மோசம் போன முயலும் மைனாவும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 4, 2024
பார்வையிட்டோர்: 72 
 
 

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இருப்பதற்கு இடமில்லாமல் ஒரு முயல் காட்டில் அலைந்து கொண்டிருந்தது. ஒரு மரத்தில் ஒரு பொந்து இருப்பதைக் கண்டு அதற்குள் புகுந்து இருந்து கொண்டது. 

சிறிது நேரம் சென்றதும் அங்கு ஒரு மைனா வந்து சேர்ந்தது. அந்த மைனா முயலைப் பார்த்து, ‘இந்தப் பொந்து நான் இருக்கும் வீடு; இதற்குள் நீ எப்படி வரலாம்?’ என்று கேட்டது. அதற்கு அந்த முயல் ‘இது உன் வீடு என்று யாருக்குத் தெரியும்? நிழலும், மரங்களும், சாலைகளும், குளங்களும், கிணறுகளும், தண்ணீர்ப் பத்தல்களும், சத்திரங் களும் சாவடிகளும் எல்லாருக்கும் பொதுவானவை தாம். இதில் நீ உரிமை கொண்டாடுவதற்கு ஏதும் இல்லை’ என்று சொன்னது. 

இப்படியாக வார்த்தை முற்றி இரண்டுக்கும் சண்டை வந்துவிட்டது. தொண்டை வற்றச் சண்டை போட்ட பிறகு முயல் மைனாவைப் பார்த்து, ‘நாம் ஏன்  சண்டையிட வேண்டும்? யாராவது நடுவு நிலை உள்ளவர்களிடம் போய் நியாயம் கேட்போம்’ என்று சொல்லிற்று. அதற்கு மைனா ‘நம் வழக்கைத் தீர்க்கக் கூடிய நல்லவர்கள் யார் இருக்கிறார்கள்?” என்று கேட்டது. 

‘யமுனை ஆற்றங்கரையில் தவம் செய்து கொண்டு ஒரு பூனையார் இருக்கிறார். அவரிடம் போய் நியாயம் கேட்போம்.’ என்று முயல் சொன்னது. இதைக் கேட்டதும் மைனா பயந்து போய் அதன் பக்கம் நாம் போனால் அது நம்மைப் பிடித்துத் தின்று விட்டால் என்ன செய்வது?’ என்று கேட்டது. 

‘இல்லை அப்படி ஒன்றும் நடக்காது. இருந்தா லும் நாம் தூரத்தில் நின்றே நம் வழக்கைச் சொல்லுவோம்’ என்று சொல்லி முயல் மைனாவை அழைத்துச் சென்றது. 

யமுனை ஆற்றங்கரையில் தவம் செய்து கொண்டிருந்த பூனையாரை அவை கண்டன. அவர் தவம் செய்து கொண்டிருந்த கோலத்தைக் கண்டு, ‘இவர் பெரியவர்? உயர்ந்த ஞானி; நம்மைப் பிடிக்க மாட்டார்’ என்று நினைத்துக் கொண்டு அந்தப் பூனையாரின் எதிரில் விழுந்து, பணிந்து, எழுந்து, கை கட்டிப் பயபக்தியோடு நின்றன. பூனையார் தவம் கலைந்து கண் விழித்து அவற்றைப் பார்த்தார். 

‘நீங்கள் யார்? என்னைத் தேடி என்ன காரிய மாக வந்தீர்கள்? சொல்லுங்கள்’ என்று எடுப்பான குரலில் கேட்டார் பூனையார். 

முயலும் மைனாவும் தங்கள் பெயரைச் சொல்லித் தாங்கள் சென்ற காரணத்தையும் எடுத்துரைத்தன. 

‘எனக்கு வயது அதிகம் ஆகிவிட்டது. காது சரியாகக் கேட்கவில்லை. சற்று நெருங்கி வந்து சொல்லுங்கள்’ என்று பூனையார் சொன்னார். 

அவை இரண்டும் தாம் நின்ற இடத்திலிருந்து சிறிது முன்னால் சென்று, மீண்டும் தம் வழக்கை எடுத்துரைத்தன. 

‘உங்கள் பேச்சில் பாதி காதில் விழுகிறது; பாதி காதில் விழவில்லை. நானோ எப்போதும் ஒருவர் பக்கமாக நின்று நியாயம் தீர்ப்பது வழக்கமில்லை. நடுவு நிலையாக இருந்தே எந்த வழக்கிலும் தீர்ப்புச் செய்வேன். 

தருமத்தை விரும்புபவர்களைத் தருமமே காப்பாற்றும். தருமத்தை இகழ்வோரைத் தருமமே பழிக்கும். தருமமே உலகில் உண்மையாக நின்று எல்லாம் செய்கிறது. ஆகையால், தருமம் சொல்லு வேனே தவிர நான் சிறிதும் பொய் சொல்லேன். 

‘என்னென்ன நோன்புகள் நோற்க வேண்டும் என்று எண்ணினேனோ அத்தனை நோன்பும் நான் செய்து முடித்து விட்டேன். இவற்றிற்கெல்லாம் மேலாக, நாள்தோறும் பொய் சொல்லாமை என்னும் புண்ணிய நோன்பு ஒன்றையும், உயிர் களைக் கொல்லுவதில்லை என்கிற உயர்ந்த நோன்பு ஒன்றையும் கைக் கொண்டு வருகிறேன். வழக்கில் நான் என்றும் ஓரம் சொல்லேன். 

‘அருகில் வந்து நீங்கள் உங்கள் வழக்குகளை எடுத்துரைத்தால் தான் எனக்குக் காது நன்றாகக் கேட்கும். நீங்கள் தொலைவில் நின்று கொண்டு சொன்னால் ஒன்றும் சரியாகக் கேட்காது. எதையும் தளிவாகக் கேட்டால்தான் நியாயம் தப்பாமல் தீர்ப்பளிக்க முடியும். அருகில் வாருங்கள்!’ என்று பூனை அழைத்தது. 

பூனை உண்மையையே பேசுகிறது என்று எண்ணிய முயலும் மைனாவும் பூனை அருகில் மிகவும் நெருங்கிச்சென்றன. உடனே பூனை அவை இரண்டையும் தன் இரு கைகளானும் சடக்கெனப் பிடித்துக் கழுத்தைக் கடித்து இரத்தம் குடித்தது. 

பாவம்! வழக்குரைக்க வந்த முயலும் மைனாவும் அதன் வயிற்றுக்கு இரையாகி விட்டன. 

வஞ்சகர்களைச் சேர்ந்தோர் வாழ்வதில்லை என்ற உண்மை இந்த கதைலிருந்து தெளிவாகத் தெரிகிறது. 

– பஞ்சதந்திரக் கதைகள், பகுதி 3 – அடுத்துக் கெடுத்தல், முதற் பதிப்பு: மார்ச் 1996, அன்னை நாகம்மை பதிப்பகம், சென்னை.

நாரா. நாச்சியப்பன் (நாராயணன் நாச்சியப்பன்; பாவலர் நாரா. நாச்சியப்பன்) (ஜூலை 13, 1927 - 2000-த்திற்குப் பின்) கவிஞர், எழுத்தாளர், பதிப்பாளர், அச்சக உரிமையாளர். பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களுள் ஒருவர். திராவிட இயக்கம் சார்ந்த பல படைப்புகளை, சிறார்களுக்கான பல நூல்களை எழுதினார். தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது. நாரா. நாச்சியப்பன், அன்றைய ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆத்தங்குடியை அடுத்த முத்துப்பட்டணத்தில், சித. நாரா. நாராயணன் செட்டியார்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *