யானைக்கு என்னாச்சு?

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: April 22, 2023
பார்வையிட்டோர்: 2,856 
 

அந்த ஊரில் உள்ள பெரிய கோயில் அது. அதன் வாசலில் அழகான யானையையும் பாகனையும் எப்போதும் பார்க்கலாம். யானைக்கு வாழைப்பழத்தைக் கொடுத்தால், அதை வாங்கிக்கொண்டு, நம் தலையில் தும்பிக்கையை வைத்து ஆசீர்வாதம் வழங்கும். யானையின் பின்னங்கால்களில் ஒன்றில் சங்கிலி இருக்கும். அதன் மறுமுனை கோயில் தூணில் கட்டப்பட்டிருக்கும். விடியற்காலையிலேயே யானையை ஆற்றுக்கு அழைத்துச்செல்லும் பாகன், குளிப்பாட்டிவிடுவார்.

எப்போதும் தன் காதுகளை ஆட்டியவாறு மெல்ல அசைந்துகொண்டிருக்கும் யானை, அன்று காலையிருந்து எழுந்து நிற்கவே இல்லை. கோயில் கிணறு இருந்த திசையைப் பார்த்தவாறு படுத்தே கிடந்தது. யானைப் பாகன் என்னென்னவோ செய்துவிட்டார். ம்ஹூம்… ஒரு பயனும் இல்லை.

கோயிலின் எதிரே பூக்கடை வைத்திருப்பார், தினமும் ஒரு மாலை எடுத்துவந்து யானையிடம் கொடுப்பார். அதை வாங்கும் யானை, பாகனிடம் கொடுக்கும். அவர் மாலையை யானையின் தோளில் சிறிது நேரம் அணிவிப்பார். அதன்பிறகுதான் பூக்கடைக்காரர் வியாபாரத்தை ஆரம்பிப்பார். இன்று யானை இப்படிச் சுணக்கமாகக் கிடப்பதைப் பார்த்த பூக்கடைக்காரர், தான் கட்டிய மாலைகளிலிருந்து பெரிய மாலையாக எடுத்துவந்து யானையிடம் கொடுத்தார். யானை அதைக் கண்டுகொள்ளவேயில்லை.

கோயில் பூசாரி கொடுக்கும் சர்க்கரைப் பொங்கல் என்றால், யானைக்கு அவ்வளவு பிடிக்கும். அவரும் வாளி முழுக்க சர்க்கரைப் பொங்கலை எடுத்துவந்து கொடுத்துப் பார்த்தார். அப்போதும் யானை எழுந்திருக்கவில்லை. ஆனால், தன் சங்கிலியை மட்டும் அடிக்கடி பார்த்துக்கொண்டேயிருந்தது.

பலாப்பழம் விற்கும் ராமு வழக்கமாக பலாப்பழத் தோல்களையே கொடுப்பார். ஆனால், ‘யானை இப்படிக் கிடக்கிறதே’ என பலாச் சுளைகளையே ஒரு தட்டு நிறைய எடுத்துவந்து கொடுத்தார். யானை தலையைத் திருப்பி அந்தப் பழச் சுளைகளைப் பார்த்தது. ஆனாலும், எழுந்திருக்கவில்லை.

ஐந்தாம் வகுப்பு படிக்கும் பூரணி, கோயிலுக்கு வரும்போதெல்லாம் அம்மாவிடமிருந்து தேங்காய் மூடியை வாங்கிவந்து, யானைக்குத் தருவாள். யானையும் அதை விரும்பிச் சாப்பிடும். இன்று பூரணி தன் வீட்டிலிருந்து நான்கைந்து தேங்காய் மூடிகளை எடுத்துவந்து தந்தபோதும், யானை தன் உடலைக் கொஞ்சமும் அசைக்கவில்லை.

யானைக்குக் கரும்பு என்றால் ரொம்பப் பிடிக்கும். அதனால், பாகன் ஓடிச்சென்று எங்கிருந்தோ இரண்டு கரும்புகளைத் கொண்டுவந்தார். அவற்றை யானையின் முன்னால் நீட்டினார். ம்ஹூம்… ஒரு பயனும் இல்லை.

அந்த ஊரின் பள்ளியில் ஓவிய ஆசிரியராக இருப்பவர் கணேசன். அவர் தினமும் காலையில் வந்து யானையின் நெற்றியில் அழகாக வரைவார். அவர் வரைந்து முடிக்கும்வரை ஆடாமல் அசையாமல் ஒத்துழைக்கும் யானை, இன்று அவரைப் பார்த்தும் தலைகுனிந்தே இருந்தது.

இரண்டு மணி நேரத்துக்கு மேல் இப்படியே தொடரவே, யானைக்கு உடம்புக்கு என்னவோ ஆகிவிட்டது என அனைவரும் வருத்தப்பட்டனர். அப்போது, யானையின் அருகில் வந்த ஆகாஷ் மட்டும் ஒன்றைக் கவனித்துவிட்டான். யானையைக் கட்டியிருந்த சங்கிலியின்மீது ஒரு நத்தை மெதுவாக நகர்ந்து சென்றுகொண்டிருந்தது. அது சென்ற தூரத்தைச் சொல்லும் வகையில், சங்கிலியில் எச்சில்போல ஒரு திரவம் கோடாக இருந்தது. சங்கிலி புரண்டால், நத்தைக் கீழே விழுந்து நசுங்கிச் செத்துவிடுமே என ஆகாஷ் கவலைப்பட்டான்.

யானையில் கால் பக்கத்திலிருந்து சங்கிலி வழியே பயணப்பட்ட நத்தை, இப்போது கோயில் தூணை நெருங்கிவிட்டிருந்தது. மெள்ள மெள்ள நகர்ந்த நத்தை, தூணிலும் ஏறிவிட்டது. அடுத்த நொடி, யானை சட்டென்று எழுந்து நின்றது. வழக்கம்போல உற்சாகமாகக் காதுகளை ஆட்டியது. எல்லோருக்கும் ஆசீர்வாதம் வழங்கத் தொடங்கியது. எல்லோரின் முகத்திலும் மகிழ்ச்சி உண்டானது. அதேநேரம், இவ்வளவு நேரம் ஏன் அப்படி இருந்தது என்ற குழப்பம் ஒரு கோடாக அவர்களிடம் இருந்தது.

ஆகாஷுக்கு மட்டும் யானை ஏன் ஆடாமல் அசையாமல் படுத்துக்கிடந்தது எனப் புரிந்தது.

– டூடுல் கதைகள், ஜூன் 2017

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *