உலகிலேயே பலசாலியாக யாருமே இருக்கமுடியாது. ஒருவன் வல்லவனாக இருந்தால், அவனைவிட வல்லவனாக ஒருவன் வந்தே தீருவான். அதனால், ‘நான் சிறந்தவன்’ என்ற தலைக்கனம் எப்போதும் வரக்கூடாது என்பதை விளக்கும் நைஜீரியாவின் ஹௌஸா (Hausa) பழங்குடிகளின் கதை இது.
ஷடூஸா என்றொரு பலசாலி இருந்தான். வீட்டுக்காக விறகு வெட்ட போகும்போது, மற்றவர்களைவிட இரண்டு மடங்கு அதிகமாகச் சுமந்துவருவான். ஒருமுறை வேட்டையில் இரண்டு பெரிய மறிமான்களைத் தூக்கிவந்தான்.
ஒருநாள் தன் மனைவி ஷெட்டுவிடம், “என் சதைப்பற்றுகளைப் பார். உலகிலேயே பலசாலி நான்தான். அதனால், இப்போதிருந்து என்னைப் பலசாலி என்றே கூப்பிடு” என்கிறான்.
அதற்கு ஷெட்டு, “ஆணவத்தோடு பேசாதீர்கள். நீங்கள் எவ்வளவு பலசாலி என்பது முக்கியமில்லை. உங்களைவிடப் பெரிய பலசாலி நிச்சயம் இருக்கத்தான் செய்வான். ஒருநாள் அவனைச் சந்திக்கத்தான் போகிறீர்கள்” என்கிறாள்.
அடுத்த நாள் ஷெட்டு பக்கத்து ஊருக்குச் சென்றபோது வழியில் தாகம் எடுத்தது. தண்ணீர் குடிப்பதற்காக அருகிலிருந்த கிணற்றில் வாளியைப் போட்டுத் தண்ணீர் நிரப்பி தூக்க முயன்றாள். ஆனால், தூக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.
அந்தச் சமயத்தில் வழியில் குழந்தையோடு வந்த பெண்மணி, “ஏன் இவ்வளவு சிரமப்படுகிறீர்கள்? என் மகன் உங்களுக்கு உதவுவான்” என்று கூறி, தன் குழந்தையிடம் உதவுமாறு பணிக்கிறாள்.
குழந்தையும் அநாயாசமாக வாளியை மேலே தூக்கிக் கொடுக்கிறான். ஷெட்டுவுக்கு ஆச்சர்யம். “அது எப்படிக் குழந்தையால் இவ்வளவு கடினமான வேலையை எளிதாக முடிக்க முடிந்தது?”
“அவன் தன் அப்பாவைப் போன்றவன். அவர்தான் இந்த ஊரிலேயே மிகவும் பலசாலி” என்கிறார்.
ஷெட்டு வீட்டுக்கு வந்தவுடன் ஷடூஸாவிடம் கூறுகிறாள். “என்ன பலசாலியா!” என்று ஆத்திரத்தோடு கத்தியவன், “அவன் பலசாலியாக இருக்கமுடியாது. நான் அவனுக்குப் பாடம் புகட்டுகிறேன்” என்கிறான்.
“அன்புக் கணவரே! தயவுசெய்து வேண்டாம். குழந்தையே இவ்வளவு பலசாலியாக இருக்கிறதென்றால், அவன் அப்பா எவ்வளவு பலசாலியோ! எனக்குப் பயமாக இருக்கிறது” என்று கெஞ்சுகிறாள்.
ஷடூஸாவின் காது ஆத்திரத்தால் அடைக்கப்பட்டிருந்தது. “அதையும் நான் பார்த்துவிடுகிறேன்” எனக் கிளம்புகிறான்.
அடுத்த நாள் காலையிலேயே பக்கத்துக் கிராமத்தை அடைந்த ஷடூஸா, அதே கிணற்றுக்கு வந்து வாளியைப் போட்டுத் தூக்க முயன்றான்…. முடியவில்லை.
அந்தப் பெண்மணி குழந்தையோடு வந்தபோது, அவர்கள் செய்வதைப் பார்த்து ஷெட்டு மாதிரி ஷடூஸாவுக்கும் ஆச்சர்யம் தாங்கவில்லை. “என்னால் தூக்கவே முடியவில்லை, குழந்தை மட்டும் எப்படி இவ்வளவு சாதாரணமாகத் தூக்குகிறான்?” எனக் கேட்கிறான்.
அந்தப் பெண் நேற்று ஷெட்டுவிடம் கூறிய பதிலையே சொல்கிறாள். ஷடூஸாவுக்கு வயிற்றில் கொஞ்சம் புளியைக் கரைக்க, ‘பேசாமல் ஊருக்குத் திரும்பிவிடுவோமா!’ என்று சிந்திக்கிறான்.
ஆனால், அவனது ஆணவம் அதற்கு இடங்கொடுக்கவில்லை, “அவனை நான் பார்க்க வேண்டும். உங்கள் கணவருக்குப் பாடம் புகட்ட வேண்டும்” என்கிறான்.
“அவர் இப்படிச் சொல்பவர்களைக்் கொன்றுவிடுவார்” என்று அவள் சொன்னதைக் கேட்காமல் அடம்பிடிக்கிறான் ஷடூஸா. வேறு வழியின்றி அந்தப் பெண்ணும் வீட்டுக்கு அழைத்துச்செல்கிறாள். அங்கு சாப்பிட்டுத் துப்பிய எலும்புகள் மலைபோல் குவிந்துகிடக்கிறது.
“என்ன இதெல்லாம்?”
“அதெல்லாம் யானைகள். எங்கள் குடிசை மிகச் சிறியது. அதற்குள் அவர் சாப்பிட இடம் போதவில்லை. அதனால் வெளியே அமர்ந்துதான் சாப்பிடுவார்” என்றபோதே பெரிய உறுமல் சத்தம் கேட்கிறது.
“அவர் வந்துவிட்டார்!” என்றவுடன் ஷடூஸாவுக்குப் பயம் தொற்றிக்கொண்டது. “அய்யோ… இவர்கள் பொய் சொல்லவில்லை. நான் உடனடியாகத் தப்பிக்க வேண்டும்” என்றபடி, அவனைவிடப் பெரிய பானைகளுக்குள் ஒளிந்துகொள்கிறான்.
“அன்பு மனைவியே! இந்த நாள் எப்படி இருந்தது?” என்று கேட்டுக்கொண்டே பெரிய யானையைத் தோலில் போட்டுக்கொண்டு வீட்டுக்குள் நுழைகிறான் கணவன்.
“இன்று ஆயுதங்களை மறந்துவிட்டுச் சென்றுவிட்டேன். அதனால் இந்த யானையைக் கையாலேயே கொல்ல வேண்டியதானது” என்றவன், வேற்று மனிதனின் வாடையை மோப்பம் பிடித்து விட்டான். “இங்கு வேறு யாரோ இருக்கி றார்கள்” என்று தேடத் தொடங்குகிறான்.
அவன் மனைவியும், “உடனடியாக இங்கிருந்து ஓடிவிடு” என்று கத்திவிட்டு, “பாவம் விட்டுவிடுங்கள். உங்கள் பலம் தெரியாமல் உங்களோடு போட்டிபோட வந்துவிட்டான்” என்றாள்.
தப்பித்து ஓடிய ஷடூஸா, வழியில் ஐந்து விவசாயிகளைப் பார்க்கிறான். “அந்தப் பலசாலி என்னைத் துரத்துகிறான் காப்பாற்றுங்கள்” என்று உதவி கேட்கிறான்.
“நீ கவலைப்படாதே! நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” என்றவர்கள், அந்தப் பலசாலியின் உறுமல் கேட்டதும் தலைதெறிக்க ஓடிவிட்டனர். அதேபோல் பானை செய்பவரிடம் உதவி கேட்கிறான், அவரும் பயந்துபோய் கடையைப் பூட்டிவிட்டுத் தப்பிக்கிறார்.
ஓடத்தொடங்கிய ஷடூஸா, சாலையோ ரத்தில் ஒருவனைப் பார்க்கிறான். அவனுக்குப் பின்னால் அதேபோல் யானை எலும்புகளின் குவியல் கிடக்கிறது. அவனிடம் போய், “என்னை இந்த ஊரின் பலசாலி துரத்துகிறார். தயவுசெய்து காப்பாற்றுங்கள்” என்று முறையிடுகிறான்.
“என்ன பலசாலியா! அப்போ நான் யார்? அவனை அப்படிக் கூப்பிடாதே. நான்தான் உண்மையான பலசாலி. வரட்டும் ஒரு கை பார்க்கிறேன்” என்று கர்ஜிக்கிறான்.
உறுமல் சத்தம் கேட்கிறது. “வா… என்னைத் தாண்டி அவனைப் பிடித்துக்கொள்” என்று புது பலசாலி சவால் விடுகிறான். இருவரும் சண்டைபோடத் தொடங்குகிறார்கள். நிலம் அதிர மோதுகிறார்கள்.
அவர்களின் சண்டையால் ஏற்பட்ட சத்தம் ஷடூஸாவின் காதைப் பிளந்தது. தூசுகள் அவனது கண்ணைக் குருடாக்கின. நில அதிர்வால் ஆடிய மரம், அவனைக் கீழே தள்ளிவிட்டிருக்கும். அதிர்ஷ்டவசமாகத் தப்பித்துவிட்டான்.
இருவரும் சண்டையிட்டுப் புரளுகிறார்கள். மேலே தாவுகிறார்கள். அப்படியே வானத்தில் எம்பிக் குதித்தபோது, அதிக உயரத்துக்குச் சண்டையிட்டுக்கொண்டே மேலே போனார்கள். மேகங்களுக்குள் மறையும்வரை சென்றார்கள்.
அவர்கள் மீண்டும் கீழே வருவார்கள் என நீண்டநேரம் காத்திருந்தான் ஷடூஸா.அவர்கள் வரவேயில்லை.
அன்றிலிருந்து ஷடூஸா எப்போதுமே தன்னைப் பலசாலியென்று சொல்லிக் கொள்வதேயில்லை.
அந்த இருவரும் இன்னமும் யார் பலசாலியென்று தெரிந்துகொள்ள மேகங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். சண்டையின் இடையில் ஓய்வெடுத்து, மீண்டும் மீண்டும் சண்டையிடுகிறார்கள்.
ஆனால், இருவரில் யார் பலசாலியென்று இன்னமும் முடிவாகவில்லை. அவர்கள் மோதும்போது அந்தச் சத்தத்தைச் சிலர் இடி என்று சொல்கிறார்கள்.
ஆனால், உண்மை என்னவென்றால்… இரண்டு முட்டாள்கள் தங்களில் யார் பெரிய முட்டாள் என்று தெரிந்துகொள்ள முயன்று கொண்டிருக்கிறார்கள்.
– நவம்பர் 2018