கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: காதல் சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 18, 2021
பார்வையிட்டோர்: 20,853 
 
 

(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கதை உறுப்பினர்கள்

ஆடவர்
1. கப்பியூலத்துப் பெருமகன்: ஜூலியட்டின் தந்தை.
2. மாண்டேகுப்பெருமகன் : கப்பி யூலத்தின் வரன்முறைப் பகைவன் – ரோமியோவின் தந்தை.
3. ரோமியோ : மாண்டேகுப் பெருமகன் புதல்வன் – ஜூலியட்டைக் காதலித்து மறைவாய் மணந்தவன்.
4. பொன்வாலியோ: ரோமியோவின் நண்பர்கள்
5. மெர்குதியோ: ரோமியோவின் நண்பர்கள்
6. டைபால்ட்: ஜூலியட்டின் அருமை மைத்துனன் – ரோமியோவை மல்லுக் கிழுத்து அவன் கையால் இறந்தவன்.
7. லாரன்ஸ் : துறவி – அருளுடையார் – ரோமியோ ஜூலியட் காதலால் இரு குடிகளின் பகை தீர்க்க எண்ணி மணம் புரிவித்தவர்.
8. கவுண்ட்பாரிஸ் : பெற்றோ ரால் ஜூலியட்டுக்குக்கண வனாகத் தேர்ந்தெடுக்கப் பெற்ற மணமகன்.

பெண்டிர்
1. ஜூலியட்: கப்பியூலத்துப் பெருமகன் புதல்வி, ரோமியோவின் காதலி
2. ரோஸாலின்: ரோமியோவின் முதற் காதலி – அவனைப் புறக்கணித்தவள்.

கதைச் சுருக்கம்

மாண்டேகு கப்பியூலத்து என வெரோணா நகரத்தில் இரு பெருஞ் செல்வக் குடிகள் . அவர்கள் தம்முட் பெரும் பகைமை கொண்டிருந்தனர். மாண்டேகுப் பெருமகனுடைய ஒரே புதல்வன் ரோமியோ . கப்பியூலத்துப் பெருமகனுடைய ஒரே புதல்வி ஜூலியட். கப்பியூலத்துப் பெருமகன் மாளிகையில் நடந்த ஒரு விருந்திற்குத் தான் விரும்பிய போஸாலின் என்ற மங்கையைக் காணப் பொன்வாலியோ மெர்குதியோ என்ற தன் இரு நண் பருடன் வந்த ரோமியோ ஜூலியட்டைக் கண்டு காதலித்தான். ரோமியோவுக்கு லாரன்ஸ் என்ற ஒரு துறவி நண்பனா யிருந்தான். அவன் பகைமை கொண்ட இரு குடிகளையும் இணைக்கும் ஆர்வத் துடன் ரோமியோ ஜூலியட் ஆகியவர்களின் காதலை ஆதரித்து மறைவில் மணஞ் செய்துவைத்தான்.

அவர்கள் காதல் செய்தி யறியாது ஜூலியட்டின் மைத் துனன் டைபால்ட் ரோமியோவை மெர்குதிபோவுடன் தெருவில் கண்ணுற்று மல்லுக்கிழுத்துப் போரிட்டு அவனால் கொலையுண் டான். இதனால் நகர்த் தலைவன் ரோமியோவை நாடு கடத்தவே, ஜூலியட்டிடமும் துறவியிடமும் விடைபெற்று அவளை அழைத் துக் கொள்வதாக உறுதி தந்து சென்றான்.

இதற்கிடையில் ஜூலியட்டின் காதல் மணச் செய்தி யறியாத பெற்றோர் அவளைப் பாரிஸ் பெருமகனுடன் மணஞ் செய்ய ஏற் பாடு செய்தனர். இவ் விக்கட்டினின் றும் தப்ப லாரன்ஸ் ஒரு சூழ்ச்சி செய்தான். 42 மணி நேரம் இறந்தவர்போ லாக்கும் மயக்க மருந்தொன்றை அவளுக்கு அவன் கொடுக்க, அவள் இறந்தவளென்று தன் குடும்பக் கல்லறையில் அவளை அடக்கம் செய்கின்றனர். துறவி இது செய்தியைத் தூதனால் அவனுக்குத் தெரிவித்து அவளை எழுப்பிப் போகும்படி ரோமியோவுக்கு எழுதி னான். ஊழ்வலியால் தூதன் தாமதம் செய்துவிட்டான். நற் செய்தியிலும் கடுகச் சென்ற ஜூலியட் இறப்புச் செய்தி கேட்டு வந்த ரோமியோ அவளைக் கண்டு இறந்ததாகக் கொண்டு அங்கே வந்த பாரிஸ் பெருமகனுடன் போரிட்டு அவனைக் கொன்றபின் தானும் மாள, அதன் பின் எழுந்த ஜூலியட்டும் காதலுடன் மாண்டாள். இறுதியில் வந்த இரு குடிப் பெற்றோரும் நகர தலைவனும் துறவியால் செய்தி முற்றும் அறிந்து முன் பகைமைக் குக் கழிவிரக்கங்கொண்டு வருந்தினர்.

1. எதிர்பாரா விருந்தினர்

‘வெரோணா நகரத்தில் கப்பியூலத்து என் றும் மாண்டேகு என்றும் இரண்டு பழம் பெருங் குடிகள் இருந்தன. இக் குடியினர் நெடுங்காலம் ஒருவரை ஒருவர் பகைத்து வந்திருந்தனர். அந்தக ரத்தார் நினைவு எட்டிய வரையிலும் அவர்கள் பகை வர்களாகவே இருந்து வந்தமையால் அப் பகைமை வேரூன்றியதோ டன்றி, அவர்கள் உறவினர் நண்பர் பணியாட்கள் முதலிய யாவரிடமும் பர விற்று. எனவே அந்த இரு கட்சியினரும் அவர்கள் நண்பர்களும் பணியாட்களும் தெருக்களிலும் சந்து களிலும் ஒருவரையொருவர் கண்ணுறும் போதெல் லாம் நாள்தோறும் பூசல் விளைத்து வந்தனர். அடி தடியும் கொலையும் தீமொழியும் இதனால் நகரில் மிகுந்தன.

ஒருநாள் கப்பியூலத்துப் பெருமகனார் மாளி கையில் ஒரு பெரு விருந்து நிகழ்ந்தது. அதில் அந் நகரத்து நன்மக்களில் மாண்டேகுகள் நீங்கலாக ஆடவர் பெண்டிர் யாவரும் வந்து குழுமினர். நகரத் தின் அழகிகள் அனைவரும் அவ் விருந்தின் போது நடக்கும் ஆடல் பாடல்களில் கலந்தனர். அவர்களைப் பார்க்க வந்த இளைஞரும் மிகப் பலர்.

அத்தகைய அழகிகளுள் ஒருத்தி ரோஸாலின் என்பவள். மாண்டேகுப் பெருமக ரோமியோ இவ்வழகியின் கவர்ச்சியுட்பட்டு அவள் வெறுத்துத் தள்ளியும் நீங்காது அவளைத் தொடர்ந்து வந்தான். அவளுடன் கலந்துறவாட இவ் விருந்து நல்ல வாய்ப்பளிக்கும் என்பதைத் தெரிந்து அவன் அதில் வந்து சேர்ந்து கொள்ள விரும்பினான். ஆனால், தன் குடும்பத்தின் பண்டைப் பெரும் பகைவர்களான கப்பியூலத்துக்களின் வீட்டில் நிகழும் விருந்துக்குச் செல்வதென்றால், ‘அது கீரி வீட்டில் பாம்பு குடி போவது போலா யிற்றே’ என்று கவன்றான்.

ரோமியோவுக்குப் பென்வாலியோ, 2 மெர்க் குதியோ என்ற நண்பர்கள் இருவர் இருந்தனர். காத லின் அருமை அறியாத கல் நெஞ்சினளாகிய ரோஸாலினுக்குத் தம் நண்பன் அடிமையா யிருப் பது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. கப்பியூலத்துக் களின் விருந்தில் அழகிகள் பலரும் வருவார்களாத லால் அவர்களைக் கண்டு ரோமியோ ரோஸாலினின் கவர்ச்சியினின்று விடுபடக் கூடும் என்று அவர்கள் நினைத்தனர். ஆகவே அவ்விருந்துக்கு அவனுடன் போவதென அவர்களும் தீர்மானித்தனர். எதிரி கள் தம்மை எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடியாதபடி அவர்கள் அனைவரும் முகமூடியுடன் செல்வதென்றும் முடிவு செய்யப்பட்டது.

முகமூடி யணிந்து விருந்துகளுக்கும் நடனங் களுக்கும் செல்வதும், ஒருவரை ஒருவர் தெளிவாக அறியாமலேயே உறவாடிக் கலந்து காதல் நாடகம் நடிப்பதும் அந்நாட்டில் அக்காலத்தில் வழங்கி வந்த வழக்கங்கள் ஆகும். ஆகவே அவர்கள் முகமூடி யணிந்து வந்ததைப்பற்றி எவரும் தவறாக எதுவும் எண்ணவில்லை. ஆனால் அவர்கள் இன்னார் என்றறிய முடியாவிடினும், நடை உடை தோற்றங் களால் அவர்கள் இளைஞர்கள் என்றும் உயர்குடிச் செல்வர்கள் என்றும் எளிதில் உணர முடிந்தது. அதனால் அவர்களைக் கப்பியூலத்துப் பெருமகனாரே நேரில் வந்து எதிர் கொண்டு அழைத்தார். அவர் 79 ஆண்டில் முதிர்ந்தவராயினும் அன்பு கனிந்த உள் ளமும் இளைஞர்களும் வியக்கும் ஊக்கமும் உடைய வர் எனவே அவர்களுடன் இன்மொழிகள் கூறி அளவளாவலாயினார்.

ரோமியோவின் நண்பர்கள் எதிர்பார்த்த படியே வெரோணா நகரத்திலுள்ள வடிவழகிகள் அவ்விருந்தில் நடந்த ஆடல் பாடல்களில் கலந்து கொண்டனர். அழகுக் கலை வல்லுநர் பாராட்டும் பல்வகை அழகுகளும் உருவெடுத்து நேரில் வந்த னவோ என்னும்படி அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ் வொரு வகையில் ஒப்புயர்வற்ற அழகிகளாகவே விளங்கினர். பல வகை மலர்கள் ஒரே கொம்பில் வந்து சேர்ந்தாற்போல ஒரே இடத்தில் வந்து குழு மிய இத்தனை அழகிகளை ரோமியோ பார்த்ததே கிடையாது. கால்கள் பாவுகின்றனவோ அல்லவோ என்று ஐயுறும் வண்ணம் நீரில் மிதக்கும் அன்னங் கள் போல அவர்கள் மிதந்து சென்றனர். கண் களைக் கவரும் பலநிறப் பாம்புகள் போல் அவர்கள் ஒருவரை ஒருவர் வட்டமிட்டு, நெளிந்து நெளிந்து ஒருவரூடு ஒருவர் புகுந்து மீளுவாராயினர். இஃ தனைத்தும் விழித்த கண் விழித்தபடி இமையாமல் பார்த்துக்கொண்டிருந்தான் ரோமியோ. ரோஸா லினின் கொடுமையால் புண்பட்ட அவன் உள்ளத் தில் இவ்வினிய காட்சி படிந்து புண்ணாற்றியது.

ரோஸாலினைப் பற்றிய நினைவு அதனுடன் மனத்தினின்றும் அகன்றது.

விண்மீன்களினிடையே ‘ திங்கள் போலும், வான மங்கையரிடையே இந்திராணி போலும் அவ் வழகியர் குழாத்தில் ஓர் ஒப்பற்ற வடிவழகி விளங் கினாள். அவள் அழகை நோக்க அவளைச் சூழ்ந்த பெண்களெல்லாம் அவன் கண்களுக்கு அன்னப் புள்ளைச் சூழ்ந்து நின்ற வாத்துக்கள் போலத் தோன்றினர். அவன் கண்ணுக்கு அங்குள்ள விளக் கங்கள் அனைத்தும் அவளிடமிருந்தே ஒளிபெற்று விளங்குவனவாகத் தோன்றின. ‘ஆ, இத்தனை அழகும் இம் மண்ணுலகத்திற் குரியது தானா? இது மனிதர் கண்கள் பார்க்கத் தக்கது தானா? என்று அவன் வியந்தான். அவள் அப் பெண்கள் கூட்டத்தில் இடையிடையே தோன்றித் தோன்றி மறையுந்தோறும் அவனுக்குத் தன் உயிரே அவளுடன் சென்று மீளுவதாகக காணப்பட்டது.

காதல் வயப்பட்டோர், கவிதை வயப்பட்டோர், கள் வயப்பட்டோர் என்னும் இம் மூவரும் நாவை அடக்கார் என்பது பொதுச்சொல் அன்றோ? ரோமியோ உளமும் கண்ணும் அவ்வழகியர் கூட்டத் திற்குள்ளும் புறமுமாகத் திரியும் போது கூட அவன் நாக்கு மட்டும் ஓயாது அவளைப் புகழ்ந்து புகழ்ந்து பிதற்றிய வண்ணமாகவே இருந்தது. ‘ஆ, அவள் பொன்மேனி’ என்பான் ; ‘அவள் ஆடைகள் பாலாடைகள் போன்றன’ என்பான். ‘அவை ஆடைகள் அல்ல, அன்னப் பறவையின் தூவிகள்’ என்பான்; ‘இத்தகைய பெண்ணைக் கப்பியூலத்தின் மாளிகையில் வந்தா காணவேண்டும்? எமது குடிக்கு இத்தகைய தெய்வ வடிவம் கொடுத்து வைக்கவில்லையே’ என்றிவ்வாறு கூறிப் பலபடப் புலம்புவான்.

2. காற்று நுழையா இடத்தும் நுழையும் காதல்

ரோமியோவின் உள்ளத்தைக் கவர்ந்த அப் பெண்ணணங்கு வேறு யாருமல்லள். கப்பியூலத்துக் குடிகளின் குலக்கொடியாக வந்து பிறந்த ஜூலியட்டே யாவாள். திருமகள் பிறந்த பாற்கட லுள் அவளுடன் கூடவே பிறந்த நஞ்சுபோல அவ ளுக்கு உடைபால்ட் என்ற ஒரு மைத்துனன் இருந் தான். அவன் இவ் விளைஞர்களினுடைய பெருமித நடையையும் அவர்களிடம் கப்பியூலத்துப் பெரு மகன் காட்டிய நன்மதிப்பையும் கண்டு உள்ளூறப் பொறாமை கொண்டான். நண்பரைவிட ஒருவனை நன்கு உற்றுக் கவனிப்பர் பகைவர். ஆதலின் அவன் அவர்களை அடுத்து, அவர்கள் தமக்குள் தாழ்ந்த குரலிற் பேசுவதைக் கூட உற்றுக் கேட்டு வந்தான். தன் குடிக்கு ஒரு குலக்கொழுந்தான ஜூலியட்டின் மீது அவன் கண்கள் செல்வதையும் அவள் கவர்ச்சியில் அவன் ஈடுபடுவதையும் காண அவனது பொறாமைத் தீ இன்னும் பல மடங்கு மிகுதியாயிற்று.

இறுதியில் அவன் பேச்சிலிருந்தும், நடை உடை தோற்றத்திலிருந்தும் அவன் மாண்டேகுக் குடியினன் என்பதையும், அக் குடியின் தலைவன் மகனான ரோமியோ என்பதையும் உன்னிப்பாய் அறிந்தபோது, அவனுடைய உள்ளத்தில் குமுறிக் கொண்டிருந்த பொறாமைக் கனல் வெஞ்சினமாகப் பொங்கி எழுந்தது. ஆனால் விருந்து விழாவின் போது பூசல் விளைப்பது அதன் பெருமையைக் குலைப்பதாகும் என்பதை உன்னி அவன் மிக முயன்று தன்னைத் தற்காலிகமாக அடக்கிக் கொண்டான்.

இரும்பும் காந்தமும் எங்கிருந்தாலும், எது வந்து இடைப்பட்டாலும் ஒன்றை ஒன்று ஈர்த்தே தீருமன்றோ ? அதுபோல எதிரெதிரான பகைக் குடியுட் பிறந்தும் இவ்விறு சிற்றுயிர்களும் ஒன்றை யொன்று பார்த்தது தான் தாமதம். உடன் தாமே உடல் மாறி. ஒருவர் உடலில் ஒருவர் புகுந்து வருத் தத் தொடங்கினர்.

விருந்தின் முடிவில் நங்கையர் தம் ஆடல் பாடல்களை விடுத்துக் கலைந்தபோது ரோமியோ அவளை அணுகினான். அவ்வளவு ஆடல் பாடல்களி னிடையேயும் அவள் உள்ளம் அவன் பக்கமாகவே நாடி நின்றதாதலின், அவளும் தன்னை அறியாம லேயே அவனை அணுகினாள்.

முகமூடி யணிந்தோர் அதன் மறைவிலிருந்து கொண்டு கபடின்றித் தம் கருத்துக்களை வெளியிடு வது வழக்கம். அதை ஒட்டி ரோமியோவும் ஜூலியட் டின் கையைத் தன் கைகளிற் புதைத்துக் கொண்டு அவள் அழகையும் இனிய பாடலையும் பாராட்டிப் பேசுவானாயினான்.

ரோமியோ :-‘உன் உருவமும் பாடலும் நடை யும் யாவுமே வானவர்க் குரியன் . நீ ஒரு தெய்வ மங்கை என நினைக்கிறேன்.

ஜூலியட் :- மிகவும் நன்று. அப்படியானால் அத் தெய்வ மங்கையின் கையை மண்ணுலக மாந்தர் கைகொண்டு தீண்டல் பழியன்றோ?

ரோமியோ :- உண்மை . ‘ஆயின் அப்பழிக்கேற்ற தண்டனை அதனை முத்தமிடுவதுதான்’ என்று கூறிக் கொண்டு அக்கையை முத்தமிடலானான்.

ஜூலியட் :-‘உண்மைப் பற்றுடைய அடியவர் தெய்வ வடிவங்களைத் தீண்டும் உரிமை யுடையவரே. ஆனால், அதனை முத்தமிடும் உரிமை உடையவ ரல்ல ர்.’

இத்தகைய இனிய காதலுரைகளுக்குத் தடை யாக ‘ஜூலியட், ஜூலியட்’ என்ற ஒரு குரல் கேட்டது. உடனே ஜூலியட், ‘ஆ, என் தாய் அழைக்கிறாள் ‘ என்று கூறிவிட்டு ஓடினாள். ஓடும் போதும் ஒன்றிரண்டு தடவை அவள் கண்கள் சற் றுச் சாய்வாகத் தன் பக்கம் திரும்பிப் பார்த்து விட்டுச் சென்றன என்று ரோமியோவுக்குப் பட்டது.

அதன் பின்புதான் அவன், அவள் யார் என்று பக்கத்தி லுள்ளவர்களிடம் உசாவினான். உண் மையை அறிந்தபோது அவன் மனம் முதலில் இடிவுற்றது. ‘ஆ, என்ன செய்தேன் ; பகைவர் புலத்துட்பட்ட பாவையிடம் என் உயிரைக் கொண்டு வைத்துவிட்டேனே ‘ எனக் கலங்கினான். ஆனால், காதலைத் தடுத்து நிறுத்தும் வன்மையுடையது எது? பகை, பொறாமை, சிறுமை ஆகிய புயல்களால் மொத்துண்ட வாழ்க்கைக் கடலுக்கு அமைதி யளிக்கும் மதியம் அக் காதலேயன்றோ ?

மாண்டேகுப் பெருமகனாரின் மகனாகிய ரோமியோ கப்பியூலத்தின் மாளிகையுட் புகுந்து விருந்தில் கலந்து கொண்டதோடன்றி ஜூலியட் டிடம் பேசக்கூடத் துணிவு கொண்டா னென்ற செய்தி நகரெங்கும் பரவிற்று. அன்று முழுமையும் தான் கண்ட இளைஞனையும் அதனுடைய காதற் குறிப்புக்களையும் பற்றியே கனாக் கண்டுகொண் டிருந்த ஜூலியட்டின் காதிலும் இது விழுந்தது. அப்போது அவளது முகம் சட்டென நகை யிழந்து கவலையுள் ஆழ்ந்தது. ‘அந்தோ , எனக்கும் என் காதலுக்கும் இடையே மாந்தர் கட்டிய கோட்டை ‘கள் எத்தனை உள்ளன!’ என்று ஏங்கினாள் அவள்.

பண்டை நாள் தொட்டே காதல், கடலும் மலை யும் கானாறும் கடக்கும் திறனுடையதாக விளங்கு கின்றது. அது, காலம் இடம் என்பவற்றின் கட்டறுத்த கடவுளின் ஒரு சிறு பதிப்பு ஆதலின், அவரைப் போலவே இச் சிறு வாழ்க்கையளவில் அது காலமும் இடமும் கடந்து நிற்கின்றது. அதன் வயப்பட்டோர்க்கு இரவும் பகலும் ஒன்றுதான். காடும் நாடும், முள்ளும் மலரும் ஒன்று தான்.

உலகத்திற்கு ஒரு பகல் சென்றது. உலகத் தார்க்கு ஓர் இரவு வந்தது. தூங்கும் உயிர்களுக்கு அது நள்ளிரவுப்போது. ஆனால் ரோமியோவுக்கு ஜூலியட்டின் நினைவே ஞாயிறாய் இருந்தது. அந் நினைவு மாறாத அவனுக்கு இரவேது? ஞாயிறு படிந்ததையும், மதி உயர்ந்ததையும் அவன் அறிய வில்லை. அப்படி ஜூலியட்டே நினைவாக மனத் துட் கொண்டலைந்தான்.

அவன் உள்ளம் ஜூலியட்டைச் சுற்றி வட்ட மிட்டது. அவன் கால்களும் அவனை யறியாமலே கப்பியூலத்தின் மாளிகையைச் சுற்றி வட்டமிட்டன. மாளிகையின் பின்புறம் ஒரு தோட்டம். அதன் மதில்கள் இரண்டாள் உயரம் ஓங்கி நின்றிருந்தன. தன் காதலி இருப்பது அதன் மறுபுறம் என்று மனத்துள் நினைத்தான். உடன் அம் மனமும் அத னைப் பின்பற்றி அவனுடலும் தாமே அம் மதிலைத் தாண்டிக் குதித்தன. தோட்டத்தில் யாரேனும் இருப்பாரோ என்று எண்ணிப் பதுங்கிப் பதுங்கி நடந்தான். அந் நள்ளிரவில் அங்கு யார் இருப்பர்? கொஞ்ச நேரத்திற்குள் தோட்டங் கடந்து மாளிகை யின் பின்புறத்தை அடைந்தான். அதன் பலகணி தலைக்கு மேலாகச் சற்று உயர்ந்து காணப்பட்டது. அதன் சித்திர வேலைப்பாட்டினால் அதுவே பெண் டிர் பகுதி எனக் கண்டான். அதன் உட்புறமே அவனது காதற்கனி தூங்கிக் கொண்டிருக்க வேண்டும். அதனைப் பற்ற எண்ணிய தான் இப்படி வெளியே நிற்பதை எண்ணி வருந்தினான்.

3. காதலர் கண்ட இன்பம்

கூட்டி வைக்கும் காதல் என்றால், அவர்கள் காதலைச் சொல்ல வேண்டும். ரோமியோ அங்கு வந்து நின்ற அதே சமயத்தில் ஜூலியட்டும் அதே பலகணியின் பக்கத்திலேதான் நின்றிருந்தாள். அவளது காதல் அவள் மனத்துள் அடங்காததாகத் தோன்றியதனால் அதனைச் சற்றே இவ்வகன்ற உலகில் திறந்து வெளிவிடுபவள் போல அவள் பல கணியைத் திறந்து வந்து நின்றாள். பின் தன் காதலே போல் உயர்ந்தகன்று விரிந்த வானத் திரையில், தன் எண்ணங்களேபோல் எண்ணற்று விளங்கிய விண் மீன்களில் தன் கவனத்தைச் செலுத்தினாள். ‘ஆ!

காதல், காதல், காதல் ; அக் காதல் போயில் சாதல் சாதல், சாதல்!!

எவ்வளவு பொருத்தமானது இப் பாட்டு என்றாள் ஜூலியட்டு. கீழிருந்து ஒருவன் , ‘உன் ழியிலே தானே இருக்கிறது, அச் சாதல்’ என் றான். அஃது அவள் காதில் விழவில்லை.

‘ஆ! விருந்தில் ஆடிப் பாடிய போது நீ தெய்வ மாது என்பது முற்றிலும் விளங்கவில்லை! இப் போது உன் குரல் வானிலிருந்து வருவது போன்றே இருக்கிறது. உயரப் பறக்கப்போகும் பறவை போலவே நீ வெளியில் அந்தரத்தில் வந்து நிற்கி றாய்?’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டான் ரோமியோ!

தன் மனத்துட் கொண்ட ரோமியோவைப் பார்த்து அவள் பேசத் தொடங்கினாள். உண்மையில் ரோமியோவே அதனை உற்றுக் கேட்டுக்கொண் டிருக்கிறான் என்பதை அவள் அறியவில்லை.

‘ஆ, ரோமியோ; ரோமியோ? நீ ஏன் ரோமியோவா யிருக்க வேண்டும்? மாண்டேகுக் குடியில் நீ ஏன் பிறக்கவேண்டும்? அன்றி அது தான் போகட்டும். கடவுள் என்னை ஏன் ஜூலி யட்டாகப் படைக்க வேண்டும்? நான் ஏன் உனக் குப் பகைவர்களான கப்பியூலத்துக் குடியிற் பிறக்க வேண்டும்?’ என்றாள்.

அவளுக்கு விடையிறுக்க, அவளுடன் உரை யாட அவன் உள்ளம் பாய்ந்தெழுந்தது. ஆனால் அவள் இன்னுரைகளைப் பின்னும் கேட்க வேண்டுமென்னும் ஆர்வம் அதனை அழுத்திப் பின்னுக்கு இழுத்தது.

அவள் பின்னும் ஆ, ரோமியோ? நீ ஏன் ரோமியோவா யிருக்கவேண்டும் ? நீ ஏன் மாண்டேகு ஆயிருக்கவேண்டும்? அக் கொடியவர்களை விட்டு விட்டு வேறு பெயர் கொள்ளலாகாதா? என் மனத் தில் உள்ள காதலின் ஒரு பகுதி மட்டும் உன் மனத் தில் இருந்தால் இப் பெயர்களை உதறித் தள்ளிவிட மாட்டாயா? அப்படி நீ தள்ளாவிட்டால் இதோ நான் தள்ளுகிறேன். நான் ஜூலியட்டல்லள், கப்பியூலத் அல்லள் என்று வைத்துக்கொள்க” என்றாள்.

காதல் போட்டிக் கழைத்த அழைப்புப் போன்ற இம்மொழிகளுக்கு ரோமியோவால் விடை கொடுக்காமல் இருக்க முடியவில்லை. எனவே அவன் ‘நானுந்தான் இனி ரோமியோ அல்லன் ; மாண் டேகு அல்லன் ; உன்னைக் கண்டதே நான் மீண்டும் பிறந்தேன். நீ இனி எனக்கு என்ன பெயரிட் டழைப்பாயோ அதுவே என் பெயராகும். நீ காதல் என்றோ, கண்மணி என்றோ, வேறெப்படி வேண்டுமாயினும் அழைத்துக் கொள்க,’ என்றான்.

தான் தனிமையாய் இருப்பதாக நினைத்ததற்கு மாறாக வேறு ஏதோ குரல், அதுவும் ஆடவர் குரல் கேட்பது கண்டு திகில் கொண்டு ஜூலியட் கதவை அடைத்துவிட்டு உட்செல்ல இருந்தாள். ஆனால் ரோமியோ, ‘ என் ஜூலியட்; உன் மனக் கதவைத் தான் திறந்துவிட்டாயே; இனி ஏன் இவ் வெளிக் கதவைச் சாத்திவிட்டு ஒளிக்க வேண்டும்,” என்றான்.

அப்போதுதான் அவளுக்கு, அவன் தன் உளங் கோயில் கொண்ட தலைவனே என்பது விளங்கிற்று .

பசிப்பிணி தீரக் கூழில்லையே என்று வருந்து பவன் முன் முக்கனியும் தேனும் கலந்த இன்னுணவு வைக்கப்பட்டா லெப்படியோ, அப்படி யிருந்தது ஜூலியட்டுக்கு ரோமியோவின் வரவு!

அவளது உளத்துக்கு முந்த நாவும் நாவுக்கு முந்த உளமும் துடித்தன. அவனைக் கண்டதால் ஏற்பட்ட மகிழ்ச்சி ஒரு புறம் ; அவன் பகைவரிடத் திற் கன்றோ வந்திருக்கிறான், அவனுக்கு என்ன நேருமோ என்ற அச்சம் ஒரு புறம் ஆகப் போரிட் டன். பின் தழுதழுத்த குரலில் அவள் ‘ நீ இவ் விடத்தை அறிந்து எப்படி வந்து சேர்ந்தாய்?’ என்று கேட்டாள்.

ரோமியோ : ‘காதலாகிய வடமீன் வழி காட்ட வந்தேன். இம் மாளிகையிலிருக்கும் பொருட் குவையைப் பெற ஏழு கடலையுந் தாண்டவும் நான் தயங்கேன்.’

அவனுக்காகத் தன் மனம் துடிப்பது போல் தனக்காக அவன் மனமும் துடிக்கின்றது என்பதை அவள் கண்டாள். அவளுள்ளத்தில் ஒளித்து நின்ற நாணாகிய செவிலித்தாய் உடன் தானே தனது சிவந்த திரையால் அவள் முகத்தை மறைத்திட்டாள்.

ஆனால் அவர்கள் காதலில் திரைக்கு ஏது வேலை. கண்ட பின் காதலிப்பவருக்கன்றோ திரைமறைவி லிருந்து காதல் வலை வீசவேண்டும். காணு முன்னே காதலனுடன் கலந்து விட்ட அவள் உள்ளம், நாணம் மடம் அச்சமென்னும் முப்படியையும் கடந்து தன் காதலுணர்ச்சிகளை உள்ளன உள்ளபடியே வெளி யிட்டது. அவனது விடையும் அதற்கு எதிரொலி போன்றே இருந்தது. அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தம் காதலை வெளியிட்டு, உலகுமாறினும் ஊழிமாறினும் மாறா உறுதி கூறி இறைவனே சான்றாகக் காதல் மணம் செய்துகொண்டனர்.

ஆயினும் உலகத்தோடொப்ப அந்தணர் சான் றும் வேண்டுவதேயாகலின் மறுநாளே அவனிடம் ஒரு தூதனை அனுப்புவதாகவும், மணவினை நாள் முதலிய விவரங்களை, அவன் மூலம் அறிவிக்க வேண்டுமென்றும் அவள் வேண்டிக்கொண்டாள்.

மேலும் அவர்கள் பேசுவதற்கில்லாது போயிற்று. ஜூலியட்டின் தாய் அவளைத் தன் பக்கம் காணாமல் ‘ ஏன் இராப்பொழுதில் பனியில் போய் நிற்கிறாய்?’ என்று கடிந்து அவளை உள் அழைத்தாள். தாய்ப் பணி ஒரு புறமும் காதல் ஒரு புறமும் இழுக்க ஜூலியட் மீண்டும் மீண்டும் வந்து ரோமியோவிடம் காதல் கனிந்த மொழிகள் பேசிப் பிரிவு பெற்றுக் கொண்டாள்.

அவர்கள் பிரிந்தபோது விடியும் நேரமாயிருங் தது. வெளியே நிலவு மங்கி கதிரொலி வீசலா யிற்று. ரோமியோவுக்கு அப்போதுதான் பகல் போய் நிலவுவருவது போல இருந்தது.

திரும்பத் தன் வீடு சென்று முன்போல் நண்ப ருடன் பொழுது போக்க அவனுக்கு மனம் வர வில்லை. காதல் நினைவு ஒன்றைத் தவிர வேறெதற் கும் அவன் மனத்தில் இடமில்லை. எனவே தன் வீடு செல்லாது நகர்ப் புறத்திலுள்ள ஒரு மடத்தை நோக்கி நடந்தான். அதில் லாரென்ஸ் ‘ என்ற ஒரு துறவி உறைந்து வந்தார். அவர் இன்ப வாழ்க்கை யைத் துறந்த துறவியேயாயினும் அன்பு வாழ்க்கையைத் துறந்தவர் அல்லர். ரோமியோவிடம் சிறப் பாக அவர் பரிவுடையவர். ரோஸாலினையே தஞ்ச மென அவன் திரியும் காலத்தில், அவர் அவனிடம் அவள் அன்பற்றவள், அவளை நம்பி அலைவா னேன். அன்பின் முதல்வனாகிய அருட்கடலை விட்டுவிட்டு இச் சிற்றின்ப வலையிற் பட்டு ஏன் அலைகிறாய்?’ என்று அறவுரை கூறுவர்.

ரோமியோவின் புதிய காதல் வரலாற்றைக் கேட்டதும் முதலில் அவருக்கு நகைப்பு ஏற்பட்டது. என்னே ! மனிதரின் மடமை? நட்ட நடுவிலிருக் கும் நறுநீர்ச் சுனையை விடுத்து அதனைச் சுற்றி நாற் புறத்திலும் காணப்படும் கானல் நீரைத் தேடி அலை கின்றனரே? ஒரு தடவை இரு தடவை ஏமாந் தால் போதாதா? பின்னும் அவ்வகையிலே புதிய புதிய மாதிரியா ஏமாற்றுக்குள் விழ வேண்டும்! என்று அவர் முணு முணுத்துக் கொண்டார். அது கேட்டு ரோமியோ , ‘ அடிகளே! தாங்கள் அறியாதது என்ன? இறைவனது அருளை நேரடியாக அடையச் சிறியேம் தகுதியுடையேம் அல்லமே ; பொறுத்தருள்க. எமது கண்ணில் இக் காதலே பெரிதாகப் படுகிறது. அதன் வழியாகவே எம்மைக் கடைத்தேற்றுக’ என்றான். துறவியின் ஏளனச் சிரிப்பு புன்முறுவலாக மாறிற்று. ‘ அப் படியே ஆகுக. உனக்கு நான் செய்ய வேண்டும் உதவி யாது?’ என்றார். ரோமியோ, தன் ஜூலி யட்டை மணக்கும்படி உடனிருந்து உதவ வேண்டும் என்றான்.

எப்பொருளிலும் நற்பொருளே காணும் பெருந் தகையோராகிய லாரன்ஸ், ரோமியோ ஜூலியட் ஆகிய இவர்கள் காதலை வற்புறுத்தி மணவினையால் அவர்களைப் பிணைத்து விட்டால் அதன் மூலம் மாண்டேகுக்கள் கப்பியூலத்துக்கள் ஆகிய இருகுடி யினரின் பழம்பகையும் ஒழிந்து நகரில் அமைதி நில வும் என்று மனத்துட்கொண்டார். அவர் இணககம பெற்று ரோமியோவும் ஜூலியட்டுக்குச் செய்தி சொல்லி அனுப்பினான். அன்றிரவே , ஜூலியட் பிறரறியாமல் அம்மடத்திற்கு வந்து ரோமியோவை மணந்து கொண்டாள்.

4. துயரமும் பிரிவும்

அன்றிரவு ரோமியோ ஜூலியட்டின் மாளி கைக்கு வந்து அவளைக் காண்பதாகக் கூறியிருந் தான். அதனையே எண்ணி எண்ணி அவள் போகாத அப் பகலைப் போக்கி வந்தாள். ஆனால் அப் பகல் அவள் எதிர்பார்த்ததைவிட அவளுக்குக் கொடியதாயிருந்தது.

விருந்து நாளன்றே ரோமியோமீது கறுவிக் கொண்டு சென்ற டைபால்ட்டு, நகரத்துத் தெருக் களில் மெர்க்குதியோவையும் ரோமியோவையும் கண்டு அவர்களைக் கடுமொழியால் தாக்கினான். இருபக்கத்தினரும் முதலில் வசைமாரியில் தொடங்கி விரைவில் அடிதடி மாரியிலிறகினர். ரோமியோ சிலநேரம் இப்பூசலில் கலக்காது அதை விலக்கவே முயன்றான். இயற்கையிலேயே அவனுக்கு இத் தகைய அடிதடிகளில் பற்றில்லை. இப்பொழுதோ கப்பியூலத்து என்ற பெயரே அவன் காதுக்கினிமை தருவதாயிருந்தது. ஆனால் அவன் பின் வாங்கப் பின்வாங்க, டைபாலடு மட்டுக்குமிஞ்சிச் சீறி பெழுந்து அவனைக் கோழை என்றும் பேடி என்றும் வைது தாக்கினான் இத்தகைய அவமதிப் பைப் பொறுக்க முடியாமல் ரோமியோ சினத்துடன் வாளால் அவனைத் தாக்கினான். டைபால்ட்டு பேச்சு வீரனேயன்றி வாள் வீரனல்லன். ஆகலின் ரோமி யோவின் தாக்கை எதிர்த்து நிற்கமாட்டாமல் வாளே றுண்டு மாண்டான். அடிதடியோடு இங்ங னம் கொலையும் சேர நகர மாந்தர் அனைவரும் பெருங் கலவரம் அடைந்தனர். விரைவில் எள் விழ இடமின்றி எங்கும் மக்கள் திரண்டெழுந்தனர்.

நகரின் நிலை கண்டு கலக்கமுற்ற நகர்த்தலைவ னும் சண்டை நடந்த இடத்துக்குவந்து இருதிறத்தா ரையும் நிறுத்தி உண்மையை ஆராய முயன்றான். இத்தகைய நேரங்களில் நடுநிலை உண்மை காண்பது அருமை. எப்படியும் அமைதியை நிலை நிறுத்துவ திலேயே கண்ணாயிருந்த தலைவன் இருதிறத்தாரை யும் புண்படுத்தாமல் தீர்ப்பளிக்க வரும்பி , ரோமி யோவை நகரினின்றும் துரத்திவிட்டான்.

நகரெங்கும் பரவிவிட்ட இச்செய்திகள் ஒன் றன் பின் ஒன்றாக ஜூலியட்டின் செவிகளிலும் புகுந்தன. அச் செய்திகளுக்கு, மாறாக உருக்கிய நாராசம் அவள் காதில் பாய்ந்திருந்தால் அவள் அத னைப் பொருட்படுத்தி யிராள். ‘காக்கைக்குந் தன் குஞ்சு பொன் குஞ்சு ” என்னுமாறுபோல டைபால்ட்டு அவள் உறவினனான தால், அவன் குற் றம் முதலில் அவள் கண்ணுக்குப் படவில்லை. அவள் சீற்றமனைத்தும் முதலில் ரோமியோவிடமே சென் றது. அவன் காதலனாகவே வந்தான் என்பதை மறந்து, தன் மைத்துனனுக்குக் காலனாகவே வந் தான் என்று வைதாள். ஆனால் முதல் எழுச்சி தணிந்ததன்பின், ரோமியோவின் காதலைப் பற்றிய நினைவும் அவனுடைய நற்குணமும் நடையும் அவள் கண் முன் நின்று அவள் சீற்றத்தைத் தணித்தன. அச் சண்டையை நேரில் பார்த்த அவள் தோழியர் சிலர் அவனுடைய நேர்மையையும் வீரத்தையும் போற்றியதை அவள் செவிகுளிரக் கேட்டாள். மேலும் அவன் கூடியவரை டைபால்ட்டை எதிர்க் காமலே இருந்தான் என்றும் டைபால்ட்டு தன்னைக் கோழை என்று அவமதித்த பின்னரே வேண்டா வெறுப்பாகச் சண்டையில் நுழைந்தான் என்றும் அவள் அறிந்தபோது அவன் மீதிருந்த சீற்றம் எல் லாம் பாராட்டாக மாறியது. ‘ஆ. என் காதலின் தகு தியை நானே குறைத்துக்கொண்டேனே! நான் இப் பெருந்தகை வீரனுக்குத் தகுதி யுடையேன் அல் லேன்’ என வருந்தினாள். மேலும் ‘ என் மைத் துனன் ஓர் உதவாக்கறை. அவன் இறந்தது கூடப் பெரிதன்று; என் ரோமியோவுக்கு அவன் ஊறு செய்திருந்தால்…….ஓ அதை நான் எவ்வாறு பொறுப்பேன்’ என நினைத்து அவள் அவன் செய்கைக்காக வருந்தாமல் நன்றி செலுத்தக்கூடத் தொடங்கினாள்.

ரோமியோவுக்குத் தான் நாடு கடத்தப்பட்ட செய்தி பேரிடி போன்றிருந்தது. தூக்குத் தீர்ப் புக்கூட அவனுக்கு அவ்வளவு கொடிதாகத் தோன்றியிராது. ஏனெனில் அவன் ஜூலியட் இருக்கும் நகரில் இராது வேறெங்கேபோய் இருக்க முடியும்? அவள் இருக்குமிடம் அவனுக்கு விண்ணுலகம். அவள் இல்லாத இடம் மண்ணுலகுகூட அன்று ; நரகம்கூட அன்று ; அதனினுங் கொடிய உலக மேயாம். இதில் வாழ்வதைவிட இறப்பதே மே லென்று துணிவுறலானான். அப்போது அத் துறவி, என்ன கூர் அறிவு உனக்கு? நீ உன் காத லியை விட்டுச் சீற்றுத் தொலைவில் செல்ல அஞ்சி இறந்தாயானால் உன் உயிரை இழந்து ஜூலியட் எப்படி வாழக்கூடும்? என்றார். முதலில் இதை எண்ணிப் பார்க்காத ரோமியோ பின்னும் மனங் கலங்கி , ‘ அந்தோ , அங்ஙனமாயின் நான் என்ன தான் செய்வது? வாழவும் வகையில்லை ; மாளவும் வகையில்லையே ; நீர்தாம் ஒரு வழி காட்டுவீர்!’ என்றான்.

அருளும் அறிவும் நிறைந்த அத் துறவி சில நேரம் ஆழ்ந்து எண்ணமிடலானார். அதன்பின் தெளிந்து, ‘ நான் கூறுகிறபடி கேள். இன்றிரவு இறுதியாக ஜூலியட்டைக் கண்டு விடைபெற்றுக் கொண்டு ‘மாந்துவா நகரத்துக்குச் சென்று உறை வாயாக. அதன் பின் நான் வேளை நயமறிந்து தலை வருக்கும் நகர மக்களுக்கும் உங்கள் மணச் செய் தியை அறிவித்துச் சேராத இரு குடியினரையும் சேர வைப்பேன். அதன் பின் நீ வந்து நகரறிய அவளை மனைவியாகப் பெற்று வாழலாம்’ என்றார். ரோமியோவுக்கு இது பொருத்தமாகவும் நலமாக வும் பட்டபடியால் அதன்படியே நடக்க இசைந் தான்.

ஜூலியட்டின் தோழியர் சிலரது துணையால் அன்றிரவு ரோமியோ அவளது மாளிகையுள் அவளைத் தனிமையாகக் கண்டு உறவாட முடிந்தது. முதல் முதல் அம் மாளிகையில் அவர்கள் கூடிய போது அக் கூட்டுறவு மாசு மறுவற்ற காதலின்ப மாகவே இருந்தது. இப்போது பிரிவுத் துன்பத் துடன் அது கலந்து துன்பமோ இன்பமோ என்று – கூறமுடியாத நிலையி லிருந்தது. அவர்கள் ஒருவ ருடன் ஒருவர் பேசக்கூட முயன்றிரார். அதற்கு முன் விடிந்து விட்டது போல் அவர்களுக்குத் தோற் றியது. கடையாமத்துக் கோழி கூவினபோது ரோமியோ திடுக்கிட்டான். ஆனால் ஜூலியட் சற்றே நகைத்து அது கடையாம மன்று ; இரண் டாம் யாமமே என்றாள். வெளியே வந்தபோது விடிவெள்ளியைக் கண்டு நேரமாயிற்றென அவன் கலவரப்பட்டபோது, அவள் அது விடிவெள்ளி யன்று ; அது செட்டியைக் குடிகெடுத்த வெள்ளி ; இன்று உன் அமைதியைக் கெடுக்கவந்தது போலும்!’ என்றாள்.

ஆனால் பொய்யின் துணையால் தன்னையே எத்தனை தடவை வஞ்சிக்கமுடியும். கிழக்கு வெளுத் தது. சின்னஞ் சிறு பறவைகள் தம் பெற்றோரது பிரிவஞ்சிக் கலகலத்தன. இனித் தாம் பிரிந்தே யாகவேண்டும் எனக் கண்டனர் காதலர் . : ஆனால் அவர்கள் பிரிந்தாலும் அவர்கள் உடல் பிரியமாட் டேன் என்று முரண்டின. கன்றை விட்டுச் செல் லும் ஆ போன்று மீண்டும் மீண்டும் வருவான் ரோமியோ. கருத்தை இழந்தவள் போன்று மீண் டும் மீண்டும் அவனை அழைத்துப் பேசுவாள் ஜூலி யட். இங்ஙனம் காலம் தாழ்த்துவதால் காதல னுயிருக்கு இடுக்கண் என்பதை ஓர்ந்து அவள் அவனை எச்சரித்து, மனம் கவல வேண்டாம்; நான் நேற்றுவரை சிறு பெண். இன்று உன் காதலால் பெரியவளாய் விட்டேன். நாம் ஒன்றுபடும் நாள் வரை நான் ஆண்மையுடன் பிரிவைப் பொறுத் திருப்பேன். நீ கவலையற்று அந் நன்னாளுக்கான ஏற்பாடுகளைச் செய்க’ என்று கூறி, அவனை அனுப் பினாள். அவனும் நாள்தோறும் தவறாது தன் நிலை மையையும் காதலையும் கடிதமூலம் வரைவதாக உறுதி கூறிச் சென்றான்.

5. துறவியின் திட்டமும் முடிவும்

ஜூலியட்டின் அறையினின்று கீழிறங்கிய பின் ஜூலியட் கண்ணுக்கு அவன் அவ் வரையிரு ளில் புதையுண்டு போவது போல் தோற்றியது. அத் தீய நினைவை அவளால் விலக்கக்கூடவில்லை. அதே போன்று அவன் கண்ணுக்கு அவள் முகில்க ளிடையே மறைவது போல் தோன்றினள். இத் தகைய நினைவுகளுக் கிடங்கொடுக்காது அவன் விரைந்து நகரை விட்டு நீங்கினான்.

அது முதல் அவர்கள் தீவினை அவர்கள் காத லின்போக்கில் வந்து குறுக்கிட்ட தென்னவேண்டும். ஜூலியட் காதலாலும் துயராலும் அடைந்த மாறு தல்களை அவள் தாய்தந்தையர் கவனியாமலில்லை. பெண் பெரியவளாய்விட்டாள். அவள் உள்ளம் உலைவுறத் தொடங்கிற்று எனக் கண்டு அவர் கள் – அவள் மணவினையை விரைவில் முடிக்க வேண்டுமென நினைத்தனர். அதற்கேற்றபடி, அவர்கள் நெடுநாள் மனத்திற்குள் அவளுக் கேற்றவ னென்று நினைத்திருந்த கவுண்ட் பாரிஸ் தானாகவே அவளை மணஞ் செய்து கொள்ள விரும்பிக் கடிதம் எழுதினான். அது கண்டு மகிழ்ந்து உடன் தாமே அவன் விருப்பத்திற்கு உடன்பட்டதோ டன்றி விரைவிலேயே மண நாளையும் குறிப்பிட்டனுப்பினர்.

கவுண்ட் பாரிஸ் ஜூலியட்டை ஒத்த பெண் கள் விரும்புந் தலைவன் என்பதில் ஐயமில்லை. ஆனால் ரோமியோவினிடமே மனம்வைத்து அவன் மனைவியாய்விட்ட ஜூலியட் அவனை மணப்ப தெங்ஙனம்? தன் மனத்தை வெளியிட்டுச் சொல்லி மறுத்துவிடலாமா என்று நினைத்தாள். எதற்கும் தனக்கும் தன் ரோமியோவுக்கும் உற்ற நண்பரான துறவியினிடம் சென்று அவரது அறிவுரையைப் பின்பற்றுவோம் என் றெண்ணினாள்.

ஜூலியட்டின் மணச் செய்தியை இப்போது வெளியிடுவதனால் நன்மை விளையாது என்று லாரென்ஸ் எண்ணினார். ஆனால் நிலைமையோ முற்றி விட்டது. தப்ப வழி வேண்டும். அவர் மனத்தில் ஓர் அரிய எண்ணம் தோன்றியது. அதனைச் செய்து முடிக்க வீரமும் துணிவும் வேண்டும் என்று அவர் ஜூலியட்டினிடம் கூறினார். ஜூலியட் ‘ என் காதலனுக்காக நான் எதனையும் துணிந்து செய் வேன். என்னை நம்பலாம். தங்கள் எண்ணத்தை வெளியிடுக ‘ என்றாள். அவர் அவள் கையில் மயக்க மருந்து ஒன்றைக் கொடுத்து, ‘இதனை உட்கொண்டோர் நாற்பத்திரண்டு மணி நேரம் இறந்தவர்போல் கிடப்பர். பின் உயிர் மீண்டார்போல் எழுந்திருப்பர். இதனை மணநாளின் முன் நீ உட்கொண்டால் இறந்த வள் போல் கிடப்பாய். பெற்றோரும் உற்றோரும் உன்னை இறந்தவள் எனவே கொண்டு உங்கள் குடும் பத்தாருக் குரிய கல்லறையில் கொண்டு அடக்கம் செய்வர். அதற்குள் ரோமியோவுக்கு நான் கடிதம் எழுதி வரவழைத்து உன்னை அழைத்துப்போகச் செய்வேன். அதன்பின் மணவினையை நான் வெளியிடும் வாய்ப்பு நேர்ந்தபோது நீங்கள் வெளிப் படலாம்’ என்றார். ஜூலியட் மகிழ்ச்சியுடனும் துணிவுடனும் இவ்வேற்பாட்டுக் கிணங்கினாள்.

முதன் முதலில் பாரிஸை மணக்கவேண்டு மென்று பெற்றோர் சொன்னபோது அவள் முகம் கோணியது கண்டவர் இப்போது அவள் அமைந்த முகத்துடன் விளங்குவது கண்டு வியப்படைந்தனர். ‘பாரிஸை நேரில் கண்டபின் வந்த மாறுதல் இது. ஆளை அறிவதன் முன் காதல் கொள்வ தெங்ஙனம்,’ என அவர்கள் மனந்தேறினர். பாரிஸினிடம் அவள் மணப்பெண் மாதிரி நடக்கவில்லையாயினும் நெடு நாள் பழகிய உறவினரிடம் நடந்து கொள்வது மாதிரி நடந்துகொண்டாள் சூதொன்று மறியாத பாரிஸ், ‘காதலொன்றும் அறியாத சிறு பெண் தானே ‘ என்று நினைத்தான்.

மண நாளைக்கு முந்திய இரவில் ஜூலியட் மருந்தை உட்கொண்டாள். விடியுமுன் எழுந்து தோழியரும் தாயும் அவளை எழுப்பி மணப்பெண் ணுக்குரிய வாழ்த்துக் கூற வந்தனர். அவர்கள் கண்ட காட்சியையும் அவர்கள் அடைந்த திகிலையும் யாரே மதிப்பிடக்கூடும் ? அழகே வடிவெடுத்த அவள் வடிவம் தந்தத்தால் கடைந்தெடுத்த பாவை போல் கிடந்தது. நெடுநேரம் உடலை யசைத்தும் ஓசை யுண்டுபண்ணியும் உருட்டிப் புரட்டிப் பார்த்தும் பயனில்லாது போகவே இறந்தாள் என்று கருதிக் கதறினர். பெண்ணழைக்க வந்த மண மகன் பாரிஸ் அவ்வொலி கேட்டுக் கலங்கி ஓடிவந்து பார்த்தான். பார்த்து அவனும் இடியொலி கேட்ட அரவம் போல் மெய்ம்மறந்து அவள் அருகில் வீழ்ந்து புரண்டான்.

மன்றங் கறங்க மணப்பறை ஒலிக்க வேண்டிய அன்றே பிணப்பறை ஒலிக்கலாயிற்று.

சுற்றத்தினரும் நண்பரும் நகர மக்களும் அழு தரற்ற ஜூலியட்டின் உடலம் நகர்ப்புறத்துள்ள கப்பியூலத்துக் குடியினரின் கல்லறையிற் கொண்டு போய்ச் சேர்க்கப்பட்டது. அதற்குச் செய்ய வேண் டும் கடமைகளனைத்தும் நிறைவேற்றிய பின் ஒருவர் பின் ஒருவராகக் கலைந்தனர். ஜூலியட்டின் தாய் தந்தையர் கோ வெனக் கதறிய வண்ணமே அங்கு நின்றும் இழுத்துச் செல்லப்பட்டனர். பாரிஸ் உணர்வற்ற நிலையில் கொண்டுபோகப்பட்டான்.

ஜூலியட் உணர்வற்ற நிலையில் தனியே அக் கல்லறையுட் கிடந்தாள்.

இதற்கிடையில் துறவியாகிய லாரென்ஸ் புதி தாக ஏற்பட்ட நிலைமையினையும், அதனால் நேர்ந்த இக்கட்டையும், அதனை மாற்றத் தான் செய்த சூழ்ச்சி யினையும் இனிச் செய்ய வேண்டும் காரியங்களையும் பற்றி விவரமாக எழுதிய கடிதமொன்றை ஓராள் மூலமாக ரோமியோவுக்கு அனுப்பினார். அச்செய் தியை விரைவில் கொண்டு சேர்க்கும்படி அவர் அத் தூதனுக்கு மீண்டும் மீண்டும் சொல்லியிருந்தார். ஆனால் ஊழ்வலியால் அத்தூதன் வழியில் காலந் தாழ்த்திவிட்டான். நல்ல செய்திகளை விடத் தீய செய்திகளே விரைவில் பரவும் என்பதற் கிணங்க, அதற்குள் ஜூலியட் இறந்தாள் என்ற துயர் தரும் செய்தி பரவி ரோமியோவின் காதுவரை எட் டியது. அது கேட்டு ரோமியோ துடிதுடித்த உள் ளத்தினனாய்த் தலைகால் தெரியாமல் ஓடோடியும் வெரோணாவுக்கு வந்து நகர மக்களால். அவள் இறந்த செய்தியை உறுதிப்படுத்திக்கொண்டு கல் லறைக்குச் சென்றான். அங்கே அதற்கு முன்ன தாகவே ஜூலியட்டை மணக்க எண்ணிய பாரிஸ் < வந்து அவள் உடல் மீது மலர் தூவிக்கொண்டிருந் தான். ரோமியோ ஜூலியட்டின் காதலன் என் றறியாது அவள் இறந்தபின் உடலை அவமதிக்க வந்தானென்று நினைத்துப் பாரிஸ் அவனை எதிர்த்தான். இருவருக்கும் நடந்த சண்டையில் பாரிஸ் வீழ்ந்திறந்தான். அவன் ஜூலியட்டை மணக்க வந் தவன் என்று கேட்டிருந்த ரோமியோ அவனை வேறிடத் தடக்கம் செய்தபின், ஜூலியட் உடலின் அருகே வந்து நஞ்சுண் டிறந்தான்.

ஜூலியட் மயக்க மருந்தின் வன்மை தீர்ந்த பின் எழுந்து தன் அருகே தன் காதலன் மாண்டு கிடப்பது கண்டாள். அதன் காரணம் என்ன வென்று அவளுக்கு விளங்கவில்லை யாயினும், அவன் இறந்தான் என்பது மட்டும் கண்கூடா யிற்று. இனி எது எப்படியானால் என்ன என்று அவளும் அவனருகிற் கிடந்த உடைவாளால் தன் உயிரைப் போக்கிக் கொண்டாள்.

தான் எழுதிய கடிதப்படி ரோமியோ வரக் காலந் தாழ்த்தது கண்டு, துறவி நேராகத் தானே கல்லறை எய்தி ஜூலியட்டைக் கூட்டிப்போகலாம் என்று வந்தார். வந்து அங்கு நடந்த காட்சி களைக் கண்டு, துறந்த மனமும் துடிக்கக் கண் கலங் கினார். அதற்குள்ளாக ரோமியோவும் பாரிஸம் கல்லறைப் பக்கம் போவது கண்ட சிலர் என்ன நேருமோ என அஞ்சிப் பின் வந்தனர். அவர் களும் இக்காட்சியைக் கண்டு திகைத்து நாலா புற மும் சென்று புலம்பினர். அரை நாழிகைக்குள் நகர மாந்தர் அனைவரும் தலைவரும் கல்லறை வந்து சேர்ந்தனர். அவர்களிடையே கிழவர்களான ரோமியோவின் பெற்றோர்கள் ஒரு புறமும், ஜூலி யட்டின் பெற்றோர்கள் ஒரு புறமும் வந்து நின்றனர். அவர்கள் வடித்த கண்ணீ ர் ஆறாகப் பெருகி அவர் கள் பகைமையைக் கருதாது ஒன்றாகக் கலந்தன. இத்தனை நாள் இன்பத்திடையேயும் நாயும் பூனையும் போல் சண்டையிட்ட இப் பெரிய குடியினர் தம் கான் முளைகள் தம் பகைமைக்கே பலியாயின வென்று கண்டு மனம் அழுங்கினர்.

லாரன்ஸ் அவர்களுக்கு நடந்ததை யெல்லாம் அடிமுதல் முடிவரை எடுத்துக் கூறி, ‘நானொன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைத்தது. உங்கள் பகைமை இத்துடனாவது போகட்டும் ; உங்கள் பிள்ளைகள் இறந்தபோதும் அவர்கள் காதலின் புகழ் நின்று நிலவும்படி அவர்களை ஒரேகல்லறையி லிட்டு அவர்கள் நினைவுக் குறியாகப் பெரியதொரு மண்டபம் நிறுவுமின் ; கடவுள் அக்கா தலர் உயிர் களைக் காத்து உங்களை மன்னிப்பாராக!’ என்று கூறி அகன்றார்.

வெரோணா நகரத்தார் அக்காதலர் நினைவுக் குறியாகிய மண்டபத்தையே நகர மண்டபமாகக் கொண்டு அவர்களைப் போற்றினர்.

– K.அப்பாதுரைப் பிள்ளை, சிறுவர்க்கான ஷேக்ஸ்பியர் கதைகள் (நான்காம் புத்தகம்), முதற் பதிப்பு: 1945, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *