(1988ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பிரதான சந்தை. அதன் மேற்குப்புற எல்லையில் பிரதான வீதியின் கிழக்குக் கரையைத் தொட்டவாறு ஒரு கல் மதில். சுமார் நான்கு அடி உயரம் கொண்டது. இரு பக்கங்களையும் போல் அதன் மேற் பகுதியும் சீமெந் தினால் தட்டையாகப் பூசப் பட்டிருந்தது. பிரதான வீதியில் வருவோர் சந்தையுள் பிரவேசிப்பதற்கும் அங்கிருந்து வீதிக்குச் செல்வோர் வெளியேறுவதற்கும் வாய்ப்பாய் எல்லைக் கல் மதிலின் மத்தியிலே ஒரு வழி அமைக்கப்பட்டி ருந்தது. உள்ளே, அவ்வழியின் இடதுபுறமாய் சற்றுத் தள்ளி அந்த மதிலைத் தொட்டவாறு சுற்களைக் கொண்டு செவ்வக வடிவிலே ஒரு பெரிய குப்பைத்தொட்டி கட்டப்பட்டிருந்தது. மூன்று, மூன்றரை அடி உயரம் கொண்ட அத் தொட்டி சந்தையிற் சேரும் குப்பைகளை தற்காலிகமாகக் கொட்டி வைப்பதற்கென்றே அமைக்கப் பட்டிருந்தது. அதனுள் குப்பைகளைக் கொட்டும் போது வெளியே சிதறிய மண் துணிக்கைகள் முன்னே தெரிந்த அதன் அகலப் பக்கத்தை முட்டியவாறு ஒரு பெரிய மண் திட்டையே உரு வாக்கி விட்டிருந்தது.
அச் சந்தையிலே வாசம் செய்து வந்த நடுத்தர வயதான கறுப்பு நிறங் கொண்ட ஓர் ஆடு தி.சமும், இடையிடையே அந்த மண் திட்டிலே அடிவைத்து குப்பைத் தொட்டியின் மீது வந்து அங்கிருந்து அந்த எல்லைக் கல் மதிலின் மீது ஏறிக் கொண்டு நடக்கும். சில நேரங்கள் அதிலே தூணைச் சார்ந்த இடங்களிலே படுத்து ஓய்வு கொள்ளவும் செய்யும்.
ஒரு நாள் பிற்பகல் வேளை அந்த ஆடு இவ்வாறு செயற்பட்டுக்கொண்டிருந்தது. அதனை அன்றுதான் புதி தாகச் சந்தைக்கு மேய்ச்சலுக்காகக் கொண்டுவிடப்பட்ட இள வயதான ஓர் ஆடும் கவனிக்கத் தவறவில்லை.
மதிலிலே அந்த ஆடு, இவ்வாறு செயற்பட்டுக் கொண் டிருந்ததை நீண்ட நேரமாக அவதானித்துக் கொண்டிருந்த புதிய ஆடும் அம் மதிலின் அருகே நெருங்கி அதன் எதிரே நின்று கொண்டது. தலையை உயர்த்தி மதிலிலே நின் றிருந்த அதனை நோக்கியது.
அதுவோ, தரையிலே நின்றிருந்த அந்தப் புதிய ஆட்டை ஒரு முறை ஊன்றி அவதானித்துவிட்டுக் கேட்டது:
“என்ன அப்படி ஆச்சரியமாகப் பார்க்கிறாய்”
“நிலத்தில் நடப்பது போல், மதிலிலும் வெகு சாதாரணமாய் நடக்கிறாய் அதுமட்டுமல்ல, சாவகாசமாய்ப் படுத்து ஓய்வும் கொள்கிறாய் அது தான்”
“ஆ…அப்படியா…?”
“அது சரி…எப்படி இது உனக்குச் சாத்தியப்பட்டது?”
“இடை விடா முயற்சியின் காரணமாகவே நான் இவ்வாறு, மதிலிலே நடக்கவும் படுத்து ஓய்வு கொள்ளவும் பயின்று கொண்டேன்”
“ஆ…அப்படியா… அது சரி. என்னாலும் இவ்வாறு நடந்து கொள்ள இயலுமா?”
“ஆம்…ஆம்… நடந்து கொள்ளலாம் நீயும் என்னைப் போல் ஒருவன் தானே” என்று விட்டு மதிலிலிருந்து கீழே இறங்கி புதிய ஆட்டின் பக்கமாய் வந்தது அந்தக் கறுத்த ஆடு. தேகத்தை ஒரு முறை அசைத்து விட்டுக் கொண்டு இவ்வாறு கேட்கவும் செய்தது.
”ஏன் இவ்வாறெல்லாம் மிகவும் அக்கறையோடு வினவுகிறாய்… உனக்கும் என்னைப்போல் நடந்து கொள்ள ஆவலாக இருக்கிறதா?”
சந்தர்ப்பத்தை நழுவவிட விரும்பாத புதிய ஆடு உடனேயே பதிலளித்தது:
”ஆவலாகத்தானிருக்கிறது. ஆனால் விழுந்து விடுகிறேனோ என்னவோ தெரியாது”
“நீ பயப்படத் தேவையில்லை.. நான் காட்டித் தருவது போல் செய்… எல்லாம் சரியாக வரும்…” இது கறுத்த ஆடு.
“சரி… அப்படியே செய்கிறேன்…”
“கவனித்துக் கொள்” கறுத்த ஆடு ‘விசுக்’ கென்று நடந்து அந்த மண்திட்டியிலே அடி வைத்து குப்பைத் தொட்டியின் மேலே வந்து அங்கிருந்து மெதுவாய் மதிலிலே ஏறிக் கொண்டது. சிறிது நேரத்தில் இரண்டு மூன்று முறை அதிலே நடந்தும் தூணைச் சார்ந்த இரு இடங் களிலே படுத்தும் காட்டி விட்டுக் கீழே இறங்கி வந்தது; புதிய ஆட்டிடம் நெருங்கிச் சென்றது.
“அனைத்தையும் நன்கு கவனித்துக் கொண்டுதானே இருந்தாய்.. இப்போது நான் காட்டித் தந்தது போற் செய்* என்றது.
புதிய ஆடு துணிவை ஏற்படுத்திக் கொண்டு கறுத்த ஆடு காட்டித் தந்தது போல் திடலையும், குப்பைத் தொட்டி யையும் ஏணியாகப் பாவித்து மதிலிலே ஏறி அதிலே நடக்கத் தொடங்கியது. இரண்டு மூன்று அடிகள்தான் வைத்திருக்கும் சறுக்கிக் கீழே விழுந்து விடுகிறது. என்றா லும் தன் உடல் நிலத்திலே மோதிக் கொள்ளாத வகையில் கால்களைத் தரையிலே ஊன்றிக் கொண்டு சமாளித்துக் கொள்கிறது.
“இப்போதுதானே ஆரம்பம்… திரும்பவும் செய்” சுறுத்த ஆடு ஊக்க மூட்டியது.
மீண்டும் புதிய ஆடு, கறுத்த ஆடு காட்டித் தந்த வாறு மதிலிலே ஏறி நடக்கத் தொடங்கியது. இப்போது ஐந்து ஆறு அடிகள் வைத்திருக்கும். திரும்பவும் சறுக்கிக் கீழே விழுந்து விடுகிறது. இப்போதும் முன்பு போலவே அது தன்னைச் சமாளித்துக் கொள்கிறது.
மறுகணம் அது நிலத்திலே நன்கு ஊன்றியிருந்த கால்களை வேகமாய் எடுத்து விசுக்கென்று திரும்பி கறுத்த ஆட்டின் பக்கமாய் வந்தது; பரபரவென்று நோக்கியது.
“சே.. என்னால் செய்ய இயலாது. இதை விடுவோம்” என்று அலுத்துக்கொண்டது.
“ஒரு முறையல்ல இரு முறையல்ல பல முறைகள் கூடத் தோல்விகள் ஏற்படலாம். இருந்தாலும், நாம் தோல்வியைக் கண்டு மனம் துவண்டுவிடக் கூடாது. தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். அப்போதுதான் நாம் வெற்றியைத் தழுவிக் கொள்ளலாம். இது இத் துறைக்கு மட்டுமல்ல நாம் முயற்சி செய்கின்ற எல்லாத் துறைகளுக்குமே பொருந்தும். இந்த விடயத்தில் நான் கூட எடுத்த எடுப்பிலேயே வெற்றி பெற்று விடவுமில்லை. பல முறை தோல்வியைத் தழுவிக் கொண்ட பின்பே வெற்றியீட்டினேன். ஆகையினாலே நீ நான். சொன்னவை அனைத்தையுமே கருத்திலே கொண்டு செயற் படு… எல்லாம் சரியாக வரும்…” என்றது மிகவும் ஆர்வத்தோடு அந்தக் கறுத்த ஆடு.
புதுத் தெம்பு பெற்ற அந்த இளம் ஆடு அப்போது முதல் அந்த மதிலிலேநடக்கவும் தூணைச் சார்ந்த இடங் களிலே படுக்கவும் பயிற்சி பெறத் தொடங்கியது.
என்ன ஆச்சரியம் நான்கு ஐந்து நாட்களிலே அது அந்த மதிலிலே அதி சிறப்பாக நடக்கவும், நன்கு படுத்துக் கிடக்கவும் பயின்று கொண்டது.
அதன் பின் ஒரு தினம் அந்த மதிலின் பக்கமாக அவ்விரு ஆடுகளும் சந்தித்துக் கொண்டன. அப்போது அந்தக் கறுத்த ஆட்டிடம், புதிய ஆடு
பின்வருமாறு பகர்ந்தது:
“நீ கூறிய அறிவுரைகள் தான் இவ்விடயத்திலே என்னை மிகவும் தெம்பு கொள்ள வைத்து வெற்றியீட் டவும் செய்தது. பொதுவாக எல்லாத் துறைகளிலும் நீ கூறிய அறிவுரைப்படி நடந்தால் வெற்றியீட்டலாம் என்பதை நான் இப்போது திடமாக நம்புகிறேன்”
அந்தப் புதிய ஆடு, கறுத்த ஆட்டை நோக்கிப் புன்னகைத்து விட்டு அந்த எல்லைக் கல் மதிலின் மேல் ஏறிக் கொண்டு அநாயாசமாக நடந்தது. சிறிது நேரத்தின் பின்பு தூணைச் சார்ந்த ஓர் இடத்திலே சாவகாசமாகப் படுத்துக்கிடந்தது. ஆனால், நிலத்திலே நின்றிருந்த அந்தக் கறுத்த ஆடோ, இளம் ஆட்டின் இச்செயற் பாடுகளைக் கண்டு பிரமித்துப்போனது.
– தினகரன் வார மஞ்சரி – 1988.01.24.
– நாங்கள் மனித இனம் (உருவகக் கதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1991, கல்முனை ஸாஹிறாக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் வெளியீடு.