முயல் குட்டி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 24, 2022
பார்வையிட்டோர்: 6,516 
 
 

(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கதை கேட்க: https://www.youtube.com/watch?v=rzAfVQnTzi4

முயலே, முயலே, ஓடி வா
முன்னே பாய்ந்து ஓடி வா!
தயங்கித் தயங்கித் தூர நீ
தள்ளி நிற்க லாகுமோ?
பயத்தை நீயும் விட்டிடு;
பாய்ந்து முன்னே வந்திடு!”

என்ற பாட்டை முணு முணுத்துக்கொண்டே ஓடோடி வந்தாள், மங்களம். வாசலைக்கூட அவள் தாண்ட வில்லை. அங்கே…அவளுடைய ஆசை, அன்பு எல்லாமே உருவான ஓர் உயிர் அவளுக்காகவே காத்துக்கொண்டிருந்தது.

அது ஒரு முயல்குட்டி! மங்களம் தன் கண்ணின் மணியைப்போல காத்து வளர்த்து வரும் அழகான முயல் குட்டி !

மங்களம் தன் புத்தகப் பையைக் கீழே வைத்தாள். பாய்ந்து சென்று முயலைத் தூக்கிக் கொண்டாள். ஆசையுடன் அதன் பஞ்சு மேனியிலே ஒரு முத்தம் கொடுத்தாள். ஒன்று என்றா சொன்னேன். இல்லை; இல்லை. மாறி மாறிப் பல முத்தங்கள் கொடுத்தாள்.

“அடடா ! மங்களம், போதும், போதும். உதடு வலிக்கப் போகிறதம்மா!” – அந்த சமயத்தில் இ கிண்டல் செய்தது ஒரு குரல். அதைக் கேட்டாள் மங்களம். திடுக்கிட்டு உடனே திரும்பினாள். எதிரே நின்று கொண்டிருந்தார் அவளுடைய மாமா ஜம்பு லிங்கம்.

“மாமா, எப்போது பம்பாயிலிருந்து வந்தீர்கள்? கடிதம் கூட போடவில்லையே!” என்று ஆவலுடன் கேட்டாள் மங்களம்.

“இப்போதுதான் வருகிறேன், மங்களம். கடிதம் போடுவதற்குக்கூட நேரமில்லை. அவசரமாய் புறப்படும் படியாகிவிட்டது!” என்றார் மாமா. “சரி, அந்த முயல் குட்டியைக் கீழே விட்டுவிட்டு உள்ளே வா!” என்றார்.

மங்கள மோ முயல்குட்டியைக் கீழே விடவில்லை. கையிலேயே வைத்துக்கொண்டு மாமாவின் பின்னால் உள்ளே நுழைந்தாள். அங்கே மாமாவின் தோல் பெட்டி இருந்தது. அதைத் திறந்தார். உள்ளேயிருந்து ஓர் அழகான சில்க் ‘கவுனை’ எடுத்தார். அவள் கையிலே கொடுத்தார்.

மங்களம் பூரிப்போடு அதைத் தொட்டுப் பார்த்தாள். ” அடடா! என்ன மாமா இது ; என் முயல் குட்டியின் உடலைப் போல் வழவழவென்று இருக்கிறதே !” என்று வாயைப் பிளந்தாள்.

மாமா இலேசாகச் சிரித்தார். ”பின் என்ன? உனக்கு வாங்கி வரும் அன்பளிப்பு என்றால் சாதாரண

மானதாகவா இருக்கும். அது மட்டுமா? இதோ பாரேன், இன்னும்….. ” என்று சொல்லிக்கொண்டே

பெட்டியிலிருந்து என்னென்னவோ எடுத்தார், எல்லாம் அற்புதமான அழகான விளையாட்டுச் சாமான்கள். மங்களத்துக்கு ஒரே ஆனந்தம்!

“மங்களம், புறப்படு! நாம் போகலாம்!” என்றார் மாமா.

“எங்கே ?….” என்று கேட்டாள் மங்களம்.

“எங்கேயா? நான் தமிழ் சினிமா பார்த்து எத்தனை தினங்களாகிவிட்டது தெரியுமா? ஏதோ ஒரு குழந்தைகளுக்கான படம் ஒன்று நடக்கிறதாம். வா , போய் பார்த்துவிட்டு வரலாம்!” என்று அழைத்தார் மாமா.

“இதோ வருகிறேன், மாமா!” என்று சொல்லிக் கொண்டே முயல்குட்டியைக் கீழே விட்டுவிட்டு அறைக்குள் ஓடினாள் , மங்களம். சிறிது நேரத்தில் திரும்பியும் வந்தாள். இப்போது அவளது உடலை மாமா வாங்கி வந்து தந்த சிலக் கவுன்’ அலங்கரித்துக் கொண்டிருந்தது.

மங்களம் தன் அப்பா, அம்மாவிடம் சொல்லிக் கொண்டாள். மறந்துவிடாமல் தன் அருமை முயல் குட்டியிடமும் விடை பெற்றுக்கொண்டாள். மாமா வுடன் சினிமாவுக்குப் புறப்பட்டுவிட்டாள்.

இரவு மணி பத்து இருக்கும். மாமாவும் மங்கள மும் வீடு திரும்பினார்கள். சாப்பிட்டார்கள்.

மாமா வந்ததில் மங்களத்துக்கு மட்டும் தானா மகிழ்ச்சி? அண்ணா வந்திருக்கிறார் என்று அம்மா வுக்குக் களிப்பு; மைத்துனர் வந்திருக்கிறார் என்பதை எண்ணி அப்பாவுக்குப் பூரிப்பு ! ஆனால் அந்த மகிழ்ச்சிக் கிடையே அம்மா சொன்ன ஒரு விஷயம்….?

“உங்களுக்குத் தெரியுமா? அண்ணாவுக்கு முயல்கறி என்றாலே அலாதி பிரியம்! ஆகையால் நாளைக்குக் கட்டாயம் வீட்டிலிருக்கிற முயல் குட்டியை விருந்து வைத்துவிட வேண்டும்!”

இந்த பயங்கரச் செய்தி மங்களத்தின் உள்ளத்தை உலுக்கிவிட்டது. அந்தக் கணம் முதல் அவள் சிரிக்கவும் இல்லை; பேசவும் இல்லை. அவள் மகிழ்ச்சி யெல்லாம் எங்கேயோ ஓடி மறைந்துகொண்டது!

சற்று நேரம் சென்றது. எல்லோரும் படுக்கச் சென்றார்கள். மங்களமும் படுத்தாள். மெத்தை. முள்ளாக மாறி குத்தியது. அவள் கண்களை மூட வில்லை. தூங்கவில்லை. தூக்கம் எப்படி வரும்? அவளது எண்ணங்கள் எங்கோ சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தது. ” ஆறு மாதமாக, நூற்றி எண்பது நாட்களாக நான் ஆசையுடன் – அன்புடன் வளர்த்து வந்த முயல் குட்டி நாளைக்கு விருந்தாவதா? கொல்லப் படுவதா? கொன்று அதன் உடலை ருசி பார்ப்பதா என்ன கோரமான செயல் அது!…..” என்று அவளுடைய வாய் முணுமுணுத்தது. என்ன செய்வது இப்போது? அம்மாவிடம் போய் கேட்டால் என்ன அப்பாவிடம் போய் கெஞ்சினால் என்ன? தெரு வழியே குறவன் விற்றுக்கொண்டுபோன முயல் குட்டியை ”அப்பா, வாங்கிக் கொடுங்கள்” என்று கேட்டவுடனேயே, வாங்கிக் கொடுத்தாரே, இப்போது “அதன் உயிரைக் காப்பாற்றுங்கள்” என்று கெஞ்சினால் உணர மாட்டாரா?” என்று எண்ணினாள்.

முடிவில் படுக்கையை விட்டு எழுந்தாள்; நடந்தாள் ; அம்மா படுத்திருந்த இடத்தை அடைந் தாள் ; அரைத் தூக்கத்திலிருந்தாள் அம்மா. தட்டி எழுப்பினாள் மங்களம். தனது அருமை முயல்குட்டியின் உயிரைக் காக்க அம்மாவிடம் கெஞ்சினாள். அம்மா ஏதேதோ சமாதானம் கூறினாள். மங்களம் எவ்வளவோ சொன்னாள். அம்மாவின் மனம் மாறவே இல்லை.

மங்களமும் அம்மாவும் பேசிக்கொண்டிருக்கிற சப்தம் அப்பாவின் காதுகளில் நன்றாக விழுந்தது. உடனே அவர், “மங்களம் ! பேசாமல் போய் படுக் கிறாயா; இல்லையா? இதெல்லாம் என்ன செல்லம்?” என்று கோபமாகக் கத்தினார்.

மங்களம் பேசாமல் திரும்பி வந்து படுக்கையில் படுத்து விட்டாள். அவள் மனம் படாதபாடு பட்டது.

மாமா நல்லவர் தான். எனக்கு எவ்வளவோ பரிசுகள் வாங்கி வந்திருக்கிறார். நம் வீட்டிற்கு அவர் அடிக்கடி வருவது கூட இல்லை ; ஆண்டுக்கு ஒரு முறை கூட வருவதே அபூர்வம். என்னிடத்தில் அளவு கடந்த அன்பு உண்டு அவருக்கு ! ஆனால் அந்த அன்பிற்கு என் ஆசை முயல் குட்டியின் உயிரையே பலிதந்துவிடு என்றால் முடியுமா? என் அருமை முயல் குட்டியை இழப்பதா? படுகொலை செய்துவிடுவதா?’ என்று எண்ணி எண்ணி ஏங்கினாள் மங்களம். கண்ணீர் கரை புரண்டு ஓடியது.

இப்போது அவள் என்ன செய்ய வேண்டும்? தீவிரமாக யோசித்தாள். ஏதோ ஒரு முடிவிற்கு வந்தாள். திடீரென்று படுக்கையை விட்டு எழுந்திருக்க முயன்றாள். கையைப் படுக்கையில் ஊன்றியபோது ஏதோ தென்பட்டது. பஞ்சோடு பஞ்சாக வழவழ என்று அது இருந்தது. அது வேறு ஒன்றுமல்ல ; மங்களத்தின் முயல் குட்டிதான் ! அவள் அதைக் கையிலே தூக்கிக்கொண்டாள் ; மெதுவாக எழுந்தாள் ; அடிமேல் அடிவைத்து நடந்தாள் ; வாசல் கதவை நெருங்கினாள் ; சப்தமின்றி திறந்தாள். வெளியே வந்தாள் ; கதவைச் சாத்தினாள் ; தெருவில் இறங்கினாள் ; வேகமாக நடந்தாள்.

ஏன்? எதற்காக?

மங்களத்தின் உடல் நடுங்கியது; பயத்தால் பதறியது. அந்த நள்ளிரவில் ஒரு பச்சிளம் பெண் தனியாக நடந்து செல்வதென்றால்….? மங்களம் பயத்தைப் பொருட்படுத்தவில்லை. மனதைத் தைரியப் படுத்திக்கொண்டாள். மீண்டும் நடந்தாள். வெகு தூரம் நடந்துவிட்டாள். அந்த நீண்ட தெருவின் கோடியிலே ஒரு தோப்பு. அந்தத் தோப்பிற்குள் நுழைந்தாள் மங்களம். கொஞ்ச தூரம் நடந்தாள். நின்றாள். கையிலிருந்த முயல் குட்டியை நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள். அவளது கண்களி லிருந்து கண்ணீர் பெருகியது. அவள் வாய் முணுமுணுத்தது.

“என் ஆசை முயலே ! உன்னை விட்டுப் பிரியப் போகிறேன் நான். கலங்காதே! இன்றுவரை உன்னை நான் என் உயிர்போல வளர்த்துவந்தேன். இனி மேலும் நீ என்னுடன் இருந்தால் உன் உயிருக்கு ஆபத்துதான்! நீ எங்காவது தப்பிப் போ! எப்படி யாவது சுகமாக வாழ்” என்று தொண்டை தழதழக்க கூறினாள்.

முயல் குட்டியைக் கண்களில் ஒற்றிக்கொண்டாள். பிறகு கீழே இறக்கி விட்டாள். கண்ணீர் கலங்கத் திரும்பினாள். வேகமாக நடந்தாள். அவள் மனதிலே எல்லையில்லாத கலக்கம் – முகத்திலே சொல்ல முடியாத துக்கம்.

பொழுது விடிந்தது!

“அடடா ! முயலை எங்கேயோ காணோமே!” என்ற அப்பாவின் பரபரப்பு நிறைந்த இக்குரல் தான் மங்களத்தின் தூக்கத்தைக் கலைத்தது. ஆனால் படுக்கையை விட்டு எழுந்திருக்கவில்லை. கண்களை மூடியபடியே படுத்திருந்தாள். நல்லவேளை ; தப்பி விட்டது என் முயல் குட்டி’ என்று மகிழ்ந்தாள்.

வெகு நேரம் தேடினார் அப்பா. அம்மாவும் சேர்ந்து தேடினாள். முயல் குட்டி கிடைக்கவே இல்லை. ‘சனியன், எங்கே தொலைந்ததோ! அண்ணாவுக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்!” என்று அலுத்துக் கொண்டாள் அம்மா.

அம்மா ஏமாந்தாள் ; அப்பா அனுதாபப்பட்டார்; மாமாவோ இதைப்பற்றி நினைக்கவே இல்லை. ஆனால், மங்களமோ…

மணி பத்து இருக்கும். பள்ளிக்குப் புறப்பட்டாள், மங்களம். வாசலை அடைந்தாள். தெருவில் இறங்கினாள். ஆனால் வேகமாக நடை போடும் அவளது கால்கள் திடுக்கிட்டு நின்றுவிட்டன. ஏன்? அவள் எதைக் கண்டு அப்படி நின்று விட்டாள்?

அவளுடைய அன்பான முயல்குட்டியைக் கண்டுதான் அவள் திகைத்துவிட்டாள். தன்னை நோக்கி ஓடிவந்து கொண்டிருந்த முயல் குட்டியைக் கண்டுதான் அவள் பிரமித்துவிட்டாள்.

மங்களம் அதிர்ச்சி அடைந்தாள். புத்தகப் பை கை நழுவிக் கீழே விழுந்தது. “ஐயோ, முயலே ! ஏன் வந்தாய்? இங்கு எதற்காக வந்தாய்? உடனே ஓடிப்போய் விடு; எங்காவது ஓடி உன் உயிரைக் காப்பாற்றிக்கொள்; ஓடு!” என்று அலறினாள். நன்றி மறவாது நாடி வந்தது முயல்; “ஓடிப் போ!” என்று உருக்கமாக வேண்டினாள். அவளது கூக்குரல் முயலின் காதுகளில் விழுமா, என்ன? அவளது வீடு நோக்கி அது பாய்ந்தோடி வந்தது.

அதே சமயம் பயங்கரமாக இரைந்து கொண்டே கனவேகத்துடன் ஓடிவந்து கொண்டிருந்தது ஒரு மோட்டார். முயலையும் நெருங்கிவிட்டது.

இன்னும் ஒரே வினாடி – முயல் மோட்டாரின் சக்கரத்திலே சிக்கிச் சிதையப் போகிறதே!

“ஐயையோ!”என்று அலறினாள் மங்களம். மறுகணம் தெருவிலே பாய்ந்தாள். முயலை நோக்கி ஓடினாள். தூக்கிக்கொண்டு அப்பால் நகர்ந்துவிட்டாள். நல்லவேளை , முயல் பிழைத்துவிட்டது ! மோட்டாரின் சக்கரத்திற்கு இரையாகவில்லை! ஆனால்…… அப்பா , அம்மாவின் கண்களில் பட்டால் அது நிச்சயம் பிழைக்க முடியாதே!

கலங்கிய கண்களுடன் வீட்டின் வாசலைப் பார்த்தாள், மங்களம். அங்கே, அவள் ஓர் அதிசயத்தைக் கண்டாள்.

அப்பாவும் அம்மாவும் நின்றுகொண்டிருந்தார்கள். இதுதான் அதிசயமா? இல்லை ; இல்லை ! அவர் களுடைய நான்கு கண்களும் கண்ணீரைப் பெருக்கிக் கொண்டிருந்தன ! ஆமாம் ; மங்களத்தின் கூக்குரலை யும் அங்கே நடந்த நிகழ்ச்சிகளையும் பார்த்துத்தான் அவர்களுடைய கண்கள் கலங்கிவிட்டன ! அவர் களுடைய மனம் அந்த சில விநாடிகளில் அடியோடு மாறிவிட்டது !

அப்பா வாயைத் திறந்தார். “மங்களம்! உங்கள் இருவரிடையே பின்னிக் கிடந்த அன்பை நாங்கள் அறியாமல் போனோம்! ஆகா , முயலின் உயிரைக் காப்பாற்ற நீ எவ்வளவு துணிச்சலாக நடந்து கொண்டாய்?” என்று கூறினார். அதற்குமேல் அவர் பேசவில்லை ; பேச முடியவில்லை!

அம்மா, உடனே முயல் குட்டியைக் கையில் வாங்கிக்கொண்டாள் பரிவோடு!

மங்களத்தின் கண்கள் அப்போது ‘குப்’பென்று கண்ணீரைக் கக்கின. ஆனால் அது வேதனைக் கண்ணீரல் ; ஆனந்தக் கண்ணீர்!

– புத்தர் பொம்மை, முதற் பதிப்பு: நவம்பர் 1957, தமிழ் நிலையம், புதுக்கோட்டை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *