முரட்டுக் குதிரையும் நோஞ்சான் குதிரையும்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தென்றல்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 8, 2022
பார்வையிட்டோர்: 14,092 
 
 

ஒரு ஊரில் ஒரு குதிரை வியாபாரி இருந்தான். அவன் பெயர் கந்தன். அவன் தன்னுடைய குதிரையை விற்பனை செய்யச் சந்தைக்குக் கொண்டு போனான். அது மிகவும் முரட்டுக் குதிரை. யாருக்கும் அடங்காது. மிகவும் கவனமாக அதை அழைத்துக் கொண்டு போனான். இரவு நேரம் ஆனதும் ஒரு சத்திரத்தில் அவன் தங்கும்படி ஆனது. அருகிலுள்ள மரத்தடியில் குதிரையைக் கட்டிப் போட்டுவிட்டு, கந்தன் உணவுண்ட பின் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான். அப்போது அந்தப் பக்கமாக மற்றொரு குதிரை வியாபாரி வந்து சேர்ந்தான். அவன் ஒரு நோஞ்சான் குதிரையைக் கூட்டிக் கொண்டு வந்திருந்தான். ஒன்றுக்கும் உதவாத அந்தக் குதிரையை எப்படியாவது சந்தையில் விற்றுவிட வேண்டும் என்பது அவன் எண்ணம்.

தன் நோஞ்சான் குதிரையை முரட்டுக் குதிரை இருக்கும் மரத்தடியில் சென்று கட்ட முற்பட்டான் அந்தப் புதியவன். உடனே கந்தன் அந்தப் புதியவனை எச்சரித்தான். ‘அய்யா, என் குதிரை மிகவும் முரட்டுக் குதிரை. அதன் அருகே உங்கள் குதிரையைக் கட்டாதீர்கள். கட்டினால் உங்கள் குதிரையின் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். ஜாக்கிரதை’ எனக் கூறினான். ஆனால் அந்தப் புதியவனோ அதைக் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. தன் நோஞ்சான் குதிரையை வேண்டுமென்றே அந்த மரத்தடியில் கட்டிவிட்டான். பலமுறை எச்சரித்தும் புதியவன் கேட்காததால் பேசாமல் இருந்து விட்டான் கந்தன்.

நள்ளிரவாயிற்று. இரண்டு வியாபாரிகளும் அசந்து தூங்கிக் கொண்டிருந்தனர். ஆனால் முரட்டுக் குதிரையோ, அந்த நோஞ்சான் குதிரையைக் கடித்தும், உதைத்தும் பலவாறாகக் காயப்படுத்தியது. மறுநாள் பொழுது புலர்ந்தது. குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்த நோஞ்சான் குதிரையைக் கண்டு திகைத்துப் போனான் புதிய வியாபாரி. முரட்டுக் குதிரையின் தாக்குதலால்தான் தன் குதிரைக்கு இந்த நிலை ஏற்பட்டது என்றும், அதனால் அதன் கந்தன் தனக்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தான். ஆனால் கந்தன் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. தன் மீது எந்தத் தவறும் இல்லை என்றும், தான் ஏற்கெனவே எச்சரித்தும் கேட்காமல் அந்த நோஞ்சான் குதிரையை வேண்டுமென்றே அந்த மரத்தடியில் கட்டியது புதிய வியாபாரியின் தவறு என்றும் கூறி நஷ்ட ஈடு தர மறுத்தான்.

உடனே புதிய வியாபாரி வழக்கை நீதிபதியிடம் கொண்டு சென்றான். தன் நோஞ்சான் குதிரையைக் கூட்டிக் கொண்டு போய் அவரிடம் காட்டினான். உடனே நீதிபதிக்கு அளவற்ற சினம் ஏற்பட்டது. நடந்த சம்பவம் பற்றிக் கந்தனை விசாரித்தார். கந்தன் மௌனமாகவே நின்று கொண்டிருந்தான். நீதிபதி வெகு நேரம் விடாமல் கேட்டும் கந்தன் பதில் பேசவில்லை. மௌனமாகவே இருந்தான். ‘அய்யோ பாவம்! இவன் ஊமை போலிருக்கிறதே!’ என்றார் நீதிபதி இரக்கத்துடன். உடனே புதிய வியாபாரி ‘இல்லை அய்யா, இவன் நடிக்கிறான். நன்றாகப் பேச முடியும் இவனால். ‘உன் குதிரையை என் குதிரையின் அருகே கட்டாதே! அது முரட்டுக் குதிரை! உன் குதிரைக்கு ஆபத்து ஏற்படும்’ என்று என்னிடம் முன்பு நன்றாகப் பேசினானே! இப்போது ஊமைபோல் நடித்து உங்களை நன்றாக ஏமாற்றுகிறான்’ என்றான்.

உடனே நீதிபதிக்கு உண்மை புரிந்தது. கந்தன் புதிய வியாபாரிக்கு நஷ்ட ஈடு எதுவும் தரவேண்டியதில்லை என்றும் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தார். புதிய குதிரை வியாபாரி பதில் பேச முடியாமல் வெட்கத்துடன் அவ்விடம் விட்டு நகர்ந்தான்.

பார்த்தீர்களா குழந்தைகளே! சில சமயங்களில் மௌனமாக இருப்பது கூட புத்திசாலித்தனம்தான் என்பது புரிந்ததா? அடுத்த மாதம் இன்னொரு கதையுடன் வருகிறேன். வரட்டுமா?

சுப்புத் தாத்தா
ஆகஸ்ட் 2007

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *