வீரன் ஜெரான்ட்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 17, 2022
பார்வையிட்டோர்: 7,626 
 
 

முன்னொரு காலத்தில், “ஆர்தர்” என்ற ஒரு அரசன் இங்கிலாந்து தேசத்தில் ஆண்டு வந்தான். ஒரு நாள் அவனுடைய பிரஜைகளில் சிலர் அவனிடம் வந்து, “அரசே நேற்று எங்கள் ஊரின் பக்கத்திலிருக்கும் காட்டில் ஒரு விநோதமான மானைக் கண்டோம். பாலைப்போல் வெண்மையாய் இருந்தது அம்மிருகம். இப்படிப்பட்ட மானை நாங்கள் இதுவரை பார்த்ததே யில்லை. இது ஒரு அதிசயப் பிறவி-” என்று இன்னும் வர்ணித்துக் கொண்டே போனார்கள்.

அரசனுக்கு அப்பேர்ப்பட்ட மானை வேட்டையாட வேண்டுமென்ற விருப்பம் உண்டாயிற்று. அடுத்த நாள் காலையில் வேட்டைக்கு வேண்டிய சகல காரியங்களையும் தயார் பண்ணும்படியாகத் தமது பணியாட்களுக்குக் கட்டளையிட்டார். இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த இராணி “கனிபேர்” தானும் கூட வருவதாகச் சொன்னாள்.

காலையில், அரசனும் வேட்டைக்காரர்களும், தகுந்த வேட்டை நாய்களுடன் புறப்பட்டார்கள்! அரசி தூங்கிக் கொண்டிருந்தாள். ஆகையால் ஒருவரும் அவளை எழுப்பத் துணியவில்லை.

சற்று நேரங் கழித்து விழித்த இராணி, மற்றவர்கள் எல்லாம் தன்னை விட்டு விட்டுச் சென்று விட்டார்கள் என்று கேள்விப் பட்ட போது அதிகமாய் விசனப்பட்டாள். விரைவில், தக்க உடை உடுத்திக் கொண்டு ஒரு தாதிப் பெண்ணையும், “ஜெரான்ட்” என்ற ஒரு வீரனையும் கூட்டிக் கொண்டு காட்டை நோக்கிப் புறப்பட்டாள். ஆனால் அங்கு தனது புருஷனைக் காணவில்லை.

தூரத்தில் ஒரு குள்ளன் வருவதைக் கண்டார்கள். அவனுக்குப்பின் சற்றுத் தூரத்தில் ஓர் போர்வீரன் ஓர் அழகிய குதிரையின்மேல் சவாரி பண்ணிக்கொண்டு வந்தான். தனக்குத் தெரியாத போர்வீரன் அங்கு யார் இருக்க முடியும் என்று ஆச் சரியப்பட்ட இராணி தனது தாதியைப் பார்த்து, “அந்தக் குள்ளனிடத்தில் போய், பின்னால் வரும் போர்வீரன் யார் என்பதை அறிந்து வா” என்று சொன்னாள்.

தாதி அக்குள்ளனிடம் சென்று மிகவும் வணக்கமாக, “இதோ பின்னால் வரும் உங்கள் எஜமான் யார்? அவருடைய பெயர், ஊர் இவை யாவை”? என்று வினவினாள். அக்குள்ளனோ, “இவையெல்லாம் உன் எஜமானிக்கு எதற்கு? நீ உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ” என்று மிகவும் கர்வமாகப் பதிலளித்தான்.

அப்படியானால் “இதோ நேராக உன் எஜமானிடத்தில் கேட்டுத் தெரிந்து கொள்ளுகிறேன்” என்று சொல்லித் தாதி அவனைக் கடந்து போக முயன்றாள். “அவரை நீ நேராகக் கேட்பதற்கு உனக்கு அந்தஸ்து போதாது, வந்த வழியே போ” என்று சொல்லிக் கொண்டே தனது சவுக்கினால் அவளுக்கு ஒரு அடி கொடுத்தான் குள்ளன்.

இரத்தம் பீறிட்டது. தாதி அழுது கொண்டே வந்து இராணியிடம் முறையிட்டாள்.

ஜெரான்ட், “நான் போய் அந்தப் போர் வீரனைப் பற்றி விசாரித்து வருகிறேன்” என்றான். அந்தக் குள்ளனோ அவனையும் அவமதித்தான். ஜெரான்டுக்கு அடக்க முடியாத கோபம் பொங்கி எழும்பிற்று. அந்தக் காலத்தின் வழக்கத்தின் படியே அவனைத் தனிப் போரில் வென்று சரியான புத்தி புகட்ட வேண்டும் என்று நினைத்தான். ஆனால் அவன் கையில் அவனுக்கு வேண்டிய ஆயுதங்கள் இல்லை. எனவே, குள்ளனையும், அப் போர்வீரனையும் பின் தொடர்ந்தான் ஜெரான்ட்.

வெகு நேரத்திற்குப்பின் அவ்விருவரும் ஒரு பட்டணத்திற்குள் பிரவேசித்தார்கள். வீதிகள் எல்லாம் அலங்கரிக்கப் பட்டிருந்தன. ஜனங்கள், ஈட்டிகளையும், கேடயங்களையும் தேய்த்துப் பளபளப்பாக்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து அங்கு ஏதோ போட்டி நடக்கப் போவதாக அறிந்து கொண்டான் ஜெரான்ட்.

கடந்த இரண்டு வருஷங்களாக அப்பட்டணத்தில் நடந்த போட்டியில், அந்தக் குள்ளனுடன் இருந்த போர் வீரன் தான் வெற்றி பெற்றிருந்தான். ஆகையால் அவன் தனக்கு நிகர் யாரும் இல்லை என்று மார்தட்டிக் கொண்டிருந்தான். கர்வங் கொண்ட அவனும் அந்தக் குள்ளனும், இராணியையும் அவள் அனுப்பிய ஆட்களையும் அவமதித்தது விளங்குகிறதல்லவா?

ஜெரான்ட் அவனைப் போட்டியில் வெல்ல வேண்டுமானால், கையில் ஆயுதம் வேண்டுமே! யார் கொடுப்பார்கள்?

கடைசியில் ஜெரான்ட் பட்டணத்திற்கு அப்பால் இரண்டு மைல் தூரத்திலுள்ள ஒரு இடிந்த கோட்டையை அடைந்தான். அங்கு ஒரு வயோதிகனும், ஒரு கிழவியும், ஒரு அழகிய பெண்ணுமே இருந்தார்கள்.
முன் காலத்தில் அந்த வயோதிகனே அப்பட்டணத்தை ஆண்டு வந்தான். ஆனால் தங்கை மகன் அதை அபகரித்துக் கொண்டதால் அவன் இந்த ஏழைக் கோலம் புக நேரிட்டது. இவர்களிடமிருந்தே, ஜெரான்ட் தனக்கு வேண்டிய ஈட்டியையும் கேடயத்தையும் வாங்கிக் கொண்டான்.

அடுத்த நாள் போட்டியில் ஜெரான்டும், போட்டியில் கலந்து கொண்டு, அந்தக் கர்வம் நிறைந்த போர் வீரனை எதிர்த்து சண்டை செய்ய வேண்டியதாயிற்று.

போர் வெகு மும்முரமாக நடந்தது. இருவர் கையிலிருந்த ஈட்டியும் சின்னாபின்னமாகப் பறந்தன. பின்பு குதிரையிலிருந்து இறங்கி கைவாளை உபயோகித்துச் சண்டை செய்தார்கள். ஜெரான்டின் பராக்கிரமம் அன்றுதான் வெளிப்பட்டது. அவனுடைய சாமர்த்தியத்தைக் கண்டு சகலரும் வியந்தார்கள். அடி தாங்க மாட்டாமல் அந்தப் போர் வீரன் அப்படியே விழுந்தான். அழமாட்டாத குறையாய், “என்னை மன்னிக்க வேண்டும்” என்று கெஞ்சினான்.

அப்போது ஜெரான்ட் அவனைப் பார்த்து “உன் கர்வத்தை அடக்க வேண்டு மென்றே நான் இதைச் செய்தேன். என்னிடத்தில் மன்னிப்புக் கேட்பதால் பிரயோஜனம் இல்லை. நீ எங்களுடைய அரசியை அவமதித்து விட்டாய். ஆகையால் அவர்களிடத்திலேயே நீ மன்னிப்புக் கோரவேண்டும்” என்று சொன்னான். அப்போர் வீரன் மிகவும் பணிவுடன் அப்படியே செய்வதாக ஒப்புக் கொண்டான்.

இது நிற்க, மான் வேட்டையும் வெற்றி கரமாகத்தான் முடிந்தது. மான் கொல்லப்பட்டது. அதன் தலையை யாருக்கு வெற்றியின் அறிகுறியாகக் கொடுப்பதென்று தெரியாமல் தர்க்கித்துக் கொண்டிருந்தார்கள்.

அச்சமயத்தில் தான் ஜெரான்டும் அப்போர் வீரனும் அங்கு வந்து சேர்ந்தார்கள். போர் வீரன் தன் குதிரையினின்றும், இறங்கித் தாழ்மையுடன் இராணியிடம் சென்று தான் அவளை அவமதித்ததற்காக மன்னிப்கேட்டான். அவளும் மிகவும் பெருந்தன்மையாய் அவனை மனப்பூர்வமாக மன்னித்தாள்.

ஜெரான்ட் தான் செய்த எல்லாக் காரியங்களையும், ஒன்று விடாமல், விவரமாக எடுத்துச் சொன்ன போது அங்குள்ள யாவருடைய மெச்சுதலுக்கும், புகழுதலுக்கும் உரியவனானான். மானின் தலை யாருக்குச் சேர வேண்டுமென்ற விஷயமும் முடிவுக்கு வந்தது. எல்லோரும் ஏகோபித்து ஜெரான்டுக்கே அதைக் கொடுத்தார்கள்.

கேள்விகள்
1. காட்டில் பார்த்த மானின் விசேஷம் என்ன?
2. குள்ளன் இராணியை நேரில் அவமதித்தானா?
3. போர்வீரன் எப்படி இராணியை அவமதித்தான் என்று சொல்லலாம்.
4. ஜெரான்டுக்கு ஆயுதங்கள் எங்கே, எப்படிக் கிடைத்தன?
5. ஜெரான்டுக்கும், போர்வீரனுக்கும் நடந்த சண்டையை விவரி.
6. போர்வீரனின் கர்வம் எப்படி அடங்கிற்று?
7. மானின் தலையை ஏன் ஜெரான்டுக்குக் கொடுத்தார்கள்?

– சிறுவர்க்கேற்ற சிறுகதைகள், முதற்பதிப்பு – நவம்பர் 1949, தென்னிந்தியப் பதிப்புக் கழகம், சென்னை – 24

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *