யானையும் பானையும்…

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 9,960 
 
 

கந்தர்வகோட்டை என்ற ஊரில் ஒரு மன்னன் ஆட்சி செய்து வந்தான். நல்லாட்சி செய்தாலும் சுய அறிவு இல்லாத மன்னனாக இருந்தான். பிறர் கூறும் சொல்லை ஆராயாமல் நம்புகின்ற இயல்புடையவன். தன்னைப் புகழ்ந்து பேசுபவருக்கு அள்ளிக் கொடுக்கும் குணம் படைத்தவன். பலர் அவனைப் புகழ்ந்து பேசி, ஏமாற்றி பெரும்பொருள்கள் பெற்றுச் சென்றனர்.

யானையும் பானையும்அந்த அரசனின் ஆடைகளை வெளுத்துக் கொடுக்கும் சலவைத் தொழிலாளி ஒருவன் இருந்தான். அவன் பெயர் மாசானம். அரண்மனை ஆடைகளை நன்கு வெளுத்துக் கொடுத்து வந்தான். அடக்கமாகவும் அன்பாகவும் அரசனிடம் பேசுவான். அதனால் அரசனுக்கு அவன் மீது பிரியம் இருந்தது. அவனுக்கு அரசன் அவ்வப்போது நிறையப் பொருள் பரிசாகக் கொடுத்து வந்தான்.

அந்த அரண்மனைக்காக மண்பாண்டங்களைச் செய்து தரும் குயவன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் குலமிநாதன். அவனுக்கு மாசானத்தின் மீது பொறாமை ஏற்பட்டது. அவனைப் பற்றி அரசனிடம் கோள் சொல்லி, அரசனுடைய அபிமானத்தை மாற்றிவிட வேண்டும் என்று எண்ணினான்.

ஒருநாள் குலமிநாதன் அரண்மனைக்கு வந்தான். அரசனைச் சந்தித்து வணங்கினான். அரசனும், “என்ன, குலமிநாதா செüக்கியமா? என்ன செய்தி? ஏதாவது வேண்டுமா?’ என்று கேட்டான் மன்னன்.

குலமிநாதன், ‘அரசே, தங்கள் பெருமை எங்கும் பரவியுள்ளது… தங்கள் புகழே புகழ்! தங்களைப் போன்ற உத்தம அரசர் உலகிலேயே கிடையாது. உங்களைப் போன்றவர் இதற்கு முன்னும் இருந்ததில்லை, இனியும் இருக்கப் போவதில்லை. தங்களுடைய புகழ் எட்டுத் திசைகளிலும் பரவியுள்ளது. தங்களைப் போன்ற நற்குணங்கள் உள்ளவர் யாரும் கிடையாது. ஆனால் ஒரே ஒரு குறையுள்ளது. அதுவும் நீங்கிவிட்டால் தாங்கள் பூலோக இந்திரனைப் போல இருக்கலாம்’ என்றான்.

அரசன், “அப்பா, எனக்கு என்ன குறை? அதனைச் சொல் முதலில்…’ என்றான்.

குலமிநாதன், “அரசே, வேறு ஒன்றுமில்லை, நாடு, நகரம், செல்வம், படை எல்லாம் அமைந்திருக்கின்றன. வெள்ளை யானை ஒன்றுதான் தங்களிடம் இல்லை. இந்திரனுக்கு வெள்ளை யானை உண்டல்லவா? உங்களிடம் கருப்பு யானைதானே உள்ளது! நமது அரண்மனை சலவைத் தொழிலாளி மாசானத்திடம் கூறி அந்த யானையை வெளுத்துத் தருமாறு கட்டளையிடுங்கள்… அவனும் வெளுத்துத் தந்துவிடுவான். பின்னர் வெள்ளை யானையோடு கூடிய தாங்கள் பூலோக இந்திரன் என்று புகழ்பெற்று விளங்குவீர்கள்!’ என்றான்.

மன்னனுக்குத்தான் சுய அறிவே இல்லையே! யானையை வெளுக்க வைக்க முடியுமா? என்று யோசிக்காமல் உடனே தனது ஒரு வீரனை அழைத்து மாசானத்தை வரவழைக்கச் செய்தான்.

மாசானத்திடம், “மாசானம், நமது அரண்மனையிலுள்ள யானையைக் கொண்டு போய் பத்து நாட்களுக்குள் வெள்ளை யானையாக வெளுத்துக் கொண்டு வா! உனக்கு நிறையப் பணம் தருகிறேன். காரியத்தை கருத்துடன் செய்து முடிக்க வேண்டும். இல்லையேல் சிரச்சேதம் செய்வேன்! போய் வா…’ என்றான்.

மாசானம் இந்த உத்தரவைக் கேட்டு நடுங்கிவிட்டான். மறுத்துப் பேசுவதற்கும் தைரியமில்லை. தன் வாழ்வு இத்தோடு முடிந்துவிட்டது என எண்ணினான். தலைகுனிந்த வண்ணம், “நல்லது அரசே… அப்படியே செய்கிறேன்’ என்று கூறிவிட்டுப் புறப்பட்டான்.

அவன் அரண்மனையைவிட்டுப் போகும்போது குலமிநாதன் நின்று கொண்டு, சிரித்துக் கொண்டே, “என்ன மாசானம், வெள்ளை யானை செய்யப் போகிறாயா?’ என்று கிண்டல் செய்தான்.

அவன்தான் இந்த வினையை மூட்டியவன் என்று ஊகத்தால் உணர்ந்தான்.

கடவுளை நினைத்து, “தெய்வமே, நீதான் இந்த இக்கட்டிலிருந்து என்னைக் காப்பாற்ற வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டே சென்றான்.

மாசானம் வீட்டின் பின்புறம் யானை நின்று கொண்டிருந்தது. ஒன்பது நாட்கள் கடந்தன. மாசானம் யோசித்துக் கொண்டே இருந்தான்.

நாளை மாசானத்தின் தலை போகும் என்று எண்ணி மகிழ்ந்தான் குலமிநாதன்.

அரசனிடம் சென்று, மெல்ல, ‘அரசே! தங்கள் கட்டளையை மாசானம் நிறைவேற்றினானா? சுத்த சோம்பேறியாச்சே அவன். தங்கள் கட்டளையில் கவனம் செலுத்தியதாகத் தெரியவில்லையே’ என்று கோள் மூட்டினான்.

உடனே, அரசன் மாசானத்தை அழைத்து, “என்ன யானையை வெளுத்துவிட்டாயா? நாளைதானே பத்தாவது நாள்?’ என்று கோபத்துடன் கேட்டான்.

மாசானம், “வணக்கம் மகாராஜா! தங்கள் கட்டளையை நிறைவேற்ற நான் தயங்குவேனா? தங்கள் வாக்கு வேதத்திலும் பெரிதல்லவா? யானையை வெளுப்பது ஒரு பெரிய காரியமா? சுலபமாகச் செய்து முடித்துவிடுவேன். ஆனால் ஒரு சிறு தடையுள்ளது. துணிகளைப் பானையில் இட்டு, அடுப்பில் வைத்து அவித்து வெளுப்பதுதான் வழக்கம்! அதுபோல யானையையும் பானையில் வைத்து அடுப்பிலேற்றி அவித்துத்தான் வெளுக்க முடியும்! நமது அரண்மனைக் குயவர் குலமிநாதனை, யானையை வைத்து அவிப்பதற்கு ஏற்றவாறு ஒரு பானையைச் செய்து கொடுக்குமாறு ஏற்பாடு செய்யுங்கள். மேலும் பானைக்குள் யானையைப் பேட்டால் அந்தப் பானை உடையக் கூடாது, கெட்டியாக இருக்க வேண்டும் என்றும் சொல்லுங்கள். பானை வந்துவிட்டால் நாளையே அதில் யானையை வைத்து வெளுத்து வெள்ளை யானையாக மாற்றித் தந்துவிடுகிறேன்…’ என்றான்.

உடனே அரசனும், குலமிநாதனை வரவழைத்து, “மாசானம் சொல்வது நியாயம்தானே? துணிகளைப் பானையில் இட்டுத்தானே அவிக்கிறார்கள். எனவே யானைக்கு ஏற்றாற்போல ஒரு பானையை உடனே செய்து கொடு! இல்லையேல் உன்னை சிரச்சேதம் செய்து விடுவேன்’ என்று கட்டளையிட்டான்.

இதனைக் கேட்ட குலமிநாதன் நடுநடுங்கிப் போனான். வேலிக்கு இட்ட முள் காலுக்கு வந்தது போல ஆயிற்று. மாசானத்துக்குத் துன்பம் செய்ய நினைத்தான். அந்தத் துன்பம் இப்போது அவனுக்கே வந்து சேர்ந்தது.

என்ன செய்வான்? பயத்துடன் நேரே மாசானத்தின் வீட்டுக்குச் சென்று, “தம்பி, இது என்னப்பா? பெரிய ஆபத்தில் என்னைச் சிக்கவைத்து விட்டாயே? யானைக்குப் பானை செய்ய முடியுமா? அரசனோ அறிவில்லாதவன், என் தலையை உருட்டிவிடுவானே..!’ என்றான்.

“அண்ணே, நீதானே முதலில் என் தலையை உருட்ட ஏற்பாடு செய்தாய்? வினை விதைத்தவன் வினையை அறுப்பான். துணிகளை வெளுத்துக் கொடுத்துப் பிழைக்கின்ற என்ன யானையை வெளுத்துத் தருமாறு சொல்லி அரசனிடம் கோள் மூட்டினாய் அல்லவா? நானும் ஒரு தொழிலாளி, நீயும் ஒரு தொழிலாளி! நாம் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருப்பது நல்லது! அண்ணே, நாமே நம்மில் ஒருவருக்கொருவர் கேடு விளைவித்துக் கொண்டால் நாடு நலம் பெறுமா? நீ என் வாழ்வில் கொள்ளி வைக்க முயன்றாய்… காற்று வேகத்தில் அந்தக் கொள்ளி உன்னிடமே வந்து சேர்ந்தது. இப்போது என்னிடம் வந்து மோதிக்கொண்டால் நான் என்ன செய்வேன்?’ என்றான்.

“தம்பி, என்ன மன்னித்து விடு. நான் திருந்திவிட்டேன். உனக்கு கோடி கும்பிடு போடுகிறேன். நான் புள்ளை குட்டிக்காரன். என் தலையைக் காப்பாற்று…’ என்று குலமிநாதன் கெஞ்சினான்.

மறுநாள், மாசானம் குலமிநாதனை அழைத்துக் கொண்டு அரசனிடம் சென்றான். அரசனை வணங்கி, “தங்கள் ஆணைப்படி குலமிநாதன் யானை செய்ய முயலும்போது, இந்தத் தகவல் இந்திரனுக்கு எட்டிவிட்டது. பூலோகத்தில் தனக்குப் போட்டியாக இன்னொருவர் வெள்ளை யானை வைத்திருப்பது முறையல்ல. அப்படி இருக்குமானால், அந்த ஆளை உடனே கொன்று போடு என்று காலதேவனுக்கு கட்டளையிட்டானாம். அதனை அறிந்து தங்களிடம் கூற வந்தேன்’ என்றான்.

இதைக் கேட்டதும் மன்னன் அஞ்சினான். “ஓ! அப்படியா? யானையை வெளுக்க வைக்க இனி முயற்சிக்க வேண்டாம். உங்களுக்கு வீண்துன்பம் தந்துவிட்டேன். இந்தாருங்கள், ஆளுக்கு நூறு பொற் காசுகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்..’ என்று கூறி காசுகளைக் கொடுத்தான். இருவரும் அதைப் பெற்றுக் கொண்டு சந்தோஷமாக வீடு திரும்பினார்கள்.

மாசானம், குலமிநாதனைப் பார்த்து, “இப்போதாவது புத்தி வந்ததா? எப்பொழுதும் மற்றவனுக்கு உபகாரம் புரிந்து ஒற்றுமையுடன் வாழவேண்டும். நாடெங்கும் வாழக் கேடொன்றுமில்லை என்பது பெரியவர்

களின் வாக்கு’ என்று அறிவுரை கூறினான்.

குலமிநாதனும் அதைக் கேட்டு மனம் திருந்தினான்.

– விஜயலெட்சுமி கங்காதரன் (ஜூலை 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *