யாருக்கு மரண தண்டனை?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 27, 2019
பார்வையிட்டோர்: 11,338 
 
 

அன்றும் வழக்கம் போல் தர்பார் கூடியிருக்க, அக்பர் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கையில் அவருடைய பணியாள் ஒருவன் ஒரு கூண்டுக் கிளியை அங்கு கொண்டுவந்து வைத்தான். கூண்டினுள்ளிருந்த பச்சைக்கிளி சிறகுகளை அடித்துக் கொண்டு ‘கீ’ ‘கீ’ என்று கத்தியது. அந்தக் கிளியை அன்புடன் பார்த்துக் கொண்டு இருந்த அக்பர், பின்னர் சபையோர் பக்கம் திரும்பி, “என்னுடைய நெருங்கிய நண்பன் இந்தக் கிளியை எனக்குப் பரிசாக அளித்திருக்கிறான். இந்தக் கிளி அழகாக இருக்கிறதல்லவா?” என்று கேட்டார்.

“ஆம், பிரபு! நானும் எத்தனையோ கிளிகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால், உங்களுடைய கிளியைப் போன்ற அழகான கிளியை இதுவரை நான் பார்த்ததில்லை” என்றார் தர்பாரில் இருந்த அக்பரின் அதிகாரிகளில் ஒருவரான ஃபயிஸ்கான்!

உடனே அவர் பக்கம் பார்வையைத் திருப்பிய அக்பர்,“உனக்குக் கிளிகளைப் பற்றி தெரியுமா? எப்போதாவது கிளி வளர்த்தது உண்டா?” என்று கேட்டார்.

“இன்று வரை நான் பதினைந்திற்கு மேற்பட்ட கிளிகளை வீட்டில் வளர்த்து இருக்கிறேன். ஆனால் அவற்றை விட உங்களுடைய கிளி மிகவும் அழகாக இருக்கிறது” என்றான் ஃபயிஸ்கான். இவ்வாறு சொல்லி அக்பரின் மனத்தைக் குளிரச் செய்ய முயன்றான்!

“மிகவும் நல்லதாகப் போயிற்று. உன்னை மாதிரி கிளி வளர்ப்பதில் அனுபவமுள்ள ஒருவனைத்தான் நான் தேடிக் கொண்டிருந்தேன். இதை வளர்க்கும் பொறுப்பை உன்னிடம் தர விரும்புகிறேன். இதை நீ உன் வீட்டுக்கு எடுத்துச் செல்! ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்! இந்தக்கிளி இறந்துவிட்டதாக எவன் செய்தி சொல்கிறானோ, அவனுக்கு மரணதண்டனை விதிப்பேன்!” என்று சொல்லி கிளிக்கூண்டை அவன் கையில் தந்தார்.

அதைக்கேட்டு ஃபயிஸ்கானுக்குத் தூக்கி வாரிப் போட்டது. அவன் மனத்திற்குள் தன்னைத் திட்டிக் கொண்டே “பிரபு! என்னிடம் ஒப்படைத்துள்ள பொறுப்பை நான் மனமுவந்து ஏற்கிறேன்” என்று மிகவும் மகிழ்ச்சியுற்றவன் போல் அவரை வணங்கி எழுந்தான்.

பின்னர் அவன் கிளிக்கூண்டை வீட்டுக்கு எடுத்துச் சென்றான். ஏற்கெனவே சிடுசிடுவென்றிருந்த அவன் மனைவி கிளிக்கூண்டைப் பார்த்து “இது ஏது? எதற்காக இதைப்போய் வீட்டுக்கு எடுத்து வந்தாய்?” என்றாள். “இதை நம் வீட்டில் வைத்து பாலூட்டி வளர்க்க வேண்டும்” என்றான் ஃபயிஸ்கான்.“சரிதான்! யார் இதை வளர்ப்பது?” என்று கேட்டதற்கு, “நீதான்!” என்று ஃபயிஸ்கான் கூறியதும், அவளுக்குக் கோபம் பற்றிக் கொண்டு வந்தது. பின்னர் ஒரு கணம் நிதானித்து,“இதை சக்கரவர்த்தி உனக்குப் பரிசாக அளித்தாரா?” என்று கேட்டாள்.

அதற்கு ‘ஆமாம்’ என்று அவன் தலையாட்டினான். “வேறு யாரிடமாவது இதைக் கொடுத்துவிடு!” என்று அவள் அலட்சியமாகச் சொல்ல, “இதை வேறு யாரிடமும் கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறேன். இதை நம் வீட்டில் வைத்து வளர்க்கும் பொறுப்பை என்னிடம் சக்கரவர்த்தி கொடுத்து விட்டார். இதற்கு ஏதாவது ஒன்று ஆகிவிட்டால், என் தலை உருளும்” என்று சொல்லிவிட்டு, தர்பாரில் நடந்ததை விளக்கினான்.

“எத்தனை பெரிய ஆபத்தை விலைக்கு வாங்கியிருக்கிறாய்?” என்று கூறிய அவன் மனைவி, வேறு வழியின்றி அதை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டாள். அன்று முதல், ஜாக்கிரதையாக அவள் அந்தக் கிளியைப் பராமரித்து வந்தாள்.

ஒருநாள் காலை, பயிஸ்கான் கூண்டினுள் நோக்கியபோது, கிளி மல்லாந்து விழுந்திருந்தது, அதைக் குரல் கொடுத்து அழைத்துப், தொட்டுப் பார்த்தும் அது எழுந்திருக்கவேயில்லை. உடனே அவன் தன் மனைவியைக் கூவி அழைத்தான். அவளும் ஓடிவந்து, கிளியை சோதித்துப் பார்த்தவள்,“ஐயோ! கிளி இறந்து விட்டதே!” என்று கூச்சலிட்டாள். –

அதைக் கேட்டு ஃபயிஸ்கான், “ஐயோ! என் தலை உருளப்போகிறதே!” என்று தலையில் ‘படீர்’ ‘படீர்’ என்று அடித்துக் கொண்டு அழுதான். அவன் மனைவி அவனைத் தேற்றினாள். “நான் சொல்வதைக் கேளுங்கள். பீர்பாலிடம் சென்று முழு விவரத்தையும் சொல்லுங்கள். அவர் எப்படியாவது உங்களைக் காப்பாற்றி விடுவார்” என்று யோசனை கூறினாள். டனே, ஃபயிஸ்கான் கூண்டைத் தூக்கிக்கொண்டு பீர்பால் வீட்டை நோக்கி ஓடினான். அவனைக்கண்ட பீர்பால், கூண்டைக் கையில் எடுத்து வந்திருக்கிறாயே! இந்தக் கிளியை வளர்ப்பதற்கு உன்னிடம் சக்கரவர்த்தி ஒப்படைத்திருந்தார் அல்லவா?” என்றார்.

“அதை நான் எப்படிச் சொல்வேன் பீர்பால்! ஜாக்கிரதையாக இதை வளர்த்தும், இன்று காலை இது திடீரென இறந்து விட்டது. இந்த செய்தியைக் கேட்டால், சக்கரவர்த்தி எனக்கு மரண தண்டனைதான் அளிப்பார்! நீதான் என்னைக் காப்பாற்ற வேண்டும்!” என்று கூறினான் ஃபயிஸ்கான்.

“கடவுளே! நீ நன்றாக ஆபத்தில் சிக்கிக் கொண்டாயே! சரி, எனக்கு ஒரு நல்ல யோசனை தோன்றி விட்டது. நீ வா என்னுடன்! சக்கரவர்த்தியை சந்திப்போம்” என்று கூறிய பீர்பால் முன்னே செல்ல, பின்னால் ஃபயிஸ்கான் நடுங்கிக் கொண்டே கூண்டைச் சுமந்து கொண்டு நடந்தான்.

அக்பர் தர்பாருக்கு வருமுன்னரே இருவரும் அங்கு வந்து விட்டனர். அக்பர் தர்பாரில் நுழைந்து, ஆசனத்தில் அமர்ந்ததும் அக்பர் அவரை நோக்கி “என்ன விஷயம்?” என்று கேட்டார்.

உடனே, கிளிக்கூண்டை எடுத்துக் கொண்டு அவரை அணுகிய பீர்பால், கிளியைச் சுட்டிக்காட்டி, “பிரபு! உங்களுடைய கிளி யோகாசனம் கற்றுக் கொண்டு இருக்கிறது. பாருங்களேன்!” என்றார்.

உற்றுப் பார்த்த அக்பர் கோபத்துடன் “என்ன உளறுகிறாய்? கிளி இறந்து விட்டது! எங்கே அந்த முட்டாள் ஃபயிஸ்கான்? அவனுக்கு மரண தண்டனை விதிக்கப் போகிறேன்!” என்றதும், பயந்து கொண்டே ஃபயிஸ்கான் முன்னே வந்தான். “தயவு செய்து நான் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்” என்ற பீர்பால் தொடர்ந்து, “பிரபு! அன்று ஒருநாள் இந்தக் கிளியை வளர்க்கும் மிகப்பெரிய பொறுப்பை ஃபயிஸ்கானிடம் ஒப்படைத்தபோது நீங்கள் சொன்னது நினைவு இருக்கிறதா? “இந்தக் கிளி இறந்துவிட்டது என்ற தகவலைச் சொல்பவனுக்கு மரண தண்டனை” என்றீர்கள். அவ்வாறு சொன்னது நீங்கள்தானே!” என்றார்.

“ஆம்! அப்படித்தான் சொன்னேன்! இன்றும் அதையே சொல்கிறேன். என்னுடைய கிளி இறந்து விட்டது.
அதனால்…” என்ற அக்பரை இடை மறித்தார் பீர்பால்.

“கிளி இறந்து விட்டது என்று சொன்னது நீங்கள்தான்! அதை ஃபயிஸ்கான் சொல்லவில்லை. அதனால் இப்போது யாருக்கு மரண தண்டனை தரவேண்டும்?” என்றார் பீர்பால். இதைக் கேட்டு அக்பர் உரக்கச் சிரித்தார்.

“பீர்பால்! நல்ல சமயத்தில் என் கண்களைத் திறந்து விட்டாய். ஒரு கிளிக்காக என் நல்ல அதிகாரிகளில் ஒருவனுக்கு மரண தண்டனை அளிப்பது சரியல்ல!” என்றார். ஃபயிஸ்கானுக்குப் போன உயிர் திரும்பி வர, பீர்பாலுக்கு நன்றி கூறினான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *