(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
முரடன் ஒருவன் இருந்தான். அவன் தன் அரட்டல் உருட்டல்களாலேயே பல நாள் பிழைத்து வந்தான். வலியற்றவர்களை மிரட்டிப் பொருள் பறித்துத் தன் வாழ்வை நடத்தி வந்தான்.
அந்த ஊரில் மணியன் என்ற ஒருவன் இருந்தான். அவன் உழைத்துப் பிழைக்கும் ஓர் ஏழை. உடலில் வலுவும் உள்ளத்தில் உறுதியும் இல்லாத ஒரு கோழை.
அவனுக்கு இந்த முரடனைப் பார்த்தாலே பயம். கண்டவுடன் உடல் நடுங்கும். முரடன் உறுமலைக் கேட்டவுடனே கையில் உள்ள காசைக் கொடுத்து விடுவான்.
அவசரமாகச் சில்லறை தேவைப்பட்டால் முரடன் மணியனைத்தான் தேடிவருவான். கேட்கு முன் கொடுக்கக் கூடிய ஒருவன் இருக்கும்போது அவனை விட்டு வைப்பானா அவன் ?
முரடன் பிழைப்பு இப்படிப் பல நாள் நடந்து வந்தது.
ஒரு நாள் முரடனுக்குக் காசு தேவைப்பட்டது. மணியனைத் தேடி வந்தான். மணியன் தன் குடிசைக்குள் இருந்தான். “மணியா! மணியா!” என்று கூப்பிட்டான் முரடன். மணியன் மகன் சிறு பையன். அவன் வெளியில் வந்து “அப்பா வேலையாயிருக்கிறார். நீங்கள் திரும்பிப்போகலாம்” என்றான்.
முரடனுக்குக் கோபம் வந்தது. சீற்றத்துடன் குடிசையினுள் நுழைந்தான்.
“வேலையற்றவனே, வெளியே போ! வீணாக என்னைத் தொந்தரவு செய்யாதே!” என்று உரத்த குரலில் கூறினான் மணியன்.
முரடன் அயர்ந்து நின்று விட்டான்.
“போகிறாயா இல்லையா?” என்று மீண்டும் மணியன் முழங்கினான்.
அவன் முழக்கத்தில் வெளிப்பட்ட உறுதி முரடனைக் கலங்க வைத்தது. எதிர்பாராத அதிர்ச்சி யடைந்தான். பேசாமல் திரும்பி விட்டான்.
மணியன் நிமிர்ந்து பேசக் காரணம் என்ன என்று ஆராய்ந்தான் முரடன்.
அந்த ஊருக்குப் புதிதாகக் குடி வந்த குத்துச் சண்டை வீரன், மணியன் குடிசையை அடுத்த குடிசையில்தான் குடியிருந்தான். அவன் மணியனுக்கு நண்பனாகி விட்டான். அவன் ஆதரவு தனக்கு இருக்கிறதென்ற உறுதியில்தான் மணியன் துணிந்து பேசினான். இனி மணியனிடம் தன் மிரட்டல் பலிக்காது என்று தெரிந்து கொண்டான் முரடன்.
கருத்துரை:- வலிமையுள்ளவர்களின் துணையைப் பெற்றால் வலிமையற்றவர்களுக்குத் துணிச்சல் வந்துவிடும். அவர்கள் பிறருக்கு அஞ்ச வேண்டியதில்லை.
– நல்வழிச் சிறுகதைகள் – முதல் பாகம், முதற் பதிப்பு: ஜனவரி 1965, வானதி பதிப்பகம், சென்னை.