ஒரு நாட்டில் தந்திலன் என்ற வணிகன் ஒருவன் இருந்தான்.
தந்திலன் செல்வச் செழுமையும், சிறந்த அறிவும், நல்ல தகுதியும் பெற்றவனாக இருந்தான். மக்களிடமும் அவனுக்கு நன்மதிப்பு இருந்தது.
அந்த நாட்டின் மன்னரிடம் நல்ல செல்வாக்கையும், பேராதரவையும் பெற்ற அவன் மன்னருடைய கருவூலத்துக்கும் அதிகாரியாக இருந்தான்.
ஒரு நாள் தந்திலன் தன்னுடைய மகள் திருமணத்தை மிகவும் சிறப்பாக நடத்தினான்.
திருமணத்துக்கு மன்னரும் – அரசியாரும் முக்கிய விருந்தினராக வந்து சிறப்பித்தனர்.
தந்திலனின் அழைப்பை ஏற்று அரசாங்க அதிகாரிகளும், சிப்பந்திகளும், பொது மக்களும் திருமண விழாவுக்கு திரளாக வந்திருந்தனர்.
திருமணத்திற்கு வந்திருந்தவர்களில் அரண்மனையைப் பெருக்கிச் சுத்தப்படுத்தும் பணியாளனான கோரபன் என்பவனும் வந்திருந்தான்.
அவன் தன்னைப் போன்ற சிப்பந்திகளுக்கென ஒதுக்கபட்ட ஆசனத்தில் அமராமல் அமைச்சர்கள் போன்ற அந்தஸ்துமிக்கவர்களுக்காகப் போடப்பட்டிருந்த ஆசனம் ஒன்றில் சென்று அமர்ந்து கொண்டான்.
அதைக் கண்ட தந்திலன் கோரபனிடம் சென்று அவனுக்கு உரிய ஆசனத்தில் சென்று அமருமாறு கேட்டுக் கொண்டான்.
கோரபன் தான் அமர்ந்திருந்த இடத்தைவிட்டு எழுந்திருக்க மாட்டேன் என்று வீம்புக்காக அடம் பிடித்தான்.
நியாயமாகப் பல தடவை சொல்லியும் கோரபன் கேட்காததால் தந்திலன் தன் ஏவலாளரை விட்டு பலாத்காரமாக ஆசனத்தைவிட்டுக் கிளப்பி வெளியே துரத்திவிட்டான்.
அந்தக் காட்சியைக் கண்டு திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் கைகொட்டிச் சிரிக்கலானார்கள்.
கோரபனுக்கு அவமானமாகப் போய்விட்டது. தன்னைப் பலர் முன்னிலையில் கேவலப் படுத்திய தந்திலனை எவ்விதமாவது பழி வாங்கித் தீருவது என்று மனத்திற்குள் தீர்மானித்து அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.
திருமண நிகழ்ச்சி நடைபெற்ற மறுநாள் அதிகாலையில் கோரபன் அரண்மனையைப் பெருக்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தான்.
மன்னரின் படுக்கை அறையைச் சுத்தம் செய்ய வந்தவன் உள்ளே மன்னன் மட்டும் படுக்கையிலிருந்து எழாமல் அரைத் தூக்கத்திலிருப்பதைக் கவனித்தான்.
படுக்கையறையின் வெளிப்புறத்தைச் சுத்தம் செய்யும் போது மன்னன் காதில் விழும் வகையில் அவன் கீழ்க்கண்டவாறு முனகிக் கொண்டான்.
இந்த தந்திலனை மன்னர் எவ்வளவு தூரம் நம்பி அரண்மனைக்குள் எங்கு வேண்டுமானாலும் செல்ல அனுமதிக்கிறார். ஆனால் அந்த மூடனோ மன்னருடைய பெருந்தன்மைக்கு இழுக்கு தேடும் விதத்தில் மகாராணியாரை மானபங்கப்படுத்த முயலுகிறான் என்ன கேவலம்.
இந்தச் சொற்கள் மன்னரின் காதில் தெளிவாக விழவே அவர் திடுக்கிட்டு எழுந்து படுக்கையில் உட்கார்ந்து கொண்டு கோரபனை அழைத்தான்.
கோரபன் வந்து பணிந்து நின்றான்.
இப்போது என்ன சொன்னாய் ? என்று மன்னன் கேட்டான்.
எஜமான் நான் ஒன்றும் சொல்லவில்லையே. நேற்று இரவு சற்று அதிகமாக மது அருந்திவிட்டேன். இன்னும் சரியாக மயக்கம் தெளியவில்லை. ஒரு அரைகுறை மது போதையில் ஏதாவது உளறினேனோ என்னவோ * நான் ஏதாவது தவறாகப் பேசியிருந்தால் எசமான் மன்னிக்க வேண்டும் என்று தந்திரமாகக் கூறினான்.
மன்னர் கோரபனை அனுப்பி விட்டார். ஆனால் அவன் சொன்ன விஷயங்கள் அவர் மனத்தைக் குடையத் தொடங்கின.
அரண்மனையில் எங்கு வேண்டுமானாலும் செல்ல தந்திலனுக்கு மன்னவர் உரிமையளித்திருந்தார். ஆகவே அந்தப்புரத்திற்குச் சென்று தந்திலன் தமது மனைவியைச் சந்திப்பதுகூட சாத்தியந்தான்.
ஏதோ நடக்காமலா கோரபன் அந்தச் தகவலைச் சொல்லியிருக்க முடியும் என்று மன்னர் கொதிப்படைந்தார்.
தந்திலன் மீது அவருக்கு கடுங்கோபம் ஏற்பட்டது. அதே சமயம் தமது மனைவியைப் பற்றியும், அவநம்பிக்கை எண்ணங்கள் அவர் மனத்தில் அலைமோதத் தொடங்கின.
பெண்களை ஒருபோதும் நம்பக்கூடாது என்று முன்னோர் தெரியாமலா சொல்லி வைத்தார்கள்.
பெண்கள் எப்போதும் சஞ்சல சுபாவம் உள்ளவர்கள் தானே.
கணக்கு வழக்கின்றி விறகைப் போட்டுக் கொண்டிருந்தாலும் நெருப்புக்குத் திருப்தி ஏற்படுவது இல்லை. ஆயிரக்கணக்கில் ஆறுகள் சென்று கலந்தாலும் கடலுக்கு நிறைவு ஏற்படாது. கோடிகணக்கில் உயிர்களை அபகரிப்பினும் யமனுடைய மனது நிறைவு பெறுவது இல்லை. இதே போல் எத்தனை ஆடவர்களிடம் தொடர்பு வைத்துக் கொண்டாலும் பெண்களுக்கு முழுமையான திருப்தி ஏற்படாது போலும்.
தன் மனைவி தன்னை மட்டுமே காதலிக்கிறாள் என்று மனப்பூர்வமாக நம்புகின்ற ஒருவனைப் போல முட்டாள் உலகத்தில் இருக்கவே முடியாது.
மன்னர் இவ்வாறெல்லாம் எண்ணியெண்ணி மனம் நொந்து நிம்மதி இழந்தார்.
உடனே தனது காவலர்களை விளித்து இனி தந்திலன் அரண்மனைக்கு வந்தால் அவனை உள்ளே பிரவேசிக்க அனுமதிக்காதீர்கள் என்று உத்தரவு போட்டு விட்டார்.
மறுநாள் காலை வழக்கப்படி தந்திலன் அரண்மனைக்கு வந்தபோது காவலர்கள் அவனை சற்றே அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தி விட்டனர்.
என்ன காரணம் ? என்று திடுக்கிட்டவனாக தந்திலன் கேட்டான்.
காரணம் எங்களுக்கு தெரியாது. உள்ளே அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறார். அவ்வளவு தான் எங்களுக்குத் தெரியும் என்று காவலர்கள் கூறி விட்டனர்.
தந்திலன் என்ன யோசித்தும் தாம் மன்னர் மனம் நோகச் செய்த குற்றம் என்ன என்று விளங்கவில்லை.
நாம் என்ன தவறு செய்தோம் என மனக்குழப்பத்தோடு திரும்பத் திரும்ப யோசித்த வண்ணம் அரண்மனை வாசலிலேயே சற்று நேரம் நின்றான்.