ஒர் ஊரிலே பெரிய மாரியம்மன் கோவிலில் திருவிழா நடந்தது. அக்கம் பக்கத்திலுள்ள ஊர்களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அங்கே வந்து வழிபாடு நடத்தினர். வேண்டுதலை நிறைவேற்ற மொட்டையடித்துக் கொண்டனர்.
அவர்களில் ஒருவன், தன் குடும்பத்துடன் மொட்டை அடித்துக்கொண்டு, திருவிழாவையும் கண்டுகளித்துவிட்டு ஊர் திரும்பினான். வழியிலே ஒரு சுங்கச் சாவடி. அங்கு பலகையில் ஏதோ எழுதியிருந்தது. அருகில் அதிகாரி ஒருவனும் நின்றுகொண்டிருந்தான்.
இவன் அவனிடம் போய், ‘மொட்டைத் தலைக்குச் சுங்கம் உண்டா?’ என்று கேட்க, அவனும் ‘ஆமாம்! தலைக்குக் காற்பணம்’ என்றான். இவன் தன்னுடன் வந்தவர்களின் தலையை எண்ணிக் கணக்குப் பார்த்துக் காசைக் கொடுத்துவிட்டு ஊர் வந்து சேர்ந்தான்.
தன் ஊரில் திருவிழாவுக்குப் போய் மொட்டையடித்து வந்தவர்களைப் பார்த்ததும், ‘நீங்கள் எவ்வளவு சுங்கம் கொடுத்தீர்கள்?’ என்று விசாரித்தான். அவர்கள் அனைவருமே ‘சுங்கமா? நாங்கள் ஒன்றுமே கொடுக்க வில்லையே’ என்றார்கள். ‘பிறகு எப்படி உங்களை சுங்கச் சாவடியில் வெளியே விட்டார்கள்?’ என்று இவன் கேட்டான். அதற்கு அவர்கள் மொட்டைக்கு யாரும் சுங்கம் வசூலிக்கவில்லையே?’ என்று சொன்னார்கள்.
அப்போதுதான் அவனுக்கு உண்மை புரிந்தது. தவறு நம்முடையதுதான். நான் போய் வலியக் கேட்டதால் தானே அவன் தன் வருமானத்திற்கான வழியைத் தேடிச் செய்துகொண்டான் என்று எண்ணி வெட்கப்பட்டான்.
எத்தனையோ பேர் – இப்படித்தான், வாழ்க்கையிலே தெரியாத செய்திகளில் – தன்னலமே குறியாக உள்ளவர்களிடம் வலியப்போய் ஆலோசனை கேட்டுப் பிற்கு அவதிப்படுவதைப் பார்க்கிறோம்: அப்படித்தான் இவனும்!
– அறிவுக் கதைகள், மூன்றாம் பதிப்பு: 1998, பாரி நிலையம், சென்னை