யானையை ஏமாற்றிய நரி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 2,137 
 
 

ஒரு காட்டில் பல நரிகள் வசித்தன. அவை தின்பதற்கு சின்னஞ்சிறு விலங்குகளும், பறவைகளும் கிடைக்கவில்லை. நரிகள் பட்டினியால் வாடின.

கிழட்டு நரிக்கு ஒரு யோசனை தோன்றியது. சிறிது தொலைவு சென்று ஒரு யானையைக் கண்டது.

கிழட்டு நரி, சிறிது தூரத்தில் நின்று கொண்டே, “மிகப் பெரிய வல்லமை வாய்ந்த யானையே! உங்களின் தகுதிக்கு ஏற்ப, பெரிய பதவி தருவதற்காக தங்களை அழைத்துச் செல்ல நான் வந்துள்ளேன்.

அதாவது, “எங்களுக்கு ஓர் அரசன் இருந்தான். அவன் மிகவும் தீயவனாகி, எங்களால் இயலாத பணிகளை எல்லாம் செய்யும்படி ஏவி, தொல்லை கொடுத்தான், ஆகையால், அவனை ஒதுக்கி விட்டு, வேறு ஓர் அரசனை தேர்ந்தெடுக்கத் தீர்மானித்து உள்ளோம். எங்கள் இனத்தவர்கள் உங்களை அழைத்து வருமாறு என்னை அனுப்பி வைத்திருக்கிறார்கள். எங்களுடன் வாழ்வது உங்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கும். நீங்கள் இடும் கட்டளைகளை எல்லாம் பணிவோடு நிறைவேற்றுவோம். உங்களை மதிப்புடன் நடத்துவோம். ஆகையால், நீங்கள் எங்கள் ராஜ்யத்திற்கு வரவேண்டும்” என்று வேண்டிக் கொண்டது.

யானைக்கு மகிழ்ச்சி உண்டாகி, கிழட்டு நரியுடன் புறப்பட்டது.

வழியில், ஒரு சதுப்பு நிலத்தில் யானையின் கால்கள் சேற்றிலே அழுந்தி விட்டன. யானையால் வெளியேற முடியவில்லை .

அப்பொழுது நரி, யானையைப் பார்த்து, இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? உங்கள் கட்டளையை நிறைவேற்ற காத்திருக்கிறேன்” என்று கூறியது.

“இந்தச் சேற்றிலிருந்து என்னை வெளியே இழுக்க வேண்டும் இதுதான் என் கட்டளை !” என்று சொல்லியது யானை.

நரி சிரித்துக் கொண்டே, “உங்கள் தும்பிக்கையால் என் வாலைப் பிடித்துக் கொள்ளுங்கள். நான் உடனே வெளியே இழுத்து விடுகிறேன்” என்று கூறியது.

“உன்னுடைய வாலால் என்னை வெளியே இழுக்க முடியும் என்று எண்ணுகிறாயா?” என்று கேட்டது யானை.

“அது இயலாத செயல் என்றால், அதைச் செய்யுமாறு எனக்கு ஏன் கட்டளையிட்டீர்கள்? இந்த மாதிரிக் கட்டளையிட்டதற்காகத் தானே பழைய அரசனை நாங்கள் விரட்டி விட்டோம்!” என்றது கிழட்டு நரி.

யானை சேற்றிலிருந்து வெளியேற முடியாமல், துன்புற்று இறந்தது.

நரிகள் எல்லாம் வந்து, யானையைத் தின்று விட்டன! புதியவர்களின் ஆசை வார்த்தையை நம்பி ஏமாறக் கூடாது.

– சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1997, முல்லை பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *