தலை நகரில் ஒரு பெரிய பந்தய ஓட்டம் நடந்தது. மேடையின் மேல் அரசன் வீற் றிருந்தான். ஒரு வாலிபனும், ஒரு இளம் பெண்ணும் ஆயத்தமாய் நின்று கொண்டிருந்தார்கள். பக்கத்தில் பந்தய உத்தியோகஸ்தர்கள் எக்காளத்துடன் நின்றார்கள்.
வாலிபன் மெலிந்திருந்தான். அவன் தலை மயிர் சுருண்டு அவனுக்கொரு தனியழகைக் கொடுத்தது. கால்களும் கைகளும் கடைந்து வைத்த சந்தனக் கட்டைகள் போலிருந்தன. முகத்தில் ஜெயம் பெற வேண்டுமென்ற ஒரு உறுதி காணப்பட்டது. பெண்ணின் உடை வெகு அலங்காரமாயிருந்தது. அவளுடைய வதனத்தில் உடனே வெற்றி கிடைத்து விட்டது போன்ற மகிழ்ச்சிக் குறி காணப்பட்டது. கூடிவந்திருந்த ஆயிரக் கணக்கான ஜனங்கள் இவர்கள் இருவரையும் இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அச்சமயத்தில்தான் அந்நிய நாட்டி லிருந்து தற்செயலாய் ஒரு வாலிபன் அங்கு வந்து சேர்ந்தான். நடக்கப்போகும் பந்தயத்தைப் பற்றி அவனுக்கு ஒன்றும் தெரியாது. பக்கத்திலிருந்த வயோதிகன் மிலானியன் என்ற அவ்வாலிபனுக்கு அப்பெண்ணைப் பற்றிய எல்லா விவரங்களையும் கீழ்க் கண்டவாறு சொன்னான்.
“அட்லாண்டா என்ற அப்பெண் அவ்வூர் அரசனின் குமாரத்தி. அவள் பிறந்தபோது அரசனுக்கு அவள் மேல் கொஞ்சமும் விருப்பம் இல்லை. காட் டிலே கொண்டுபோய் அக்குழந்தையை விட்டுவிடும்படி கட்டளை யிட்டான். அங் கிருந்த ஒரு கரடி அதை எடுத்துக் கொண்டு போய் தன் குட்டிகளுடன் சேர்த்து வளர்த்து வந்தது. குழந்தையும் வளர்ந்து சிறுமியானாள். ஒரு நாள் வேடுவர் இதைக் கண்டு கரடியைக் கொன்று அப்பெண்ணை அரசனிடத்திற்குக் கொண்டு வந்து சேர்த்தார்கள். அரசன் உடனே அவளை அடையாளம் கண்டு கொண்டான். என்ன செய்வது! வேண்டா வெறுப்புடன் அவளை வளர்த்து வந்தான். காலில் இறக்கையிருக் குமோ என்னமோ தெரியவில்லை. ஓட்டத்தில் இவளுக்கு நிகர் இவளே! தன்னை ஜெயிக்க முடியாதவர்களை, இவளுடைய விருப்பத்தின்படியே அரசன் கொன்று வந்தான். எத்தனை வாலிபர்கள் இப்படிச் செத்துப் போயிருக்கிறார்கள் தெரியுமா?” என்று ஒரு பெரு மூச்சுடன் கதையை முடித்தான் அக்கிழவன்.
இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதே மிலானியனின் முகம் வேறுபட்டது.
அவ்வயோதிகன் அவனைப் பார்த்து, “என்ன அப்பா, நீயும் அவளுடன் போட்டியிடபோட்டியிட விரும்புகிறாயா? அதை விரும்பாதே! அவளுடன் போட்டியிட்ட எவரும் ஜெயித்ததில்லை என்பது உன் மனதில் ஞாபகம் இருக்கட்டும்” என்று எச்சரித் தான். ஆனால் மிலானியனோ அவ்வார்த்தைகளுக்குச் செவி கொடுக்கவில்லை.
எக்காளம் ஊதப்பட்டது. முதலில் சொல்லப்பட்ட வாலிபனும் அட்லாண்டாவும் தாவிப் பாய்ந்து ஓட ஆரம்பித்தார்கள். ஜனங்கள் மௌனமாய் இருவரையும் கவனித்தார்கள். அவ்வாலிபன் தான் அதிவேகமாக ஓடினான்; அவளை முந்தினான்! வேடிக்கைப் பார்க்க வந்தவர்களின் இருதயம் ஒரு வித சந்தோஷத்தினால் நிரம்பினது. ஆனால் அடுத்த நிமிஷத்தில் அவள் அவனுடன் வந்து சேர்ந்து, கடைசியில் முந்திவிட்டாள்!
தோற்றுப் போனவன் ஜனங்கள் கண் முன் கத்திமுனைக்கு இரையாக்கப்பட்டான்.
அடுத்த நாளும் பந்தயம் நடந்தது. இந்தத் தடவை மிலானியன் நேராக அரசனிடம் சென்று தான் யாரென்று விளம்பரப்படுத்திக் கொண்டான்.
அவன் யார் தெரியுமா? அவன் தான் பக்கத்து நாட்டு அரசனின் குமாரன். வேட்டைக்காக காட்டுக்குச் சென்றக் கால், வழி தப்பித் தற்செயலாய் அங்குவர நேரிட்டது.
மிலானியன் தான் அடுத்த நாள் பந்தயத்தில் ஈடுபட விரும்புவதாக அரசனிடம் அறிவித்தான்.
அரசனோ அவனைப் பார்த்து, “அரசிளங் குமாரனே! உனக்கு இது தகாது. துர்ப்பாக்கியமுள்ள என் மகளுடைய வலையில் நீ சிக்கிக் கொள்வதைப் பார்க்க நான் சகியேன். விரும்பின் என் இராஜ்யத்திலுள்ள அழகிய பெண் ஒருத்தியை நீ விவாகம் பண்ணிக் கொண்டு சுகவாழ்வு நடத்தலாம் ……… என்றாலும் கடலோரத்தில் வீற்றிருக்கும் தேவதையை நீதரிசனம் செய். அவளுடைய கருணை உனக்குக் கிட்டுமானால் ஒருவேளை அதிர்ஷ்டம் உன்னைச் சேரலாம்” என்றான்.
அன்று மாலை மிலானியன் கடற்கரைக்குச் சென்றான். அங்கிருந்த அழகிய கோவிலுக்குள் வீற்றிருந்த தேவதையின் சிலை கண்ணைக் கவரும்படியாக இருந்தது. சாஷ்டாங்கமாய் விழுந்து தனது குறையை விண்ணப்பித்தான். “உமது உதவியை நாடியே நான் இங்கு வந்திருக்கிறேன். அடியேனைத் தள்ளி விடாதேயும். நாளைக்கு நடக்கும் பந்தய ஓட்டத்தில் இராஜகுமாரத்தியை வெல்லும்படியான சக்தியை எனக்கு நீர் கொடுக்க வேண்டும். இதையே நான் விரும்புகிறேன். உம்முடைய கருணை எனக்கிருந்தால், வெற்றியடைந்தவுடன் நானும் அவளுமாக ஒன்று சேர்ந்து வந்து உமது திருவடியில் வணங்குவோம்” என்றான்.
சூரியனைக் காட்டிலும் அதிகப் பிரகாசமான ஒரு ஒளி வானத்தில் தோன்றிற்று. சமுத்திரத்தின் அலைகள் எல்லாம் அதன் வெளிச்சத்தைப் பெற்றுப் பிரகாசித்தன. தேவதையின் கோவிலருகில் அவ்வெளிச்சம் வந்தபோது மன ரம்மியமான ஒரு வாசனை எங்கும் பரவிற்று. வாலிபன் ஆனந்தக் கண் ணீர் சொரிந்தான். பேரானந்தம் அடைந்து தரையிலே விழுந்தான் அவன்.
மறுபடியும் கண்ணைத் திறந்தபோது, அவ்வழகிய விக்கிரகம் உயிர் பெற்றுப் பிர காசிப்பதைக் கண்டான். உதடுகள் அசைந்தன. என்ன வார்த்தைகள் வெளிவருமோ வென்று ஏக்கமுடன் கண்ணோக்கினான் மிலானியன்.
“மிலானியனே! ஏன் நீ பயப்படுகிறாய்? என்னை நம்புகிறவர்களை நான் ஒரு போதும் புறக்கணிப்பதில்லை. உனக்கு ஒரு யுக்தி சொல்லித் தருகிறேன் கவனமாய்க் கேள். என் பாதத்தருகே மூன்று தங்கப் பழங்கள் இருக்கின்றன. தேவலோகத்துப் பொன்னால் செய்யப்பட்டவை. ஆகையால் அவற்றிற்கு ஒரு மந்திர சக்தி உண்டு. கண்டவர் எவரும் அதை எடுத்துப் பரிசித்து, தங்கள் வசம் வைத்துக் கொள்ள விரும்புவர். விவேகமுள்ள உனக்கு அதிகம் சொல்லத் தேவை யில்லை. இப்பழங்களை எடுத்துக் கொண்டு சம யோசிதமாக உபயோகி” என்று சொன்னாள்.
நன்றி செலுத்தும்படியாக மிலானியன் கண்களை ஏறெடுத்தான். அசையா சிலையே முன் நின்றது. கீழே பார்த்தான். மூன்று தங்கப் பழங்கள் இருந்தன. அவற்றை எடுத்துக் கொண்டு தனது இருப்பிடம் திரும்பினான்.
அடுத்த நாள் நடந்த பந்தய ஓட்டத்தில் அரச குமாரத்தியின் பக்கத்தில் மிலானியன் நின்றான். முகத்தில் வெற்றிக் குறி காணப்பட்டது. ஜெயவீரனாகத் தோற்றமளித்தான். எக்காளம் ஊதப்பட்டது. இருவரும் அதி வேகமாகப் புறப்பட்டார்கள். அட்லாண்டா மிலானியனை முந்தி விட்டாள். ஜனங்கள் இருதயத்தில் சொல்லவொணாத் திகில் குடி கொண்டது. “ஐயோ! இந்த அழகிய வாலிபனும் வாளுக்கிரையாகப் போகிறானே” என்று சிலர் அழ ஆரம்பித்தனர்.
மிலானியனோ மடியில் கையை விட்டு ஒரு தங்கப் பழத்தை எடுத்து அதை மெதுவாக அப்பெண்ணின் முன் நழுவ விட்டான்.
அவளுடைய கூரிய கண்களுக்கு அப்பழம் தப்பவில்லை. அதைக் கையில் ஏந்த வேண்டுமென்று அடக்க முடியாத ஒரு ஆசை அவளை ஆட்கொண்டது. ஒடுகிற ஒட்டத்தில் குனிந்து அப்பழத்தை எடுத்துக் கொண்டாள். இது ஒரு க்ஷணப் பொழுதேயானாலும் மிலானியனுக்கு அதிக லாபகரமாயிருந்தது. முன்னையைவிட கொஞ்சம் அதிகமாக நெருங்கினான். இதே மாதிரியாக இரண்டாவது மூன்றாவது தங்கப் பழங்களையும் கீழே நழுவ விட்டான். அட்லாண்டா அவைகளைப் பொறுக்கும் நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு, வாயுவேகமாய்ப் பாய்ந்தான் மிலானியன்.
கடைசியில் அவனே வெற்றி பெற்றான்!
ஜனங்களுக்குண்டான குதூகலத்திற்கு அளவில்லை. அதிகமாக ஆர்ப்பாட்டம் செய்தார்கள். எல்லோரைக் காட்டிலும் அரசனே அதிகமாக சந்தோஷப்பட்டான்.
அடுத்த நாள் காலையில், கடலோரத்திலிருந்த தேவதையின் சிலையின் முன் இருவர் சாஷ்டாங்கமாய் விழுந்து நமஸ்கரித்தார்கள். அவர்கள் வேறு யாருமில்லை; அட்லாண்டாவும், மிலானியனும் தான்!
கேள்விகள்
1. அட்லாண்டாவின் பாலிய சரித்திரத்தைக் கூறுக,
2. முதல் பந்தயத்தின் முடிவு என்ன?
3. அரசன் மிலானியனுக்குப் பந்தயத்தில் வெற்றிபெற என்ன யுக்தி சொல்லிக் கொடுத்தான்?
4. கடற்கரைக் கோவில் தேவதையைப் பற்றியும் அவள் மிலானியனுக்கு என்ன கொடுத்தாள் என்பதைப் பற்றியும் விவரி.
5. அட்லாண்டா ஏன் தோற்றாள்?
– சிறுவர்க்கேற்ற சிறுகதைகள், முதற்பதிப்பு – நவம்பர் 1949, தென்னிந்தியப் பதிப்புக் கழகம், சென்னை – 24