மூட்டைப்பூச்சியால் இறந்த சீலைப்பேன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 4, 2024
பார்வையிட்டோர்: 41 
 
 

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஓர் அரசனுடைய படுக்கையில் சீலைப்பேன் ஒன்று வாழ்ந்து வந்தது. அரசனும் அரசியும் உறங் கும் நேரம் பார்த்து அது அவர்கள் உடலைக் கடித்து இரத்தத்தை உறிஞ்சி வாழ்ந்து வந்தது. ஒரு நாள் கொள்ளிவாய்ப் பிசாசு வந்ததுபோல் ஒரு சிறு மூட்டைப் பூச்சி அங்கு வந்து சேர்ந்தது. அது சீலைப் பேனை நெருங்கி, ‘நான் உன் நண்பனாக இருக்க விரும்புகிறேன்’ என்று கூறியது. 

‘இல்லை இல்லை, வேண்டாம். முள் போன்ற உன் பற்களால் அரசன் தூங்குவதற்கு முன்னாலே யே நீ கடித்து விடுவாய் உன்னால் என் வாழ்வுக்கும் முடிவு வந்து விடும்’ என்று சீலைப் பேன் மறுத்துக் கூறியது. 

‘நான் அப்படித் துடுக்குத் தனமாக நடந்து கொள்ள மாட்டேன். நீ சொன்னபடி கேட்டுக் கொண்டிருப்பேன்’ என்று கெஞ்சியது மூட்டைப் பூச்சி. 

‘சரி, அப்படியானால் இங்கேயே இரு. எப்பொழுதும் வெடுக்கென்று கடிக்காதே. அரசனும் அரசியும் உறங்குகின்ற நேரம் பார்த்து மெதுவாகக் கடித்து இரத்தம் குடித்து உன் பசியைப் போக்கிக் கொள்’ என்று கூறி அந்த மூட்டைப் பூச்சிக்குச் சீலைப்பேன், இடம் கொடுத்தது, 

கெஞ்சி இடம் பிடித்துக் கொண்ட அந்த மூட்டைப் பூச்சி, அன்று இரவே அரசனும் அரசியும் படுக்கைக்கு வந்து விழித்துக் கொண்டிருக்கும் போதே, அரசனை வெடுக்கென்று கடித்து விட்டது. 

‘ஏதோ என்னைக் கடித்து விட்டது’ என்று அரசன் கூறியதும் வேலைக்காரர்கள் விளக்குடன் ஓடி வந்தார்கள். 

அரசனைக் கடித்த மூட்டைப் பூச்சி வேலைக் காரர்கள் வருவதற்குள் எங்கோ ஒரு மூலையில் போய் ஒளிந்து கொண்டு விட்டது. நடந்தது அறியாத சீலைப் பேன் அவர்கள் கண்ணில் தட்டுப்பட்டது. உடனே அவர்கள், ‘நீ தானே இந்தப் பொல்லாத வினையைச் செய்தாய்?’ என்று சொல்லிக் கொண்டே, சீலைப் பேனை நசுக்கிக் கொன்று விட்டார்கள். வகை தெரியாமல் நட்புக் கொண்ட அந்தச் சீலைப் பேன், பாவம் இறந்து ஒழிந்தது. 

ஒருவனுடைய தன்மையை உணராமல் அவனுடன் நட்புக் கொள்ளக் கூடாது.

– பஞ்சதந்திரக் கதைகள், பகுதி-1 – நட்புப் பிரித்தல், முதற் பதிப்பு: மார்ச் 1996, அன்னை நாகம்மை பதிப்பகம், சென்னை.

நாரா. நாச்சியப்பன் (நாராயணன் நாச்சியப்பன்; பாவலர் நாரா. நாச்சியப்பன்) (ஜூலை 13, 1927 - 2000-த்திற்குப் பின்) கவிஞர், எழுத்தாளர், பதிப்பாளர், அச்சக உரிமையாளர். பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களுள் ஒருவர். திராவிட இயக்கம் சார்ந்த பல படைப்புகளை, சிறார்களுக்கான பல நூல்களை எழுதினார். தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது. நாரா. நாச்சியப்பன், அன்றைய ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆத்தங்குடியை அடுத்த முத்துப்பட்டணத்தில், சித. நாரா. நாராயணன் செட்டியார்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *