ஒரு விவசாயி தன் குடும்பத்தோடு நகரத்தை நோக்கிப் போய்க்கொண்டு இருந்தார். பயணத்தின் இரண்டாவது நாள் மதியம் அவர்கள் ஒரு பெரிய ஆலமரத்தைப் பார்த்தார்கள். அதன் கீழ் சற்று நேரம் ஓய்வெடுக்க நினைத்தார்கள்.
சும்மா உட்கார்ந்திருக்கும் நேரத்தில் கயிறு திரிக்கலாமே என்று நினைத்தார் விவசாயி. தன் மூத்த மகனை அழைத்து, பக்கத்திலே இருக்கற கடையில போய் கொஞ்சம் சணல் வாங்கிட்டு வா’’ என்றார்.
இரண்டாவது மகனை காய்கறி வாங்க அனுப்பினார்.
மூன்றாவது மகனை மளிகை சாமான்கள் வாங்கச் சொன்னார்.
மருமகள்களுக்கும் வேலை கொடுத்தார். ஒருத்தி சென்று தண்ணீர் எடுத்து வரவேண்டும். அடுத்தவள் விறகு எடுத்துவர வேண்டும். கடைசி மருமகள் மாவு பிசைய வேண்டும்.
தேவையான எல்லாப் பொருட்களும் வந்து சேர்ந்ததும் கயிறு திரிக்க மரத்தடியில் உட்கார்ந்தார் விவசாயி.
அந்த மரத்தில் ஒரு ராட்சசன் வசித்துவந்தான். விவசாயியும் குடும்பத்தினரும் மரத்தடிக்கு வந்து உட்கார்ந்ததில் இருந்து நடந்தது அத்தனையையும் ராட்சசன் கவனித்துக்கொண்டு இருந்தான். விவசாயி ஏன் கயிறு திரிக்கிறார் என்பது ராட்சசனுக்குப் புரியவில்லை. மரத்தில் இருந்து இறங்கி வந்தான். ‘‘ஏன் கயிறு திரிக்கிறாய்?’’ என்று கேட்டான்.
விவசாயிக்கு ரொம்ப பயமாக இருந்தது. அதை மறைத்துக்கொண்டு, ராட்சசனை முறைத்துப் பார்த்தார். ‘‘உன்னைக் கட்டத்தான் கயிறு தயாரிக்கிறேன்…’’ என்றார்.
இப்போது ராட்சசனுக்கு பயமாகிவிட்டது. உருவத்தில் பெரிதாக இருந்தாலும் அவனுக்கு பயந்த குணம்.
தடாலென்று விவசாயியின் காலில் விழுந்தான். ‘‘என்னை ஒண்ணும் பண்ணிடாதே. நான் உன்னைப் பணக்காரனாக்கறேன்’’ என்ற ராட்சசன், ஒரு புதையலைத் தோண்டி எடுத்து விவசாயியிடம் கொடுத்தான்.
விவசாயிக்கு குஷியாகிவிட்டது. தன் பயணத்தை முடித்துக்கொண்டு பெரிய பணக்காரனாக கிராமத்திற்குத் திரும்பினார்.
நடந்த விஷயங்களை விவசாயி மூலமே கேள்விப்பட்ட பக்கத்து வீட்டுக்காரர், தானும் தன் குடும்பத்தாருடன் ராட்சசன் தங்கி இருந்த மரத்தடிக்குப் போனார். தன் மகன்களிடமும் மருமகள்களிடமும் வேலையைச் சொன்னார். மகன்கள், ‘‘மர நிழல் சுகமாக இருக்கிறது. எங்களால் வெயிலில் போகமுடியாது’’ என்று சொல்லிவிட்டார்கள். மருமகள்களும் அவர் சொன்னதைக் கேட்கவில்லை.
அவர், தேவையான பொருட்களை தானே சேகரித்து மரத்தடியில் உட்கார்ந்து கயிறு திரிக்க ஆரம்பித்தார். மரத்தில் இருந்து ராட்சசன் இறங்கி வந்தான். பயமாக இருந்தது.
‘‘ஏன் கயிறு திரிக்கறே?’’ என்றான் ராட்சசன்.
‘‘வேற எதுக்கு உன்னைக் கட்டிப்போடத்தான்’’ என்றார் இவர்.
ராட்சசன் ஒன்றும் சொல்லவில்லை.
‘‘பயமா இருக்கில்லே..? எனக்கு புதையல் கொடுக்கலைன்னா உன்னை விடமாட்டேன்’’ என்றார் அவர்.
‘‘உன் குடும்பத்தைச் சேர்ந்தவங்களே உனக்கு பயப்படாதப்ப நான் எப்பிடி பயப்படுவேன்?’’ என்று கேட்டுவிட்டு சிரித்தான் ராட்சசன்.
மரத்தின் மீது ஏறிக்கொண்டே அவன் சொன்னான்: ‘‘வேற யாரையும் கட்டறதுக்கு முன்னாலே உன் மகன்களையும் மருமகள்களையும் கட்டிப்போடு..!’’
– வெளியான தேதி: 16 பெப்ரவரி 2006