கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 2,230 
 

மாலை வேளையில் உப்பரிகையில் உலவிக் கொண்டிருந்த தாசியொருத்தி, கீழேயிருந்த தன் வேலைக்காரியை அழைத்து, “நம் வீதி வழியே ஒரு பெரியவரின் சடலம் இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. நீ போய் அவரது ஆன்மா மோட்சத்துக்குப் போகிறதா – நரகத்துக்குப் போகிறதா என்று பார்த்து வா” என்றாள். மறுநிமிடமே, அவள் திரும்பிவந்து, “அம்மா, அந்த ஆன்மா மோட்சத்துக்குப் போய்விட்டது” என்று சொன்னாள்.

இவற்றையெல்லாம் திண்ணையிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு சந்நியாசி, வியந்துபோய் வேலைக்காரியின் காலைப் பிடிக்காத குறையாகக் கெஞ்சுகிறார். “அம்மா அறுபது ஆண்டுகளாக உலகம் முழுவதும் சுற்றி. இறந்த ஆன்மா எங்கே போகிறது என்று ஆராய்ந்து வருகிறேன். பல பெரியோர்களை அணுகியும் விச்சாரித்தேன். இன்னும் எனக்கு விடை கிடைக்கவில்லை. இப்போது நீதான் என் குரு. ஒரு ஆன்மா மோட்சத்துக்குப் போகிறதா, அல்லது நரகத்துக்குப் போகிறதா என்னும் கலையை அறிவது எப்படி?” என்று வேண்டினார்.

“சுவாமி, இது தெரியாதா உங்களுக்கு பிணம் தாக்கிச் செல்வோர் பின்னே நானும் சிறிது தூரம் நடந்து சென்றேன். சாலையின் இருபுறமும் உள்ள மக்களும், உடன் செல்வோரும், “ஐயோ! நல்ல மனிதன் போய் விட்டாரே! புண்ணியவான் இன்னும் கொஞ்ச காலம் இருக்கக் கூடாதா? தருமவானாச்சே! பலருக்கும் உதவி வந்தார்: இன்றைக்குப் போய்விட்டாரே! என்று, பலவாறாக அழுது புலம்பினர். அதனால், அந்த ஆன்மா ‘மோட்சத்துக்குப் போகிறது’ என்று நான் சொன்னேன்.

“நேற்று இப்படியொரு பிணம் சென்றபோது நானும் பின்னால் தொடர்ந்து சென்றேன். அப்போது மக்கள் எல்லோரும், பாவி! ஒருவழியாகத் தொலைந்தான், இனி மேல் நல்லகாலந்தான். இந்த ஊரைப் பிடித்த பீடை ஒழிந்தது” என்று பலவாறாகப் பேசினார்கள். ஆகவே, அந்த ஆன்மா ‘நரகத்துக்குப் போய்விட்டது’ என்று சொன்னேன்” என்றாள்:

பாவம்! சந்நியாசி வெட்கித்தலை குனிந்தார்.

– அறிவுக் கதைகள், மூன்றாம் பதிப்பு: 1998, பாரி நிலையம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *