்கு அளிக்கிறேன்; உனக்குக் கருணை உண்டாகவில்லை என்றால், என் தலையை உனக்கு அளிக்கப்போகிறேன்” என்று கூறி தன் கையில் இருந்த வில்வப்பழத்தை யாக குண்டத்தில் போட்டான் அரசன்.

மறு நொடியில் தங்க வில்வப்பழம் ஒன்று தோன்றியது. அதைத் தெடர்ந்து அக்கினி தேவனும் தோன்றினான். “உனக்கு என்ன வரம் வேண்டும்? என்று கேட்டான் அரசனிடம்.

அரசன் அக்கினி தேவனை வணங்கி, “இதோ நிற்கும் அந்தணன் நினைப்பதுபோல் கிடைக்க வேண்டும் என்பதுதான் தாங்கள் அருள வேண்டிய வரம்” என்று அந்தணனுக்காகப் பரிந்து வேண்டினான் அரசன்.

“அப்படியே ஆகக் கடவது. மேலும், நீயும் செழிப்போடு வாழ்வாயாக! உன் அரண்மனைக் கருவூலம் எப்பொழுதும் நிறைந்தே இருக்கும்” என்று அரசனுக்கு (அந்தணனுக்கும் சேர்த்து) வரம் அருளினான்.

அதைக்கண்டு வியப்புற்ற அந்தணனுக்கு பொறாமையும் உரு எடுத்தது ” அக்கினி தேவனே! நான் வெகு நேரமாகத் தவம் செய்து கொண்டிருந்தேன். எனக்குக் காட்சி அளிக்கவில்லை. அரசனுக்குச் சிறிது நேரத்திலேயே காட்சி அளித்தீரே ! அது ஏன்?” என்று கேட்டான் அந்தணன்.

“அந்தணனே உலகில் வலிமைமிக்க ஆற்றலுக்கே விரைவில் வெற்றி கிட்டும். தவிர, உன்னைப் போன்ற சுயநலம் கொண்ட மந்தபுத்தியுள்ள சோம்பேறிக்கு அவ்வாறு கிடைக்காது. மற்றும் கர்வமும், அலட்சியமும், பொறாமையும் உன்னிடம் குடிகொண்டு உள்ளது என்று கூறி, அக்கினிதேவன் மறைந்து விட்டான்.

அக்கினி தேவன் தோன்றுகிறாரோ இல்லையோ ) வலிமைமிக்க ஆற்றல், உறுதியான உள்ளம், சுயநலமின்மை, பிறருக்காக வேண்டுதல் இவை இந்தக் கதையில் சிறந்து விளங்குகின்றது

– சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1997, முல்லை பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *