(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஒரு நரி பசியினால் இரை தேடித் திரிந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு பெருஞ் சத்தம் கேட்டது. அது கேட்டு நரி நெஞ்சம் துணுக்குற்றது.
தன்னைப்போல இரை தேடிக் கொண்டு ஏதேனும் பெரிய மிருகம் ஒன்று புறப்பட்டிருக்கிறதோ என்று அது பயந்தது. தன் பசி தீருமுன் தான் பிறிதொரு மிருகத்தின் பசிக்கு விருந்தாகிவிடக் கூடுமோ என்று கலங்கியது.
இருந்தாலும், இது என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று மனத்தைத் திடப்படுத்திக் கொண்டது.
மெல்ல மெல்ல அது காட்டைச் சுற்றிக் கொண்டு ஒலி வந்த திசை நோக்கிச் சென்று ஒரு போர்க்களத்தையடைந்தது.
அங்கு யாரும் இல்லை. ஆனால், அங்கிருந்துதான் ஒலி வந்தது. நரி, மெல்ல மெல்ல நெருங்கிச் சென்று பார்த்தது. ஒரு மரத்தடியில் பழைய போர் முரசு ஒன்று கிடந்தது.
அதற்கு நேரே மேலே இருந்த மரக்கிளை, காற்றில் மேலும் கீழுமாக அசையும் போது, அந்த முரசைத் தாக்கியது. அது தாக்கும் போதெல்லாம் பெரும் சத்தம் கேட்டது.
இதை நேரில் கண்ட பிறகு, அந்த நரி, ‘பூ! வெறும் தோல் முரசுதானா? இதற்கா நான் இவ்வளவு பயப்பட்டேன்!’ என்று சொல்லிக் கொண்டே போய்விட்டது.
– பஞ்சதந்திரக் கதைகள், பகுதி-1 – நட்புப் பிரித்தல், முதற் பதிப்பு: மார்ச் 1996, அன்னை நாகம்மை பதிப்பகம், சென்னை.