ஓர் ஊரில் பெரிய பண்ணையார் ஒருவர் இருந்தார். அந்த ஊரில் இருந்த பெரும்பாலான நிலங்கள் அவருக்குத் தான் சொந்தம். அவர் கொடுர மனம் படைத்தவர், யாருக்கும் உதவி செய்ய மாட்டார், பணம், பணம் என்று பேராசையில் வாழ்பவர்.
அவரிடம் நல்லதம்பி என்ற உழவர் வேலை பார்த்து வந்தார். அவருக்குக் குடிசை ஒன்றும் சிறிதளவு நிலமும் இருந்தன.
பண்ணையாரிடம் வந்த அவர், ” ஐயா! எல்லா நிலத்திலும் உழுது விதை நட்டு விட்டார்கள். என் நிலம் மட்டும் தான் வெறுமனே உள்ளது. நீங்கள் சிறிது தானியம் தாருங்கள். என் நிலத்திலும் விதைத்து விடுகிறேன், அது வளர்ந்து அறுவடை செய்ததும், உங்களுக்குரிய பணத்தை கொடுத்து விடுகிறேன், மீதி என் பிள்ளைகள் படிப்பிற்கு உதவியாக இருக்கும் ” என்றார்.
” என் நிலத்திலேயே உழுது பயிரிடு. சொந்தமாகப் பயிரிட வேண்டாம். பண்ணையாராகும் ஆசையை விட்டு விடு. கூலியாளாகவே இரு, உன் பிள்ளைகள் ஒன்றும் படிக்க வேண்டாம், அவர்களும் இங்கேயே வேலைக்கு வரச் சொல். அரை வயிற்றுக் கஞ்சியாவது கிடைக்கும்” என்று கோபத்துடன் சொன்னார் அவர்.
சோகத்துடன் வீடு திரும்பினார் அவர். தன் மனைவியிடம், ” நாம் வளம் பெறுவது பண்ணையாருக்குப் பிடிக்கவிலலை. தானியம் தர மறுத்து விட்டார். நீயும் நம் குழந்தைகளும் எப்போதும் போலப் பட்டினி கிடக்க வேண்டியதுதான், நம் பிள்ளைகள் கூட படிக்க முடியாது போலிருக்குது. இதுதான் நம் தலைவிதி” என்று வருத்தத்துடன் கூறினார்.
அவர்கள் குடிசையில் குருவி ஒன்று ஏற்கனவே கூடு கட்டி இருந்தது, அந்த குருவிக்கு தினமும் கொஞ்சம் தானியங்கள் உழவரின் மனைவியும், குழந்தைகளும் கொடுப்பார்கள்.
சின்னஞ்சிறு குடிசையில் குருவிக்கும் தங்க இடம் கொடுத்து மகிழ்ந்தார்கள், கூட்டில் அந்தக் குருவி நான்கு முட்டைகள் இட்டது. நான்கும் குஞ்சுகளாயின.
அந்த குஞ்சுகளின் சப்தம் இனிமையாக இருந்தது, தினமும் குருவியானது வெளியே சென்று பூச்சிகளை பிடித்து கொண்டு வந்து குஞ்சுகளுக்கு கொடுக்கும், ஒரு நாள் சரியான புயல், மழை பெய்தது, வெளியே சென்ற குருவி வீட்டிற்கு வரவே இல்லை.
பாவம் குஞ்சுகள் பசியால் கத்தியது, அதைக் கண்ட உழவரும், குழந்தைகளும் தங்களுடைய உணவில் கொஞ்சம் கொடுத்தது, குஞ்சுகளின் பசியைப் போக்கினார்கள்.
திடீரென்று அந்தக் குருவிக் கூட்டுக்குள் ஒரு பாம்பு நுழைந்தது. குருவிக் குஞ்சுகளைப் பிடித்துச் சாப்பிடச் சென்றது, உடனே அங்கு வந்த உழவர் பாம்பை அடித்துக் கொன்றார். கொஞ்ச நேரத்தில் தாய் குருவி வீட்டிற்கு வந்தது, குஞ்சுகள் சொன்னதைக் கேட்டது, தாய்க்குருவி ஆனந்தக் கண்ணீர் விட்டது.
அடுத்த சில நாட்களில் உழவரும் குடும்பத்தினரும் வறுமையில் வாடினார்கள். குஞ்சுகள் வளர்ந்ததும், தாய் குருவியும், குஞ்சுகளும் உழவர் மற்றும் குடும்பத்தினரிடம் நன்றி கூறி வானில் பறந்து போயின.
சில நாட்களில் உழவரின் வீட்டில் சாப்பிடவே தானியங்கள் இல்லை என்ற நிலை ஏற்ப்பட்டது, “இப்படியே அரை வயிறு சாப்பிட்டு எவ்வளவு காலம் வாழ்வது? நமக்கு விடிவே கிடையாதா?” என்றாள் மனைவி.
அப்பொழுது அவர்கள் வீட்டுக் கதவை யாரோ தட்டும் ஓசை கேட்டது. கதவை திறந்தார் உழவர். அங்கே அவர்கள் வீட்டில் கூடு கட்டிய தாய் குருவி இருந்தது. அதன் வாயில் ஒரு விதை இருந்தது. அதை அவர் கையில் வைத்தது. ” இதை உங்கள் வீட்டுத் தோட்டத்தில் நடுங்கள். சிறிது நேரத்தில் வருகிறேன்” என்று சொல்லிவிட்டுப் பறந்தது அது.
மீண்டும் வந்தது அது. இன்னொரு விதையைத் தந்தது. ” இதை உங்கள் வீட்டின் முன்புறத்தில் நடு” என்று சொல்லிவிட்டுப் பறந்தது.
மூன்றாம் முறையாக வந்த அது இன்னொரு விதையைத் தந்தது ” இதை சன்னல் ஓரம் நடுங்கள். எங்கள் மீது காட்டிய அன்பிற்கு நன்றி” என்று சொல்லிவிட்டுப் பறந்தது.
குருவி சொன்னபடியே மூன்று விதைகளையும் நல்லதம்பி நட்டார் .
மறுநாள் காலையில் அங்கே மூன்று பெரிய பூசனிக் காய்கள் காய்த்து இருந்தன. இதைப் பார்த்து வியப்பு அடைந்தார்.
தோட்டத்தில் இருந்த பூசனிக் காயை வீட்டிற்குள் கொண்டு வந்தார். அதை இரண்டு துண்டாக வெட்டினார் நல்லதம்பி.
என்ன வியப்பு! அதனுள் இருந்து விதவிதமான உணவுப் பொருள்கள் வந்தன. சுவையான அவற்றை எல்லோரும் மகிழ்ச்சியாக உண்டனர். மீண்டும் அந்தப் பூசனிக் காயை ஒன்று சேர்த்தனர். பழையபடி அது முழுப் பூசனிக் காய் ஆனது.
மகிழ்ச்சி அடைந்த அவர், ” இது மந்திரப் பூசனிக் காய். நமக்கு உணவு தேவைப்படும் போது பிளந்தால் உணவு கிடைக்கும். மீண்டும் சேர்த்து விட்டால் பழையபடி ஆகி விடும். இனி நமக்கு உணவுப் பஞ்சமே இல்லை, நாம் குருவிகளுக்கு செய்த உதவிக்கு இத்தனை பெரிய உதவியாக செய்திருக்கிறது, அவற்றை நாம் மறக்கக்கூடாது” என்றார்.
“வீட்டின் முன் புறத்தில் ஒரு பூசனிக் காய் உள்ளது. அதைக் கொண்டு வாருங்கள். அதற்குள் என்ன இருக்கிறது என்று பார்த்து விடலாம்” என்றார் மனைவி.
அந்தப் பெரிய பூசனிக் காயை உருட்டிக் கொண்டு வந்தார் அவன். கத்தியால் அதை வெட்டினார். உள்ளிருந்து அழகான ஆடைகள், விலை உயர்ந்த மணிகள் கொட்டின.
அதற்குள் அவரது குழந்தைகள் சன்னலோரம் இருந்த மூன்றாவது பூசனிக் காயையும் கொண்டு வந்து கொடுக்க, நல்லதம்பி அதை வெட்டினார். அதற்குள் இருந்து பொற்காசுகள் கொட்டின.
அதன் பிறகு அவரும் மனைவியும் குழந்தைகளும் நல்ல உணவு உண்டனர். விலை உயர்ந்த ஆடைகளை அணிந்தனர். மிகப் பெரிய வீடு ஒன்றைக் கட்டத் தொடங்கினார்கள். பெரிய பள்ளியில் படிக்க அவரது குழந்தைகள் சென்றார்கள். நல்லதம்பி தன்னைப் போல் ஊரில் கஷ்டப்பட்டவர்கள் அனைவருக்கும் உதவி செய்யத் தொடங்கினார்.
உழவர் சில நாள்களில் பெருஞ்செல்வனானதையும், தன்னை விட பெரும் புகழ் பெற்றதையும் அறிந்தார் பண்ணையார்.
உழவரின் வீட்டிற்கு வந்த அவர், ” டேய்! நல்லதம்பி! உனக்கு எங்கிருந்து இவ்வளவு செல்வம் கிடைத்தது? உண்மையைச் சொல்” என்று கேட்டார். அவரும் நடந்ததை எல்லாம் அப்படியே சொன்னார்.
பண்ணையார் தன் மாளிகைக்கு வந்தார் . தன்னை விட நல்லதம்பி பெரிய பணக்காரன் ஆனதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, பொறாமை குணம் படைத்த அவர் எப்படியாவது மேலும் செல்வம் சேர்க்க வேண்டுமென்று நினைத்தார். வீட்டில் மேல் பகுதியில் குருவிக் கூடு ஒன்றை அவரே செய்தார். குருவிகள் அவரும் அதில் தங்கும் என்று எதிர்பார்த்தார்.
அவர் எண்ணம் ஈடேறியது. ஒரு குருவி வந்து அந்தக் கூட்டில் தங்கியது. நான்கு முட்டைகள் இட்டது. நான்கு குஞ்சுகள் வெளியே வந்தன.
‘பாம்பு வரவே இல்லை. பொறுமை இழந்த அவர் ஊரில் இருந்த பாம்பாட்டியிடம் சொல்லி, பெரிய கருநாகப்பாம்பை வீட்டில் கொண்டு வந்து குருவி கூட்டிற்கு அருகில் விட்டார், அந்த பாம்போ பசியில் இருந்ததால் ஓடி போய் 3 குஞ்சுகளை சாப்பிட்டு, ஏப்பம் விட்டது.
“அய்யோ, நான் நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்றாகிவிட்டதே என்று ஒரு பெரிய கம்புடன் குருவிக் கூட்டை நெருங்கினார், பாம்பை அடித்து நொறுக்கி வெளியே போட்டார், மீதி இருந்த ஒரு குஞ்சை காப்பாற்றியது போல் நடித்தார். . வேளை தவறாமல் உணவு அளித்தார்.
சில நாட்களில் தாய் குருவியும், ஒரு குஞ்சும் கூட்டை விட்டு வெளியேறியது.
“மூன்று விதைகளுடன் குருவி மீண்டும் வரும். அரசனைவிட செல்வன் ஆவேன்” என்ற எண்ணத்தில் காத்திருந்தார் அவர்.
அவர் எதிர்பார்த்தபடியே கதவைத் தட்டியது குருவி. அவரிடம் மூன்று விதைகளைத் தந்தது. ” ஒன்றை வீட்டின் பின்புறம் நடு. இரண்டாவதை வீட்டின் முன்புறம் நடு. மூன்றாவதைக் கிணற்றோரம் நடு” என்று சொல்லி விட்டுப் பறந்து சென்றது. எண்ணம் நிறைவேறியது என்று மகிழ்ந்தார் அவர். மூன்று தானியங்களையும் நட்டார். மறுநாளே மூன்று பெரிய பூசனிக் காய்கள் காய்த்து இருந்தன.
தோட்டத்தில் இருந்த பூசனிக் காயை வீட்டுக்குள் கொண்டு வந்தார். அதை வெட்டினார்.
அதற்குள் இருந்து எண்ணற்ற பூச்சிகள் வெளிவந்தன. அவர் வயலில் விளைந்திருந்த பயிர்களை எல்லாம் ஒரு நொடிக்குள் தின்றுவிட்டு மறைந்தன.
வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டார் அவர். முன்புறத்தில் இருந்த இரண்டாவது பூசனிக்காயை வெட்டினார். அதற்குள் இருந்து தீ வெளிப்பட்டது அது அந்த மாளிகையை ஒருநொடிக்குள் சாம்பல் ஆக்கியது. இத்தனை நடந்தும் அந்த பண்ணயார் திருந்தவில்லை.
அய்யோ எல்லாமே போய் விட்டதே, மூன்றாவது பூசணியிலாவது செல்வங்கள் இருக்கும் என்று எண்ணிய பண்ணையார், அதை வெட்ட, அதிலிருந்து கிளம்பிய பெரிய பூதம் அவரை தூக்கிக் கொண்டு பறந்தது. அதை அறிந்ததும் எல்லோரும் கொடிய பண்ணையார் ஒழிந்தார் என்று மகிழ்ந்தனர்.
பணம், பணம் என்று பேராசையால் ஏழை மக்களுக்கு துன்பம் உண்டாக்கிய பண்ணையார் இறந்து போனப்பின்பு, நல்லதம்பி ஊர் மக்களுக்கு நிறைய உதவிகள் செய்தார், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் கட்டிக் கொடுத்தார். அவரும் அவரது குடும்பத்தாரும் நல்ல பெயர் பெற்று விளங்கினார்கள்.