கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம் சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 14, 2022
பார்வையிட்டோர்: 39,016 
 
 

(1942ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கதை உறுப்பினர்

ஆடவர்
1. புரோத்தியஸ் : வெரோணாநகர் இளைஞன் – ஜூலியாவின் காதலன்.
2. வலந்தைன் : புரோத்தியஸ் நண்பன் – வில்வியாவின் காதலன். மாற்றுருவில் கள்வர் தலைவன்.
3. மிலன் நகரத் தலைவன் : வில்வியாவின் தந்தை.
4. தூரியோ : மிலன் தலைவனால் வில்வியாவுக்குக் கணவனாகத் தேரப்பட்டவன்.
5. எக்ளாமர் : வில்வியாவின் நம்பகமான பணியாள் – காட்டிற்கு அவளுடன் சென்றவன்.

பெண்டிர்
1. ஜூலியா : வெரோணா நகர நங்கை – புரோத்தியஸ் காதலி மாற்றுருவில் – ஆண் – அவன் பணியாள்.
2. லூஸெத்தா : ஜூலியா தோழி.
3. வில்வியா : மிலன் தலைவன் மகள் – வலந்தைன் காதலி

கதைச் சுருக்கம்

புரோத்தியஸும் வலந்தைனும் வெரோணா நகரின் இரு செல்வ இளைஞர்கள்; இணைபிரியா நண்பர்களும் கூட. புரோத்தியஸ் ஜூலியா என்ற நங்கையின் காதலில் ஆழ்ந்து கிடக்க, வலந்தைன் மேல் நிலையை எண்ணி முயன்று மிலன் நகரத்தலைவனிடம் பணிபெற்றேகினான். புரோத்தியஸின் தந்தையின் விருப்பத்தால் அவன் முயன்று புரோத்தியஸுக்கும் ஒரு பணி தருவித்தான்.

வலந்தைன் மிலன் நகரத் தலைவன் மகளாகிய ஸில்வியா வைக் காதலித்தான். தந்தை அவளைத் தூரியோ என்பவனுக்கு மணஞ்செய்ய ஏற்பாடு செய்யவே, அவர்கள் நூலேணி மூலம் வெளியேறிக் களவியல் முறையில் மணஞ் செய்ய எண்ணினர். நட்பு முறையில் வலந்தைன் இதனைப் புரோத்தியஸிடம் சொல்ல, அவன் நம்பிக்கைக் கேடாய் அதனைத் தலைவனுக் கறிவித்து வலந்தைனை நகரினின்றும் துரத்தும்படி செய்தான். வலந்தைன் காட்டில் ஒரு திருடர் கூட்டத்தில் அகப்பட்டும் தன் திறத்தால் அவர்களைத் தன் வயப்படுத்தித் தலைவனானான்.

புரோத்தியஸுக்காக நெடுநாள் காத்திருந்த ஜூலியா இறுதியில் ஆணுடையுடன் அவனிடம் பணியாளாய் வந்து, அவனால் ஸில்வியாவிடம் காதல் தூதாய் அனுப்பப்பட்டு, அவள் உளநிலை அறிந்தாள்.

வலந்தைனைப் பின்பற்றி ஸில்வியா வீட்டிற்குச் சென்று திருடர் கைப்பட, அவளைப் பின்பற்றி அங்கு வந்த புரோத்தியஸ் அவளை விடுவித்துப் பின் தானே தொந்தரவு செய்தான். அச்சமயம் வலந்தைன் வந்தான், உடனிருந்த ஜூலியாவும் தன் உருக்காட்டினாள். புரோத்தியஸ் காதலி யையும் நண்பனையும் வஞ்சித்தமைக்கு மன்னிப்புக் கேட்டு மன மாறி ஜூலியாவை ஏற்று மணந்தான். வலந்தைனும் ஸில்வியாவை மணந்தான். மிலன் நகரத் தலைவன் சீற்றமாறி நண்பனாய் அனைவரையும் ஏற்றுக்கொண்டான்.

வெரோணா நகரின் இரு செல்வர்கள்

1.நண்பர் பிரிவு

வெரோணா நகரத்தில் புரோத்தியஸ் (Protheus) என்றும், வலத்தைன் (Valentine) என்றும் இளைஞர்கள் இருவர் செல்வர்களாக இருந்தனர். அவர்கள் இருவரும் ஈருடலும் ஓருளமும் போல் மனமொத்த நண்பர்களாய் விளங்கினர். பருவம் குணம் நடை முதலியவற்றில் மட்டுமின்றி உடையிலுங்கூட அவர்கள் ஒற்றுமையுடையவர்களாகவே வாழ்ந்துவந்தனர்.

Shakespear22அவர்களிடைத் தோன்றிய வேற்றுமை அனைத்தும் ஒரே ஒரு வகையைப் பற்றியதாகும். அதாவது அவர்களுள் புரோத்தியஸ் என்பவன் மட்டும் காதலுக் காட்பட்டு ஜூலியா (Julia) என்னும் மங்கையை நாடி, நெஞ்சில் அவள் நினைவும் நாவில் அவள் மாற்றமுமாக இடைவிடாது அவளை விரும்பி நின்றதே யாம். இதற்கு மாறாக வலந்தைனோ எனில், காதல் என்பது ஒருமயக்கம் என்றும், உடல்நலிவோ மற்று எதுவோ ஏற்பட்ட காலை அறிவும் மயங்குவதேைலயே அது ஏற்படுகின்றது என்றும் கூறிப் புரோத்தியஸை எள்ளி நகையாடுவான்.

காதலே கருத்தாய்த் தான் நினைத்த கன்னிகையையே மனமொழி மெய்களால் வழிபட்ட அப் புரோரத்தியலையும், கன்னியர் எவரையும் மனித வகுப்பிற்குப் புறம்பாகவும் களையாகவும் மதித்து வெறுத்திருந்த வலந்தைனையும், அவர்கள் நட்பையும் பற்றி நாத் தழும்பு படப் பேசி நகையாடி இன் புறாதவர் அந்நகரத்தில் இலர் என்னலாம்.

ஒருநாள் வலந்தைன், தன் காதலியின் படம் ஒன்றை வரைந்து, அதற்கு மைதீட்டிக்கொண்டிருந்த புரோத்தியஸிடம் வந்து ஏளனங் கலந்த புன்னகை யுடனும் அன்புடனும் அவன் தோள்மீது சார்ந்து நின்று, “அன்பனே! மாந்தர் வாழ்க்கை யனைத்தும் பெண்களுக்காகவே ஏற்பட்டதென்று தான் நீ நினைத்திருக்கிறாய்போ லிருக்கிறது. உனக்கு என்ன தான் சொல்லியும் பச்சைக் குழந்தைகள் ஒரு பொம்மையை வைத்து விளையாடுவது போல, ஒரு பெண்ணின் படத்தை வைத்து இப்படி விளையாடுகிறாயே” என்றான்.

புரோத்தியஸ் அவனைத் திரும்பிக் கூடப் பாராமல், “ஆமாம்; நான் பச்சைக்குழந்தை போலும் ஊனையும் உளத்தையும் உருக்கி உயிருக்கு உயிரூட்டும் காதலைப் பச்சைக் குழந்தைகள் விளையாட்டு என்று கூறும் நீ குழந்தையா, நான் குழந்தையா என்று நாலு பேரைக் கேட்டுப்பார்; எல்லாம் இன்னும் இரண்டோர் ஆண்டு சென்றால் தெரிந்து போகிறது. வேண்டாம் வேண்டாம் என்பதெல்லாம் பின்னால் வேண்டும் என்பதற்கோர் பீடிகையேயன்றி வேறன்று” என்றான்.

வலந்தைன்: சரி ; புரோத்தியல், அது கிடக்கட்டும். இப்படி நாம் விளையாட்டாய்ப் பொழுது போக்கிக் கொண்டிருக்கும் காலத்திற்கு ஓர் எல்லை வந்து விட்டது. உன்னை விட்டுப் பிரிவது எவ்வளவோ வருத்தமாயிருப்பினும், என் எதிர்கால நலனை யொட்டிப் பிரியத்தான் வேண்டி வருகிறது. நீ உடன் வருவதாயின் உனக்குக் கூட நலமாயிருக்கும். ஆனால் நீ வழிக்கு வருவது ஏது! நீதான் ஜூலியா என்ற கட்டுத்தறியிற் கட்டப்பட்டவனாயிற்றே.

புரோத்தியஸ்: உன் நகையாடலுக்கு இதுதானா நேரம்? ஏது அப்படி என்னையும் பிரிந்து செல்லும்படி தூண்டும் செய்தி? நம் நட்பைவிட நலந்தரு வதான அப்பொருள் காதலல்லாது வேறு யாதாயிருக்கக்கூடும்!

வலந்தைன்: போதும் போதும். உன் அறிவு செக்கைச் சுற்றி ஓடும் மாடுபோலவேதான் ஓடுகிறது. உன் ஊகம் முற்றிலும் தவறு. நான் ஓர் உயர்ந்த அரசியல் பணியைப் பெற்று மிலன் நகர் செல்கின்றேன். மிலன் நகர்த்தலைவனிடமிருந்து அதற்கான கடிதம் வந்துளது.

புரோத்தியஸ் சற்றே ஜூலியாவின் படத்தைக் கீழ் வைத்துவிட்டுக் கவலையுடன் தன் நண்பன் கைகளைப் பிடித்துக்கொண்டு “நீ நல்நிலை பெறுக; என்னை என்றும் மறவாதே” என்றான்.

வலந்தைனும் “நான் மறக்கமாட்டேன். நீதான் அடுத்த நொடியே என்னை மறந்து அப்படத்தில் மூழ்கிவிடப் போகிறாய்” என்று கூறிவிட்டு அகன்றான்.

2.காதலர் பிரிவு

அவன் கூறிய மொழிகள் ஒரு சிறிதும் வழுவாதபடி வலந்தைன் அகன்றதே புரோத்தியஸ் அப்படத்தின் முன் உட்கார்ந்து, ஜூலியாவின் பெயரில் அமைந்த பாவொன்றை அப்படத்தின் கீழ் வரைவதில் கண்ணும் கருத்துமாய் ஆழ்ந்துவிட்டான்.

புரோத்தியலின் காதலுக்கு இலக்கான ஜூலிபா ஓர் உயர் குடியைச் சேர்ந்த பெண். அழகிலும் ஒழுக்கத்திலும் ஒப்புயர்வற்றவள். பிற கன்னியரைப் போல் அவள் இளைஞர் காதல் நடிப்புகளுக்கு இடந்தருவது மில்லை. அவர்களுடன் உறவாடுவதையும் நகையாடுவதையும் எள்ளளவும் விரும்புவதும் இல்லை. எனவே புரோத்தியஸும் அவளை நெடுநாள் அணுக முடியாதபடியே இருந்தது.

பலநாள் ஜூலியாவின் பின் சென்று அவள் வீட்டையும் தோட்டத்தையும் சுற்றித் திரிந்து அவன் மன முளைந்து வந்தான். அவன் காதலைக் குறிப்பால் அறிந்த ஜூலியா தன் இயற்கைப்படியே அவன் பக்கம் நாடாதிருக்க முயன்றும் அவளையறியாது அவள் உள்ளமும் கண்களும் அப்பக்கம் சென்றன. ஆயினும், அவள் மடமும் பயிர்ப்பும் அவளைத் தடை செய்து அவன் பக்கத்தினின்றும் அவளை அகற்றிச் சென்றன.

ஜூலியாவின் தோழி லூஸெத்தா (Lucetta) என்பவள், தன் தலைவியின் உள்ளக்குறிப்பையும் அவள் காதலன் புரோத்தியளின் துன்பத்தையுங் கண்டு ஒருநாள் அவனிடம் வந்து உரையாடலாயினள். புரோத்தியஸும் நீந்த அறியாதவன் ஆறு கடக்கும் புணை கண்டது போல் மகிழ்ந்து, அவள் வாயிலாகத் தன் காதலைத் தெரிவிக்கலானான். தெரிவித்தும், காதலனது காதலின் ஆழத்தை அறியும் அவாவினளாய் ஜூலியா அவனுக்கு எளிதில் விட்டுக்கொடாமலும் தெளிவான மறுமொழி தராமலு மிருந்து வந்தாள்.

புரோத்தியலின் காதலைத் தேரும் நோக்குடன் காட்டிய இக்கடுமை, நாளடைவில் தனக்கே தேர் வாய் இருப்பதை ஜூலியா கண்டாள். அடிக்கடி தன்னையும் மீறித் தன் உள்ளம் அவன்பாற் செல்வதையும், தன் கண்கள் தன் கட்டையும் மீறி அவ னைக் காணக் கோடுவதையும் அவள் மறைக்க முடிய வில்லை. சில சமயம் அவன் ஓரிரண்டு நாழிகை வராதிருந்தால் அவனைத் தாமே சென்று காணவும் கால் கள் விரையும். ஆனால், அவன் எப்போதும் வலந்தைனுடன் இருந்தது கண்டு நாணித் திரும்புவாள். அவன் வலந்தைனுடன் தன்னைப்பற்றிக் கூறியது கேட்டு அவனுக்கு எழுதவும் அவள் உளங் கூசிற்று.

Shakespear23தன் தோழியின் வாயி லாக, வலந்தைன் மிலன் நகர் சென்றான் என்று கேட்டபின் அவள் சற்றுத் துணிந்து அவனி டம் தன் காதலைக் குறிப் பாய்க் காட்டி ஒரு கடி தம் வரைந்தாள். அப் போது அவன் உண்டிக்கு அலைந்தவன் ஒப் பற்ற அமுதம் பெற்றது போல மகிழ்ந்து அக்கடி தத்தை ஓவாது படிப்பபதும் மடிப்பதும் பின்னும் பிரிப்பதும் விரிப்பதுமாக காதற் கடிதங்கண்டு இருந்தான்.

தன்னை மறந்திருத்தல் புரோத்தியஸ் இங்ஙனம் தன்னை மறந்திருக்கும் நேரம், அவன் தந்தை அவனைக் காண வந்தான் அவனுடைய நண்பர்கள், புரோத்தியஸ் வேறு தொழி லொன்றிலும் ஈடுபடாமல் தேனீப்போல் ஜூலியா என்னும் மலரைச் சுற்றித் திரிவது கண்டு, அவன் என்றும் இப்படிச் சோம்பேறியாய் இருந்துவிடா மல் மேம்பாடு தரும் நல்ல தொழில் முறையில் ஈடுபட வேண்டும் என்று விரும்பி, அதனை அவனிடம் அடுத்தடுத்து அறிவித்து வந்தனர். தந்தையோ மைந் தனிடம் உள்ள பற்றுதலால் அவனை விட்டு அகல மனமில்லாதவனாய் இருந்தான். ஆனால், அவனிலும் இளைஞனான அவன் நண்பன் வலந்தைன் கூடத் தொழில் முறையை நாடித் தொலைவிடம் சென்றதைக் கேட்ட பின், அவனும் தன் மகனைத் தொலைநாடு அனுப்பத் தீர்மானித்தான். அதனைத் தெரிவிக்கவே அவன் இப்போது தன் மைந்தனிடம் வந்தது. மைந்தன் ஒரு கடிதம் வைத்துக்கொண்டிருப்பதைக் கண்டதே, அவன் அது நண்பனிடமிருந்து தான் வந்திருக்குமோ என்று எண்ணி, “அது யார் எழுதியது?” என்று கேட்டான்.

முதலில் புரோத்தியஸ் இக் கேள்வியைச் செவியுட் கொண்டவுடன் திடுக்கிட்டான். பின் காதலர் இயற் கைப்படி நொடியில் மனந்தேறி, சமயத்துக் கேற்ப அது தன் நண்பனிடமிருந்து வந்தது” என்றான்.

தந்தை அதனை நம்பி, “அவன் என்ன எழுதியிருக்கிறான்?” என்று கேட்டான்.

புரோத்தியஸ் சூதொன்றும் இன்றி வினை வாய்ப்பட்டு, “வேறொன்றுமில்லை; அவன் அங்கு மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும், நானும் அங்கே போனால் அவனைப்போல் நல்ல நிலையில் இருக்கலா மென்றும் எழுதியிருக்கிறான்” என்றான்.

புரோத்தியஸின் தந்தை அதனை முழுமையும் நம்பி, மறுநாளே வலந்தைனுக்கு எழுதினான். வலந்தைன் உண்மையில் புரோத்தியஸுக்குத் தொழில் பார்த்துக் கொடுப்பதாகச் சொல்லவில்லையாயினும், அவன் வரவேண்டு மென்று மிகுதியான விருப்பம் உடையவனாய் இருந்ததனால் நகர்த் தலைவனிடம் சென்று, இச்செய்தியைத் தெரிவித்தான். புரோத்தியஸின் குணமும் திறனும் பற்றி வலந்தைன் புகழ்ந்துரைப்பது கண்ட தலைவன் அவனுக்கு வலந்தைன் நிலைக்கு ஒப்பான பணி தருவதாக மறுமொழி அளித்தான். அதனையறிந்த புரோத்தியஸின் தந்தை புரோத்தியஸை அழைத்து, மறுநாளே நண்பனிருக்கும் நகருக்குப் போகுமாறு உத்தரவளித்தான்.

இங்ஙனம் சிறுபிழை யொன்றை மறைக்கப் புகுந்து பெருந்தொல்லைக் காளான புரோத்தியஸ் மிகவும் மனமுடைந்தான். ஆயினும் தந்தை சொல்லைத் தட்ட மனந்துணியாமல் ஜூலியாவினிடம் சென்று பிரியாவிடை பெற்று மிலனுக்குச் சென்றான். ஜூலியாவும் தன் பயிர்ப்பாகிய திரையைக் கிழித்து அவனிடம் தன் காதலின் வன் மையை முற்றிலுங் காட்டியதுடன் தானும் உடன் வரவேண்டு மென்று மன்றாடினாள். ஆயினும், தொழில் முயற்சியை நாடிச் செல்பவர்க்குப் பெண்டிர் தடை யெனக் கூறக்கேட்டு அவள் அமைந்து மனம் வருந்தி இருந்தாள்.

3.பொறாமைப் புழு

மிலனில் புரோத்தியஸ் வந்ததும் வலந்தைன், நெடுநாள் தாய்நாட்டை விட்டவன் அந்தாட்டவன் ஒரு வனது வரவு கண்டாற்போல எல்லையிலா மகிழ்ச்சி கொண்டான். மிலன் நகர்த் தலைவனிடம் அவன் புரோத்தியஸை அறிமுகம் செய்துவைத்து, தன் நாட்டில் எல்லாரையும் விட அறிவிலும் குணத்திலும் அவன் பெயர்பெற்றவன் என்று புகழ்ந்துரைத்தான். விரைவில் தலைவனும் வலந்தைனிடம் காட்டிய அதே பற்றும் அதே மதிப்பும் புரோத்தியஸினிடமும் காட்டலானான்.

ஆனால் வலந்தைன் மட்டும் இப்போது வெரோ ணாவிலிருந்த வலந்தைனா யில்லை.அவனிடம் இப்போது ஒரு பெரிய மாறுதல் ஏற்பட்டிருந்தது. பெண்களின் பெயரையும் எடுக்காத அவன், இன்று தலைவனின் புதல்வியாகிய சில்வியார் சீமாட்டி (Lady Silvia) யின் உளமார்ந்த நட்பைப் பெற்றான். தலைவன் வலந்தைனை மிகவும் நேசித்துப் பாராட்டி வந்தபோதிலும், தன் குடும்பத்திற்கு ஒத்த நிலை உடையவனாக அவனைக் கருதாதவன். ஆகவே அவர்கள் காதல், மறைவிலேயே வளர்ந்துவந்தது. தலைவன் அவளைத் தன் அரண்மனைப் பெருமக்களுள் ஒருவனான தூரியோ (Thurio) வுக்குக் சொடுக்க ஏற்பாடு செய்திருந்தான். ஸில்வியா தூரியோவை ஏறெடுத்தும் பாராமல் வலந்தைனையே தன் நெஞ்சுக் கிறைவனாகக் கொண்டு நாட்கழித்தாள்.

நண்பர் இருவரும் கலந் துறவாடுகையில் வலம் தைன் தன் வாழ்க்கையில் ஏற்பட்ட இப் புது மாறு தல்பற்றிப் புரோத்தியஸினிடம் கூறினான். தம்மிலும் எத்தனையோ உயர் நிலையுடைய கன்னிகையைத் தன் நண்பன் அடைந்தான் என்று கண்டதே, பொறாமை என்னும் புழு அவன் மனத்தகத்தே புகுந்து வேலை செய்யத் தொடங்கிற்று. அதன் பயனாக அவன் எப்படியாவது தன் நண்பனுக்குக் கிட்டிய காதலைப் பயன்பட வொட்டாமற் செய்து விட வேண்டும் என்று எண்ணங்கொண்டான்.

புரோத்தியஸின் படுமோசக் கருத்தை உணரா மல் வலந்தைன் தன் காதற் கதை முழுமையும் கூறிய தோடன்றி, தன் காதலி வகையில் தலைவன் செய்யும் ஏற்பாட்டையும், அதினின்றும் விலக எண்ணி அவளு டன் தான் இரவிற் புறப்பட்டோடச் செய்திருக்குந் திட்டத்தையுங் கூறினான். இதனைக் கேட்டதே புரோத்தியலின் வஞ்சநெஞ்சம், நண்பனது திட்டத் தைக் காட்டிக்கொடுத்து, அவன் நிலையையும் அவன் காதலியின் காதலையுங்கூடக் கவர எண்ணிற்று.

வலந்தைன் தன் காதலியுடன் வெளியேறக் குறித்த நாளன்று அதற்கான நூலேணி ஒன்றைச் சுருட்டி முன்னேற்பாடாகத் தன் உடையிற்கரந்து வைத்திருந்தான். தனது திட்டத்தைப்பற்றி விரி வான செய்திகள் கூறியபோது அவன் இந்நூலேணியையும் புரோத்தியஸுக்குக் காட்டினான். புரோத் தியஸ் நண்பன் என்ற முறையில் இத்தனையையும் அறிந்து கொண்டு, நகர்த் தலைவனிடம் சென்று எல்லா வற்றையும் தெளிவாகக் கூறிவிட்டான்.

4.கலங்கிய நீர்

அது கேட்ட நகர்த்தலைவன் அதன் உண்மையைத் தெளிவுப்படுத்த எண்ணி வலந்தைனிடம் சென்றான். சென்று விரைவாக எங்கோ செல்பவன் போல் பரபரப்புடன் நின்ற அவனிடம் “அன்ப, இவ்வளவு விரைந்து போகும் காரியம் யாது?” என்று கேட்டான்.

வலந்தைன், “வெரோணா செல்லும் தூதன் ஒரு வனிடம் அங்குள்ள நண்பர்களுக்குக் கடிதம் கொடுத் தனுப்பப் போகிறேன்” என்றான்.

தலைவன், “அவ்வளவுதானா? எனக்குக் கொஞ் சம் அரசியல் காரியங்களைப்பற்றி ஆராயவேண்டும்,” என்று கூறி அவனைத் தாக் காட்டினான். வலந்தைன் வெளிக்கு அமைதியாகப் பேசமுயன்றாலும், உள்ளே பொறுமையிழந்து குமுறுவதைக் குறிப்பாகக் கண்டு, காணாதது போல் அவனைப் பின்னும் நயமாக வாட்ட எண்ணினான். ஆதலால் தன் புதல்வியின் பேச்சை எடுத்து, அவள் தன் எண்ணப்படி தூரியோவை மணக்க விரும்பாததால், அவளுக்கு உடைமையில் லாமல் வெற்றுடம்புடன் யாரையேனும் மணக்கும்படி விடுவதாகவும், தான் இரண்டாவது மணம் செய்துகொள்ள விரும்புவதாகவும், அதுவகையில் வலந்தைன் உதவவேண்டும் என்றும் திறம்பட வினாவினான்.

அப்போது சூதறியாத வலந்தைன், “நான் அதில் எவ்வாறு உதவக்கூடும்,” என்றான்.

தலைவன், “ஏன், நண்ப, எம்போன்ற முதியவர் காதலியை வசப்படுத்தும் வகையறியாதவர் அன்றோ ? மேலும், காதலர் நடைமுறைகளும் காலத்துக்குக் காலம் மாறுபடுகின்றன. எனக்குப் பெண்களிடம் நடந்துகொள்ளும் முறையை அறிவிக்கலாகாதா?” என்றான்.

வலந்தைன் கபடின்றித் தலைவன் கேட்ட வகை யில் விரிவான நல்லுரைகள் தந்தான். தலைவன் அவள் நாணமுடையவள் எனவும், பகலில் பேச அஞ்சுகிறாள் எனவும் கூற, வலந்தைன் இரவு காண்பது நன்று என்றான்.

தலைவன், இரவு அவள் மாளிகை தாழிடப்பட்டுக் காவலுடையதாயிருக்குமே என்ன, வலந்தைன் தன் மனத்து நிறைந்த எண்ணமே மேலிட்டு உந்த நூலேணி ஒன்றின் உதவியால் பலகணி வழியாகச் சென்று காணலாம் என்றான்.

தலைவன், நூலேணியைப் பிறர் காணாமல் கொண்டு போவ தெங்ஙனம் என, வலந்தைன் என் னைப்போல் ஆடையுடுத்துக் கரந்து செல்க என்றான். இவ்வுரைக்கே காத்திருந்த தலைவன் அப்படியாயின் அவ்வாடையைப் பார்ப்போம் என இழுத்த அளவில், வலந்தைன் ஒளித்து வைத்திருந்த நூலேணி தென்பட்டது.

தென்படவே, தலைவன் தனது நடிப்பைத் துறந்து வெகுளியுடன், “நன்றி கெட்ட பதரே, உண்ட வீட்டுக் கிரண்டகமாக என் புதல்வியின் மனத்தையா கெடுக்க எண்ணினாய்?” என அவனை இழித்துப் பேசி அவமதித்து நகரினின்றும் துரத்திவிட்டான்.

வலந்தைனை இங்ஙனம் காட்டிக்கொடுத்துத் துரத்தியபின் புரோத்தியஸ் தலைவனுக்கு உண்மையுள்ள நண்பனானான். அதோடுநில்லாமல் ஸில்வியாச் சீமாட்டியையும் அண்டி, அவளைத் தன் வயப்படுத்த முயன்றான். ஆனால் அவளோ, வலந்தைனுக்கு உள்ளத்தைப் பறிகொடுத்ததுமன்றி, புரோத்தியஸின் இழிதகையான நன்றியின்மையை அறிந்தவளாதலால், அவனையும் மனமார வெறுத்து விலக்கினாள்.

5.காதல் துணிவு

புரோத்தியஸால் முதலில் காதலிக்கப்பட்ட ஜூலியா, நெடுநாள் அவனிடமிருந்து கடிதம் வரா தது கண்டு கவலை கொண்டாள். இறுதியில் அவனை எப்படியாவது கண்டுபிடிப்ப தென்று துணிந்து ஆணுருத் தாங்கி மிலன் நகர் வந்து சேர்ந்தாள்.

ஜூலியா மிலனில் பெரிய விடுதி ஒன்றில் தங்கி யிருந்தாள். தான் அங்கே அவ்வுருவுடன் வந்திருப் பதை அறிந்தால் புரோத்தியஸ் தன்னை ஏளனமாக நினைப்பான் என்று எண்ணி அவள் கவலை கொண்ட தால், அவள் முகம் நகை யிழந்திருந்தது. அவளை ஓர் இளஞ்செல்வனாகக் கொண்ட விடுதியாளன், அவளை மகிழ்விக்க எண்ணி, “ஐய, இன்று தாங்கள் நேரப் போக்கு விரும்புவதானால் நல்ல வாய்ப்பு ஒன்று உளது. தலைவன் புதல்வியுடன் ஒரு காதலன் வந்து இரவு பாடுவதுண்டாம். அதனை மறைவில் கண்டு மகிழலாம்,” என்றார்.

Shakespear24தலைவனுடைய அரண்மனையின் பக்கமே புரோத் தியஸையும் காணலாம் என்றெண்ணி ஜூலியா அதற் கிணங்கினாள். ஆனால், அங்கே யாரோ ஒரு காதலன் வருவான் என்றிருந்ததற்கு மாறாகத் தன் காதலனே வந்திருப்பது கண்டதும் அவள் நெஞ்சம் இடிவுற் றது. காதலன் எந்நிலை யுற்றானோ என்ற கவலைக்கு மாறாக, இப்போது அக்காதலனது காதலையே இழந்த நிலையில் அவள் வாழ்க்கையில் மிகவும் வெறுப்புக் கொண்டாள். ஆயினும் காதலனை அண்டியிருந்தே னும் உயிர்பொறுக்கலாம் என்று எண்ணி அவள், அவன் பணியாள் விலகும் சமயம் பார்த்துத் தானே பணியாளாய்ச் சென்று சேர்ந்தாள்.

இங்கும் ஜூலியாவுக்குப் புதியதோர் இக்கட்டுத் தோன்றியது. அவள் ஜூலியா என்று கனவிலுங் கருதாத புரோத்தியஸ் அவளையே சில்வியாவிடம் காதல் தூதாக அனுப்பினான்.

ஸில்வியா புரோத்தியஸின் காதலை மறுத்தபோது தான், ஜூலியாவிற்குச் சற்று அமைதி உண்டா யிற்று. அங்ஙனம் தனக்கு ஆறுதல் தந்த ஸில்வியாவினிடம் பற்றுக்கொண்டு, அவளிடம் புரோத்தியஸின் பழைய காதலைப்பற்றிப் படர்க்கைப் பான்மையில் ஜூலியா கூறினாள். ஸில்வியா அது கேட்டு அக் காதலுக்காளான ஜூலியாவினிடம் பரிவு கொண்டாள். தன் முன் நிற்கும் இளைஞனே அந்த ஜூலியா என்பதை அவள் அறிந்து கொள்ளவில்லை.

ஸில்வியாவின் நிலைமை இப்போது மிகவும் இடர்ப்பாடாயிற்று. ஒரு புறம் புரோத்தியஸின் தொந்தரவு; இன்னொருபுறம் தந்தை குறித்த மணநாள் நெருங்குகிறது. இரண்டிலிருந்து தப்ப எண்ணி எக்லாமர் (Eglamar) என்ற பணியாளுடன் இரவே வெளியேறி ஓடிவிட்டாள்.

6.தெளிவு

ஸில்வியா வெளியேறினாள் என்று கேட்ட புரோத்தியஸ் தானும் அவளைப் பின்பற்றினான். பணி யாளுருவில் ஜூலியாவும் உடன் சென்றாள். அவர்கள் அனைவரும் நகர்ப்புறத்துள்ள காட்டின் வழியே சென்று கொண்டிருந்தனர். அக்காட்டில் திருடர் மிகுதி. அத்திருடர் சில நாட்களுக்கு முன் நகரினின்று துரத்தப்பட்ட வலந்தைனைக் கைப்பற்றினர்.

புரோத்தியஸ் ஸில்வியாவைக் காத்தல். ஆனால் வலந்தைன் தன் நாத் திறத்தாலும் உயர் குணத்தாலும் வீரத்தாலும் அத்திருடராலும் போற் றப்பட்டு அவர்கள் தலைவனாய் இருந்துவந்தான்.

Shakespear25ஸில்வியா காட்டு வழியாகச் செல்கையில் வலந் தைன் கூட்டத்திலுள்ள திருடரில் ஒருவன் அவளைக் கைப்பற்றித் தன் தலைவனிடம் கொண்டு செல்ல முயன்றான். அப்போது புரோத்தியம் மாற்றுருக் கொண்ட ஜூலியாவும் அங்கே வந்தனர். புரோத்தியஸ் திருடனை வென்று ஸில்வியாவை மீட்டான். ஆயினும், அங்ஙனம் மீட்டதனை ஸில்வியா பாராட்ட முடியவில்லை. ஏனெனில், மீட்ட மறுநொடியே அவளை அவன் மீண்டும் தொந்தரவு செய்யலானான். அதனை உடனிருந்தும் தடுக்க இயலாத ஜூலியா மனமாழ்கி னாள். இத்தறுவாயில், வலந்தைன் அவ்விடம் வந்தான். ஸில்வியா அவனைக் கண்டதும் ஓடி அவனைக் கட்டிக்கொண்டு மகிழ்ந்தாள்.

வலந்தைன் புரோத்தியஸைப் பார்த்து, “அன்பனே, ஏன் உன் இயல்பு மாறி, இத்தகைய தகாத செயல்களில் இறங்கினாய்? உன் ஜூலியா இது கேட்டால் என்ன நினைப்பாள்?” என்றான்.

அப்போது ஜூலியா தன் ஆணுரு அகற்றி நின்று, “ஜூலியா இஃதனைத்தும் கேட்டதோடு மட்டுமன்றிக் கண்டுந்தான் நிற்கிறாள்,” என்றாள்.

நண்பனுக்கும் காதலிக்கும் தான் செய்த நன்றியற்ற செயல்களை எண்ணிப் புரோத்தியஸ் முகங் கவிழ்த்துத் தன்னை மன்னிக்கும்படி இருவரையும் வேண்டினான்.

வலந்தைன் நண்பன் துயர்கண்டு, கழிந்தன அனைத்தும் மறந்து அவனைத் தழுவினான்.

அவனும் தான் இடையில் கொண்ட நினைவெல்லாம் கனவெனக் கொண்டு, குணம் மாறிப் பழைய படி ஜூலியாவை ஏற்று மகிழ்ந்தான்.

– K.அப்பாதுரைப் பிள்ளை, சிறுவர்க்கான ஷேக்ஸ்பியர் கதைகள் (ஆறாம் புத்தகம்), முதற் பதிப்பு: ஜனவரி 1942, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *