தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 19, 2016
பார்வையிட்டோர்: 14,433 
 
 

பல நூற்றாண்டுகளுக்கு முன், விசித்திரபுரி நாட்டில் தாத்தா, பாட்டியோடு சுசித்திரசேனன் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு பெற்றோர் இல்லை. அவன் தாத்தா ஒரு கல்வெட்டும் தச்சர்; மிகுந்த ஏழை.

சுசித்திரசேனன் மிகுந்த நோஞ்சானாக இருப்பான். அவனால் எந்த கடினமான வேலையையும் செய்ய முடியாது. அவனைச் சிறுவர்கள் தங்கள் விளையாட்டில் கூட சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். அதனால், அவன் சிறுவர்களோடு விளையாடாமல் தாத்தாவோடு கல்வெட்டும் இடத்திற்குப் போவான்.

அங்கு போவதற்கு அவனுக்கு மிகவும் பிடிக்கும். அவன் தாத்தா பெரிய பெரிய கருங்கற்களை வெட்டும் போது சிதறும் சிறு சில்லுகளை வைத்து விளையாடுவான்.

வெண்ணைச் சிலைசில சமயம் களிமண்ணில் சிறு சிலை உருவங்களைச் செய்து பொழுது போக்குவான். அவனது ஆர்வத்தையும், திறமையும் பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைவார் தாத்தா.

‘இந்தப் பையன் ஒருநாள் பெரிய சிற்பியாகிவிடுவான் போலிருக்கிறதே!’ என்று ஆச்சரியப்படுவார். ஒவ்வொரு நாளும் மாலை வீட்டிற்குப் போனதும் அவன் பாட்டி, ‘இன்று நீ என்ன சிலை செய்தாய் இளம் சிற்பியே?’ என்று ஆவலோடு கேட்பாள்.

அவனை ஆசையோடு மடியில் அமர்த்தி பாட்டு பாடுவாள். கதைகள் பல கூறுவாள். பாட்டியோடு பேசிபேசி, அவன் பல புதிய வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்களைப் பற்றி தெரிந்து கொண்டான். அவன் தெரிந்து கொண்ட விஷயங்களைப் பற்றி, மறுநாள் அவன் கல்வெட்டும் இடத்திற்கு சென்றதும் களிமண்ணிலோ, கருங்கல்லிலோ சிற்பங்களை உருவாக்க முயலுவான்.
அவர்கள் வாழ்ந்த அந்த ஊரில் மிகச் செல்வந்தரான ஒரு ஜமீன்தார் வாழ்ந்து வந்தார். அவர் அடிக்கடி தன் மாளிகையில் பெரிய விருந்துகள் அளிப்பார். அதற்கு அவர் தன்னைப் போன்ற பணக்கார நண்பர்களை விருந்தினராக அழைப்பார். அப்போதெல்லாம் விசித்திரசேனனின் தாத்தா அந்த ஜமீன்தார் மாளிகையில் சமையல் செய்யப்போவார். அவர் கல்தச்சர் மட்டும் அல்ல; நல்ல சமையல்காரரும் கூட!

ஒருநாள்- –
அவர் ஜமீன்தார் வீட்டுக்குச் சென்றபோது, சுசித்திரசேனனும் அவரோடு சென்றான். சில பெரிய மனிதர்கள் மற்றும் அறிஞர்கள் அன்று ஜமீன்தார் வீட்டுக்கு வந்தனர். அங்குப் பெரிய விருந்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.

சுசித்திரசேனனுக்குச் சமையல் செய்யவும், உணவு பரிமாறவும் கூடிய வயது வரவில்லை. இருப்பினும் அவன் சும்மா இருக்காமல் பாத்திரங்களைக் கழுவிக் கொடுக்க முன்வந்தான். அந்த வேலையை அவன் விரைவாகவும், சுத்தமாகவும் செய்தபடி இருந்தான்.

எல்லா வேலைகளும் திட்டமிட்டபடியே மிகச் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. வரவேண்டிய விருந்தினர்கள் எல்லாருமே வந்து விட்டனர். உணவு பரிமாறும் நேரம் வந்தது.

அப்போது சாப்பிடும் அறையில் ஏதோ கீழே விழுந்து உடைந்தது போல் ஒரு பெரிய சத்தம் கேட்டது. சில்லுசில்லாகச் சிதறிப் போன சலவைக் கல் துண்டுகளோடு சமையலறைக்குள் ஓடிவந்தான் ஒருவன். அவன் பயத்தால் வெளுத்துப்போய் இருந்தான். உச்சி முதல் உள்ளங்கால்கள் வரை அவனுக்கு நடுங்கியது.

”ஐயோ நான் என்ன செய்வேன். சாப்பாட்டு மேஜைக்கு நடுவே வைத்து அலங்கரிக்கவேண்டிய சிலையை உடைத்து விட்டேனே! இந்தச் சிலை இல்லாமல் மேஜையை அலங்கரித்தால் நன்றாகவே இருக்காதே! இந்தச் சிலை உடைந்து விட்டது தெரிந்தால் ஜமீன்தார் என்ன சொல்வாரோ? எனக்கு என்ன தண்டனை கொடுப்பாரோ?” என்று வாய்விட்டு அழுதான்.

அதைப் பார்த்து மற்ற வேலைக்காரர்கள் அனைவரும் வாயடைத்துப் போயினர். இவ்வளவு செய்தும் இந்த விருந்து சிறப்பாக நடக்காமல் போய்விடுமோ என்று குழம்பினர்.

சாப்பாட்டு மேஜை மிக நன்றாக அலங்கரிக்கப்படாவிட்டால் ஜமீன்தார் கடுமையாகக் கோபப்படுவார். அவர் கோபத்திற்கு ஆளாவதை விட தலைமறைவாகி விடலாம். அப்படிப்பட்ட பொல்லாத மனிதர் அவர். வேலைக்காரர்கள் அனைவரும் கவலைப்படத் துவங்கினர்.

அவர்களைக் கவனமாக பார்த்துக் கொண்டிருந்த சுசித்திரசேனன், தான் கழுவிக்கொண்டிருந்த பாத்திரங்களை அப்படியே போட்டுவிட்டு அந்தச் சிலையை உடைத்த மனிதனிடம் சென்றான்.
”உங்களுக்கு இதுபோன்று இன்னொரு சிலை கிடைத்தால் சாப்பாட்டு மேஜையை அழகாக அலங்கரிக்க முடியுமா?” என்று கேட்டான்.

”சந்தேகம் இல்லாமல் முடியும். சிலை முன்னதைப்போல் அதே அகல நீளத்துடன் இருந்தால்… முடியும்!” என்றான்.

”ஐயா அப்படியானால் நான் இப்போதே ஒரு சிலை செய்யத் துவங்குகிறேன்,” என்றான்.
அந்த மனிதன் துக்கத்தோடு சிரித்தான்.

”ஒரு மணிநேர அவகாசத்தில் சிலை செய்ய நினைக்கும் நீ என்ன சிற்பியா?” என்று கிண்டலாகக் கேட்டான்.

”நான் சுசித்திரசேனன்,” என்றான் சிறுவன்.

”இந்தப் பையனால் என்ன செய்யமுடியுமோ அதை அவன் செய்யட்டுமே!” என்று மற்றவர்கள் அவனை ஊக்குவித்தனர்.

சமயலறை மேஜைமீது, ஒரு பெரிய மஞ்சள் நிறமான உருண்டையான வெண்ணெய் இருந்தது. கிட்டத்தட்ட இரண்டு கிலோ எடை இருந்தது. அது நேராகப் பால்பண்ணையிலிருந்து வந்த கெட்டியான புதிய வெண்ணை. கையில் ஒரு சாதாரண கத்தியோடு வேலையைத் துவக்கினான் சுசித்திரசேனன். வெண்ணையை சீவிச் செதுக்கினான். சிறிது நேரத்தில் மேஜை மீது பாயத் தயாராயிருந்த ஒரு சிங்கச் சிற்பம் உருவாகிக் கொண்டிருந்தது. வேலைக்காரர்கள் எல்லாரும் அவனைச் சுற்றி நின்றனர்.

”ஆஹா எவ்வளவு அழகு! இப்போது உடைந்து போன சிற்பத்தைக் காட்டிலும் இந்த வெண்ணெய்ச் சிற்பம் மிக அழகாக இருக்கிறதே!” என்று ஆச்சரியப்பட்டனர்.

மேஜையை அலங்கரிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்த மனிதனும், ”முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது மேஜை அலங்காரம் இந்த வெண்ணெய்ச் சிற்பத்தால் சிறப்பாகத் தோன்றப் போகிறது பாருங்கள்,” என்று சொல்லி சந்தோஷப்பட்டான்.

சாப்பாட்டு அறைக்கு ஜமீன்தாரும், அவர் நண்பர்களும் சாப்பிட வந்தபோது, அவர்கள் கண்களில் முதலில் பட்டது சாப்பாட்டு மேஜை மீது இருந்த மஞ்சள் நிற சிங்கம்தான்.

”ஆஹா எவ்வளவு அழகான சிற்பம். ஒரு தேர்ந்த சிற்பியால்தான் இப்படிப்பட்ட கலை நுணுக்கத்தோடு கூடிய சிற்பத்தைச் செதுக்கியிருக்க முடியும்! அதுவும் வெண்ணெயில் சிற்பம் செய்வது என்றால் எப்படிப்பட்ட ஆற்றலுள்ள கலைஞனாக அவன் இருக்க வேண்டும்?” என்று வியந்து பேசினர்.

அவர்கள் ஜமீன்தாரை, அந்தச் சிற்பத்தைச் செய்தவர் யார் என்று கேட்டுத் துளைத்து எடுத்து விட்டனர். அவரோ ஒன்றும் புரியாத வராக, ”உண்மையிலேயே சொல்கிறேன். இந்தச் சிற்பத்தைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது!” என்று சொன்னார்.

பிரதான வேலைக்காரனை அழைத்து, ”இப்படிப்பட்ட உயர்ந்த தரமான சிற்பம் உங்களுக்கு எங்கே கிடைத்தது?” என்று வினவினார்.

”ஐயா இப்போதுதான் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக நம் சமையலறையில் பாத்திரம் கழுவிக்கொண்டிருக்கும் ஒரு சிறுவனால் செதுக்கப்பட்டது!” என்றான்.

அவன் சொன்னபோது முதலில் அவனை நம்ப யாரும் தயாராக இல்லை. பின்பு உண்மை தெரிந்தவுடன் அவனை அனுப்பி அந்தப் பையனை அழைத்து வரச் சொன்னார் ஜமீன்தார்.
சிறுவன் சுசித்திரசேனன் வந்ததும், ஜமீன்தார் அவனை அன்போடு அருகில் அழைத்து, ”சிறுவனே! மிக அருமையாகச் சிற்பத்தை செதுக்கி இருக்கிறாய். உன் பெயர் என்ன? உனக்குச் சிலை செதுக்க கற்றுக்கொடுத்த ஆசிரியர் யார்?” என்று ஆர்வத்தோடு கேட்டார்.

”ஐயா என் பெயர் சுசித்திரசேனன். எனக்கு என் தாத்தாவைத் தவிர கருங்கல் வேலை செய்பவர்கள் யாரையுமே தெரியாது. என் தாத்தா ஒரு கல்வெட்டும் தொழிலாளி!” என்று பணிவோடு கூறினான்.
அதற்குள் ஜமீன்தாரின் நண்பர்கள் அவனைச் சுற்றி கூடிவிட்டனர். அவர்களில் சில தேர்ந்த சிற்பிகள் இருந்தனர். அவர்கள் சிறுவனின் அதிசயிக்கத்தக்க திறமையைப் பற்றி உடனே புரிந்துகொண்டனர். அவர்களுக்கு அந்தச் சிறுவனைப் பார்த்து ஏகப்பட்ட சந்தோஷம் உண்டாயிற்று.

அவனை வானளாவப் புகழ்ந்தனர். அவனைத் தங்களோடு அமரச் செய்து விருந்துண்ணவும், அந்த விருந்தை அவனைக் கொண்டாடுவதற்காக அர்ப்பணிக்கவும் ஆசைப்பட்டனர். ஜமீன்தாரும் அவர்கள் விருப்பத்திற்கு இணங்கினார்.

அதற்கு அடுத்த நாளே ஜமீன்தார் சுசித்திர சேனனை தன்னோடு வந்து தன் மாளிகை யிலேயே தங்கிக் கொள்ள அழைத்தார். அந்த நாட்டில் இருக்கும் மிகச் சிறந்த சிற்பிகள் அவனுக்குச் சிற்பக்கலையை மேலும் சிறப்பாகக் கற்பிக்க அழைக்கப்பட்டனர்.

அவன் அந்த ஒருமுறை தவிர அடுத்த முறை வெண்ணெய்ச் சிற்பம் செய்யவில்லை. அவன் அதற்கப்புறம் கருங்கற்களிலும், சலவைக் கற்களிலும் சிற்பங்கள் வடிக்கத் துவங்கினான். நாளடைவில் மிக இளம்வயதிலேயே உலகத்தரம் வாய்ந்த சிற்பியாக கருதப்பட்டு மிகவும் கொண்டாடப்பட்டான்.

எந்தச் சிறுவன் நோஞ்சான், எதுக்குமே லாயக்கில்லாதவன் என்று எல்லாரும் நினைத்து ஒதுக்கினார்களோ, அதே சிறுவன் தன் தாத்தாவிடம் கற்ற கலையைக் கொண்டு பெரிய பணக்காரன் ஆனான்.

குட்டீஸ்… நீங்க ஒருவேளை மற்றவர்களைப் போல உயரமாக, அழகாக இல்லாம இருக்கலாம். படிப்பு உங்களுக்கு வராம இருக்கலாம். ஆனால், உங்ககிட்ட ஏதாவது ஒரு திறமை இருக்கும். அந்தத் திறமை என்னவென்று கண்டுபிடித்து அதை வளர்த்துக்கோங்க. பின்னாளில் பெரிய அளவில் நீங்கள் முன்னேற முடியும்.

– ஆகஸ்ட் 2016

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *