கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினகரன் வாரமஞ்சரி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 8, 2024
பார்வையிட்டோர்: 468 
 
 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஓர் ஆல மரம் கிளைகளை அகல விரித்து நின் றது. அதன் ஒரு கிளையிலே ஒரு குருவிச்சை செழித்து வளர்ந்து கிடந்தது. அதே ஆலமரத்தின் கீழே அமைந்திருந்த குடிசையின் கூரையிலே ஒரு சுரைக் கொடியும் படர்ந்திருந்தது.  

அந்தச் சுரைக் கொடி ஒரு நாள் குருவிச்சையின் அருகே தலையை நீட்டி, பல தினங்களாக நோட்டமிட்டு அதனைப் பற்றி, தான் வைத்திருந்த ஒரு கருத்தை அதனிடம் இயம்பியது: 

“நான் பலநாட்கள் உன்னோடு பேச விரும்பி உன்னை நோக்கிய போதெல்லாம் என்னை நீ புறக்கணித்து கர்வத்தோடு, வெகு அலட்சியமாக நடந்து கொண்டாய். உனக்கு… தான் எல்லாம் அறிந்தவன், தானே பெரியவன் என்ற எண்ணமோ… என்ன?” என்று சுரைக் கொடி அந்தக் குருவிச்சையைக் கூர்ந்து கவனித்தது. 

”சரியாகச் சொன்னாய்… எனது போக்கு அப்படித் தான்” என்று விடைபகர்ந்த குருவிச்சை ஒரு புன்முறு வலையும் உதிர்த்துக் கொண்டது. 

“இறால் தன்தலைக்குள் நிறைய அழுக்கை வைத் துக் கொண்டு, நான் பெரிது நான் பெரிது’ என்று திரியுமாம். அதே போல் தான் நீயுமிருக்கிறாய்” சுரைக் கொடி சற்றுச் சூடாகவே செப்பியது. அந்தச் சுரைக்கொடி இவ்வாறு இயம்புவதற்கான காரணம் என்ன என்பதைப் பட்டென உணர்ந்து கொண்ட குருவிச்சை, ‘ஏன் என்னிடத்தே நீ என்ன குறையைக் கண்டாய்?’ என்று வினவியது. 

அதற்கு அந்தச் சுரைக் கொடி பின்வருமாறு விடை பகர்ந்தது: 

“ஒன்று உனக்குச் சுயமாக வாழத் தெரியாது. மற்றது நீ உயிர் வாழும் வரை மற்ற வரிலேயே தங்கி வாழ்கிறாய்… இவைதான் உன்னிடமுள்ள பெருள் குறைகள் 

“நீ இப்படிக் கூறலாம்… ஆனால்… நான் இவ்வாறு வாழ்வது எனக்குக் குறையாகத் தெரியவில்லையே! இப்போது எனது வாழ்வு எதுவித கஷ்டமுமின்றி இன்பமய மாகவே கழிகின்றதே!” 

“அது சரி… உனக்கு இவ்வாழ்க்கை மிக்க களிப்பை ஊட்டலாம். ஆனால் நீ தங்கி வாழுகின்ற அந்த ஒருவர் உன்னை ஒரு நாள் கைவிட்டால் அல்லது அவர் இறந்து விட நேரிட்டால் உன்னால் வாழ முடியாது போய்விடும். அப்போதுதான் உன்வாழ்க்கையிலுள்ள குறைபாடுகள் உனக்கு விளங்குமென்று நினைக்கிறேன்” என்று அந்தச் சுரைக் கொடி ஓர் அறிஞரைப் போல வெகு நிதானமாக வார்த்தைகளை அவிழ்த்து விட்டது. 

“நீ எப்படிச் சொன்னாலும் உனது கருத்தை நான் ஏற்பதற்கில்லை” என்று சில இளைஞர்களைப் போலப் பிடிவாதமாக நின்ற அந்தக் குருவிச்சை, தன் பார்வையை, அந்தச் சுரைக் கொடி, அது படர்ந்து கிடக்கும் குடிசை ஆகியவற்றின் மீது மேயவிட்டது. 

பின்பு அது அந்தச் சுரைக் கொடியை நோக்கி, “நீயும் மற்றவரிலேதானே தங்கி வாழ்கிறாய்” என்றது. 

“சீச்.. சீ… நீ சொல்வது தவறு. நான் ஒருவரிலும் தங்கி வாழவில்லை. நான் சுயமாகவே வாழ்ந்து வருகிறேன். ஆனால் நான் இப்போது பெற்றிருப்பது எனது வாழ்வு சிறப்புறுவதற்காக ஒரு சிறு உதவியே. அவ்வளவுதான் இந்த உதவி இல்லாவிட்டாலுங் கூட ஒருவாறு சமாளித்துக் கொண்டு என்னால் சுயமாகச் சிறப்புற வாழ முடியும்” என்று அந்தச் சுரைக் கொடி இயம்பியது. அதனைச் செவி மடுத்த குருவிச்சை, மேலும் அந்தச் சுரைக் கொடியுடன் உரையாட விரும்பாது மௌனத்தில் மூழ்கியது. 

மறு வினாடி, மெல்ல மிதந்து கொண்டிருந்த காற்று புயலாக உருவாகி வீசியது. அதற்குத் தாக்குப்பிடிக்க வியலாத அந்த ஆலமரமும், குடிசையும் அடியோடு சாய்ந்து தரையின் மடியிலே தஞ்ச மடைந்தன. நீண்ட நேரத்தின் பின், குடிசையின் உதவியின்றி வெறுந்தரையிலே கிடந்து பசுமை மாறாது மகிழ்வோடு வாழ்ந்து கொண்டிருந்த அந்தச் சுரைக் கொடி வேரோடு சாய்ந்து கிடந்த அந்த ஆலமரத்தின் கிளையிலே குற்றுயிராய்க் கிடந்த குருவிச் சையை ஒரு முறை தீட்சணியமாய் நோட்டமிட்டது. அப் போது அந்தக் குருவிச்சையோ, கர்வம், அலட்சியம் யாவும் அடங்கிய நிலையிலே சோகமாக அதனைப் பார்த்து, “நீ சொன்ன தெல்லாம் சரிதான். உனது வாழ்க்கைதான் சிறந்த வாழ்க்கை. சே… நான்தான் பிழைவிட்டு விட்டேன். உன்னைப்போல நானும் வாழத் தெரிந்திருந்தால் எனக்கு இந்தக் கதி ஏற்பட்டிருக்காதே! நான் இன்னும் சிறிது கால மாவது இவ்வுலகிலே வாழ்ந்து இன்பம் துய்த்திருக்கலாமே” என்று தன் நலிந்த குரலிலே பிரலாபித்து விட்டுச் சோர் வடைந்தது.ஆனால் அந்தச் சுரைக் கொடியோ,இப்பொழு தாவது சரியானது எது என்பதை அறிந்து கொண்டாயே! நன்றி” என்று இறுதியாக அந்தக் குருவிச்சையிடம் இயம்பி விட்டுத் தனது பார்வையையும் அதனிடமிருந்து மீட்டுக் கொண்டது. 

– தினகரன் வார மஞ்சரி – 1980.03.09.

– நாங்கள் மனித இனம் (உருவகக் கதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1991, கல்முனை ஸாஹிறாக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் வெளியீடு.

உதுமாலெவ்வை ஆதம்பாவா (பிறப்பு: ஜூன் 15 1939) இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் தன் பங்களிப்பினை வழங்கிவரும் மூத்த இலங்கை எழுத்தாளர்களுள் ஒருவராக திகழ்கின்றார். இலங்கை இலக்கிய வரலாற்றில் பல தரமான எழுத்தாளர்களை உருவாக்கிய பெருமை மணிக்குரலுக்குண்டு. ஆதம்பாவாவின் முதல் ஆக்கத்துக்குக் 'களம்' கொடுத்ததும் 'மணிக்குரலே'. 1961ம் ஆண்டு 'மலையருவி' எனும் தலைப்பிலான கவிதை மூலம் இலக்கிய உலகில் இவர் பாதம் பதித்தார். அன்றிலிருந்து இன்று வரை காத்திரமான 45 சிறுகதைகளையும்,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *