(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திருக்குறள் கதைகள்
வந்த புதியவரைப் பாதுகாத்தல்
திருவெண்ணை நல்லூரில் வாழ்ந்த சடையப்ப வள்ளல், காலை முதல் மாலை வரை வரும் விருந்தினரை உபசரித்து அவர்களை அனுப்பி மேலும் விருந்து வருவார்களா! என்று ஆவலுடன் எதிர்பார்த்து, வரும் விருந்தினரையும் உபசரித்து அனுப்புவார். ஒருநாள் நேரங்கழித்துக் கம்பர் வந்தார். வந்தவரை அன்புடன் அழைத்து அறுசுவை உண்டி கொடுத் துப் பசியைப் போக்கினார். பசி நீங்கிய புலவர், “வேளை தவறிய நேரத்தில் நம் உயிரைப்போக்கும் பசிக்கு அமுதம்போல் அறுசுவை உணவை அளித்து எமக்கு உயிரை அளித்த இவரே தேவர்; இவரே தெய்வம்” என்று மனமாரப் புகழ்ந்தார். பின் தாம்பாடிய இராமாயணத்தில் “சடையப்ப வள்ளலின் முன்னோர்கள் முடிசெய்து கொடுக்க, அதை வசிட்டமுனிவர் வாங்கி, தேவாதி தேவனான இராமன் தலையில் வைத்தார்கள்” என்று இவ் வள்ளலை மண்ணுலகத்தில் வாழும் தேவராக ஆக்கி, இவர் முன்னோர்களை விண்ணுலகில் வாழும் தேவர் களுக்கு நல்ல விருந்தாகச் சென்றவர்களாகவும் புகழ்ந்துள்ளார். இவ்விதம் வந்த விருந்தினரை உபசரித்து வரும் விருந்தினரை ஆவலோடு எதிர் பார்த்து இருப்பவன் வானில் உள்ள தேவர்க்கு நல்ல விருந்தாவான் என்று வள்ளுவரும் கூறியுள்ளார்.
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.
செல்விருந்து = (தன்னிடம்) வந்த விருந்தினரை
ஓம்பி = உபசரித்து
வருவிருந்து = (பின்) வரக்கூடிய விருந்தினரை
பார்த்திருப்பான் = (ஆவலுடன்) எதிர் நோக்கி இருப்பவன்
வானத்தவர்க்கு = விண்ணுலகில் உள்ள தேவர்க்கு
நல்விருந்து = (அன்புடன் எதிர்கொள்ளத் தக்க) சிறந்த விருந்தினன் ஆவான்.
கருத்து: வந்த விருந்தையும், வரும் விருந்தையும் பாதுகாப்பவன் தேவர்களால் சிறப்புச் செய்யப்பெறு வான்.
கேள்வி: வானத்தவர்க்கு நல்விருந்தாகச் செல்பவர் எவர்?
– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.